ஒரு பேராசிரியரின் தாக்குதல்களும் விஜயவாடா தீர்மானமும்


 

இந்தியாவின் சிறந்த அறிவுஜீவிகள் என்று அறியப்பட்ட சிலர், மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறுகள் செய்து வருகின்றனர். அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் படிக்கும் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் எழுதி வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் மத்தியில் கட்சிக்கு இருக்கும் ஆதரவை குலைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும், பலர், அடிப்படை ஏதுமற்ற விமர்சனங்களை எழுதி வருகின்றனர்.

நாட்டின் கடைகோடி ஏழை மக்களின் பிரதிநிதியாகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை முதலாளித்துவ அறிவு ஜீவிகள் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், மனித நேயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட முற்போக்கு இலட்சியங் களைப் பேசும் அறிவு ஜீவிகள் மார்க்சிஸ்ட் எதிர்ப்பு நிலை எடுப்பது, வருத்தமும், கவலையும் ஏற்படுத்துகிற நிகழ்வு.

விஜயவாடாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“மார்க்சிஸ்ட் கட்சி மீதான எதிர்ப்பு என்பது இடதுசாரி, முற்போக்கு கருத்துக்களுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதி. இது புதிய தாராளமயத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கம் கொண்டது”. இது முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்குப் பொருந்தும்.

அதே நேரத்தில், கட்சிக்கு எதிரான நிலை எடுத்து செயல்படும் இடது மனோபாவம் கொண்ட பகுதியினரைப் பற்றி குறிப்பிடும் போது,

“கட்சியிடமிருந்து விலகி நிற்கும் இடது மனோபாவம் கொண்ட பகுதியினரோடு, மீண்டும் பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள கட்சி முயற்சிக்க வேண்டும்”. என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணுகுமுறையோடு தான் முற்போக்கான அறிவு ஜீவிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்.

காஞ்ச ஜலய்யாவின் மார்க்சிஸ்ட்எதிர்ப்பு :

ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் காஞ்ச ஐலய்யா நாட்டின் முக்கியமான ஒரு அறிவு ஜீவி. தலித் ஒடுக்குமுறைப் பிரச்சனைகளைப் பற்றி மிக ஆழமாக அலசி, ஏராளமான நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். அவரது புகழ்பெற்ற நூலான, ‘நான் ஏன் இந்து இல்லை?’ இந்து மதத்தின் ஒடுக்குமுறை முகத்தை பட்டவர்த்தன மாக்கிய ஒரு முக்கியமான கருத்துக் கருவூலம்.

இடதுசாரிகள் உள்பட அனைத்து மனித நேய அறிவு ஜீவிகளாலும் மதிக்கப்படுகிற காஞ்ச ஐலய்யா, துரதிருஷ்டவச மாக, மார்க்சிஸ்ட் எதிர்ப்பு அலையோடு ஒன்றிணைந்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்கமிட்டி முடிவுகளை விமர்சித்து ‘டெக்கான் ஹெரால்டு’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (ஆகஸ்ட் 27, 2010)

காஞ்ச ஐலய்யா கட்டுரையின் துவக்கத்திலேயே “மார்க்சிய அறிவியல் தத்துவ அடிப்படையில் செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி, நாட்டை நவீனப்படுத்துவதில் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை” என எழுதுகிறார்.

இதற்கு என்ன காரணம் என்று விளக்கும் போது, மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்து கட்சியை சாடுகிறார்.

“கம்யூனிசத் தலைமை, தற்போது ஒரு நிலப்பிரபுத்துவக் கூட்டம் போன்று காட்சியளிக்கிறது” என்று எழுதுகிறார்.

மார்க்சிய அறிவியல் பூர்வமாக, இந்திய சமூகத்தை ஆராயாமல் நிலப்பிரபுத்துவ ஆணவத்தோடு தலைமை உள்ளதாக அவர் கூறுவது, கட்சியின் தத்துவார்த்த செயல்பாடு களைப் பற்றி அவர் மேலோட்டமாகவே அறிந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கம்யூனிஸ்டுகள், கம்யூனிச  இயக்கம் நாட்டில் துவங்கிய காலத்திலிருந்து இந்தியச் சமூகம் பற்றி மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான ஆய்வை மேற்கொண்டு வந்துள்ளனர்.

காஞ்ச ஐலய்யாவிற்கு நெருக்கமாக உள்ள ஆந்திராவின் பல பல்கலைக்கழக நூலகங்களில் கூட,  மார்க்சிஸ்ட் இயக்கத்தை ஆந்திராவில் வேரூன்றச் செய்த தோழர் சுந்தரய்யாவின் நூல்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக, 1960, 1970களில் அவர் இந்திய நில உறவுகள் பற்றி தீவிரமான ஆய்வை மேற்கொண்டிருந்தார். அதே காலக் கட்டத்தில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் நிலப்பிரச்சனை பற்றி முதலாளித்துவ நிபுணர்களோடு மிகப்பெரிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். தோழர் இ.எம்.எஸ். கேரளச் சமூகம் பற்றி 1930களிலிருந்தே தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

மார்க்சும், ஏங்கெல்சும் விவசாயப் பிரச்சனையை ஆராய்ந்த அந்த வழித்தடத்தில் இந்தியாவில் உள்ள விசேட நிலைமைகளை இந்த தலைவர்கள் ஆராய்ந்து, இந்திய அறிவுத் துறையில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சி வந்துள்ளனர்.

இந்த செயல்பாடுகளில், இரண்டு முக்கிய தன்மைகளை காஞ்ச ஐலய்யா உணரவில்லை.

தத்துவமும் – நடைமுறையும்:

ஒன்று, சமூகத்தைப் பற்றிய மார்க்சிய ஆய்வு, வெறும் நான்கு சுவர்களுக்குள், பல ஆண்டுகள் அடங்கிக் கிடந்து நடத்தப்படு வதில்லை. கல்வித்துறையில் மூழ்கியுள்ள பேராசிரியர்கள் செய்வது போன்ற ஆராய்ச்சி அல்ல, மார்க்சிய ஆராய்ச்சி முறை. புரட்சிகர மாற்றத்திற்காக மக்களோடு பணியாற்றி, மக்களைத் திரட்டி, அவர்களை அரசியல்மயமாக்கி போராட்டப் பாதையில் கொண்டு வரும் நடைமுறையோடு இணைந்ததுதான், மார்க்சிய ஆராயச்சி. நடைமுறை இல்லாமல் செய்யப்படும் ஆய்வு உண்மையை வந்தடையாது என்பது மட்டுமல்ல, அது சமூக இயக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது.

தோழர் இ.எம்.எஸ், தோழர் சுந்தரய்யா போன்ற தலைவர்கள் சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் ஆராய்கிற வேளையில் தான், உக்கிரமான விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விடுதலைக்குப் பிறகு வந்த  முதலாளித்துவ காங்கிரஸ் அரசை எதிர்த்தப் போராட்டக் களங்களில் துடிப்புடன் செயலாற்றினர். இதோடு சமூக  ஆராய்ச்சியையும் மேற்கொண்டனர். காஞ்ச ஐலய்யா எதிர்பார்ப்பது போன்று முற்றிலும், நடைமுறையிலிருந்து ஒதுங்கி, தத்துவக் கண்டுபிடிப் புக்களை உருவாக்குவது, மார்க்சியம் அல்ல.

சீனப் புரட்சிகர கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே சீன நிலப்பிரபுத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் தோழர் மாசேதுங் நிகழ்த்தியது; “ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” உள்ளிட்ட நூல்கள் வாயிலாக மாறி வரும் சமூகத்தை ஆராய்ந்து கொண்டே ரஷிய புரட்சியை முன்னெடுத்துச் சென்ற லெனினது செயல்பாடு: – இவையனைத்தும் தத்துவமும் நடைமுறையும் கை கோர்த்து நடைபோட்ட வரலாற்று உதாரணங்களாகும்.

மற்றொரு அம்சத்தையும் காஞ்ச ஐலய்யா காணத் தவறுகிறார். சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி என்பது உணவைச் சமைத்து முடித்து தட்டில் வைப்பது போன்றது அல்ல. அது ஒரு நிகழ்வுப் போக்கு (ஞசடிஉநளள) ஆகும். சமூக நிலைமைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. இந்தியச் சமூகத்தில் 1980-க்கு முன்பு முதலாளித்துவ வளர்ச்சிக்கு சில கொள்கைகள் பின்பற்றப்பட்டன. அதற்கு பிறகு தாராளமயம் என்ற முக்கிய மாற்றம் ஏற்பட்டது. இது போன்று பல மாறுதல் நிகழ்ந்து கொண்டே உள்ளன.

எல்லாவற்றுக்கும் மொத்த, முடிவாக, மார்க்சிய ஆராய்ச்சி எனும் பெயரில் நாற்பது நூல்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இயந்திர கதியிலானது, மாற்ற ஓட்டத்தோடு ஒருங்கிணைந்து மக்கள் போராட்டங்களின் ஊடாக, தத்துவார்த்த முடிவுகளுக்கு அவ்வப்போது வர வேண்டியுள்ளது.

இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சில குறைபாடுகள் இருக்கலாம். ஏற்கனவே பல மாநாடுகளில் சுய விமர்சனப் பூர்வமாக கட்சி இந்தக் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. வெறும் நடை முறையில் மட்டும் பல தோழர்கள் ஈடுபட்டு மார்க்சிய தத்துவ சிந்தாந்தப் பணிகளை கைவிடுகின்றனர் என்ற விமர்சனமும் கட்சி ஆவணங்களில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதற்கான முன் முயற்சியும் எடுக்கப்படுகிறது.

வர்க்கங்களைத் திரட்டுவது

விஜயவாடா தீர்மானத்தில், ஒரு வர்க்க பகுப்பாய்வு செய்யப் பட்டுள்ளது.

“பொருளாதார தாராளமயம், கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியச் சமூகத்தில் உள்ள வேறுபட்ட வர்க்கங்கள் மீது வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது”.

இவ்வாறு வரையறுத்து, நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கைவினை ஞர்கள், நகர்ப்புற ஏழைகள், இடம்பெயரும் தொழிலாளர்கள் போன்ற வர்க்கங்கள் எவ்வாறு தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்த வர்க்கங்களைத் திரட்டுவது எனும் நோக்கில் செய்யப்பட்டுள்ள ஆய்வு.

இந்த ஆய்வு, மாநில, மாவட்ட, நகர, கிராமப்புறம் வரை பொருத்தி, உள்ளூர் வரையிலான ஆய்வு முடிவுகளுக்கு வர வேண்டி உள்ளது. எனவே, விஜயவாடா தீர்மானத்தின் பல பகுதிகளில் இந்தியச் சமூகம் பற்றிய தற்போதைய நிலை விவரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது நெறிப்படுத்தும் இயக்கம் கட்சிக்குள் நடத்தப்பட்டு வருகின்றது. சில பகுதிகளில் செயலாற்றும் தோழர்களிடையே கட்சிக்கு அப்பாற்பட்டவர்களின் விமர்சனத்துக்கு செவி சாய்க்காமல் இருக்கும் போக்கு இருப்பதை ஆவணம் சுட்டிக் காட்டுகிறது. இது அதிகார வர்க்கப் போக்கு என்று ஆவணம் சாடுகிறது.

தான் எடுத்துரைக்கும் கருத்துக்களுக்கு தோழர்கள் செவி சாய்க்கவில்லை என்ற ஆத்திரம் பேராசிரியர் காஞ்ச ஜலய்யாவிற்கு இருக்கக் கூடும். அதனால் ‘நிலப்பிரபுத்துவத் தலைமை’ என்ற காட்டமான வார்த்தை அவர் பயன்படுத்தி யிருக்கக் கூடும். அதிகார வர்க்கப் போக்கு களைய வேண்டும் என்பது நெறிப்படுத்தும் இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்பதை பேராசிரியர் கருத்தில் கொள்ள வேண்டுமென்பது நமது விருப்பம்.

சாதியா? வர்க்கமா? – பட்டிமன்றம்!

அடுத்தடுத்து அவர் வைக்கும் விமர்சனங்கள், காலம் காலமாக கம்யூனிஸ்டுகள் மீது வைக்கப்படும் அவதூறுகள்தான்.

“கம்யூனிஸ்டு இயக்கம், சிபிஎம், சிபிஐ, மாவோயிஸ்ட் என்று மூன்றாக பிளவுபட்டு இருப்பதற்குக் காரணம் “தலைமையின் மனோபாவம் தான் என்று அவர் கூறுகிறார். இந்த மூன்று இயக்கங்களுக்கிடையே நடைபெற்ற மிகப்பெரும் தத்துவார்த்த விவாதங்களை புறக்கணித்துவிட்டு, தலைமைகளுக்கிடையே யான பிரச்சனையாக பார்ப்பது பேராசிரியருக்கு அழகல்ல. இந்த தத்துவ விவாதங்களும் சமூக உறவுகளை மார்க்சிய அறிவியல் அடிப்படையில் ஆராய்கிறபோது, ஏற்பட்ட கருத்து வேறுபாடு கள்தான். இதுவே  பல இயக்கங்களாக கம்யூனிஸ்டு இயக்கம் பிரிந்ததற்கு முக்கியக் காரணம். பதவிக்காக பலரோடு ஒற்றுமை காண்பது முதலாளித்துவ அரசியல்வாதியின் குணம். சித்தாந்த வேறுபாடு இருந்தால், பிரிந்திருப்பதும், சித்தாந்த ஒற்றுமைக்கு முயற்சித்து கைகோர்ப்பதும், கம்யூனிஸ்டுகளின் செயல்முறை.

சாதியை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளவில்லை என்ற வழக்கமான விமர்சனத்தை முன்வைக்க பேராசிரியர் தவறவில்லை.

…“இந்தியாவில் சாதி என்பது தான் வர்க்கத்தை விட

முக்கியப் பங்கு வகிக்கிறது…” – என்கிறார் அவர்.

இத்தகு அறிவுஜீவிகள், சாதியா, வர்க்கமா என்ற பட்டிமன்ற பாணி விவாதத்தை துவக்குவார்கள்; வர்க்கத்தின் முக்கியத் துவத்தை கம்யூனிஸ்டுகள் பேசுகிற போது, அவர்களை வறட்டுத்தனமானவர்கள், சாதியைப் பற்றி தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தி பழித்திடுவார்கள். இது இந்திய அறிவு ஜீவிகள் பலர் செய்து வருகிற வேலை. அது மட்டுமல்ல,  வர்க்க ஒடுக்குமுறையை மறைத்து, அதை நிகழ்த்துகிற ஆளும் கூடாரத்தோடு கைகோர்க்க இந்த வாதம் சிலருக்கு வசதியாக பயன்படுகிறது. (உதாரணம்: திருமாவளவன், மாயாவதி போன்றவர்கள்)

வர்க்கமா, சாதியா என்று இரண்டையும் எதிரும் புதிருமாக நிறுத்திப் பார்க்கும் பார்வை, மார்க்சிய இயக்கவியல் பார்வை அல்ல. இயங்கிக் கொண்டே இருக்கும் சமூக யதார்த்தத்தை நுணுகிப் பார்க்கும் போது, ஒரு உண்மை பளிச்சிடுகிறது. ஒரு கிராமத்தில் குடியிருக்கும் ஒரு நிலமற்ற தலித் குடும்பம், ஏன் வேலை, கல்வி, சுகாதாரம் என பலவற்றிலும் உரிய வாய்ப்பு, வசதிகள் மறுக்கப்பட்ட குடும்பமாக இருக்கிறது? டெல்லியி லிருந்து கிராமம் வரை வர்க்க அதிகாரம் அவர்களை விரட்டுகிறது. அதே நேரத்தில் சாதி ஒடுக்குமுறைக் கட்ட மைப்பும் சேர்ந்து அவர்களை விரட்டுகிறது. இந்நிலையில், என்ன செய்ய வேண்டும்? சாதி, வர்க்க ஒடுக்குமுறை விலங்குகளை உடைத்தெறிந்து உழைப்பாளி வர்க்க அதிகார மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும். இதை சாதிக்கும் யானை பலம் வர்க்க ஒற்றுமையில் தான் இருக்கிறது. இதுவே அனைத்து ஒடுக்குமுறை யிலிருந்தும் விடுபட ஒரே வழியாக உள்ளது.

இந்த அணுகுமுறையோடுதான் கம்யூனிஸ்டுகள் செயலாற்றி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற போராட் டங்கள், பேராசிரியரின் கவனத்துக்கு வரவில்லையா? அல்லது தெரிந்து கொண்டே, அப்போராட்டங்களை அலட்சியப் படுத்துகிறாரா?

விஜயவாடா தீர்மானம், சாதிப்பிரச்சனையை முதலாளித் துவக் கட்சிகள் கையாளும் முறையை விமர்சித்துள்ளது. “முதலாளித்துவக் கட்சிகளின் சாதி அரசியல், சாதிய ஒற்றுமைக் கான அறைகூவல், சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வராது. மாறாக, அத்தகைய அடையாள அரசியல் சாதி பிரிவினைகளை வளர்க்கவே செய்யும்” என்று தீர்மானம் கூறுகிறது. இந்த முதலாளித்துவ கட்சி அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கட்சியிடம் பேராசிரியர் எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாது.

அடுத்து, காஞ்ச ஜலய்யாவின் கேள்வி, சில மாநிலங்களைத் தவிர ஏன் சிபிஎம் பல மாநிலங்களில் வளரவில்லை என்பது.

“உ.பி., ம.பி., பிகார் பகுதிகளில் உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஏன் வளரவில்லை என்பதை இடதுசாரிகள் சரியாக விளக்கவில்லை” என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

விஜயவாடா தீர்மானமும் இந்தப் பிரச்சனையை மிகுந்த கவலையோடு அலசுகிறது.

“… மேற்கு வங்கத்தில் கடும் தாக்குதல் நிகழ்ந்து வரும் வேளையில், கட்சியின் செல்வாக்கையும், தளத்தையும் பல மாநிலங்களில் விரிவாக்குவது, மிக முக்கிய தேவை.” இந்தக் கடமையை சுட்டிக்காட்டி விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களை தீர்மானம் விளக்குகிறது.

“வர்க்க கண்ணோட்டம் அடிப்படையில், கட்சி தனது அரசியல் சித்தாந்தப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.”

“நமது அடிப்படை வர்க்கங்களிடையே பணியாற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தீர்மானம் இவற்றை வலியுறுத்துவதோடு, கடந்த காலங்களில் உள்ளூர் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாத போக்கை களையும் வகையில் செயலாற்ற வலியுறுத்துகிறது.

“கட்சியின் மிக மிக முக்கியமான செயல்பாடு உள்ளூர் பிரச்சனைகளில் இருக்க வேண்டுமென” வலியுறுத்தும் தீர்மானம் இந்தப் பணிகள் என்றாவது ஒரு நாள் செய்யும் பணியாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும் வகையில், உள்ளூர் அளவிலான பிரச்சனைகளுக்காக, நீடித்த முன்முயற்சி இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

ஏராளமான போராட்டங்கள் நடந்தாலும், அது கட்சி விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பதை தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

“போராட்டங்கள், இயக்கங்கள் நடத்திய பிறகு அவற்றை உறுதிப்படுத்திட முயற்சித்தோமா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்…”அவற்றை ஏன் உறுதிப்படுத்தவில்லை?

“போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வெகுஜன அமைப்புகளில் நாம் ஈடுபடுத்தவில்லை. தொடர்ந்து அவர்களிடம் பணியாற்றி, அவர்களை அரசியல்படுத்தவில்லை”.

இந்த பலவீனங்களைக் களைய விஜயவாடா கூட்டம் உறுதிபூண்டுள்ளது. கிளை மட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை வெகுஜன அரங்கத்தில் பணியாற்றிடச் செய்து,  அடிப்படை வர்க்கங்களை திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. ஆக விரிவாக்கம் நிகழவில்லை என்ற பேராசிரியரின் வருத்தத்தை கட்சியும் உணர்ந்துள்ளது.

பேராசிரியர் காஞ்ச ஜலய்யா போன்ற மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் இந்தியாவில் இடதுசாரி இயக்கம் சந்திக்கும் சவால்களையும் உணர்ந்து விமர்சனங்களை முன்வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் விரும்புகிறது. நட்பு ரீதியான உரையாடல்களில் ஈடுபடவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சி என்றும் தயாராக உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s