மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மனைப்பட்டா இயக்கமும், மார்க்சியமும்


தமிழகம் முழுவதும் வீட்டு மனைப்பட்டா கோரிக்கைக்காக மக்கள் இயக்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு பட்டாவிற்காக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இயக்கங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஆனால் அரசாங்கம் பட்டா கோரிக்கையை ஏற்க மறுத்து வருகின்றது. இருக்கின்ற நிலங்களை செல்வாக்கு மிக்கவர்களின் சுயநலத்திற்கு தாரை வார்க்க அரசு முயல்கிறதே தவிர ஏழை மக்களின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தருமபுரி நகரில் செங்கொடிபுரத்தில் குடியிருந்து வரும் தலித், அருந்ததிய, ஒடுக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளிகளை வெளியேற்றி, அந்நிலத்தை தனியார் கொள்ளைக்கு தாரை வார்க்க அரசு நிர்வாகம் முயன்றது. அதனைக் கண்டித்து, 56 குடும்பங்களின் பட்டா பிரச்சனைக்காக, தார்மீக ஆதரவு என்ற வகையில் 7 ஆயிரம் பேர் ஆறுநாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர். இதுபோன்ற பல நிகழ்வுகளை தமிழகம் கண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வீட்டுப் பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, இப்பிரச்சனைக்காக போராடி வரும் மார்க்சிஸ்டுகள், இப்பிரச்சனையின் தத்துவார்த்த அடிப்படையை அறிவது அவசியம்.

இதையொட்டி, மார்க்சும், ஏங்கெல்சும் எழுதிய எழுத்துக்கள் பயனுள்ளவை. மார்க்சின் மூலதனம் நூலிலும் இப்பிரச்சனை விவாதிக்கப்படுகிறது. பிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய “வீட்டுப் பிரச்சனை” என்ற நூல் முக்கியமானது. நூலிற்கு செல்வதற்கு முன் ஏங்கெல்சின் மார்க்சிய பங்களிப்பு பற்றி சில வார்த்தைகள்.

மார்க்ஸ், ஏங்கெல்சுகிடையே வேலைப் பிரிவினை

சமீபத்தில், மார்க்சிய சித்தாந்தம் பற்றிய உரையாடலின் போது ஒரு தோழர் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டார். “உலகம் மார்க்சுக்கு அளித்த முக்கியத்துவத்தில் பாதியளவுக்குக் கூட ஏங்கெல்சுக்கு அளிக்கவில்லை. மார்க்சின் பங்களிப்பு அளவிற்கு ஏங்கெல்சின் பங்களிப்பு உலகுக்குத் தெரிவதில்லை” என்றார் அவர்.

இன்னும் ஒரு படி மேலே போய், ‘தற்போதுள்ள சமூகம், குடும்பங்களில் பெண்களின் உழைப்புக்கு எப்படி மரியாதை தருகிறதோ, அது போன்றுதான் ஏங்கெல்சின் பணிக்கு மதிப்பளிக்கிறது’ என்றெல்லாம் வருத்தப்படத் துவங்கினார் அவர். ஏங்கெல்சின் பங்களிப்பைக் குறித்து அவர் கொண்டுள்ள ஈடுபாடு பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், யாருக்கு அதிக முக்கியத்துவம் தருவது என்ற வகையில் கேள்வியை முன்வைப்பது அவசியமற்றது.

மார்க்சியம் எனும் புரட்சிகர தத்துவத்தை உலகுக்கு அளித்ததில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் அதிசயிக்கத்தக்க உழைப்பு அடங்கியிருக்கிறது.

இருவருக்குள் ஒரு வேலைப்பிரிவினை இருந்துள்ளது. மார்க்ஸ் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கலான நிகழ்வுகளை ஆராய்ந்து மூலதனம் எழுதும் பணியில் ஈடுபட்டார். இக்காலத்தில் ஏங்கெல்ஸ் அதுவரை அறிவியல் கண்டறிந்த உண்மைகளை ஆராய்ந்திட, இயற்கை, அறிவியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தினார். ஏங்கெல்சின் இந்த ஆராய்ச்சி, இயக்கவியல், வரலாற்று பொருள்முதல்வாதத்தை வரையறுக்க உதவிற்று. ஏற்கனவே, இந்த ஆய்வு முறையை பின்பற்றி பொருளாதாரத்தில் சில புதிய, புரட்சிகர உண்மைகளை மார்க்ஸ் கண்டறிந்தார்.

