அண்மையில் அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடி உலக முதலாளித்துவத்திற்கு கடந்த 1930ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலகப் பெருமந்த காலகட்டத்தில் இன்றைக்கு ஏற்பட்டிருப்பது போன்ற பிரம்மாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சி உருவாகியிருக்க வில்லை. குறிப்பாக உலக அரசியலிலும், உலகப் பொருளா தாரத்திலும் அச்சாணி போல விளங்கும் பெட்ரோலிய எண்ணெயின் பயன்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்பு துவக்க நிலையிலேயே இருந்தது. இன்றைக்கு விஞ்ஞான கண்டுபிடிப்பு களால் அதில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாயங்கள், வெடிமருந்துகள், பிளாஸ்டிக் ரசாயனங்கள், நோய் தீர்க்கும் மருந்துகள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், எரிபொருள்கள் என பெட்ரோலியத்தின் பயன்பாட்டு பட்டியல் வெகு நீளமானது. எனவே தற்போது நிதி மூலதன விளையாட்டால் உருவாகும் நெருக்கடி,கண்மூடித்தனமான பொருள் உற்பத்திமுறைகளால் இயற்கை கெட்டு ஏற்படுத்தும் நெருக்கடி, இவைகளின் பின்னணியில் உலக எண்ணெய் அரசியலும், எண்ணெய் சார்ந்த புவி அரசியலும் மிகப்பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணத்தைத் துவக்கியிருக்கிறது. எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த புவி அரசியலில் ஏற்படும் இந்த மாற்றத்தால், அமெரிக்க, ஐரோப்பிய ஏக போக நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உலகளவில் எதிர்ப்புகள் மிகுந்து ஐரோப்பிய- அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பலமுனைகளில் உருவாகும் நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும்.
“உலகை ஆட்சி செய்ய நீங்கள் விரும்பினால் எண்ணெய் உற்பத்தியை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்; உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் எண்ணெயையும் உங்கள் கைக்குள் கொண்டுவர வேண்டும்” என்று மிக்கெய்ல் கொல்லன் என்ற நிபுணர் கூறினார். இந்த “மணி” வாசகத்தை அப்படியே ஏற்று நடப்பது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான் என்றாலும் இன்று முதலிடம் அமெரிக்காவிற்குத்தான்.
அமெரிக்காவை மட்டும் குறிப்பிட்டுக் கூறவேண்டியதன் அவசியம் என்னவென்றால், உலகில் மிக அதிகமாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மூலமான சக்தியை பயன்படுத்துவது அமெரிக்காவே. அதிலும் குறிப்பாக, ஒட்டுமொத்த அமெரிக் காவும் பயன்படுத்தும் இந்த சக்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பயன்படுத்துவது அமெரிக்க ராணுவமே. உலகில் ஒட்டுமொத்தத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் 65 முதல் 70 சதவீதத்தை உலகின் மிகப்பெரும் பொருளாதாரங்களான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவையே பயன்படுத்துகின்றன. இவற்றுக்கு அடுத்து மூன்றாம் உலக நாடுகளில் தொழில் வளர்ச்சியை ஓரளவிற்கு முன்னேற்றிக் கொண்டு செல்லும் தென்கொரியா, சீனா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்து கின்றன.
இந்தப் பயன்பாட்டிலும், பயன்பாடு சார்ந்த எண்ணெய் வர்த்தகத்திலும் தற்போதைய உலகப்பொருளாதார நெருக்கடி கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாக்கத்தின் விளைவாக எண்ணெய் சார்ந்த புவி அரசியல் மேற்கு உலகத்திலிருந்து கிழக்கு உலகத்தை நோக்கி இடம்பெயரத் துவங்கியுள்ளது. அது குறித்த விவரங்களுக்குள் செல்வதற்கு முன்பு, எண்ணெய் அரசியல் குறித்தும், அதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கேந்திரமான நலன்கள் குறித்தும் வரலாற்றுப் பின்னணியை கவனிப்பது அவசியம்.
உலக யுத்தமும்: எண்ணெய்யும்-
1900ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் நிலக்கரியை விட பெட்ரோலிய எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்துவது பல அனுகூலங்களைக் கொண்டதாக இருக்குமென கண்டறியப் பட்டது. சிக்கனமும், செலவு குறைவும் சுரங்க விபத்துக்கள் இல்லாமலும் அதிக வேலை ஆள் தேவை இல்லாமலும் எடுக்கக் கூடிய அபரிமிதமாக கிடைக்கிற பொருளாக இது இருந்தது. காலனிகளை மறு பங்கீடு செய்ய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஒரு கோஷ்டியும் ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஒரு கும்பலும் மோத, முதல்உலகப்போர் வெடித்தது. நிலக்கரியைக் கொண்டு இயங்கிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் கப்பல்படை எண்ணெயை பயன்படுத்த முடிவு செய்தது. அதுவரையிலும் எண்ணெயின் ரசாயன சக்தி அவ்வளவாக கண்டுபிடிக்கப்படாத நிலையில் அமெரிக்காவின் டெக்சாÞ மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் இருந்த எண்ணெய் கிணறுகளில் கிடைப்பதை விற்பதற்கே சிரமப்பட்டிருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த யுத்தம் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்துக் கொடுத்தது.
அபரிமிதமாக எண்ணெய் புதைந்து கிடக்கும் மத்திய கிழக்கு ஆசியாவை நோக்கி பகாசூர நிறுவனங்கள் திரும்பின. அதன் விளைவாக பிரிட்டனும் அதன் கூட்டாளிகளும், பிரான்சும் அதன் கூட்டாளிகளும், பின்னர் அமெரிக்காவும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் புதையலை அவரவர் சக்திக்கேற்ப கைப்பற்றியதோடு விரிவாக்கத்திற்கு சூழ்ச்சி அரசியலின் வழியாக போட்டியும்போட்டன.(இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்தியவாதிகள் நேரடியாக மோதுவதை தவிர்த்தனர்) இந்தப்போட்டியில் ஈரான், ஈராக்கில் இருந்த அரசுகளோடு பிரிட்டன் சில சமரச ஏற்பாடுகளைச் செய்துகொண்டு தனது உரிமையை உறுதிப்படுத்திக்கொண்டது. இந்த இரண்டு நாடுகளின் எண்ணெய் வயல்களுக்குள் அமெரிக்காவை நுழையவிடாமல் அது பார்த்துக்கொண்டது. எனினும் இந்தப் பிராந்தியத்தில் தனது எண்ணெய்க் கம்பெனிகளுக்கு அடித்தளத்தை உருவாக்க அமெரிக்க அரசு சூழ்ச்சி அரசியலில் இறங்கியது. இரண்டாம் உலகப்போரில் போர்க்களமாக இருந்த ஐரோப்பா பெரும் சிதைவைச் சந்தித்தது. ஜெர்மனி முற்றிலும் சிதைந்தே போனது. அதுவரையிலும் உலகின் மிகப்பெரும் ஏகாதிபத்திய சக்திகளாக விளங்கிய பிரான்சும், பிரிட்டனும் சீரழிந்தன. அமெரிக்க பூமி போர்க்களமாக இல்லாத நிலையில் போருக்கு தேவையான தளவாடங்களை சப்ளை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து அமெரிக்க நிறுவனங்கள் கொழுத்தன. தனது ராணுவ விமானங்களையும் ஆயுதங்களையும் வாடகைக்கு கொடுத்து அது சம்பாதித்தது எவ்வளவு என்பது இப்பொழுதுதான் உலகம் அறிய நேர்ந்தது. முடிவில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட தொழில் உற்பத்தி திறனை அமெரிக்கா வளர்த்துக் கொண்டது. இப்படியாக மேற்கு உலகின் ஆதிக்க சக்தியாக அது மாறியது. பிரான்சும், பிரிட்டனும் முதலாளித்துவ பண்பாடு மேலோங்கி இருந்ததால் அதன் இளைய கூட்டாளிகளாயின.
இந்தப் பின்னணியில் 1940இல் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கைகளில் இருந்த 10 சதவீதம், 1950இல்-பத்தே ஆண்டுகளில்-50 சதவீதமாகப் பாய்ச்சல் வளர்ச்சியை எட்டியது. ஈரான், ஈராக்கில் பிரிட்டன் வசமிருந்த அனைத்து எண்ணெய் வயல்களையும் தனது கைக்குக் கொண்டுவந்தது. இதற்கான பயணத்தில், 1951இல் ஈரானில் ஆட்சியில் இருந்த முகமதுமொசாடெக்கை அமெரிக்கா சூழ்ச்சி அரசியலால் அகற்றியது. இவர் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தை அவர்கள் தயவில்லாமல் பெற்று உலக சந்தையில் ஈரானை இடம் பெற முயற்சித்தார். விடுவார்களா ஏகாதிபத்திய வாதிகள், தனது நாசகர உளவு Þதாபனமான சிஐஏ உதவியுடன் அமெரிக்கா அவரை தூக்கி எறிந்தது. ஷா மன்னனின் ஆட்சியை ஈரானில் நிறுவியது. படிப்படியாக எக்சான், மோபில், கல்ஃப் ஆயில் மற்றும் இதர அமெரிக்க பகாசுர எண்ணெய்க் கம்பெனிகள் உறுதியாகக் காலூன்றின.
போருக்குப்பின்னால்
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் உலக எண்ணெய்ப் பயன்பாட்டின் அளவு மிகப்பெரும் அளவிற்கு விரிவடைந்தது. 1929இல் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவின் பயன்பாடு 32 சதவீதமாக இருந்தது. இது 1939இல் போர் காலகட்டத்தில் 45 சதவீதமாக இருந்தது. 1952இல் 67 சதவீதமாகவும் 1970களில் 70 சதவீதத்திற்கு அதிகமாகவும் வளர்ச்சியடைந்தது. இந்தக் காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் தங்களது வளர்ச்சியைத் திட்டமிட்டு மேம்படுத்தின. உலக அளவில் அதிகரித்த எண்ணெய்ச் சந்தையின் வளர்ச்சியால் கொள்ளை லாபம் திரட்டியது அமெரிக்க பகாசுர எண்ணெய்க் கம்பெனிகளே. இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு இந்தத்துறையில் இந்நிறுவனங்கள் போட்ட முதலீட்டைவிட பல நூறு மடங்கு நம்ப முடியாத அளவிற்கு லாபத்தைக் கைப்பற்றின. 1954க்கும் 64க்கும் இடையில் ஈரானில் மட்டும் மேற்கத்திய எண்ணெய்க் கம்பெனிகள் ஒவ்வொரு ஆண்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக லாபத்தை கைப்பற்றிக் கொண்டு சென்றன. படிப்படியாக இது வளர்ச்சியடைந்து 1970இல் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிரதேசத்தில் அமெரிக்கப் பெட்ரோலிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலராக அதிகரித்தது. இந்தப் பெரும் முதலீடு உருவாக்கிய லாபம் மட்டும் 1.2 பில்லியன் டாலர் ஆகும். இது 79 சதவீத லாபம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வளர்முக நாடுகளில் எண்ணெய் தொடர்பான வர்த்தகத்தில் மட்டும் அமெரிக்கக் கம்பெனிகள் 60 சதவீத லாபத்தை ஈட்டின. மத்திய கிழக்குநாடுகளின் எண்ணெய் வயல்களில் இருந்து அமெரிக்க பகாசுர கம்பெனிகள் உறிஞ்சிய இந்த மிகப்பெரும் செல்வம், 7 பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. 1973இல் உலகின் மிகப்பெரிய 12 எண்ணெய்க் கம்பெனிகளில் அமெரிக்காவின் 7 கம்பெனிகள் முக்கியமானவை. 7 சகோதரிகள் என்ற அழைக்கப்பட்ட அந்தக் கம்பெனிகள் எÞசான், மோபில், செவ்ரான், டெக்சாகோ, கல்ப், ஷெல் மற்றும் பீபி ஆகியவையே. எண்ணெய் நிறுவனங்கள் பங்குகளுக்கு பெரும் தொகை ஈவாக வழங்கியதால் பங்குகளின் விலைகள் அதன் மதிப்பைபோல் பல மடங்கு உயர்ந்தது. பின் நாளில் இதுவே பல பிரச்சனைகளை தோற்றுவித்தது.
மூன்று தூண்கள்
மத்திய கிழக்குப் பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வயல்களையும், உலகம் முழுவதிலும் எண்ணெய்ச் சந்தையையும் தனது கையிலேயே வைத்திருக்க வேண்டுமானால், மத்திய கிழக்கின் அனைத்து முக்கிய நாடுகளையும் தனது செல்வாக்கில் வைப்பது அவசியம் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம் உணர்ந்தது. அதற்காக உருவாக்கப்பட்ட அமெரிக்கக் கொள்கையைச் செயல்படுத்த மத்திய கிழக்கிலேயே மூன்று நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. அந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவின் எண்ணெய்க் கொள்கையின் மூன்று தூண்களாகவே பணியாற்றின. 1) சவூதி அரேபியா. உலகின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி இது. 2) ஈரான். சிஐஏ உதவியுடன் 1953ஆம் ஆண்டில் இங்கு கலகம் நடத்தப்பட்டு ஷா என்பவரது ஆட்சி நிறுவப்பட்ட நாடு. 3) இÞரேல். 1948ஆம் ஆண்டு அமெரிக்காவின் பலத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. பாலÞதீன நாட்டை அபகரித்து பிளவுபடுத்தி யூதர்கள் மட்டுமே வசிக்க உருவாக்கப்பட்ட நாடு. ஐரோப்பாவில் பரவலாக இருந்த யூத வெறுப்பும், ஹிட்லரின் கொலை வெறியும் யூதமக்களை ஏகாதிபத்தியவாதிகளின் பகடைக்காயாக மாற்றியது என்பதை மறந்துவிடலாகாது. அன்று முதல் இன்று வரை அமெரிக்காவின் மிகப்பெரும் நிதியாதாரத்தைப் பெற்று வருகிற நாடு இது. சவூதி அரேபியாவில் இல்லாத அரசு கட்டமைப்பும் அடிப்படைக் கட்டமைப்பும் பெற்றிருந்த ஈரான் அமெரிக்காவின் கைப்பாவையான ஷா-வின் கையில் இருந்ததால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வருமானம் மலைபோல் குவிந்தது. ஷாவின் அரசிற்குஅதற்குக் கைமாறாக ஏராளமாக ஆயுத சப்ளை செய்தது. 1970க்கும் -78க்கும் இடைப்பட்ட காலத்தில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை ஈரானுக்கு அமெரிக்கா அளித்தது. உலக வரலாற்றிலேயே அமைதி காலகட்டத்தில் ஒரு நாட்டின் ராணுவ வல்லமையை மேம்படுத்துவதற்கு இவ்வளவு மிகப்பெரும் தொகை செலவிடப்பட்டது இல்லை என்று அமெரிக்க நிபுணர்களே ஆச்சரியப்பட்டார்கள். அமெரிக்காவின் பேராதரவு இருந்த காரணத்தால், மத்திய கிழக்கில் தன்னைத்தவிர வேறு யாரும் உயர்ந்தவர் இல்லை என்ற முடிவுக்கு ஷா வந்தார். ஈரானைச் சார்ந்திருக்காமல் வளைகுடாவில் உள்ள எந்த ஒரு அரபு நாடும் உயிர்வாழ முடியாது என்று பகிரங்கமாகக் கூறினார் ஷா.இன்று கதை வேறு. ஈரான் கைவிட்டுப் போனதால் அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. வெகு சீக்கிரத்தில் ஈராக்கின் சதாம் உசேனை ஈரானுக்கு எதிராக திருப்பிவிட்டது. பின்னர் அவரும் திசை மாறவே படையெடுத்து ஈராக்கை கைப்பற்றியது. எண்ணெய் கிணறுகள் அதன் வசம் வந்தன.
இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் வர்த்தக, முதலீட்டு ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்க ராணுவ ஒப்பந்தங்களின் மூலம் ஆங்காங்கு ராணுவ தளங்களை உருவாக்கும் சூழ்ச்சியில் இறங்கியது. நேட்டோ, சென்ட்டோ, சீட்டோ என்று ராணுவ ஒப்பந்தங்களை போட்டது. மக்களின் எதிர்ப்பு காரணமாக நேட்டோ தவிர மற்ற அமைப்புகள் கலைக்கப்பட்டன இருந்தாலும் வேறு வழிகளில் ராணுவ ஒப்பந்தங்களை போட்டு தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இடைவிடாது முயற்சிக்கிறது.
ஓபெக் அமைப்பின் தோற்றமும், பெட்ரோடாலர் வளையமும்
இத்தகைய பின்னணியில்தான், எண்ணெய் உற்பத்தியாகும் அரபு நாடுகளிலும், இதர எண்ணெய் வள நாடுகளிலும், தங்களது எண்ணெய்க்கு உரிய லாபம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற உணர்வும், அது தொடர்பான கருத்துக்களும் தீவிரமாக எழுந்தன. இதையொட்டி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஓபெக்) உதயமானது. பாக்தாத்தில் எண்ணெய் வள நாடுகளான ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா, வெனிசுலா ஆகிய நாடுகள்கூடி ஓபெக்கை உருவாக்கின. பின்னர் இந்த அமைப்பில் கத்தார், இந்தோனேசியா, லிபியா, ஐக்கிய அரபு எமிரேட், அல்ஜீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளும் இணைந்தன. துவக்கத்தில் இந்த அமைப்பு எண்ணெய் விலை குறித்து மேற்கத்திய பெட்ரோலிய வர்த்தகநிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அமைப்பாக இருந்தது. ஆனால் விரைவிலேயே எண்ணெய் உற்பத்தி அளவு, விலை நிர்ணயம், லாப நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கையாளுகிற அமைப்பாக இது தன்னை வலுப்படுத்திக் கொண்டது. ஒபெக் அமைப்பின் தோற்றம், சில நெருக்கடிகளை இது ஏகாதிபத்திய வாதிகளுக்கு உருவாக்கியது. ஒபெக் நாடுகளுக்கு துணிச்சலையும் கொடுத்தது. எகிப்து மீதும் சிரியா மீதும் இÞரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒருமித்த குரலில் எதிர்ப்பை வெளியிடும் துணிச்சலும் வந்தது. இது ஏகாதிபத்தியவாதிகள் விரும்பாத ஒன்றாகும். இந்த காலங்களில் ஏகாதிபத்திய வாதிகள் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்த உலக வங்கி மூலம் நிதி மூலதன ஆதிக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் சம்பாத்தியம் டாலர் வடிவில் இருந்ததாலும், சுத்திகரிப்பு தொழில் நுட்பங்கள், வர்த்தகம் இவை இரண்டும் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக ரகசியமாக இருந்ததாலும் ஒபெக் அமைப்பால் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை முறியடிக்க இயலவில்லை. அவர்களைச் சார்ந்தே இயங்க தள்ளப்பட்டது. இந்த நாடுகளின் சேமிப்பு அமெரிக்க வங்கிகளில் பெட்ரோ டாலர் என்ற பெயரில் திரண்டது. இந்த டாலரைக் கொண்டு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் விஞ்ஞான தொழில் நுட்பத் திறனோ, சொந்தக் காலில் நிற்கிற பொருளாதார அமைப்போ உருவாகாமல் ஏகாதிபத்தியவாதிகள் பார்த்துக்கொள்ள இது ஏதுவாயிற்று. ஒரு வழி அடைபட்டால் இன்னொரு வழியை ஏகாதிபத்திய வாதிகள் கண்டுபிடிப்பர் என்பதற்கு பெட்ரோ டாலர் பயன்படுத்தப்படுகிற விதம் அந்தந்த நாட்டு மக்களுக்கு சிறந்த பாடமாகும். பெட்ரோ டாலரை வைத்து அந்த நாட்டு மக்கள் விரும்பியதில் முதலீடு செய்ய முடியாது. உலக வங்கியும் அமெரிக்காவும் விரும்புகிற முறையில்தான் அதனைப் பயன்படுத்த முடியும். இன்று பெட்ரோ டாலர் வளையத் திலிருந்து வெளியேறாமல் முன்னேற முடியாது என்று கருதிய வெனிசுலா வெளியேறிய பிறகு அது சந்திக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை விவரிக்க இங்கு இடமில்லை.வெளியேறிய பிறகு கல்வி, தொழில் நுட்ப ஆய்வுகள், சுகாதாரம், இவைகளில் அங்கு ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தை உலகம் உற்று கவனிக்கிறது.
ஏகாதிபத்தியவாதிகளின் சாணக்கியம்
தன்னுடைய செல்வாக்கு மண்டலத்திலிருந்து வெளியேற எந்த நாட்டையும் விடக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை இக்காலங்களில் காணமுடியும். அமெரிக்க அரசின் ராணுவ- சூழ்ச்சி அரசியலின் ஒரு கருவிதான் இÞரேல். அமெரிக்கா அதை மட்டும் நம்பி நிற்கவில்லை. மன்னர் ஆட்சிமுறையை இப்பகுதியில் பாதுகாப்பதை முக்கிய வேலையாக அது கொண்டுள்ளது. மீறுகிற நாடுகளை ராணுவ ரீதியாக வேட்டையாட இஸ்ரேலை பயன்படுத்துகிறது. பாரசீக வளைகுடாவின் சுண்டைக்காய் நாடுகளான குவைத், பக்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளில் மன்னர்களின் அல்லது சர்வாதிகாரிகளின் ஆட்சி முறைக்கு பாதுகாப்பு கொடுத்து, அமெரிக்காவிற்கு அடங்க மறுக்கும் ஈரானை இன்று தனிமைப்படுத்துவதில் வெற்றி அடைந்து வருவதை காண்கிறோம். மத உணர்வுகளை தத்துவார்த்த ஆயுதமாக பயன்படுத்தியும் மக்களிடையே துவேஷத்தை வளர்க்கவும் அது சூழ்ச்சி செய்வதை சமூக இயலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நாடுகளிடையே நிலவும் மதரீதியான, இன ரீதியான, குழுக்கள் ரீதியான பிளவுகளை, பிரிவினைகளைப் பயன்படுத்துவது பயங்கரவாதத்தை விதைப்பது இவைகள் பல வெளிச்சத்திற்கு வந்ததை உலகமறியும். வளைகுடாவில் இடைவிடாத உள் நாட்டு மோதலுக்கு இவர்களது சாணக்கியமே காரணமாகும். எகிப்து, ஈரான், ஈராக், ஆப்கானிÞதான் போன்ற நாடுகளில் குழப்பத்தையும் மோதலையும் உருவாக்க சவூதி அரபு மன்னரின் உதவியோடு அல்கொய்தாக்களை வளர்த்தனர். ஆப்கானிÞதானில் தாலிபன்களை உருவாக்கினர். இந்த சாணக்கியமும் நாளடைவில் அவர்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கையை கூட்டியதே தவிர குறைக்கவில்லை.
ஏகாதிபத்தியவாதிகளின் ஆசைகள்
இன்றைய உலகில் பெட்ரோலியம் இல்லாமல் நவீன வாழ்க்கை இல்லை என்பதை ஏகாதிபத்தியவாதிகள் நன்கு உணர்ந்திருக்கின்றனர், எதிர் காலத்தில் எரிபொருளாக பயன்படுவது குறைந்தாலும் பல ரசாயன பொருள்களின் மூலமாக பெட்ரோலியம் இருப்பதால் உலகளவில் அது ஒரு அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகவே இருக்கும். எனவே கிணறுகள் யார்வசம் இருந்தாலும் உலகை ஆள எண்ணெய் விநியோகம் தங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம் என்று ஏகாதிபத்திய வாதிகள் கருது கின்றனர்.அதோடு குழாய்கள் மூலம் கடலுக்குள்ளும் குழாய்களை பதித்து எண்ணெயை எடுத்துச் செல்வது சிக்கனம் மட்டுமல்ல கப்பல், லாரி, மற்ற வாகனங்களைவிட வேகமாக கொண்டு செல்ல முடியும் என்பதையும் உணர்கின்றனர்.நாடுகளைத்தாண்டி மலைகளைத்தாண்டி கடலுக்கடியிலும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் குழாய்களை பதிப்பதால் திருடு,பயங்கர வாதிகளின் தாக்குதல், சண்டை நடந்தால் ஏற்படும் பாதிப்பு, இவைகளிலிருந்து பாதுகாப்பு தேவை என்பதைத் தவிர வேறு தடைகள் எதுவுமில்லை. இந்த பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த ஏகாதிபத்தியவாதிகள் ஆங்காங்கு ராணுவதளங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். இது மிகுந்த செலவாகும் என்பது தெரிந்தே இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். நேர்ட்டோ ராணுவம், அமெரிக்க ராணுவம் இவைகளை ஆங்காங்கு வைப்பது அவைகளை பராமரிக்க அந்தந்த நாடுகளை செலவு செய்யவைப்பது அவர்களது ராஜதந்திர அரசியல் சூழ்ச்சியாகும். பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான் செலவில் அமெரிக்க, நேட்டோ படைகள் இருப்பதைப்போல் உலகின் முக்கிய இடங்களில் தங்களது ராணுவத்தை நிறுத்த அரசியல் சூழ்ச்சியில் இறங்குகின்றனர், மக்களின் எதிர்ப்பு இருக்குமானால் அந்த நாட்டில் ஜனநாயகத்தை புதைக்க உதவுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் நாட்டில் அரசியல் தலைவர்களை,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை, அதிகாரிகளை, நிபுணர்களை, பிரச்சார கருவிகளை, விலை கொடுத்து வாங்குகின்றனர். சோசலிச அமைப்பை நிர்மாணிக்கும் நாடுகள் என்றால் பொருளாதாரத் தடை, அதைச் சுற்றி ராணுவ, ஏவுகணைத் தளங்கள் அமைத்துக் கொள்வது, சோசலிசம் பற்றி புரளிகளை கிளப்புவது அவர்களது சர்வதேச அரசியலின் பகுதியாகும். கியூபா மீது அது தொடுத்துவரும் தாக்குதலை விவரிக்க இங்கே இடமில்லை. தீக்கதிரை தொடர்ந்து படிப்போருக்கு இது சொன்னதை திருப்பிச் சொல்வதாகும். இன்று ஜப்பானிலும், தென்கொரியாவிலும், அணுகுண்டுகளை ஏவும் ஏவுகணைத் தளங்களையும்அந்த நாடுகளின் மக்களின் எதிர்ப்புக்கிடையே அமெரிக்கா ஏன்வைத்துள்ளது ? சீனாவில் இருக்கும் சோசலிச நிர்மாணம் அதன் கண்ணை உறுத்துகிறது. சமீபத்தில் ஜப்பானில் பதவி யேற்ற புதிய பிரதமர் அமெரிக்க படைத்தளத்தை அகற்ற கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டார். ஜப்பான் நாடாளு மன்றத்தில் ஏகாதிபத்திய வாதிகளுக்கு செல்வாக்கு பிரதமரை விட அதிகம் என்பதையே இது காட்டுகிறது.
மாற்று சாத்தியமே
எண்ணெய் குழாய்களை குழாய்கள் யார் எந்த நோக்கத்தோடு போட்டாலும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, மலிவான விலையில் பெட்ரோலியம் கிடைக்க வழி பிறந்துவிடுகிறது. ஆனால் குறுக்கே நிற்பது ஏகபோகங்களும், அதனை காக்கும் ஏகாதிபத்திய ராணுவங்களும் என்பதை பளிச்செனப் பார்க்க முடிகிறது. இது ஏழை நாடுகளில் நாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அவசியம் என்ற உணர்வை உருவாக்கும் அரசியல் இயக்கங்கள் வலுப்பெற அடிப்படையாகிவிடுகிறது.இதுவே ஏகாதிபத்திய அரசியல் சூழ்ச்சிக்கு எமனாய் ஆகிவிடுகிறது. சந்தை ஏகபோகத்தை முறியடிக்கும் சக்தியாய் ஆகிவிடுகிறது.
நிதி மூலதனத்தால் உருவாகும் நெருக்கடியை ராணுவத்தால் விரட்டி அடிக்க முடியாது. நிதி மூலதனம் சுழலவும் டாலரின் மீது நம்பிக்கையும் நீடிக்க வேண்டுமானால் கூட உலக நாடுகளின் ஒத்துழைப்பு அமெரிக்காவிற்கு அவசியமாகிறது. இன்று வெப்பமயமாதலை தடுக்கும் சுமையை நம்மீது திணிக்க ஏகாதிபத்தியவாதிகள் முயன்ற போது சீனா, இந்தியா (அரைகுறையாக) ஏழை நாடுகளின் ஆதரவோடு காட்டிய உறுதி அவர்களை பின்வாங்க செய்ததை அறிவோம். அது போல் சர்வதேச சரக்கு வர்த்தகத்திலும் ஏகபோகங்களின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியும்.
இந்த உண்மைகளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு அணுசரனை யாக இருந்தால்தான் வாழ முடியும் என்று கருதுகிற இந்திய ஆட்சியாளர்களை போன்றோர்கள் உணர்கிறவரை அல்லது அந்தந்த நாட்டு மக்களால் உணர்த்தப்படுகிற வரை நெருக் கடிகள் பெருகும்.
–எஸ்.பி.ராஜேந்திரன்
Leave a Reply