சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும் வர்க்க சேவகர்களே…


சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று பெயர் வைத்துக்கொண்டு, இடதுசாரி அதிதீவிரவாதத்தையும், அராஜகத்தையும் அரங்கேற்றி  வருகின்றனர். சத்தீஷ்கர், ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் நடத்திய கொடூரக் கொலைகள் மூலமாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். அரசியல் எதிரிகளை கொலைசெய்வது, அடிமட்ட வனஅலுவலர்கள், நில மற்றும் காவல் அலுவலர் களை கொலைசெய்வது , கடத்துவது, கொள்ளையடிப்பது மற்றும் அரசியல் கட்சிகளிடையே கூலிப்படையாக செயல்படுவது, இவர்களது முக்கிய நடவடிக்கையாக மாறி உள்ளது. ஆளும் வர்க்க அடக்குமுறைகளிலிருந்து அப்பாவி மக்களை காப்பது, புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கிறது. இவர்களது தெளிவற்ற திட்டமும், தேவையற்ற வன்முறையும் ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் வலு சேர்ப்ப தாகவே உள்ளது.

மக்களைத் தாக்கும் மாவேயிஸ்ட்டுகள்

மேலும் இவர்கள் வெகுமக்களை அணிதிரட்டியுள்ள இடதுசாரி இயக்கத்தின் மீது நடத்தும் தாக்குதல் இவர்களது ஆளும் வர்க்க எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. இவர்களை தோற்கடிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் சாத்திய மில்லை. அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திட வேண்டும். இவர்களது கோட்பாடு, திட்டம், நடைமுறைத் தந்திரத்தில் உள்ள இடதுகுறுங்குழுவாதத்தையும், அராஜக வாதத்தையும் தோலுரித்துக்காட்ட வேண்டும்.

புதிதல்ல… பழைய கள், பழைய மொந்தை

இடது குறுங்குழுவாதம் இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு புதிதல்ல. 1948-51-ஆம் ஆண்டுகளில் உருவான ஒரு போக்கு, இந்திய சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். எனவே புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அது தோல்வியடைந்த ஒன்று. அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் கைவிடப்பட்டது. மீண்டும் 1967-68-இல் நக்சலிசம் என்ற பெயரால் இடது குறுங்குழுவாதம் தலைதுhக்கியது. 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டு அதன் 7வது மாநாட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தத்துவார்த்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இக்காலத்தில் இம்மாநாடு முடிந்த கையோடு முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு  சிறையிலடைக்கப்பட்டனர்.   விவாதம் முழுமையடையாத சூழல்.இதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதத்திற்கு எதிராக சரியான நிலை எடுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி , இடது குறுங்குழுவாதம் என்ற தவறான பாதை நோக்கி சென்றது, இந்திய அரசு  ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று தீர்மானித்தது.  இந்தியாவில் இருந்த இடது குறுங்குழுவாத சிந்தனையாளர்கள்,  நக்சலைட்டுகள்  இதே நிலைபாட்டை எடுத்துக்கொண்டு 1970-இல் சிபிஐ(எம்.எல்.) என்ற கட்சியைத் துவக்கினர். இந்தியப் பெரு முதலாளி வர்க்கத்தின் குணாம்சங்களை சரியாக மதிப்பீடு செய்யாமல், தரகுமுதலாளித்துவமென தவறான மதிப்பீடு அவர்களை ஆட்டிப்படைத்தது.

மக்கள் ஒதுங்கினர்

1969-71-ஆம் ஆண்டுகளில் ஆயுதம் தாங்கியப் போராட்டத்திற்கு மக்களை தயார் செய்வதாகக் கருதி பயங்கரவாத செயலில் இறங்கி தனி நபர்களை கொலை செய்தனர். ஒரு தீப்பொறி காட்டுத்தீயாக பரவும் என்றனர். ஆனால் அது நடக்கவில்லை. அது அணைந்து விட்டது. மாறாக புரட்சிகரமான வெகுஜன இயக்கம் வளர்வதற்கு இந்த தனிநபர் அழித்தொழித்தல்  தடையாக அமைந்தது. இவர்களால் விவசாயிகளை அணிதிரட்ட முடியாதது மட்டுமல்ல, அரசின் அடக்குமுறைகளையும் எதிர் கொள்ள முடியவில்லை. அவர்களால் எழுச்சி என்று அழைக்கப் படுகிற நக்சல்பாரி , கோபிபல்லபூர், ஸ்ரீகாகுளம் போன்றவைகள் தோல்வியில் முடிந்தன. இத்தோல்வியிலிருந்து தங்களது செயல் தளத்தை நகர்புறத்திற்கு மாற்றினர். குறிப்பாக கல்கத்தா மற்றும் புறநகர் பகுதிக்கு வந்தனர். அங்கும் தொழிலாளர்களை வென்றெடுக்க முடியவில்லை. எனவே,  ”வர்க்க எதிரிகளை ஒழித்துகட்டுவது” என்ற பெயரால் போக்குவரத்து போலீஸ்காரரையும், சிறு அலுவலர்களையும், பல்கலைக்கழக துணை வேந்தைரையும் கொலை செய்தனர். மேற்கு வங்கத்தில் 1971-இல் காங்கிரஸ் கட்சியின் அரைப்பாசிச ஆட்சி நடந்தபோது அவர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை வேட்டையாடினர். 1972-இல் ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை படுகொலை செய்தனர். ஆனால் அவர்களது ”நகர்ப்புற எழுச்சியும்” பிசுபிசுத்துப் போனது.

ஒன்றுபட்ட கட்சியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூட தீர்க்கமுடியவில்லை. எனவே 1971-இல்  சிபிஐ (எம்.எல்.) இரண்டாக உடைந்தது. அடுத்தடுத்து பல குழுக்களாக சிதைந்து செயலிழந்தது. ஆதிவாசி மக்களில் ஒரு சிறு பகுதி தவிர இதர விவசாயிகளைக் கூட திரட்ட முடியவில்லை.  ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், பகுதியில் ஆதிவாசி மக்களிடம் இருக்கிற செல்வாக்கை வைத்து இப்போது சிபிஐ (மாவோயிஸ்ட்) என்று வெளிவந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் எதையும் இவர்கள் படிப்பிணையாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. உலக மாற்றங்களை கிரகித்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. குழப்பத்தினூடே பயணம் தொடர்கிறது.

சுருக்கப்பட்ட ஏகாதிபத்தியம்

மறைக்கப்பட்ட சோசலிசம்

மாவோயிஸ்ட்டுகளின் தத்துவ வறுமை

எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தத்துவம், திட்டம், தந்திரோபாயம், நடைமுறைத் தந்திரம் மிகவும் அடிப்படை யானவை. குறிப்பிட்ட நாட்டில் செயல்படும் கட்சிக்கு அத்திட்டத்தில் புரட்சியின் தந்திரோபாயங்கள் கோடிட்டு காட்டப்பட வேண்டும். இந்த தந்திரோபாயமும் அந்நாட்டின் பொருளா தாரம், அரசியல் மேல்கட்டுமானம், மற்றும் சமூகம் பற்றிய ஸ்தூலமான ஆய்வின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சரியான தந்திரோபாயத்தை உருவாக்க அன்றைய கால கட்டத்தில் சர்வதேச ரீதியிலான வர்க்க சேர்மானம் பற்றிய ஸ்தூலமான ஆய்வுகள் அடிப்படையானது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.

மாவோயிஸ்டுகள் தங்களது திட்டத்தில் மார்க்சிய-லெனினிய மாவோயிச சிந்தனைகள்தான் தத்துவ வழிகாட்டி என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய செயல்பாட்டை மிகவும் சுருக்கி முக்கியத்துவமற்ற முறையில் கொடுத்துள்ளனர். வளர்ந்த முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இதன்மூலம் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் அவ்வப்போது ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சரிகட்டுகிறது. இத்துடன் கூடவே   தொழிலாளர் மற்றும் இதர பகுதி மக்களின் நலன்களை வெட்டிச் சுருக்குவது, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலை பறிப்பு, நிதிமூலதனத்தால் நாடுகளின் இறையாண்மை பறிக்கப்படுவது போன்ற எண்ணற்ற ஏகாதிபத்திய தாக்குதல் பற்றி மாவோயிஸ்டுகள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில்  எதுவும் இடம்பெறவில்லை. ஏகாதிபத்தியங்களின் இருமாபெரும்  உலக யுத்தங்கள் பற்றியும் அது தேசவிடுதலைப் போhராட் டத்தை அடக்கியது பற்றிய நிலைமைகளைக்கூட குறிப்பிடப் படாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முழுமை பெறுமா?

சோசலிசத்தின் சர்வதேசத் தன்மை

உலகில் சோவியத் யூனியன் இருந்தது உண்மை. அது தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்தது என்பதும் வரலாறு. மூன்றாம் உலக நாடுகள் சில துறைகளில் சுயமாக முன்னேற ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்க உதவி புரிந்தது. சோசலிச முகாம் மற்றும் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு உலக வர்கக சக்திகளின் பலாபலன்களில் மாற்றம் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் பலம் அதிகரித்தது. வளரும் நாடுகளை இது கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட்டுகள் பழைய நக்சலைட்டுகளின்  பார்வையை தற்போதும் தொடர்கின்றனர். சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியம் என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைவிட ஆபத்தானது என்றும் அறிவித்துள்ளனர். 1956-லேயே சோவியத் யூனியனில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்றும் 1976-க்குப் பிறகு சீனாவும் முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் அறிவித்தனர். தற்போது அவர்கள் பார்வையில் உலகில் சோசலிச முகாம் இல்லை. ஒரு சோசலிச நாடுகூட இல்லை என்பதுதான். கியூபாவைக்கூட குறிப்பிடத் தயாராக இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் சோசலிச கூட்டமைப்பையும் அதன் அனுபவத்தையும்  பரிசீலிக்கக்கூட தயாராக இல்லை. சீனாவில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் கடைபிடித்த வர்க்க ஆய்வு, ஆயுதப்போராட்டம், தந்திரோ பாயம், நடைமுறைத் தந்திரம் ஆகியவற்றை அப்படியே இயந்திரகதியாக கடைபிடிப்பதுதான் இவர்களின் உலக அனுபவ சித்தாந்தம், இந்த குறுகியப் பார்வை  உழைப்பாளி மக்களை சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவுமே உதவும்.

ஊனப்பார்வையா? உருக்குலைந்த சிந்தனையா?

உலகப்புரட்சியின் உந்து சக்தி தேசவிடுதலைப்போராட்டம் என்று கூறுகின்றனர். சோவியத் யூனியன் தேசவிடுதலைப் பேராட்ட இயக்கங்களுக்கு அளித்த ஆதரவை ஒரு பொருட் டாகவே மதிப்பீடுகளை செய்ய மறுத்தவர்கள், தற்போது தேசவிடுதலைப்போராட்டமே உலகப் புரட்சியின் பிரதான இருப்பு என்று பறைசாற்றுகின்றனர். இதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மையம் என்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் இருந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி இவர்கள் குறிப்பிடவில்லை.  மாறாக “தற்கால  உலகில் தெற்கு ஆசியாதான் தேசவிடுதலைப்போரின் கூர்முனையாக உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு, வடமேற்கு  மாகாணப் பகுதிகளிலும் போர்குணமிக்க எழுச்சிகள் வெடித்து கிளம்புகின்றது என்கின்றனர்.  “இஸ்லாமிய எழுச்சி,  அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டது. எனவே அது வளரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அறிவிக்கின்றனர். என்ன சிந்தனை இது? மார்க்சிச, லெனினிச, மாவோயிச தத்துவத்தை வழிகாட்டி என்று பறைசாற்றிய மூளையிலிருந்து இப்படி உருக்குலைந்த சிந்தனையா!

தாலிபான், அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இதர தீவிரவாதக்குழுக்களின் போராட்ட இலக்கு என்ன? இஸ்லாமிய அரசை நிறுவுவது, அதுவும் மத அடிப்படையிலான ஷரியத் சட்டம், ஜனநாயக அரசியலுக்குத்தடை, பெண்களின் சுதந்திர மான நடமாட்டத்திற்கு தடை, பிற்போக்குத்தனமான நிலப்பிர புத்துவ நடைமுறைகள், பழக்க, வழக்கங்களை கடைபிடிக்கத் துடிக்கும் அமைப்புகளின் போராட்டத்தை  தேசவிடுதலை என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் வர்ணிக்கின்றனர், தாலிபானும், அல்கொய்தாவும் அமெரிக்க சிஐஏவால் உருவாக்கப்பட்டு ஆப்கானில் சோவியத்யூனியனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது இவர்கள் அறியாததா? இவர்களைத்தான் முற்போக்கு முத்திரை குத்தி தங்களது கூட்டாளிகள் என்று பறைசாற்றுகின்றனர்.

