மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை இன்றும், என்றும் நமது பேராயுதம்


(மார்க்சிய அடிப்படை நூல் அறிமுகம்-1)

1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற இடி முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தடைகளால்  தலைமறைவாக  இயங்கிய கம்யூனிஸ்ட் லீகின் முடிவிற்கிணங்க மார்க்ஸ்(30), எங்கெல்ஸ்(28) என்ற இரு இளைஞர்கள் தயாரித்த உணர்ச்சி மிகு அறிக்கை இது. இது ஏன் எழுதப்பட்டது என்பதை தொடக்கவுரையிலேயே அவர்கள் கூறிவிடுகின்றனர்.

“கம்யூனிசத்தை பூதமாக சித்தரிக்கும் குழந்தைக் கதைகளை முறியடிக்கவும், வெளிப்படையாக உலகமறிய கம்யூனிஸ்ட்டு களின் கருத்துக்கள், லட்சியங்கள், போக்குகள் ஆகியவைகளை விவரிக்க, பல்வேறு இனங்களைச் சார்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி கம்யூனிஸ்ட் அறிக்கை ஒன்றை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலியன், பிலெம்மிஷ்,டேனிஷ் மொழிகளில் வெளியிட தீர்மானி த்தோம்.”

ஆனால் அவர்கள் நினைத்தபடி 6 மொழி களில் ஏக காலத்தில் வெளியிட இயல வில்லை என்றாலும் வெகு சீக்கிரத்தில் அதன் உள்ளடக்கம் ஊட்டிய உத்வேகம் பல மொழிகளில் அது வெளிவந்தது.  .  “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை” ஃபிரெஞ்சு மொழியில் பிரசுரிக்கப்பட்டு  சில வாரங்களில் 1848 பிப்ரவரி 24ஆம் நாள் ஃபிரான்சில் புரட்சி வெடித்தது. ஜெர்மானிய மூலத்தின் ஆங்கில மொழியாக்கம் முதன் முறையாக 1850இல் வெளிவந்தது. 1848லிருந்து 1917இல் ரஷ்யப் புரட்சி வெடிப்பதற்கு முன்பு வரை – சோசலிச ஆட்சி அமைப்பு எந்த நாட்டிலும் இல்லாத காலகட்டத்தில் – 35 மொழிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது! 544 பதிப்புகள் வெளிவந்திருந்தன! கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டு 162 ஆண்டுகளில்   பல நூறு ஆண்டுகளாக பிரசுரிக்கப்பட்டு வரும் பைபிள் மற்றும் குர்-ஆன் ஆகிய மத நூல்களுக்குப் போட்டியாக ஏராளமான மொழிகளில் பல நூற்றுக்கணக்கான பதிப்புகளில் பல நூறு கோடி பிரதிகள் என “அறிக்கை” இன்றும் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

162 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று படித்தாலும் உற்சாகமும் நம்பிக்கையையும் தரும் ஆற்றலை அது இழக்கவில்லை என்பதுதான் அதன் சிறப்பு, காரணம் ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வாடை, ஐரோப்பிய தத்துவ மோதல்களின் சாரம், லாபத்தின் ஊற்றுக்கண்ணையும் மூலதனத்தின் புதிரையும் அறிய முடியாத அன்றைய பொருளாதார மேதைகளின் தவிப்பு, ஐரோப்பிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் விளைவு, அறியாமை இருளில் கிடந்த ஐரோப்பிய பாட்டாளிகளின் குருதியும் வியர்வையும் சிந்தி கலவரத்திலே ஈடுபட்டு தோற்று, தேடிப் பெற்ற வர்க்க உணர்வு, இவைகளை குறுகத்தரித்த குறள் போல்  சுருக்கி அழகாக அது படம் பிடிக்கிறது.30நிமிடங்களில் படித்து முடிக்க கால வேகத்தின் அருமையை உணர்ந்து எழுதப்பட்ட  கைஅடக்க நூல்.

¨              இதைப் படிக்கும் ஏழைக்கு வர்க்க விழிப்புணர்வை தருகிறது.

¨              மாணவனுக்கு மானுட விடுதலை என்ற லட்சியத்தோடு வாழ உத்வேகம் ஊட்டுகிறது.