அதேபோன்று, இன்னொரு பணியையும் ஒரு கட்டத்தில் ஏங்கெல்ஸ் ஏற்க வேண்டியிருந்தது. மார்க்சிய அடிப்படைகளை கட்டமைக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்த காலத்தில் முதலாளித்துவ அறிவுலகம் ஓய்ந்திருக்கவில்லை. முதலா ளித்துவத் தீர்வுகளை முன்வைத்து, முதலாளித்துவத்தை வலுப் படுத்திடும் வேலையில் பல அறிஞர்கள் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் மார்க்சின் கண்டுபிடிப்புகள் மக்களிடம் பரவத் தொடங்கியதால், அதனை எதிர்த்த கருத்து யுத்தத்திலும் ஈடுபட்டனர். இந்த அறிவுக்களத்தில் அவர்களை எதிர்த்து வீரச்சமர் புரியும் வேலையை ஏங்கெல்ஸ் அதிகம் மேற்கொண் டார். இதற்கு பல பத்திரிகைகiளில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். மார்க்சும் இந்தப் பணியில் சளைத்ததில்லை; என்றாலும், அவர் அதிகமாக ‘மூலதனம்’ எழுதும் பணியில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, இத்தகு வேலைப்பிரி வினையை இருவரும் மேற்கொண்டனர்.

ஆனால் மார்க்சின் பங்களிப்புதான் மார்க்சியம் உருவாவதில் முக்கியமானது என்பதை ஏங்கெல்ஸ் ஆணித்தரமாக பல கட்டுரைகளில் எழுதியுள்ளார். நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், ‘மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவருக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவன்தான்’ என குறிப்பிட்டுள்ளார். இது போலித்தனமான அடக்க குணம் அல்ல. எல்லாவற்றையும் கூரிய அறிவியல் பார்வையோடு அணுகும் ஏங்கெல்ஸ், மார்க்சின் பங்களிப்பு குறித்தும் அதே பார்வையோடு தான் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால், ஒன்று நிச்சயமானது; மார்க்சியத்தைப் பயில முனையும் ஒருவர் ஏங்கெல்சின் கருத்துக்களை கிரகிக்காமல் மார்க்சியத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாது. அரசியல், பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல் உள்ளிட்ட பல துறைகளை மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்திட வேண்டுமா னால் ஏங்கெல்சின் பல நூல்கள் அவசியமானது.

அதிகம் அறியப்படாத அவரது ஒரு நூல்தான் ‘வீட்டு வசதிப்பிரச்சனை (கூhந ழடிரளiபே ணுரநளவiடிn’) என்ற நூல். இதில் ஏங்கெல்ஸ் முன்வைத்துள்ள பல கருத்தாக்கங்கள் இன்றளவும் பொருந்துகின்றன.

இந்த நூல் மூன்று விரிந்த கட்டுரைகளைக் கொண்டது. 1872இல் கடுமையான வீட்டுப்பற்றாக்குறை பற்றிய விவாதம் நடந்த சூழலில் எழுதப்பட்டவை.

நூலின் உள்ளடக்கம்

  1. “எவ்வாறு புரூதோன் வீட்டுப் பிரச்சனையை தீர்க்கிறார்?” என்பது முதல் கட்டுரை. இது ஏ.முல்பெர்கெர் எழுதிய ‘புரூதோன் தீர்வுகள்’ என்ற கட்டுரைக்கு ஏங்கெல்ஸ் அளித்த பதிலடி.
  2. இரண்டாவது கட்டுரை, ‘எவ்வாறு முதலாளித்துவம் வீட்டுப் பிரச்சனையை தீர்க்க முயல்கிறது?’ டாக்டர் எமில் சாக்ஸ் என்பவர் எழுதிய ‘தொழிலாளி வர்க்கங்களின் குடியிருப்பு நிலைமைகளும், சீர்திருத் தங்களும்’ என்ற நூலுக்கான சாட்டையடியாக ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரை.
  3. ஏங்கெல்சின் மறுப்புக்கு, மிகவும் தாமதமாக முல்பெர்கெர் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதுகிறார். அதற்கு பதிலளித்து ஏங்கெல்ஸ் எழுதிய 3-வது கட்டுரை ‘வீட்டுப் பிரச்சனைக்கும் புரூதோனுக்கும் ஒரு கூடுதல் விளக்கம்’.

