தோற்றம்: 20.10.1932 – மறைவு: 17.7.2000
ஆசிரியர்குழு
“குழந்தைத் தொழிலாளியாக, சென்னை வந்த பரமேஸ்வரன் வறுமையோடு போராடி, கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட அடக்குமுறைகளைச் சந்தித்து, சென்னை நகரத் தொழிலாளர்களின், நெஞ்சங் களைக் கவர்ந்த கிளர்ச்சிப் பிரச்சாரகனாகி, சுயகல்வியால், தத்துவத்தில் தேர்ச்சி பெற்று, தத்துவ இதழான மார்க்சிஸ்ட் ஆசிரியராகி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உயர்ந்து நின்றவர். அவரது வாழ்க்கை, இளம் கம்யூனிஸ்ட்டு களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு, 1970-களில் வி.பி. சிந்தன், பரமேஸ்வரன், கஜபதி, ஹரிபட் ஆகியோர் சென்னை நகரில் ஆற்றிய பணி, செயல்பட்ட முறை, கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு நல்ல வழிகாட்டி, இவர்கள் கூடினால் அன்றைய உலக அரசியல் நிலவரங்களைப் பற்றிய காரசாரமான வாதத்தில் தொடங்கி உள்ளூர் விவகாரம் வரை பேசுவர், பீடித் தொழிலாளர்கள் முதல் கல்லூரி பேராசிரியர் வரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி பேசுவர், ஒளிவு மறைவு இல்லாமல் கருத்துக்களை கூறுவர். உணர்ச்சிவயப் படாமல் இவர்களால் வாதிக்க இயலாது. முதல் நாள் மூச்சைப்பிடித்துக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்காமல், பெரிய தொழிற்சாலைகளில் சங்கத்திற்கு தலைமை தாங்குவது சரியல்ல என்று வாதிடுபவர் மறுநாள் அது சரியான அணுகுமுறை யல்ல சூழ்நிலையை பயன்படுத்தும் யுக்தி தேவை என்று சுயவிமர்சனமாகப் பேசி தனது கருத்தை திருத்தும் போக்கால் கூட்டாக செயல்படும் போக்கு ஒரு பண்பட்ட நடைமுயைறாக இருந்தது. ஆனாலும் வெகுஜன அரங்கின் மூலம் கட்சி கட்டுகிற பணி என்பது ஒரு நிரந்தர சர்ச்சையாக இருந்தது. கூடினால் அரசியல் அல்லது வெகுஜன அமைப்பில் கையாள வேண்டிய யுக்திகள் இவைகளைப் பற்றியே சூடான விவாதம் நடக்கும். தங்களை மறந்து செயல்படும் தன்மையால் அவர்கள் உயர்ந்து நின்றனர்.
ஆலைகளைத் தாண்டி ஒன்றுபட்ட தொழிலாளர்கள் இயக்கத்தை கட்டுவதின் மூலமே முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் அணுகுமுறையை மாற்றிட முடியும் என்ற கோட்பாட்டை பேசுவது எளிது. ஆனால் இது ஆலைத் தொழிலாளர்களின் உணர்வாக மாற்றுகிற நடைமுறை கம்யூனிஸ்டு களுக்கு ஒரு சவாலாகும், தொழிலாளர்களுக்குள் அரசியல் கட்சி ரீதியாக, இன்னும் பல்வேறு உணர்வுகளால் பிளவுகள் இருக்கிற சூழலில் கம்யூனிஸ்ட்டுகள் வர்க்க ஒற்றுமையை கொண்டு வர படுகிறபாடு ஒரு தாயின் பிரசவ வேதனையோடு தான் ஒப்பிடமுடியும். அந்த வகையில் வெகுஜன அமைப்புக்களின் இயக்கங்களை வளர்க்க, சீராட்ட, புதிய கம்யூனிஸ்டுகள் வளரும் வயலாக்கிட ஒரு தாயின் மனப்பாங்கோடு இவர்கள் செயல்பட்ட விதம் நெருங்கிப் பார்த்தவர்களே உணரமுடியும். பரமேஸ்வரன், சிந்தன், ஹரிபட், கஜபதி இவர்களிடையே இருந்த தோழமை உணர்வே ஒரு செயலூக்கமுள்ள குழுவாக பரஸ்பர மரியாதையுடன் இருக்க வைத்தது. குறைகளை மட்டுமே பாராமல் நிறைகளை பார்க்க வைத்தது. எதிர்மறைகளின் ஒற்றுமை என்ற இயக்க இயலை புரிந்தவர்களே பரமேஸ்வரன் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த பொழுது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுவின் செயல்பாட்டையும், மகத்தான போராட்டங்களை நடத்திய வரலாற்றையும் பாராட்ட முடியும்.
இந்த நால்வரோடு இணைந்து செயல்படுகிற வாய்ப்பு கிடைத்தவர்களில் ஒருவர் இன்றைய மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் பெறும் வே. மீனாட்சி சுந்தரம் மற்றவர்கள் அ.சவுந்திரராசன், ஏ.கே. பத்மநாபன் பரமேஸ்வரனின் எழுத்தாற்றலை உணர என். ராமகிருஷ்னன் எழுதிய நூலில் குறிப்பிடுவதை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.”
– ஆசிரியர் குழு
எழுத்துத் துறையில் அவரது சாதனை:
ஏராளமான கட்டுரைகளை எழுதிய பரமேஸ்வரன், பல சிறந்த நூல்களை மலையாள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். நிரஞ்சனா எழுதிய “நினைவுகள் அழிவதில்லை” சி.ஆர். ஓமனகுட்டன் எழுதிய “பிணந்தின்னிகள்”, டி.கே. ராமகிருஷ்ணன் எழுதிய “கல்லில் தீப்பொறிகள்”, இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய “வேதங்களின் நாடு”, “கேள்வி பதில்கள்” போன்ற பல நூல்களை தமிழாக்கம் செய்துள்ளனர்.
இவற்றில் “நினைவுகள் அழிவதில்லை” நூலும், “பிணந்தின்னிகள்” நூலும் பரமேஸ்வரனுக்கு மிகப் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தன.
“நினைவுகள் அழிவதில்லை” நாவலானது கன்னட மொழியில் எழுத்தாளர் நிரஞ்சனா எழுதியதாகும். அது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. கையூர் தூக்குமேடைத் தியாகிகளான சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு மற்றும் அப்பு ஆகிய நான்கு போராளிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 1974ஆம் ஆண்டில் அதன் மலையாள மொழியாக்கம் வெளியானதும், பரமேஸ்வரன் அதை வாங்கிப் படித்து மெய் மறந்து போனார். அந்த நூல் அவர் மனதை உலுக்கி விட்டது. அதை தமிழாக்கம் செய்தே தீருவது என்ற முடிவுக்கு வந்த அவர், தன் பல்வேறு பணிகளுக்கிடையே அந்த வேலையைத் தொடங்கினார். கட்சிப் பணி முடித்து நள்ளிரவு வரை மொழியாக்கம் செய்யத் தொடங்கி சில வார காலத்திற்குள் அதை முடித்தார். “நினைவுகள் அழிவதில்லை” என்ற பெயரில் வெளிவந்த அந்த நூல் பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் மற்றொரு பதிப்பு வெளிவந்துள்ளது.
“பிணந்தின்னிகள்” நூலானது அவசர நிலைமை கோலோச்சிய காலத்தில் கேரளத்தில் காவல்துறையினரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட மாணவர் ராஜனின் படுகொலையை விவரிப்பதாகும்.
அவசர நிலை காலத்திற்குப் பின் மக்களின் பலத்த நிர்பந்தத்தினால் கேரள அரசாங்கம் இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்தது. நீதிபதிகள் போத்தியும், காலித்தும் இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். ராஜனின் தந்தை ஈச்சர வாரியர் பற்றி குறிப்பிட்ட நீதிபதி காலித், ஒரு தந்தையின் மனோநிலை எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களுடன் தீர்ப்பு வழங்கினார்.
இதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “பிணந்தின்னிகள்” நூலில் இந்தத் தீர்ப்பை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யும் பொழுது பேராசிரியர் ஓமனகுட்டன் மிகவும் சிரமப்பட்டு போனார். அந்தளவிற்கு ஆங்கில நடை கடினமாயிருந்தது.
மலையாளத்தில் வெளிவந்த அந்த நூலை, பரமேஸ்வரன் படித்த வேகத்தில் அதை தமிழாக்கம் செய்ய வேண்டுமென்று கருதினார். அதைப் படிக்கும் பொழுது அந்நூலில் ஏதோ குறை இருப்பதாக பரமேஸ்வரன் உணர்ந்தார். ஒரு பாராவை அவர் புரிந்து கொள்ள இரண்டு நாட்கள் ஆனது. அதன் பின்னர் தான் அவர் தமிழாக்கம் செய்யும் பணியில் இறங்கினார். இந்தப் பணியில் புதல்வர் ராஜேந்திரனும், புதல்வி உஷாவும் அவருக்கு உதவி புரிந்தனர்.
“பிணந்தின்னிகள்” என்ற தலைப்பில் வெளியான அந்த நூல், சிறந்த மொழியாக்கத்திற்காக பலரது பாராட்டுதல்களைப் பெற்றது.
கொச்சி மகாராஜா கல்லூரியில் நடைபெற்ற “தேசாபிமானி”யின் 30வது ஆண்டு விழாவில் பேசிய பேராசிரியர் ஓமனகுட்டன், தமிழில் வெளிவந்த இந்நூலைப் பற்றி பராட்டிப் பேசினார். பின்னர் சென்னையில், கேரள சமாஜத்தில் நடைபெற்ற “தேசாபிமானி” விழாவிலும் அவர் பேசினார். பி.ஆர். பரமேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. பேசும் பொழுது பேராசிரியர் ஓமனகுட்டன், பரமேஸ்வரனை சுட்டிக்காட்டி “நீதிபதி காலித் தீர்ப்பை ஆங்கிலத்திலிருந்து மலையாளமாக்குவதில் நான் வெற்றி பெறவில்லை. ஆனால் தோழர் பரமேஸ்வரன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். நான் தோற்ற இடத்தில் அவர் வென்றார். அவருக்கு அனைத்துவித வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி பரமேஸ்வரனைப் புகழ்ந்து பேசினார்.
பரமேஸ்வரன் எழுதிய “இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்” என்ற சிறு நூலானது 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று துவங்கிய கடற்படை வீரர்களின் எழுச்சி தோன்றியப் பின்னணி, அந்த வீரர்களின் தீரப் போராட்டம், இந்திய சுதந்திரப் போருக்கு அது அளித்த உத்வேகம் போன்றவற்றை விறுவிறுப்பாகக் கூறும் புத்தகமாகும். அதுவும் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துள்ளது.
அவர் எழுதிய “சோசலிசம் என்றால் என்ன” என்ற நூலானது சோசலிசத் தத்துவம் எவ்வாறு தோன்றியது. கற்பனா சோசலிசத்திற்கும் விஞ்ஞான சோசலித்திற்குமுள்ள வேறுபாடு, சோசலிச சமுதாய அமைப்பின் அடிப்படையான அம்சங்கள், சோசலித்தை எவ்வாறு அடைவது, இந்தியா சோசலிசத்திற்கு செல்லும் பாதை என்ன என்பன போன்ற பல்வேறு பிரச்சனைகளை விஞ்ஞான சோசலிசக் கண்ணோட்டத்தில் சுருக்கமாக விளக்கும் நூலாகும்.
சோசலிசமும் முதலாளித்துவமும் என்ற அவருடைய நூலானது சோசலிசத்தின் மகத்தான சாதனைகளையும், முதலாளித்துவத்தின் சீரழிவையும், சோசலிஸ்ட் அமைப்பில், சீனா, வடகொரியா அடைந்து வரும் முன்னேற்றங்களையும், சோசலிசத்தில் தேசிய இனப்பிரச்சனைகள் தீர்க்கப்படுவது, முதலாளித்துவம் என்பது ஒருபோதும் சோசலிசத்திற்கு மாற்றாக முடியாது என்பதை விளக்கும் நூலாகும்.
அவர் எழுதிய “மார்க்சிய அரசியல் சிந்தனைகள்” நூலானது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிகழ்கால தத்துவ அரசியல் பிரச்சனைகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எத்தகையது, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது எப்படிப்பட்டது. பாட்டாளி வர்க்கப் புரட்சி, நாடாளுமன்ற அரசியல், தொழிலாளி வர்க்க அரசியல், ஐக்கிய முன்னணி கொள்கை போன்றவற்றை விவரிப்பதாகும்.
மூலதனத்தின் மூலாதாரம் என்ற நூலானது மூலதனத்தின் தோற்றுவாய் என்பது என்ன, உழைப்புச் சக்தியின் விலை உழைப்பின் மதிப்பு, முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் அடிப்படைக் காரணம் போன்றவற்றைச் சுட்டிக் காண்பிப்பதாகும்.
மார்க்சிய உலகக் கண்ணோட்டம் என்ற நூலானது மார்க்சிய உலகக் கண்ணோட்டம் என்பது யாது? மார்க்சிய இயக்கவியல் ஆய்வு முறை என்பது எவ்வாறு செயல்படுகிறது. மார்க்சிய சமூக விஞ்ஞானம் என்பதன் சிறப்பு போன்றவற்றை எடுத்துக் கூறும் நூலாகும்.
புரட்சியில் பூத்த நவசீனம் என்ற நூலானது அவரது மக்கள் சீன சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டதாகும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பிற்கிணங்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது தூதுக்குழு ஒன்றை 1987ஆம் ஆண்டில் மக்கள் சீனத்திற்கு அனுப்பி வைத்தது. மத்தியக்குழு உறுப்பினர் அசிந்திய பட்டாச்சார்யா இக்குழுவின் தலைவராகவும், மத்தியக்குழு உறுப்பினர் பி.ஆர். பரமேஸ்வரன் இக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தனர். இவ்விருவர் நீங்கலாக ரோபின் சென், பி.கே. சந்திரானந்தன், ஸ்ரீஹரி ஆகிய மூவரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து மே மாதம் 15ஆம் தேதிவரை 19 நாட்கள் சீனாவில் சுற்றுப் பயணம் செய்தனர்.
இந்தச் சுற்றுப் பயணத்திற்குப் பின் நாடு திரும்பிய பரமேஸ்வரன் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் சீன சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாறுதல்கள், சீனநாடு அடைந்துள்ள முன்னேற்றம், மக்கள் பெற்றுள்ள வாழ்க்கை வசதிகள் ஆகியவை பற்றி முக்கியமான அம்சங்களை விளக்கி எழுதிய நூல்தான் “புரட்சியில் பூத்த நவசீனம்”.
(என். ராமகிருஷ்ணண் எழுதிய “
பி.ஆர். பரமேஸ்வரன், லட்சியமே வாழ்க்கையாக”
என்ற நூலிலிருந்து பக்கங்கள் 84 – 88)