¨              தத்துவ அறிஞனுக்கு அவரது தத்துவத்தின் செயல் திறனை அறியவும், அளக்கவும் உதவுகிறது,

¨              விஞ்ஞானிக்கு மனிதாபிமானத்தோடு விஞ்ஞான அறிவை இணைக்க தூண்டிவிடுகிறது.

¨              வரலாற்று ஆசிரியனுக்கு எதை வரலாறு என்று எழுதுவது என்பதை காட்டுகிறது,

¨              சமூகவியலாளனுக்கு மானுட வாழ்வின் பிரச்சனைகளை அலசி ஆராய புள்ளிவிவர மோசடியில் ஈடுபடாமல் இன்னொறு வழியைக் காட்டுகிறது.

¨              சுருக்கமாக யார் படித்தாலும் அவரது மன வோட்டத்தை மறுசீரமைப்பு செய்யவல்ல இளமையின் துடிப்பும் அறிவின் முதிர்ச்சியும் இதில் சங்கமித்தது போல் இன்னொரு நூல் இனி தான் படைக்கப்படவேண்டும் என்றால் மிகை ஆகாது.

இதில் சில கருத்துக்கள், வரலாற்று திருப்பங்களை சரிவர கணக்கிடாமலும், சிலவற்றை உள்ளதை உள்ளபடி கூறாமல் மிகைப்படுத்தியும் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டதாக அந்த மேதைகள் பின்நாளில்  உணர்ந்தனர்.அதனை பதிப்புரையிலும் அடிக்குறிப்பாகவும் குறிப்பிட்டு அறிக்கையில் கை வைக்காமல் வரலாற்று ஆவணமாக நமக்கு கொடுத்துவிட்டனர். இது அந்த மேதைகளின் நேர்மையை காட்டுகிறது .

இருபது ஆண்டுகளுக்கு முன், 1991இல் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச அமைப்புகளின் வீழ்ச்சியின் பின்னணியில், “பனிப்போர் முடிந்து விட்டது. மானுட வரலாற்றின் திசை வழியும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. தோற்றது சோசலிம், வென்றது முதலாளித்துவம்” என்று முதலாளித்துவ அடிவருடிகள் கொக்கரித்தனர். ஆனால் கடந்த இருபதாண்டு அனுபவமும் இன்று உலக முதலாளித்துவம் சந்திக்கும் பெரும் நெருக்கடியும் உலகெங்கும் நிகழ்ந்து வரும் எழுச்சிமிக்க உழைப்பாளி மக்கள் போராட்டங்களும், கம்யூனிஸ்ட்டுகளுக்கெதிராக கிளப்பப்படும் புரளிகளும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல்வரிகள்-” ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களை கம்யூனிசம் என்ற மாபெரும் புதிய சக்தி நடுநடுங்க வைக்கிறது” என்று பொருள்படும் வரிகள் – காலாவதியாகி விடவில்லையென்று நமக்கு உணர்த்துகின்றன.

“அறிக்கை” வெறும் கனவல்ல.

இந்த 160க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் உலகில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புரட்சிகர இயக்கங்களின் முன்னேற்றம் முன்பின் முரணற்று நேர்கோட்டில் செல்லாவிட்டாலும், உலகில் ஏராளமான, முற்போக்கான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ‘அறிக்கை’ வெளிவந்த சமயம் ஐரோப்பாவில் பல நாடுகளில் 1848ஆம் ஆண்டில் புரட்சிகள் வெடித்தன. ஆனால் ஆட்சியை கைப்பற்றிய முதலாளி வர்க்கம் அரசெனும் அடக்குமுறைக் கருவியை கூர்மை ஆக்கியது. பூர்சுவாக்களின் எதிர்புரட்சி நடவடிக்கைகளாலும் தொழிலாளி வர்க்கத்தின் அன்றைய தத்துவார்த்த பலவீனத்தினாலும், அரசியல் பொருளாதார இயல்புகளைப் பற்றிய அறிமுகக் குறைவாலும் வீரியமிக்க போராட்டங்களும் தோற்றன. 1850லிருந்து 1865 வரை தொழிலாளி வர்க்க இயக்கங்கள் தலைதூக்குவதே கடினமாக இருந்தது. ஆனால் 1864இல் மார்க்ஸ் – எங்கல்ஸ் முன்முயற்சியில் முதல் தொழிலாளி வர்க்க சர்வதேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது. 1871இல் பாரிஸ் நகர தொழிலாளி வர்க்கம் வீரஞ்செறிந்த ஆயுதப் போராட்டம் நடத்தி மனித வரலாற்றில் முதல் சோசலிச ஆட்சியை அரங்கேற்றியது. 72 நாட்களுக்குப் பின் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் ஒன்றிணைந்து “பாரிஸ் கம்யூன்” என்ற சோசலிச ஆட்சியை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து ஒழித்தனர். அதன்பின், ஐரோப்பா முழுவதும், வட அமெரிக்காவிலும் முதலாளித்துவம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியது, மீண்டும் ‘முதலாளித்துவத்தின் இறுதி வெற்றி’ என்று ஆளும் வர்க்கங்களால் கருதப்பட்டது. பின்னர் 1917இல் வெடித்த அக்டோபர் புரட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மையக் கருத்தாகிய, ‘முதலாளித்துவமும் ஒரு மானுட வரலாற்று வளர்ச்சிக் கட்டமே, அதை தொழிலாளி வர்க்கம் வீழ்த்தி சோசலிச அமைப்பை உருவாக்கும்’ என்ற கூற்றை மெய்ப்பித்தது. 1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவுற்றபின் உலகமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கும் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கும் சோசலிசப் பதாகையின் கீழ் வந்தன. 1980-1990களில் சோசலிச இயக்கங்களுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது அவை மீண்டும் முன்னேறத் துவங்கியுள்ளன. முதலாளித்துவம் என்ற உற்பத்தி அமைப்பு நிரந்தரமானது அல்ல, மானுட வரலாற்று வளர்ச்சியில் முதலாளித்துவ அமைப்பால் தோற்றுவிக்கப்படும், சுரண்டப் படும் தொழிலாளி வர்க்கமே இந்த அமைப்பிற்கு சாவு மணி அடித்து, சோசலிசம் நோக்கி மானுட வரலாற்றை முன்னெ டுத்துச் செல்லும் என்ற, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எடுத்துரைக்கின்ற மாபெரும் வரலாற்று உண்மையை நிரூபணமாக்கும் பணியும், பயணமும் தொடர்கின்றன என்பதையே அறிக்கை வெளிவந்த பின்பான 160 ஆண்டு வரலாறு நமக்கு படிப்பினையாக அளிக்கிறது.

முதலாளித்துவம்

 

 

 

 

 

 

 

 

 

 

வையத் தலைமை கொள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு அழைப்பு:

கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி லெனின் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ஒரு மாமேதைக்குரிய தெளிவுடனும் மிகச் சிறப்பாகவும் இந்த ஆவணம் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை முன்வைக்கிறது. இது முன்பின் முரணற்ற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தன்னுள் அனைத்துக் கொள்கிறது. வளர்ச்சி பற்றிய முற்றிலும் முழுமையானதும் ஆழமானதுமான இயக்கவியல் கண்ணோ ட்டம் இது. வர்க்கப் போராட்டத் தத்துவத்தை தெளிவாக முன்வைக்கிறது. உலக வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை – புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளி என்ற பாத்திரத்தை முன்வைக்கிறது.”

கம்யூனிஸ்ட் அறிக்கையின் மையக் கருத்துக்களை, 1888ஆம் ஆண்டில் வெளிவந்த அறிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்காக தான் எழுதிய முன்னுரையில் ஏங்கல்ஸ் பின்வருமாறு விவரிக்கிறார்;

“(அறிக்கையின் அடிப்படைக் கருத்து) பின்வருமாறு.

ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் நிலவும் பொருளாதார உற்பத்தி மற்றும் பரிமாற்று அமைப்பும், அதன் விளைவாக உருவாகும் சமூக அமைப்புமே அடித்தளம் ஆகும். (ஒரு வரலாற்றுக் கட்டத்தின்) அரசியல் மற்றும் அறிவுசார் வரலாறு என்பது இந்த அடித்தளத்தின் மீதே கட்டப்படுகிறது. இதை வைத்தே புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே, (நிலம் பொதுவுடைமையாக இருந்த துவக்ககால கண சமுதாயத்தின் அழிவிற்குப் பின்பான) அனைத்து மானுட வரலாறும் வர்க்கப் போராட்டங்களும் வரலாறே ஆகும். இவை சுரண்டுவோருக்கும், சுரண்டப்படுவோருக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப் படும் வர்க்கங்களுக்கும் இடையேயான போராட்டங் களாகும். இவ்வர்க்கப் போராட்டங்களில் ஒரு வரலாற்று வளர்ச்சி தொடர்ந்து ஏற்படுகிறது. இன்று அது எட்டியுள்ள கட்டம் என்பது சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உள்ள பாட்டாளி வர்க்கம் ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தனது விடுதலையை அடைவதற்கு, அதே சமயத்தில், மானுடச் சமூகம் முழுவதையும் என்றென்றும் அனைத்து வகை சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்க வேறுபாடுகள் மற்றும் வர்க்கப் போராட் டங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்து, விடுவித்தாக வேண்டும்.”

இந்த அறிக்கையின் நான்கு பகுதிகளில், மிகுந்த விறுவிறுப்புடன், மானுட வரலாற்றின் பல கட்டங்ளை நம் கண்முன் நிறுத்தி கூறவந்த மையக் கருத்துக்களை எங்கல்சும், லெனினும் மிகச் சுருக்கமாக மேலே கண்டவாறு பதிவு செய்தனர் .

அறிக்கையின் நான்கு பகுதிகளில், முதல் பகுதி மானுட வரலாற்று வளர்ச்சியில் எவ்வாறு முதலாளி வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் உருவாக்கப்பட்டு நவீன உலகில் எதிரி வர்க்கங்களாக ஒருவரையொருவர் சந்திக்கின்றனர் என்பதை தெளிவுற, அற்புதமான வகையில் விளக்குகிறது. அறிக்கையின் இரண்டாம் பகுதி, பாட்டாளிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான லட்சிய உறவையும், பிணைப்பையும், தொழிலாளி வர்க்கம் அரங்கேற்றும் புரட்சியில், தொழிலாளி வர்க்கத்தை அரசை நிர்வகிக்கும் வர்க்கமாக உயர்த்தும் பணி முதல்படி என்பதையும் விளக்குகிறது. அறிக்கையின் மூன்றாம் பகுதி, அறிக்கை முன்வைத்துள்ள அறிவியல் பூர்வமான சோசலிச தத்துவத்திற்கு முன்னதாக, சமூகத்தில் ‘சோசலிசம்’ என்ற பெயரைத் தாங்கி வந்த பல்வேறு வகையான கருத்துக்களையும், இயக்கங்களையும் விமர்சனப் பார்வையுடன் விளக்குகிறது. அவற்றின் அறிவியலுக்குப் புறம்பான நிலைபாடுகளையும், பார்வைகளையும் அறிவியல் பூர்வமாக அம்பலப்படுத்துகிறது. அறிக்கையின் நான்காவது இறுதிப் பகுதி 1848 வாக்கில் ஐரோப்பாவில் இருந்த நிலைமைகளின் பின்புலத்தில், ஏற்கனவே அன்று களத்தில் இருந்த, அரசு அமைப்புக்கெதிரான பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாக கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது..

முதலாளி வர்க்கம்- தொழிலாளி வர்க்கத் தோற்றமும், மோதலும் ஐரோப்பிய முதலாளித்தவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய மிகச் சுருக்கமானதும் அதே சமயம் மிகத் துல்லியமானதுமான படப்பிடிப்பை அறிக்கையின் முதல் பகுதி அளிக்கிறது.அந்த அறிக்கை கூறுகிறது

“மத்தியகாலத்தில் (8 முதல் 16ஆம் நூற்றாண்டு காலமெ னலாம்) பிரபுக்களிடம் அடிமைப்பட்டு விவசாயம் செய்தவர்கள் அன்றைய நகரை நோக்கி வந்து வர்த்தகர்களாக ஆனவர்களின் ஒரு பகுதியினர் (பொருள் உற்பத்தியில் ஈடுபடும்) ஆரம்ப காலத்தில் பூர்சுவாக் களாக உருவெடு த்தனர். எங்கெல்லாம் இவர்கள் கை ஓங்கி இருந்ததோ அங்கு நிலப் பிரபுத்துவ கால எசமானனின் பரிவும் அடிமையின் பய பக்தியும் கொண்ட பழைய சமூக உறவிற்கு முடிவு கட்டினர். நிலப் பிரபுத்துவ உறவை வீழ்த்த எந்த ஆயுதத்தை (பாட்டாளி வர்க்கத்தை) பிரயோகித் தனரோ அதே ஆயுதம் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது” என

முதலாளி தொழிலாளி வர்க்கங்களின் தோற்றத்iயும் அவர்களுக்கிடையே உருவாகும் மோதலையும் இலக்கிய நடையில் அறிக்கை பதிவு செய்கின்றது.

முதலில், முதலாளித்துவத்தின் – முதலாளி வர்க்கத்தின் – வரலாற்றுக் கடமையை அது எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை அறிக்கை விளக்குகிறது.

‘நூறு ஆண்டுகள் கூட நிறைவு பெறாத தனது ஆட்சிக் காலத்தில் முதலாளி வர்க்கமானது, இதுவரை மானுடத்தின் அனைத்துத் தலைமுறைகளும் உருவாக்கியதை விட மிக அதிகமானதும் பிரம்மாண்டதுமான உற்பத்தி சக்திகளை உருவாக்கியுள்ளது.!’

முதலாளித்துவ அமைப்பு லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டது. எனவே, மூலதனம் எல்லாத்துறைகளுக்குள்ளும் லாபம் தேடி நுழையும். நாடுகளின் எல்லைகளைத் தகர்த்து உலகளாவிய சந்தைகளையும் மலிவான உழைப்பையும், மூலப் பொருட்களையும் நாடும். ஒரே வார்த்தையில் சொன்னால், முதலாளித்துவமும் உலகமயமும் உடன்பிறந்தவை.

அறிக்கை கூறுகிறது:

‘தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தொடர்ந்து விரிவடையும் சந்தைகளை நாடி, உலகு எங்கும் முதலாளி வர்க்கம் தேடி அலைகிறது. எல்லா இடங்களுக்கும் செல்வதும், குடியேறுவதும், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதும் முதலாளி வர்க்கத்தின் தவிர்க்க முடியாத இயல்பான குணங்கள்.”

முதலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை – நிலப்பிர புத்துவ சமூக அமைப்பை தூக்கியெறிந்து, ஒரு முதலாளித்துவ அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மானுடத்தின் உற்பத்தி சக்திகளை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்வது என்ற பணியை – அதுநிறைவேற்றுவதன் மூலம், முதலாளி வர்க்கம் மட்டும் வரலாற்றுக் களத்திற்கு வந்து தனியாக நிற்கவில்லை. கூடவே உருவாகிறது. நவீன தொழிலாளி வர்க்கம். எப்படி நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக மாறினவோ, அதேபோல் முதலாளித்துவ அமைப்பு வளர்ச்சி பெற, ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சிக்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் முட்டுக்கட்டையாக மாறுகின்றன. எப்படி மானுடத்தை நிலப்பிரபுத்துவ அமைப்பின் எல்லைகளைத் தகர்த்து, முதலாளித்துவம் முன்னெடுத்துச் சென்றதோ, அதேபோல், மானுட வளர்ச்சிக்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் தடையாக மாறும் பொழுது, முதலாளித்துவ அமைப்பை தகர்த்தெறிந்து, மானுடத்தை அடுத்த உயரிய சோசலிச கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வரலாற்றுப் பணியை நவீன தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும். இந்தக் கோட்பாட்டை அறிக்கை அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. முதலாளித்துவ அமைப்பில் மீண்டும், மீண்டும் வெடிக்கும் பொருளாதார நெருக்கடியையும் தொழில் மந்த நிலையையும் சுட்டிக் காட்டுகிறது அறிக்கை. இதன் படிப்பினை என்ன? நவீன உற்பத்தி சக்திகள் முதலாளி வர்க்கத்திற்கும் அதன் ஆட்சிக்கும் அவசியமான தனி உடைமை உறவுகளை எதிர்த்து மோதுகின்றன… முதலாளித்துவ சமூக அமைப்பின் நிலைமைகளும் உறவுகளும், நவீன உற்பத்தி சக்திகள் உருவாக்கும் செல்வத்தை கட்டுப்படுத்த இயலாதவை. எனவே முதலாளித்துவ அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தான் மானுடம் முன்னேற முடியும். அந்தப் பணியை செய்து முடிக்க வல்லது எந்த சமூக சக்தி என்றால், அது நவீன தொழிலாளி வர்க்கம் தான்!

ஆலைகளில் நுழைவது, முதலாளித்துவச் சுரண்டலுக் கெதிராக அன்றாடம் போராடுவது, படிப்படியாக அமைப்பு களை உருவாக்கி ஒன்றுபடுவது, கல்வி அறிவு பெறுவது,  தொழில் வளர்ச்சி நிகழ்கையில் முதலாளி வர்க்கத்திலிருந்தே அறிவு ஜீவிகள் தொழிலாளி வர்க்கத்திற்கு வந்து சேருவது என்று பல கட்ட வளர்ச்சியின் தொடர்ச்சியாக நவீன கால அரசை நிர்வகிக்கும் வர்க்கமாக படிப்படியாக தொழிலாளி வர்க்கம் வளர்வது தவிர்க்க முடியாது. அறிக்கை பின்வருமாறு இதன் சாராம்சத்தைக் கூறுகிறது.

நமது காலகட்டம் பூர்சுவா யுகமாகும். இதன் தனித்துவ குணம் சமூகத்தில் நிலவும் பல ரகமான வர்க்கங்களின் பகைமைகளை சுருக்கி விடுகிறது. சமூகத்தை மேலும், மேலும் எதிரும் புதிரு மாக நிற்கும் முகாம்களாக ஆக்குகிறது. முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என சமூகத்தை பிரித்து நேருக்கு நேர் மோத விடுகிறது.

சொத்துடைமையும் –  கம்யூனிஸ்ட்டுகளும்

அறிக்கை கூறுகிறது: கம்யூனிசத்தின் தனித் துவத் தன்மை பொது வாக சொத்துடைமையை அழிப்பதல்ல. பூர்சுவா வழியில் செல்வம் திரட்டும் முறையை அது ஒழித்துவிடும். மூலதனம் என்பது கூட்டு முயற்சியால் உருவாகிறது. ஏராளமான பேர்களின் இணைந்த செயல்பாட்டின் விளைவாகும்,அதைவிட ஒரு சமூகத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படும் பொழுதுதான் அது இயங்க இயலும் என்பதே சரி, ஆகையி னால் மூலதனம் என்பது தனி நபருடையதோடு மட்டுமல்ல அது ஒரு சமூக சக்தி. ஆகையினால் மூலதனம் பொது உடைமை ஆகிற பொழுது தனி நபரின் சொத்து பொது உடைமை ஆகவில்லை. மாறாக தனியார் உடைமையாக இருந்த மூலதனம் சமூகத் தன்மை கொண் டதாக ஆகிறது.

இன்று நாம் சவால்விட்டு கேட்கிறோம்! 160 ஆண்டு களுக்கு முன்னால்  அந்த இரண்டு இளம் நண்பர் கள் மூலதனத்தை பற்றி மேலே குறிப்பிட்டதை   மார்க்சிசத்தை மறுக்க புரளிகளை விதைக்கும் இன்றைய பூர்சுவா மேதாவிகளால் மறுக்க முடியுமா? அல்லது மறுக்கும் கணக்கையோ, சூத்திரத்தையோ காட்டுவார்களா?அன்று மூலதனத்தை ஒரு புதிராக கருதி திகைத்து நின்ற பொருளாதார மேதைகளின் கண்களில்படாத ஒன்றை அந்த இளம் நண்பர்கள் கண்டார்கள் என்பதை மறுக்க முடியுமா?

மூலதனம் என்ற சமூக சக்தியை, அரசியல் அதிகாரத்தை வைத்து பூர்சுவாக்கள் சுதந்திரமாக ஆட்டம் போடுவதை, ஊகவாணிபத்தில் விளையாடுவதை ஏட்டளவில் தடுக்கும் சட்டப் பிரிவு இல்லாத அரசியல் நிர்ணயச்சட்டம் இன்று எங்காவது உண்டா?எங்கும் இல்லை,அவர்கள் கையில் அதிகாரம் உள்ள வரையில் செயல்படாது என்பது தானே எதார்த்தம். அந்த ஷரத்துக்கள் எல்லாம் புலித்தோல் போர்த்தி புல் மேயச் சென்றுவிடும் என்பதுதானே எல்லா நாட்டு மக்களின் அனுபவம். இன்னொரு முக்கியக் கேள்வி. மூலதனம் என்ற சமூக சக்தியை முன் யோசனையுடன்  சமூக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் இன்றைய நெருக்கடியை தாண்டமுடியுமா?

தொழிலாளி வர்க்கமும் – கம்யூனிஸ்டுகளும்

கம்யூனிஸ்டுகளின் நோக்கம், உழைப்பாளி மக்களை வர்க்கமாகத் திரட்டி, முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே யாகும் என்று வலியுறுத்தும் அறிக்கை, கம்யூனிஸ்டுகள் மீதும் கம்யூனிசத்தின் மீதும் ஆளும் வர்க்கத்தினர் வாரியிறைக்கும் அவதூறுகளையும் பொய்க் கூற்றுகளையும் அறிக்கையின் இரண்டாம் பகுதியில் ஆணித் தரமாக நிராகரிக்கிறது. பாட்டாளி வர்க்க அரசின் உடனடி நடவடிக்கைகளின் பொதுவான அம்சங்களையும் இப்பகுதி விளக்குகிறது. இப்பகுதி மிகவும் எதார்த்தமாகவும் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். ஒரு “புரட்சிகரத் திட்டம்” வெறும் “புரட்சிகர வாய்ச் சவடால்” அல்ல. எதார்த்த நிலைமைகளில் உள்ளதை கணக்கில் எடுத்து,  அதனை மாற்றுவது எப்படி என்பதை விவாதிக்கிற ஆவணம் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை!

கம்யூனிஸ்டுகளின் கோட்பாடுகள் அல்லது சித்தாந்த முடிவுகள் யாரோ ஒரு சமூக சீர்திருத்த வாதியாலோ, மேதையாலோ கண்டுபிடிக்கப்பட்ட அல்லது புனைந்து உருவாக்கப்பட்ட கருத்துக்களையோ, கோட்பாட்டையோ அடிப்படையாக எந்த வழியிலும் கொள்ளவில்லை என்று அந்த அறிக்கை பிரகடனம் செய்கிறது.

இந்த அறிக்கையின் இரண்டாம் பகுதியின் முடிவில் கம்யூனிஸ்டுகளின் நோக்கத்தைப்பற்றி குறிப்பிடுகிற வாசகம் எல்லா கால கம்யூனிஸ்டு களுக்கும் பொருந்துவதாக உள்ளது.

“வர்க்கப்பிரிவினைகளும் முரண்பாடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பாடாவதி பூர்சுவா சமூகத்திற்கு பதிலாக ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்வதன் மூலமே எல்லோ ருடைய முன்னேற்றத்தையும் உத்தரவாதப்படுத்த முடியும் என்ற நிலவரத்தைக் கொண்ட ஒரு கூட்டமைப்பை பெறுவோம்”

மானுடத்தின் எதிர்காலம் இப்படி அமைய வழிகளை தேடுவதே கம்யூனிஸ்ட்டுகளின் அன்றாட வேலை என்பதை இப் பகுதியின் நிறைவான வாக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இன்று தனி நபர் சுதந்திரம் என்பது அமெரிக்கா விலும் சரி, இந்தியாவிலும் சரி, பூர்சுவாக் களுக்குத் தானே தவிர பெருகி வரும் உழைப் பாளர்களுக்கல்ல என்பதை தொழிற் சாலைகளின் கேட்டுகள் அலறிக் கொண்டே இருப்பதை கேட்கலாம். அமெரிக்க சுதந்திரப் போர் பிரகடனத்iயும், பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களையும் அதைத் துவக்கிய பூர்சுவா வர்க்கம் குப்பை கூடையிலே வீசிவிட்டது என்பதை ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுவதை பார்க்க முடியும். அந்த முழக்கங்களை உணர்வு பூர்வமாக நிறைவேற்றும் ஆற்றல் நவீன பாட்டாளி வார்க்கத்திற்கே உண்டு என மார்க்ஸ், எங்கெல்ஸ் எப்படி முடிவிற்கு அன்றே வந்தார்கள் என்பதை அறிய இரண்டாவது பகுதி உதவுகிறது.

அறிக்கையின் மூன்றாம் மற்றும் நான்காம் பகுதிகள்

அறிக்கையின் மூன்றாம் பகுதி, முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து தோன்றி வளர்ந்த காலத்தில், அதை எதிர்த்து உருவான, சமத்துவக் கருத்தோட்டம் கொண்டிருந்த பல்வேறு “சோசலிச” போக்குகளைப் பற்றி விளக்குகிறது.  “பிரபுத்துவ சோசலிசம்”, குட்டி முதலாளித்துவ சோசலிசம்”, இதன் பிரத்யேக ஜெர்மானிய வடிவமான “உண்மை” சோசலிசம் ஆகிய ‘சோசலிச ரகங்கள்’, வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் பார்வை கொண்டவை. எனவே இவ்வகைகள் “பிற்போக்கு சோசலிசம்” என்று அறிக்கை கூறுகிறது. அடுத்து, முதலாளித்துவம் வேரூன்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, இந்த அமைப்பில் ஏழை உழைப்பாளி மக்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு மனம் வருந்தும் முதலாளி வர்க்கப் பகுதியினர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விழைகின்றனர். இதற்கு சோசலிஸ்ட் தத்துவ முலாம் பூசப்படுகிறது. இதன் வடிவங்களை ‘முதலாளித்துவ சோசலிசம்’ என்று அறிக்கை அழைக்கிறது. முதலாளித்துவ சோசலிசத்தை வாய் மணக்கும் சொல் அலங்காரம் என்று எள்ளல் நடையில் குத்திக் காட்டுகின்றனர்.  சுருக்கமாகச் சொன்னால் அறிக்கையின் இப் பகுதி ஒவ்வொரு வர்க்கமும் தனது நலன்களைக் காப்பதையே சோசலிசம் என்று விளக்கமளிக்க முயல்கிறது என்பதை அவர்கள் காலத்திய அரசியல் இலக்கியங்களை வைத்து நையாண்டி நடையில் விமர்சிக்கிற பகுதி

ஆனால் விஞ்ஞான சோசலிசத்திற்கு முன்பு மேலை நாடுகளில் ஒரளவு மக்களைக் கவர்ந்த  கற்பனா சோசலிச கருத்தோட்டத்தை அக்கறையோடு அலசுகின்றனர். “கற்பனாவாத சோசலிசத்தின் கருத்துக்களை பற்றி குறிப்பிடுகிற பொழுது விஞ்ஞான சோசலிசத்தின் சில கூறுகள் அதில் விதைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அதே சமயம் விமர்சனப்பூர்வமாக, அறிக்கை விளக்குகிறது.

அறிக்கையின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி அன்றைய (1848) காலகட்டத்தில் ஐரோப்பாவின் பல நாடுகளில் செயல்பட்டு வந்த பல்வேறு எதிர் கட்சிகளின் பால் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறுகிறது. இதில் நடைமுறை அரசியல் தொடர்பான படிப்பினைகளை நாம் பெறலாம். ஆனால் முக்கியமானது என்னவென்றால், நடைமுறை அரசியல் நிலைபாடுகளும் அணுகுமுறைகளும், ஒரு அடிப்படை கொள்கை நிலைபாட்டில் இருந்து எழ வேண்டும் என்று அறிக்கை நமக்கு நினைவூட்டுகிறது. அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.

“தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய நலன்களுக்காக, உடனடி நோக்கங்கள் நிறைவேறுவதற்காக, கம்யூனிஸ்டுகள் போராடுகின்றனர். அதே சமயம் இன்றைய இயக்க செயல்பாடு மூலமாக இயக்கத்தின் எதிர்காலத்தையும் கம்யூனிஸ்டுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பாதுகாக்கின்றனர்”.

‘தொழிலாளிகளுக்கு இழப்பதற்கு அவர்களை பிணைத் திருக்கும் சங்கிலிகள் தவிர வேறு எதுவும் இல்லை. வெல்வதற் கோர் உலகமே உள்ளது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்” என்ற அறிக்கையின் புரட்சிகர வாக்கியங்கள் வாசகர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெறும்.

பி.கு. இக்கட்டுரையுடன் கீழ்க்கண்ட நூல்களையும் படிப்பது உதவும்.

  1. மார்க்ஸ் – எங்கல்ஸ்: கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
  2. வெல்வதற்கோர் பொன்னுலகம்: (பாரதி புத்தகாலயம்)
  3. என். ராமகிருஷ்ணன், மார்க்ஸ் எனும் மனிதர்; கிழக்கு பதிப்பகம்

—பாலுLeave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: