மகத்தானதொரு கம்யூனிஸ்ட் தலைவரும், மார்க்சிய அறிஞருமான இ.எம்.எஸ் நம்பூதிரிபாடின் நூற்றாண்டினை நாம் கொண்டாடி வருகிறோம். அனைவராலும் இ.எம்.எஸ் என்று பரவலாக அறியப்பட்ட அவர் 1909ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதியன்று பிறந்தார். 1998ஆம் ஆண்டு மே 12ஆம் தேதியன்று மறைந்தார். இ.எம்.எஸ் பழமைவாதமிக்க நம்பூதிரி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்போது நம்பூதிரி வகுப்பில் நிலவி வந்த காலத்திற்கொவ்வாதப் பல பழக்க வழக்கங்களை எதிர்த்து சமூக சீர்திருத்தத்திற்காக தனது இளம் மாணவப் பருவத்திலேயே போராடத் துவங்கியதுதான் பொது வாழ்க்கையில் அவர் எடுத்து வைத்த முதல் அடியாகும். அதிலிருந்து அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
சோசலிசக் கருத்துக்களால் கவரப்படடு, காங்கிரஸ் சோசலிஸ்ட் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக மாறிய அவரை பின்னாளில் மார்க்சிசம், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைத்து வந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவராக இ.எம்.எஸ் இருந்தார். கேரளாவில் 1957இல் நாட்டிலேயே முதல்முறையாக தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட கம்யூனிஸ்ட், மாநில அரசின் முதல்வராகவும் அவர் விளங்கினார். இ.எம்.எஸ் இரண்டாவது முறையாக 1967 முதல் 1970 வரை முதல்வராக இருந்து ஐக்கிய முன்னணி அரசிற்கு தலைமை தாங்கினார்.
1963ஆம் ஆண்டில் இ.எம்.எஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவிற்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியதும், அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். 1977 முதல் 1992 வரை கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயலாற்றினார்.
1930களின் நடுப்பகுதியில் சோஷலிஸ்ட் இதழாக வெளிவந்த பிரபாதம் இதழின் ஆசிரியராக ஆனதிலிருந்து, தன் இறுதிக்காலம் வரை இ.எம்.எஸ் ஓர் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல கம்யூனிஸ்ட் இதழ்களிலும், நாளிதழ்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் அவர் எழுதிய அளவிற்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எந்த தலைவரும் எழுதியதில்லை. மலையாளத்தில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது பதிப்பிக்கப்பட்டு வருகிறது. 100 தொகுதிகளை எட்டுகிறது என்பதிலிருந்து அவரது எழுத்துக்களின் வீச்சை உணர்ந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட இ.எம்.எஸ்-இன் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய மேலோட்டமான சித்திரமானது இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கும், தத்துவத்திற்கும், அரசியலுக்கும், கலாச்சாரத் திற்கும், வரலாற்றிற்கும் அவர் வழங்கிய மிகச் செறிவான, விரிவான பங்களிப்பை முழுiமாக எடுத்துக் கூறுவதாகச் சொல்லமுடியாது.
மார்க்சியத்தின் தத்துவமும், நடைமுறையும் ஒரு தனி நபரின் வாழ்க்கையோடும், செயலோடும் இணையும்போது எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இஎம்எஸ் நம்பூதிரிபாட் தெளிவான ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். அத்தகையதொரு தனிநபர் இஎம்எஸ்-ஐ போன்ற அபூர்வமான அறிவுத்திறனும், ஆழமான கண்ணோட்டமும் கொண்டவராக இருந்தாரெனில், கொள்கை என்பது உண்மையாகவே வலிமை யானதொரு சக்தியாக மாறுகிறது. அதுவும் இ.எம்.எஸ். போன்ற கொள்கைகளை உருவாக்கும் திறனோடு அவைகளை கடைப்பிடிக்கும் செயல் வீரரின் விஷயத்தில் அது சக்தி வாய்ந்த இயக்கத்திற்கான தூண்டுதல்களை உருவாக்குகிறது.
இஎம்எஸ்-இன் ஆக்கப்பூர்வமான சிந்தனையும், நடைமுறையும் 20ஆம் நூற்றாண்டில் வேறெந்த தனிநபரும் செய்யாத வகையில் மக்களை அசைத்து, கேரளாவின் வரலாற்றையே மாற்றிப் போட்டது. இஎம்எஸ் ஒப்பாரில்லாத ஒரு தலைவராக ஆனதற்குக் காரணம், இந்தியாவிலும் குறிப்பாக கேரளாவிலும் நிலவும் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு மார்க்சியத்தை பொருத்திப் பார்ப்பதில் அவரது சமகாலத்த வர்களை விட முன்னால் சென்று நிற்பதில் அவருக்கிருந்த திறமையே ஆகும்.
அவரது இணையில்லாத மற்றொரு திறன் என்பது அவரது கருத்துக்களையும், அவரது கட்சியின் கருத்துக்களையும் கூட்டு அரசியல் நடவடிக்கையில் மக்களை இணைத்துச் செல்லும் வகையில் அவர்களிடையே எடுத்துச் செல்வதில் இயற்கை யாகவே அவருக்கிருந்த திறமையாகும்.
தத்துவார்த்த அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கி தொழிலாளி வர்க்க கட்சியின் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் இஎம்எஸ் இணையில்லாத பங்களிப்பை செய்திருக்கிறார். மார்க்சிய கொள்கைகளின் பொதுவான அடிப்படையினை புரிந்து கொண்ட பொழுது அவர் மேற்கொண்ட சமகால சமூகம் பற்றிய ஆய்விலிருந்தே அவரின் தனித்திறமை முகிழ்ந்து வருவதைக் காண முடிந்தது.
சோசலிசம் ஏன்? என்ற நூலை எழுதிய ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசலிச அரசியல் 1934ஆம் ஆண்டில் மலபார் பகுதியில் தீவிர காங்கிரஸ் இளைஞராக விளங்கிய இஎம்எஸ்-ஐயும், அவரது சமகாலத்தவர்களான பி.கிருஷ்ணப்பிள்ளை, ஏ.கே.கோபாலன், கே.தாமோதரன் போன்றவர்களை சோசலிசக் கருத்துக்களின்பால் ஈர்த்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் அவர்கள் இணைந்தார்கள்.
காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட தொடர்புகளும், 1937இல் கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் குழு உருவானதும் மார்க்சியம் தொடர்பான சில நூல்களை இஎம்எஸ்-சிற்கு அறிமுகப்படுத்தியது. இங்கிருந்துதான் கொள்கைகளைப் பயில்வது; கேரள சமூகத்தின் நிலைமைகளுக்கு அவற்றை பொருத்திப் பார்ப்பது; அதன் பிறகு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவற்றை விரிவு படுத்துவது ஆகிய அவரது முயற்சிகள் துவங்கின.
1945ஆம் ஆண்டு வரையிலான துவக்க ஆண்டுகளில் நம்பிக்கை தரத்தக்க துவக்கங்களை நம்மால் காண முடிகிறது. மலபார் விவசாய சமூகம், கேரள சமூகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி, மலையாளிகளின் மொழி சார்ந்த – தேசிய இனப்பிரச்சனை ஆகிய அனைத்துமே இடதுசாரி இயக்கத்தை உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
வாழ்க்கையின் துவக்க நாட்களிலிருந்தே அவர் செயல்படுத்திக் கொண்டு வந்த ஒழுங்கு முறையிலிருந்துதான் இ.எம்.எஸ்-சின் அரசியல் சிந்தனை உருவாக்கும் திறன் கொண்ட உயிரோட்ட மான தன்மை வெளிப்பட்டது. ஸ்தூலமான சமூக – பொருளாதார நிலைமைகளையும், சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் மீது அவற்றின் தாக்கத்தையும் அவர் ஆய்வு செய்வார். இந்த ஆய்விலிருந்துதான் செயல்களத்திற்கு வழி காட்டும் தனது தத்துவார்த்த முடிவுகளை அவர் மேற்கொள்வார்.
விவசாயப் புரட்சிக்கான கொள்கையாளர்
மலபாரில் நிலவி வந்த விவசாய உறவுகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது இந்த முறையைத்தான் அவர் முதலில் மேற்கொண்டார். இதன் விளைவுதான் 1939ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றம் அமைத்திருந்த மலபார் குத்தகை விசாரணைக் கமிட்டியின் அறிக்கைக்கு அவர் அளித்த மறுப்பு குறிப்பாகும். இந்த ஆவணமானது, அது எழுதப்பட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, குத்தகைதாரர்-நிலப்பிரபு முறையின் தன்மை குறித்தும், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் மீதான அதன் மோசமான தாக்கங்கள் பற்றியுமான ஆழ்ந்த கண்ணோட்டத்தின் சிறப்புத்தன்மையை இன்றும் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வுக்கருத்தை உருவாக்கியதன் அடிப்படையில் மலபார் பகுதியில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக விவசாய இயக்கத்தை வளர்த்தெடுக்க நடைமுறை வழிகாட்டுதலை இ.எம்.எஸ் வழங்கினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் வரை இப்பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டிலேயே விவசாய சங்கம் மிக வலுவாக உள்ள பகுதிகளில் ஒன்றாக மலபார் பகுதியை மாற்றியது.
கேரளாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இந்த வலுவான இயக்கத்திலிருந்து பெற்ற அனுபவத்திலிருந்து தான் பின்னாளில் இணைச் செயலாளராக அவர் பொறுப்பேற்ற அகில இந்திய விவசாயி களின் சங்கத்திற்கு இ.எம்.எஸ் தனது பங்களிப்பைச் செய்தார்
1953ஆம் ஆண்டின் இறுதியில் தில்லியில் கட்சி மையத்தில் சேர்ந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளில் விவசாய சங்கத்தை கவனிப்பதும் ஒன்றாக இருந்தது. 1954ஆம் ஆண்டு வெளிவந்த “விவசாயி மக்களிடையே நமது பணிகள்” என்ற கட்சியின் மத்தியக்குழு தீர்மானமானது இந்த அமைப்பின் செயல்நோக்கம் பெருமளவிற்கு சரியானதாகவே இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆவணத்தை உருவாக்குவதில் இ.எம்.எஸ். முக்கிய பங்கினை வகித்தார்.
நவீன கேரளத்திற்கான அடித்தளங்கள்
தேசிய விடுதலை இயக்கத்தின் மேலாதிக்கமாக இருந்த முதலாளித்துவ தலைமை முன்வைத்த ‘ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்’ என்ற வடிவத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்தியாவில் மொழி வாரியான – தேசிய இனங்கள் பிரச்சனை குறித்த ஆய்வை முன்வைத்தது கம்யூனிஸ்டுகள்தான். மலையாள மொழி பேசுகின்ற மக்களின் மொழிவாரியான தேசிய இனத்தின் வளர்ச்சிப் போக்கை பதிவு செய்யும் பணியை இ.எம்.எஸ் மேற்கொண்டதோடு, ஒன்றுபட்ட கேரள மாநிலத்தை உருவாக்கு வதற்கான தத்துவார்த்த அடித்தளத்தையும் வழங்கினார்.
1945ஆம் ஆண்டில் ‘1 1/4 கோடி மலையாளிகள்’ என்று மலையாள மொழியில் அவர் வெளியிட்ட நூல் பின்னர் திருத்தப்பட்டு, முழுமையானதொரு ஆய்வாக மாற்றப்பட்டு, 1952ஆம் ஆண்டில் ‘கேரளாவில் தேசிய இனப்பிரச்சனை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தேசிய இனப்பிரச்சனை குறித்து, குறிப்பாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் குறித்த மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை முதன் முதலாக ஸ்தூலமாக பயன்படுத்திய முயற்சி இதுவே ஆகும். ‘ஐக்கிய கேரளம்’ என்பதை முன்வைத்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பி.சுந்தரய்யா முன்வைத்த ‘விசாலாந்திரா’, பவானி சென் முன்வைத்த ‘நதுன் பங்ளா’ போன்றவற்றிற்க்கான கருத்துக்களோடு ஒட்டியதாக தோன்றிய போதிலும் இ.எம்.எஸ் எழுத்தின் முக்கியத்துவம் என்பது காலனியாதிக்கம் வரையிலும் பல்வேறுபட்ட கட்டங்களிலும் கேரளாவில் சமூக-பொருளாதார அமைப்பு எவ்வாறு உருவாகியது என்பதை ஆழமான வரலாற்று பூர்வமான நுண்ணுணர்வோடு அமைந்தது என்பதிலேயே அடங்கியுள்ளது.
இதுதான் திருவாங்கூர், கொச்சி, மலபார் ஆகிய பகுதிகளை இணைத்து மொழி அடிப்படையிலானதொரு மாநிலமாக கேரளாவை உருவாக்குவதற்காக போராடுவதற்கும் நிலப்பிர புத்துவத்திலிருந்தும், ஏகாதிபத்தியத்திடமிருந்தும் மக்களை விடுவிப்பததற்கு அவசியமானதாக காலங்கடந்த சமூக பொருளாதார உறவுகளை தகர்த்தெறிவதற்கும், உற்பத்தியின் மீதான தடைகளை உடைத்தெறிவதற்கும் அடிப்படையாக அமைந்தது.
சாதி பற்றிய வர்க்க ஆய்வு
இந்தியாவில் சாதிப்பிரச்சனையை இ.எம்.எஸ். கையாண்ட விதத்திலும், இதே வகையான அணுகுமுறையை நம்மால் காண முடியும், புராதன கேரள சமூகத்திலிருந்து பிரிட்டிஷார் காலனியாக்கியது வரையிலான காலம் வரையில் வரலாற்று ரீதியாக சாதியின் பங்கு குறித்து இ.எம்.எஸ். ஆய்வு செய்த பிறகு, கேரளாவில் நிலப்பிரபுத்துவ அமைப்பு என்பது நிலப்பிரபு-மேல்சாதி-தலைவர்களின் மேலாதிக்கமாகவே இருந்து வருகிறது என்ற முடிவுக்கு வந்தார்.
சாதி எதிர்ப்பு, சமூக சீர்திருத்த இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்று, அதைத் தொடர்ந்து வர்க்கம் சார்ந்த இயக்கங் களையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் வளர்த்தெடுக்க முன் வந்த நிலையில், இ.எம்.எஸ். இந்த துவக்க கால அனுபவங்களை தனது அறிவுத்திறனுடன் இணைத்து வர்க்க-சாதி உறவுகள் பற்றி சரியான நிலைபாட்டை உருவாக்க முடிந்தது.
தொழிலாளி வர்க்க இயக்கம் சாதியம் குறித்த பிரச்சனையை சமாளிக்க வேண்டி அவர் வெளியிட்ட கருத்தோட்டத்தின் அடிப்படை சாதியப் பிளவுகள் மிகவும் மோசமாக வெளிப்பட்டு வரும் தற்கால சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானதுமாகும்.
சாதி மற்றும் வர்க்கம் குறித்த மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையை இ.எம்.எஸ். மிகத்தெளிவாக எடுத்துக்கூறினார். தொழிலாளி வர்க்க இயக்கமானது மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளின், குறிப்பாக தலித்துகளின், விருப்பங்களை கண்ட றியவும், சமூக விடுதலைக்கான அவர்களின் போராட் டங்களை முறைப்படுத்தி இயக்கவும் சாதிய ஒடுக்கு முறைக்கு முடிவு கட்டவும் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
40ஆம் ஆண்டுகளில் கேரள சமூகத்தை ஆய்வு செய்த அவர், சாதி, வர்க்கம், சொத்து உறவுகள் ஆகியவற்றிற்கிடையே இருந்த நெருக்கமான தொடர்புகளை சுட்டிக் காட்டியதோடு, சாதியத்திற்கு எதிரான எழுச்சிகளை ஜனநாயக மற்றும் விவசாயப்புரட்சிக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கூறினார். அவ்வாறு குறிப்பிடும்போதே வர்க்க அமைப்புகளை கட்டுவதற்கான வேலைகளிலும், அனைத்து சாதிகளிலும் இனங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமைக்காகவும் அவர் பாடுபட்டார்.
மேல்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கீழ்சாதி அமைப்புகளின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்த அதேநேரத்தில், கேரளாவில் இருந்த கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் அமைப்புகள் மற்றும் ஒன்றுபட்ட இயக்கங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார்கள்.
நடத்தப்பட வேண்டிய இருமுனை போராட்டம் குறித்து இ.எம்.எஸ். கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் :
இரு முனை போராட்டத்தை நாம் அப்போதும், இப்போதும் நடத்த வேண்டியிருக்கிறது. நமக்கு எதிரணியில் ஒருபுறத்தில் ‘தேசியம் மற்றும் சோசலிசம் ஆகிய குறிக்கோள் களிலிருந்து நாம் விலகிச் செல்கிறோம்’ என்று குறைகூறுப வர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் மதவழி சிறுபான்மையினரின் “குறுங் குழுக்களின்” கோரிக்கைகளுக்காக நாம் போராடுகி றோமாம். மறுபுறத்திலோ ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், உண்மையில் சாதி-இன வேறுபாடற்ற வகையிலான உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் என்ற நீரோட்டத்திலிருந்து அவர்களை பிரித்து வைப்பவர்கள் இருக்கிறார்கள்.
‘மீண்டும் சாதிகள்-வர்க்கங்கள் குறித்து’ தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தொகுதி 1, பக்.184)
தொடர்ந்து இ.எம்.எஸ். வலியுறுத்திக் கூறியதாவது;
எனவே எங்களது கட்சியும் அதன் செயல்வீரர்களில் ஒருவனுமான நானும் வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சிய கொள்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்ததோடு, சாதிய ஒடுக்குமுறை என்ற பிரச்சனையை உள்ளடக்கி எந்தவித சாதிவேறுபாடுமின்றி, அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக சுரண்டப்படுவோரை ஒன்றுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியே வந்துள்ளோம்
(மேற்கூறிய நூல், பக்.190)
பழைய சமூக ஒழுங்கமைவு சிதைந்து போய், முதலாளித்துவம் வளர்ச்சியடைந்ததை அடுத்து சொத்துரிமை பெற்றவர்களாக இருந்த மேல்சாதிகளைச் சேர்ந்த சிலர் ஓட்டாண்டிகளாகி, நகர்ப்புற, கிராமப்புற பாட்டாளிகளின் வரிசையில் சேர்ந்ததையும் அவர் குறிப்பிட்டார். பின்னாளில், பிற்படுத்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த, (அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சில பிரிவினரும் சமூக-பொருளாதார மாற்றங்களினால் பயனடைந்து, கல்வி, வேலை வாய்ப்பினை பெற்றதையும் அல்லது மேம்பட்ட பொருளாதார நிலைகளை அடைந்து மேல்நிலைக்கு வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
1957ஆம் ஆண்டில் அவர் கேரள மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, அவரது தலைமையில் செயல்பட்ட நிர்வாக சீர்திருத்தக் கமிஷனின் அறிக்கையிலும் இ.எம்.எஸ். இந்த கருத்தோட்டத்தைத்தான் முதலில் முன்வைத்தார். அந்த அறிக்கை இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொடர வேண்டும் என்றும் இந்த வகுப்புகளின் முன்னேறிய மேல்தட்டு பிரிவினருக்கு ஒதுக்கீட்டு சலுகைகள் விலக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
‘மேல் தட்டில் உள்ளவர்களுக்கு சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய பிரச்சனை மேலெழுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இ.எம்.எஸ். இதுபோன்றதொரு அணுகுமுறையை வகுத்தளித்திருந்தார்.’
1989ஆம் ஆண்டில் மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கப் பட்ட பிறகு, ஒதுக்கீடு குறித்த நிலைபாட்டை இ.எம்.எஸ். விளக்கியதானது உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேலே கூறப்பட்ட வர்க்கப் புரிதலின் அடிப்படையிலேயே அமைந்ததாகும். எனினும் இந்த உழைக்கும் பெருந்திரளுக்குள்ளேயே வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பலவீனமானவர்களாகவும், சாதிய அமைப்பினால் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் சில பிரிவுகளும் உள்ளன என்பதை மார்க்சிஸ்டுகள் அங்கீகரிக்க வேண்டியதும் அவசியமாகும்.
பல்லாண்டு கால முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும், அரசியல் விடுதலைக்குப் பிறகும் கூட, இந்த ஒடுக்குமுறை அகற்றப்படவில்லை. இந்த மக்கள் பெருந்திரளை பொதுவான இயக்கங்களுக்குள் கொண்டு வரவும், இறுதியில் சாதிய வேறுபாடுகளை உடைத்தெறியவுமே, வரையறைக்குட்பட்ட நோக்கங்களுடன், ஒரு குறிப்பிடட காலத்திற்கு என்ற வகையில் இடஒதுக்கீட்டினை மார்க்சிஸ்டுகள் ஆதரித்தனர்.
இடஒதுக்கீட்டை எதிர்த்த மேல்தட்டு வெறியர்களை இ.எம்.எஸ். கடுமையாக எதிர்த்துப் போராடியதோடு, ‘பிற்படுத்தப்பட்ட’ வகுப்பினரிடையே வளர்ந்தோங்கி வரும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ தலைவர்களின் வாலைப் பிடித்துச் செல்பவர்களாகத் தொழிலாளி வர்க்கத்தின் கட்சி மாறி விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்தார்.
பெண்களின் இயக்கம், விடுதலைக் கண்ணோட்டம்
ஜனநாயகப்பூர்வமான பெண்களின் இயக்கத்திற்கான சரியானதொரு கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதில் இ.எம்.எஸ். தன்னுடைய தனி பங்களிப்பை செய்திருந்தார். அவர் பிறந்த நம்பூதிரி வகுப்பின் பத்தாம்பசலித்தனமான போக்கிற்கு எதிரான அவரது முதல் பொது நடவடிக்கை என்பதே நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்த பெண்களின் அந்தஸ்து என்ற முக்கிய பிரச்சனையே ஆகும்.
சமூக சீர்திருத்த இயக்கத்தில் பங்கேற்ற இளைஞரான இ.எம்.எஸ்., திருமணம் செய்வதற்கான உரிமை கூட பறிக்கப்பட்ட வர்களாக, ஒருவகையான ‘பர்தா’ முறையைப் பின்பற்ற வேண்டியவர்களாக இருந்த நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறையின் மீதும் கவனம் செலுத்தினார்.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஆணாதிக்க ஒடுக்குமுறை யிலிருந்து நம்பூதிரி பெண்களை விடுவிப்பது என்பதுதான் இ.எம்.எஸ்.சின் துவக்க கால எழுத்துகளிலும், ‘யோகசேஷம சபா’ என்ற பெயரில் அவரும், அவரது நண்பர்களும் தயாரித்த நாடகங்களிலும் பிரதிபலித்தது.
பின்னாளில் மலபாரில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிர புத்துவ எதிர்ப்பு போராட்டங்கள் வளர்ந்தோங்கிய போது, ஜனநாயக இயக்கத்தில் அதிகமான அளவில் பெண்களை பங்கேற்கச் செய்வதில் இ.எம்.எஸ். முக்கிய கவனம் செலுத்தினார். 1942ஆம் ஆண்டில் இந்த அம்சம் குறித்து எழுதுகையில், நாட்டின் மற்ற பகுதிகளில் கேள்விப்பட்டிராத வகையில் கேரளாவின் பாரம்பரிய சமூகத்தில் இருந்த பெரும்பாலான வகுப்பினரும் பெண்களுக்கு உரிமைகளை வழங்கியிருந்தனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
நவீன சூழ்நிலையில் இந்த பாரம்பரியமான போக்கு மீண்டும் புத்துயிர் பெறும் என்று அவர் நம்பினார். அது அவர்களும், ஆண்களுக்குச் சமமான வகையில் சமூக மாற்றத்திற்காக செயல்பட உதவும் என்றும் அவர் நம்பினார். 1954-56ஆம் ஆண்டுகளில் கட்சி மையத்தில் அவர் முதன்முதலாக செயல்படத் துவங்கிய போது பெண்கள் அரங்கத்திற்கான வேலைகளுக்கு வழிகாட்டும் பொறுப்பு இ.எம்.எஸ்.-இடம் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் பெண்கள் அமைப்பின் தன்மை குறித்த விரிவான வரையறைகளை அவர் வகுத்தளித்தார். இந்த அமைப்பானது அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏனெனில், பொதுவான பாலியல் ரீதியான ஒடுக்குமுறையால் அவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம் ஆகிய பிரிவுகளிலிருந்து வரும் பெண்கள் இந்த அமைப்பில் பெரும் எண்ணிக்கையினராக அமைய வேண்டும். ஏனெனில் வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இரண்டு வகையான ஒடுக்குமுறைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னாளில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்த நிலையில், இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வலுவானதொரு ஜனநாயக ரீதியாக பெண்கள் இயக்கத்தினை கட்டுவதற்கான அடித்தளத்தை உருவாக்க அவர் முனைந்தார். இந்தப்பணியில் மூன்று முக்கிய அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முதலாவதாக, ஒரு முதலாளித்துவ, அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பெண்கள் அவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவராக இருந்தாலும் பெண்கள் என்ற முறையில் பாலியல் ரீதியான ஒடுக்குமுறையினால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவதாக, விவசாயத்திலும், தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் என்ற நிலையில் பெண்கள் வர்க்க ரீதியான சுரண்டலினால் பாதிக்கப்படுகிறார்கள். மூன்றாவதாக, குடிமக்கள் என்ற வகையில், ஜனநாயக உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற் காகவும், நியாயமானதொரு சமூகத்திற்காகவும் பெண்கள் ஆண்களோடு சேர்ந்து நின்று போராட வேண்டியுள்ளது.
இந்த மூன்று அம்சங்களும் ஒன்றிணைவது தான் பெண்களின் சமத்துவத்திற்காகவும், வர்க்க ரீதியான, பாலியல் ரீதியான, ஒடுக்குமுறைக்கு எதிராகவுமான போராட்டத்தில் பெண்களின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்திழுக்க சரியானதொரு திசைவழியினை உருவாக்கும்.
நாடாளுமன்ற நடவடிக்கை குறித்த கண்ணோட்டம்
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பைப் பொறுத்தவரையில், இ.எம்.எஸ். மிகவும் பிரத்யேகமானதொரு இடத்தை பெற்றவராக இருந்தார். 1957ஆம் ஆண்டில் முதன்முதலாக தேர்தல் மூலமாக உருவான கம்யூனிஸ்ட் அமைச்சரவைக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில், உண்மையான அரசு அதிகாரம் என்பது மாநில அரசுகளிடம் இல்லாமல் மத்திய அரசிடமே குவிந்து கிடக்கும் அரசியல் அமைப்புச்சட்ட அமைப்பிற்குள் செயல்பட்டு நேரடி அனுபவத்தைப் பெற்றவராக அவர் இருந்தார்.
இ.எம்.எஸ். தலைமையில் கேரளாவில் 28 மாதங்கள் செயல்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையானது பரந்த செயல் விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகள், அமல்படுத்தப் படுவதை உறுதி செய்தது. இந்த அரசின் முதல் நடவடிக்கையே குத்தகைதாரர்களை நிலத்திலிருந்து வெளியேற்றுவதை தடை செய்யும் அவசரச்சட்டம் ஒன்றை பிறப்பித்ததே ஆகும்.
இந்த அவசர சட்டத்தைத் தொடர்ந்து வந்த விவசாய உறவுகள் சட்ட முன்வரைவானது நிலையான குத்தகை காலம், குறைவான குத்தகை, குத்தகைதாரர்கள் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கான உரிமை, நிலமற்ற விவசாயத் தொழிலாளர் களைப் பொறுத்த வரையில், குடிமனை மீதான காலத்திற்கு பாதுகாப்பு மற்றும் உபரி நிலங்களை அவர்களிடையே விநியோகிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
நிலச்சீர்திருத்தச் சட்டமும், கல்வி தொடர்பான சட்ட முன் வரைவு சட்டமாக இயற்றப்படுவதும் பரவலாக அறியப்பட்ட போது நிலப்பிரபுத்துவ, ஆதிக்க சக்திகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் இவை பெற்றன. இந்த ஆதிக்க சக்திகள் மாநில அரசை தூக்கி எறிய ஒன்றிணைந்த போதுதான், மேலும் முக்கியமானதொரு கொள்கை முடிவையும் மாநில அரசு மேற்கொண்டது. அதுதான் இ.எம்.எஸ். அமைச்சரவை மேற்கொண்ட போலிஸ் குறித்த கொள்கையாகும்.
விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் முதல்முறையாக ஒரு அரசாங்கம் ஜனநாயக ரீதியானதொரு போலிஸ் கொள்கையை முன்வைத்தது. தொழிலாளர்களின் தொழிற் தகராறுகளிலோ, அல்லது நிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சச்சரவுகளிலோ போலிஸ் எந்த விதமான பங்கினையும் வகுக்கலாகாது என்பதுதான் இக்கொள்கையின் சாரமாகும்.
தொழிலாளிகளின், விவசாயிகளின் போராட்டங்களை உடைத்து நொறுக்குவதற்கு முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் ஒரு கருவியாக போலிஸ் இருக்காது. இந்த இரு பிரிவினரின் எந்தவொரு குழுவும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும்போது மட்டுமே போலிஸ் தலையீடு என்பது இருக்கும்.
இந்தக் கொள்கையை விளக்கும் வகையில் இ.எம்.எஸ். எழுதினார்:
இந்தக் கொள்கையின் சாரமாக அமைவது என்னவெனில், தொழிற்சங்கத்தையோ, விவசாயி களையோ, எந்தவொரு வெகுஜன அமைப்பின் வெகுஜன நடவடிக்கைகளையோ, அல்லது எந்தவொரு அரசியல் கட்சியும் நடத்துகின்றதொரு அரசியல் போராட்டத்தையோ நசுக்குவது என்பது போலிஸ் வேலையல்ல, சாதாரண குற்றங்களை இழைப்பவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவது மட்டுமே போலிசின் வேலையாகும்.(‘கேரளாவில் 28 மாதங்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தொகுதி 2, பக்.134)
இ.எம்.எஸ். தலைமையிலான முதல் அமைச்சரவையில் முழுமையாக செயல்படுத்த முடியாமல் போன இந்தக் கொள்கையானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு 1967-70 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி அரசுகள் பதவியேற்ற போது மார்க்சிஸ்ட் கட்சியால் மேலும் செறிவூட்டப்பட்டது.
கேரளாவில் தேர்தல் மூலமாக முன்னுக்கு வருவது குறித்த ‘கேரளா வழி’ என்ற சீர்திருத்தவாத கருத்தினை 1964ஆம் ஆண்டு கட்சி பிளவுபடுவதற்கு முன்பாகவே, கட்சிக்குள் இ.எம்.எஸ். எதிர்த்துப் போராடினார். நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆளும் வர்க்க நலன்களை தீவிரமாகப் பின்பற்றி செயலாற் றியதைக் கண்ட நிலையில், அதிகாரத்தைப் பெறுவதற்கான எந்தவித நாடாளுமன்ற வழியும் திறக்கப்பட்டு விட்டது என்று அவர் நம்பவில்லை.
தில்லியில் அதிகாரத்தைப் பெறுவதற்கு வழிகோலும் கேரளா வகையிலான வெற்றி என்பது தொடர்ந்து வராது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். மாறாக, வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலம்தான் கம்யூனிஸ்டுகளின் தேர்தல் வெற்றியை அதிகரிக்க முடியும் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார்.
முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் அனுபவம் குறித்து இ.எம்.எஸ். கீழ்க்கண்டவாறு விளக்கினார் :
கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட ‘பரிசோதனை’ என்பது எதையாவது தெரிவிக்கிறது என்றால், அது இதுதான் : பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற நிலையில், மாநில அரசுகளை அமைப்பது உள்ளிட்டு, நாடாளுமன்ற களத்தில் நடத்தப்படும் போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தின் குறிப்பிட்ட தொரு வடிவமே ஆகும். நாடாளுமன்ற களத்தில் நடத்தப்பெறும் இந்த வர்க்கப் போராட்ட மானது, நாடாளுமன்றத்திற்கு அப்பால் நடத்தப் படும் போராட்டத்திற்கு , அது ஒன்றிணைந்த ஒன்றாக இருந்த நிலை இருப்பினும், கீழே அடங்குவதாகவே அமைய வேண்டும் .(ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள், பக்.177)
பின்னாளில் ஒரு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் மாநில அரசுகளில் பங்கேற்பது குறித்த அதன் நடைமுறை தந்திரங்களை உருவாக்குவதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த அனுபவம்தான் உதவி செய்தது. 1964ஆம் ஆண்டில் கட்சித் திட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில், தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சுட்டிக்காட்டியதைப் போல, மாநில அரசுகளில் பங்கேற்பதை வரையறுக்கும் வகையிலான ஒரு பத்தி இ.எம்.எஸ்-சின் வற்புறுத்தலின் விளைவாகவே சேர்க்கப்பட்டது.
பின்னர் மத்தியக்கமிட்டி தனது ‘புதிய சூழ்நிலையும் கடமைகளும் (1967)’ என்ற தனது ஆவணத்தில் 1967ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசுகள் உருவாக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய தன்மைகளை விளக்கிக்கூறியது.
1967ஆம் ஆண்டில் இ.எம்.எஸ். மீண்டும் கேரளாவின் முதல் அமைச்சராக ஆன பிறகு மாநில அரசாங்கத்தில் இருக்கும் போதே அரசு நிர்வாகம் மற்றும் போராட்டம் ஆகியவை குறித்த நடைமுறைத் தந்திரத்தை வகுப்பதற்கு துணை புரிந்தார். வெகுஜன இயக்கங்கள், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் ஆகியவை வளர உதவும் வகையிலான கொள்கைகளை உருவாக்கவும், அவற்றை அமல்படுத்தவும் மாநில அரசில் பங்கேற்பதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும்.
அந்த நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோஷத்தை எதிர்த்தது இடதுசாரிகளின் தலைமையிலான, மாநில அரசை போராட்டத்திற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வது என்ற கருத்தோட்டத்திற்கு ஆதரவாக இ.எம்.எஸ். வாதாடினார்.
எனினும் நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கேற்பது என்ற இந்த ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இ.எம்.எஸ்.-சின் தெளிவான சிந்தனையை குறுக்கி விடுவது தவறாகும். நாடாளுமன்ற அமைப்பிற்குள் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதிலும், பொதுமக்களின் ஆதரவுடன் எங்கெல்லாம் அரசாங்கங்களில் பங்கேற்கிறதோ அங்கெல்லாம் கட்சியின் பங்கை வரையறுப்பதிலும், விளக்குவதிலும், அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதில் கட்சி தனது கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும் என்பதிலும் அடிப்படையான புரிதல் அவரிடம் அதிகமாகவே இருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில், அது சட்டமன்றங் களாக இருப்பினும் சரி, அல்லது சமூகத்திலுள்ள இதர நிறுவனங்களாயினும் சரி, அனைத்து மட்டங்களிலும் கட்சியின் பணி என்பது ஜனநாயக ரீதியான இயக்கத்தை வளர்த்தெடுப் பதற்கான ஒட்டு மொத்த தந்திரோபாயங்கள், நடைமுறைத் தந்திரம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்.
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைமுறைத்தந்திரம்
அரசியல்ரீதியான நடைமுறைத்தந்திரத்தில் இ.எம்.எஸ்-சின் பிரத்யேகமான திறமை என்பது உடனடியான நிலைமைகள் மற்றும் நீண்டகால யுத்த தந்திரம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் ஏற்படுகின்ற மாற்றங்களின் சாரத்தை புரிந்து கொள்வதில் அவருக்கிருந்த அபாரமான திறனின் விளைவாகவே ஏற்பட்டதாகும். ஓர் அரசியல் நிகழ்வு தோன்றும்போதே அதன் வளர்ச்சிப்போக்கு குறித்து முன்கூட்டியே உணர்ந்து கொள்வதில் அவருக்கு இணையாக எவருமில்லை என்றே கூறி விடலாம். அந்தப் போக்கை வர்க்க ரீதியாக ஆய்வு செய்யவும் அவரால் முடிந்தது.
நடைமுறைத்தந்திரத்தின் அடுத்த கட்டத்தை அவர் வடிவமைக்கும் போதோ, அல்லது தற்போதுள்ள நடைமுறைத் தந்திரத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் போதோ, அவரது இந்தத் திறனை அடிக்கடி நம்மால் காண முடிந்தது. மாற்றத்தினை கொண்டு வரும் அவரது இந்தப் புரிதலை உணர்ந்து கொள்ள அவரது சக தோழர்களுக்கும், கட்சிக்கும் சிறிது காலம் பிடித்தது.
இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக 1982ஆம் ஆண்டில் 11வது கட்சி காங்கிரஸ் வகுப்புவாத, பிரிவினை சக்திகளின் அபாயம் அதிகரித்து வருவது குறித்து கட்சி உருவாக்கிய கருத் தோட்டத்தை கேரளாவில் அப்போது நிலவிய ஸ்தூலமான நிலைமைகளுடன் இ.எம்.எஸ் எவ்வாறு பொருத்திப் பார்த்தார் என்பதைக் கூறலாம்.
கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில், கட்சி பின்பற்றி வந்த ஐக்கிய முன்னணி அரசியலின் ஒரு பகுதியாக அதுவரையில் இருந்து வந்த வகுப்புவாதக் கட்சிகளுடனான தொடர்புகளை உடைத்தெறிவதற்கான போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இ.எம்.எஸ்-சால் துவக்கப்பட்ட உறுதியான போராட்டத்தின் விளைவாக(முஸ்லிம் லீகிலிருந்து பிரிந்து வந்த கோஷ்டிகளில் ஒன்றாக இருந்த) அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடனான உறவை கட்சி துண்டித்துக் கொண்டது. கேரளாவில வகுப்புவாத அடிப்படையிலான கட்சிக்கு அளிக்கப்படும் எந்தவொரு சலுகையும் பெரும்பான்மை வகுப்புவாத மற்றம் இதர பிரிவினை சக்திகளுக்கு எதிரான அகில இந்திய போராட்டத்தை சீர்குலைத்துவிடும் என்பதை இ.எம்.எஸ் நன்கு உணர்ந்திருந்தார்.
‘1987 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இ.எம்.எஸ் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். சாதிய, வகுப்புவாத அரசியல் தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்றானது, கேரளாவின் நவீனமான, ஜனநாயகரீதியான சமூகத்தில் அவற்றிற்கு எந்தவிதமான இடமும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையானதொரு கொள்கையினை இ.எம்.எஸ் தனது பிரச்சாரத்தில் மக்கள் முன் வைத்தார். இந்தத் தேர்தலில் கட்சியின் நிலைபாட்டிற்கும், இடதுசாரி ஜனநாயக முன்ன ணிக்கும் கிடைத்த வெற்றியானது இ.எம்.எஸ்-சின் அரசியல் வரலாற்றில் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் மற்றுமொரு முக்கியமான பங்களிப்பையும், இ.எம்.எஸ் செய்திருந்தார். தேசிய அளவில் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் இருந்தபோது, 80களின் பிற்பகுதியில் பெரும்பான்மை வகுப்புவாதமானது மிகவேகமாக வளர்ந்து கொண்டு வந்த அபாயம் நிலவியது.
அயோத்தியில் பாப்ரி மசூதியை குறி வைத்து துவக்கப்பட்ட ராமஜென்ம பூமி இயக்கத்தின் எழுச்சியும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளினால் தூண்டி விடப்பட்ட தொடர்ச்சியான வகுப்புவாதக் கலவரங்களும், இந்துத்துவா சக்திகளின் அதிகரித்து வந்த மூர்க்கத்தன்மையும் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு எதிராக உருவாகி வந்த புதிய அச்சுறுத்தலை இ.எம்.எஸ்-சிற்கு எடுத்துக்காட்டியது.
மதச்சார்பற்ற சக்திகளிடையே அவரோடு அப்போது வாழ்ந்து வந்த பலருக்கும் முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா தத்துவம் ஆகியவற்றின் பின்பலத்தில்தான் பிஜேபி அதை நிலை நிறுத்திக் கொள்ளும் எழுச்சியினைப் பெற்று வந்தது என்பதை இ.எம்.எஸ் கண்டறிந்து விளக்கினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியம் மற்றும் அதன் ஒட்டு மொத்தமான கருத்தோட்டத் திற்கும் நேர் விரோதமாகவே இந்த இந்துத்துவா தத்துவம் அமைந்திருந்தது.
விடுதலைக்கு முன்பாக நிலவிய வகுப்புவாத அச்சுறுத்தலும், இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் அளவில அது மீண்டும் புத்துயிர் பெறுவதும் இதுபோன்ற பிற்போக்கு தத்துவத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்திகளிடம் சமரசம் செய்து கொள்ளும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பின் வர்க்கத்தன்மையே காரணம் என்று இ.எம்.எஸ். தொடர்பு படுத்திப் பார்த்தார்.
எனவே, பி.ஜே.பி- ஆர்.எஸ்.எஸ். கூட்டணி என்பது வெறும் வகுப்புவாத சக்தி மட்டுமல்ல; மாறாக, இந்தியாவிலுள்ள வலதுசாரி பிற்போக்குவாதிகளின் பிரதிநிதிகளாகவும் அவை விளங்குகின்றன என்பதை வர்க்க ரீதியாக உணர்ந்திருந்தார்.
இ.எம்.எஸ்.-சின் இந்த தெளிவான புரிதல்தான், இரண்டு வகையான முறையில், இப்பிரச்சனையை அணுகும் கொள்கையை கட்சியின் மத்தியக்கமிட்டியும், அரசியல் தலைமைக்குழுவும் மேற்கொள்வதற்கான உறுதியான தலைமையை அவரால் வழங்க முடிந்தது.
முதலாவதாக, பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-வி.எச்.பி கூட்டணி யானது, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பிற்கு ஓர் அபாயமாக விளங்குகிறது என்ற இலக்கு வைத்து, அதை தனிமைப்படுத்துவதற்காக செயல்படுவது;
இரண்டாவதாக, மதச்சார்பற்ற அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, அப்போதிருந்த ராஜிவ்காந்தி அரசை எதிர்த்துப் போராடுவதற்காக இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் விரிவான ஒற்றுமையை இதர இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து உருவாக்குவதும், அதே நேரத்தில் இப்பிரச்சனையில் தலையிட்டு, காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை நுழைத்துக் கொள்ள முயற்சித்த பி.ஜே.பி.யிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டி, அக்கட்சியை தனிமைப்படுத்துவதும் ஆகும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வந்த வெகுஜன அதிருப்திக்கு தலைமை தாங்கும் வகையில் பி.ஜே.பி.யையும் உள்ளடக்கிய ‘அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை’யை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க கட்சி மேற்கொண்ட போராட்டத்திற்கு இ.எம்.எஸ். தலைமை தாங்கினார்.
தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு வந்த நேரத்தில், துவக்கத்தில் ஒருசில முதலாளித்துவக் கட்சிகள் பி.ஜே.பி.யையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பின. ராஜிவ் காந்திக்கு எதிராக கியானி ஜெயில்சிங்கிற்கு ஆதரவளிப்பது போன்ற குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் பி.ஜே.பி.யுடன் ஒன்று சேர்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பிரச்சனைகள் அனைத்திலுமே இ.எம்.எஸ்.-சின் மூலமாக கட்சி வெளிப்படுத்திய அரசியல் நிலைபாடு மற்றும் தலையீடு பி.ஜே.பியை தேசிய முன்னணியிலிருந்து பிரித்து வைத்துப் பார்ப்பதில முக்கியப் பங்கினை வகித்தன என்பதோடு தேசிய முன்னணிக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பிற்கு அடித்தளமிடுவதாகவும் அமைந்தன.
பாட்டாளி வர்க்க மேலாதிக்கத்திற்காக
மற்றொரு தளத்தில் இ.எம்.எஸ்.-சின் பிரத்யேகமான பங்களிப்பு என்பது இந்திய அரசியலில் தெளிவான வேறுபாடுடைய சக்தியாக இடதுசாரிகளின் பங்கினையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலேயே அதன் ஆணிவேர் அமைந் திருந்தது என்பதையும் எடுத்துக்கூறியது ஆகும்.
தனது அரசியல் வாழ்வின் துவக்க நாட்களில் தீவிரமான காங்கிரஸ்காரராகவும், பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகவும், இறுதியில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவராகவும் அவர் உருவான நிலையில், ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத்தில் கிடைத்த அனுபவம் முழுவதையும் முறையாக வகைப்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இடதுசாரிகளின் பங்கினை எளிதாக உணரும் வகையில் எடுத்துக்கூறினார்.
1935ஆம் ஆண்டில் லக்னோ மாநாட்டில் நேரு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து திரிபுரா மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது வரையில் காங்கிரஸ் கட்சிக்குள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே போராட்டம் நிகழ்ந்து வந்தது. தளர் நடைபோட்டு வளர்ந்து கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு; அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பாசிசத்திற்கெதிரான போராட்டத்தின் தாக்கம்; ஏஐடியுசி மற்றும் இதர வர்க்க, வெகுஜன அமைப்புகளின் உருவாக்கம்; ஆகிய இந்த சம்பவங்கள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தில் முதலாளித்துவ மேலாதிக்கம் நிறைந்த இயக்கத்தோடு கூடவே ஒப்பீட்டு நோக்கில் பாட்டாளி வர்க்க / இடதுசாரி பிரிவினர் எவ்வாறு வளர்ச்சி பெற்றனர் என்பதை மிகத் தெளிவான வகையில் அவர் முன் வைத்தார்.
இங்கும் கூட இயந்திரத்தனமானதொரு ஆய்வையோ அல்லது சர்வசாதாரணமான வகையிலோ அவர் இக்கருத்தை எடுத்துரைக்கவில்லை. வர்க்க அடிப்படையில் பார்க்கப் போனால் மகாத்மா காந்தியின் தலைமையானது அடிப்படையில் முதலாளித்துவப் போக்கிலானது என்று வகைப்படுத்திய அதே நேரத்தில், தேசிய இயக்கத்தில் காந்தியின் பங்கு குறித்து மிகவும் ஆழமாக, நுண்ணறிவுத் திறனோடு தன் ஆய்வினை இ.எம்.எஸ். வழங்கினார். 1958ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளிவந்த ‘மகாத்மாவும் இஸமும்’ என்ற நூலானது, 1955-56 காலப்பகுதியில் கட்சியின் ஆங்கில மாத இதழான ‘நியூ ஏஜ்’ இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆகும்.
விடுதலைக்காக காங்கிரஸ் தலைமையிலான வெகுஜன இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் காந்தியின் மிக முக்கியமான பாத்திரம் குறித்த ஆய்வினை ஒரு மார்க்சியத் தலைவர் மேற்கொண்ட முதல் அறிவார்ந்த முயற்சி அதுவே ஆகும். காந்தியின் சாதகமான பங்கும், அதன் மோசமான குறைபாடு களும் தனிப்பட்ட நபரை ஒட்டியதாக பார்க்கப்படவில்லை; மாறாக தேசிய முதலாளிகளின் ஒட்டுமொத்த நலன்கள் என்ற கட்டமைப்பிற்குள்தான் பொருத்திப் பார்க்கப்பட்டது. தனிநபர் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்று காந்தி மேற்கொண்ட மிக வித்தியாசமான நடைமுறை தந்திரங்கள் இந்தப் பின்னணியில் தான் புரிந்து கொள்ளப்பட்டது.
காந்தியின் மகத்துவத்தையும், அவரது பங்களிப்பையும் அங்கீகரித்த அதேநேரத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகிய கடமைகளில் காங்கிரசின் முதலாளித்துவ தலைமைக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நிலவிய முற்றிலும் வேறு வேறு விதமான அணுகுமுறையையும் இந்த நூல் விரிவாக எடுத்துக் காட்டியது.
இ.எம்.எஸ். தனது முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதி அங்கீகரித்த இந்த முக்கிய நூலிலிருந்து விடுதலைப் போராட்டத்திற்குள்ளேயே, முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்கம் என்ற இருவிதமான நீரோட்டங்கள் இருந்ததை காண முடிந்தது. இந்த இரண்டு நீரோட்டங்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவது என்ற நோக்கத்தில் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்த போதிலும், அவற்றின் வர்க்க நலன்களில் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன என்பதையும் தெளிவாக அறிய முடிந்தது.
இவ்வாறுதான் முதலாளித்துவ அரசியல் சக்திகளின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் பாட்டாளி வர்க்கத்தை வளர்த்தெடுப்பதற்கான ஆர்வம் துவங்கியது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் இடதுசாரிகளின் பாரம்பரியத்தை தேடிக்காணும்போதும் சரி, காங்கிரஸ் தலைமையின் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ போக்குகளிலிருந்து அதை வேறுபடுத்திப் பார்க்கும்போதும் சரி, இ.எம்.எஸ். பின்னாளில் ஆளும் வர்க்கங்களின் தத்துவார்த்த ரீதியான மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய பிரச்சனை குறித்து மிகுந்த கவனம் செலுத்தினார்.
பொருளாதாரப் போராட்டங்கள், அரசியல் கோஷங்கள் ஆகியவற்றினால் மட்டுமே ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தை முறியடித்து விட முடியாது. இ.எம்.எஸ். அவரது புரட்சிகர வாழ்க்கையின் துவக்க நாட்களிலிருந்தே செய்தி ஊடகங்கள், கலாச்சாரம், அறிவுபூர்வமான பணிகள் ஆகியவை மாற்று இடதுசாரி கண்ணோட்டத்தை முன்வைப் பதற்கு எவ்வளவு அவசியமானவை என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்தார்.
அவரது வாழ்நாள் முழுவதும் பயனுள்ள வகையில் ஊடகங்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளோடு கொண்டிருந்த தொடர்பு பாட்டாளி வர்க்க இயக்கம் குறித்த இந்த முழுமையானதொரு புரிதலினால் வளர்க்கப்பட்டதே ஆகும்.
சோசலிச சர்வதேசியம்
மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைமையுடன் இ.எம்.எஸ். பகிர்ந்து கொண்ட சர்வதேச கண்ணோட்டத்தை விரிவாக இங்கே விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கண்ணோட் டத்தின் தனித்துவமிக்க தன்மை என்பது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், மார்க்சிய – லெனினிய சித்தாத்தங்களை நடைமுறைப் படுத்துவதிலும், சர்வதேச அளவிலான புரிதலை வகைப்படுத்து வதிலும் எந்தவொரு குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விசுவாசமாக இல்லாமல் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தினை மட்டுமே கடைப்பிடிப்பதாகும்.
ஏகாதிபத்தியத்தின் தாக்குதலிருந்து சோசலிசத்தைப் பாதுகாக்க குரலெழுப்பும் போது கூட, அது சோவியத் யூனியனாக இருந்தாலும் சரி அல்லது சீனவாவாக இருந்தாலும் சரி, இ.எம்.எஸ்.-சும். ஓர் அங்கமாக இருந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையானது, சோசலிசத்திற்கு ஆதரவாகவும், சந்தேகத் திற்கிடமற்ற வகையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சர்வதேசியத்திற்காக உறுதிபட நின்றது.
மேலும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தங்களது யுத்த தந்திரத்தையும், நடைமுறைத் தந்திரத்தையும் எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று எந்தவித கட்டளையையோ அல்லது வழிகாட்டுதலையோ ஏற்றுக் கொள்ள அக்கட்சி மறுத்து விட்டது. கம்யூனிஸ்டுகளின் கொள்கைப் பிடிப்புமிக்க இந்த நிலைபாட்டை முன்னெடுத்துக் கூற வேண்டிய கடினமான பொறுப்பு 1962ஆம் ஆண்டில் உருவான இந்திய – சீன எல்லை மோதலின் போதும், 1965ஆம் ஆண்டில் நடந்த இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் இ.எம்.எஸ்.சின் மீது விழுந்தது. அச்சமயங்களில் அவரது தோழர்களில் பெரும்பாலோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தேசிய வெறியை எதிர்த்து, நமது நாட்டின் இரு பக்கத்திலும் இருக்கும் இந்த இரண்டு அண்டை நாடுகளுடன் உள்ள பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஒரு நிலைபாட்டினை கட்சியின் சார்பில் எடுத்துரைக்க வேண்டியவராக அவர் இருந்தார்.
பின்னாளில், அதாவது சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவான பிளவுக்குப் பிறகும், சோவியத் யூனியன் இல்லாமல் போன காலத்திலும், சோசலிச நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கம் ஆகியவை குறித்த அவரது புரிதலில் இரண்டு குறிப்பிடத்தக்க போக்கினை காண முடிந்தது. முதல் கட்டத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திருத்தல்வாத, குறுங்குழுவாதப் போக்கு ஆகியவற்றின் வெளிப்பாடுகளை அவர் எதிர்த்த அதே நேரத்தில் ஒவ்வொரு நாடும், அந்த நாட்டிலுள்ள புரட்சிகர கட்சியும் சோசலிசத்தை நோக்கிய தங்களது பாதையை தாங்களாகவே கண்டறிய வேண்டும் என்பதிலும், மார்க்சியம் – லெனினியம் என்ற பெயரிலோ அல்லது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற பெயரிலோ புரட்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவம் திணிக்கப்படுவதை எதிர்த்தார்.
எனவேதான் சீனப்புரட்சியின் பங்களிப்பை பாராட்டிய தோடு, மார்க்சியத்தின் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் மாசேதுங்கின் பங்களிப்பு குறித்து மிகுந்த ஆழமாக பயிலவேண்டும் என்று வற்புறுத்தினார், சீனப் புரட்சியின் மகத்தான பங்களிப்பை அவர் போற்றிப் புகழ்ந்த போதிலும் இந்திய நிலைமைகளுக்கு அவற்றை இயந்திர ரீதியாக பொருத்துவதையும் உறுதியுடன் எதிர்த்தார்.
முரண்பாட்டிற்கு இடந்தராத அவருடைய இந்த அணுகுமுறைதான் அறுபதுகளிலும், எழுபதுகளின் துவக்கத் திலும் நக்சலைட் இயக்கமும், இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட் தத்துவவாதிகளும் அவரை குறிவைத்துத் தாக்கவும் வழி வகுத்தது.
சோவியத் யூனியனின் சிதைவிற்குப் பிறகு, சோசலிச சமூகத்திற்கான இந்த முதல் பரிசோதனை குறித்த மேலும் ஆழமான புரிதலைப் பெற வேண்டுவதற்காக சோவியத் யூனியனை உருவாக்கிய அனுபவம் முழுவதையும் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது என்ற முயற்சியை அவர் மேற்கொண்டார்.
லெனின் மற்றும் அவர் முன்வைத்த புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றின் காலத்திற்கு மீண்டும் சென்று வருவதன் அவசியம் குறித்தும், அதன் வழியே சோவியத் என்ற முன்மாதிரியில் பொதிந்திருந்த வறட்டுத் தத்துவம் மற்றும் திருத்தல்வாதம் ஆகியவற்றின் ஊற்றுக் கண்களை தேடிக் காண வேண்டும் என்றும், பல்வேறு கட்டுரைகளின் மூலம் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்தப் பின்னணியில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட தவறுகளை தவிர்ப்பதற்காக பொருளாதாரத்தை சீர்திருத்து வதற்காக சீனா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவான நிலை எடுத்தார். டெங்சியாவோ பிங் துவக்கிய சீர்திருத்தங்கள், சீனாவில் சோசலிசத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் எதிர்மறையான வளர்ச்சிப் போக்கே ஆகும் என்ற கருத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இ.எம்.எஸ் தனது கடைசி ஆண்டுகளில் சோவியத் யூனியனில் சோசலித்தைக் கட்டுவதில் பெற்ற அனுபவம் குறித்தும் அதன் சரிவிற்கான காரணங்கள் குறித்தும் முழுமையான மறு மதிப்பீட்டை மேற்கொண்டு அதை சோசலிசத்திற்கான போராட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்கு குறித்து சமகாலத்திற்கேற்ப முழுமையானதொரு அணுகுமுறையுடன் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் கட்சியை வலியுறுத்தி வந்தார்.
இ.எம்.எஸ்.சின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் சிறப்புக் குரியதொன்றாகவே இருந்தது. மாபெரும் அறிவுத்திறனை கொண்டிருந்தாலும் மிகவும் தன்னடக்கத்துடன் எந்தவித தற்பெருமையும் அற்றவராகவே அவர் இருந்தார். 1940ஆம் ஆண்டுகளிலேயே தனது பரம்பரைச் சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு வழங்கிவிட்ட அவர் மிக மிக எளிமையான வாழ்க்கையையே நடத்தி வந்தார்.
ஒரு மார்க்சிஸ்டாக மாறிய பிறகும் கூட, ‘எனது வாழ்க்கை முறையில் காந்தியத்தின் அம்சங்கள் பெருமளவிற்கு உள்ளடங்கி இருந்தன’ என்று அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறையிலேயே அவர் செயல்பட்டு வந்தார். தனது உதாரணமான வாழ்க்கையின் மூலமாகவே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கட்சியின் ஊழியர்கள் நடந்து கொள்ள மிகப்பெரும் தார்மீக செல்வாக்கையும் அவர்கள் மீது செலுத்தி வந்தார் என்றும் கூறலாம்.
மக்களுடன் தொடர்ச்சியான உரையாடல்
வேறெந்த கம்யூனிஸ்ட் தலைவருடன் ஒப்பிட முடியாத வகையில் மக்களில் பெருந்திரளினருக்கு நடைமுறை வழிகாட்டுதலை வழங்கும் வகையில் மிகவும் வெற்றிகரமாக பேசுபவராக இ.எம்.எஸ் திகழ்ந்தார். அது கேரளாவிற்கு மட்டுமேயாக இருந்த பிரத்தியேகமான அம்சம். அதன் மூலம் மக்களுடன் நேரடியாகப் பேசுவதற்கும், எதிர்க்கட்சி அரசியல் வட்டாரத்தினருடன் சமகால அரசியல் மீதான வாதங்களை மேற்கொள்ளவும் கட்சியின் வெகுஜன ஊடகங்களை இ.எம்.எஸ் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.
அவர் தில்லியிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும் கூட கேரளாவில் நடந்து கொண்டிருந்த அரசியல் வாக்குவாதங்களில் தனது வழக்கமான தொடர்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் தலையிட்டுக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையின் இறுதி வரையில் தினசரி கட்டுரைகள், வாராந்திர தொடர்கள், தலையங்கங்கள், புத்தக விமர்சனங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் வெளிவந்த எழுத்துக்கள் அனைத்துமே கேரளாவின் பொதுவாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அத்தியாயமாக விளங்கியது என்பதோடு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும் தனிச்சிறப்பான ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு வேறெந்த அரசியல் சிந்தனையாளரும் இத்தகையதொரு தனிச்சிறப்பிற்கு உயர வில்லை என்பதோடு, இ.எம்.எஸ்.ஐப் போன்று மக்களோடு எப்போதும் தொடர்பு கொண்டவர்களாக இருக்கவில்லை என்றே கூறலாம்.
அவரது அரசியல் சிந்தனையும் நடைமுறையும் தத்துவமும் நடைமுறையும் என்ற மிகச்சிறந்த மார்க்சிய ஒழுங்கமைவிற்கு உதாரணமாகத் திகழ்ந்தது என்பதால் தான் இது சாத்திய மாயிற்று என்றே கூற வேண்டும்.
– தமிழில்: வீ.பா. கணேசன்