(திருப்பூரில் அண்மைக்காலத்தில் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலைகள் கூடி வருவதற்கான காரணங்களை தேடித் தொகுத்து திருப்பூர் தீக்கதிர் நிருபர் தோழர். இரா. சிந்தன் தயாரித்த ஆய்வறிக்கையை கீழே தருகிறோம். வேதனை என்னவெனில் அரசும், பனியன் உற்பத்தியாளர்களின் சங்கமும் எதார்த்தமான காரணங்களை அறிய முயற்சிக்காமல், அதற்கான கள ஆய்வில் இறங்காமல் ஏதோ மூடி மறைக்கும் வேலையில் கவனமாக இருக்கின்றனர். இங்கே வேலை நிமித்தம் வரும் வியாதிக்கான (ஆக்குபேஷனல் டிஸ்ஸிஸ்) காரணங்கள் உட்பட அரசாங்க ரகசியமாக்கப்படுகிறது. ஓட்டை மிகு தொழிலாளர் நலச் சட்டங்கள் ஊழல்மிகு அதிகாரிகள், அமைச்சர்கள் இவர்களால் தொழிலாளர்களின் வாழ்வு விடியா இரவாக ஆகியுள்ளது.
குறிப்பாக பஞ்சாலைகளில் வேலை நிமித்தம் வருகிற நோய்கள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும், தடுப்பு முறைகள் பற்றியும் நீண்ட கால ஆய்வுகளால் கண்டறியப்பட்டு பல நாடுகளில் உழைப்பாளர் நலனைப் பேண பல ஏற்பாடுகள் வந்து விட்டன. இந்தியாவிலும் ஆய்வு மையங்கள், பட்டப்படிப்புகள் உள்ளன. ஆனால் சிகிச்சை தான் தொழிலா ளர்களுக்கு எட்டாக் கனியாக உள்ளது.
பஞ்சை பயன்படுத்தும் தொழில்களில், வேலை செய்வோருக்கு வரும் (கநஎநச, உடிரபாiபே, னலளயீnடிநய, யனே பநநேசயட அயடயளைந) காய்ச்சல், இருமல், டிஸ்போனியா (மூச்சுத்தினறல்), ஆரோக்கியமிழத்தல் இறுதியில் நுரையீரல் புற்று நோய் போன்ற நோய்களையும், இவைகளுக்கான காரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. பஞ்சு தூசியில் வசிக்கும் ஒரு கிருமி உருவாக்கும் என்டோடாக்சின் என்ற விஷத்தால் வருகிறது, இந்த மூச்சுத்திணறலை திங்கள் கிழமை மூச்சுத்திணறல் என்று அழைக்கப்டுகிறது. ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு வருகிறபொழுது அவரது தாங்கும் சக்தி குறைவதால் அது வருவதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.
பஞ்சு தூசியில் கிருமி இருந்தால் கண்டுபிடித்து அதை நீக்கும் முறைகளும் உள்ளன. பாக்டரி இன்ஸ்பெக்டரும், உள்ளாட்சி அமைப்பும் ஆலைகளில் கிருமி நீக்கியப் பஞ்சு, நூல் இவைகளைப் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்.
வேதனை என்னவெனில், வியாதிகள் எல்லாம் திருப்பூரை பொறுத்தவரை தொழில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஒருவர் டாக்டர் தொழில் செய்ய விரும்பினால் திருப்பூர் அழைக்கிறது என்ற விளம்பரமே. இங்கே பஞ்சாலை தொழில் உருவாக்கும் வியாதிகள் உள்ளன. உலகளவு ஆய்வுகளால் இவைகளுக்கான சிகிச்சைகளும், மருந்துகளும் பலனளிக்கும் அளவிற்கு உள்ளன. புத்தகத்தைப் பார்த்தே சிகிச்சை அளிக்கலாம். நல்ல வருமானம், கைராசி டாக்டர் என்ற பெயரும் பெறலாம் என்ற இணையதள விளம்பரங்களே. மருத்துவ சேவையையும் தனியார் மயமாக்கிவிட்டால் என்னவாகும் என்பதற்கு உழைப்பாளர்களை தொழில் நிலையால் நோஞ்சானாக்கி தற்கொலைக்கு தள்ளிவிடுகிற திருப்பூர் ஒரு எடுத்துக்காட்டு.
