கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது. இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஏழு முகவுரைகள் அறிக்கையை போலவே காலங்கடந்தும் தங்களின் ஒப்புயர்வற்ற தன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு எங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை. இந்த முகவுரைகள் அறிக்கையின் பதிப்புகள் எத்தனை வந்திருக்கிறது எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டன என்பதை பற்றிய விவரங்களை மட்டும் குறிப்பவை அல்ல. மாறாக, அறிக்கை எழுதப்பட்ட பிறகு முகவுரைகள் எழுதப்பட்ட காலம் வரையிலும் உலகெங்கிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் பெறப்பட்ட அனுபவங்களிலிருந்து அறிக்கையைச் செழுமைப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை. இவையும் கூட அறிக்கையை போலவே அமரத்துவம் வாய்ந்தவை.
கம்யூனிஸ்ட் அறிக்கையா? சோசலிஸ்ட் அறிக்கையா? அறிக்கையின் இரண்டாவது பகுதியின் இறுதியில் முன்மொழியப்படும் பத்து நடவடிக்கைகள் ஒரு சோசலிச அரசு அமைந்தபிறகு நிறைவேற்றுவதற்கான கடமைகளாகும். எனவே இந்த அறிக்கை சோசலிஸ்ட் அறிக்கை என்றே பெயரிடப்பட்டிருக்க வேண்டுமென்று மார்க்சும், எங்கெல்சும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று பெயர் சூட்டினார்கள். ஆனால், இதுகுறித்து 1888 ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதிய முகவுரையில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
அது (அறிக்கை) எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோசலிஸ்ட் அறிக்கை என்பதாய் பெயர் சூட்ட முடியவில்லை. 1847-இல் சோசலிஸ்ட் எனப்பட்டோர்கள் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருத்தமைப்புகளை சேர்ந்தோராய் இருந்தனர். இங்கிலாந்தில் ஓவனியர்கள், பிரான்சில் ஃபூரியேயர்கள் இருவகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின் நிலைக்கு தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய் மூலதனத்திற்கும் லாபத்திற்கும் எந்த தீங்கும் நேராதபடி பலவகையான ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூக கேடுகளையும் களைகிறோமென கூறிக் கொண்டவர்களாகயிருந்தனர். இருவகைப்பட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியேயிருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடி வந்தனர்.
தொழிலாளி வர்க்கத்தின் எந்த பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து முழுநிறைவான சமுதாயமாற்றம் ஏற்படுவது இன்றியமையாததென பறைசாற்றியதோ அந்த பகுதி அன்று தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது.
ஆதியிலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய் தொழிலாளி வர்க்கத்தின் செயலால் தான் பெறப்பட்டாக வேண்டும் என்பதாய் இருந்ததால் இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடமிருக்கவில்லை. அதோடு அது முதலாய் இந்த பெயரை நிராகரிக்கும் எண்ணம் கணமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. அறிக்கையின் உள்ளடக்கம் சோசலிசத்திற்கான திட்டத்தை விரிவாக வரைந்திருந்தாலும் அன்று சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்டோர் வர்க்கப் போராட்டத்தை ஏற்காதவர்களாக இருந்ததாலும் அவர்கள் படித்த வகுப்பாரின் ஆதரவையே நாடி வந்தவர்களாக இருந்ததாலும் அன்று தொழிலாளி வர்க்கம் தன்னை எப்படி அழைத்துக் கொண்டதோ அந்தப் பெயரான கம்யூனிஸ்ட் என்ற பெயரையே தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு அந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் தங்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்றும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.
இந்தியாவிலும் கூட சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்டோர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராகவும் வர்க்கப் போராட்டத்தை நிராகரிப்பவர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது இந்திய அனுபவம்.
மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவரும் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு தான் அறிக்கை வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு முகவுரையை எழுதினார்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவு தான் மாறியிருப்பின் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவே என்று குறிப்பிடுகின்றனர்.
மேலும் இரண்டாம் பிரிவில் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை என்கின்றனர். மேலும் இந்தக்கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல் எங்கும் எக்காலத்திலும் அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளை சார்ந்ததாகவே இருக்கும் என்கின்றனர்.
சோசலிச கட்டுமானம் குறித்த தவறான புரிதல்கள் சோசலிச முகாம் தகர்ந்ததற்கான காரணங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த இன்னும் சொல்லப்போனால் நிலவுடைமையில் புராதன பொதுவுடைமை நிலவி வந்த ரஷ்யாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் 1895 ஆம் ஆண்டிலேயே இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஸ்கோடா (Skoda) என்கிற கார் தயாரிப்பு நிறுவனம் உருவாகியுள்ள செக்கோஸ்லாவாக்கியாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் ஒரே மாதிரியான செயல்திட்டம் இருக்க முடியாது என்பதை 1872-ஆம் ஆண்டிலேயே அறிக்கையில் முதல் முகவுரையில் தெரிவித்துள்ளனர்.
1964-ஆம் ஆண்டு தனது 7 வது கட்சி காங்கிரஸில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை தனது கட்சித் திட்டத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால், மாறிய சூழ்நிலைகளில் தனது 9 வது கட்சி காங்கிரசில் இந்தப் பிரிவு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
இதேபோன்று 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சித் திட்டத்தில் நிலப்பிரபுத்தவ ஒழிப்பு எவ்வித இழப்பீடுமின்றி நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இழப்பீடின்றி என்கிற வார்த்தை மாறிய சூழ்நிலையை கணக்கில் கொண்டு கைவிடப்பட்டது. இதன் பொருள் இழப்பீடு கொடுப்பதா? இல்லையா? என்பதை மக்கள் ஜனநாயக அரசு அமைந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதே.
அரசுப் பொறியமைவு பற்றிய நிர்ணயிப்பு:
அந்த முதல் முகவுரையிலேயே மேலும் இரண்டு அம்சங்களை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நவீன தொழில்துறை பெருநடைபோட்டு பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும் மேம்பாடுற்றும் விரிவடைந்தும் உள்ளது. எனவே, இதைக் கணக்கில் எடுத்தால் இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
1871-ஆம் ஆண்டு பாரீஸ் கம்யூன் அனுபவத்தைக் குறிப்பிட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார்கள். ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவை தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது சொந்த காரியத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதன் மூலம் அறிக்கை குறிப்பிடாத ஆனால் மிகவும் முக்கியமான முதலாளி வர்க்க அரசுப் பொறியமைவை அப்படியே தொழிலாளி வர்க்கம் தனது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற புரட்சிகளெல்லாம் ஏற்கனவேயிருந்த அரசுப்பொறியமைவை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், புதிய சமூக பொருளாதார அமைப்பிற்கேற்றதாக அதைப் படிப்படியாக மாற்றிக் கொண்டனர். ஆனால், தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் அரசுப்பொறியமைவை அப்படியே தனது சொந்த காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது இரண்டு அம்சங்களை தெளிவாக்குகிறது. முதலாவதாக இதுவரை நடைபெற்ற புரட்சிகள் சுரண்டலை முற்றாக ஒழிப்பவையல்ல. இரண்டாவதாக அரசுப்பொறியமைவு என்பது வர்க்த்தன்மை கொண்டது என்பதை தொழிலாளி வர்க்கம் நேரிடையாக அனுபவத்தில் கண்டறிவதை பாரீஸ் கம்யூன் சாத்தியமாக்கியது.
புரட்சி எங்கு நடக்கும்?
வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளில்தான் சோசலிசப் புரட்சி நடைபெறும் என்று மார்க்சும், எங்கெல்சும் முன்நிர்ணயித்து கூறியதாக பொதுவாக கருத்து உண்டு. ஆனால், இதன் அர்த்தம் வேறு எங்குமே சோசலிச புரட்சி நடக்காது என்று அர்த்தமல்ல. இதை மார்க்சும், எங்கெல்சும் தங்களுடைய 1882 ஆம் ஆண்டு ருஷ்ய பதிப்பின் முகவுரையில் ரஷ்யாவிலும் கூட சோசலிசப் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி அவர்கள் கூறுவதாவது. நவீன கால முதலாளித்துவ சொத்துடமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதை பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ரஷ்யாவில் நாம் காண்பது என்ன?. அதிவேகமாய் வளர்ந்துவரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையில் உள்ள முதலாளித்துவ நில உடமையின் கூடவே, ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்க காண்கிறோம்.
இப்போது எழும் கேள்வி என்னதான் ருஷ்ய ஓப்ஷீனா வெகுவாய் சீர்குலைக்கப்பட்டிருப்பினும் இன்னும் நிலத்திலான புரதான பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும் இது நேரடியாய் கம்யூனிச பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமையாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர் மாறாய் மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்த சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா? இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான் ருஷ்ய புரட்சியானது மேற்கு நாடுகளின் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெருமாயின் தற்போது ருஷ்யாவில் நிலத்தில் உள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குறிய துவக்க நிலையாய் பயன்படக்கூடும். எனவே புரட்சியானது ஒரு நிலையான சூத்திரத்தின் அடிப்படையில் ஆனதல்ல. பொருளாதார நிலை, புரட்சி நடத்துகிற வர்க்கத்தின் உணர்வுநிலை, அதன் ஸ்தாபன ஒழுங்கமைப்பு, சர்வதேச சூழல் இவை அனைத்திற்கும் ஓரு பங்குண்டு;. இதில் ஒன்று மட்டுமே பிரதானம். மற்றது அதன் துணை நிலைமைதான் என்று புரிந்துகொள்வது சரியல்ல என்பதை அவர்கள் தங்களது இரண்டாவது முகவரையிலேயே தெளிவாக்கி இருக்கின்றார்.
அமெரிக்காவின் வளர்ச்சி பற்றி
1890 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பிற்கு எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில் அப்போது தொழில் துறையில் ஏகபோக நிலையை வகித்து வந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் நிலைக்கு வந்துவிடும் என்பதை அப்போதே முன்நிர்ணயித்து கூறியுள்ளார். இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமென கூறும்படி அத்தனை விருவிருப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலா தொழில்துறை செல்வாதாரங்களை பயன்படுத்திக் கொள்வதை சாத்தியமாக்கிற்று. அதேபோன்று பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும் வியக்கத்தக்க மிகப்பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில்துறை பிரதேசங்களில் வளர்ச்சியுருகின்றன.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட போது அறிக்கையின் கடைசி பிரிவு பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட்களின் நிலைமையை கூறும் இந்த பிரிவில் ருஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் காணப்படவேயில்லை. இந்த இரு நாடுகளும் ஐரோப்பாவிற்கு மூலப்பொருட்களை வழங்கின. அதேபோது ஐரோப்பிய தொழில்துறை உற்பத்தி பொருள்களுக்கு சந்தைகளாகவும் இருந்தன இப்படி இருந்த நாடுகள் இரண்டும் 25 ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை துல்லியமாக கணித்ததில் இந்த முகவுரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெருகின்றன. இதில், அமெரிக்க பற்றிய கணிப்பு அப்போதைய வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. ஆனால், ரஷ்யா பற்றிய கணிப்பானது ஹாக்ஸ்த்ஹாவு எழுதிய ருஷ்யாவின் நில உறவுகளில் கிராம சமுதாய அமைப்பின் மீதமிச்சங்களை விவரித்து எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. அவை எவ்வளவு துல்லியமானது என்பதை அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் நிருபித்திருக்கின்றன.
இதே போன்று 1882-ஆம் ஆண்டு தொழில்துறையில் இங்கிலாந்தின் ஏகபோகம் தகர்க்கப்பட்டு அந்த இடத்திற்கு அமெரிக்கா வரும் என்பதையும் மிகத்துல்லியமாக கணித்திருக்கிறார். 1947க்குப் பின்னால்தான் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கம் என்பது முடிவுக்கு வர துவங்கியது. அதற்கு 65 ஆண்டுகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கையின் முகவுரையில் மார்க்சும், எங்கெல்சும் இதைமுன் நிர்ணயித்து கூறியுள்ளனர்.
முன்னேற்றம் நேர்கோட்டிலானதா?
1847 இல் அறிக்கை வெளிவந்தபோது எண்ணிக்கையில் அதிகமில்லை என்ற போதும் சோசலிச பதாகையை உயர்த்தி பிடித்தவர்கள் அதை வரவேற்றனர். அறிக்கை வெளிவந்த ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெவ்வேறான 12 பதிப்புகளுக்கு குறையாமல் ஜெர்மன் மொழியில் வெளிவந்திருக்கிறது.
பிரெச்சில் 1848 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு முன்பு முதன் முதலாக பாரிசில் வெளியாயிற்று. போலிஷ் மொழியிலும் உடனடியாக லண்டனிலிருந்து வெளிவந்தது. இப்படி பெருமளவில் வரவேற்கப்பட்டு வாசிக்கப்பட்ட அறிக்கை மிக சீக்கிரமே பின் நிலைக்கு தள்ளப்பட்டது. 1848 இல் பாரிசில் நடந்த பாட்டாளி வர்க்க எழுச்சி தோல்வியடைந்ததும் 1852 நவம்பரில் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் 7 பேருக்கு 3 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஒட்டியும் அறிக்கை சட்டத்தின்படி தீண்டத்தகாததாய் விலக்கி வைக்கப்பட்டது. இதன் பிறகு ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம் மீது தாக்குதல் தொடுக்க போதிய பலத்தை பெற்றதும் அகில தொழிலாளர் சங்கம் உருப்பெற்று எழுந்தது. ஆயினும் இச்சங்கம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாட்டிலிருந்து தொடங்கப்படவில்லை. பல்வேறு சீர்திருத்தவாதிகளையும் அனைத்து செல்ல வேண்டியிருந்ததால் அந்த சங்கத்திற்கான விதிகளது முகப்புரையாய் அமைந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தாலும் கூட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளை வேலைதிட்டமாக முன்வைக்க முடியவில்லை.
மார்க்ஸ் அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்திலிருந்தும் நிச்சயம் ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்க்க ஞான வளர்ச்சியைத்தான் நம்பியிருந்தார்.
மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே இந்த அகிலம் கலைக்கப்பட்டபோது ஆங்கிலேயே தொழிற்சங்கங்களின் தலைவர் 1887 இல் சோசலிசம் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்துவிட்டது என்று அறிவித்தார்.
புரட்சியின் வளர்ச்சிப்போக்கில் ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் பாய்ச்சலும் பின்னடைவும் தவிர்க்க முடியாதவை. ஆயினும் தோல்விகள் விலகல்கள் பின்னடைவுகள் இவற்றை சமாளித்து அனுபவங்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும் என்பதை முகவுரையின் இந்த பகுதி மிகத்தெளிவாகவும் படிப்பினையாகவும் பாட்டாளி வர்க்கத்தின் முன் சமர்ப்பித்திருக்கிறது.
இறுதியாக இந்த முகவுரைகள் அறிக்கையின் அளவிற்கு முக்கியத்துவமுடையவை. அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் எவரும் இந்த முகவுரைகளையும் முழுமையாக வாசிக்க வேண்டியது அவசியமாகும்.
Leave a Reply