சொல்லப்போனால், மாமேதை கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலை நான் படிக்க நேர்ந்தது, கிட்டத்தட்ட ஒரு தற்செயலான நிகழ்வு எனலாம். 1969இல் ‘புகழ்’ வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், பொறியியல் (வேதிய பொறியியல்) பட்டம் பெற்ற பின்னர், அனைவருக்கும் வியப்பு ஏற்படும் வகையில் ஓர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் படிப்பது என்ற முடிவை நான் எடுத்தேன்.
நான் சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழகத்தில், அந்த நாட்களில், வியட்நாமில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிரான வீரியமிக்க மாணவர் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டி ருந்தன.
பொருளாதாரத்துறையில் நான் படிக்க வேண்டியிருந்த பாடத்திட்டங்கள் எதுவும், அமெரிக்கா போன்ற உலகிலேயே மாபெரும் நாடு, வியட்நாம் போன்ற, ஒரு சிறிய மூன்றாம் உலக நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதற்கான காரணங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதாக இல்லை. அப்போதுதான் ‘மூலதனம்’ நூலை, கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘தாஸ் காபிடலை’ படிக்க முயன்று கொண்டிருந்த குழுவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது.
1850களிலும் 1860களிலும் எழுதப்பட்ட, காலாவதியாகிப் போன ஒன்று என்று கருதப்பட்ட, மிகக் கடினமான இந்த பொருளாதார நூலைப்பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்ற கேள்வி கூட பலருக்கும் எழக்கூடும்.
ஆனால், சாதாரணமாக அனைவராலும் அறியப்பட்ட, வகுப்பறைகளிலும் சமுதாயத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற பொருளாதாரக் கருத்துக்கள், தத்துவங்கள் எதுவும் நாம் வாழும் உலகின் அநியாயமான கட்டமைப்பு குறித்து நம்பத்தகுந்த உரிய, விளக்கம் தரவில்லை என்பதை நான் எனது முனைவர் படிப்பு அனுபவத்தில் உணர்ந்திருந்தேன். ஆகவே ‘மூலதனம்’ படித்துக் கொண்டிருந்த இந்தக்குழுவுடன் என்னை இணைத்துக் கொண்டேன். அடுத்த ஆறுமாதங்கள் என்னுடைய வாழ்க்கைப் பாதையையே முற்றிலும் மாற்றிவிட்ட மாதங்களாகும்.
பத்துப்பேர் கொண்ட ‘படிப்பு வட்டத்தில்’ நானும் ஒருவனாக ‘தாஸ் காபிடலை’ முதன் முறையாகப் படித்தேன். ‘படிப்பு வட்டத்தில்’ இருந்த மாணவர்கள், பல்வேறு சமூக விஞ்ஞானத்துறைகளில் முனைவர் பட்டம் பயில்வதற்காக வந்த மாணவர்கள் ஆவர்.
முதலில், நான் ஒவ்வொரு வரியையும் கவனமாக படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். ஏனென்றால், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், ஒவ்வொரு வாக்கியமும் வெவ்வேறு கோணங்களில் கருத்துக்களை விளக்குவதாக இருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக நான், மார்க்ஸ் எடுத்துரைக்கும் வாதங்கள் எப்படி, முன்பின் முரணற்று தர்க்க ரீதியாக உள்ளன என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஒரு பொறியாளருக்கே உரிய “பகுத்தாய்வும் விவாதத்திறன்” துணை கொண்டு, அப்புத்தகத்தைப் படிக்கும் போது, அதன் ஒவ்வொரு வரியையும் மிகவும் அனுபவித்து நான் படித்தேன். அப்பல்கலைக் கழகத்தில் நான் இருந்த காலம் முழுவதும், திரும்பத் திரும்ப, ‘தாஸ் காபிடலை’ படித்த போது, நான் உணர்ந்த ‘தாஸ் காபிடல்’ முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். நான் படித்ததோ, ஆங்கில மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘தாஸ் காபிடலை’தான். (மூலம் ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்டதாகும்). இருந்தும், மொழி மாற்றத்திலும் அந்த நூல் ஒரு கவிதையைப் போல் பரிணமித்தது.