உழைப்பாளி மக்களை மன உளைச்சலுக்கு தள்ளுவது இரண்டு முக்கிய காரணங்களாகும். வேலைக்குப் பாதுகாப் பின்மையும், வேலை நேரம் நீண்டு சுதந்திர நேரம் பறிபோகும் சூழலுமாகும். இது தவிர, முன்னேறும் வாய்ப்புகள் இல்லாதது. மூளைக்கு வேலை தராத செயல்களால் எந்திரத்தின் பகுதியாக வேகமான அங்க அசைவுகளையும் அதைவிட வேகமான கண் அசைவுகளையும் கொண்ட உழைப்பை மன இசைவு இல்லாமல் நீண்ட நேரம் செலுத்தும் நிர்ப்பந்தம், வேலை செய்யுமிடத்தின் காற்றின் தன்மை, சப்த அலைகளின் அளவு, வெளியேறும் வேர்வையின் அளவு, கையாளும் ரசாயணப் பொருட்களின் தன்மை இவைகளும் சரியான ஏற்பாடுகள் இல்லையானால் மன உளைச்சலுக்கு காரணங்களாகிவிடும். இது சிலரை தற்கொலை செய்ய தள்ளிவிடுகிறது. திருப்பூரில், உள்ளாடை தயாரிப்புத் தொழில் தற்காலிகத் தொழிலாளர்களை நம்பியே ஓடுகிறது. 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுத்த தொழில் என்று முதலாளிகள் மார்தட்ட 5லட்சம் தற்காலிக தொழிலாளர்கள் இங்கே மெல்லச் சாகும் பிணமாக்கப் படுகின்றனர்.
முதலாளிகளின் பேராசை கண்ணை மூடிமறைப்பதால் தொழிலாளர்கள் வேதனை அடைகிறார்கள். வாழ்விற்கேற்ற கூலி கொடுப்பதால் அவர்களுக்கு நட்டம் வராது. ஓவர்டைமிற்கு பதிலாக கூடுதல் தொழிலாளியை வேலைக்கமர்த்துவதால் நட்டம் வராது. தரமான சரக்கைத் தயாரிக்க அது பெரிதும் உதவும். தொழில் நெருக்கடிக்கு காரணம், இந்திய அரசின் வர்த்தகக் கொள்கை, டாலரை நம்பும் மூடத்தனம். தாங்கள் சம்பாதித்த அந்நிய செலவாணியை பல மடங்காக பெருக்க நிதி நிறுவனங்கள் மற்றும் ஹெட்ஜ் பண்டில் முதலீடு செய்து நடத்தும் சூதாட்டம் இவைகளே. இந்த சின்ன முதலாளிகள் தொழிலாளர்களோடு சட்டப்படியான அவர்களது நலனைப் பாதுகாத்து நல்லுறவு வைக்க முன்வந்தால் அரசை நிர்பந்தித்து பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் சந்தையில் வாலாட்டுவதை நிறுத்த முடியும்.)
– ஆசிரியர் குழு –
நம்நாட்டின் விவசாய நெருக்கடி ஏராளமான சிறு விவசாயிகளை தற்கொலைப் பாதைக்குத் தள்ளியதை நாம் அறிவோம். இப்போது தற்கொலையின் அதிர்வுகள் நகரங்களின் ஊடாகவும் பரவத் தொடங்கியுள்ளன. பின்னலாடை ஏற்றுமதிக்குப் பெயர்போன திருப்பூர் நகரம் தற்போது மாநில சராசரிக்கும் அதிகமான தற்கொலைகளைப் பதிவு செய்திருக்கிறது. தொழில் வளம் மிக்க பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் நெருக்கடிக்கு, தொழிலாளர்களே பலியாகிவருகின்றனர். இங்கே, கடந்த இரண்டு ஆண்டுகளில் (2009 முதல் 2010 செப்டம்பர் முடிய) சுமார் 910 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாதம் சராசரியாக 40 முதல் 50 பேர் இப்படி பலியாகின்றனர்.
கடந்த 2008 இல் பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் மையம் கொண்டிருந்த நேரத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர், ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டனர். அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் பாதித்ததால், திருப்பூர் ஆயத்த ஆடைத்துறைக்கு 30 சத ஆர்டர்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம். முதல் 6 மாதத்தில் ஏற்றுமதி ரூ.300 கோடி வரை குறைந்துள்ளது. தொழில் நெருக்கடி தொடர்ந்தால் இவ்வாண்டில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். (தி ஹிந்து 12, நவ. 2008) என்றனர். இதனைத் தொடர்ந்து அரசின் மீட்ப்புத்திட்டத்தில் திருப்பூர் தொழில் துறையினருக்கு சில உதவிகள் கிடைத்தன. ஆனால், அதன் பலன் தொழிலாளர்களைச் சேரவில்லை. (இப்படி தொழில் துறைக்குப் பிரச்சனை நேரும்போதெல்லாம் தொழிலாளர்களை காரணம் காட்டி பரிதாபத்தை ஏற்படுத்துவதும், சலுகை கிடைத்ததும் அவற்றை தானே அனுபவித்துக் கொண்டு தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் இங்குள்ள ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான ஒருபகுதி குட்டி முதலாளிக் கூட்டத்தின் குணமாக உள்ளது.) அரசு உதவிகளைச் செய்தாலும், முதலாளிகளிட மிருந்து வேலைவாய்ப்பைத் தக்க வைப்பதற்கான உறுதியைப் பெறாததால், கணிசமான வேலை இழப்பை பின்னலாடைத் தொழிலாளார்கள் சந்தித்தனர். இதற்கு உலகப் பொருளாதார நெருக்கடியும், முதலாளிகளின் பேராசையும் காரணமாக அமைந்துள்ளன.
கடந்த இரண்டாண்டுகளில், பின்னலாடை வர்த்தகத்தில் ஏற்படும் சரிவை ஈடுகட்டவும், லாபத்தைக் கூடுதலாக்கவும் குறைந்த கூலிக்குக் கிடைக்கும் உழைப்பை முதலாளி வர்க்கத்தினர் நாடத் துவங்கினர். அத்துக்கூலிக்கு, ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். இவ்வாறு, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் திருப்பூர் வந்திருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவேயுள்ள தொழிலாளர்களைக் காட்டிலும் மிகக் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். டாலர் மதிப்பு வீழ்ச்சி, உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பஞ்சு, நூல் விலை உயர்வு என அடுத்தடுத்து நெருக்கடிகள் பின்ன லாடைத் தொழிலைச் சூழ்ந்தன. இவ்வாறு உலக அரங்கில் வலுத்துவரும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் இத்தகைய நெருக்கடியை உண்டாக்குகிறது. அத்துடன் அரசின் கொள்கை மாற்றத்தின் காரணமாக மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலைஉயர்வு, சாய சலவை ஆலைகள் நெருக்கடி உள்ளிட்டவை பனியன் மற்றும் சார்புத் தொழில்களை கடுமையாகத் தாக்கியது. இப்பிரச்சனைகளுக்கு எதிராக தொழில் துறையினரும், தொழிலாளி வர்க்கமும் இணைந்து போராடி வருகின்றனர். இத்தகைய நெருக்கடிகள் உற்பத்தி சக்திகளான தொழிலாளர் களையும் கடுமையாக பாதித்துள்ளன. இத்துடன் வரலாறு காணாத விலையேற்றமும், வீட்டு வாடகை உயர்வும், வருமான இழப்பும் தொழிலாளர்களை அழுத்தி வருகிறது. இதே நேரத்தில், தொழிலாளி வர்க்கத்தின் மீதான மூலதனத்தின் அழுத்தம் மேலும் இறுகி ஒரு பகுதியினரை தற்கொலைக்குத் தள்ளியுள்ளது. 2010, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான தற்கொலை குறிப்புகளை ஆராய்ந்தபோது, நடைபெற்றுள்ள தற்கொலைகளில் 3 இல் 2 பங்கு திருப்பூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நடந்தேறியுள்ளது தெரியவந்தது. அதாவது பனியன், மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர், பல்லம், அவினாசி, மங்கலம், நல்லூர், பெருமாநல்லூர் சுற்றுவட்டாரங்களிலேயே தற்கொலைகள் அதிகம் நடைபெற்றுள்ளன.
வயது 18 க்கும் 18-25 26-45 46-60 60 க்கு மேல்
குறைவு
மாதம் ஆ பெ ஆ பெ ஆ பெ ஆ பெ ஆ பெ
ஜூலை 2 1 3 4 8 7 7 1 5 2
ஆகஸ்ட் 1 2 5 4 11 4 5 2 0 1
செப். 0 1 4 9 6 3 1 2 0 1
(ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காவல் துறை தினசரி குற்றப் பதிவேடுகளில் இருந்து – (விபரங்கள் கிடைக்காத 11 நாட்கள் தவிர))
ஆண்களே மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இருபாலரிலும் இளம் வயதில் (18 – 45 வயதிற்குள் 68 பேர்) தற்கொலை அதிகமாக நடைபெறுகிறது. முதுமை நெருங்க நெருங்க ஆண்கள் தற்கொலை அதிகரிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, வருமானத்தில் ஏற்பட்ட இடைவெளியும், குடும்ப சண்டைகளால் ஏற்படும் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளன. கந்துவட்டிக் கொடுமையும் கணிசமான பகுதியினரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர் சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் விடுவதாலும், அதிக வேதிப்பொருட்கள் கலந்த உணவை உண்பதாலும் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, அல்சர் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது மிக முக்கியக் காரணமாக அதிகரித்திருக்கும் மருத்துவச் செலவுகளும் பதிவாகியுள்ளன. இவைகளுக்கு அடுத்தபடியாக, நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்படும் கலாச்சார சீர்கேடுகள், குடும்ப அங்கீகாரத்தைப் பெற முடியாத காதல் திருமணங்கள், முதுமையில் தனிமை ஆகிய காரணங்களும் கவனிக்கப்பட வேண்டியவை.
இச்செய்தி வெளியான ஜூன் மாதத்திலேயே, ஒரு தற்கொலைத் தடுப்புக் குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதில் தொழிற்சங்கங்களுக்கான பிரதிநிதித்துவம் முதலில் மறுக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி யதன் பேரில் அவர்களும் ஆலோசனைகளுக்கு அழைக்கப் பட்டனர். இதுகுறித்து, சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஜி.சம்பதிடம் கேட்டபோது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கூட இல்லாமல் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், 8 மணி நேர வேலைச் சட்டத்தை அமலாக்கா ததும் தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன என்ற உண்மையை வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த ஆட்சியர் அப்படி விடுமுறை கொடுப்பதாக இருந்தால், எனக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று சொன்னதாகத் தெரிவித்தார். இப்படி யான எண்ணம் கொண்ட அதிகார வர்க்கத்தினரை அதிகம் உள்ளடக்கிய அந்தக் குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருந்துவருகிறது.
குழுவின் மனநல ஆலோசகராக இருக்கும் தனலட்சுமியிடம் கேட்டபோது, தற்கொலைத் தடுப்புக் குழு அமைக்கப்பட்ட பின் நான் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அவர் குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்குச் செல்லத் துவங்கியதாகவும், அப்படியான சூழலில் இரவு தாமதமாக வர நேர்ந்ததால் கணவர் சந்தேகப்பட்டதாகவும். அதுவே தனக்கு மன உளைச்சளை ஏற்படுத்தி தற்கொலை முடிவுக்குத் தள்ளியது, என்றும் கூறியதாக தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் ஒருவரை மட்டும் அவர்கள் காப்பாற்றி யிருக்கிறார்கள். ஆனால், இக்காலகட்டத்தில் மாதம் 40 பேர் என்ற அளவில் தற்கொலை தொடர்வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனைக்கான உடனடித் தீர்வாக, முறையாகச் செயல்படக்கூடிய தற்கொலைத் தடுப்புக் குழுவையும், கவுன்சிலிங் மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதில் இரண்டு காரணங்கள் அடிப்படையானவை, அவை, 1. இங்கு நிலவும் வேலைக்கலாச்சாரம், 2. அதிகரித்திருக்கும் மருத்துவச் செலவுகள். முதலாளித்துவம் தனது இயல்பிலேயே இந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கள ஆய்விற்காக, ராக்கியாபாளையம் பகுதியில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட கௌதம் (32), பிரியா (20) தம்பதியினரின் தற்கொலை முடிவை ஆராய்ந்தோம். இதனைப் பற்றி கௌதமின் தந்தை கூறுகையில் என் மகனும், மருமகளும் காதல் திருமணம் செய்துகொண்டு, தனியே வசித்துவந்தனர். வேலையில்லாத காலங்களில் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கத் துவங்கினர். அந்தக் கடனை, வேலை கிடைக்கும் சமயத்தில், அடைத்து வந்தனர். ஆனால், சில மாதங்களாக முறையாக வேலை கிடைக்காததால் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டி கடுமையாக உயர்ந்தது. இது குடும்பத் திற்குள் விரிசலை ஏற்படுத்தியது. அடுத்த முறை நெருக்கடி வந்தபோது, அவர்கள் தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டனர். என்றார்.
தற்கொலைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இங்குள்ள தொழில் சூழலைப் புரிந்துகொள்வது தவிர்க்க முடியாததாகிறது. திருப்பூரில் பனியன் ஏற்றுமதியே மிகப் பிரதானமான தொழில். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு பல பன்னாட்டு வர்த்தகர்கள் திருப்பூருக்கு ஆர்டர்களை வழங்குகிறார்கள். அவர்கள் கேட்கும் வகையான துணியில், கேட்கும் வடிவமைப்பிலான பின்னலாடைகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். இத்தனையும், 45 முதல் 60 நாட்கள் அவகாசத்தில் செய்து முடிக்க வேண்டும். நூல் வாங்கி அதனைத் துணியாகச் செய்வதில் துவங்கி, சாயமேற்றுதல், சுறுக்கங்களை நீக்குதல், தடிமன் சரிசெய்தல், வெட்டுதல், தைத்தல், குறை நீக்கித் தேய்த்தல், பெட்டிகளில் அடுக்கி, பார்சல்களில் அனுப்புதல் என ஒவ்வொரு படிநிலையும் தனித்தனி ஜாப் வொர்க் நிறுவனங்களில் செய்யப்படுகிறது. இப்படியாக ஏற்றுமதி சார்ந்து 3000 குட்டி குட்டி நிறுவனங்கள் உள்ளிட்டு உள்நாட்டு வர்த்தகம், செகண்ட்ஸ் என 8 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. நகரை உற்று நோக்கினால் பரவிக்கிடக்கும் பல தொழிற்சாலைகள், சிறு சிறு நிறுவனங்களாக மாற்றப்பட்டு கண்ணுக்குத்தெரியாத மாயமான இழையினால் பிணைக்கப்பட்டுள்ளது தெரியும். காட்டன் டூ கார்ட்டன் என அழைக்கப்படும் பெரிய நிறுவனங்கள் சுமார் 50 அமைந்திருக்கலாம். ஒரே நிறுவனமாக இருந்தாலும், ஜாப் வொர்க் நிறுவனங்களானாலும் உழைப்புச் சுரண்டல் தடையின்றி அரங்கேறுகிறது. இத் தொழில்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்டர் முடிப்பதற்கான குறைவான கால அவகாசத்தை காரணமாகச் சொல்லி, தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்வதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதே சமயம், தொழிலாளர்கள் கூடுதல் நேர உழைப்பிற்கு இரட்டிப்புச் சம்பளம் கேட்டால், அது அநியாயமாகவும் கற்பிக்கப்படுகிறது.
வேலை ஒப்பந்தச் சம்பளம்
கட்டிங், டெய்லர், அயரன்,
மிசின் பேக்கிங், சிங்கர் டெய்லர் 190
செக்கிங் 139
லேபிள் 132
கைமடி 131
டேமேஜ் 119
அடுக்குதல் 106
மிசின் லோக்கல் 181
(ஒப்பந்தப்படியான அடிப்படைச் சம்பளத்துடன் பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்டு)
மேற்கண்ட சம்பளம் என்பது ஒப்பந்தத்தின்படி ஏற்றுகொள்ளப்பட்டதே. ஆனால், நடைமுறையில் இதிலும் குறைவான சம்பளத்தையே தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். ஒப்பந்தச் சம்பந்தமே பெற்றாலும் திருப்பூரில் உள்ள விலைவாசி மற்றும் வாடகையில் ஒரு திருப்தியான வாழ்க்கையை நடத்த முடியாது. திருப்பூர் சர்க்கார் பெரிய பாளையம் பகுதியில், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட முதியவர் சுப்பிரமணியம், தனது இறுதிக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். திருப்பூர் வந்து 32 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த ஜூலை 5 வரை நான் செலுத்தவேண்டிய வட்டி ரூ.21,660. இந்தக் கடனைச் செலுத்தமுடியாததால் கடந்த 4 மாதங்களாக மனம் வேதனையுற்றிருக்கிறேன். இதற்கு மேலும் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. இத் துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான வழி தெரியவில்லை. எங்கு போகிறோம் என்று தெரியாத எனது பயணத்தை தொடர்கிறேன். என் குழந்தைகளுடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கடைசிப் பெண்ணுக்கு சரியான வரன் அமையவேண்டும் என்பதே கடைசி ஆசை.
இது பற்றி மார்க்ஸ் கூறுகையில்: முதலாளித்துவ அமைப்பில் உழைப்பின் பலனாக பணக்காரர்களுக்கு மிக அற்புதமான வைகளும், ஆனால் தொழிலாளர்களுக்கு பற்றாக் குறையும் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது என்று கூறுகிறார். மேலும், ஒரு தொழிற்சாலையில் அவரது உழைப்பு தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை மாறாக வலியத் திணிக்கப்படுகிறது. இது தன் சுய தேவையின் விளைவாக ஏற்படுவதல்ல, புறத்தேயுள்ள பொருளின் தூண்டுதலால் நிகழ்கிறது.” இவ்வாறு, ஒரு முதலாளியின் விருப்பத்திற்காக திணிக்கப்படும் உழைப்பு, தனது அன்னியத் தன்மையால் தீராத நோயைப்போன்ற விளைவை தொழிலாளியின் மீது ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
இந்த நோயால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் ஏதேனுமொரு வடிகாலைத் தேடுகிறார்கள். அது பெரும்பாலும், கிடைக்கும் வகையில் பணத்தைப் பெற்று நிலைமையை சமாளிப்பதாக இருக்கிறது. இதனால் வலைவிரித்துக் காத்திருக்கும் கந்துவட்டிக் கும்பலிடம் எளிதில் மாட்டிக் கொள்கிறார்கள். கடவுளிடம் வேண்டுகிறார்கள், தற்காலிகமாக பிரச்சனையை மறப்பதற்கான வழிமுறைகளைக் கையாள் கிறார்கள், பிரச்சனைகளை விட்டு விலகி ஓடுகிறார்கள். ஆனால், இவற்றைவிடவும் பலனளிக்கக் கூடிய வாய்ப்புகள் அவர்கள் முன் இருக்கின்றன. அதற்காக, தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும், தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும். இதற்காக, நடைமுறையின் மீது விமர்சனப் பார்வையை வளர்த்தெடுத்தல் மிக அவசியம். இதற்காக ஜனநாயக சக்திகளும், தொழிற்சங் கங்களும் பாடுபட வேண்டும்.
இள வயதில் ஆலைக்குள்ளே புகும் தொழிலாளி, பயிற்சி பெற்றதும் நன்கு சம்பாதிக்க முடியும். ஆனால் அவர் அதற்காக புல் நைட் (16 மணி நேரம்), விடி நைட் (20 மணி நேரம்) உழைக்க வேண்டும். 5 பேர் வாழும் குடும்பத்தின் தேவையை ஈடுகட்ட, ஒரு தொழிலாளி தினமும் 12 மணி நேரம் உழைக்க வேண்டியது அவசியம். சர்வதேச தொழிலாளிவர்க்கம் போராடிப்பெற்ற அடிப்படை உரிமைகளான 8 மணி நேர வேலை, ஓவர் டைம் உழைத்தால் இரட்டிப்புச் சம்பளம் என்பவை இங்கே நடைமுறையில் இல்லை. அதிக நேரம் உழைப்பு, அதிகச் சம்பளம் என்பதே தொழிற்சாலைகள் சொல்லும் மந்திரம். பிஎஃப் பிடித்தம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்து, தொழில் நிறுவனங்கள் குறுக்கு வழிகளில் தப்பித்துக் கொள்கிறார்கள். வருடா வருடம், கணக்கு முடித்தல் என்ற பெயரில் சர்வீஸ் தொடர்ச்சி துண்டிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் 40 ஆண்டுகள் ஒரே தொழிற்சாலையில், ஒருவர் வேலை செய்து வந்தாலும், ஒவ்வொராண்டிலும் அவர் புதியவர்.
குறைந்த கூலிக்கு அதிக உழைப்பையே நிறுவனங்கள்
எதிர் பார்க்கின்றன. பல நிறுவனங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதும் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலைமைகள் பொதுவான தொழிலாளர்கள் வருமானத்தில் இழப்பை ஏற்படுத்துகின்றன. வருமான இழப்பு என்பது வேலையிழப்பின் வெளிப்பாடே ஆனால் அது வெளியே தெரிவதில்லை. இங்கே பராமரிக்கப்பட்டு வரும் வேலை நிரந்தரமற்ற தன்மை இதனைச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்தில் சென்னைக்குச் சமமான விலைவாசி கொண்ட நகரங்களில் ஒன்று திருப்பூர். கடந்த 2 ஆண்டுகளில் உணவுப்பொருட்கள் 50 சதம் விலையேறியுள்ளது. வீட்டு வாடகை 20 முதல் 40 சதம் வரை உயர்ந்துள்ளது. எல்லா வகையான செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சம்பளமோ குறைந்திருக்கிறது. ஒரு தொழிலாளி 30 நாட்களுக்கும் வேலை செய்யவேண்டுமானால் அவர் 4 கம்பெனிகள் வரை மாற்றி மாற்றி வாய்ப்பு தேட வேண்டியு ள்ளது. பல குடும்பங்களில் கணவனும், மனைவியும் சேர்ந்து உழைத்தே தேவைகளை ஈடுகட்டுகிறார்கள்.
அடுத்து, தற்கொலைகள் அதிகரிக்க, மருத்துவச் செலவுகளும் மிக முக்கியக் காரணியாக உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கியும் 5 ஆண்டுகளாக இடம் தேடப்படுகிறது. ஆனால், திருப்பூரில் மிகச் சிறிய அளவில் துவக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தின் லாபம் கொழிக்கும் நிறுவனங்களும் தங்கள் கிளைகளை திருப்பூரில் துவக்க திட்டமிட்டுள்ளன. அதிக லாபம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாக மருத்துவமும் உள்ளது. பொது மருத்துவம் சீரழிக்கப்படுவதும் உலமயத்தின் கோர விளைவுகள். ஜன நெருக்கம் மிகுந்த திருப்பூரில் தொழிலாளர்கள் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்புக்கள் வடிகால் வசதிகூட இல்லாத மோசமான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருளுக்கே அல்லாடும் தொழிலாளர்கள், அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகளுக்கு கையைப் பிசைகிறார்கள்.
மேற்சொன்ன சூழல்கள்தான், இங்கே நெருக்கடி அதிகரித் திருப்பதற்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
¨ 8 மணி நேர வேலை
¨ வாரம் ஒருநாள் விடுமுறை
¨ தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல்
¨ வீட்டுவாடகைப்படி
¨ இஎஸ்ஐ மருத்துவமனை
¨ சம வேலைக்கு சம ஊதியம்
ஆகிய முழக்கங்கள் இங்குள்ள தொழிலாளி வர்க்கத்தின் நிரந்தர முழக்கங்களாகியுள்ளன. ஆளும் வர்க்கம் இவ்வுரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகிற அதே சமயம். உரிமைப்பறிப்புக்கு எதிரான போராட்டத்தை சிஐடியு உள்ளிட்ட இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் இக்கோரிக்கைகள் தொடர்ந்து இடம் பெருகின்றன. இருப்பினும், தொழிலாளிவர்கத்தின் அரசியல் உணர்வை, குணமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கச் செய்ய முடியவில்லை, என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும்.
இவ்வாறான சூழலில், தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, பகுதிவாரியாக சங்கத்தின் கிளைகளை ஏற்படுத்துதல், வீதிவீதியாக உறுப்பினர் சேர்த்தல் என வாய்ப்புள்ள வழிகளி லெல்லாம் ஸ்தாபனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன.
இந்த நேரத்தில், உலக அளவில் அதிகரித்துள்ள நிதி மூலதனத்தின் ஆதிக்கம் திருப்பூரின் தொழிலை நெருக்கத் துவங்கியுள்ளது. பனியன் தொழிலில் இன்றுவரை பன்னாட்டு தொழில் முதலைகள் இறங்கவில்லை. ஆனால், உலகச் சந்தையில் பருத்திக்கான தேவை அதிகரிப்பு பெரிய அளவில் நிதிச் சூரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. பகாசுர யூக வணிகக் கம்பெனிகள் விவசாயிகளிடமிருந்து குவிண்டால் பருத்தியை ரூ.3300க்கு வாங்கி பதுக்குகிறார்கள். இந்த விலைக்குக் கிடைக்கும் பஞ்சை நூலாக்கினால் ஒரு கண்டி ரூ.27 ஆயிரத்திற்கு விற்க முடியும், தற்போது சந்தையில் அதன் விலை ரூ.42 ஆயிரத்திற்கும் சற்று அதிகம். உண்மை விலைக்கும், அதிகரிக்கப்பட்ட விலைக்குமான இடைவெளி தொழிலை நாசப்படுத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும் விலையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துங்கள் என்று உற்பத்தியாளர்கள் கூச்சலிடு கிறார்கள். ஆனால், மத்திய அரசு தனது தாராளமய, உலகமயக் கொள்கைகளின் காரணமாக இதில் தலையிட தயக்கம் காட்டுகிறது. இந்த சூழலில் சிறு முதலாளிகள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் இங்கே சிறுமுதலாளிகள், தொழிலாளி வர்க்கக் கூட்டிற்கான அவசியம் உருவாகியுள் ளதையும் காண முடிகிறது. இந்திய அரங்கில் மாற்று சக்திகள் பலம் குறைந்துள்ள சூழலில் இவ்வாய்ப்பை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்க சக்திகளின் சேர்மானத்தை உண்டாக்கப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில்; தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை தற்காப்பதற்கும், மீட்டு எடுப்பதற்குமான போராட்டத்தை தொழிலாளிவர்க்கம் தொடர வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே நடைபெற் றதைப் போல, போராட்டங்களினால் விளையும் பலன்களின் நியாயமான பங்கை தொழிலாளி வர்க்கத்தினர் பெறுவது சவாலாகிவிடும். எனவே, சொந்த வர்க்கத்தின் அரசியல் உணர்வை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தையும், தொடர் போராட்டங்களையும், கல்வியையும் முன்னெடுப்பது அவசியம். அதுவே அடித்தளத்தைப் பாதுகாக்க உதவும். அடித்தளம் வலுவாக இருந்தாலே, தாக்குதலை வலிமையுடன் நடத்த முடியும்.
Leave a Reply