எழுச்சியில் மிதந்த ஒரு ஏப்ரல் மாதம்


அடிப்படை மார்க்சியம் கற்பது, நிலவுகிற சூழலை மார்க்சிய நோக்கில் கிரகிப்பது, அதையொட்டி நடைமுறைப்பணிகளை வகுத்துக் கொள்வது என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாட்டு நெறி. இந்த நெறியிலிருந்து வழுவுகிற போது கட்சியின் புரட்சிகரத்தன்மை பாதிக்கும்.

இந்த வகையில் மார்க்சியம் கற்பது, சூழலை கிரகிப்பது, நடைமுறை ஆகிய மூன்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இடையறாது நடந்து வருகின்றது. இதற்கு ஓர் உதாரணம், கடந்த ஜூன் 25-லிருந்து ஜூலை 1 வரை 7 நாட்கள் வடசென்னை மாவட்டக்குழு ஏலகிரியில் நடத்திய கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கான பயிற்சி முகாம். மேற்கண்ட மூன்று தளங்களிலிருந்தும் கேள்விகள், விவாதங்கள் என அறிவுத்தேடல் ஆழமாக நடைபெற்றது.

இதில் விவாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விஷயங்கள் அனைத்தையும் தொகுப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அங்கு எழுப்பப்பட்ட ஒரு முக்கிய பிரச்சனைக்கான விளக்கம்தான் இங்கு விவாதிக்கப்படுகிறது.

“ரஷ்யாவில் 1917 காலக்கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கும், இன்றைய நிலைமைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. நிலைமைகள் தற்போது முற்றாக வேறானவை. எனவே, அங்கு நடைபெற்றதையெல்லாம் இப்போது படிப்பதும், பேசுவதும் பொருத்தமாக இருக்குமா?”. இக்கேள்வி, தெளிவு பெறுவதற்காக தோழர்கள் எழுப்பியது.

ஆனால், ரஷ்யப் புரட்சி, இக்காலகட்டத்திற்கு பொருந்தாது;  இது பழைய கதை; வேறு வேலையில்லாமல் பழசையெல்லாம் கிளறி, நேரத்தை வீணாக்குவது அவசியமில்லை என்ற கருத்து இடதுசாரி இயக்கங்களுக்குள்ளேயே பல வட்டாரங்களில் உள்ளது. உலக இயக்கங்கள் பலவற்றிலும்  இக்கருத்து அவ்வப்போது அலைமோதுவதுண்டு.

தமிழகத்தில் கூட இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், ‘நூற்றாண்டு பழசாகிப்போன விஷயங்களை எழுதுவதே மார்க்சிஸ்ட்டுகளுக்கு வேலை’ என்று கிண்டலடிப்பதுண்டு. (இணையதளத்தில் இப்படிப்பட்ட கிறுக்கல்கள் ஏராளம் உண்டு). ஆனால் அவர்கள் மட்டும்,  1940ஆம் ஆண்டு கால கட்டத்தில் உருவானவற்றையெல்லாம், பெரியாரியம், அம்பேத்காரியம் எனும் பெயரில் கனத்த கட்டுரைகளாகவும், முந்நூறு, நானூறு பக்கங்கள் கொண்ட நூல்களாகவும் எழுதித் தள்ளுவார்கள். இந்தப் போக்கிற்கு ஒரு நோக்கம் உண்டு. ‘பழசானது’ என்று ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் மார்க்சியம்-லெனினியத்தை தற்போதைய காலகட்டத்தில் பொருத்தி, புரட்சிகர மக்கள் இயக்கம் உருவாவதை (அதிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சியோடு) அவர்கள் விரும்ப வில்லை. மார்க்சிய லெனினியத்தை நேரடியாக தாக்கிட முடியாது. அதனால், கவைக்கு உதவாத பழங்கஞ்சி என்ற பாணியில் அதனை ஒதுக்கித்தள்ளுவது அவர்கள் பாணி.

முதன்முறையாக சுரண்டப்பட்ட வர்க்கங்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து, மனிதகுல வரலாற்று ஓட்டத்தை அடியோடு மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு, ரஷ்யப்புரட்சி, புதிய சமூகம் படைக்க விரும்பும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இயக்கமும், இந்த நிகழ்வு எடுத்துரைக்கும் படிப்பினைகளை கட்டாயமாகப் பயில வேண்டும். அந்த வரலாற்று முயற்சியின் போது எதிர்பட்ட சவால்கள், எதிரி வர்க்கத்தின் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்திடம் வர்க்க உணர்வை ஏற்படுத்தி, ஒற்றுமையை உருவாக்கியது, புரட்சிகர கட்சியை உருவாக்கியது என அனைத்தும் இன்றைய சூழலுக்கும் தேவையான பல படிப்பினைகளை உள்ளடக்கியது.

அன்றைய நிகழ்ச்சிகளும், நிலைமைகளும் வேறானவை என்பது உண்மையே. ஆனால் அன்று லெனின் தலைமையிலான இயக்கம் புரட்சியை முன்னெடுத்துச் சென்றபோது உருவாக்கிய பொதுவான கோட்பாடுகள், வரையறைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை இன்றும் கற்க வேண்டியுள்ளது.

ஏப்ரல் நிகழ்வுகள்:

ரஷ்ய வரலாற்றில் 1917ஆம் ஆண்டில் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. முதலாவதாக,  ஜார் மன்னராட்சி கொடுங்கோன்மை யிலிருந்து ரஷ்யா விடுதலை பெற்ற,  பிப்ரவரி புரட்சி. தொழிலாளி வர்க்கக் கட்சியான,  சமூக ஜனநாயக கட்சி, (பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியாக பெயர் மாற்றம் பெறுகிறது). இதர உழைப்பாளி வர்க்கங்களை பிரதிநிதித்து வப்படுத்தும் பல குழுக்களின் ஆதரவோடு, கெரன்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கம் அதிகாரத்திற்கு வருகின்றது.

நாடு கடத்தப்பட்டு, சூரிச் நகரில் இருந்த லெனின், ஏப்ரல் 3-ஆம் தேதி ரஷ்யாவின் பெட்ரோகிராடு நகரை வந்தடைகின்றார். அவர் கையோடு கொண்டு வந்த ஒரு சிறு குறிப்புதான் ‘ஏப்ரல் கருத்துரைகள் (ஹயீசடை கூhநளநள)’ என்று அழைக்கப்படும் ஒரு ஆவணம். பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள உடனடி கடமைகளை இது எடுத்துரைக்கிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் என்பது லெனினுக்குத் தெரியும். ‘என்னுடைய நேர்மையான எதிரிகள்’ நன்கு விளங்கிக் கொண்டு என்னை எதிர்க்கட்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு வந்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

முதலில் சமூக ஜனநாயக கட்சியின் பெரும்பான்மைப்பிரிவு (போல்ஷ்விக்குகள்) என அழைக்கப்படும் தனது ஆதரவாளர் களோடு உரையாற்றினார். பிறகு சிறுபான்மைப் பிரிவையும் சேர்த்த கூட்டத்தில் தனது உரையை வாசித்தார்.

பிறகு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சோவியத்துகளின் அனைத்து ரஷ்ய மாநாட்டில் இந்த உரையை வாசித்தார். இதில்தான் புகழ் பெற்ற ‘எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்ற கோஷத்தை முன்வைத்தார். இடைக்கால முதலாளித்துவ அரசு, ஏற்றுக்கொண்ட எதையும் அமலாக்கவில்லை.  ரஷ்ய மக்கள் போரின் கொடுமையால், வாடிக் கொண்டிருக்கிற நிலையில், போரைக் கைவிட உறுதி பூண்ட இடைக்கால அரசு,  போரை நீட்டிக்க முயற்சித்தது.

தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்தி, எட்டு மணி நேர வேலையை உறுதிப்படுத்தவும் இடைக்கால அரசு தவறி விட்டது. நிலம் விநியோகம் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

அந்த அரசு நிலப்பிரபுக்கள், பெரும் தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள் போன்றோரின் அரசாக இருப்பதால், வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றாது என லெனின் உறுதியாகக் கூறினார்.

எனவே, பாட்டாளி மற்றும் ஏழை விவசாயிகள் உள்ளடக்கிய சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை உடனடியாக கைப்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார். கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இக்கருத்துக்காக வாதிட்டார் லெனின்.

தெளிவான திட்டம்

“ஏப்ரல் கருத்துரைகள்” உழைப்பாளி வர்க்கம் எந்த அடிப்படையில் தனது புரட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று வழி காட்டுகிறது. இது ஒரு சோசலிசத் திட்டமாக முன்வைக்கப்பட்டது. கீழ்க்கண்ட அம்சங்களை லெனின் அந்த திட்டத்தில் முக்கியமானதாக குறிப்பிடுகிறார்.

¨              இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை.

¨              சோவியத்துகள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள போராட வேண்டும்.

¨              போர் நிறுத்தப்பட வேண்டும்.

¨              பெரும் நிலங்களை உள்ளடக்கிய எஸ்டேட்டுகளைக் கையகப்படுத்த வேண்டும்.

¨              தொழிற்சாலைகளை தொழிலாளிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

¨              வங்கிகளை தேசிய உடைமையாக்க வேண்டும்.

¨              தற்போதுள்ள காவல்துறை, இராணுவத்தை அகற்றி விட்டு தொழிலாளர்களைக் கொண்ட படைகளை உருவாக்க வேண்டும்.

¨              ¨பழைய அரசாங்க அதிகார வர்க்கத்தை அகற்றி, தொழிலாளர்களைக் கொண்ட அரசு நிர்வாகத்தை அமைக்க வேண்டும்.

¨              ¨ரஷ்ய சமூக ஜனநாயகக்கட்சி என்ற கட்சியின் பெயரை, கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

¨              ¨புதிய சர்வதேசிய (கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கொண்ட) அமைப்பை உருவாக்க வேண்டும்.

எவ்வித பிசிறும் இல்லாமல், மிகத்தெளிவாக, உடனடியாக செய்ய வேண்டிய கடமைகளை வரிசைப்படுத்தினார் லெனின்.

ஆனால், இந்த திட்டம் ரஷ்யாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால் பிப்ரவரியில்தான் ஜார் கொடுங்கோன்மை வீழ்ந்தது. கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவோடு இடைக்கால அரசு பதவியேற்றது. அடுத்த மாதமே, அரசுக்கான ஆதரவை விலக்க வேண்டுமென்று லெனின் தனது திட்டத்தில் வலியுறுத்தியது, மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியது.

மார்ச் மாதத்தில்தான், காமனேவ், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சைபீரியச் சிறையிலிருந்து வெளியில் வந்து கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணிகளை ஆற்றி வந்தனர். கெரன்ஸ்கி என்பவன் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு முதலாளித்துவ அரசாக இருந்தாலும், அந்த முதலாளித்துவக் காலகட்டம் முடிய நீண்ட காலம் ஆகும்; அது வரை, அடுத்தகட்டப் புரட்சிக்கு காத்திருக்க வேண்டுமென்ற கருத்து தலைவர்கள் மட்டத்திலேயே இருந்தது. அந்த அரசு ஒரு பாராளுமன்றத்தை அமைத்தால், அதில் இடதுசாரிகள் எதிர்கட்சியாக சிறிது காலம் பணியாற்ற வேண்டியிருக்கும் என்றெல்லாம் சிந்தனையோட்டம் கட்சியில் இருந்தது. இவர்களையெல்லாம் ‘பழைய போல்ஷ்விக்குகள்’ என்று லெனின் கிண்டல் செய்தார்.

மூத்த மார்க்சியவாதியான பிளெக்கானவ், அக்செல்ராகு, மற்றும் சோவியத் எனும் மக்கள் அமைப்புகளில் அதிகமாக இடம் பெற்றிருந்த மென்ஷ்விக்குகள் ஆகியோர் புதிய அரசியலமைப்போடு ஒரு முதலாளித்துவ குடியரசு பிரகடனப் படுத்த வேண்டுமென்றுதான் காத்திருந்தனர். லெனின் ஏற்படுத்திய அதிர்ச்சியான மாற்றுத் திட்டத்தை இவர்கள் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். பாராளுமன்றம் அமைப்பது, அரசியலமைப்பு சட்டமன்றம் உருவாக்குவது போன்றவை யெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் எழுப்பிய கோரிக்கைகள்தான். ஆனால் மாறிய சூழலில் இவையெல்லாம் பொருந்தாத கோரிக்கைகளாக மாறிவிட்டன என்று கூறி கருத்துப்போர் நடத்தினார் லெனின்.

ஏப்ரல் கருத்துரைகள் – படிப்பினை – 1

வரலாற்றில் கால அட்டவணை என்று எதுவும் இல்லை. இந்தக்காலத்தில் நிலப்பிரபுத்துவம், பிறகு முதலாளித்துவம், அதன் பிறகு சோசலிசம் என்று அட்டவணை போட்டு வரலாறு மாறுவதில்லை. மார்க்சின் போதனையை இயந்திர கதியில் புரிந்து கொண்டோர் செய்கிற தவறு இது. காமனோவ், பிளெக்கானவ் ஆகியோர் மேற்கொண்ட நிலை இத்தவறானப் புரிதலிலிருந்து உருவானது. மாறாக, மார்க்சிய இயக்கவியலின் உயிர்த்துடிப்பை உணர்ந்து அதனை பின்பற்றியவர் லெனின். வரலாற்றை நிர்ணயிப்பது, வர்க்கங்களின் பலம், அவற்றின் சமூக நிலைதானே தவிர, கால அட்டவணை அல்ல.

1917 பிப்ரவரிக்கு முன்பு இருந்த நிலை வேறு. அப்போது தொழிலாளி, விவசாய வர்க்கங்களின் வர்க்க உணர்வு குறைவாக இருந்தது. அத்துடன் கீழ்மட்ட அளவிலான ஸ்தாபன வலிமையும் குறைவாக இருந்தது. உலக நிலையிலும் போருக்கு எதிரான உணர்வு வலுப்பெறாத சூழல்.   இந்த நிலையில் 1917 பிப்ரவரி புரட்சியின்போது முதலாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வந்தது. இந்நிலையில் பலர் புரட்சி முற்றுப்பெற்றது போன்ற எண்ணத்திற்கு வந்தார்கள். ஆனால் நிலைமைகள் வேகமாக மாறுவதை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. மாறிய நிலைமைகளை உணர்ந்து லெனின் உரக்க அறிவித்தார்.

‘புரட்சி தடைபடாது முன்னேறிட, நாம் முன்னிற்க வேண்டும்- பாதியில் நாம் (புரட்சியை) முடித்துக் கொள்ளக்கூடாது’

இந்த மாறிய சூழலில்தான் இடைக்கால அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

“ரஷ்யாவில் தற்போது நிலவும் சூழலில் ஒரு குறிப்பிட்ட தன்மை எழுந்துள்ளது. புரட்சி முதல் கட்டத்திலிருந்து சென்று இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளது. இந்தக்கட்டம், பாட்டாளி வர்க்கம் மற்றும் மிகவும் ஏழ்மையில் வாடும் விவசாயப் பிரிவினரிடம், அதிகாரம் மாறிட வேண்டிய கட்டம்.”

– இவ்வாறு நிலைமையை வரையறுக்கிறார் லெனின்.

இறுதியில் லெனினது நிலைப்பாடே வெற்றி கொண்டது. பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு எட்டு மாதங்களில் பாட்டாளி வர்க்க அரசு லெனின் தலைமையில் அமைந்தது. லெனின் ‘ஏப்ரல் கருத்துரைகளை’ முன் வைக்காமல் இருந்திருந்தால், முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்தியிருக்கும்.

ஒரு முக்கிய படிப்பினை இதில் அடங்கியுள்ளது. வரலாற்று மாற்றங்களை, ஏதோ ஒரு நிர்ணயிக்கப்பட்ட வாய்ப்பாடாகப் பார்க்கக்கூடாது. வர்க்கங்களின் நிலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து செயலில் ஈடுபட வேண்டும். ஒரே மாதிரி செயல்பாட்டில் நீண்ட காலம்  பழக்கப்பட்டுப் போனவர்கள், புதிய அணுகுமுறையை மேற்கொள்ளத் தயங்குவார்கள். இது இயக்கம் வளர்ச்சியின்றி நீர்த்துப் போகவே உதவிடும். விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், வர்க்கங்களின் நிலை மாற்றங்களை உணர்ந்து வீரியமான செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டுமென்பது ஏப்ரல் கருத்துரைகளின் முக்கிய படிப்பினை.

படிப்பினை – 2

பழைய சிந்தனையில் இருந்த பெரும்பான்மையோரை, ‘ஏப்ரல் கருத்துரைகள்’ நிலைக்கு கொண்டு வர, அயராத கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தினார். அதில் வெற்றியும் கண்டார். மாறிய சூழலுக்கு ஏற்ப, முன்வைக்கப்படும் கோஷங்களையும், மாற்றி அமைக்க வேண்டும். 1917 பிப்ரவரிக்கு முந்தைய காலம் வரை “பாட்டாளி, விவசாய வர்க்கங்களின் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம்”  கொண்ட அரசு அமைக்க கட்சி முயற்சிக்க வேண்டுமென்றார் லெனின். பிப்ரவரிக்குப் பிறகு பொதுப்படையாக தொழிலாளர் -விவசாயி ஒற்றுமை பேசுவதில் பயனில்லை என்று லெனின் கருதினார். பாட்டாளி வர்க்கம், மற்றும் விவசாயப் பிரிவுகளில் உள்ள, மிகுந்த ஏழ்மை நிலையில் வாடும் விவசாயிகளிடம், அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டுமென்று லெனின் எழுதினார். இந்த மட்டத்திற்கு மேலே உள்ள ‘குட்டி முதலாளித்துவ விவசாயப் பிரிவினர்’ புரட்சிக்கு துரோகம் செய்து விடுவார்கள் என்று லெனின் கருதினார்.

‘குட்டி முதலாளித்துவ விவசாயப் பிரிவினர் (தேச வெறி சார்ந்த) தேசத்தைப் பாதுகாப்பது என்ற நிலை எடுத்து, முடியாட்சியை (ஜார்) ஆதரிப்பார்கள். எனவே, போல்ஷ்வி சத்திற்கு புதிய நிலைப்பாடு தேவை…’ என்று எழுதினார் லெனின். மிகுந்த ஏழ்மையான விவசாயப்பிரிவினரே, நம்பகமான வர்க்கம் என்று எடுத்துரைத்தார். கட்சி மேற்கொண்ட இந்த நிலைப்பாடு கிராமங்களில் ஏழை விவசாயிகளின் எழுச்சி ஏற்பட உதவிற்று.

ஆக, தொழிலாளர்கள், இழக்க ஏதுமற்ற விவசாயிகள் ஆகியோருக்கு அதிகாரம் கிடைக்க லெனின் வாதாடியது புரட்சிக்கு ஆதரவான சமூகத்தளம் விரிவடைய உதவியது.

இந்த சமூக ஆதரவுத்தளம் புரட்சி வெற்றி பெறவும்  உதவியது. தொழிற்சாலைகளிலும், நகர்ப்புறங்களிலும் இருந்த கட்சியின் நகரக்குழுக்கள், மேலிருந்து கீழ் வரை தயார்நிலையிலிருந்த கட்சியின் அமைப்புகள் ஆகியன லெனினது நிலைபாட்டை கிரகித்துக் கொண்டு, புரட்சிகர செயலில் களம் இறங்கின. இதனால்தான், லெனின் எண்ணியவாறு, அக்டோபரில் (ஆங்கிலக் காலண்டரில் நவம்பர்) புரட்சி வெற்றி பெற்றது.

கட்சி, சிறந்த அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தாலும், விரிவான சமூக ஆதரவுத்தளத்தை ஏற்படுத்தத் தவறினால் எந்த மாற்றமும் நிகழாது.

கட்சி தனது வெகுஜன ஆதரவுத்தளத்தையும், ஸ்தாபன செல்வாக்கையும் விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டு மென்பது ஏப்ரல் நிகழ்வுகளிலிருநது கிடைக்கும் இரண்டாவது படிப்பினை.

முற்றிலும் வேறான சூழலாக இருந்தாலும், இந்தியாவில் 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி சக்திகளும், தாங்கள் அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன் களுக்காக நாட்டின் இறையாண்மையை பலி கொடுக்க முனைந்த மன்மோகன் சிங் அரசை தொடர்ந்து ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தையொட்டி, ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி சக்திகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு பல காரணங்கள் உண்டு. மக்களிடம் அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாக உணர்த்தும் நிலையில் நாடு தழுவிய இடதுசாரி அமைப்புகள் பலமாக இல்லாதது, முக்கியக் காரணம்.

ஆக இரண்டு படிப்பினைகளை ஏப்ரல் கருத்துரைகள் எடுத்துரைக்கின்றது.

  1. பல்வேறு வர்க்கங்கள் யாருக்கு ஆதரவாக நிற்கின்றன என்பதை உன்னிப்பாக ஆராய வேண்டும். சூழல்கள் மாறிய நிலையில் உழைப்பாளி வர்க்கங்களை புரட்சிகர மாற்றத்திற்கு ஆதரவாகத் திரட்டவும், புரட்சிகர ஸ்தாபனத்தில் ஒருங்கிணைக்கவும் கூர்மையான செயல்திட்டம் தீட்டி செயல்பட வேண்டும்.
  2. கட்சி தனது சமூக தளத்தை விரிவு படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும். விவசாய வர்க்கங்கள் உள்ளிட்ட உழைப்பாளி வர்க்கங்களை வென்றெடுக்கும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று ஏராளமான படிப்பினைகளை ‘ஏப்ரல் கருத்துரைகள்’ நமக்கு வழங்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s