சில ஆண்டுகளாக அமெரிக்காவில் மையங்கொண்டிருந்த பொருளாதாரச் சிக்கல் 2008இல் மிகப் பெரிய நிதி நெருக்கடியாக மாறி உலகப் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டதை நாம் அறிவோம். கட்டுப்பாடு ஏதுமின்றி தறிகெட்டு ஓடிய ‘சுதந்திரச் சந்தை’யின் கீழ் பெரும்பாலான நாடுகள் இடறி விழுந்தன. கை கொடுத்து தூக்கிவிட கோடிக்கணக்கில் டாலர்களும், யூரோக்களும் தேவைப்பட்டன. மேற்பார்வையிடும் அரசுகள் தலையிடும் அரசுகளாக செயல்பட வேண்டிய நிலை உருவானது. மாற்றங்கள் நிகழ்ந்தனவா?
நிகழ்ந்து கொண்டிருப்பதாக, பாதிக்கப்பட்ட நாடுகள் எழுந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார ‘மீட்சி’ ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றன. ரியல் எஸ்டேட் (நிலம் / வீடு தொடர்பான) துறை வணிகத்தில் டிசம்பர் 2008லிருந்து ஏப்ரல் 2009 வரை 7.2 சதவிகிதம் வீழ்ச்சியிருந்தது; ஆனால் ஏப்ரலி லிருந்து ஆகஸ்ட் வரை உள்ள காலத்தில் 5 சதவிகிதம் உயர்வு – இதைப் போன்ற புள்ளி விபரங்கள் மீட்சிக்கான அறிகுறிகள் என முன் வைக்கப்படுகின்றன.
சூநறள றுநநம (நவம்பர் 9, 2009) “எச்சரிக்கை: மீண்டும் ஒரு நிதி நிலை நீர்க்குமிழி” என்று எழுதி விட்டு சில கேள்விகளை கேட்கிறது. வேலை வாய்ப்பு குறைந்து வேலையின்மை அதிகரிக்கும் பொழுது ‘மீட்சி’ கிடைக்குமா? ஊதிய உயர்வு என்று எதுவுமே இல்லாத நிலையில் அது சாத்தியமா? அரசு கடன் உயர்ந்து கொண்டு போகிற போது அது முடியுமா? ராபர்ட் ஷில்லர் என்ற பொருளாதார ஆசிரியரின் வரிகளில் விடை கிடைக்கிறது. “நமது அன்றாட நடைமுறை வழக்கங்களில் ஊகமான செயல்பாட்டினை பெற்றிருக்கிறோம். அது ஒரு மாற்றம். தொடர்ந்து நீண்ட காலத்திற்கு அது இருக்கும். நாம் ஒரு புதிய நீர்க்குமிழியை எதிர் கொள்ளப்போகிறோம் என்று சொல்ல விரும்புகிறேன்” என்கிறார் ஷில்லர். நீர்க்குமிழி உடைந்தால்? ஊதிப் பெருத்த அனைத்தும் மறைந்து போகும்.
கடந்த 70 ஆண்டுகளில் அமெரிக்கா இப்போது தான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கிறது. அது பொருளாதார மந்தத்திற்கு (சுநஉநளளiடிn) இட்டுச் சென்றிருக்கிறது. பிம்கோ என்ற நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான முகமது எல் எரியன் கூறுகிறார்; “பல முதலீட்டாளர்கள் இந்த நெருக்கடி யினை தோலின் மேல் ஏற்பட்ட காயம் என்று நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. இந்த அமைப்பின் மேற்பரப்பை அல்ல, அதன் பிரதான மையப்பகுதியினையே அசைத்திருக்கிறது… மீட்சி என்பது தற்காலிகமானது. மீண்டும் எதிர் நிலைக்கு திரும்பும் அம்சங்களை கொண்டது”. எந்த அடிப்படையில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 10.2 சதவிதிகம், ஒபாமாவுக்கு ஆதரவு தரும் பால் க்ருக்மன் 2.9 கோடி பேருக்கு வேலை இல்லை அல்லது முழுநேர வேலை வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடுகிறார். வெளிநாட்டு கடன் உட்பட நாட்டின் மொத்த கடன் 14.2 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் – 1 லட்சம் கோடி); ஒரு நாளைக்கு கடன் 3.876 பில்லியன் டாலர் அளவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. (1 பில்லியன் = 100 கோடி) அதுவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 41 சதத்திலிருந்து (2008) இன்று 61 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கும் மேல், ஒபாமா அரசு கொடுத்த பட்ஜெட்டில் (2009) 1.4 டிரில்லியன் டாலர் பற்றாக்குறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது; இது சரியாக கணக்கிடப்பட்டால் 2 டிரில்லியன் டாலராக இருக்கும் என்ற கருத்தும் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.
தற்போது உள்ள பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.2 சதவிகிதம் இது கடந்த 60 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பற்றாக்குறை அளவாகும். 1942இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இது கொஞ்சம் தான் அதிகம். (ஈராக், ஆப்கானிஸ்தான் போர் நடவடிக்கைகள் இருந்த போதிலும்) உலகப் போர் ஏதுமின்றி இந்தப் பற்றாக்குறை வந்திருக்கிறது. இந்தப் பற்றாக்குறை கூட கீன்சிய (ஜான் மேனார்ட்கீன்ஸ் என்ற பொருளாதார நிபுணர் வெளியிட்ட கருத்துக்களின் படி) பொருளாதார முறையில் வேலை வாய்ப்பினை உருவாக்கவும், சமூக நலத் திட்டங்களை மேற்கொள்ளவும் பட்ஜெட்டின் அங்கமாக இருப்பதில்லை. நிதி நெருக்கடியைக் கொண்டு வந்த வங்கிகளை தூக்கி நிறுத்துவதற்கும், பாதுகாப்பு என்ற பெயரில் மற்ற நாடுகளின் மேல் போர் நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைக்கும் பராக் ஒபாமாவின் கொள்கைக்கும் பெரிய இடைவெளி இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த சில மாதங்களில் பல நிறுவனங்கள் வேலையிழப்பினை பதிவு செய்திருக்கின்றன. உலக சோசலிஸ்ட் வலைத் தளம் (றுளுறுளு) தனது வெளியீட்டில் (ஜனவரி 29, 2010) வேலை பறிப்பு மற்றும் லே-ஆப் பற்றிய சில தகவல்களை வெளியிட்டது.
¨ வெரிஜான் – தகவல் தொடர்பு நிறுவனம் – 2010இல் 13,000 பேர் குறைக்கப்படுவார்கள் என அறிவிக்கிறது.
¨ வால்-மார்ட் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் 11000 பேர் குறைக்கப்படுவார்கள் என அறிவித்திருக்கிறது.
¨ ஜான்சன் அண்ட் ஜான்சன் – மருந்து உற்பத்தி நிறுவனம் – 2010இல் 8000 பேர் வேலை பறிக்கப்படும் என அறிவிப்பு.
¨ மற்றொரு மருந்து நிறுவனம் அன்டரா ஜெனிகா, உலக அளவில் 8000 பேரை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவிப்பு.
இப்படி அன்றாடம் அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக் கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகராட்சி அதன் 1000 ஊழியர்களை லே-ஆப் செய்ய வேண்டும் என்றும், மேலும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறது; நகராட்சி திவாலாவதைத் தடுக்க இது தேவை என்று அதன் அறிவிப்பு சொல்லுகிறது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் ஒபாமா நிர்வாகம் கொடுத்த ஊக்க நிவாரணம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. அமெரிக்க அரசின் தொழிலாளர் துறை கொடுத்த விபரங்களின்படி டிசம்பர் 2007லிருந்து இதுவரை 1 லட்சம் வேலை வாய்ப்பு பொதுத்துறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது; ஆனால் அதே கால கட்டத்தில் தனியார்துறையில் 70 லட்சம் வேலை பறிக்கப்பட்டிருக்கின்றன, வெட்டப்பட்டிருக்கின்றன.
மாஸ்ஸாசுசெட்ஸ் பல்கலைக் கழகம் (உழைப்புச் சந்தை ஆய்வு மையம்) நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் 25 சதம் ஊதிய பிரிவினிரில் வேலையின்மை விகிதம் 3 சதவிகிதம் தான்; ஆனால் அடி மட்டத்தில் உள்ள 25 சதவிகிதம் ஊதியப் பிரிவினரில் வேலையின்மை விகிதம் 30 சதவிகிதம் என குறிப்பிடுகிறது. விரக்தி நாடு முழுமையும் விரவிக் கிடக்கிறது, வளர்ச்சி என்பது ஒரு மாயத் தோற்றமாகத்தான் உள்ளது.
அமெரிக்க சமூகத்தில் இது பல எதிர்மறை விளைவுகளை தோற்றுவித்திருக்கிறது. பொருளாதார மந்தம் ஒரு புதிய தலைமுறையினை (ழுநநேசயவiடிn சநஉநளளiடிn) உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. பல்வேறு பொருளாதார ஆய்வுகள் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டுகின்றன. இளமையில், நல்லதோ, கெட்டதோ வலுவாக அசைத்துப் போடுகிற அனுபவம் ஒருவருக்கு கிடைக்கு மேயானால் அதுவே அவருடைய வாழ் நாள் ஒழுக்கத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகிறது. மிகவும் மோசமான நெருக்கடி காலத்தில் சிக்கிய தலைமுறையின் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை அமெரிக்க சமூகம் அச்சத்துடன் எதிர்நோக்குகிறது. 20லிருந்து 24 வயதுக்குள் உள்ள இளைஞரிடையே வேலையின்மை 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. வேலையின்மை 1 சதவிகிதம் உயர்ந்தால் புதிதாக வேலையில் சேர்பவர் பெற வேண்டிய ஊதியத்தில் 6 சதவிகிதம் இழக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. 1970லிருந்து அமெரிக்காவில் ஊதிய விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை; ஆனால் பொருளா தாரத்தில் மந்த நிலை வந்த பிறகு ஊதிய விகிதங்கள் கீழிறங்கத் தொடங்கி விட்டன. “மீட்சி” அதை பழைய நிலைக்குக் கூட கொண்டு வரவில்லை. அலிக்ஸ் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் பங்குச் சந்தையில் பணம் போடுபவர்களிடையே நடத்திய வாக்கெடுப்பில் 43 சதவிகிதம் பேர் அமெரிக்கப் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதன் பொருள் பங்குச் சந்தை நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பதாகும்.
மிகவும் கடன்பட்ட நாடான அமெரிக்காவுக்கு கடனை திரும்பக் கொடுப்பதும் அதற்கான வட்டி கொடுப்பதும் அதன் பொருளதாரத்தில் சிக்கலைக் கொண்டு வரும் நிலையில் உள்ளது. (அமெரிக்க) காங்கிரசின் பட்ஜெட் அலுவலகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் மொத்த வருமானத்தில் 8 சதவிகிதம் வட்டிக்கு செலவாகிறது; இது 2019இல் 17 சதமாக உயரும். வட்டி விகிதம் உயருமேயானால், பொருளாதார மந்தம் உள்ள நிலையில் அது 20 சதவிகிதமாகக் கூட உயரும். உலக நாடுகளின் வரலாற்றை பார்க்கிறபோது, எப்பொழுது ஒரு நாட்டின் கடனுக்கான சேவை 20 சதவிகிதம் தாண்டுகிறதோ, அந்த நாட்டில் நெருக்கடி தவிர்க்கவியலாது வந்து தாக்கும்; முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையினை அந்த நாடு இழக்கும். ஆகவே அதை கட்டுக்குள் கொண்டு வர இரண்டு பொதுவான நடவடிக்கைளை எடுக்க வேண்டிவரும்; ஒன்று பாதுகாப்பு செலவை குறைப்பது; இரண்டு, சமூக நலத்திட்டங்களை வெட்டுவது. முதல் நடவடிக்கை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததல்ல. ஆகவே இரண்டாவது வழிமுறையினை அமெரிக்கா தேர்ந்தெடுக்கிறது. அரசின் நிலை பற்றிய ஒபாமாவின் பேச்சு (ளுவயவந டிக ரniடிn யனனசநளள) நிதிச் சிக்கனம் பற்றியும், சமூக நல செலவினங்கள் வெட்டப்பட வேண்டியது குறித்தும் விளக்கிய தோடு மக்கள் தங்கள் நுகர்வுத் தேவையினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது. யாருடைய நுகர்வு? “2010ல் அமெரிக்காவில் பட்டினி” என்ற ஆய்வறிக்கை 14 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 3.7 கோடி மக்கள் அரசு வழங்கும் உணவு கூப்பன்களில் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று தெரிவிக்கிறது; இது 2006 ஆண்டோடு ஒப்பிடும்போது 46 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கிறது. நிதி சூதாட் டத்தில் ஈடுபட்ட வால் ஸ்ட்ரீட் பாதுகாப்பு உள்ள நிதி நிறுவனங்களை 2008-09இல் மட்டும் தூக்கி விடுவதற்கு 13 டிரில்லியன் டாலர் வழங்கிய பின்னணியில் எந்த நுகர்வாளர்களைப் பற்றி அமெரிக்க அரசின் கவலை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அரசு ஊக்கத் தொகையாக 182 பில்லியன் டாலர் பெற்ற ஏ.ஐ.ஜி. (மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம்) தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு 100 மில்லியன் டாலர் போனஸ் வழங்கியது. ஒபாமா சொல்லுகிறார் “மற்ற அமெரிக்கர்களைப் போலவே நானும் மற்றவர் வெற்றியினையும் செல்வத்தையும் கண்டு வருத்தமோ பொறாமையோ கொள்ள மாட்டேன். இது சுதந்திரச் சந்தை அமைப்பின் பகுதி”.
ஆனால் லாப வேட்கையில் கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் கோர நடனத்தைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம். அதை தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வர ஒபாமா அரசு அதிகமாகவே பேசுகிறது; எதுவும் நடைபெற வில்லை. மாறாக ‘மீட்சி’ என்ற பெயரில் பங்குச் சந்தையில் (தற்காலிக) ஏற்றங்களும், வால் ஸ்டிரீட் வங்கிகள் கொடுக்கும் போனஸ் உயர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன; இதோடு, நெருக்கடி கண்டு கடன் வழங்குவதில் சற்று இறுக்கமாகிப் போன வங்கித் துறையினை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தும் போக்கு தென்படுகிறது; சென்ற டிசம்பரில், வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என ஒபாமா அறிவித்திருப்பது அதன் துவக்கம் தான். ‘30களின் துவக்கத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பொழுது, வங்கித் துறையின் செயல்பாட்டினை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவில் 1933ஆம் ஆண்டு கிளாஸ்-ஸ்டிகால் சட்டம் இயற்றப்பட்டது. கால ஓட்டத்தில் மெதுவாக இந்தச் சட்டத்தின் பகுதிகள் நீர்த்துப் போகுமாறு செய்யப்பட்டன. 1980இல் துவங்கிய இந்த வேலை 1999இல் கிராம்லீச்-பில்லே சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகள் முழுமை யாக தகர்க்கப்பட்டு, இன்றைய நெருக்கடிக்கு காரணமாக புதிய வங்கி நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. அவைகள் யாவும் ஊக வணிகத் தன்மை கொண்டவை. வீட்டு அடமானக் கடன் துறையில் அந்த நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டதன் விளைவு தான் நிதி நெருக்கடியினை உருவாக்கியது, பின்பு உலகப் பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்தது. புதிய கிளாஸ் – ஸ்டீகால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. இதற்கு எதிராக வால்-ஸ்டிரீட் காட்டும் முகச்சுழிப்பை புறந்தள்ளி ஒபாமா செயல்படுவாரா? “நிதிச் சந்தைகளை மறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் ஒரு அரசியல் புதைகுழிக்குள் மூழ்கி விட்டன” என்று ஜோசப் ஸ்டிக்லிட்ஜ் (பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்) சொல்வதுதான் இன்றைய சரியான நிலை.
இவைகளையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் பொருளா தாரம் மீண்டும் எழுகிறது என்பதற்கான அடிப்படை இல்லை என்பது புலனாகிறது. அவ்வப்போது கண்ணுக்குப் புலனாகும் வளர்ச்சியின் சில அம்சங்கள் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரும் சக்தி படைத்தவை அல்ல. சர்வதேச முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி அந்த அமைப்பின் ஏற்றத் தாழ்வான தன்மையில் உள்ளது. அதை நீக்காமல் எப்படி நெருக்கடி தீரும்? பொதுவாக, நிதியினை கையாளுவதில் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் பணம் மீண்டும் நிதி நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நிலையில்தான் உள்ளது. அண்மையில் துபாயில் அதன் பொருளாதாரத்தை அசைத்துப் போட்ட நெருக்கடி அதை உணர்த்துகிறது. கடன் வலையில் சிக்கி திண்டாடும் கிரீஸ், அயர்லாந்து போன்ற நாடுகளின் நிலை கடன் சுமை. நிதிச்சந்தையில் எத்தகைய நெருக்கடியினைக் கொண்டு வரும் என காட்டுகிறது. நெருக்கடி தீர அமெரிக்கா உட்பட இதில் சிக்கிய நாடுகள் அனைத்தும் எடுத்த நடவடிக்கை தவறான தாகவே இருந்திருக்கிறது. மூழ்கும் நிறுவனங்களை தூக்கி விட அமெரிக்கா கொட்டிய 787 பில்லியன் டாலர், நாணயமாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு எந்த ஊக்கத்தையும் கொடுக்க வில்லை. பெரிய வங்கிகள் வீழாது என்கிற நிலை மாறி மிகப்பெரிய வங்கிகள் மிக விரைவில் விழும் என்ற கருத்து உருவாகி வருகிறது. அனைத்து நாடுகளிலும் நிதிச் சந்தையின் செயல்பாட்டினை கட்டுப்படுத்த சில நிர்வாக முடிவுகள் தேவைப்படுகிறது. அவைகள் இருந்ததால்தான் சீனாவும், இந்தியாவும் நெருக்கடியின் வெப்பத்தை ஓரளவு தடுக்க முடிந்தது.
நிதி மூலதனம் தற்போது உலக உணவு மற்றும் எண்ணெய் சந்தைகளில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாகும். உணவு / எண்ணெய் வணிகம், ஊக வணிக செயல்பாட்டிற்கு உள்ளாக்கப்படுகிறது. எல்லா நாடுகளும் குறிப்பாக வளரும் நாடுகள் சந்திக்கும் விலை உயர்வு இதன் தீவிரத் தன்மையை காட்டுகிறது. பொருளுக்கான கிராக்கி எவ்வளவு சந்தை அளிப்பு எவ்வளவு என்பதைப் பற்றி கணக்கில் கொள்ளாது நிறைய லாபம் சம்பாதிக்கும் நோக்கத் துடன் பொருட்களின் விலையினை செயற்கையான ஏற்ற இறக்கத்திற்கு உட்படுத்தும் வர்த்தக சூதாடிகளுக்கு உகந்த தளத்தை இந்த நிதிச் சந்தை கொடுத்திருக்கிறது. இது உண்மை ஊதியம் அரிக்கப்படுவதிலும், பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை உயர்விலும் கல்வி மற்றும் உடல் நலன் பெறும் வாய்ப்பு குறைந்து போவதிலும் – ஏழை மக்கள் தங்கள் வாழ்வில் பேரழிவை சந்திப்பதிலும் முடியும்.
ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியின் மையப் புள்ளியாக இனிமேல் அமெரிக்கா இருக்க முடியாது என்பது தான் அது. ஆகவே மற்ற நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கான புதிய ஆதாரங்களைத் தேட வேண்டும். உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிச் சந்தை விரிவாக்கப் படுவது அதில் அடங்கும். அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கி நிற்கும் கோடிக்கணக்கான மக்களின் தேவைக்கேற்ப பொருள்களின் கிராக்கியினை மறு பரிசீலனை செய்யா விட்டால், ‘மீட்சி’ வளர்ச்சி என்பதெல்லாம் ஏற்றத் தாழ்வினை மூடி மறைக்கும் வார்த்தை ஜாலங்கள்தான்.
நெருக்கடியின் ஆழம் வேலையின்மையில் தெரிகிறது என்று பார்த்தோம். எவ்வளவு ஊக்க நிவாரணத் தொகை கொடுத்தாலும் அது வேலை வாய்ப்பினை உருவாக்கவில்லை என்பது தான் அமெரிக்க அனுபவம். அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் வேலையற்றோருக்கான நிவாரணம் வழங்க 10 பில்லியன் டாலருக்கு அனுமதியளித்திருக்கிறது. நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை கூடவில்லை. தற்காலிக பணிபுரிபவர், ஒப்பந்தத் தொழிலாளிகள் பகுதி நேரப் பணியாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், சுயமாக பணியாற்றுவோர் என உழைப்புச் சந்தையின் உள்ளடக்கம் பன்முகத் தன்மையோடு உள்ளது. நெருக்கடி இதை அதிகப்படுத்தியது. சமூகப் பாதுகாப்பு ஏதுமின்றி இவர்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதையெல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, நெருக்கடியிலிருந்து மீண்டதாக கூற முடியாது.
இந்த மாற்றங்களெல்லாம் எப்போது வரும்? அதற்கு மாறுபட்ட அரசியல் களம் உருவாக வேண்டும். பெரிய முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் கண்ணசைவில் செயல்படும் அரசியல் களம் மாற்றப்பட வேண்டும். ஏனெனில் அது தான் இன்றைய நெருக்கடியை கொண்டு வந்தது; ‘30களிலும் அதைத் தான் செய்தது. அது தொடருமாயின் மீண்டும், மீண்டும் நெருக்கடி, உலகத்தை தாக்கும். சாதாரண மனிதர்களின் உணர்வுகள் எங்கே மதிக்கப்படுகிறதோ, தேவைகள் உணரப்படுகிறதோ, குரல் கேட்கப்படுகிறதோ, உரிமைகள் அங்கீகரிக்கப்படுகிறதோ அங்கே அந்த மாற்றம் நிகழும்.
Leave a Reply