மேலே சொல்லப்பட்ட முதல் 2 கட்டுரைகளை வாசிப்பதற்கு முன்னதாக, 3-வது கட்டுரையையும், முன்னுரையையும் வாசித்து விட்டு பிறகு நூல் முழுவதையும் வாசித்தால், நூலின் சாராம் சத்தை உள்வாங்கிட முடியும்.

வீடு பற்றிய விவாதம் ஏன்?

வீட்டுப்பற்றாக்குறை பற்றி அதிக விவாதம் எப்போது கிளம்புகிறது? உழைப்பாளிகளின் வாழ்நிலையைக் கண்டு உருகுவதால் இப்பிச்சனை பற்றி பேசுவதாக மேற்கண்ட நூலாசிரியர்கள் கூறுகின்றனர். குடியிருக்க குறைந்தபட்ச வசதிகள் கொண்ட ஒரு வீடு என்பது காலம் காலமாக உழைப் பாளி மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. எல்லாக் காலங்களிலும் உழைப்பாளி மக்கள் மோசமான சூழ்நிலையில், சுகாதாரக் கேடுகள் நிறைந்த இருப்பிடங்களில் தான் வசித்து வந்துள்ளனர்.

பின் ஏன் அவ்வப்போது சூடான விவாதம் எழுகிறது? நடுத்தர வர்க்கங்களில் ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பகுதிக்கு, வசதியான வீட்டுக்கான தேவை உணரப்படுகிற நிலையில்தான், அவர்கள் எழுப்பும் சத்தம்தான் இந்த வீட்டுப்பற்றாக்குறை பற்றிய விவாதம். முதலாளித்துவ அரசுகளும் இந்த சூழலை ரியல் எஸ்டேட் கொள்ளைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு, பல வீட்டு வசதித்திட்டங்களைக் கொண்டு வருகின்றனர்.

உழைப்பாளி மக்கள் வீடு இல்லாமல், அவதிப்படுவதை முல்பெர்கெரும், சாக்சும் விளக்குகின்றனர். அவர்களது சுகாதாரமற்ற குடியிருப்பு நிலைமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடித்த பிறகு பிரச்சனைக்கு தங்களது தீர்வுகாண முன் வைக்கின்றனர்.

முல்பெர்கெர் இதைப்பற்றி எழுதும்போது எவ்வாறு தொழிலாளி முதலாளியிடம் அடிமைப்பட்டு கிடக்கின்றானோ, அதேபோன்று வாடகைக்கு குடியிருப்பவனை வீட்டு உரிமையாளரிடம் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக வருத்தப் படுகிறார்.

இந்த வருத்தத்தின் போலித்தனத்தை ஏங்கெல்ஸ் அம்பலப் படுத்துகிறார். முதலாவதாக, தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை விற்று புதிய மதிப்பை உற்பத்தியின்போது உருவாக்கு கிறான். வாடகைக்கு குடியிருப்பவன் எந்த புதிய மதிப்பையும் உருவாக்குவதில்லை. உபரி மதிப்பினை முதலாளி திருடி அபகரிப்பதைப் போன்று எதுவும் நிகழ்வதில்லை. பின் ஏன் இந்த ஒப்பீடு?

சோசலிசத்தின் மீது பற்றுக் கொண்டோரை திசை திருப்பி, வீட்டுப்பிரச்சனை தீர்ப்பதற்கான தங்களது முதலாளித்துவத் தீர்வுகளை ஏற்கச் செய்வதற்குத்தான் இந்த பசப்பு.

உண்மையில் குடியிருப்பவர் அளிக்கும் வாடகை எதை உள்ளடக்கியது? கட்டிடத்தின் மீது செலவிடப்பட்ட தொகைக்கான வட்டி, பழுதுபார்ப்பதற்கான செலவு, வாடகை வராத காலங்களில் ஏற்படும் நஷ்டம், கட்டிடத்தின் மீதான மூலதனத்தை ஈடுகட்டுவதற்கான தவணை, அதிகரித்து வரும் நிலத்திற்கான விலை மீதான வட்டி, ஒரு பகுதி நில வாடகை ஆகிய அம்சங்களைக் கொண்ட  வாடகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்கிறார் ஏங்கெல்ஸ். இது சமூக ரீதியான நிலைமைகளிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு வீட்டுப் பிரச்சனையின் தன்மையை அறிவியல் சமூக ரீதியாக ஏங்கெல்ஸ் அலசுகிறார்.

வீட்டுக்கான உரிமை

வீட்டுக்கான உரிமை இருக்கும் வரை இந்த வாடகை ஏற்பாட்டை ஒழிக்க இயலாது. இந்த உரிமை சட்டப்பூர்வ உரிமை. எனவே இதனை சட்ட ரீதியாக தீர்க்க, ஒரு வழியை முல்பெர்கெர் கூறுகிறார். அதாவது வாடகை என்பதை தவணையாகக் கருதி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு வீடு சொந்தமாகிவிடும் ஏற்பாட்டை சட்ட ரீதியாக மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

இதில் ஏங்கெல்ஸ், முதலில் வீட்டு உரிமையாளரின் ‘சட்டப்பூர்வ உரிமை’(டுநபயட கூவைடந) என்ற கருத்தின் மீது ஏங்கெல்ஸ் தாக்குதலை தொடுக்கிறார். இந்த உரிமை எப்படி வழங்கப்பட்டது என்று ‘சட்ட உரிமை’ என்ற கருத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகிறார். அதற்கு மூலமாகத் திகழ்கிற புரூதோன் என்ற தத்துவ ஆசிரியரின் கருத்துக்களோடு யுத்தம் நடத்துகிறார். புரூதோனியம் எப்போதுமே ‘சட்டம்’ என்ற கட்டுக்கோப்புக்குள் புகுந்து சமூக ஒழுங்கை நியாயப்படுத்தும் கருத்தாக்கம். முன்பே, மார்க்ஸ்  தனது ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலில் புரூதோன் கருத்துக்களை வீழ்த்தியுள்ளார். வீட்டுப் பற்றாக்குறையை தீர்க்கிறேன் என்ற பெயரில் புரூதோனியம் தலைதூக்குவதைத்தான் ஏங்கெல்ஸ் எதிர்த்துப் போராடினார்.

தவணை முறையில் வீட்டைச் சொந்தமாக்கி, உழைப்பாளி மக்களின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்று முதலாளித்துவம் இன்று வரை ஏமாற்றி வருகின்றது. இது ஒரு சிலருக்கு வீடு கிட்டுவதில் முடியுமே தவிர, பலரை ஏமாற்று வதிலும், வாழ்நாள் கடனாளியாக மாற்றுவதிலும் முடிந்தி ருக்கிறது.

முதலாளித்துவ நெருக்கடியின் போது வீட்டுப் பிரச்சனைக்கான மேற்கண்ட தீர்வு நாசத்தையே சந்திக்கும் என்று ஏங்கெல்ஸ் எழுதியதைப் படிக்கும்போது, சமீபத்தில் உலகம் சந்தித்த வீட்டு அடமான நெருக்கடி நினைவில் நிழலாடுகிறது. இன்றைய இந்த நிகழ்வுப் போக்கின் சாரத்தை அன்றே ஏங்கெல்ஸ் எழுதியுள்ளார் என்பது அதிசயிக்கத்தக்க உண்மை. இந்த தீர்க்க தரிசனம் ஜோதிடத்தால் ஏற்பட்டதல்ல. அது மார்க்சிய இயக்கவியலின் வலிமை.

விசேட காலனிகள் ஏற்படுத்தி தொழிலாளர்களை குடிவைக்கலாம் என்ற திட்டம் பல சோசலிசவாதிகள் முன் வைத்தனர். இந்தக் கருத்தை ஏங்கெல்ஸ் அம்பலப்படுத்துகிறார். இந்த திட்டம் எப்படி பல பகுதிகளில் சீர்குலைந்து போனது என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஏங்கெல்ஸ் விளக்குகிறார். அதேபோன்று அரசு தலையிட்டு அரசு முன்முயற்சிகள் மூலம் வீட்டு வசதித்திட்டங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்தின் போலித்தனங்களையும் அம்பலப்படுத்துகிறார். இது வெறும் வாதமாக இல்லாமல், இங்கிலாந்து, பிரான்சு நாடுகளில் நிகழ்ந்தவற்றை ஆதாரங்களாக எடுத்துக் கொண்டு விளக்குகிறார்.

நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையேயான வித்தியாசம் ஒழிந்தால்தான் வீட்டுப்பிரச்சனை தீரும் என்ற ஏங்கெல்சின் கூற்றை முல்பெர்கெர் தனது மறுப்புக்கட்டுரையில் இல்லாத ஊருக்கு ஏங்கெல்ஸ் வழி காட்டுவதாக எழுதினார். ‘நகரம், கிராமம் என்பது யதார்த்தம், அதனை மாற்ற முடியாது’ என்றார் அவர். எது எதார்த்தம் என்று கேட்டு வாதப்போரில் இறங்குகிற ஏங்கெல்ஸ்,  நகரம், கிராமம் வித்தியாசத்தை அகற்றுவது என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையை வீழ்த்துவதும், உற்பத்தி சாதனங்களில் சமூக உடைமையை நிலை நாட்டுவதும்தான் என்று கூறுகிறார். இது நகர, கிராம வேறுபாட்டை அகற்றி, உழைப்பாளி மக்கள் வீடு உள்ளிட்ட சமூகத்தேவைகளும் நிறைவேறிடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்கிறார் ஏங்கெல்ஸ்.

உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் வீடு கிடைப்பது சாத்தியமா? இதற்கு, நிச்சயமாக இது சாத்தியமானது என்று ஏங்கெல்ஸ் பதில் அளிக்கிறார்.

வீட்டுப் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு

இருக்கிற குடியிருப்புக்கான இடங்களை முறையாக பகிர்ந்தளித் தால் இது சாத்தியம். மிகப்பெரிய ஆடம்பர பங்களாக்கள் கையகப்படுத்தப்பட்டு சிறு குடியிருப்புகளாக மாற்ற வேண்டும். அதிக குடியிருப்புக்கு சாத்தியமான இடங்களை இதற்குப் பயன்படுத்த வேண்டும். முதலாளித்துவ நிறுவனங்கள் கல்வி, சேவை, மதம், நிறுவனம், தொழில் நடத்துவது எனப்பல வகைகளில் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதற்கு  முற்றுப்புள்ளி வைத்து, அவற்றையும் சிறு குடியிருப்புக்களாக மாற்றி, தொழிலாளர் குடும்பங்களை குடியமர்த்த வேண்டும். இது பகல் கனவா?

இல்லை, இது சாத்தியமாக வேண்டுமெனில் உற்பத்திக்கான சாதனங்கள் அனைத்தும் உழைப்பாளி மக்களிடம் இருக்க வேண்டும். அதாவது இவை சமூக உடைமையாக்கப்பட வேண்டும். இது நடைபெற வேண்டுமானால், அரசியல் அதிகாரம் உழைப்பாளி மக்களிடம் இருக்க வேண்டும்.

இந்த தீர்வு ஏங்கெல்சின் நூலில் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

ஆனால், இப்போது இது சாத்தியமில்லை என கருதுகிற அறிவுஜீவிகள், இப்போதைக்கு தற்காலிகத் தீர்வு என்று பல தீர்வுகளை முன்வைக்கின்றனர்.

ஆனால், இவ்வாறு முன்வைக்கப்படுகிற தீர்வுகள் எந்தக்காலத்திலும் வீட்டுப்பற்றாக்குறையை தீர்த்திடவில்லை. வீட்டுப்பற்றாக்குறைப் பிரச்சனை நீடிப்பதும், அதைத் தீர்ப்பதற்கு என திட்டங்கள் முன்வைத்து அமலாக்கப்படுவதும், சிலர் வீட்டு வசதி பெறுவதும்தான் கடந்த இருநூறு ஆண்டுக்கால உலக வரலாறு.

“தற்காலிகத் தீர்வு, உடனடித்தீர்வு’ காண்பதில் முற்போக்கு இயக்கங்களும் ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாறான தீர்வுகள் முன்வைக்கும் போது ஆளும் வர்க்கங்கள் அவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, நீடித்த மக்கள் இயக்கத்தினையும், சோசலிச இயக்கத்தையும் வலுப்படுத்திட  முன்வைக்கப்படும் தீர்வுகள் உதவிடுமா என்பதே அடிப்படை யான அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

டாக்டர் கெர் சாக்சு என்பவர் சொல்லும் தீர்வுகளை ஏங்கெல்ஸ் ஆராய்கிறார். அவர் எப்படி தானே முன்வைத்த ஒவ்வொரு தீர்விலிருந்தும் விலகுகிறார் என்பதை நிறுவுகிறார்.

முதலில் தொழிலாளி தனக்கென்று ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி தான் உழைக்கும் வர்க்கத்திற்காக வாதாடுவதாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். பிறகு இது நகர்ப்புறங்களில் சாத்தியமில்லை என்கிறார். அதற்குப்பிறகு கிராமப்புறங்களிலும்தனக்கு சொந்த மாக்கப்பட்ட வீட்டைப் பாதுகாப்பது சாத்தியமில்லை என்று முடிக்கிறார். இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் ஊற்றுக்கண் எது? முதலாளித்துவ உற்பத்தி முறையை தொடாமலேயே சமூகப் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்ற கருத்தாக்கம்தான். இது அன்றும் இருந்தது. இன்றும் இது உலா வருகிறது. இந்தக் கருத்தாக்கம் வெறும் உல்லாச உலா வருவதில்லை. போகிற போக்கில் வர்க்க இயக்கத்தை திசை திருப்பி, முடமாக்கி, சத்தற்றதாக்கி விட்டுத்தான் முடிகிறது. இதன் ஆபத்தை உணர்ந்துதான் ஏங்கெல்ஸ் தனது தர்க்கத்திறமையைப் பயன் படுத்தி இந்த கருத்துக்களை அம்பலப்படுத்துகிறார்.

நூல் முழுவதும் ஏங்கெல்சின் தர்க்கம் நர்த்தனம் ஆடுகிறது. இதற்காகவே இதனை பலமுறை ரசித்துப் படித்ததாக லெனின் எழுதியுள்ளார்.

வீட்டுப் பிரச்சனை; இன்றைய நிலை

திமுக அரசு 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதாக அறிவித்திருக்கிறது. திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர நிலம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு பிரம்மாண் டமான பாராட்டுவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திட்டங்கள், அறிவிப்புகள் அனைத்தும், தோழர் ஏங்கெல்ஸ், தனது நூலில் முன்வைத்த கருத்துக்கள் இன்றளவும் பொருத்தமாக இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அதிக அளவில் விளம்பரப்படுத்தப்படுகிற குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டித் தரும் திட்டம் என்ன சாதித்தது? 1970-லிருந்து 2006 வரை 36 ஆண்டுகளில் 77,627 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிறகு 2006லிருந்து இன்று வரை கட்டப்பட்ட வீடுகள் 42 ஆயிரம் வீடுகள். இது திமுக அரசே தரும் விபரம். போதிய இருப்பிட வசதியின்றி கோடிக்கணக் கானோர் அல்லல்படும் போது சில ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்து, சாதனை படைத்து விட்டதாக ஆளுகிறவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்பதை 140 ஆண்டுகளுக்கு முன்பே ஏங்கெல்ஸ் எழுதியிருக்கின்றார். ஆளும் வர்க்கங்கள் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்காத நிலையில், தற்போது இந்தியாவில் இப்பிரச்சனை கடுமையாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சர் பேசும் போது, இந்தியாவில் வீடற்றோர் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் வேகமாக உயர்ந்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். இங்கிலாந்து நாட்டின் மொத்த ஜனத் தொகை அளவிற்கு வீடற்ற தெருவோரவாசிகளின் எண்ணிக்கை நமது நாட்டில் அதிகரித்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இருக்கிற நிலங்களையும் அபகரித்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வீடற்றோராக மாற்றி வருகின்றன.

கடந்த 2000 ஆண்டில் ஐ.நா. ஆயிரமாவது ஆண்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதில் “குறைந்தது ஒரு கோடி குடிசைவாசிகளுக்கு குறைந்தபட்ச முன்னேற்றத்தை ஏற்படுத்த” உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இதனை பரிசீலித்த ஐ.நா. பெரும்பான்மையான அரசாங்கங்கள் இந்த குறிக்கோளை அடைய ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியது. இதனால் தற்போது 90 கோடியாக உள்ள குடிசைவாசிகள் எண்ணிக்கை உலகம் முழுவதும் 200 கோடியாக உயரும் என்ற கணிப்பை ஐ.நா. வெளியிட்டுள்ளது. ஆக, வீடற்றோர், குடிசைவாசிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது பெரும் உலகப் பிரச்சனையாகி உள்ளது. இதற்கு முதலாளித்துவத்தைத் தவிர, வேறு யாரை குறை சொல்ல முடியும்? அடிப்படையில் இந்த சமூக முறைமையை மாற்றாமல் ஐ.நா. எந்தப் பிரகடனத்தை வெளியிட்டாலும் அது ஏட்டளவில்தான்  இருக்கும்.

ஆரோக்கியமான சூழல் கொண்ட வீடுகளை உழைப்பாளி வர்க்கக் குடும்பங்கள் எல்லோரும் பெற்றிடுவதற்கான வாய்ப்பை முதலாளித்துவம் ஏற்படுத்தாது, வரலாற்றில் உழைப்பாளி வர்க்கங்கள் காலம் காலமாக மோசமான  சூழலில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவையான ஒருபகுதி உழைக்கும் பட்டாளத்தை உருவாக்க முனைகிறது முதலாளித்துவம்.  அந்தப் பகுதியினருக்கு மட்டும் வீடுகள் கிடைக்க வகை செய்யும் திட்டங்களை அது உருவாக்குகிறது. இதற்கு உதவியாக, அந்த நடுத்தர வர்க்கத்திலிருந்து, மனிதா பிமானம் பேசும் அறிவுஜீவிகள் உருவாகி, வீட்டுப்பிரச்சனை தீர, திட்டங்கள் உருவாக்குவதோடு, அரசுக்கு உறுதுணையாகவும் செயல்படுகின்றனர்.

எனவே, மனைப்பட்டா இயக்கம், குறைந்தபட்ச வசதிகள் கொண்ட வீடுகளுக்கான இயக்கம் அனைத்தும் அதிக அளவில் மக்களைத் திரட்டி நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் நகர்ப்புறங்களில் தற்போது வீட்டு நெருக்கடி கடுமையாகியுள்ளது. நகர்ப்புற ஏழைகளைத் திரட்டி இயக்கம் நடத்துவது அவசியம்.

ஆனால், இந்த இயக்கம் வெறும் கோரிக்கை இயக்கம் என்ற அளவோடு நின்றால், ஒரு சிலருக்கு தீர்வு கிடைக்கும் வகையில், அரசு ஏதாவது கவர்ச்சிகரத்  திட்டங்களை அறிவித்துவிட்டு, இயக்கங்களில் திரண்ட மக்கள் மத்தியிலும் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வார்கள். எனவே, குறைந்தபட்சம், திரட்டப்படுகிற ஒரு பகுதியினருக்கு – முன்னணிப் பகுதியினருக்கு – முதலாளித்துவ அமைப்பிலிருந்து மீண்டால்தான் வீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்ற  புரிதலை ஏற்படுத்த வேண்டும். இது தத்துவார்த்தப் பணி எனப்படுவது. இயக்க நிகழ்வின் ஊடாக, இப்பணி செய்யாவிடில் பலனற்ற, அஸ்திவாரமற்ற கட்டிடங்களாக எதிர்ப்பு இயக்கங்கள் நீர்த்துப் போகும். இதுவே மக்கள் இயக்கம் உருவாக்கிட, ஏங்கெல்ஸ் எடுத்துரைக்கும் வழி.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: