மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


லெனினது எழுத்துக்களை கற்போம் லெனினிசத்தை வளர்ப்போம்


மாஸ்கோவில் உள்ள லெனின் மசோலியத்தில் இருக்கும் லெனினது உடல் உளுத்து வருகிறது எனவே புதைக்க வேண்டுமென்ற சர்ச்சையை ரஷ்ய பூர்சுவா நாடாளுமன்ற ஜனநாயகத்தை (டூமாவாதிகள்) வாழ வைக்கத் துடிக்கும் மேதாவிகளும், இன்றும் கம்யூனிசத்தைப் பூதமாக சித்தரிக்கும் மேலை நாட்டு பூர்சுவா சித்தாந்தவாதிகளும் சமீபகாலமாக ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் எழுதியும், பேசியும் வருவதை காண்கிறோம். அவர்களது மூளையில் ஏறுகிற மாதிரி ஒன்றை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

அந்த உடலை பாதுகாப்பதால் தானாக லெனினிசம் வளரும் என்ற மூடநம்பிக்கை மார்க்சிஸ்ட்டுகளுக்கு கிடையாது. அந்த உடலை புதைப்பதன் மூலம் லெனினிசம் மறைந்து உளுத்து வரும் முதலாளித்துவ சமூக ஏற்பாட்டை நிரந்தரமாக்கலாம் என்று நீங்களும் மனப்பால் குடிக்காதீர்கள்! அந்த ஆசை நிறைவேறாது.

ஒரு விஞ்ஞானம் தோன்றியது

ஏன் எனில் மார்க்சிசம் லெனினிசம் தோன்றியதே முதலாளித்துவம் உருவாக்கிவரும் நெருக்கடிகளால்தான் என்பதை மறந்து விடாதீர்கள். மார்க்ஸ் வாழ்ந்த காலத்திய முதலாளித்துவம், லெனின் காலத்திய முதலாளித்துவம், இன்றைய முதலாளித்துவம் இவைகளுக்குள் வேறுபாடுகள் பல உள்ளன. ஆனால் இவைகளின் பொதுவான அம்சம் நெருக்கடிகளை உலகளவில் உருவாக்குவது ஆகும். மார்க்ஸ் காலத்தில் காலனிகளைப் பிடிக்க, லெனின் காலத்தில் அவைகளை பங்குபோட, இன்று பணத்தை பெருக்கவே நெருக்கடிகள் உலகளவில் உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது.

எப்பொழுதெல்லாம் சமூக முரண்பாடுகள் முற்றி பழையத் தீர்வுகள் பயன்படாமல் போய் நெருக்கடியில் மக்கள் தவிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் புதிய தீர்வை பல ரகமான சித்தாந்தப் பார்வைக்கு பலியாகி பிளவுபட்டு பல தோல்விகளை சந்தித்து சிரமப்படும் நவீன பாட்டாளி வர்க்கம் விழிப்புற்று உருவாக்குகிற நடைமுறைகளால் வரலாற்று ரீதியாக வளரும் அரசியல் சமூக விஞ்ஞானமே லெனினிசமாகும், இதே நோக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்சிசத்தின் தொடர்ச்சி ஆகும்.

கம்யூனிஸ்ட்களின் நடைமுறைகளும், முதலாளித்துவ சவடாலும்

அந்தந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் செய்கிற, சிறிய, பெரிய தவறுகளை மட்டும் தொகுத்து பெரிதாக சித்தரித்து மார்க்சிசம் லெனினிசம் நடைமுறக்கு உதவாது என்று மறுக்கும் இன்றைய மேதாவிகளிடம் சில கேள்விகள் கேட்கிறோம்!! முதலாளித்துவம் சிறப்பாக இருக்கும் நாடுகளின் இன்றைய நிலவரமென்ன? நீங்கள் கூறக்கூடிய “சுதந்திரம்”, “சமத்துவம்”, முன்னேறிய தொழில் நுட்பம் இன்னும் எல்லாம் இருந்தும் ஏன் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகளின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கின்றன?, உலகளவில் அந்த நெருக்கடி தொத்துகிறதே ஏன்? ஏன் அமெரிக்க அரசு பெரும் திரளாக மக்களைக் கொல்லும் ஆயுதங்களை செய்து குவிக்க வேண்டும்? பணக்கார நாடுகளின் ராணுவம் வலுவிழந்து கிடக்கும் ரஷ்யாவைச் சுற்றி ஏவுகனை தளங்கள் ஏன் அமைக்க வேண்டும்? இன்னொரு நாட்டிற்குள் படைகளை அனுப்பி மக்களை ஏன் கொல்ல வேண்டும்? இன்னொரு நாட்டில் சிறைச்சாலை வைத்து கைதிகளை ஏன் சித்தரவதை செய்ய வேண்டும்?

இன்றைய தேதியில் அமெரிக்கா நினைத்தால் உலகில் வறுமை, அறியாமை இவ்விரண்டும் இல்லாமல் செய்துவிட முடியும், அந்த அளவிற்கு பொருள் உற்பத்தித் திறன் அதனிடம் உண்டு. அவ்வாறு உதவுவதால் அமெரிக்கா இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால் நீங்கள் காண்பதென்ன?

அமெரிக்காவின் அருகில் இருக்கும், பெருமளவு அமெரிக்க முதலீடுகளைக் கொண்ட,  ஹைத்தி என்ற தீவு நாட்டில் பூகம்பம் ஏற்பட்ட பொழுது “அங்கே கொள்ளை நடக்கிறது” என்று அமெரிக்கப் பத்திரிகைகள் அலற, அமெரிக்கர்களின் சொத்தைக் காக்க ராணுவத்தை அமெரிக்கா விரைந்து அனுப்பியது. ஆனால் உயிர்களை காக்க சுண்டைக்காய் நாடான கியூபாதான் மருத்துவர்களையும், மீட்புப் பணியாளர்களையும் அணுப்பி உதவியது. அமெரிக்கா தரும் நெருக்கடியால் தவிக்கும் வெனிசுலா கூட ஹைத்தியின் கடனை ரத்து செய்து மேலும் பொருள் கொடுத்து உதவியது. ஆனால் ஒபாமாவின் கண்ணீரும், சில தனியாரின் தருமமும் தவிர அமெரிக்க அரசு எதுவும் செய்யவில்லையே ஏன்?

முதலாளித்துவத்தின் ஆணி வேர்

ராணுவ பலத்தையும், சந்தை சூதாட்டத்தையும் வைத்து முதலாளித்துவத்தை நிரந்தரமாக்க முயலும் மேதாவிகளே! உங்களால் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கொடுக்க இயலாது. நாங்கள் சொல்லுகிறோம் “தான் வாழ அடுத்தவனை துன்புறுத்தும், ஈவிரக்கமற்ற பணப்பட்டுவாடா உறவைப்” பற்றி சரியான விளக்கமும், சரியான தீர்வும் கண்டிட வேண்டுமானால் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் உருவான மார்க்சிசம், லெனினிசம் என்ற விஞ்ஞான தத்துவத்தை ஒருவன் நாடவேண்டும்.

மார்க்சிசம்-லெனினிசத்தை கற்பது என்றால் என்ன?

19, 20ஆம் நூற்றாண்டுகளில் எழுதியவைகள் முற்றிலும் மாறுபட்ட இன்றைய வாழ்விற்கு எப்படி வழி காட்டும்? என கேட்கலாம்.

முதலில் மார்க்சிசம் லெனினிசம் விஞ்ஞானமாக இருப்பதால் அதன் அடிப்படைகளைப் புரிய அந்த எழுத்துக்களை படிக்க வேண்டியிருக்கிறது, பவுதீக விஞ்ஞானத்தில் கோப்பர்நிக்கஸ், கலீலியோ, நியூட்டன் போன்ற முந்தைய கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை கற்காமல் ஐன்ஸ்டீனின் சார்பு விதிகளையோ, அதை ஒட்டி இன்று நடக்கும் சர்ச்சைகளையோ, புது யுக தொழில் நுட்பம் என பெயரெடுத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிற “நாநோ டெக்னாலஜியை”யோ ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. லாமார்க், டார்வின், வாலெஸ், கிரிகார் ஜோகன் மன்டேல், லைசென்கோ, வாவிலோவ் ஆகியோர் கண்டுபிடித்த தாவர உயிரியல் இயல்புகளையும், அன்று நடந்த சர்ச்சைகளையும் கற்காமல் சர்ச்சைக்குரிய மரபியல்புகளை மாற்றும் தொழில் நுட்பங்களை புரிந்து கொள்ள முடியாது. அது போல் மார்க்சிசமும் லெனினிசமும் வளரும், சமூக விஞ்ஞானமாக இருப்பதால் அதற்கு அடிப்படை போட்ட எழுத்துக்களையும், அப்பொழுது எழுந்த சர்ச்சைகளையும் அறியாமல் இந்த விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள இயலாது. இதற்காக ஆராய்ச்சியாளர்களைப் போல் எல்லாவற்றையும் வரிக்கு வரி படித்தால்தான் புரியும் என்று கூறுவதாக கருதிவிடக்கூடாது.

இன்றைய மார்க்சிச, லெனினிச ஆய்வாளர்கள், ஆசான்களின் படைப்புக்களை தொகுத்து, விளக்கக் குறிப்புகளுடன் பொருள் வாரியாக பிரித்து, பொறுக்கி எடுத்துப்படிக்க வசதியாக தந்துள்ளனர். அடிப்படைகளை அறிய சிலவற்றைப் படித்தாலே போதும். ஆனால் மார்க்சிச, லெனினிச எழுத்துக்கள் பல இன்னும் தமிழில் வராதது பெருங்குறையே. அதை கொண்டுவருவது தமிழ் அறிஞர்களின் கடமை.

இரண்டாவதாக, முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை ஒரு சமூகத்தில் நீடிக்கிறவரை அதாவது வர்க்க முரண்பாடுகள் நீடிக்கிறவரை அன்றாட நடைமுறைக்கே நமது அறிவை கூர்மைப்படுத்த இந்த எழுத்துக்கள் உதவுகின்றன. 300 ஆண்டு முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும் யுத்தங்களின் தன்மை களையும், மக்களின் வாழ்வில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும், அரசுகளின் போக்கு, அறிவுலகத்தின் போக்கு இவைகளைப்புரிய, அந்த எழுத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. இன்றைய முதலாளித்துவத்தின் எல்லா நோய்களையும் கண்டுபிடிக்க அந்த எழுத்துக்கள் உதவுகின்றன.

மூன்றாவது மார்க்சிசம்-லெனினிசம் என்பது சூத்திரங்களல்ல. இயக்க இயலையும் வரலாற்றுப் பொருள்முதல் வாத இயலையும் பிரயோகித்து பிரச்சனைகளை அலசி, அதற்கான தீர்வுகளையும் தேடுவதாகும். அப்படி என்றால் என்ன? லெனின் இது பற்றி சொன்னதை குறிப்பிட்டால் இது விளங்கும் “மார்க்சிசத்தின் முழு உணர்வும், முறையும் வலியுறுத்துவது என்னவென்றால் ஒவ்வொரு விவகாரத்iயும் (1) வரலாற்றுரீதியிலும் (2) மற்றதற்கும் அதற்கும் உள்ள தொடர்பினை வைத்தும் (3) வரலாற்றில் இருக்கும் ஸ்தூலமான அனுபவங்களோடு ஒப்பிட்டும்” அலசி ஆராயவேண்டும் (வால்யூம்-35 இனசாஆர்மான்டிற்கு எழுதிய கடிதம்). இந்தவழி முறையையே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்று அழைக்கிறோம்.

(மருத்துவர்கள் நோயாளிக்கு விஞ்ஞான ரீதியாக சிகிச்சையளிக்க விரும்பினால் நோய் அறிகுறிகளை மட்டும் வைத்து சிகிச்சையை தீர்மானிக்காமல். நோயாளியின் கேஸ் ஹிஸ்டரியை பார்ப்பது, மற்றதற்கும் வியாதிக்கு முள்ள தொடர்பினை தேடுவது, அதற்கு முந்திய இதே நோய்க்கு சிகிச்சை அளித்த விவரத்தோடு ஒப்பிடுவது ஆகிய மூன்றையும் பின்பற்றுவார். அந்த மருத்துவர் அவர் அறியாமலே வரலாற்று பொருள் முதல்வாத வழியை பிரயோகிக்கிறார் என்று பொருள்)

நான்கவதாக, மார்க்சிச, லெனினிசத்தைக் கற்பது என்பது அவர்களது எழுத்துக்களை மட்டுமல்ல அந்த எழுத்துக் களுக்குள் துடிக்கும் உணர்வுகளை புரிந்து கொள்வது என்பதே ஆகும். அதை வளர்ப்பது என்பதோடும் இணைக்கப்பட வேண்டும்.

லெனினின் எழுத்துக்களும் உணர்வுகளும்

இங்கே மார்க்சிச, லெனினிசத்தின் வழிகாட்டும் ஆற்றலைப் புரிந்துக் கொள்ள சோவியத் புரட்சியின் ஆசான், வழிகாட்டி, இணைப்பாளர், ஆலோசகர், மார்க்சிசத்தை வளர்த்தவர் என்று மக்களின் நினைவில் வாழும் லெனினின் எழுத்துக்களில் சிலவற்றை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

லெனினது எழுத்துக்களின் சிறப்பைக் கூற வேண்டுமானால் அவைகள் எப்பொழுதுமே வாசகனின் சிந்தனையை தூண்டுவதில் கவனமாக இருக்கும், நடைமுறைக்கான ஆலோசனைகளாகவும் இருக்கும், சிக்கலான தத்துவ, அரசியல் பொருளாதார விவகாரங்களை ஸ்தூலமான உதாரணங்களோடு விளக்குவதாகவும் இருக்கும். சுற்றிவளைத்தோ, பொதுமை யாகவோ எழுதுவதையும் பேசுவதையும் அவர் வெறுப்பவர். தொள தொளப்பான, படிக்கிறவர் அவரவர் இஷ்டப்படி விளக்கம் கொடுக்கிற நடையில் அவர் எழுதமாட்டார். அவரது சொல் பிரயோகமும் வாதங்களும் கூர்மையாக இருக்கும், எதையும் நிலைநாட்ட ஸ்தூலமானதைக் காட்டுவாரே தவிர வாத திறமையால் பூசி மொழுகமாட்டார். யாருக்காக எழுதப் போகிறோம் என்பதை முதலில் மனதில் நிறுத்தியப் பின்னரே பேனாவை எடுப்பார். அவரது ஆராய்ச்சி மற்றும் சித்தாந்த விளக்கக் கட்டுரைகள் கூட  தேவையான அளவே நீண்டிருக்கும், மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியவைகளை அவரது வார்த்தைகளிலேயே கூறுவதென்றால் தந்தி பாணியில் சில சொற்களையே கொண்டதாக இருக்கும்.

சுருக்கமாகச் சொல்லும் கலை

உதாரணமாக, 14-4-1913 தேதியிட்ட பிராவ்தாவில் ஒரு சிறிய கட்டுரையை லெனின் எழுதுகிறார். அதன் தலைப்பு “நாகரிகமான ஐரோப்பியர்களும் காட்டுமிராண்டி ஆசிரியர் களும்”. ரங்கூனில் நடந்த ஒரு குற்ற நிகழ்வை சுட்டி அதன் பின்னணியில் இருக்கும் காலனி ஆதிக்க மனோபாவத்தையும் ஐரோப்பிய மேல்தட்டு மக்களின் கண்ணோட்டங்களையும் சில வரிகளில் உணர்த்திவிடுகிறார். அன்று ஐரோப்பிய பூர்சுவாக்கள் காலனி ஆட்சியை நியாயப்படுத்த ஆசிய மக்கள் காட்டுமிரா ண்டிகள் என்ற சித்திரத்தை ஐரோப்பிய மக்கள் மனதிலும் ஏத்தி வைத்திருந்தனர். அந்த தவறான சித்தரிப்பை அம்பலப்படுத்தி ரஷ்ய உழைப்பாளி மக்களின் சர்வதேசப் பார்வையை விசாலப்படுத்துவதில் லெனின் எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதை இதை படிப்பவர்கள் உணரமுடியும்.

அவர் கண்ணில்பட்ட ஒரு செய்தியை அவர் வாசகனுக்கு சமர்பித்தவிதம், பாட்டாளி வர்க்க பத்திரிகையாளனுக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். அதை அப்படியே தமிழில் தருகிறோம்.

“நாகரிகமான ஐரோப்பியர்களும் காட்டுமிராண்டி ஆசியர்களும்”- லெனின்

எல்லோரும் அறிந்த இங்கிலாந்து நாட்டின் நன்கு அறிமுகமான சமூக ஜனநாயகவாதி, ரோத்ஸ்டீன் என்பவர் ஜெர்மன்நாட்டு தொழிலாளர் பத்திரிகையில் பிரிட்டீஷ் இந்தியாவில் எடுத்துக் காட்டாக அமைந்த ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிகழ்ச்சி 30 கோடியைத் தாண்டும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் புரட்சி ஏன் வேகமாக வளர்கிறது என்பதை எல்லா வாதங்களையும் விட சிறப்பாக காட்டிவிடுகிறது. ஆர்னால்டு என்ற பிரிட்டிஷ்  பத்திரிகையாளர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருக்கும் 2 லட்சத்திற்கும் மேல்  மக்கள் வாழும் ரங்கூன் நகரில் பத்திரிகை நடத்துபவர். இவர் பிரிட்டிஷ் “நீதியின் கேலிகூத்து” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டார். அங்கு பணிபுரிந்த பிரிட்டிஷ் நீதிபதி ஆன்ட்டுருவை அது அம்பலப்படுத்தியிருந்தது. இந்தக் கட்டுரையை வெளியிட்ட குற்றத்திற்காக ஆர்னால்டு 12 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். லண்டனில் உள்ள தொடர்பினைக் கொண்டு பிரிட்ஷ் உச்சநீதி மன்றத்திலே மேல் முறையீடு செய்தார். இந்திய அரசு அவசரமாக தலையிட்டு சிறைத் தண்டனையை 4 மாதமாகக் குறைத்து விடுதலை செய்தது.

இந்த சலசலப்புஏன்?

பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி மெக்ரோமிக்கின் வைப்பாட்டி யிடம் 11 வயது இந்திய சிறுமி பணிபுரிந்து வந்தாள், அவள் பெயர் அய்னா. நாகரிக நாட்டின் இந்த மாவீரன் அவளை  அறைக்குள் வரவழைத்து கட்டாயப்படுத்தி வன்புணர்ச்சி செய்து  தனது வீட்டிலேயே பூட்டி வைத்துவிட்டான். அந்த நேரத்தில் கிராமத்திலே சாகக் கிடந்த அய்னாவின் தந்தை தனது மகளைக் காண ஆசைப்பட்டு கூட்டிவர ஆள் அனுப்புகிறார். அப்பொழுது தான் அந்த கிராம மக்கள் விபரத்தை கேள்விப் படுகின்றனர், கோபத்தில் கிராம மக்கள் கொதிக்கின்றனர். வேறு வழியின்றி காவல் துறையினர் ராணுவ அதிகாரியை கைது செய்தனர். ஆனால் நீதிபதி ஆன்ட்ரூ அவரை ஜாமீனில் விடுதலை செய்து பின்னர் அவமானகரமான நீதி பிறண்ட விசாரணையை நடத்தி அவர் குற்றமற்றவர் என்று விடுதலையும் செய்கிறார். அந்த வீரமிக்க ராணுவ அதிகாரி, தான் ஒரு உயர்ந்த குடும்பத்திலிருந்து வந்த ஜென்டில்மென் என்றும் அய்னா ஒரு விபச்சாரி என்றும் வாக்குமுலம் கொடுத்து அதனை  நீருபிக்க 5 சாட்சிகளையும்  கொண்டுவந்தார். அவர்களை விசாரித்த நீதிபதி ஆய்னா தரப்பில் அவரது தாயார் கொண்டு வந்த 8 சாட்சிகளையும் விசாரிக்க மறுத்துவிட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஆர்னால்டை விசாரித்த  ஸர் (வணக்கத்திற்குரிய) சார்லஸ் ஃபாக்ஸ் ஆர்னா ல்டின் சாட்சிகளை அனுமதிக்கவில்லை.

இது போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்கிறது என்பது  தெளிவு.  அபூர்வமாக விதிவிலக்கான சூழ்நிலையில் “அவமதிப்பாளன்” ஆர்னால்டு (செல்வாக்குள்ள பத்திரிகையாளரின் மகன்) சிறைச்சாலையி லிருந்து மீண்டார், வழக்கும் பிரபலமானது.

இந்தியாவை நிர்வகிக்க “சிறந்த” தலைகளையே பிரிட்டன் நாட்டு தர்மவான்கள் அனுப்பி வைக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள். ஐரோப்பிய ரஷ்ய தர்மவான்களின் கண்களுக்கு புதுமை மிகு ஆசிரியனாக, ஐரோப்பிய அறிவின் ஒளிவிடும் ஜோதியாக, சிறப்புமிகு கணவானாக தோன்றிய ஜான்மோர்லி தான், இந்த மாக்கோர்மிக்களுக்கும், ஆன்ட்ருக்களுக்கும், ஃபாக்சு ளுக்கும் தலைமை தாங்கிய இந்திய வைஸ்ராய்.

இந்த “ஐரோப்பியனது” உணர்வு ஆசியாவை  எழுப்பி விட்டது.

ஆசிய மக்கள் ஜனநாயக மனோபாவம் கொண்டவர்களாக ஆகிவிட்டனர் (லெனின்-வால்யூம் 19, ஆங்கிலம்)

ஐரோப்பியர்களின் இன ஆணவம், அதற்கு பலியான ஆசிய மக்களின் விழிப்பு இந்த இரண்டையும் கூர்மையாக அம்பலப் படுத்துகிறார்.

லெனின் பாட்டாளி வர்க்க பத்திரிகையாளனுக்கு கூறிய தென்ன?

“நம்முடைய செய்தித் தாளின் தன்மை” என்ற தலைப்பில் 20.9.1918 தேதியிட்ட பிராவ்தாவில் வெளிவந்த லெனினின் சிறிய கட்டுரை எவ்வளவு போதிக்கிறது என்பதை அளந்து சொல்ல இயலாது, பாட்டாளி வர்க்கப் பத்திரிகை எதில் எதில் பூர்சுவா பத்திரிகையோடு வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதை அதில் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரை பாட்டாளி வர்க்கத்தின் கையில் ஆட்சி வந்த பிறகு செய்தித் தாளின் தன்மையைப் பற்றிய குறிப்பிடப்படுபவைகள் என்றாலும் முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை அடைகிற காலம் வரை பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்யும் கம்யூனிஸ்ட் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எனலாம். எனவே வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நமக்கும் இது வழி காட்டுகிறது. அந்தக் கட்டுரையை முழுமையாக இங்கே வெளியிட இயலவில்லை என்றாலும் அதில் வரும் நான்கு அம்சங்களை சுருக்கிக் கூறலாம்.

  1. அரசியல் விவகாரங்கள் அளவிற்கு மீறி இடத்தை பிடிக்கக் கூடாது. எல்லோருக்கும் பல வழிகளில் தெரிந்த விவகாரமாக இருக்கும் இந்த அரசியல் விவகாரங்கள் 10 அல்லது 20 வரியை தாண்டாமல், பழைய வாதங்களை மீண்டும் கூறாமல் எல்லா புதிய தகவல்களையும் கொண்டதாக எழுதப்படவேண்டும்.
  2. பூர்சுவா பத்திரிகைகள் தனியார் ஆலைகளில் நடப்ப வைகளை தெய்வ சந்நிதானமாகக் கருதி நெருங்க மாட்டார்கள். அங்கு நடப்பவைகளை செய்தி ஆக்கக் கூடாது என்ற தர்மத்தை அவர்கள் பின்பற்று பவர்கள், இது பூர்சுவா நலனுக்கு உகந்தது. இந்த தர்மத்தை நாம் உடைக்கவேண்டும்.
  3. மக்களின் பொருளாதார வாழ்வினை உரிய இடத்தையும் தரவேண்டும். பொருளாதாரமென்றால் பொதுவான விவாதமல்ல, நிபுணத்துவம் மிக்க பரிசீலனை அல்ல, அறிவுசார் திட்டங்களல்ல எதார்த்தமாக இருக்கும் பொருள் உற்பத்தி நிலவரம் பற்றியும் சந்தை நிலவரங்கள் பற்றியும் சரியான தகவல்களை சேகரித்து சரிபார்த்து அலசி பரிசீலிக்கும் எழுத்துக்களாக இருக்கவேண்டும்.
  4. வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உதாரணங்களாக இருப்பவைகளை ஸ்தூலமான உதாரணங்களுடன் செய்தி யாக்கி மக்களுக்கு கற்றுக்கொடுப்பது அபூர்வ மாகவே செய்யப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும் உண்மையில் முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிவரும் காலகட்டம் முழுவதும் முன்னுதாரண ங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்து மக்க ளுக்கு போதிப்பது பத்திரிகைகளின் கடமையாகும்.

இந்த நான்கு அம்சங்களையும் விளக்குகிற அந்தக் கட்டுரை அக்காலத்திய ரஷ்ய நிலைமைகளைக் காட்டியே சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்த நான்கு அம்சங்களையும் விளக்கிட லெனினது எழுத்துகளிலிருந்து எடுத்துக்காட்டாக சிலவற்றை அறிமுகப்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளாக இருப்பதால் ஆங்கில வெளியீட்டின் வால்யூம்களையே குறிப்பிட்டுள்ளோம்.

“எண்ணெய்பசி”(வால்யூம்19)

“எண்ணெய்பசி” என்ற கட்டுரை 1913இல் சுற்றுக்குவிடப்பட்ட ஒருகட்டுரை 1940இல் பிராவ்தாவில் வெளிவந்தது. இதில் பெட்ரோலிய எண்ணெய் விலை ஏறியதால் ரஷ்ய டூமாவில் நடந்த விவாதத்தையும் மந்திரிகளின் பதிலையும் முதலாளிகளுக் கிடையே நடக்கும் மோதலையும் வைத்து லெனின் தருகிற சுருக்கமான விளக்கம் தத்துவார்த்தப் போரை நடத்த நமக்கு பாடமாகிறது. எண்ணெய் விலை உயர்வு அது உலக நிலைமை என்று அன்றைய ரஷ்ய மந்திரி பதில் கூற லெனின் அமெரிக்காவில் விலை குறைகிற காலத்தில் ரஷ்யாவில் ஆறு மடங்கு விலை உயர்ந்ததை சுட்டிக்காட்டி அமைச்சரின் புள்ளிவிவர மோசடியை ரஷ்ய தொழிலாளிக்கு அம்பலப் படுத்துகிறார். உலகளவில் எண்ணெய் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தை சுட்டிக்காட்டுவதோடு ரஷ்ய எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளையை அரசு நியாயப்படுத்துவதையும், அம்பலப் படுத்துகிறார். லாபங்களை பங்கீடு செய்வதில் முதலாளிகளுக் கிடையே ஏற்படும் மோதல்களையும் டூமா விவதாங்களில் வெளிப்படுவதை காட்டுகிறார். (இந்திய நாடாளு மன்றத்தில் ஐ.பி.எல் விவகாரம், ஸ்பெக்ட்ரம் விவகாரம் அடிபடுவது போல்). இந்த கட்டுரையில் ஒரு முக்கியமான முதலாளித்துவ பொருளா தாரத்தின் இயல்பையும் புரிய வைக்கிறார். ரஷ்யாவில் விலை உயர்விற்கும், அமெரிக்காவில் விலைகள் ஒரளவு நிலையாக இருப்பதற்கும் காரணம் முதலாளித்துவத்தின் வளர்ச்சி வேகங்களில் உள்ள வேறுபாடே காரணமாகும் என்பதை கண்டுபிடித்து  எழுதுகிறார். பொருளாதார வளர்ச்சி மந்தமா னால் விலைகள் தாறுமாறாக உயரும் என்பதை சுட்டிக் காட்டுகிறார். மந்திரிகளின் புள்ளிவிவர மோசடியை விலை உயர்வு காட்டிக் கொடுத்துவிடுவதை பாமரர்களும் புரிகிற முறையில் எழுதுகிறார். சுமார் 40 வரிகளில் இவைகளை அடக்கிவிடுகிறார். (நம்மூர் சிதம்பரங்களும், மன்மோகன்களும், பிரணாப் முகர்ஜிகளும் தரும் பொருளாதார வளர்ச்சி வேகம் பற்றி கூறும் புள்ளி விபரங்கள் மோசடி என்பதை தாறுமாறாக உயரும் விலைகள் காட்டிக்கொடுத்து விடுவதை நாம் அறிவோம்!. மக்களிடம் இத்தகவல் சேர்க்கப்பட்டதா?!)

வீராப்பு முழக்கம், சொறி (வால்யூம்27)

1918இல் வீராப்பு முழக்கம், சொறி என்ற இரண்டு தலைப்புகளில், சிறிய கட்டுரைகள் எழுதுகிறார். அதில் காலச்சூழலுக்கேற்ற நடவடிக்கை தேவை, வீராப்பு முழக்கம் புரட்சிக்கு ஆபத்து என்பதை கட்சி உறுப்பினர்கள் மனதில் தைக்கிற மாதிரி எழுதுகிறார். “வீராப்பு முழக்கம் என்பது எப்பொழுதுமே, புரட்சிகரக் கட்சியை தொந்தரவு செய்யும் ஒரு வியாதி, இது ஒரு புரட்சிகர கட்சிக்குள்ளோ அல்லது கூட்டணியாகவோ பாட்டாளி வர்க்கமும், குட்டி பூர்சுவா வர்க்கப் பகுதியினரும் இணைந்து இருக்கும்பொழுது இந்த வியாதியால் வேதனைப் படுவது நிகழும். வீராப்பு முழக்கம் என்று எதைக் குறிப்பிடு கிறோம் என்றால் புரட்சிகரமான நிகழ்வுகள் வேகமான பல திடீர் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும். அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு பொருந்தாத புரட்சிகர முழக்கங்களை முன் வைப்பதையே வீராப்பு முழக்கம் என்கிறோம். அந்த முழக்கங்கள் கவர்ச்சியாகவும், சிறப்பாகவும் போதை ஏற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் அதற்கு அடிப்படை எதுவும் இருக்காது. இதைத்தான் வீராப்பு முழக்கம் என்கிறோம்” என்று சுருக்கமாக விளக்குகிறார். இரண்டாவது கட்டுரையில் வீராப்பு முழக்கத்தை உருவாக்கும் போக்கை சொறி சிரங்கிற்கு ஒப்பிட்டு எழுதுகிறார். “உண்மை என்பது எளிமையாக, தெளிவாகப் புரிகிற முறையில் மறுக்க முடியாததாக முறையில் இருக்கும், ஆனால் வீராப்பு முழக்கம் தயாரிக்கும் சொறி வியாதி பிடித்தவர்கள் அதை சிதைப்பார்கள், இந்த சிதைப்பு அடிக்கடி உன்னதமான மிகச் சிறந்த ஆர்வத்திலிருந்தே உருவாகிறது. இதற்கு காரணம் நன்கு அறியப்பட்ட தத்துவ உண்மைகள் உள்வாங்குவதில் உள்ள குறைபாடு அல்லது குழந்தைத் தனமாகவோ பள்ளி மாணவனைப் போல் பொருத்தமில்லாமல் முழங்குவதாகும். அதனால் அது தீமை அற்றதாக ஆகிவிடாது. இந்த இரண்டு கட்டுரைகளும், இன்றைய மாவோயிஸ்டுகளின் புரட்சிகரமான வீராப்பு முழக்கங்களால் கவரப்படும் இளைஞர் களுக்கு தெளிவினைத் தர உதவும். மாவோயிஸ்ட் டுகளின் செயலால் மக்களிடையே முரண்பாடுகள் முற்றுமே தவிர மக்கள் கொதித் தெழுந்து மாவோயிஸ்டுகள் பின்னால் திரளமாட் டார்கள். சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத வீராப்பு ஆபத்து என்பதை  கற்றுத் தரும் வாத்தியார் லெனின்  என்பதில் ஐயமில்லை.

பாபுஷ்கின், பால் சிங்கர் (வால்யூம்16,17)

1910இல் ரகசிய பத்திரிகையில் லெனின் எழுதிய கட்டுரை ஐவான் வாஸ்லிவிச் பாபுஷ்கின் என்ற ஆலைத் தொழிலாளியின் மறைவையொட்டி எழுதிய கட்டுரை இன்னொன்று, பால்சிங்கர் என்ற ஜெர்மன் நாட்டு ஜனநாயகவாதியைப் பற்றிய கட்டுரை. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் அவரைப்பற்றி லெனின் குறிப்பிடும் பொழுது “மிகுந்த ஆற்றல், வாய்ச்சொல் வீரம் பேசாமை, கட்சிப்பற்றும் இலட்சியப் பிடிப்பும் புரட்சிகர உணர்வும் கொண்டிருந்ததால் ஐவான் வாஸ்லிவிச் என்ற பெயர் சோசல் டெமாகிரட்டிக் கட்சியினருக்கு மட்டு மல்ல அவரை அறிந்தவர் அனைவருக்கும் நெருக்கமும் அன்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.” பத்திரிகையை விநியோகம் செய்த தற்காக ஜார்மன்னனின் காவல்துறை அவரை கொன்று புதைத்து செய்தியை மறைத்துவிடுகிறது. செயலூக்கமுள்ள கட்சி உறுப்பினர்தான் கட்சியின் உயிர் நாடி என்பதையும் தன்னலமற்ற கட்சி உறுப்பினர் சேவைதான் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்கிறது என்பதை  இக் கட்டுரை நமக்கு உணர்த்து கிறது. அடுத்து பால் சிங்கர் என்ற ஜெர்மன் நாட்டு ஜனநாயக வாதி எங்கெல்சோடு இணைந்து அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டவர் சிறந்த ஜனநாயகவாதி. அவரைப் பற்றி லெனின் குறிப்பிடும் பொழுது பால் சிங்கர் பூர்சுவா வர்க்கத்திலிருந்து வந்தவர், பெரும் வர்த்தகம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். அவரே ஒரு தொழிலதிபர். பூர்சுவா வர்க்கத்தை சார்ந்த பெரும் பகுதி ஜனநாயாகவாதிகள், தாராளவாதிகள் தொழிலாளர் இயக்கம் வெற்றிபெரும் நிலையைக் கண்டு பயந்து அவைகளை மறந்துவிடுவர். ஆனால் பால்சிங்கர் விசுவாசமிக்க, உறுதியான பயமற்ற ஜனநாயக வாதியாக கடைசி வரை இருந்தார். அவர் ஊசலாடவில்லை, பூர்சுவா ஜனநாயக வாதிகளின், கோழைத் தனங்களையும், அடுத்துக் கெடுக்கும் நடவடிக்கைகளையும் கண்டு அவர் அருவருப்பு கொண்டதோடு, புரட்சிகர தொழிலாளர் கட்சியே விடுதலையை முழுமைப் படுத்தும் ஆற்றல் கொண்டது என்ற உறுதியை வளர்த்துக் கொண்டார். எல்லா வர்க்கத்திலும், சிறந்தவர்கள், உழைப்பாளிகளை நேசிப் பவர்கள் தோன்றுவார்கள், தனி மனிதர்களின் நடவடிக்கைகளை வைத்து ஒருவர்க்கத்தின் குணாம்சங்களை யோ, ஒரு வர்க்கத்தின் குணாம்சங்களை வைத்து தனி மனிதர் களையோ பொதுமைப் படுத்திப் பார்க்கக் கூடாது, கம்யூனிஸ் ட்டுகள் இதில் எச்சரிக்கையாக இருக்க இரண்டு சிறு கட்டுரைகள் நமக்கு போதிக்கின்றன .

தன்னை மட்டும் முன்னேற்றும் குணம் (வால்யூம்18)

கேரியர் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை கோடிஸ்வரன் சவ்வோரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்து வைத்து ரஷ்ய முதலாளித்துவ சமூகத்தின் இயல்பை விளக்குகிறது சிலர் கோடிஸ்வரர்களாக ஆவதும், கோடிக் கணக்கான மக்கள் வேலையில்லாதோர் பட்டாளத்தை வீங்க வைப்பதும் முதலாளித்துவ உற்பத்திமுறையின் இயல்பு என்பதை ஸ்தூலமான நிலைமைகளை, ஸ்தூலமான உதாரணங்களுடன் விளக்கும் பொழுதுதான் உழைப்பாளி மக்களின் சமூகப்பார்வை கூர்மையாகும் என்பதை இக்கட்டுரையை படிப்போர் உணர முடியும். (வால்யூம்18)

கழுவுதல் (வால்யூம்33)

கழுவுதல் (பர்ஜிங்) என்ற தலைப்பில் லெனின் எழுதியது உண்மையிலேயே புரட்சிகரமானதாகும். அவர் எழுதுகிறார் “கட்சியின் புரட்சிகரத் தன்மைகளைக் காக்க சந்தர்ப்ப வாதிகளையும், சுயநலனுக்காக கட்சியை பயன்படுத்தும் தலைவர்களையும், அதிகாரப் போக்குள்ளவர்களையும், கொள்கையில் பிடிப்பில்லாதவர்களையும், அயோக்கியர் களையும் கட்சியிலிருந்து வெளியேற்ற அக்கறை காட்டுவது வரவேற்கத் தக்கது. ஆனால் இது சம்பந்தமாக கட்சிக்கு அப்பாற்பட்ட பாட்டாளி மக்களின் அபிப்ராயங்களை கணக்கில் எடுக்க வேண்டும்” என்கிறார். இதை யாந்திரிகமாக புரிந்து கொள்ளாமல் அவரது எழுத்தின் உணர்வைப் புரிவது அவசியம். இது பற்றி ஒரு விவாதம் தூண்டிவிடப்பட்டால், நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் நம் நாட்டில் வெகுஜனப் புரட்சி கட்சியாக நீடித்திருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்..

லெனினிசத்தை வளர்ப்போம்

பத்திரிகைகளில் லெனின் எழுதியவைகளை பொருள் வாரியாக பிரித்து தொகுத்து ஒரு விளக்கமான முன்னுரையுடன் தமிழில் கொண்டுவந்தால் ஜனநாயக உணர்வுகளை பரப்பவும், மக்களின் சீர்தூக்கி பார்க்கும் உணர்வை வளர்க்கவும், மக்களிடையே இருக்கும் வேற்றுமைகள் திரிந்து மோதலாகும் நிலவரம் வருவதை தடுக்கவும், பணப்பட்டுவாடா பூர்சுவா கலாசாரம் ஒழிந்து மக்களிடையே ஒத்துழைப்பு கலாசாரம் வளரவும் ஆசைப்படும் கட்சி உறுப்பினருக்கும் பொதுவான ஒரு பத்திரிகையாளனுக்கு சிறந்த கையேடாக இருக்கும். இந்த வகையில் லெனினைக் கற்போம், லெனினிசத்தை வளர்ப்போம்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: