(தோற்றம் 30.10.1925 – மறைவு 8.7.2008)
“தனது அனுபவங்களையும், தத்துவப் பிரச்சனை களையும் பாமர மக்களின் மொழியில் அலசி, உற்சாகமூட்டும் ஆற்றல் படைத்தவர். தோழர் பி.ஆர்.சி என்று நாம் அன்போடு அழைத்த தோழர். பி.ராமச்சந்திரன்.
தமிழ் மண்ணில் கம்யூனிசக் கருத்துக்கள் வேர்விட அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்பட்ட சிரமங்களை இன்ப வேதனையாக கருதினார். மக்கள் இயக்கத்தை நசுக்க கம்யூனிஸ்ட்டுகளை அரசு வேட்டையாடிய காலத்தில் அவர் மக்களோடு மக்களாக காவல் துறையின் கையில் சிக்காமல் வாழ நேர்ந்த அனுபவத்தை தனது நினைவுக்குறிப்பில் எழுது கிறார். 24 வயதில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அவர் எடுத்த முயற்சிகள், அதனால் அவர் காவல் துறையின் பிடியில் சிக்க நேர்ந்ததை சுவைபடக் கூறுகிறார். இதோ அவர் எழுதிய புத்தகத்திலிருந்து அவரது முதல் சிறைவாழ்க்கையின் அனுபவங்களின் சில வரிகளை வாசகர்களுக்கு அவரது நினைவாக சமர்ப்பிக்கிறோம்.
– ஆசிரியர் குழு
கைது – 1949
ரயில்வே தொழிலாளர் மத்தியில் பல தோழர்களின் உதவியுடன் பணிகளைச் செய்து வரும் போது, பல இரவுகள் ஏழ்மையான தொழிலாளர்களின் வீடுகளில் அவர்கள் தந்த எளிமையான உணவையே உண்டு வாழ்ந்தது எனக்கு மனநிறைவைத் தந்தது. ஐந்தோ, ஆறோ கிராமங்களில் பல தோழர்களுடன் நன்றாகவே பழகி வந்தேன்.
இந்நிலையில் 1949ஆம் ஆண்டு நடக்கவிருந்த அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள் முக்கியப் பணியாக இருந்தன. அடக்குமுறை காரணமாக தொழிலாளர் மத்தியில் தயக்கமும், பயமும், ஊசலாட்டமும் இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். கட்சித் தோழர்களின் மதிப்பீடும் அவ்வாறே இருந்தது. இதைப்பற்றி மாநில மையத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தில் விழுப்புரத்தில் இருந்து எழும்பூர் வரை ரயில்வேத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெறாது என்பது என் மதிப்பீடு என்று எழுத்து மூலமாகத் தெரிவித்தேன். என்னுடைய இந்தக் கணிப்பு சீர்திருத்தவாத கண்ணோட்டத்தைக் குறிக்கிறது என்றும் ரகசியத் தலைமை கருதியதாக தோழர் எஸ்.சி. கிருஷ்ணன் என்னிடம் கூறினார். ஏனெனில் அகில இந்திய கட்சித் தலைமை புரட்சிகரமான எழுச்சி இருப்பதாக ஏற்கனவே எடுத்த தத்துவ ரீதியான நிலையிலிருந்து இப்படி கூறப்பட்டது.
இதனிடையே பிப்ரவரி மாத இறுதியிலேயே முக்கியமான ரயில்வேத் தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்துவிட்ட தகவல் எனக்கு எட்டியது. எழும்பூர், தாம்பரம், செங்கற்பட்டிலும் நான் தொடர்பு வைத்திருந்த முக்கியத் தோழர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. உடனடியாக அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். எனக்குப் பரிச்சயமான ஓரிரு கிராமங்களுக்குச் சென்று அடுத்த நிலையில் இருந்த தோழர்களை சந்திக்க முயற்சித்தேன். இந்த முயற்சியில், ஒருநாள் மதியம் காட்டாங்குளத்தூரில் இருந்து ஒரு மைல் தொலைவில் ரயில்வேத் தொழிலாளர்கள் அதிகமாகக் குடியிருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அங்கு ஒரு தொழிலாளியின் வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கில்லை. அவருடைய வீட்டார், வேலைக்குப் போனவர் இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்று பதற்றத்துடன் கூறினார்கள். நான் நிலைமையைப் புரிந்து கொண்டேன். வேகமாகத் திரும்பினேன்.
அடுத்து சென்னை செல்லும் ரயில் நிலையத்தில் நேரத்தைப் பார்த்தேன். அது காலதாமதமாகும் என்று தெரிந்தததால் வெளியே வந்து பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது ஒருவர் வேகமாக என்னிடம் வந்து என்னை யாரென்று கேட்டார். அவருடைய தோற்றத்திலிருந்து அவர் ஒரு போலிஸ் அதிகாரி என்று ஊகித்துக் கொண்டேன்.
அவரிடம் நான் சென்னையில் படிக்கும் ஒரு மாணவன் என்று கூறினேன். இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்தீர்கள் என்று அதிகாரத் தோரணையில் கேட்டார். சென்னையில் நாங்கள் தங்கியிருக்கும் லாட்ஜிற்கு அரிசி வாங்க வந்தேன் என்று கூறினேன். அவர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தார். எந்த வகுப்பு, எந்தக் கல்லூரி, என்ன பெயர், என்றெல்லாம் விசாரித்தார். இதற்கு ஏதோ பதில் கூறினேன். அவர் யார் என்று கேட்டேன். அவர் ஒரு ரயில்வே ஊழியர் என்று கூறினார். அவர் சிரித்தபடியே என் அருகில் நின்று கொண்டிருந்தார். பஸ்சும் வரவில்லை. போலிசில் சிக்கிவிட்டதாக நான் உணர்ந்தேன். அவர் வைத்திருந்த துணிப்பையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்ததை கவனித்ததும் என் சந்தேகம் உறுதியானது. ஆனால் கட்சியின் கட்டளைப்படி சிக்கக் கூடாது என்று எண்ணினேன்.
நான் திடீரென்று நடக்கத் தொடங்கினேன். அவர் பின்னாலேயே வந்து, எங்கே போகிறீர்கள் என்று உரக்கக் கேட்டார். டீ சாப்பிட என்றேன். நானும் வருகிறேன் என்று கூறினார். அந்த நேரத்தில் எப்படியும் தப்ப வேண்டும் என்று குருட்டுத் துணிச்சலில் சட்டென ஓட ஆரம்பித்தேன். ரயில் நிலையத்திற்கு (அந்த ரயில் நிலையத்திற்கு அன்று காட்டுப்பாக்கம் என்று பெயர்) அருகாமையில் நான் ஏற்கனவே தங்கியிருந்த ரயில்வேத் தொழிலாளர்கள் நிறைந்த கிராமத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினேன். சிறிது தூரம் சென்று தண்டவாளத்தைக் கடக்கும் போது (பதற்றத்துடனான ஓட்டம்) கால் தவறிக் கீழே விழுந்தேன். எழுந்து நிற்பதற்குள் அந்த நபர் என்னை வந்து பிடித்தார். நான் உங்களைக் கைது செய்கிறேன் என்று உரக்கக் கூறினார். ஒரு ரயில்வே அதிகாரி என்னை எப்படி கைது செய்யலாம் என்று கோபத்துடன் அவரை கேட்டேன். அவர் கையில் வைத்திருந்த துணிப்பையிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து நான் ஒரு போலிஸ் அதிகாரி என்று கூறினார். நிலைமையை உணர்ந்தேன்.
அவர் என்னை செங்கற்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அதற்கு மெயின் ரோட்டிலிருந்து ஓடி வந்த சிறு கூட்டத்தினரிடம் இவன் ஒரு தலைமறைவு கம்யூனிஸ்ட் என்று கூறினார். கற்கள் நிறைந்த பள்ளத்தில் விழுந்ததால் எனக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு நல்ல மனிதராகக் காணப்பட்ட அந்த அதிகாரி கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு நர்சின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று காயங்களுக்கு மருந்து வைத்து முதலுதவி செய்தார். பிறகு செங்கற்பட்டு செல்லும் ஒரு பஸ்சில் என்னை போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில் என் பெயரைத் திரும்பத் திரும்பக் கேட்டு சென்னையில் தங்குமிடத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் வேறு பெயரைச் சொல்லியும், நான் ஒரு மாணவன் என்று கூறிச் சமாளிக்கப் பார்த்தேன். செங்கற்பட்டு காவல்நிலையத்திற்குள் நுழைந்த போது சாதாரண உடையில் இருந்த ஒரு போலிஸ்காரர், “சார் இவரை எங்கு பிடித்தீர்கள்?” என்று கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.
அந்தப் போலீஸ் அதிகாரி உனக்கு இவரைத் தெரியுமா? என்று கேட்ட போது “இவர் சென்னையில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருக்கும் ஒரு மாணவர் தலைவர்” என்று அந்த போலிஸ்காரர் பதிலளித்தார். என் பெயரையும் குறிப்பிட்டார். அவர்களுக்கு உண்மை தெரிந்த பின் மற்ற “கதைகள்” ஒன்றும் எடுபடாது என்று நான் உணர்ந்தேன். அன்றிரவு லாக்கப்பில் அடைத்தனர்.
மறுநாள் செங்கற்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். “சந்தேகப்படும் முறையில் சுற்றித் திரிந்ததற்காக” மேற்கொண்டு விசாரிப்பதற்காக 15 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. செங்கற்பட்டு சிறையில் அடைக்கப் பட்டேன். 15 நாட்களும் தன்னந்தனியாக எந்த வசதியும் இல்லாமல் யாருடனும் பேச முடியாமல் மாற்று உடை கூட இல்லாமல் (தலை துவட்ட துண்டு கூட இல்லாமல்) கழித்த அந்த சிறை அனுபவம் மிகவும் கடினமாக இருந்தது.
இம்முறை 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு வெளியுலகத்தில் யாருடனும் தொடர்பின்றி மிகச் சிரமத்துடன் நாட்களைத் தள்ளிச் செல்ல வேண்டியிருந்தது. இதற்கு அன்றையக் கட்சியின் கறாரான கட்டளை தான் காரணமாக இருந்தது. கைதாகியுள்ளவர்கள் வெளியில் இருக்கும் தோழர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்பது கட்சியின் நடைமுறைக் கட்டளையாக இருந்தது. வெளியில் இருக்கும் தோழர்கள் அல்லது கட்சி ஸ்தாபனத் தோழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம். எனக்கு செங்கற்பட்டு டவுனில் பல தோழர்களின் முகவரி தெரிந்தபோதிலும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. சிறை அதிகாரிகள் தந்த போஸ்ட் கார்டில் தலைச்சேரியில் இருந்த என் தகப்பானருக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதினேன். சிறையில் மூன்று வேளையும் சோளக் களி அல்லது கேழ்வரகு கூழ் சிறிதளவு அளிக்கப்பட்டது. அரிசி சாதம் சிறிதளவே. முதல் சிறை வாழ்க்கையிலிருந்து (1947) முற்றும் மாறுபட்ட, பேசுவதற்கு கூட எவரும் இல்லாத நிலை. ஒரே ஒரு போலிஸ்காரர் மட்டும் மிக்க அனுதாபத்துடன் சிறிது நேரம் பேசுவது எனக்கு ஆறுதலாக இருந்தது. அவர் டூட்டிக்கு வரும்போது எனக்காக கொண்டு வரும் சிகரெட்டுக்காகவும், டீக்காகவும் மிக ஆவலுடன் காத்திருப்பேன்.
13-ஆம் நாள் என்னைக் கைது செய்த அதிகாரி உட்பட சில போலீஸ் அதிகாரிகள், திடீரென என் அறைக்கு முன்வந்து நின்றனர். என்னை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கான உத்தரவை என்னிடம் தந்து புறப்படும்படி கூறினர். பாதுகாப்புச் சட்டத்தில் காலவரையின்றி சிறைப்படுத்தும் ஷரத்துகள் இருந்தன. எத்தனை மாதங்கள், வருடங்கள் என்று ஊகிக்கக் கூட முடியாத நிலை. ஆயினும் ஏராளமான தோழர்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் நான் புறப்பட்டேன். 2,3 போலிஸ் வேன்களில் நிறையப் போலிசாருடன் முதலில் சென்னை மத்திய சிறைக்கும் பின்னர் வேலூர் சிறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன். (சென்னைச் சிறையில் இடமில்லாத காரணத்தால்) போகும் வழியில் காபி சாப்பிடுவதற்காக ஒரு ஓட்டல் முன் நின்ற போது, பார்த்துக் கொண்டிருந்த பலரும் வியப்புடன் “ஏன் சார்! இந்த சின்னப் பையனை அழைத்துச் செல்லவா இத்தனை போலிசார்” என்று கேட்டபோது “இவன் ஒரு பயங்கர கம்யூனிஸ்ட்” என்று பதிலளித்தனர்.
நூல்: ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்: பி. ராமச்சந்திரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Leave a Reply