மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கிராம்சியின் அரசியல் சிந்தனைகள்


(தோழர். கே. செல்வப்பெருமாள் புற்று நோயோடு போராடிக் கொண்டிருந்த காலத்தில் வலியைத் தாங்க மூளைக்கு வேலை கொடுக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் அவரது சிந்தனை மட்டும் சாகாவரம் பெற்றது போல் கட்டுரைகளாக உருவெடுத்து விட்டன. அதில் ஒன்றுதான் இது. அவரது கணிப்புகளோடு நாம் வேறுபட்டாலும் அவரது சிந்தனையை ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. வர்க்கப் போராட்டங்களிலே ஈடுபடும் ஒருவருக்கு அறிவுக் கூர்மை அடைகிறது என்பதை குறுகிய காலமே வாழ்ந்தாலும் உயர் கல்வி பெற வாய்ப்புக் கிட்டாத செல்வப்பெருமாளின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.) அவர் எழுதி வைத்த குறிப்புகளை எவ்வித மாற்றமுமின்றி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

– ஆசிரியர் –

இத்தாலியில் முசோலினியின் பாசிஸ்ட் அரசியல் தலை தூக்கும்போது, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அந்தோணியோ கிராம்சியை நாட்டை விட்டு வெளியேறிவிடும்படி அக்கட்சியும், தோழர்களும் வலியுறுத்தியபோது, அதனை ஏற்க மறுத்து இவ்வாறு கூறினார் கிராம்சி: “ஒரு கப்பல் மூழ்கும்போது கடைசியாக வெளியேறுவது கேப்டனாகத்தான் இருக்க வேண்டும்.” என்ற கம்யூனிஸ்ட் அரசியல் உறுதியோடு பாசிசத்திற்கு எதிரான தனது போராட்டத்தை துவக்கினார்.

ஒரு கட்டத்தில் முசோலினியின் பாசிஸ்ட் படை கிராம்சியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. அப்போது அவர்களது பிரதானக் கோரிக்கையே கிராம்சியின் மூளையை 20 வருடத்திற்கு செயல்படாமல் நிறுத்தி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை நீதிமன்றமும் அப்படியே ஏற்றுக் கொண்டு அவரை கொடுமையான தனிமைச் சிறையில் அடைத்தது. ஏற்கனவே கூன் விழுந்து பல்வேறு நோய்களுக்கு ஆளான கிராம்சி சிறைக்குள்ளும் எதிர்கால சந்ததியினருக்காக தனது சிந்தனையை கூர் தீட்டி 3000 பக்கங்கள் கொண்ட குறிப்புகளை எழுதினார். இதுவே பின்னர் “ஞசளைடிn சூடிவந க்ஷடிடிமள” – சிறைக் குறிப்புகள் என்று பிரபலமானது. இதில் அவர் இத்தாலியின் வரலாறு, கல்வி, பண்பாடு, அமைப்புச் செயல்பாடுகள்… என பல்வேறு தலைப்புகளில் எழுதினார்.

கிராம்சி குறித்து மார்க்சிய வரலாற்று பேரறிஞர் “எரிக் ஹாப்ஸ்வாம்” கூறும் போது, “20ஆம் நூற்றாண்டின் மேற்கு ஐரோப்பிய சிந்தனையாளர்களில் அபூர்வமான தத்துவவாதி, மிகச் சிறந்த அறிவாளி, தீவிரமான ஒரிஜினல் கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் என புகழ்ந்துரைக்கிறார்.”

கிராம்சியை பொறுத்தவரை ஒரு போர்க்குணமிக்க மார்க்சிஸ்ட்:

தத்துவத்தையும், நடைமுறையையும் இணைப்பதில் வெற்றி கண்டவர். “தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது: நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது என்று ஸ்டாலின் கூறுவார்.” இதற்கேற்ப தத்துவத்தையும், நடைமுறையையும் செயலூக்கமுடன் இணைத்தவர் கிராம்சி.

அதேபோல் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டத்தை நடத்துவதிலும், கட்சிக்குள் ஊடுருவிய திருத்தல்வாதத்திற்கு எதிராகவும் மிக உறுதியான போராட்டத்தை நடத்தி கட்சிக்குள் ஒற்றுமையை தத்துவார்த்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நிலைநாட்டுவதில் எஃகு உறுதிபோல் செயலாற்றினார்.

சிறைக்குள் இருந்த காரணத்தால் அவரது சிறைக் குறிப்புகளில் பல்வேறு வார்த்தைகள் புதிது, புதிதாக பயன்படுத்தப்பட்டது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இக்குறிப்புகள் காவலர்களிடம் சிக்கினால் அவர்களுக்கு புரியக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு சொற்களை உபயோகித்தார். அச்சொற்களில் ஒன்றுதான் “ஹெஜ்மணி (ழநபநஅடிலே)”. பொதுவாக ஆங்கிலத்தில் ஒருநாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவது… போன்ற அர்த்தங்களையே குறிக்கும்.

ஹெஜ்மணியை நாம் கருத்தியல் ஒப்புதல் என்று அழைக்கலாம். முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் பெரும்பான்மை மக்களிடம் தங்களுக்கான கருத்தியல் ஒப்புதலைப் பெற்றுத்தான் ஆட்சியை நடத்துகின்றன. இங்கேதான் பாட்டாளி வர்க்கம் இதனை எதிர்த்த தத்துவார்த்தப் போராட்டத்தை அரசியல் தளத்தில் நிகழ்த்த வேண்டும். இது குறித்து கிராம்சி மேலும் கூறும்போது,

“கருத்தியல் ஒப்புதல் என்பது மக்களுடனான ஓர் ஐக்கிய உறவு. இத்தகைய கருத்தியல் ஒப்புதலை பெற படைபலத்தைக் கொண்டோ, அடக்குமுறை மூலமோ அடைய முடியாது. அதே சமயம் அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியான தலைமையின் மூலமே இக்கருத்தொற்றுமையை உருவாக்கிட முடியும். கட்சி ஸ்தாபனத்தின் கருத்தொற்றுமையின் மூலமே இதனை அடைய முடியும் என்று தெளிவாக எடுத்துரைக்கிறார்.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மேலிருந்து கட்டப்படும் கட்சி என்ற முறையில் கட்சித் தலைமையிலான அரசியல் மற்றும் தத்துவார்த்த ஒற்றுமை மிக, மிக அவசியமானது. இவ்வாறு ஒன்றுபட்ட கருத்தினை கட்சி முழுவதும் காலதாமதமின்றி துரிதமாக எடுத்துச் செல்லும்போதுதான் இக்கருத்துக்கள் கட்சி அணிகளிடமும் – பொது மக்களிடமும் ஒரு பௌதிக சக்தியாக மாறும்.

ரஷ்ய அனுபவத்தை இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார் கிராம்சி:

ஜாரிசத்தை தூக்கி எறிவதற்கு ரஷ்ய தொழிலாளி வர்க்கம் அங்குள்ள விவசாய வர்க்கத்துடன் வலுவான கூட்டணி அமைத்துக் கொண்டது. அதேபோல் மைனாரிட்டி தொழிலாளி வர்க்கம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் ஆதரவை பெற்றது.

ஹெஜ்மணி குறித்து லெனின் கூறும்போது, “புரட்சிக்கான போராட்டமே ஹெஜ்மணி” என்று ரத்தினச் சுருக்கமாக கூறுகிறார்.

நாம் நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா போன்ற போராட்ட வடிவங்களுக்கு பெரும்பான்மையான மக்களை எவ்வாறு திரட்டுவது, அவர்களை கருத்தியல் ரீதியாக ஒப்புதலை பெற வைத்து தத்துவார்த்த – அரசியல் கல்வியைப் புகட்டுவதில் தலைமை தாங்கும் தொழிலாளி வர்க்கம் கவனமாக இருக்க வேண்டும்.

இதைத்தான் கிராம்சி, தொழிலாளி வர்க்கத் தலைமை அதிகப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலை பெறுவதற்கான திட்டத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்.

கருத்தியல் ஒப்புதலை பெற வேண்டிய தொழிலாளி வர்க்கம், இதர வர்க்கங்களின் (விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு முதலாளிகள், வாலிபர்கள், மாணவர்கள், மாதர்கள்…) ஒப்புதலை பெறுவதற்கு அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம்தான் பெற முடியும். மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் நமது கட்சி அரசியல் தளத்தில் அன்றாட அரசியலை மட்டும் மேற்கொள்ளாமல் – தத்துவார்த்த ரீதியான செயல்பாட்டுடன் அவர்களை ஒன்றிணைத்திட வேண்டும். தத்துவார்த்தப் போராட்டத்தின் அடிப்படைகளில் முக்கியமான மார்க்சிய – லெனினியக் கல்வியை அளிப்பதும், சுய கல்வியின் மூலம் அவர்களை பயிற்றுவிப்பதும் அடிப்படையான கடமைகளில் ஒன்று. தொழிலாளி வர்க்கம் ஒன்றால் மட்டுமே இத்தகைய கருத்தியல் ஒப்புதலை (ஹெஜ்மணியை) பெற முடியும். இந்த வர்க்கத்திற்கு மட்டுமே அதற்கான ஊக்க சக்தியுண்டு.

கிராம்சியின் அடுத்த முக்கியமான கருத்துக்களில் ஒன்று “நேஷனல் பாப்புலர்”

தொழிலாளி வர்க்கக் கட்சி தொடர்ச்சியாக மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய பாப்புலர் மற்றும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு நடத்தக்கூடிய போராட்டங்கள் வர்க்கக் கோரிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இத்தகைய போராட்டங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, பெண்களுக்கான இயக்கங்கள், அமைதிக்கான இயக்கங்கள், சிறுபான்மை மக்களுக்கான இயக்கங்கள், தலித்துக்களுக்கான இயக்கங்கள், மாணவர் மற்றும் வாலிபர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தக்கூடிய போராட்டங்கள் பெரும் பகுதி மக்களை ஆகர்ஷிக்கக்கூடியதாக இருக்கும். இத்தகைய போராட்டங்களே “விரிவான தளத்தை” கட்டுவதற்கான அடிப்படைகளாகும் என கிராம்சி சுட்டிக் காட்டுகிறார்.

வார் ஆப் பொஷிஷன் (நீடித்த போர்)

இத்தாலியில் பாசிச அபாயத்தை எதிர்கொண்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியும், கிராம்சியும் அதனை எதிர்த்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பதை நடைமுறை ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் எதிர் கொண்டனர். அந்த அனுபவத்தை தனது சிறைக் குறிப்புகளில் பதிவு செய்கிறார். அதாவது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – சங்பரிவாரத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்திலும், கட்டாயத்திலும் உள்ளோம். பாபர் மசூதி இடிப்பு, மோடியின் பாசிச செயல்பாடுகள், ஒரிசாவில் சிறுபான்மை கிறித்துவர்கள் மீது தாக்குதல் என இவற்றை எல்லாம் எதிர் கொண்ட நாம், அவ்வப்போது எதிர் கொள்ளும் சம்பவங்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு  நிறுத்திக் கொள்ளாமல் சங்பரிவார பாசிச கொள்கைக்கு எதிராக தத்துவார்த்த ரீதியாக அதனை முறியடிப்பதற்கு நீடித்த,  நிலைத்த,  திட்டமிட்டப் போரை நடத்த வேண்டும். இதைத்தான் கிராம்சி அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

வார் ஆப் மூவ்மெண்ட் (எதிர்த் தாக்குதல் நடத்துவது)

ஒரு புரட்சிகர இயக்கம் பல்வேறு நேரங்களில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். அவ்வாறான தருணங்களில் எதிரிகள் பலமிழந்து இருக்கையில் நாம் துரித கதியில் இயங்கி அவர்களை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.  நாம் முன்னேறித் தாக்கும் கலையில் சிறந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதனையே கிராம்சி வார் ஆப் மூவ்மெண்ட் என்று அழைக்கிறார்.

பாசிவ் ரிவலுசன் (உயிர்ப்பற்ற புரட்சி)

உயிர்ப்பற்ற புரட்சி குறித்து தனது சிறைக் குறிப்புகளில் ஏராளமாக எழுதி வைத்துள்ளார். ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் புரட்சி உயிர்ப்புடன் இருக்க வேண்டுமே தவிர, உயிர்ப்பற்றதாக இருக்கக் கூடாது. இதற்கு இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போரில் காந்தியின் பங்கை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். காந்தியின் தலைமையிலான போராட்டத்தை உயிர்ப்பற்ற புரட்சி என்று கூட அழைக்கவில்லை. அதனை உயிர்ப்பற்ற எதிர்ப்பு என்றே வர்ணிக்கிறார். ஆனால் அதே சமகாலத்தில் கம்யூனிஸ்ட் டுகள்தான் தேசத்திற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விடுதலைப் போராட்டத்தை வேகப்படுத்தினர். மறுபுறம் பகத்சிங் குழுவினர் தங்களது புரட்சிகர நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொண்டிருந்தனர். துரதிருஷ்டம் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் தங்களது அதிகாரத்தை இந்திய பூர்ஷ்வாக்களின் கைகளுக்கு மாற்றிக் கொடுத்தது.

ஆண்டி பாசிவ் ரிவலுசன் (உயிர்ப்புள்ள புரட்சி)

ஒரு புரட்சிகர கட்சி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், மக்கள் பிரச்சனைகளில் அவர்களை கவர்ந்திழுக்கும் பாப்புலர் ஜனநாயக கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும். இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை வலுவாக முன்னெடுத்துச் செல்ல இடதுசாரி – ஜனநாயக இயக்கங்களுடன் கூட்டு இயக்கங்கள் நடத்துகிற அதே சமயம், நமது சொந்த மேடையில் இப்போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

காமன் சென்ஸ் – குட் சென்ஸ்

ஒடுக்கப்பட்ட அடித்தட்டு வர்க்க மக்கள் எப்போதும் ஹெஜிமோனிக் வகுப்பாக இருப்பார்கள். இத்தகைய மக்களின் ஆதரவைப் பெறுவதோடு, இதர சமூகக் குழுக்களின் ஆதரவையும் பெற வேண்டும்.

ஒரு புரட்சிகர கட்சி (பிரின்ஸ் அண்டு மாடர்ன் பிரின்ஸ்)

பிரின்ஸ் : இத்தாலியில் மன்னர் ஆட்சி நடைபெற்றபோது மாக்கியவல்லி மன்னர் ஆட்சியை புகழ்ந்து எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்று பிரின்ஸ் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இது முழுக்க முழுக்க மன்னர் ஆட்சியை நிலைபெறச் செய்யவேண்டிய கருத்துக்களை கொண்டது.

ஆனால் கிராம்சியோ இதனை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டு “மார்டர்ன் பிரின்ஸ்” என்ற தலைப்பில் எழுதினார். இதில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இத்தாலிய மக்களை கருத்தியல் ஒப்புதலுடன் திரட்டுவது. இது வலுவான கூட்டுச் செயல்பாட்டின் மூலமே நிகழும். அரசியல் என்பது கலையும் – அறிவியலும் இணைந்தது. குறிப்பாக இத்தளத்தில் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்தை வலுவாக நடத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதே சமயத்தில் தேசத்தின் கலாச்சார – பாரம்பரியங்களையும் முன்னெடுக்க வேண்டும்.  இக்கலாச்சாரத்தில் உள்ள பழமைவாத அம்சங்களை ஒதுக்கிவிட்டு முற்போக்கு அம்சங்களை கைக்கொள்ள வேண்டும்.

அறிவாளிகள்

“அனைத்து மனிதர்களும் அறிவாளிகளே. அவரவருக்கான விஷயத்தில் அவர்கள் அறிவாளிகளே. ஆனால் அனைத்து அறிவாளிகளும் சமூக செயல்பாட்டைக் கொண்ட அறிவாளிகள் அல்ல” என்று கிராம்சி விளக்குகிறார். ஆனால் ஒரு புரட்சிகர கட்சிக்கு பேராசிரியர்களும், விஞ்ஞானிகளும் தேவையில்லை. ஆனால் கட்சிக்குள் வரும் தொழிலாளி களையும், விவசாயிகளையும் பேராசிரியர் அளவிற்கு அவர்களது தத்துவார்த்த – அரசியல் ஞானத்தை உயர்த்திட ஒரு புரட்சிகர கட்சி அவர்களுக்கு கல்வி புகட்டிட வேண்டும் என்று கிராம்சி வலியுறுத்துகிறார்.

அறிவாளிகளில் இரண்டு வகையினர் உள்ளனர் : 1. பாரம்பரிய அறிவாளிகள் – பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள்… 2. ஒரு குறிப்பிட்ட அடிப்படையான வர்க்கத்தை அமைப்பு ரீதியாக திரட்டுபவர்கள். என்று இரு வகையாகப் பிரிக்கிறார் கிராம்சி. ஒரு அறிவாளிக்கு அடிப்படையானது ஜனநாயக குணநலன்களே. அதே போல் வர்க்க அடிப்படையில் திரட்டும் குணநலன்களை கொண்டவர்கள் அறிவாளிகள் என்று கூடுதலாக வலியுறுத்துகிறார்.

அதேபோல் ஒவ்வொரு புரட்சிகர வர்க்கமும் அவ்வர்க்கத்திற்கான சொந்த அறிவாளிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனைத்தான் கிராம்சி ஆர்கானிக் இன்டலக்சுவல் என்று அழைக்கிறார்.

அந்தோணியா கிராம்சியின் ஒரு சில சிந்தனைகளே இங்கே பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. மேலும் அவரது சிந்தனை கீற்றுகள் வெளிக் கொண்டு வரவேண்டியுள்ளது. இவை அனைத்தும் நம்மைப்போன்ற புரட்சிகர கட்சி அணிகள் சுயமாகவும் படித்தறிந்து கொள்வது மிகச் சிறப்பானதாக அமையும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: