இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம், மத்திய கிழக்கு பகுதியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எண்ணெய் வளங்களை கைப்பற்றி தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டது. ஒட்டோமான் சாம்ராஜ்யமும் உடைந்தது. 1920களுக்குப் பின் பிரிட்டனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கவனம் முழுவதும் அப்பகுதியில் ஒருபக்கம் செலுத்தப்பட்டது. எழுபதுகளுக்குப் பின்னர் அமெரிக்க ஈடுபாடு மேலும்அதிகமாகியது. 1979-க்குப் பின் அமெரிக்கா, இராக்குடன் (சதாம் உசேன்) இணைந்து இரானுக்கு எதிரான சக்தியாக இராக்கை ஆக்க முயன்றது. 1980களில் நடைபெற்ற இரான்-இராக் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கை குறைத்து மதிப்பிடலாகாது. 1990-இல் குவைத்-இராக் போர் அந்தப் பகுதியில் பதட்டத்தை அதிகரித்தது. 1991-இல் நடைபெற்ற போரில் 56 ஆயிரம் ராணுவ வீரர்களும், 8500 அப்பாவி மக்களும் இராக்கில் இறந்தார்கள். பின்னர் ஓராண்டு காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இராக்கியர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளால் உயிரிழந்தனர். இவர்களில் 15 வயதுக்குட்பட்டவர்கள் 70 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று தொடங்கி இன்றுவரை இராக்கிய மக்கள் போரையும், போரின் விளைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் பழமை வாய்ந்த செழிப்பான நாகரிகத்திற்கு பெயர் பெற்ற இராக் இன்று சின்னாபின்னமாகி சிதைந்ததற்கான முழு பொறுப்பும், ஏகாதி பத்திய நாடுகளையும் சாரும்.
மேற்கூறப்பட்ட பின்னணி ‘பற்றி எரியும் பாக்தாத்’ நூலைப் பற்றி புரிந்து கொள்ள அவசியம். பாக்தாத் பர்னிங் என்ற நூலின் ஆசிரியர் ரிவர்பெண்ட் என்ற இளம் பெண். இது அவரது புனைப்பெயர். அவருடைய பெற்றோர் பற்றிய தகவல்கள் இல்லாதபோதும அவருடைய சகோதரர் அவளுடைய பணிகள்/சிந்தனைகளில் பங்கு பெற்றுள்ளார். 2003-இல் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் ‘பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்று செப்டம்பர் 9/11 தாக்குதலுக்கும், இராக்கிற்கும் உள்ளது என்றும், இராக் மீது 2.5.2003 பேர் கர்ல் பிளாக் பிரம் இராக் (ழுசைட க்ஷடடிப கசடிஅ ஐசயளூ) என்ற பெயரில் போர்க்களத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்துள்ளார் ரிவர்பெண்ட். போர் துவங்குமுன்பு, கம்ப்யூட்டர் ப்ரொக்ராமராக பணியாற்றியவர். வேறு எந்த பத்திரிகையாளரும், போர் செய்தியை இந்த அளவு பதிவு செய்ய இயலுமா என்று தோன்றுமளவுக்கு இயல்பாக எழுதியுள்ளார்.’
‘பற்றி எரியும் பாக்தாத்’ என்பது ஒரு பெண்ணின் டைரி குறிப்பு, மற்றவர்களின் டைரியை படிப்பதென்பது அநாகரிகமான செயலாகும். ஆனால், இந்த டைரி குறிப்பு படிக்க வேண்டிய ஒன்றாகும். அமெரிக்காவும், அதன் ராணுவ கூட்டாளிகளுமாக சேர்ந்து கலாச்சாரம், நாகரிகத்திற்கு பெயர் பெற்ற நாட்டை எப்படி அழித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய டைரி குறிப்பாகும். இதற்கு அறிமுகவுரை எழுதியுள்ள ஜேம் ரிட்ஜ்வே (வாஷிங்டன்) அமெரிக்கா இராக் மீது நடத்திய போர்/ஆக்கிரமிப்பு, உள்நாட்டு கலகத்திற்கு எவ்வாறு வித்திட்டது என்பதையும் விளக்குகிறது.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2003 முதல் டைரி குறிப்பு துவங்குகிறது. இராக்கில் தூக்கத்திலிருந்து விழிப்பதே மிகப்பெரிய விசயம். ஏனெனில் நிதானமாக எழுந்திருப்பது என்பதை விட துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம், அலறலை கேட்டு எழுந்திருப்பது தான் நிஜம். இராக் மக்கள் நிம்மதியாக தூங்கி எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன?
குழந்தைகள் சர்வ சாதாரணமாக கொல்லப்படுவதைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகையில், “ஓமர் நசீம் என்ற சிறுவன் 10-11 வயதிருக்கும். சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். சி.என்என், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் அந்த சம்பவத்தை காண்பிப்பார்களா?” அமெரிக்க ராணுவம் நடத்திய ரெய்டில் எவ்வளவு பேர் இப்படி கொல்லப்பட்டுள்ளனர். ரெய்டு நடத்தப்படுவதால், எப்பொழுதும் நாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளோம் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது என்று எழுதும் ஆசிரியர், ‘எங்கள் வீடுகளிலேயே எங்களுக்கு பாதுகாப்பு இல்லையே, அமெரிக்கா இராக்கிலுள்ள எண்ணெயை சுரண்டிக் கொண்டு, நாட்டை விட்டு போய் விட்டால் போதும்…’ என்று அமெரிக்காவுக்கு இராக் மீதுள்ள அக்கறைக்கான காரணத்தை விளக்குகிறார்.
இராக்கியர்கள் அமெரிக்கர்கள் மீது வெறுப்பை உமிழ்வ தில்லை. என்ன காரணம்? நாங்கள் வளர்க்கப்பட்ட சூழல் அப்படிப்பட்டது. எங்கள் நாட்டு கலாச்சாரத்தில் பெருமை கொள்ளும் அதேசமயம், லட்சக்கணக்கான இராக்கியர்களைப் போல, மற்ற கலாச்சாரங்களை, மதங்களை, நாடுகளை மதிக்கும்படி வளர்க்கப்பட்டுள்ளேன். அமெரிக்க ராணுவம் இராக்கில் இருப்பதை வெறுக்கிறேன். எந்த நிமிஷம் குண்டுகள் வெடிக்கும் என்று காத்துக் கொண்டு, பீதியில் வாழ்வதை வெறுக்கிறேன்… அமெரிக்கர்களை அல்ல’ என்று அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இராக்கியர்கள் இதர மக்களை நேசிப்பவர்கள் என்பதை தெளிவாக்கியுள்ளார்.
2003-இல் இராக்கில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. பெண்கள் தனியாக வெளியே செல்ல இயலாத சூழல் ஏற்பட்டு விட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பிறகு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது போல் பெண்கள் உணரத் தொடங்கினர்.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னர் கல்லூரிகளில் 50 சதம் பெண்கள், உழைப்பாளிகளில் 50 சதம் பெண்கள். ஆனால் ஆக்கிரமிப்புக்குப் பின் தலைகீழாக மாறி விட்டது. இராக்கில் மத அடிப்படைவாதிகளின் அதிகரித்து வரும் செல்வாக்கு அச்சுறுத்துவதாக உள்ளது. போருக்கு முன்பு, பாக்தாத்தில் கிட்டத்தட்டட 55 சதம் பெண்கள் ‘ஹிநுப் (தலையை மட்டும் மூடுவது) அணிவார்கள்.’ஹிஜிப் மத அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு அல்ல. அது அணியாவிட்டாலும் ஒன்றும் பெரிய விசயமல்ல. மாறாக, ‘புர்க்கா(பர்தா) தலை, முகம், உடல் முழுவதையும் மூடும் உடையாகும். ஆப்கானிஸ்தானப் பெண்கள் அவ்வாறு புர்க்கா அணிவார்கள். நூலாசிரியர் இதைப்பற்றிக் குறிப்பிடுகையில், ‘நான் ஒரு பெண், முஸ்லிம் பெண், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்பு வரை நான் விரும்பும் வண்ணம் உடை அணிவேன். எப்பொழுதும் ஜுன்ஸ் மற்றும் ஷர்ட் அணிவேன். சௌகரியமாக இருக்கும். ஆனால், இப்பொழுது, வீட்டை விட்டு ‘பாண்ட்’ அணிந்து வெளியே செல்வதில்லை. நீண்ட பாவாடையும், முழுக்கை ஷர்ட்டும் தான் அணிகிறேன். அது அவசியமாகி விட்டது. ஜுன்ஸ் அணியும் பெண், கடத்தப்படும் , தூக்கப்படும அபாயம் உள்ளது. மத அடிப்படைவாதிகள் தாக்குவார்கள், … பெற்றோர்கள் தங்கள் மகள்களை வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளனர். அதுதான் பாதுகாப்பு. அதனால்தான் மாலை 4 மணிக்குப்பின் தெருக்களில் பெண்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை’ என்கிறார்.
பெண்கள் பள்ளி, கல்லூரிகளிலிருந்து விலகும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். ஏன்? இராக்கிலுள்ள இஸ்லாமிய புரட்சிக்கான சுப்ரிம் கவுன்சில் (ளுஊஐசு) பள்ளிகளின் அருகில் தங்கள் அலுவலகங்களை அமைத்துக் கொண்டுள்ளன. சில இடங்களில் பெண்கள் அணிந்துள்ள உடைகள் மோசம் என்று அவர்கள் மீது அமிலம் வீசப்படுகிறது. கறுப்பு உடை, கறுப்பு தலைப்பாகை அணிந்த ஆண்கள் யார் ‘ஹிஜிப்’ அணிந்துள்ளனர் இல்லை என்பதை கண்காணிக்கின்றனர். இந்த கவுன்சில் 1982-இல் டெஹ்ரானில் துவக்கப்பட்டது. ஷியா முஸ்லிம்களின் ஆதரவு உண்டு என்ற மாயையை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். ‘இராக்கில் வாழ்ந்து கொள், வாழவிடு’ என்ற கொள்கையை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் நிறைய பேர் உள்ளனர். அனைத்து மதத்திலும் உள்ளதைப் போல் தீவிரவாதிகள் இஸ்லாத்திலும் உள்ளனர். இராக் மக்கள் – ஷியாக்களும், ‘சன்னி’களும், யூதர்களும், சபியாக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஒன்றாக வசிக்கிறார்கள். ஒரே பகுதியில் சர்ச்சுகளும், மசூதிகளும் உள்ளனவே …. என்கிற ஆசிரியர், மேலை நாட்டு கலாச்சாரத் தாக்கம் மத அடிப்படைவாத எழுச்சிக்கு காரணம் என்றும் கூறுகிறார். ‘முஸ்லிம்களையும், அரேபியர்களையும், மேற்கத்திய மக்கள் எப்படி பார்க்கின்றனர்? தற்கொலை படை வீரர்களாக, தீவிரவாதிகளாக, அறியாமை சூழ்ந்தவர்களாக, ஒட்டகம் வைத்துள்ளவர்களாக…. அமெரிக்கர்களையும், பிரிட்டன் நாட்டினரையும் இராக்கியர்கள் எப்படி பார்க்கின்றனர்?’ ஒழுக்கம் குறைந்தவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக, ஈவிரக்கமற்றவர்களாக…. இவர்கள் அனைவருமே தங்களையும், தங்களுக்கு நெருக்கமானவர்களையும் மதத்தின் மூலம் காத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.’ என்று ஆசிரியர் மதத்தின் பிடிமானத்தைப் பற்றி விளக்குகிறார்.
மதத்தின்பால் ஈர்க்கப்படுவதற்கு சில நேரடி காரணங்களும் உள்ளன என்கிறார் ஆசிரியர். ஏதோ ஒரு காரணத்தால் 65 சதம் இராக்கியர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இரான் ஆதரவு பெற்ற சில இஸ்லாமிய கட்சிகள் (அல்-தாவா போன்றவை) வேலையற்றவர்களுக்கு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் கொடுத்து, தங்களுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெறுகின்றனர். அதரவு என்பதன் பொருள் எதுவாக வேண்டுமா னாலும் இருக்கலாம். குண்டு வீசுவது, கடத்துவது, கார்களை ஹைஜாக் செய்வது…. என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 65 சதம் வேலையின்மைக்கு பிரெமர் போன்றவர் களின் தவறான கொள்கைகள் காரணம். இராக் ராணுவம் கலைக்கப்பட்டதும் இராக் ராணுவ வீரர்கள் எங்கே செல்வார்கள்? அவர்களையும், குடும்பத்தையும் காப்பாற்ற என்ன செய்வார்கள்? பாதுகாப்பு அமைச்சகரகத்தையும், தகவல் தொடர்பு அமைச்சத்தையும் ‘பிரெமர்’ அரசு கலைத்ததனால் பத்திரிகையாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், என்ஜினீயர்கள், செயலாளர்கள், கணக்காளர்கள் என லட்சக் கணக்கானோர் வேலை இழந்தனர். வேலையில் இருந்தவர் களுக்கும், கொடுக்கப்பட்ட 50 டாலர் சம்பளத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை எப்படி பராமரிப்பது? எவ்வளவு கெஞ்சினாலும் வேலை இல்லை.
இந்நூலாசிரியர் எப்படி வேலை இழந்தார் என்பதையும் விளக்குகிறார். “நான் கம்ப்யூட்டர் பட்டதாரி. அமெரிக்க போர் தொடுப்பதற்கு முன்பு ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் பாக்தாத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்… என்னுடன் பணிபுரிந்த ஆண்களைப் போலவே நானும் சம்பாதித்தேன்… மற்ற அரபு நாடுகளில் உள்ள பெண்களைக் காட்டிலும், இராக்கில் பெண்கள் நிலை நன்றாகவே இருந்தது. ஜூன் மாதம் எங்கள் கம்பெனி முன்பு ஒரு அமெரிக்க ராணுவ டாங்க் நிறுத்தப் பட்டிருந்தது. நான் வேகமாக கம்பெனிக்குள் ஓடினேன். எனது அறைக்குள் மேஜை நாற்காலி எதுவுமே இல்லை. என்னுடன் பணிபுரிபவர் நான் உயிரோடு இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார். ஒரு மாதம் முன்பு ஒரு என்ஜினீயர் கொல்லப் பட்டார். நான் நல்ல வேளையாக, அவ்வளவு முக்கியமான நபர் இல்லை… வேலை இழந்தாலும், உயிர் பிழைத்தேன்” என்பதை படிக்கையில், அமெரிக்காவின் நியாயமற்ற போர் வெறி, எவ்வளவு உயிர்களை பலிவாங்கியுள்ளது. எவ்வளவு பேரை நடை பிணமாக்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்கள் சொற்படி கேட்கும் கைப்பாவைகளை தேடிப்பிடித்து, ஜனாதிபதியாக்க தயார் செய்து கொண்டிருந்தது. ‘ஆளுநர்குழு’வுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஒன்பது நபர்களும் ஒருவரை விட மற்றவர் மோசம் என்ற நிலைதானிருந்தது. “அரபிய மொழியில் ஒரு பழமொழி உண்டு. அதாவது கழுதைகளுக்கு மத்தியில் உள்ள ஒட்டகம் வேகமாக ஓடும் என்பது அதன் அர்த்தம். அமெரிக்க விசுவாசிகளுக்கு பதவி தரப்பட்டது. இராக்கைப் பற்றி உண்மைக்கு புறம்பான மாயைகள் உண்டு என்பதையும் உண்மை நிலையையும் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னர், இராக்கியர்கள் கூடாரங்களில் தங்கி, பாக்தாத்தின் அழுக்கான சாலைகளில் வசித்தனர் என்றும், கழுதை, ஆடு, ஒட்டகத்தில் சவாரி செய்து பள்ளிக் கூடம் சென்றனர்…. என்றும் பொய்யாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இராக்கியர்கள் ஏ.சி. உள்ளிட்ட வசதிகளுடனும், ஜெர்மானிய கார்கள் உட்பட வைத்திருந்தனர் என்பதற்கு ஆதாரம் உண்டு. அமெரிக்கா ‘இராக் நாட்டை மீண்டும் “புனரமைப்பது’ என்று கூறுவது வேடிக்கையானது. ஆனால் ஒன்று உண்மை. இந்த புனரமைப்பு பணியில் ஈடுபடும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டப்போவது உண்மை என திட்டமிட்டு அமெரிக் காவின் சதி திட்டத்தை நூலாசிரியர் அம்பலப்படுத் தியுள்ளார்.
செப்டம்பர் 6, 2003 பாக்தாத்தின் நெரிசல் மிகுந்த அல்ஷபாய் பகுதியில், காலை தொழுகை நடைபெறும் பொழுது, அமெரிக்க ராணுவம், மசூதியை தகர்த்தது. குடிக்க நீரில்லை. அமெரிக்க தளபதி ரம்ஸ் ஃபீல்ட் இராக் வந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளார். ‘ரம்ஸ் ஃபீல்ட் தொலைகாட்சி பேட்டியில்… அந்த பெட்டியை உடைக்கத் தோன்றுகிறது… கெட்ட வார்த்தைகளில் திட்டத் தோன்றுகிறது. எனக்கு கோபமாக வருகிறது” என அன்றைய இரவு டைரி எழுதி இருப்பது, அம்மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு அன்றி, வேறெதுவுமில்லை. (இதை படிக்கையில், ஒரு பத்திரிகையாளர் புஷ் மீது காலணி வீசிய சம்பவம் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை)
மத்திய இராக் பகுதி பாலைவனச் சோலை எனலாம். 500 வகை பேரீச்சை இராக்கில் உற்பத்தியாகிறது. பேரீச்சை மரம், விவசாயிக்கும், நிலம் வைத்திருப்பவனுக்கும் பெருமை தரும் விஷயமாகும். குளிர்காலத்தில் ஈச்சை மரங்கள் பலவகை பறவையினங்களை ஈர்க்கவல்லது. அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின் “பாதுகாப்பு காரணங்களுக்காக” ஈச்சை மரங்களை அமெரிக்கத் துருப்புகள் வெட்டி விட்டார்கள். “புல்டோசர்கள் அடியில் பசுமையான மரங்கள், கிளைகள் பழங்கள்… மரங்களை வெட்டவில்லை – விவசாயிகளின் முகங்களை அழித்துள்ளனர். வயதான, முகத்தில் சுருக்கம் விழுந்த விவசாயி, வெட்டப்பட்ட ஆரஞ்சு மரத்தின் பழங்களை வைத்துக் கொண்டு, ‘இதுவா விடுதலை?’, ‘இதுவா ஜனநாயகம்?’ என கதறியதுடன், அருகில் நின்ற அவரது மகன் ‘வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் 5 ராணுவ வீரர்கள் வீதம் சாக வேண்டும். மரத்தை வெட்டிய அமெரிக்கத் துருப்புகள் தான் தீவிரவாதிகள், என்று கேபத்துடன் கத்தியதும்….” என்பது பழத் தோட்டங்களையும் அமெரிக்க துருப்புகள் விட்டு வைக்கவில்லை என உணர்த்தியது.
2003 நவம்பரில் திக்ரித் தாக்கப்பட்டபொழுது, மக்கள் அடைந்த கோபத்திற்கு அளவே இல்லை. எப்படி அமெரிக்கர் களுக்கு, அவர்களும் வீடும், குழந்தைகளும் முக்கியமோ அதைப்போலத் தான் திக்ரித் மக்களுக்கும். நடுநிசியில், இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே இழுத்து போட்டு விட்டு வீடுகளுக்கு ராணுவம் தீ வைக்கும் பொழுது, அக்குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? யார் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்? என்ற கேள்வியை நூலின் பல இடங்களில் ஆசிரியர் எழுப்புகிறார்.
ரம்ஜான் அன்று பாத்திமா, அஸ்ரா என்ற 2 சகோதரிகள் கொல்லப்பட்டாக அல்ஜீராவில் செய்தி. அமெரிக்க ராணுவம் தான் அச்சிறுமிகளின் வீட்டில் ‘ரெய்டு’ நடத்தியாக செய்தி பரவியதும், அவசரமாக ஆளும் கவுன்சில், ‘அமெரிக்க துருப்புகளும், இந்த 2 பெண்களின் மரணத்திற்கு தொடர்பு இல்லை’ என அமெரிக்காவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டது. 1991 முதல், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக துஷ்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆய்வு செய்தவர்கள் இல்லை என்று கூறிய பின்பும், புஷ்சும், டோனி பிளேரும், அவர்களின் ஆதரவாளர்களும், இராக்கை நாசமாக்குவது என தீர்மானித்து விட்டார்கள்.
2004 மார்ச் மாதம், ஆயத்துல்லா அலி – அல் சிஸ்தானி, இடைக்கால அரசு நேரடி வாக்கெடுப்புக்கு பின்னரே அமைக்கப்படும் என்று கூறிவிட்டார். அமெரிக்கா தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து ‘ரிமோட்’ ஆட்சி நடக்க நினைத்தது. அல்-சிஸ்தானி அதற்கு மறுத்தார். அமெரிக்காவிலும் புஷ்சுக்கு எதிர்ப்பு வளர்ந்தது. புஷ் நிர்வாகத்திற்கு உதவுவார், பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் உள்ளன என்று கூறுவார் என்று புஷ் எதிர்பார்த்த ‘டேவிட்கே’ செனட் கூட்டத்தில், இராக்கில் அப்படிப்பட்ட ஆயுதங்கள் இல்லையென்றும், தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்றும் கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இவ்வளவு சர்ச்சை, போர், நாசங்களுக்கிடையேயும், இராக்கில் ஜனநாயக இயக்கங்கள் நடந்துள்ளன. 14, ஜனவரி 2010 அன்று, இராக் ஆளும் கவுன்சில் அமைச்சர் ஒருவரின் தலைமையில் 100 பெண்கள் பாக்தாத்தில் தங்களுடைய சிவில் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிபதிகள், அமைச்சர்கள் என பல பெண்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம் நாடுகளிலேயே, சட்டரீதியான பாதுகாப்பும், உரிமைகளும் பெண்களுக்கு அளிக்கப்பட்ட நாடு இராக். அவற்றை இடிக்க மாட்டோம் என அவர்கள் வலியுறுத்தினார்கள். பாக்தாத்தில் பெண்களின் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
“2004 ஏப்ரல் 9… அமெரிக்க ஆக்கிரமிப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்றது. அமெரிக்காவின் கைப்பாவைகள் இதை ‘தேசிய தினம்’ என்று கருதலாம். ஆனால் அது ஃபலூஜா நாசமடைந்த தினம்’ ஆகும்.” என்று ஓராண்டு நினைவு தினத்தைப் பற்றி எழுதுகிறார். மே 1, 2004 உலகம் முழுவதும் இராக் சிறையில் கைதிகளின் அவலம் இணையதளம் மூலமாக வெளிவந்தது. அபுகரைப் சிறையில், அமெரிக்க துருப்புகள் இராக்கியர்களை நடத்திய விதம் உலகெங்கிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்களை உலுக்கியது. புஷ்சுக்கு எதிரான பிரச்சாரம் வலுவடைந்தது.
தனது நாட்குறிப்பை முடிக்கையில் கடைசி பக்கத்தில் ரிவர்பென்ட் எழுதுகிறார்: “அமெரிக்காவில் 9/11 ஒரு முறை நடந்தது. இங்கு எங்களுக்கு மாதா மாதம் 9/11 தாக்குதல் நடக்கிறது. தினமும், குண்டுகளுக்கும், துப்பாக்கிகளுக்கும், வான்வெளித் தாக்குதல்களுக்கும் சித்தரவதைகளுக்கும் உள்ளாகி, இராக்கியர்கள் இறந்து போகிறார்கள் / கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கும் குடும்பம் உண்டு. இவர்களைப் பற்றி கவலைப்படும் நண்பர்கள் உண்டு. 2003 மார்ச் மாதத்திற்குப் பின் இங்கு இந்த ஒரு ஆண்டில் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை உலக வர்த்தக மையத்தில் உயிரிழந்தவர்களைப் போல எட்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஒரு ஆண்டில் எத்தனை சாவுகளை நான் பார்த்திருக்கிறேன். செப்டம்பர் 11, 2004 திடீரென தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில் ஏரோப்ளேன் சத்தம். குண்டு வெடித்தது… மனித சிதைகள் எரியும் நாற்றம். புகை, தூசி மண்டலம்.
9.11.2001 நியூயார்க்? உலக வர்த்தக மையம்? இல்லை. 9.11.2004 ஃபலூஜா – இராக்கியரின் வீடு” என்று முடித்துள்ளார்.
இந்த நாட்குறிப்பை வாசித்து முடிக்கும் பொழுது, மனம் கணக்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அத்துமீறி ஒரு நாட்டையும், அப்பாவி மக்களையும் நாசம் செய்யும் புஷ்சுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? புஷ் என்ற தனிநபரை விட, ஏகாதிபத்தியம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர். நூல் முழுவதும், இராக், முஸ்லிம் நாடாக இருந்த போதும், மதச்சார்ப்பின்மையை விரும்பியவர்கள் நிறைய எண்ணிக்கையில் அங்கே வசிப்பதையும், அவர்களுக்குத் தேவை அமைதியான வாழ்க்கை என்பதும், வெளிப்படுகிறது. வேலையின்மை இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு இட்டுச் செல்வதை கண்டு கவலைப்படுகிறார் ஆசிரியர். பெண்கள் உரிமைகளைப் பற்றியும், இராக்கின் பொருளாதாரம் பற்றியும் நிறைய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘எட்டப்பன்கள்’ இந்தியாவில் மட்டுமல்ல. இராக்கிலும் இருக்கிறார்கள் என்பது கவுன்சில் உறுப்பினர்களையும், அவர்களது பின்னணியையும் பார்க்கும் பொழுது புரிந்து கொள்ள முடிகிறது. எளிய நடையில் எழுதப்பட்டிருந்தாலும், நாட் குறிப்பாக இருப்பதாலும், சாப்பாடு, தூக்கம், டி.வி. பார்ப்பது போன்ற அன்றாட நடப்புகள் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே இல்லாதவர்களைக் கூட சிந்திக்க வைக்கும். தனது நாட்டை நேசிக்கின்ற, நாட்டுப்பற்று உள்ள யாராலும், இத்தகைய ஆக்கிரமிப்பு களையும், அக்கிரமங்களையும் சகிக்க இயலாது. சுருக்கமாகச் சொன்னால், படிக்க எடுத்தால், கீழே வைக்க இயலாது என்பது மட்டுமல்ல. ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ச்சியில் எத்தனை நாட்டு மக்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என்பதை உணர முடியும்.
Leave a Reply