மானத்தைக் காக்க காந்தியை விட சிக்கனமான நான்கு முழ கதர் ஆடை! ஒன்றரை முழ கதரில் மேல் சட்டை! நிமிர்ந்த நடை, எண்ணெய்த் தடவாமலே பனிந்து நிற்கும் கறுப்பு வெள்ளை தலை முடி, பிறர் கண்களை தேடி வீசும் வசீகரப் புன்சிரிப்பு, உடுக்கை இழந்தவன் கை போல பிறரின் இடுக்கண் களையும் வேகம், காரியம் ஆற்றிட முந்தும் துடிப்பு, அநீதியை எதிர்க்கும் போரில் தளபதியாக முன் நிற்கும் துணிச்சல், உடனிருப்போர் முணு முணுப்பையும் கவனியாது குறுக்கிட்டு செயல்படும் குழந்தைத் தனம், (நாங்கள் அவரை “முந்திரிக் கொட்டை” என்று செல்லமாக அழைப்போம்) 10, பிப்ரவரி 2010 வரை மெய்யாக இருந்த இவைகளெல்லாம் இன்று பொய்யாய், கனவாய் போனது.
யார்க்கும் எழியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கு மினியனாய் வாழ்ந்திட்ட அவனை இனி தேடினாலும் கிடைக்க மாட்டான் என்றால் மனம் கேட்க மறுக்கிறது. சுயவிமர்சனத்தை சுய நிந்தனை ஆக்கி உயிரை மாய்த்துக் கொண்டதை எப்படி எடுத்துக்கொள்வது என்ற மன வேதனையே நமக்கு மிஞ்சுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை நகரத் தொழிற்சங்க இயக்கத்தில், வங்கி அரங்கில் அவர் ஆற்றியப் பணிகளால் பாட்டாளி வர்க்கத்தின் நெஞ்சங்களை வென்றார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் ஆற்றிய பணிகள் வில்லிவாக்கம் தொகுதி மக்கள் பெற்ற உரிமைகள் இவைக ளெல்லாம் நினைவிற்கு வரும் பொழுது நமது நெஞ்சம் கனக்கிறது. குடிசை மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, பாடி சுடுகாட்டை பெரும் புள்ளிகள் விழுங்குவதிலிருந்து தடுத்து, பூங்கா அமைக்க அவர் நடத்திய போராட்டங்களை நினைக்கிற பொழுது அந்தப் போராட்ட நாயகனா இந்த முடிவிற்கு வந்தார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
அவசர காலத்தில் தலைமறைவாக இருந்த எங்களுக்கு உதவிட, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்ட ரிசர்வ் வங்கி நிர்வாகத்தின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அவர் ஆற்றியப் பணி மனதிலே ஓடுகிறது. வாழ்நாளில் பெரும்பகுதியை ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம், மறியல் என்று தனக்கென்ன என்று கூட்டிக் கழித்துப் பார்க்காமல் போராட்டக் களங்களிலே கழித்ததை மனது கணக்குப் போடுகிறது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது, சுரண்டும் கூட்டம் அதற்கு அசையாது. சங்கம் வைத்துப் போராடி துப்பாக்கிக்கு இரையாவது மாற்றங்களை கொண்டு வரும் சாவாகும். எனவே போராடத் தயாராகு என்று வாழத்தூண்டிய அந்த உ.ரா.வ.வின் சோக முடிவு, ஆற்றல் மிக்க ஒருவரின் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் தர்மம்
பொது வாழ்வில் பிரபலமானவர்கள் குறிப்பெழுதிவிட்டு மறைந்தால், அது பொது விவாதப் பொருளாகி விடும் என்ற விதிக்கு, உ.ரா.வ.வின் மரணமும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்புகள் அரசியலில், மக்களின் மனப்பாங்கில், பண்பாட்டு தளத்தில் அதிர்வுகளை உருவாக்கிவிட்டன. சர்ச்சைகள் எழுகின்றன.
உ.ரா.வ வின் மரணத்தை ஒட்டி மாற்றுக் கட்சித் தலைவர்கள், சில அமைப்புக்கள், சில அறிவாளிகள், சில ஜர்னலிஸ்ட்டுகள் இவர்களின் கருத்துக்களை, சுடச்சுட சேகரித்து ஊடகங்களும், பத்திரிகைகளும் மலைபோல் குவிக்கின்றன. கடை வீதிகளில், நாலு பேர் கூடுகிற இடங்களில் இந்த மரணம் விவாதப் பொருளாகிவிட்டது. அவர் மறையுமுன் எழுதிய குறிப்பை வைத்து விளக்கங்கள், ஊகங்கள், சந்தேகங்கள், பிணத்தை அழுகிய நிலையிலேயே கட்சியினரும், உற்றாரும் பார்க்க நேர்ந்த நிலைமை, பிரபலமான தலைவரின் உடலை அடையாளம் தெரியாத உடல் என்று காவல்துறை கருதிய மர்மம், தகவல்கள் காடுபோல் வளர்ந்து கிடக்கின்றன! இந்தத் தகவல்களில் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயு, ஆக்சிஜன் போல் பொய்மையும், மெய்மையும் கலந்து கிடக்கின்றன. இந்தக் கருத்துக்களில் சில அரசியல் நோக்கம் கொண்டவைகள், சில கற்பனைச் சரடுகள், சில விற்பனைக்காக மசாலா சேர்க்கப்பட்ட தகவல்கள், சில உண்மைகளை தேட வைப்பவை.
இத்தகைய நேரங்களில் புத்தர் சொன்னதை மனதிலே கொள்வது அவசியம் “தகவல்களிலிருந்து உண்மையைத்தேடு, ஆனால் முடிவை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்கான ஆதாரங்களைத் தேடாதே. ஆதாரங்களின் அடிப்படையில் முடிவிற்கு வா புதிய ஆதாரங்கள் கிடைத்தால் முடிவை மாற்றத் தயங்காதே”.
இந்த வேதனை தரும் மரணத்தைப் பற்றிய தகவல்களை புத்தர் காட்டிய வழியில் நேர்மையாக ஆராய்கிறவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பை இழிவுபடுத்தும் அரசியல் விளையாட்டிற்கு சில கட்சித் தலைவர்கள் நடத்தும் பத்திரிகைகள், டி.விக்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ், சில புத்தக வடிவ இதழ்கள் பயன்பட்டிருக்கின்றன என்பதை கவனிக்கத் தவறமாட்டார்கள். கிளின்டன்-மோனிகா விவகாரத்தை ஊடகங்கள் விவாதித்தது போல் இதையும் விவாதிக்க மார்க்சிஸ்ட் கட்சி எதை எதையோ கசியவிட்டதுபோல் இதையும் கசிய விடவில்லை என்ற ஆதங்கம் இவர்களுக்கில்லை. கற்பனை வளம் கை கொடுக்க கண்டதை எழுதி வாசகர்களை சீரியல் பார்க்க வைத்தார்கள். தன் நெஞ்சறிவது பொய்யற்க என்பது ஜூனியர்விகடனுக்கில்லை, படத்தை வைத்தே கொலை என்று கதை சொல்ல துப்பறியும் சாம்பு கதையை காப்பி அடித்தால் போதும். இவ்வாறு கதை எழுத எது ஜுனியர் விகடனைத் தூண்டியது ? கம்யூனிச எதிர்ப்பா?, காசா?, தமிழக அரசியலா? சாவின் மர்மம் துலங்கிவிட்டது. ஆனால் ஜூனியர் விகடனைத் தூண்டியது எது என்ற மர்மம் நீடிக்கவே செய்யும். 13-ந் தேதிக்குப் பிறகு காவல்துறை கையில் சிக்கிய ஆவணங்களை பயன்படுத்தி கற்பனை செய்து ஸ்டோரி தயாரிக்க குறிப்பிட்ட ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை கொலை செய்யவும் தயங்கவில்லை. நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
13-ந் தேதி எடுத்த உடலை 21-ந் தேதி வரை மறைத்தது, அவர் கையிலிருந்த செல், அவர் வீட்டை விட்டுப் போகும் பொழுது எடுத்துச் சென்ற பை, அதிலிருந்த ஆவணங்கள் இவைகளைப் பற்றி காவல்துறை மவுனம் சாதிப்பது, பிரபலமான தலைவரின் உடலை அனாதைப் பிணமாகக் கருதியது, இதில் உள்ள மர்மங்களை துப்பறிந்து துலக்கும் துணிச்சல் உ.ரா.வ.வின் உடலை வைத்து கதை சொல்வோருக்கு உண்டா?
அரசியலும் – தற்கொலையும்
சில ஆண்டுகளுக்கு முன் ‘என்ரான்’ என்ற அமெரிக்க நிறுவனம் கள்ளக் கணக்கெழுதி பங்குச் சந்தையில் சிறிய முதலீட் டாளர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு தொடுத்ததை உலகமே அறியும். 26-1-2002 அன்று அதன் நிர்வாகிகளில் ஒருவரான ஜே. கிளிப்போர்டு பாக்ஸட்டர் ஒரு நீண்ட தற்கொலை குறிப்பெழுதி வைத்துவிட்டு தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்த தற்கொலை குறிப்பை வெளியிட்டால் பெரிய நிறுவனங் களின் மோசடிகள் அம்பலமாகும் என்பதால் காவல்துறை ரகசிய ஆவணங்களின் பட்டியலில் சேர்த்து விட்டது. 1949-இல் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் வின்சென்ட் பரஸ்ட்டால் தற்கொலை குறிப்பெழுதி வைத்துவிட்டு ஜன்னலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 2004 வரை அந்த தற்கொலை குறிப்பு ரகசியமாக வைக்கப்பட்டது, அதன் பிறகு ஒரு பகுதி தான் வெளிவந்தது மீதி ரகசியமாகவே உள்ளது. அமெரிக்காவில் மட்டுமல்ல அரசியல் காரணங் களாலும், ஆளும் வர்க்க நலன்களை காக்கவும் தற்கொலை சம்பந்தமான குறிப்புகளை ஒரு அரசு ரகசியமாக வைக்கும் நிலைமையை காணமுடியும்.
ஆனால் இன்றைய தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் கட்சிகளின் நடைமுறை கவலையளிக்கிறது. அதிகாரத்தின் மூலம் கிடைக்கிற தகவல்களை பிற கட்சிகளை வேட்டையாட பயன்படுத்துகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்த ஆவணங்களை பயன்படுத்துவது, சிலவற்றை மறைப்பது, சிதைப்பது, அதை கெட்ட நோக்கோடு பயன்படுத்துவது என்ற நிலை உள்ளது. இந்த நடைமுறை ஜனநாயக மாண்புகளை வளர்க்க உதவாது.
இனிமையான தோற்றமுள்ள உ.ரா.வ. மறைவால் கட்சி முழுமையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் இந்த வேளையில், சுயநல அடிப்படையில் இயங்கும் சில ஊடகங்கள் பொய்களை எழுதி வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன. அரசியல் கட்சிகள், சுதந்திரமான ஊடகங்கள் இவ்விரண்டும் ஜனநாயகம் காக்க அவசியம். இவ்விரண்டும் நேர்மையை, தன் நெஞ்சறிவது பொய்யற்க என்ற பண்பாட்டை பாதுகாப்பதை முதல் கடமை யாகக் கொள்வது மிக அவசியம். அத்து மீறினாலும், தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் உரிமை ஊடகங்களுக்குண்டு என்பதை மார்க்சிஸ்ட் கட்சி மனமுவந்து ஏற்கிறது.
அதே நேரம் மக்களுக்கு விசுவாசமாக இருந்து மேல் மட்ட ஊழல்களையும், அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களையும், ஏழை மக்களின் துயரங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் கடமை உண்டு என்பதை நடைமுறையில் ஊடகங்கள் காட்டவேண்டுமென எதிர்பார்க்கிறது.
கட்சி வாழ்க்கை
கட்சி வாழ்க்கை என்பது பிறருக்காக, சமூக மேன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வாகும். பிறருக்கு ஆதர்சமாக இருக்க வேண்டிய வாழ்வாகும். சுய விமர்சன அடிப்படையில் திருத்தும் வழிமுறைகளைக் கொண்ட கட்சி. மார்க்சிஸ்ட் கட்சிக்கு உ.ரா.வ.வின் மரணம் வேதனை மிக்க சோதனையே. இனிமைக்கும், போராட்ட உணர்விற்கும், உதாரணமாக இருந்த உ.ரா.வ மரணத்தை தழுவிய விதம் உதாரணமாக அமைய வில்லை என்ற மனவலி மட்டும் நீடித்திருக்கும்.
Leave a Reply