அறிமுகம்
2010-11-ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்றைய இந்திய அரசியலின் இரு முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கிறது. ஒன்று, மக்களவை தேர்தல்கள் முடிந்து ஒரு ஆண்டு கூட நிறைவு அடையவில்லை. ஆகவே, அடுத்த தேர்தல் 2014இல் தானே என மெதப்பில் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
இரண்டு, மக்களவையில் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தேவையில்லை என்ற அளவிற்கு “முற்போக்கு” கூட்டணி அரசுக்குப் பெரும்பான்மை தற்சமயம் மக்களவையில் உள்ளதால், மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதில் சிறு தயக்கம் கூட மத்திய அரசுக்கு இல்லை.
பொருளாதார ஆய்வு அறிக்கை
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் தயாரித்துள்ள 2009-2010-ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாட்டையும், கொள்கை களையும் விவரிக்கும் ‘பொருளாதார ஆய்வு அறிக்கை 2009-2010’(நுஉடிnடிஅiஉ ளுரசஎநல 2009-2010) என்ற ஆவணம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. (இந்த ஆவணமும், மத்திய பட்ஜெட் ஆவணங் களும் hவவயீ://iனேயைரெனபநவ.niஉ.in என்ற இணையதள முகவரியில் உள்ளன).
இந்த அறிக்கை வழக்கம் போல் மத்திய அரசின் கொள்கை களை (தன்னைத்தானே) மெச்சிக் கொண்டும், இந்தியப் பொருளாதார செயல்பாடு பற்றிய மிகையான, சுயதிருப்தி நிறைந்ததுமான அறிக்கையாக அமைந்துள்ளது. ‘உலகப் பொருளாதார’ நெருக்கடியால் (அதாவது உலக முதலாளித்துவ நெருக்கடியால்) ஏற்பட்ட தாக்கத்தை இந்தியப் பொருளாதாரம் மிகத் திறமையாக சமாளித்துள்ளது எனவும் கிட்டத்தட்ட எல்லாமே நல்லபடியாக உள்ளது எனவும் அறிக்கை கூறுகிறது. 2009-10-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார உற்பத்தியில் 7.2 சதவிதிகம் அதிகரிக்கும் என்றும், 2010-2011ல் 8.5 சதவிகிதத்தைத் தாண்டிவிடும் என்றும், 2011-12ல் 9 சதவிகிதத்தைத் தாண்டும் என்றும் அறிக்கை ஆருடம் கூறுகிறது. இந்த எதிர்ப்பார்ப்புகள் சற்று மிகையானவை என்பது ஒருபுறம் இருக்க, தேச உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவிகிதம் ஆகவோ, 9 சதவிகிதமாகவோ அமைந்தாலும், சாதாரண உழைப்பாளி மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன என்ற கேள்வி எழுகிறதே? அதற்குப் பதில் அறிக்கையில் இல்லை. அறிக்கையைப் பொருத்தவரையில் உற்பத்தி வளர்ச்சிவிகிதம் தான் எல்லாமே இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அண்மையில் தெரிய வந்துள்ள தகவல். 2009 அக்டோபர் முதல் டிசம்பர் முடிய உள்ள மூன்றாவது காலாண்டு வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்பதுதான். ஆகவே, 2009-10-ஆம் ஆண்டுக்கான தேச உற்பத்தி வளர்ச்சி 7 சதவிகிதத்தை அடையுமா என்பதே சந்தேகம் தான். அடுத்த ஆண்டு 8.5 சதவிகிதம், அதையடுத்து 9 சதவிகிதம் என்பது தற்போதைக்கு ‘ஊகமும் கற்பனையுமே’.
அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தற்புகழ்ச்சியுடன் நிற்கவில்லை. அது வலுவாக தாராளமயக் கொள்கைகள் இன்னும் தீவிரமாக அமலாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத் துகிறது. அரசின் ஃபிசிக்கல் பற்றாக்குறை விரைந்து குறைக்கப்பட வேண்டும் என்றும் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு மேலும் குறைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வாதிடுகிறது. குறிப்பாக, இரண்டாவது அத்தியாயத்தில், பொருளா தாரத்தைச் சந்தையின் செயல்பாட்டிற்கு விட்டுவிட்டு, ஏழைகளுக்கான சில நலத்திட்டங்களை மட்டும் அரசு இயக்கினால் போதும் என்று கூறுகிறது. அதுமட்டுமல்ல, இந்தப் பணியைக் கூட சந்தைசார் முறையில் செய்வதே சிறந்தது என்கிறது. எடுத்துக்காட்டாக, பொதுவிநியோக அமைப்பும், ரேஷன் கடைகளும் தேவையில்லை என்றும், ஏழைகளுக்கு ‘கூப்பன்’ கொடுத்து, அவர்களை ரேசன் பொருட்களை தனியார் கடைகளில் கூப்பனை வைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.இன்னும் பல மோசமான தாராளமய பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளன.
பொருளாதார நிலைமையை மிகைப்படுத்திக் காட்ட அறிக்கை முயன்றுள்ள போதிலும், இரண்டு பிரச்சனைகளை மறைக்க முடியவில்லை. ஒன்று, நடப்பு ஆண்டில் (2009-10இல்) தேச உற்பத்தியின் வளர்ச்சியில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது, மீட்சி இருந்தாலும், தொழில்துறையும் சேவைத் துறையும் வேகமான வளர்ச்சியை சாதித்திருந்தாலும், வேளாண் உற்பத்தி சரிந்துள்ளது. அத்துறையில் உற்பத்தி சென்ற ஆண்டை விடக் குறைந்துள்ளது என்ற தகவலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இரண்டாவதாக, உணவுசார் பண்டங்களின் விலைகள் தற்சமயம் 20 சதவிகிதம் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளன. இதையும் ஆய்வறிக்கையால் மறுக்க இயலவில்லை. இந்த 20 சதவிகித விலை உயர்வு ஒட்டுமொத்த பொருளாதா ரத்திற்கும் பரவக்கூடும் என்றும் கூட ஆய்வறிக்கை ஒத்துக் கொள்கிறது. ஆனால் இவ்விரு பிரச்சனைகளையும் எதிர் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உருப்படியான ஆலோசனை எதுவும் அறிக்கையில் இல்லை. மேலும் விலை உயர்வுக்கான காரணங்கள் பற்றிக் கூறும் பொழுது, ஆய்வு அறிக்கை முன்பேர, யூக வணிகத்தின் பங்கையும், பெரும் வியாபாரக் கம்பெனிகளின் பதுக்கல் சாகசங்களின் பங்கையும் குறிப்பிட மறுக்கிறது.
கோடைப்பருவ சாகுபடியிலான பின்னடைவு மிகைப் படுத்தியது, விலைகள் உயரும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது காரணம் என்று நொண்டிச்சாக்கு சொல்கிறது. அதேபோல் தொடரும் வேளாண் நெருக்கடி பற்றிய சரியான பார்வையும் ஆய்வு அறிக்கையில் இல்லை.
பொருளாதாரத்தின் உண்மை நிலை
உழைப்பாளி மக்களைப் பொருத்தவரையில், இன்றைய இந்தியப் பொருளாதாரத்தில் அவர்கள் கடுமையான சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது, ஒருபுறம் கடுமையான விலை உயர்வு தாக்குகிறது. அரசின் புள்ளி விவரங்கள் மொத்த விலைவாசிப்புள்ளி எண் அடிப்படையிலேயே உணவுசார் பண்டங்கள் 20 சதவிகிதம் வேகத்தில் உயர்வதை ஒத்துக் கொள்கிறது. சில்லரை விலைவாசிகள் உயர்வு, உணவுசார் பொருட்களைப் பொருத்தமட்டிலும் அல்ல, பொதுவாகவே, எல்லாப் பொருட்களிலும் மொத்த விலை புள்ளி உயர்வை விடக்கூடுதலாகவே உள்ளது. அர்ஜூன் சென்குப்தா குழு நமக்குத் தெரிவிப்பது என்னவென்றால், 90 சதவிகிதத்துக்கும் அதிகமான உழைப்பாளி மக்களுக்கு சுயவேலை, கூலி வேலை என்று எதுவாக இருந்தாலும்- விலை உயர்வுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் படியும் கிடையாது.
அடுத்து, இந்தியப் பொருளதாரத்தில் உற்பத்தியில் மீட்சி ஏற்பட்டு விட்டதாக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், வேலைவாய்ப்பைப் பொருத்தவரையில் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என்பதே உண்மை. ஏற்கனவே தாராளமய காலகட்டத்தில், உற்பத்தி 10 சதவிகிதம் உயர்ந்தால், வேலை யுள்ளவர் எண்ணிக்கை 3 சதம்தான் உயரும் என்ற நிலை இருந்து வருகிறது. அது 1993-94 முதல் 2004-05 வரையிலான விவரங்கள் அடிப்படையில் தெரிகிறது. அதன் பின்னர், உலகப் பொருளா தார நெருக்கடியும், உள்நாட்டுத் தொழில் மந்தமும் சேர்ந்து நிலைமையை மேலும் கடினமாக ஆக்கியுள்ளன. தீவிரமடைந் துள்ள, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கின்ற ஊரகப் பொருளாதாரம் மற்றும் வேளாண் துறையின் நெருக்கடி, வேலையின்மையை அதிகப்படுத்தி வருகிறது. 1993முதல் 2005 வரையிலான காலத்தில், ஏதேனும் (அது வேலை, கூலி வேலை) வேலையில் உள்ளோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.85 சதவிகிதம் என்ற விகிதத்தில் அதிகரித்தது. வேலை தேடியும் கிடைக்காதவர் விகிதம் ஆண்டுக்கு 4.25 சதவிகிதம் என்ற வேகத்தில் அதிகரித்தது. கிராமப்புறம், நகர்ப்புறம், ஆண்,பெண் என்று எந்த வேறுபாடுமின்றி, அனைத்துப் பகுதியினர் மத்தியிலும் வேலையின்மை விகிதம் அதிகரித்தது. 2005க்குப் பின் 2008 வரை தேச உற்பத்தி 8-9 சதவிகிதம் என்ற வேகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்தும் கூட, வேலைவாய்ப்பு நிலையில் முன்னேற்றம் இல்லை. 2008லிருந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் தலைமையில் மக்கள் போராடிப் பெற்றுள்ள ஊரக வேலை உறுதிச்சட்டம் மட்டுமே கிராமப்புற தொழிலா ளர்களுக்கு ஓரளவு நிவாரணம் தருகிறது.
அதுமட்டுமல்ல, கடந்த 15/20 ஆண்டுகளில் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதி முறைசாராத் துறைகளில் தான். அமைப்புசார் துறையிலும் கூட, உருவாக்கப்பட்டுள்ள புதிய பணியிடங்களனைத்துமே அத்துக்கூலி அல்லது ஒப்பந்தக் கூலி அடிப்படையில் அமைந்துள்ளன. 1980களில் ஓரளவு தினக்கூலி உயர்ந்து வந்தது. 1993-94க்குப் பிறகு அநேக தொழிலாளர் பிரிவினருக்கு தினக்கூலி உயர்வு என்பது மிகவும் சொற்பமாகவே உள்ளது.
ஆய்வு அறிக்கை இத்தகைய வேலைவாய்ப்பு மற்றும் கூலி நிலைமைகள் பற்றிய அக்கறையே இல்லாத ஒன்றாக உள்ளது.
நடப்பு பொருளாதார நிலவரத்தின் மூன்றாவது முக்கிய அம்சம் தொடரும் வேளாண் நெருக்கடி.
ஏறத்தாழ கடந்த பத்தாண்டுகளாகவே உணவு தானிய உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-09இல் 1.6 சதவிகிதம், 2009-2010இல் (மைனஸ்) – 0.2 சதவிகிதம் என்ற நிலையில் வேளாண் உற்பத்தி நிலைகுலைந்து நிற்கிறது. ஆனால், அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் இதற்குரிய முன்னுரிமையோ, தீர்வுக்கான பரிந்துரைகளோ இல்லை. இந்தப் பின்புலத்தில் பட்ஜெட்டைப் பரிசீலிப்போம்.
மத்திய பட்ஜெட் தொடரும் வேளாண் நெருக்கடியும் தீவிரமாகும் விலை உயர்வும்
அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்க இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன என்ற மெதப்பிலும், இடதுசாரிக் கட்சிகளின் ஆதர வின்றியே மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையிலும் இருந்து இரண்டாம் ஐ.மு.கூட்டணி அரசின் மத்திய பட்ஜெட் 2010-11 தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்களை வாட்டி வதைக்கும் உணவுசார் மற்றும் இதர அத்தியாவசியப் பண்டங்களின் கிடுகிடு விலை உயர்வை மட்டுப்படுத்த நட வடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மறைமுக வரி விகிதங்களை உயர்த்தியும் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலைகளை சுங்கம் மற்றும் கலால் வரிகள் போட்டு கணிசமாக உயர்த்தியும் ஐ.மு.கூ. அரசு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது.
அந்நிய, இந்திய முதலாளிகளுக்கு ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடுத்துள்ள ஏறத்தாழ 5 லட்சம் கோடி ரூபாய் சலுகைகளில், ஒரு பகுதியை மறை முகவரிகளை சற்று உயர்த்தித் திருப்பிக் கொள்வது போன்ற தோற்றத்தை ஒருபுறம் கொடுத் துக்கொண்டே, மறுபுறம் செல்வந்தர்களுக்கு நேர்முக வரிச் சலுகைகளாக ரூ.26,000 கோடியை அள்ளி வீசியுள்ளது. சென்ற இரண்டு ஆண்டுகளில் கலால் வரிவிகிதம் ஊக்கம் (ளுகூஐஆருடுருளு) என்ற பெயரில் குறைக்கப்பட்ட பொழுது அதன் முழுப்பய னையும் சுருட்டிக்கொண்ட முதலாளி வர்க்கம், விலைகளைக் குறைக்கவில்லை. இப்பொழுது உயர்த்தப்பட்டுள்ள கலால் வரி விகிதத்தை அசலும் வட்டியுமாக மக்களிடமிருந்து வசூல் செய்து, அது தனது லாப வேட்டையை வெற்றிகரமாக தொடரும். பிரதானமாக ஒரு மத்திய பட்ஜெட் என்பது ஒரு நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு மற்றும் செலவு பற்றிய மதிப்பீடுகளை (நுளவiஅயவநள) இனம் வாரியாக முன் வைக்கும் ஆவணம் ஆகும். நமது மார்க்சிய, உழைக்கும் மக்கள் சார்ந்த கோணத்திலிருந்து அரசின் வரவு – செலவு முடிவுகளின் வர்க்கத் தன்மையை நாம் பரிசீலிப்போம்.
தனிநபர் மற்றும் கம்பெனிகள் மீதான வருமானவரி என்பது வரிகொடுக்க இயலும் திறன் சார்ந்தவை. அதிக வருமானம் என்றால் அதிக வரி என்பது நியாயமே. ஆனால் நேர்முக வரிகள் குறைப்பால் மத்திய அரசு 26,000 கோடி ரூபாய் இழக்கும் என்று பட்ஜெட் கூறுகிறது. இது கூடக் குறைவான மதிப்பீடே. ஏனென்றால், கம்பெனிகளுக்கு கிடைக்கும் வரிச்சலுகை களாலும் அரசின் பிற நடவடிக்கைகளாலும் பொருளாதார வளர்ச்சிக் கூடி, அரசின் வரி வருமானம் பெரிதும் கூடும் என்று மத்திய பட்ஜெட் மிகையாக மதிப்பிட்டுள்ளது. உண்மையான வரி இழப்பு ரூ.26,000 கோடியை விடக் கூடுதலாகவே இருக்கும்.
மறுபுறம், மறைமுக வரிகளைக் கூட்டி அதனால் 46,000 கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் என்று பட்ஜெட் சொல்கிறது. இது முழுமையும் சாமான்ய உழைப்பாளி மக்களின் மீது பெரும் சுமையாக, விலைவாசி உயர்வு மூலம் விழும். அரசின் வரவுகளைக் கூட்ட செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பதை தவிர்த்து, சாமானி யர்கள் மீது மறைமுக வரி சுமத்தியதோடு மத்திய பட்ஜெட் நிற்க வில்லை. இந்திய மக்களின் சொத்தான பொதுத்துறை கம்பெனிகளின் பங்குகளை, ஐந்தாண்டு காலத்திற்கு தற்காலி கமாக (அரசு ஊழியர் மொழியில் சொல்வதானால், 10-ஏ-1 அரசு) ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இரண்டாம் ஐ.மு.கூ. அரசு தொடர்ந்து விற்று வந்துள்ளது. 2009-10 நிதியாண்டில் ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகளை விற்றுள்ளது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவின்றி அரசு இருக்க முடியாது என்ற நிலை 2004-2009இல் இருந்ததால் பொதுத் துறை பங்குகளை விற்க முடியாமல் இருந்தது. இப்பொழுது நிலைமை மாறியுள்ளதால் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் சொல்லப் பட்டுள்ளதற்கு விரோதமாக, லாபகர பொதுத்துறை நிறுவனங் களையும் தனியார்மயமாக்கும் வேலை நடந்து வருகிறது. 2010-11 பட்ஜெட்டில் மேலும் ரூ.40,000 கோடிவரை பொதுத்துறை பங்குகள் விற்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதவிர வரி அல்லாத நடப்பு வரவு என்ற இனத்தின் மூலம் ரூ.74,571 கோடி 2010-11இல் கிடைக்கும் என்று பட்ஜெட் கூறுவது, ஸ்பெக்ட்ரம் விற்பனை ஊழலின் மறுபதிப்பு என்றுதான் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் வரவுசார் நடவடிக்கைகள் மட்டும் மக்கள் விரோத மாக அமையவில்லை. செலவுசார் முடிவுகளும் அவ்வாறே உள்ளன. 2010-11ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகளை யும் 2009-10க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளையும் ஒப்பிட்டால், அரசின் மொத்த திட்டம் சாரா செலவு ரூ.7,06,371 கோடியி லிருந்து ரூ.7,35,657 கோடியாக மட்டுமே, அதாவது சுமார் ரூ.29,000 கோடி மட்டுமே உயர்கிறது. இந்த உயர்வு சுமார் 4 சதவீதம்தான். விலைவாசி உயர்வே, 10க்கும் அதிகம். ஆக உண் மையளவில் அரசின் திட்டம் சாரா செலவுகள் குறைக்கப்பட் டுள்ளது.
2009-10ஆம் ஆண்டில் மத்திய திட்டச் செலவு ரூ.3,25, 148 கோடி என்று கடந்த பட்ஜெட் நேரத்தில் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் ரூ.3,15,176 கோடிதான் என்று திருத்தப் பட்ட மதிப்பீடு கூறுகிறது. 2010-11க்கு சென்ற ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட 14 சதவீதம் கூடுதல் என்று உள்ளது. இது, பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் மிகவும் சொற்பமே.
அரசின் திட்ட ஒதுக்கீடுகள் எங்கே செல்கின்றன? ஊரக வளர்ச்சிக்கு சென்ற ஆண்டு அறிவித்தது ரூ.51,769 கோடி, 2010-11இல் ரூ. 55,190 கோடி மட்டுமே. விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டால் இது சரிவே, உயர்வு அல்ல. வேளாண்மை, பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ.11,000 கோடியிலிருந்து ரூ.12,500 கோடியாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் உண்மையளவில் சரிவுதான். ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் மிக சொற்பமே ஆகும்.
சென்ற ஆண்டு குடியரசுத்தலைவர் நாடாளுமன்ற உரையிலும், பின்னர் பட்ஜெட்டிலும், அண்மையில் மீண்டும் குடியரசுத்தலைவர் உரையிலும், பரபரப்பாக அறிவிக்கப்பட்டது உணவுப்பாதுகாப்பு மசோதா! அதை இன்னும் காணவில்லை என்பது மட்டுமல்ல, மத்திய அமைச்சகம் உணவுப்பாதுகாப்பு என்பதை விளக்க அளித்துள்ள குறிப்பு, உள்ளதையும் பறிக்கும் வகையில் உள்ளது. அதை பின்பற்றினால் உணவுப் பாதுகாப்பு மறுப்பு மசோதா தான் கிடைக்கும். மத்திய அரசின் நடவடிக் கைகளும் அதன் பொருளாதார ஆய்வு அறிக்கையும் இத்திசையில் தான் உள்ளன. மத்திய அரசிடம் உள்ள கணிசமான கோதுமை, அரிசி கையிருப்புகளை ஏ.பி.எல். விலை யில் மாநில அரசுகளுக்கு வழங்குவதற்குப் பதிலாக, கூடுதல் விலையில் திறந்த சந்தையில் விற்பதே அரசின் கொள்கையாக உள்ளது. நடப்பு ஆண்டில் தானிய உற்பத்தி சரிந்துள்ள நிலையில், முன்பேர வணிகத்திற்கும் பதுக்கல் முதலைகளுக்கும் மத்திய அரசின் கொள்கைகள் ஊக்கமளிக்கின்றன. உணவுப் பாதுகாப்பு என்ற இலக்கு எட்டாக்கனியாகவே மக்களுக்கு உள்ளது. பட்ஜெட்டுன் அரசு சமர்ப்பித்துள்ள “இழக்கப்பட்ட வரி வருமானம்” என்ற ஆவணம் தரும் தகவல்களை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அது என்ன கூறுகிறது? கடந்த நிதியாண்டிலும் (2008-09) நடப்பு நிதியாண்டிலும் (2009-10) மட்டும் தனிநபர் வருமான வரிச்சலுகை, கார்ப்பரேட் வரிச் சலுகை, எக்ஸைஸ் வரிச் சலுகை மற்றும் சுங்க வரிச்சலுகை என்ற வகைகளில் மொத்தமாக கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ 2 ரூபாய் விலையில் கொடுத்தால், அரசுக்கு ஏற்படக் கூடிய மானியச் செலவு 1 லட்சத்து 45,000 கோடி ரூபாய் தான். ஏற்கனவே உணவு மானியம் 55,000 கோடி உள்ள நிலையில், மேலும் 90,000 கோடி ரூபாய் செலவழித்தால் இதைச் செய்து விட முடியும். ஆனால் உணவு அமைச்சகத்தின் “உணவுப் பாதுகாப்பு மசோதா” பற்றிய குறிப்பு இதற்கு நேர் எதிராக மானியத்தைக் குறைக்க வழி தேடுகிறது. இது தான் அரசின் வர்க்க இலக்கணம்!
விவசாயம், ஏற்றுமதி, வேலை வாய்ப்பு, சிறு நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு ஆகியவை அனைத்திற்கும் பட்ஜெட்டில் எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை.
மொத்தத்தில் மக்கள் சார் வளர்ச்சிக்கு வழி செய்யாத, பணவீக்கத்தை அதிகப்படுத்தும் வேளாண் நெருக்கடியை தீர்க்க மறுக்கும் மக்கள் விரோத பட்ஜெட்தான் ஐ.மு.கூ. அரசின் 2010-11 பட்ஜெட்.
Leave a Reply