ஆழ்ந்து படித்து புரிந்து கொள்ள வேண்டிய விவாதங்களுக்கு நடுவே மார்க்ஸ், அந்நூலில் ஷேக்ஸ்பியர், கெய்தே (ழுடீநுகூழநு) போன்ற அறிஞர்களின் மேற்கோள்களை மிகச் சரியாகக் கையாண்டுள்ளார். இது இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படையில், மார்க்ஸ் அரசியல் பொருளாதாரவியலை எவ்வாறு கரைத்துக் குடித்திருந்தார் என்பதற்கு சான்றாக இருந்தது; அது மட்டுமல்ல, மார்க்சின் நுண்ணறிவை பறை சாற்றும் விதமாக அவை இருந்தன. அவருடைய எழுத்துக்களில் இருந்த கூரிய நகைச்சுவை உணர்வு, அனைவரையும் கவரக்கூடிய மற்றொரு அம்சமாகும். அன்றைய பூர்ஷ்வா பொருளாதார அறிஞர்களான முதலாளித்துவ அடிவருடிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்த, நஸ்ஸாவ் சீனியர்(சூயளளயர ளுநniடிச) மற்றும் ஜெரெமி பென்தாம்
(துநசநஅல க்ஷநவோயஅ) போன்றவர்களைப் பற்றி அவர் எழுதியுள்ள கிண்டல் கலந்த குறிப்புகள் சுவாரசியமானவை.
ஒரு பொறியியல் பட்டதாரியான, கணிதம் சார்ந்த பொருளாதாரத் துறையில் பயிற்சி பெற்றவனான நான் ‘தாஸ் காபிடலி’லிருந்து என்ன கற்றுக் கொண்டேன்? முதலாவதாக, சமூகத்தையும், அதன் இயக்கப் போக்குகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அதை வரலாறு சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்.
இரண்டாவதாக, சமூகத்தின் இயக்கப் போக்குகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியமானவை (அ) உற்பத்திச் சாதனங்கள் யாருக்குச் சொந்தமானவை என்பதும் (ஆ) நேரடியாக பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், உற்பத்தி சாதனங் களுக்கும் உள்ள உறவுகளுமே.
மூன்றாவதாக, முதலாளித்துவ உற்பத்தி முறையின் சாரம் என்பது
- நேரடி உற்பத்தியாளர்கள் (உழைக்கும் மக்கள்) உற்பத்திச் சாதனங்களிலிருநது விலக்கப்பட்டு, ‘சுதந்திர’ (அதாவது, தனது உழைப்பு சக்தியை தன் விருப்பப்படி பயன்படுத்தும் உரிமை பெற்ற வர்க்கமாக) தொழிலாளி வர்க்கம் ஒரு துருவத்தில் இருக்கும்.
- உற்பத்தி சாதனங்கள், முதலாளிகளின் ஏகபோக உடைமை களாக மாற்றப்பட்டு, முதலாளி வர்க்கம் மறு துருவத்தில் இருக்கும்.
- அனைத்து சரக்குகளும், சந்தைகளில் விற்கப்படுவதற்காக, தனியார் உடைமைப் பொருள்களாக உற்பத்தி செய்யப் படுகின்றன. அவைகள் லாபத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு இலாபத்தால் உந்தப்பட்டு இயங்கும் அமைப்பு, இயல்பாகவே விரிவடையும் குணம் கொண்டதாகும் என்று மார்க்ஸ் நிருபிக்கிறார்.
இதன் செயல் தளங்களும் விரிவடைந்து கொண்டே செல்லும். செயல்படும் பூகோள / நிலப்பரப்பு எல்லைகளும் விரிவடையும். இவை அனைத்தும் லாபம் என்ற குறிக்கோளை அடிப்படை யாகக் கொண்டே இயக்கப்படும்.
தாஸ் காபிடலில், ‘மூலதனச் சுழற்சி’ மற்றும் ‘காலனியாக்கம் குறித்த ‘நவீன தத்துவம்’ என்ற கடைசிப்பகுதி போன்றவற்றை படிப்பது, முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த குணாம்சமான உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்.
முதலாளித்துவத்தின் ஒரே இலக்கு லாப வேட்டை என்றாகி விட்டது.
ஆகவே, அந்த வேட்டையை ஏன் உலகத்தில் குறிப்பிட்ட பகுதிக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்? ஏன் குறிப்பிட்ட செயல்பாடுகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்?
பணம் பண்ணுவதுதான் நோக்கம் என்று ஆகி விட்ட பிறகு, எந்த வழியைப் பின்பற்றியேனும் அந்தப் பணத்தை ஏன் பண்ணக்கூடாது?
அது தொழிற்சாலை நிறுவி நடத்துவதாக இருக்கலாம்; சுயநிதிக் கல்லூரி நடத்துவதாகவும் இருக்கலாம். ஏன் அதைவிட மோசமான, நெறியற்ற நடவடிக்கைகளைக் கூட மேற் கொள்ளலாம்.
உண்மையில், ‘வணிகத்தில் நன்னெறி’ அல்லது ‘அறம் சார்ந்த வணிகம்’ என்பதே முன்னுக்குப் பின் முரணான சொல்லாகும்.
முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றியும், அதன் உள்ளார்ந்த தர்க்கத்தைப் பற்றியும் மார்க்சின் ஆய்வு, நமக்கு காலனி அமைப்பு முறை மற்றும் விரிவாக்கம் பற்றிய புரிதலை கொடுக்க உதவுகிறது.
பின்னாளில் மிக விரிவாக காலனிய விரிவாக்கம் பற்றியும், உலகம் முழுவதும் நாடுகளும், மக்களும் அடிமைப்படுத்தப் படுதலைக் குறித்தும் ஆய்வு செய்த தோழர் லெனின் இதையே ஏகாதிபத்திய அமைப்பு என்று வருணித்தார்.
தாஸ் காபிடலில், மார்க்சின் ஆய்வுகள், பொருளாதார அமைப்பாக முதலாளித்துவம் இயங்கும் போது, ஏற்படும் முரண்பாட்டுத்தன்மைகளை வெளிக்கொணர்கின்றன.
ஒருபக்கம், முதலாளிக்கிடையே ஏற்படும் போட்டிகளும், முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டங்களும், தொடர்ந்து மேம்பட்ட, அதிக திறன் வாய்ந்த இயந்திரங்களைப் புகுத்து வதற்கும், இயந்திரமய மாக்கலுக்கும் வழி வகுக்கின்றன.
மறுபக்கம், லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், சமூகத்தின் ஒட்டுமொத்த நுகர்வு சக்தியில் எதிர்மறையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. ஒட்டு மொத்த நுகர்வு சக்தி கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகரிக்கும் வேலையின்மையும், கூலிக்குறைப்பும் அன்றாட முதலாளித்துவ நிகழ்வுகளாகின்றன. அது மட்டுமின்றி, முதலாளித்துவ முறைக்கு முந்தைய அமைப்பைச் சார்ந்த சிறு உற்பத்தியாளர்களை, தொழில் போட்டியில் வீழ்த்தி, உற்பத்தி சாதனங்களிலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை வறியவர்களாக்கி விடுகின்றது. இவையனைத்தும் சமூகத்தின் நுகர்வு வளர்ச்சியைக் கட்டுப் படுத்தி விடுகின்றன.
ஆகவே, அவ்வப்போது முதலாளித்துவ அமைப்பில் வேகமாக வளரும் உற்பத்திச் சக்திகளுக்கும், மாறாக மிக மெதுவாகவே வளர்ச்சி பெறும் சமூகத்தின் ஒட்டுமொத்த நுகர்வு சக்திக்கும் இடையே தோன்றும் முரண்பாடுகள் காரணமாக, மொத்த சமூகத்தின் கிராக்கி சுருங்கி நெருக்கடிகள் உருவாகின்றன. ஏராளமாக உற்பத்தி செய்யப்படும் சரக்குகளும், சமூகத்தின் சேவைத் திறன்களும் விலை போகாமல் தேக்கம் ஏற்படுகின்றது. எண்ணற்ற மக்கள் வேலையில்லாப் பட்டாளத் துக்குள் தள்ளப்படுகின்றனர்.
முதலாளித்துவ அமைப்பு, திட்டமிடப்படாத, குழப்பங்கள் நிறைந்த, முறையற்ற அமைப்பாகும். பகுதி வாரியாகவும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த அமைப்பாகவும் உள்ளது. இந்நிலை களாலும், பொருளாதார நெருக்கடிகள் உருவாகின்றன.
மூன்றாவதாக, அவ்வமைப்பில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும், ஒட்டு மொத்த அளவில் திட்டமிட்டு ஏற்படுபவை அல்ல. ஆகவே, உற்பத்தித் திறன்களால் ஏற்படும் வளர்ச்சியின் வேகம், இத்தொழில் நுட்பங்களுக்காக செய்யப் படும் முதலீடுகளின் வளர்ச்சி வேகத்துடன் ஒத்திசைவு கொண்டதாக இல்லை; மாறாக, பின்னதன் வேகத்தைக் காட்டிலும், முன்னதன் வேகம் அவ்வப்பொழுது மெதுவாகவே அமைவதுண்டு. இதனால் ஈட்டப்படும் லாபத்தின் விகிதம் ஒரே சீராக இல்லாமல், அவ்வப்போது கீழே விழும் போக்கு தலை தூக்குகிறது. இக்காரணங்களால், காலங்காலமாக, முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தியும் சரி, வேலை வாய்ப்புகளும் சரி, ஊசலாட்டங்களுக்கு உட்பட்டு ஏறியிறங்கு பவையாக உள்ளன. இதனால் உழைக்கும் மக்களுக்கு இன்னல்களே ஏற்படுகின்றன.
இதுதவிர, முதலாளிகளுக்கிடையே நிலவிய போட்டியும், முதலாளித்துவ நாடுகளுக்கிடையே நிலவிய உலகளாவிய பகையுணர்வுகளும், இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு காரணமாயின. இதனால் உலகில் லட்சக் கணக்கான மக்கள் பெருந்துயர்களுக்கு ஆளாயினர். அதேசமயம், விரல் விட்டு எண்ணக்கூடிய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள், அமோகமான லாபத்தை ஈட்ட முடிந்தது.
தற்சமயம் உலகந்தழுவிய பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார அமைப்பு இதிலிருந்து மீண்டு விடும் என்று கணிப்புகள் முன் வைக்கப்பட்டாலும், 2011 வரை, வேலையின்மை பிரச்சனையில் எந்தத் தீர்வும் ஏற்படாது என்ற நிலையும் உருவாகியுள்ளது.
உலகளாவிய பருவநிலை மாற்றங்கள் காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், உலக முதலாளித்துவ அமைப்பு, தொடர்ந்து லாபத்தை மட்டுமே குறி வைத்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற, வீணான வழிமுறைகளைக் கையாள்கிறது என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கும், எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் முதலாளித்துவ அமைப்பு நிகழ்கால, எதிர்கால மானுட நலனில் அக்கறையின்றி செயல்படுகின்றது என்பது புலனாகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக தோற்றம் எழுந்த போது, அதன் ஆதரவாளர்கள், முதலாளித்துவத்தின் பின் திரண்டு நின்றனர்.
ஆனால், மார்க்சின் ‘தாஸ் காபிடல்’தான், முதலாளித்துவ உற்பத்தி முறையின் அழிவு வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாத ஒன்று என்று உரத்த குரலில் ஆணித்தரமாக முழங்கியது. தொழில்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளானாலும் சரி, காலனி ஆதிக்கத்துக்குட்பட்ட நாடுகளானாலும் சரி, பெருவாரியான மக்கள், முதலாளித்துவ முறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடத் தயாராக உள்ளார்கள் என்பதே இருபதாம் நூற்றாண்டின் அனுபவமாகும்.
நடப்பு நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளும் கூட மனித சமூகத்தை எதிர் நோக்கியுள்ள அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதில், அதாவது, அனைவருக்கும் உணவு, உறைவிடம், உடை, கல்வி, நலவாழ்வு சார்ந்த எளிய இலக்குகளை அடையச் செய்வதில் கூட முதலாளித்துவ அமைப்பின் இயலாமையை உறுதிப்படுத்துகிறது. விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பங் களிலும் மகத்தான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்நிலை தொடர்கிறது.
தாஸ் காபிடலில் மார்க்ஸ் செய்துள்ள பகுப்பாய்வுகளும், முதலாளித்துவ அமைப்பில், ஒரு பக்கம் செல்வம் ஓரிடத்தில் குவிவது பற்றியும், மறுபக்கம் உழைக்கும் மக்களுக்கு ஏற்படக் கூடிய இன்னல்கள் பற்றியும், அவர் முன்கூட்டியே அறுதியாகக் கூறிய கருத்துக்களும் இன்றளவும் பொருத்தமுடையதாகவும், ஏற்புடையதாகவும் உள்ளன. அவை சமூக மாற்றம் காண விழையும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆக்கமும், ஊக்கமும் தரக்கூடியவை.
– தமிழாக்கம் – அபராஜிதன்
Leave a Reply