இந்த ஊனமுற்ற  பார்வை எங்கிருந்து உருவாகிறது? உலக முரண்பாட்டை பற்றிய பலவீனமான மதிப்பீட்டிலிருந்து உருவாகிறது.உலகில் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் என்பதும், இன்றைய சகாப்தத்தின் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும் – சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட. மாவோயிஸ்டுகள் பிரதான முரண்பாடாக   ஏகாதிபத்தியத்திற்கும் – அடக்கப்பட்ட நாடுகள்/மக்கள் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுதான் பிரதானமுரண்பாடு என்று தீர்மானிக்கின்றனர். 1970-80ஆம் ஆண்டுகளில் நக்சலைட்டுகள் சீன கட்சியிடமிருந்து அவதானித்த மூன்றுலகக் கோட்பாடுகளிலிருந்து அவர்களது மூளை முற்றிலும் இன்னும் விடுபடவில்லை என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்கா-ரஷ்யா என இரு வல்லரசுகள் முதல் உலகம், இதர ஏகாதிபத்திய நாடுகள் இரண்டாம் உலகம், ஜப்பான்  தவிர மற்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலகம் என்ற நிலையை தொடருகின்றனர். மூன்றாம் உலகம் மற்ற இரு உலகத்தையும் சுற்றி வளைத்து வெற்றிகொள்ள வேண்டுமாம்? காலம் மாறிவிட்டது, வர்க்க உறவுகள் மாற்றம், சீனக்கட்சியே வலியுறுத்தாத கருத்து, இவர்களை சிறைபிடித்து சிக்கவைத்துள்ளது.

தரகு முதலாளியா? – தனித்துவமான முதலாளித்துவமா?

இந்திய சமூகத்தை பற்றி மதிப்பீடு செய்கிறபோது , “நவீன காலனித்துவத்தால் மறைமுகமாக ஆளப்படுகிற சுரண்டப் படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரவுத்துவ சமூக அமைப்பு” என்று கூறுகின்றனர். இது 1939-இல் சீன சமூகம் பற்றிய மதிப்பீட்டை அப்படியே யந்திரகதியாக நகல் எடுப்பதாகும். அன்று சீனா பல ஏகாதிபத்தியத்தால் கூறுபோடப்பட்டிருந்தது. யுத்த பிரபுக்கள் பலர் ஆட்சி புரிந்தனர். மைய அரசு என்பது இல்லை. தேசிய முதலாளி களைவிட தரகு முதலாளிகள் பலர் ஏகாதிபத்தியத்துடன் உறவு வைத்து செல்வாக்கு செலுத்தினர். அப்படிப்பட்ட நிலை இன்று இந்தியாவில் உள்ளதா? மைய அரசு இல்லாமல் பல ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் தீர்மானிக்கிறதா? இல்லவே இல்லை. ஆனாலும் இந்திய அரசியல், பொருளா தாரம், கலாச்சாரம் ஆளும் வர்க்கம் அனைத்தையும் சுதந்திர இந்தியா என்ற அறிவிப்பு பலகைக்கு பின்னால் இருந்து ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்துகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுகின்றனர். இந்தியாவிற்கு என்று எந்த தனித்துவமும் இல்லை என்பதுதான் இவர்கள் கூற்று.

இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய பெரும் முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவ தலைமையிலான கூட்டு சர்வாதிகார அரசு என்றும்” இந்த பெரும் முதலாளிகளும், பெரும் நிலப்பிரபுக்களும் உண்மையில் தரகு முதலாளிகளே” என்று வரையறுக்கின்றனர். தரகு முதலாளி என்பது ஒரு பின்தங்கிய காலனித்துவ நாட்டில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு வர்த்தக ரீதியில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அவர்களது உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் ஆவர், இவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் ஆவர்.” இந்திய முதலாளிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களா? அடிப்படை தொழிலான உருக்கு, இயந்திரம், தானியங்கி, துணி, தகவல்  தொடர்பு, எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் என எண்ணற்ற தொழில்களில் இந்திய முதலாளிகள் ஏகபோகமாக உள்ளனர். இந்திய முதலாளிகள் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். இருபத்தி இரண்டு ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு  1957-இல் 312.63 கோடியாக இருந்தது. இது 1997-இல் 500 மடங்கு அதிகமாகி 1,58,004.72 கோடியாக உயர்ந்துள்ளது. பத்து தனியார் கார்பொரேட் நிறுவனங்களின் சொத்து 2003-2004-இல் 3,54,000 கோடியிலிருந்து 2008-இல் 10,34,000 கோடியாக நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களா தரகு முதலாளிகள்? மாவோயிஸ்டுகளின் தரமற்ற மதிப்பீட்டால்தான் இந்தத் தவறான முடிவுக்கு வருகின்றனர்.

இந்தியப் பெருமுதலாளிகளுக்கு தொழில் அடிப்படை மட்டுமல்ல வர்த்தகம் மற்றும் சேவைத்துறையிலும் பெரும் பங்கு உள்ளது. இவர்களின் நலன்களை  பாதுகாக்க பல நேரங்களில் ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகின்றனர். பல நேரங்களில் ஒத்துப்போகின்றனர். தங்களது சந்தை, சந்தையை பாதுகாக்கும் விஷயத்திலும் உலகச்சந்தையில் பங்கு பெறுவதிலும் மோதல் ஏற்படுகிறது. ஏகாதிபத்திய முதலாளிகளுடன் ஒப்பிடும்போதும், தொழில் நுட்பம் தொடர்பான விஷயம், மூலதனத் திரட்சி ஆகியபற்றில் ஒத்துப்போகும் தேவை உள்ளது. எனவே இந்திய முலாளித்துவம் இரட்டைத்தன்மை குணமுடையது என்று மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இவர்களை தரகு முதலாளிகள் என்றோ, கமிஷன் ஏஜன்ட் என்றோ மதிப்பிடுவது எதார்த்த நிலைக்குப் பொருந்தாது.

புரட்சியின் கட்டம் + நேசசக்திகள் + தலைமை = குழப்பம்:

இந்தியப் புரட்சியின் கட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கீழ்க் கண்டவாறு வரையறுக்கிறது. “இந்தியாவில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரோ அல்லது சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவமோ அதற்கு முந்தைய சமூக அமைப்பை அழித்தொழிக்கவில்லை. எனவே இந்தக் கடமை தொழிலாளி வர்க்கத்திடமும் அதன் கட்சியின் மீது விழுந்தது. எனவே அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து ஜனநாயகப் புரட்சியை முழுமைப்படுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.

ஆனால் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை இந்தியா இன்றும் ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் உள்ள அறை காலனித்துவ நாடாகும். எனவே தற்போதைய புரட்சியின் கட்டம் தேசிய விடுதலை அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய உள்நாட்டு கூட்டாளி நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் பொதுவான ஐக்கிய முன்னணியைக் கட்டவேண்டும் என்பதுதான். இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக ஏகபோக முதலாளிகள் இருப்பார்கள் என்கின்றனர்.  அதாவது தேசவிடுதலையும், ஜனநாயகப் புரட்சியையும் கலந்து குழப்பிக் கொள்கின்றர். புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்தப் புரட்சியும் பெரும் ஆபத்தையும் , கேடுகளையும் விளைவிக்கும்.

புரட்சியின் நேச அணியில் பாட்டாளி வர்க்கம் மையமானது என்றாலும், பணக்கார விவசாயிகள், குட்டி முதலாளிகள், பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகள் பற்றிய மதிப்பீடுகள் தெளிவாகவும்  திட்டவட்டமாகவும் இல்லை. கிராமப்புற பணக்கார விவசாயிகள் பெரும்பகுதி புரட்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி நடுநிலையாகவும், சிறு பகுதி எதிரிகளுடனும் அணி சேருவர் என்று மதிப்பீடு செய்கின்றனர். எதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு வருகிறது? நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வணிகர்கள்தான் கிராமப்புற பணக்காரர்களின் அச்சாக உள்ளனர். இவர்களிடம் ஊசலாட்டத் தன்மை இருக்கும், ஆனால் புரட்சிகரமான சூழல் ஏற்படும் தறுவாயில்தான் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்று தீர்மானிக்க முடியும். மாவோயிஸ்டுகள்  இப்போதே ஜோசியம் பார்ப்பதுபோல் அறிவிப்பது அபத்தமானது. இதேபோன்று குட்டி முதலாளிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையான கூட்டாளி என்று மொட்டையாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. குட்டி முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினர், முதலாளித்துவ பாதையாலும், நவ தாராளமயக்  கொள்கையாலும் மேன்மையும், பலனும் அடைந்துள்ளது.  இதனால் இவர்கள்  படகை புரட்சிகர இயக்கத்தின் பக்கம் செலுத்துவதைவிட ஆளும் வர்க்கம் பக்கமாக செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

ஜனநாயகப் புரட்சிக்கு பாட்டாளிவர்க்கத்தலைமை பற்றி மாவோயிஸ்டுகள் தங்களது திட்டத்தில் பேசுகின்றனர். ஆனால் தொழிலாளா வர்க்கம் மத்தியில் வேலை செய்வது, அணி திரட்டுவது சிறிதளவு கூட இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டாமல் எப்படி தொழிலாளிவர்க்கம் தனது தலைமைப்பாத்திரத்தை நிறைவேற்றமுடியும்? மக்கள் யுத்தத்தின் அடிப்படை உந்து சக்தி விவசாயிகள். கிராமப் புறங்களை விடுவித்த பிறகுதான் நகர்ப் புற விடுதலை என்ற பழைய சித்தாந்த திட்டத்திலிருந்து மீளவில்லை. ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் பற்றி வார்த்தைகளில் உள்ளது, நடைமுறையில் பழைய செயல்முறைகளே.

மக்கள் யுத்தமா? – அபத்தமா?

இன்றைய புரட்சியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு மாவோயிஸ்டுகள் நம்பும் ஒரே தந்திரம் “நீண்ட கால மக்கள் யுத்தம்” என்பதாகும். “நம்மைப் போன்ற நாட்டில் புரட்சியின் தொடக்கம் ஆயுதப் போராட்டம் மூலமாகவே  நடக்கும் ” மற்ற அனைத்துப் போராட்டங்களும் இதற்கு உறுதுணையாகவே அமைய வேண்டும்.

தொழிலாளர்கள்,   நகர்ப்புற ஏழைகளை அணிதிரட்டாமல் கிராமப்புறத்தில் கூட விவசாயிகளை அணிதிரட்டாமல் ஆயுதப் போராட்டம் எப்படி சாத்தியமாகும்? வெற்றி பெறும்? அவர்களின் 40 ஆண்டுக்கால அனுபவத்தில் விவசாயிகளை அவர்களது அடிப்படையான கோரிக்கைகளுக்காகக் கூட திரட்ட முடியாதவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு வருவார்களா?”

இதே காலத்தில் ஆளும் வர்க்க அரசுக் கட்டமைப்பின் அசுர வளர்ச்சியை துளிகூட கணக்கில் எடுக்கவில்லை. ஏங்கல்ஸ் 1848-இல் அரசு இருந்த நிலைமையில் தடையரண் போராட்டங்கள் பலமாக இருந்தது.  இது 1895-இல் நிலைமைகள் மாற்றம் ஏற்பட்டு அரசு பலத்தை கூட்டியுள்ளதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று ஜம்பது ஆண்டுக்கால அனுபவத்தை துல்லியமாக மதிப்பிடுகிறார். ஆனால் இந்திய மாவோயிஸ்டுகள் இந்திய அரசின் தகவல் வளர்ச்சி. போக்குவரத்து, மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பலமான ராணுவம் என அரசின் அசுர வளர்ச்சிபற்றி சிறிதும் கணக்கில் எடுக்காத கனவுலக திட்டமாக ஆயுதப் போராட்டம் என்று அறிவிக்கின்றனர்.

எனவேதான் இவர்களது மக்கள் யுத்தம் என்ற பெயரால் நடத்துகிற தனிநபர் அழித்தொழித்தல் திட்டம், அரசியல் எதிரிகளையும் அடிமட்ட அரசு ஊழியர்களையும் நோக்கி பயன்படுத்தப்படுகிறது. அவர்களை மட்டுமே படுகொலை செய்கின்றனர். விவசாயப் புரட்சிகளின் எதிரிகளாக இருக்கக் கூடிய நிலப்பிரபுக்களையோ அல்லது பெரு முதலாளிக ளையோ இவர்கள் அழித்தொழித்ததாக வரலாறு இல்லை. காரணம் இவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் 2009-இல் தனது பேட்டியில் ” நாங்கள் தொழில் நிறுவனங்களிடமும், பெரு முதலாளிகளி டமும் பணம் வசூலிக்கின்றோம், இதில் ஒன்றும் தவறில்லை. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கவில்லையா? என்று கேட்கின்றார். வர்க்க எதிரிகளிடமே சரணாகதி அடைந்துவிட்டு யாருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துகின்றனர்? இவர்களது ஆயுதக்குழு சில தாக்குதல்களை நடத்திவிட்டு காடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும், அதன்பிறகு அரசுப்படைகள் அங்குள்ள ஆதிவாசி மக்களை வேட்டையாடும் போது அவர்களை பாதுகாக்க முடியாத கையறு நிலையாக இருப்பார்கள். இதுதான் சத்தீஸ்கர், ஜார்கண்டில் நடந்து வருகின்றது. ஒரிசாவில் விஎச்பி தலைவரை 2008-இல் படுகொலை செய்துவிட்டு காடுகளில் ஒளிந்துகொண்டனர். இதன்பிறகு பல ஆயிரம் கிறிஸ்துவ மக்கள் வேட்டையாடப் பட்டனர், வீடுகளையும், வழிபடும் இடங்களையும் இழந்தனர். இதுதான் இவர்களது ஆயுதப்போராட்டத்தின் அன்பளிப்பு?

பூனை கண்ணை மூடிக்கொண்டால்…

தேர்தல் மற்றும் ஜனநாயக நடவடிக்கை பற்றியெல்லாம் மாய உலகத்தில்தான் மாவோயிஸ்ட்டுகள் சஞ்சரிக்கின்றனர். தேர்தல் வரும்போது புறக்கணிப்பை அறிவிப்பார்கள். தேர்தலில் பதிவாகாத வாக்குகளை தங்களது வெற்றி என்று அற்பமான முறையில் பறைசாற்றி கொண்டாடுவார்கள். 2009-இல் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மராட்டியத்தில் சுமார் 50 சதமான வாக்குகள்தான் பதிவானது என்பதை சுட்டிக்காட்டி, வாக்களிக்காதவர்கள் மாவோயிசஅழைப்பிற்கு செவிசாய்த்தனர் என்றனர். ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதுபோல் பம்பாயில் 57 சதமான மக்கள் வாக்களிக்கவில்லை, இவர்கள் எல்லாம் மாவோயிச ஆதரவாளர்களா? என்றார். கண்ணை மூடிக் கொண்ட பூனைக்கும், மாவோயிஸ்டுகளின் தேர்தல் புறக் கணிப்பும் மதிப்பீடும் ஒன்றுதான்.

நாடாளுமன்றமும் இதர ஜனநாயக அமைப்புகளும் புரட்சிகர முன்னேற்றத்திற்கு தடையானது என்றும், அவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மாவோயிஸ்டுகள் வாதாடு கின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் நாடாளுமன்றத்தையும்  சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் நாடாளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் நாடாளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள்  உணரமறுக்கின்றனர்.  நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை அவைகளுக்கு வெளியே செயல்படுத் தப்படும் இயக்கங்களோடு மிகவும் கவனமாக இணைத்து செயல்படுவதன் மூலம்தான் அந்த அமைப்புகளை பாதுகாத்து  மக்கள் ஜனநாயகப் புரட்சியினை முன்னெடுத்துச் செல்ல முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக வரையறுத்திருக்கிறது. இதை மாவோயிஸ்டுகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சோவியத் யூனியனில் ஜனநாயகத்தை ஆழப்படுத்தாமல் சோசலிசத் தன்மைகள் மீறப்பட்டதால் எழுந்த அதிகாரவர்க்கப்போக்கினாலும், அரசு கட்சி வேறுபாடின்றி செயல்பட்டதாலும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டனர் என்பதைக்கூட இந்த மாவோயிஸ்டுகள் பாடமாக கற்கத் தயாராக இல்லை. ஏன்?  பக்கத்து நாட்டு நேபாளத்தில் உள்ள மாவோயி ஸ்ட்டுகள் குறிப்பிட்ட அரசியல் சட்டத்தின் கீழ் பல கட்சி ஆட்சிமுறையை பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்து செயல்படுகின்றனர். அதைகூட பாடமாக இவர்கள் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

வடகிழக்கு மாகாணத்திலும், காஷ்மீரிலும் பிரிவினை வாத இயக்கத்தை இவர்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றனர். அவர்கள் பிரிந்துபோவதை எதிர்க்கத் தேவையில்லை என்று கூறுகின்றனர். தேசிய சுயநிர்ணய உரிமையை மொத்த சூழ்நிலையுடன் பொருத்தாமல் இயந்திர கதியாக பேசுகின்றன. 1840-இல் காரல் மார்க்ஸ் போலந்து மற்றும் ஹங்கேரி தேசிய இயக்கத்தை ஆதரித்தார். காரணம் ருஷ்ய மற்றும் ஆஸ்திரிய பேரரசின் அடக்கு முறைகளை எதிர்த்து நின்றதுடன் அவர்களது அரசியல் ஜனநாயகம் ஐரோப்பிய தொழிலாளிவர்க்கத்திற்கு அடிப்படைத் தேவையாக இருந்தது. அதே நேரத்தில் ரஷ்ய ஜார் மன்னருக்கு ஆதரவாக எழுந்த செக் மற்றும் தெற்கு ஸ்லாவ் இயக்கத்தை எதிர்த்தார். காரணம் இது தொழிலாளி வர்க்கத்திற்கு பாதகமானதாக இருந்தது. எனவே ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்துடன் ஒப்பிட்டுத்தான் தேசிய சுயநிர்ணய உரிமை கணக்கில் எடுக்கப்படவேண்டும். காஷ்மீர் தனியாக செல்வது, அல்லது பாகிஸ்தானுடன் செல்வது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் காலுhன்ற அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் நாடுகளில் தலையிட தளமாக அமையும் என்பதை இன்றைய சர்வதேச அறிவுள்ள எவரும் கணிக்கமுடியும். ஆனால் மாவோயிஸ்டுகள் இதை பார்க்க மறுக்கின்றனர். ஆயுதம் தாங்கிய அனைவரும் போராளிகள், விடுதலையாளர்கள் என்று  மதிப்பிடுவது விஞ்ஞான பார்வையல்ல.

மாவோயிஸ்டுகள் தாக்குதலின் இலக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது சமீபத்திய விபரங்கள்கூட நிரூபணம் செய்கிறது. சத்தீஸ்கர், ஒரிசா,  ஜார்கண்ட், மாநிலத்தைவிட மேற்குவங்கத்தில் 57 சதவிகிதம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 1,76,668 ஆதிவாசிகளுக்கு 1,97,350.39 ஏக்கர் நிலம்பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் 2009 நாடாளுமன்றத்தேர்தலில் 3 லட்சம் வாக்குகளில் வெற்றிபெற முடிந்தது. மார்க்சிஸ்டுகள் மக்கள் தளத்தை இழந்துவிட்டால் அவர்களை தாக்க வேண்டிய தேவை மாவோயிஸ்டுகளுக்கு இருக்காது. அங்கு மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருப்பதாலேயே அதன் ஊழியர்களை,  தலைவர்களை கொலை செய்துவிட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

ஆளும் வர்க்க சேவகம்:

வலது திருத்தல் வாதமும் இடது அதிதீவிரவாதமும் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது என்பது உலக வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக நக்சலைட்டுகளும், தற்போதைய மாவோயிஸ்டு களும் இதையே செய்கின்றனர். 1970-ஆம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கினர்.  1972-இல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி யுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை படுகொலை செய்தனர். தற்போது திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்தும், இதர பிற்போக்கு மதவாத சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சியை தாக்குகின்றனர். 2009-இல் மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஸ்வரராவ் அடுத்த மேற்கு வங்க முதல்வராக மம்தாபானர்ஜியை பார்க்க விரும்புகிறோம் என்று தங்களது புரட்சிகரமான கொள்கையை பேட்டியாகக் கொடுத்தார். இதனால்தான சில முதலாளித்துவ பத்திரிகைகள் நாடாளுமன்ற இடதுசாரிகளுக்கு மாற்று என்றும், அதிகாரப் பூர்வ இடதுக்கு மாற்று என்றும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாலை சூடுகின்றனர்.சில அறிவுஜீவிகளும் இதற்காக சில சாகச செயலில் ஈடுபடுகின்றனர்.சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளது போல் இந்த மாவோயிசம் கனவின் மரணம் அல்ல,மாறாக ஆளும்வர்க்க கனவின் செயலூக்கமிக்கவீரர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் மக்கள் செல்வாக்கு படைத்த இடதுசாரி இயக்கத்தை ஒழிக்க நேரடியாக ஈடுபடுகிறது. இந்தியப் பெருமுதலாளிகளும் இதே வேலையினை செய்கின்றனர். இவர்களுடன் கைகோர்த்து மாவோயிஸ்டுகள் வலம் வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகள், இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மக்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் ஆளும் வர்க்க சேவகர்களாக செயல்படும் மாவோயிஸ்டுகளை தத்துவார்த்த அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதே இன்றையத் தேவையாகும்.

(கிரேவால்ஆங்கில மார்க்சிஸ்ட்-ல் எழுதியக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s