மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சொல்லில் மட்டுமே சோசலிசம்


இந்தியப் பொருளாதாரம் ஒரு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே; முதலாளித்துவ அமைப்புக்கு முந்தைய உற்பத்தி உறவுகளும் இதில் செயலாற்றுகின்றன. ஆனால் சோசலிசத்தின் வாசனை துளி கூட இதில் இல்லை.  தி ஹிந்து புகைப்பட நூலகம் ஜனவரி 19, 1955 ஆவடியில்: சி.ராஜகோபாலச்சாரி, காங்கிரஸ் கட்சியின் 60 வது ஆண்டு மாநாட்டில் பொருள் விவாதக் குழுவில் உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில்தான் முக்கிய உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூக உடைமையாகவோ, அல்லது கட்டுப்பாட்டிலோ உள்ள சோசலிச பாணி சமுதாயத்தை அமைப்பதே தனது இலட்சியம் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.  சோசலிஸ்ட்என்ற பதம் நமது குடியரசை வரையறை செய்யும் கூடுதல் வார்த்தையாக இந்திய அரசியல் சட்டத்தில் புகழ்(!) பெற்ற எமெர்ஜென்ஸி காலத்தில் சேர்க்கப்பட்டது. இது ஜனவரி 3,1977 அன்று சர்ச்சைக்குரிய 42 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அமலுக்கு வந்தது. சோசலிஸ்ட் என்ற வார்த்தையும், அதிலிருந்து சற்றே மாறுபட்ட சோசலிஸ்டிக் என்ற வார்த்தையும் விடுதலைப் போராட்ட காலங்களிலிருந்தே இந்தியாவில் அதிகமாகப் புழக்கத்தில் இருந்த வார்த்தை களாகும்,. நாடு விடுதலை அடைந்தவுடன், இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை துவங்கியது; தொழில் துறையிலும் பெரும் முதலீடுகளை செய்தது; பொதுத் துறைகள் மூலம் கட்டமைப் புகளை உருவாக்கியது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சோசலிச பாணி சமுதாயத்தை உருவாக்குவது என்ற தனது உறுதிப்பாடான கொள்கையையும் அறிவித்தது. பொதுத் துறையை உருவாக்கியதும், ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்தியதும் சோசலிசத்தின் கூறுகளாக கணிக்கப்பட்டன. பொது அரங்குகளிலும் விவாதங்களிலும் பலர் இவற்றை சோசலிசத்தை உருவாக்கும் முயற்சிகளாகவே சித்தரித்தனர். இதில் இடது சாரி அரசியலைப் பின்பற்றுபவர்களில் சிலரும் அடங்குவர். ஆனால் மேற்கூறிய முயற்சிகளுக்கும் உண்மையான சோசலிசத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. இந்தியா விடுதலை அடைந்து வளர்ச்சிப் பாதையில் செல்லத் துவங்கிய போது உலகச் சூழ்நிலைகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்டன. முதலாவது வழக்கமான ஏகாதிபத்திய சக்திகளாகக் கருதப்பட்ட  போரில் வென்ற பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளாயினும் சரி, போரில் தோற்ற ஜெர்மனி மற்றும் இத்தாலியாயினும் சரி, மிகவும் பலவீனமடந்த நாடுகளாயின. இதனால் முதலாளித்துவ உலகின் தலைமைப் பீடம் அமெரிக்காவை சென்றடைந்தது. இரண்டாவதாக, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், சீனா, வட வியட்னாம், வட கொரியா போன்ற நாடுகளும் சோசலிச அமைப்பு முறையை தேர்ந்தெடுத்தன; இதனால் உலக அளவில் சோசலிச முகாமுக்கு மேலும் வலு சேர்ந்தது. மூன்றாவதாக மேற்கண்ட நிகழ்வுகளால் பல்வேறு நாடுகளில் ஏகாதிபத் தியத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்ததன் காரணமாக , அந்நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற வழி ஏற்பட்டது.; காலனி ஆட்சி முறைகளுக்கு முடிவு ஏற்பட்டது. நமது நாட்டுச் சூழ்நிலை, குறிப்பாக 1945-1950 காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் மற்றும் விவசாய இயக்கங்களின் தீவிரமான போராட்டங்களின் காலமாக இருந்தது. இவற்றில் முக்கியமானவை இன்றைய மஹாராஷட்ராவின் வார்லி பகுதியில் பருலேக்கர்,கோதாவரி, ஷாம்ராவ் போன்ற புகழ் மிக்க தலைவர்களால் தலைமை தாங்கி நடத்தி செல்லப்பட்ட பழங்குடி மக்களின் நிலப் போராட்டம்; வங்கத்தில் குத்தகைதாரர்கள் விளைச்சலில் அதிக பங்கு கேட்டு போராடிய தெபாகா இயக்கம்; விவசாயத் தொழிலாளர்களும், வறிய விவசாயிகளும் அன்றைய மதராஸ் மாகாணத்தில் (பெரும்பான் மையாக இன்றைய கேரளப் பகுதியிலும், ஒரளவு இன்றைய தமிழ் நாட்டின் கீழைத் தஞ்சைப் பகுதியிலும்) நடத்திய கிளர்ச்சிப் போராட்டங்கள்; இன்றைய ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் ஆயுதமேந்தி விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் என்று போராட்டங்கள் நிறைந்த களமாக நமது நாடு விளங்கியது.  கேரள மண்ணில் புன்னப்புரா-வயலார் போராட் டங்கள் பல போராளிகளின் உயிர்த் தியாகத்தால் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றன. இவைகள் கிராமப்புறப் போராட்டங்களின் சான்றுகளாக விளங்கின. இவை மட்டுமின்றி, பீகார், அஸ்ஸாம்,பஞ்சாப் போன்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. ரயில்வே மற்றும் மத்திய அரசு தொழிலாளர் களின் வேலைநிறுத்தங்கள் நகர்ப்புற தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட குணத்திற்கு சான்றுகளாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தியக் கப்பற்படை எழுச்சியும் இப்போராட்ட அலையின் ஒரு அம்சமே. சாதகமான சர்வதேச சூழ்நிலையும்,கனன்று கொண்டிருந்த நாட்டு சூழ்நிலையும் தன்னிச்சையான ஒரு வளர்ச்சிப் போக்கு நாட்டில் உருவாவதை அவசியமானதாகவும் இயல்பான ஒன்றாகவும் ஆக்கின உள்நாட்டு வணிக வர்க்கத்தின் வளர்ச்சியும் ஒரளவே இருந்தது; இதனால் அரசு, வெறும் ஒழுங்குமுறை நெறியாளராக மட்டுமல்லாமல் வளர்ச்சிப் போக்கில் பங்கேற்று ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டியிருந்தது. வளர்ச்சிக்காக திட்டமிடுதல் நாட்டு வளர்ச்சி மற்றும் நாட்டு வளர்ச்சிக்கான பொது முதலீடுகளுக்காக பொருளாதாரத் திட்டமிடுதல் குறித்த சிந்தனை ஒரு நாடு தழுவிய பொதுக் கருத்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. எனினும் இந்தக் கருத்தோட்டத்தில் எதற்கு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி-தொழில் துறைக்கா? அல்லது விவசாயத்திற்கா?-பெரு அளவில் உற்பத்தி செய்யும் நவீன முறை உற்பத்தி முறைக்கா? அல்லது சிறு மற்றும் குடிசைத் தொழிலுக்கா? என்பது போன்ற வேறுபட்ட கருத்துக்களும் இந்த கருத்தோட்டத்தில் அடங்கும். 1935 இந்திய அரசு சட்டத்தின்படி 1937ல் நடந்த மாகாணத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி ஜவஹர்லால் நேருவின் தலைமையில் தேசியத் திட்டக் குழு ஒன்றை நிறுவியது. தேசிய பொருளாதார திட்டமிடுதலுக்கு அக்காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது. உற்பத்தி சாதனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு மையப்படுத்தப் பட்ட திட்டமிடுதலின் மூலம் சோவியத் சோசலிச ஒன்றியங்கள் தொழில்மயமாதலில் அடைந்த வெற்றிகள் இங்கு நினைவு கூறத்தக்கவை.. இல்லாத போல்ஷிவிக் அபாயத்தைக் கண்டு அஞ்சி அதைத் தடுத்து நிற்கும் சுவராக ஜெர்மனியை உருவகித்து அந்நாட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலாளித்துவ நாடுகள் ஆதரவு கொடுத்தன; மேலும் சோவியத் நாட்டின் வளர்ச்சியை முடக்கும் வகையில் அந்நாட்டுக்கு தொழில்நுட்ப, வர்த்தக உதவிகள் கிடைக்காவண்ணம் பார்த்துக்கொண்டன. மொத்தத்தில் இந்நாடுகள் சோவியத் நாட்டுடன் நட்பு பாராட்டாத நிலையையே மேற்கொண்டன. இச்சூழ்நிலையிலும் சோவியத் நாடு அத்தகைய வளர்ச்சி பெற்றது என்பதை நினைவு கூற வேண்டும். இவ்வாறு சோவியத் நாடு அடைந்த வளர்ச்சி நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத் தலைவர்களையும் தொழிலதிபர்களையும், ஒருங்கே கவர்ந்திழுத்தது. சோவியத் பாணி வளர்ச்சிப்பாதையில் உள்ள சமூக ரீதியான விலைகள் அல்லது விளைவுகள் குறித்து அவர்களுக்கு பல தயக்கங்கள் இருந்த போதிலும் அந்நாட்டின் வளர்ச்சி அவர்களை ஈர்க்கத் தவறவில்லை.  ஆகவே, விடுதலை பெற்றவுடன் தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலையும், பொருளாதார வளர்ச்சியில் அரசின் முக்கியப் பங்கேற்பையும் உள்ளடக்கியதாக நாட்டில் ஒருமித்த பொதுக் கருத்து நிலவியது. இச்சூழ்நிலையில், விடுதலைபெற்ற அடுத்த பத்தாண்டுகளில், நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பொது முதலீடுகளுக்கு ஆதரவான, இறக்குமதியைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவான கொள்கைகளை அரசு நடைமுறைப்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை. இவைகளில் அரசியல் வார்த்தை ஜாலங்கள் இருந்த போதிலும், இவற்றிற்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போதிலும், உண்மையில் இந்த நடவடிக்கைகள் வளர்ச்சிப்போக்கு மனப்பான்மையைக் கொண்ட அரசு ஆற்றும் தலையாயப் பங்கின் துணையுடன், நாடு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் செல்ல ஏதுவான அரசியல் உத்தியாகவே அமைந்தன. உண்மையில் அடிமை ஆட்சிக்காலத்தில் நிலவிய தேக்க நிலையை ஒப்பிடுங்கால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியும், ஓரளவு நவீன மயமாக்கமும் ஏற்பட்டது. 1950-1980 காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூட்டு வளர்ச்சி விகிதம் 3லிருந்து 3.5 சதவீதமாக இருந்தது. விவசாய வளர்ச்சி விகிதமும் இதே அளவில் இருந்தது. குறிப்பாக உணவு தானிய உற்பத்தி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருந்தது; இதனால் உணவு தானியம் ஒரு தனிநபருக்கு கிடைக்கும் அளவு அதிகரித்தது. எனினும் இந்த வளர்ச்சிப் போக்குகள் சோசலிச அமைப்பை உருவாக்குபவையாக இல்லை என்பதே உண்மையாகும். இந்திய முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத் துவத்துடன் செய்து கொண்ட பெரும் சமரசப் போக்கினால், இந்திய அரசு, நிலச் சீர்திருத்ததங்களை அமல்படுத்துவதிலும், ஏகபோக நிலவுடைமைகளை உடைத்தெறிவதிலும் அதிகமான மெத்தனப் போக்கை மிகக் கவனமாகக் கையாண்டது. ஓரளவிற்கு ஜமீன்தாரி முறையும், பினாமி நிலவுடைமையும் ஒழிக்கப்பட்டன; இதே போன்று வரம்பிற்குட்பட்ட அளவில் குத்தகைதாரர் சீர்திருத்தங்களும் செய்யப்பட்டன. இருந்த போதிலும், கிராமப் புறங்களில் உற்பத்திச் செல்வங்களின் விநியோக மற்றும் பகிர்வுக் கட்டமைப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் எந்த மாற்றமுமின்றி அப்படியே இருந்தன. யுக்தியில் மாற்றம் 1960களின் நடுவில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக தொழில்நுட்ப அம்சங்கள் சார்ந்த புதிய விவசாய செயல்முறைகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டது. நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன; விவசாய உற்பத்தி அதிகரித்த நிலையிலும், கிராமப் புற செல்வங்களில் இருந்த ஏற்றத் தாழ்வுகள், இன்னும் அதிகமாயின. கிராமப் புறங்களில் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகியது. ஒரு புறம் சிறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை பெருகியது; அதே சமயம் மறுபுறம் உற்பத்திக்கேதுவான செல்வங்கள் ஒரு சிலர் கையில் குவிந்தன. நகர்ப்புற ஏற்றத் தாழ்வுகளின் கதையோ மாறுபட்டது. பொருளாதாரக் கொள்கையின் முக்கிய இலக்கு, அரசே தேவையான கட்டமைப்பு மற்றும் ஆதாரச் செல்வங்களை வழங்குதலை உறுதி செய்யும் போதே தனியார் முதலின் லாப வேட்டையை அடிப்படையாகக் கொண்ட தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாக இருந்தது. இவ்வாறு, அரசு உள்நாட்டு தொழில் துறைக்கு, வெளிநாட்டுத் தொழில் களிடமிருந்து எழும் போட்டிகளிலிருந்து தேவையான பாதுகாப்பை அளித்தது. இது 1990இல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் வரை தொடர்ந்தது. தேவையான தொழில், நிதி, மற்றும் மனிதவள கட்டமைப்புகளை அரசு உருவாக்கியது .இவற்றிற்குத் தேவையான நிதி ஆதாரங் களை மறைமுக வரி விதிப்புகள் மூலம் அரசு திரட்டியது. அதே சமயம் தொழில் முதலீட்டை ஊக்குவிப்பது என்ற பெயரில் பணக்காரர்களுக்கு பல்வேறு வகையில் வரிச் சலுகைகளையும் வாரி வழங்கியது. 1960களின் பிற்பகுதிகளில் பொது முதலீடு களுக்கான ஆதாரங்களைத் திரட்டுவது என்பது எளிதான காரியமாக இல்லை; ஏனெனில் கிராமப்புற, நகர்ப்புற செல்வந் தர்களை வரி விதிப்பதற்கு, அரசியல் ரீதியான மன உறுதியும், உள்ளக் கிடக்கையும் அரசிடம் காணப்படவில்லை. முழுமை யான அளவில் நிலச்சீர்திருத்தங்களை அமலாக்காததால் அடையக்கூடிய வளர்ச்சியை விவசாயம் எட்டவில்லை; கிராமப்புறங்களிலும் மாற்றங்கள் ஏற்பட வழியின்றி போயிற்று. இந்தியப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கில் 1980க்குப் பிறகு இன்னும் வேகமான வளர்ச்சி பெற்றது. வருடாந்திர வளர்ச்சி 1980இன் முதல் பாதியில் 5 சதவீதமாகவும், பின் பாதியில் 6 சதவீதமாகவும் இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டிலும் 21 வது நூற்றாண்டின் ஆரம்பத்திலும் சராசரியாக 6 சதவிகிதமாக வருடாந்தர கூட்டுவளர்ச்சி விகிதம் இருந்தது. ஆனால் இவ்வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கோ, உணவு,உடை, உறைவிடம்,கல்வி, நல்வாழ்வு போன்றஅடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கோ எந்த வகையிலும் உதவ வில்லை. 1980இன் ஆரம்பங்களில் துவங்கி 1991லிருந்து மிக விரைவாக பொருளதாரக் கொள்கைகள் நவீன தாராளமயத் திசையில் செல்ல ஆரம்பித்தன. இதன் விளைவாக அரசின் பங்கு குறைக்கப்பட்டு தனியார் முதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கொள்கைகள் உருவாயின. அரசின் கடமையாகக் கருதப்பட்ட கொஞ்ச நஞ்ச நல்வாழ்வுத் திட்டங்களும் கைவிடப்பட்டன. அரசியலில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளும் நிறம் மாறத் துவங்கின. ஏகபோக மற்றும் சட்டத்தாலும் முக்கிய வணிக வங்கிகள் 1969இல் நாட்டுடைமை யாக்கப்பட்டதாலும் பணமும், அதிகாரமும் ஒரு சிலர் கையில் குவிவதை தடுக்கும் போக்கு இந்நாட்டில் நிலவியதை நாம் உணர முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக தனியார் லாப வேட்டையையும் அதன் மூலம் பெறும் அதிகாரத்தையும் கொண்டாடும் போக்கு நாட்டில் தலைதூக்கியது. பல்வேறு வரி மற்றும் இதர சலுகைகளை அளித்து தனியார் முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி பெறுவதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் நடமாடத் துவங்கின.உலகமயமாக்கல் மற்றும் தாராளமய மாக்கல் கொள்கைகளுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்கப் பட்டன. . வெளிநாட்டு முதல் கடந்த இருபது ஆண்டுகளில் நில உடைமை அளவுகளை கட்டுப்படுத்தி ஒரு சிலர் கையில் நிலம் குவிவதை தடுக்கும் வகையில் செய்யப்பட்ட நிலச் சீர்திருத்தங் களும் திருத்தி அமைக்கப்பட்டன. இதனால் விவசாயத்தில் பெரு நிறுவன முறை ஏற்பட ஏதுவாயிற்று. நீண்ட கால அளவில் முதலீடு செய்து உற்பத்தி மற்றும் தயாரிப்புத் துறைகளில் லாபம் ஈட்டுவதற்குப் பதிலாக பங்குச் சந்தை மூலம் அதிவிரைவு லாபம் ஈட்ட முனையும் வெளிநாட்டு முதலீடுகளின் செல்வாக்கு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் ஓங்கியது. நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை விட வெளி நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவே கொள்கைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. சோசலிச இந்தியாவை உருவாக்குவது என்று உறுதியாக கூறப்பட்ட இலக்குக்கு எதிர் மறையாகவே, தற்போது நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துதல், தனியார்மயம், உலகமயம் சார்ந்த கொள்கைகள் செயல்படுகின்றன. ஆனால் முக்கியமாக அழுத்தம் திருத்தமாக கூறப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் 1950லிருந்து 1970 வரை, தாராளமயத்திற்கு முந்தைய காலகட்டத்தில், அமலிலிருந்த வளர்ச்சிக்கான உத்திகள் நம் நாட்டில் ஒரு நவீன முதலாளித்துவ, பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு பயன்பட்டதே தவிர சோசலிசத்தை அல்ல என்பதே. ஒரு சில ஊடகங்களிலும் கல்விப்புலங்களிலும் முனைப்புடன் பரவலாக, ஒர் மாயையை பரப்பியுள்ளனர். அது 1991க்கு முன் நாட்டில் சோசலிசக் கொள்கைகள் பின்பற்றப்பட்டன; அதற்குப் பின் முதலாளித்துவக் கொள்கைகள் அமலுக்கு வந்தன என்பதே. 1991 க்குப் பின் நடைமுறைக்கு வந்த கொள்கைகளை சந்தையுடன் நேசமான கொள்கைகள் என்று சாயம் பூசுகின்றனர். இக் கொள்கைகளின் அடிப்படை தவறே இவ்வாறு சந்தைக்கு நேசமாக இருப்பதுதான். எனவே விடுதலை அடைந்ததிலிருந்து இந்தியாவில் உருவாகி வந்த பொருளாதாரக் கொள்கைகளை இந்த அடிப்படையில் அணுகுவது நியாயமான செயல் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயமாகும். நாட்டில் பெரும் பொதுத் துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. அரசாங்கம் பல்வேறு திட்டங்களுக்காக செலவினங்களை மேற்கொள்ளுகிறது. பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறது.  இவற்றால் அரசுப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இருந்த போதும் இந்தியப் பொருளா தாரத்தை முதலாளித்துவப் பொருளாதாரம் என்றே வகைப்படுத்த முடியும். இதில் குறிப்பாக விவசாயப் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவுகளும் காணக் கிடைக்கின்றன. ஆனால் எந்த விதமான சோசலிசத்தின் வாசனையும் மருந்துக்குக் கூட கிடையாது. 1970களின் முடிவிலிருந்து உலகப் பொருளாதார அமைப்பிலும், அரசியல் அமைப்பிலும் அடுக்கடுக்கான மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக பன்னாட்டு நிதி மூலதனத்தின் எழுச்சி ஏற்பட்டது; சோவியத் ரஷ்யாவும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் நொறுங்கி விழுந்தன. இம்மாற்றங்கள் பொருளாதாரக் கொள்கைகளை நவீன தாராளமயத்திற்கு இட்டுச் சென்றன. அதே சமயம் முழுமையான நிலச் சீர்திருத்தம் இன்றி முதலாளித்துவ நவீன பாதையில் செல்வது தன்னிச்சையான வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்ற வாதத்தையே இம்மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் விளைவு நாம் இந்தியாவில் காணும் நிலைதான். அதாவது சோசலிசம் என்பது அரசியல் சட்டத்தில் மட்டுமே உள்ள ஒன்றாகவும், நவீன தாராளமய முதலாளித்துவம் மட்டுமே நடப்பாகவும் காண்கிறோம். அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வஞ்சிக்கப் பட்டுள்ளனர்; வேலையின்மையும், திறமைக்கும் கீழான வேலை வாய்ப்புகளும் நிலவுகின்றன. பொருளாதாரத்தின் உற்பத்திக் கணக்கில் கால் பங்குக்கே அரசு பொறுப்பேற்கின்றது; முக்கியமான உற்பத்திச் செல்வங்கள் தனியார் கையிலேயே உள்ளது.ஆகவே இதை சோசலிசப் பொருளாதாரம் என்றோ சோசலிச சமூகம் என்றோ கூறுவது இயலாத காரியம். சொத்துகளின் பகிர்விலும், வருமானங்களின் பகிர்விலும் அதீதமான மற்றும் அமோகமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப் படுவதுடன் வறுமையிலும் உழல்கின்றனர். இவை அனைத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள சோசலிஸ்ட் என்ற வார்த்தை கனவாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது.  உள்நாட்டு வெளிநாட்டு மூலதனங்களின் ஆதிக்கம் தொடரும் வரை இக்கனவு நிறைவேறாது. வெறும் கனவாகவே அது தொடரும்.

தமிழில்: அபராஜிதன்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: