மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அக்டோபர் புரட்சி தொடர்கிறது (மக்கள் சீனத்தின் மகத்தான வளர்ச்சி)


 

(உலகைக் குலுக்கிய அக்டோபர் புரட்சியின் தாக்கம் உலகளாவியது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் முத்திரை யைக் காண முடியும், இந்திய விடுதலைக்கு அது தத்துவ வழி காட்டியானது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் ஆள முடியாது என்ற பாடத்தை முதலாளிகளுக்கு கற்றுக் கொடுத்தது. சீனத்தை சோசலிசப் பாதையில் முன்னேற அடிப்படை போட்டது. அதனை அனைவருக்கும் புரிகிற முறையில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா இங்கே தெளிவுபடுத்துகிறார்)

– ஆசிரியர்

1949ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதலாம் நாளில் மக்கள் சீனம் புரட்சிகர குடியரசாக மலர்ந்தது. கடந்த 61 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமையில் மகத்தான வளர்ச்சியை மக்கள் சீனம் சாதித்துள்ளது. மாறி வரும் சிக்கல் மிக்க பன்னாட்டுச் சூழலில் பெரும் சவால்களை மக்கள் சீனம் எதிர்நோக்குகிறது என்பது உண்மையே. நிகழ்ந்துள்ள வளர்ச்சியில் நிறை குறைகளும் பிரச்சனைகளும் உண்டு என்பதும் உண்மையே. இருப்பினும், பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் சோசலிச சீனா பெரும் முன்னேற்றங்களை சாதித்துள்ளது என்பதே ஆகப் பெரிய மையமான உண்மையாகும்.

சோசலிச சீனாவின் பல்முனை சவால்களையும், சாதனைகளையும் ஒரு கட்டுரையில் விளக்குவது சாத்தியமல்ல. இக்கட்டுரையில் நாம் பிரதானமாக மக்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விளக்குவதில் கவனம் செலுத் துவோம். அதே சமயம் மக்கள் சீனத்தின் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்தையும், உலக அரங்கில் புறக்கணிக்க முடியாத நவீன சக்தியாக சீனம் மலர்ந்துள்ளதையும், சீனத்தின் வியத்தகு அறிவியல் – தொழிலநுட்ப வளர்ச்சியையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பல பத்தாண்டுகள் உலக வல்லரசு களால் ஒதுக்கப்பட்டும், பொருளியல் மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனைகள் மறுக்கப்பட்டும், எதிரிகளின் கடும் ராணுவ முஸ்தீபுகளை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டும், இத்தகைய பல தடைகளையும் சந்தித்து, தகர்த்து மக்கள் சீனம் முன்னேறி யுள்ளது என்பது ஆழ்ந்து மனதில் கொள்ள வேண்டிய சாதனையாகும்.

மக்கள் சீனத்தின் முதல் முப்பது ஆண்டுகள்

1949இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒரு நீண்ட புரட்சிகர போராட்டத்தின் இறுதியில், மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்ட பொழுது சீனா மிகவும் பின் தங்கிய நாடாக இருந்தது. வேளாண்மை, தொழில ஆகிய பொருள் உற்பத்தித் துறைகளில் மட்டுமின்றி, கல்வி, ஆரோக்கியம் போன்ற மனித வள அம்சங்களிலும் சீனம் மிகவும் பின்தங்கியிருந்தது. பொருளாதார, சமூகக் குறியீடுகளில் பலவற்றில் அன்றைய இந்தியாவை விடவும் அன்றைய சீனம் பின்தங்கியிருந்தது. எடுத்துக்காட்டாக, 1949-இல் குழந்தை இறப்பு விகிதம் – உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு வயதை எட்டுவ தற்குள் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கை – இந்தியாவில் 150, ஆனால் சீனத்தில் 200 என்றிருந்தது. 1950-இல் சீனாவின் தேச வருமானம் இந்தியாவின் தேச வருமானத்தில் 73 சதவிகிதமாகத் தான் இருந்தது. ஆனால் சோசலிசப் பாதையில் 1949க்குப் பின் சீனா வேகமாக முன்னேறியது. 1949-1953 காலத்தில் உலகிலேயே மிகவும் விரிவானதும் ஆழமானதுமான நிலச் சீர்திருத்தத்தை சோசலிச சீனா நிறைவேற்றியது. நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு மறு விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் நிலம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வலுவான கிராமப்புற கூட்டுறவு இயக்கம் சீன கிராமங்களில் மலர்ந்தது. 1960-களில் நிலம் தனிநபர் சொத்து என்ற நிலையிலிருந்து ஊரின் பொதுச் சொத்து என மாறியது. அனைத்து வேளாண் குடும்பங்களும் ஊர் நிலத்தில் ஒரு வரம்புக்குட்பட்ட பகுதியைச் சாகுபடி செய்யும் உரிமையைப் பெற்றனர்.

1950களிலும் 1960களிலும் கிராமப்புற வளர்ச்சிக்கு அரசு ஏராளமான முயற்சிகளையும், முதலீடுகளையும் ஒரு புறம் மேற்கொண்டதுடன், மறுபுறம் கிராமப்புற உழைப்பாளி மக்களை உற்சாகமான கூட்டு உழைப்பில் ஈடுபடுத்தி, கிராமப்புற நீர்வளத்தையும், நில வளத்தையும், பாசன வசதிகளையும் மேம்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வேகமான முன்னேறுவது, இதில் சில அதிதீவிரப் போக்குகள் தலைதூக்கி பின்னடைவு ஏற்படுவது, பின்னர் சரியான அரசியல் தலையீட்டின் மூலம் தவறுகள் களையப்படுவது என்று களப்பணிகளில் ஈடுபட்டு, கற்றுக் கொண்டு, சீன மக்கள் முன்னேறினர். இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சிறந்த தலைமைப் பங்கு ஆற்றியது. இப்பங்கு தவறுகளே அற்றதாக இல்லை, எங்கும் இருக்கவும் முடியாது. ஆனால் மக்கள் பங்கேற்பை ஊக்குவித்து, ஏற்பட்ட தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொண்டு கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சியை கம்யூனிஸ்டுகள் தலைமையில் மக்கள் சீனம் சாதித்தது.

ஐந்தாண்டு திட்டங்கள், இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் திட்டமிட்டுத் திரட்டி, ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட அரசு முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. 1950 முதல் 1979 வரையிலான காலத்தில் மக்கள் சீனத்தின் தேச வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 5.62 சதவிகிதம் என்று பெரும் வேகத்தில் தொடர்ந்து முன்னேறியது. இதே காலத்தில், இந்திய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 3.54 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தலா உற்பத்தி என்று பார்த்தால், சீன வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 3.45 சதவிகிதமாகவும் இந்திய வளர்ச்சி விகிதம் 1.30 சதவிகிதமாகவும் இருந்தன. 1950இல் சீனாவின் தேச வருமானம் இந்தியாவின் தேச வருமானத்தில் 73 சதவிகிதம், அதாவது முக்கால் பங்கிற்கும் சற்றுக்கு குறைவு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 1973-இல் சீன தேச வருமானம் இந்தியாவின் தேச வருமானத்தை தாண்டிச் சென்று விட்டது. 2003-இல் இந்தியாவின் தேச வருமானத்தை போல் 2.3 மடங்காக சீனாவின் தேச வருமானம் ஆகிவிட்டது.

சீனாவின் 1950-80 காலத்திய வேகமான பொருளாதார வளர்ச்சி, 1960-க்குப்பின் முழுக்க முழுக்க சொந்தக்காலில் நின்று சாதிக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுகள் சீனாவுடன் வர்த்தக உறவுகள், தொழில் நுட்ப பரிமாற்றம் ஆகிய விஷயங்களில் மிகவும் கடுமையான நிலைபாடுகளை மேற்கொண்டன. துரதிருஷ்டவசமாக, சீன – சோவியத் உறவுகளும் மோசமாகி, 1960-க்குப் பின் சீனாவிற்கு சோசலிச சோவியத் ஒன்றியம் உதவி செய்ய மறுத்து விட்டது. 1950களின் துவக்கத்தில் கொரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த யுத்தம், அதைத் தொடர்ந்து சீனாவை அச்சுறுத்த, பலவீனப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்ட பல முயற்சிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு, மக்கள் சீனம் முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் சீனத்தை பலவீனப்படுத்தவும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் 1950 முதல் 1970களின் துவக்கம் வரை ஏகாதிபத்தியம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற பின்னணியில் தான் 1973-ஆம் ஆண்டில், வேறு வழியின்றி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பின ராகவும் பின்னர் ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் நிரந்தர உறுப்பினராகவும் மக்கள் சீனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை மேலைநாடுகளுக்கு ஏற்பட்டது.

1980-க்குப் பின்

1950-1980 கால கட்டத்தில் வேளாண்மை, தொழில், கட்டமைப்பு, அறிவியல் – தொழில்நுட்பம், மனிதவளம் என்று பல துறைகளிலும் சீனா வேகமாக முன்னேறியது. இருப்பினும் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சோசலிச வளர்ச்சிக்கானப் பாதை பற்றிய வலுவான கருத்து முரண்பாடுகளும் தொடர்ந்தன. இவை அவ்வப்பொழுது கொள்கை மாற்றங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தின. 1960களின் மத்தியில் துவங்கி 1970களின் மத்தி வரை நீடித்த, “கலாசாரப் புரட்சி” என்று அழைக்கப்படுகின்ற பத்தாண்டு நிகழ்வுகள் சீனத்திலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின. நீண்ட உட் கட்சிப் போராட்டத்திற்கும், விவாதத்திற்குப் பிறகு, “கலாசாரப் புரட்சி”யை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது. 1970களின் நடுப்பகுதியில் சீனப் புரட்சியின் மகத்தான சிற்பி மாசேதுங் அவர்களும், மற்றொரு மிகச் சிறந்த தலைவரான சூ என் லாய் அவர்களும் மறைந்தனர். 1970களில் பன்னாட்டுச் சூழலிலும் பெரும் அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. சீனாவின் வளர்ச்சி சீனா பற்றிய மேலை நாடுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1950-1970கள் வரையிலான அனுபவங்களின் அடிப்படையிலும், மாறிவிட்ட பன்னாட்டுச் சூழலின் பின்புலத்திலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவின் சோசலிச வளர்ச்சிப் பாதையில் கையாள வேண்டிய யுக்திகளை ஆழ்ந்து பரிசீலனை செய்தது. 1978-இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மத்தியக்குழு, தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க மூன்றாவது அமர்வில் சில முக்கிய முடிவுகளை எடுத்தது. அவற்றின் சாராம்சம் என்ன? பன்னாட்டுச் சூழலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களையும் உருவாகியிருந்த புதிய வாய்ப்புகளையும் கணக்கில் கொண்டும், சீன வளர்ச்சி அனுபவங்களையும் வளர்ச்சிக் கட்டங்களையும் கணக்கில் கொண்டும், சீன பொருளாதார வளர்ச்சி, தந்திரம் பற்றிய நிர்ணயிப்புக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. அதன்படி, பன்னாட்டுப் பொருளாதார உறவுகளைப் பயன்படுத்தி சீன பொருளாதாரத்தை வலுப்படுத்த சீனா முடிவு செய்தது. மேலும், உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளிலும முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப் பட்டது. இதன்படி, கிராமப்புற பொருளாதாரத்தில் ‘கம்யூன்’களின் அதிகாரத்தை குறைத்து, ‘குடும்ப பொறுப்பு ஏற்பாடு’ என்ற அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் மேற்கொள்ளவும், உற்பத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அளவை சாகுபடியாகும் விலையில் அரசுக்கு கொடுத்துவிட்டு, உபரியை உள்ளூர் சந்தைகளில் விற்றுக் கொள்ளவும் விவசாயக் குடும்பங்கள் அனுமதிக்கப்பட்டன. நிலம் பொதுச் சொத்தாகவே தொடர்ந்தது. ஆனால் அதன் பயன்பாடு தொடர்பான பொறுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விளை பொருள் விலைகளும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உயர்த்தித் தரப்பட்டன. 1978-85 கால கட்டத்தில் வேளாண் உற்பத்தியும் விவசாயிகள் வருமானமும் வேகமாக வளர்வதற்கு இது உதவியது.

இதேபோல், பொதுவாக வளர்ச்சிக் கொள்கைகளிலும், குறிப்பாக தொழில் வளர்ச்சிக் கொள்கைகளிலும், பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. உற்பத்தி சக்திகளை வேகமாக அதிகரிப்பது பிரதான இலக்காக ஆக்கப்பட்டது. இதை சாதித்திட, பொதுத்துறையையும் திட்டமிட்டப் பொருளாதார அமைப்பையும் பாதுகாத்து, வலுப்படுத்திக் கொண்டே, சந்தைப் பொருளாதார யுக்திகளையும் பயன்படுத்துவது என்று சீன அரசு முடிவு செய்தது. அன்னிய முதலீடுகளையும் இதற்காகப் பயன்படுத்துவது, இதை பரீட்சார்த்த அடிப்படையில், படிப்படியாக விஸ்தரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. கிராமப்புற பகுதிகளிலும் சிறு நகரப் பகுதிகளிலும் கிராம மற்றும் சிறு நகர கூட்டுத் தொழில் நிறுவனங்கள் (ஏடைடயபந யனே கூடிறn நுவேநசயீசளைநள, “ஏகூநு”) ஸ்தல அரசு அமைப்புகளால் உருவாக்கப்பட்டன. இவை சீனாவின் ஏற்றுமதியை உயர்த்துவதில் சிறந்த பங்காற்றியுள்ளன.

அந்நிய கம்பெனிகளை வரவழைத்து, அவற்றுடன் இணைந்து சீன அரசு பெரும் தொழிற் கூடங்களை நிர்மாணித்து தொழில் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பெருக்குவது என்றும் முடிவு செய்தது. ஏராளமான பன்னாட்டு கம்பெனிகள் கடந்த 25 ஆண்டுகளில் சீனாவில் முதலீடுகளை மேற்கொண்டு, தொழிற் கூடங்கள் அமைத்து, ஏற்றுமதிச் சந்தைகளுக்கும் சீன உள்நாட்டுச் சந்தைக்குமான நவீன பொருள் உற்பத்தியை செய்து வருகின்றனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 1978 முதலும் பின்னர் 1992க்குப் பின்பும் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் சீனத்தில் ஒரு “சோசலிச சந்தைப் பொருளாதாரம்” (ளுடிஉயைடளைவ ஆயசமநவ நுஉடிnடிஅல) நிர்மாணிக்கப்பட்டு வருகிறது என்றும், இதுவே தற்சமய இலக்கு என்றும் அறிவித்துள்ளது.

1980-க்குப் பின் சீன வளர்ச்சி

1978-க்குப் பின்பு, மேலும் 1990களிலிருந்து மக்கள் சீனம் பின்பற்றி வரும் வளர்ச்சி சார் கொள்கைகள் தொடர்பாக பல கேள்விகளும் சர்ச்சைகளும் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்த கொள்கைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ள கால கட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், சீன மக்களின் வாழ் நிலையும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதும் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

சீனாவின் தேச வருமான ஆண்டு வளர்ச்சி விகிதம் பற்றிய விபரங்கள் வருமாறு

ஆண்டு    1950-79 1980-89 1990-99 1999-2005

ஆண்டு வளர்ச்சி      5.62        10.62     9.94        8.75

விகிதம் (ரூ)

ஆண்டு தலா

வருமான வளர்ச்சி     3.45        9.11        8.74        8.13

விகிதம் (ரூ)

இதே கால கட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதங்கள் வருமாறு:

ஆண்டு    1950-79 1980-89 1990-99 1999-2005

ஆண்டு தேச

வருமான வளர்ச்சி     3.54        4.94        6.0          6.47

விகிதம் (ரூ)

ஆண்டு தலா

வருமான வளர்ச்சி     1.30        2.68        3.86        4.80

விகிதம் (ரூ)

சீன வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் என்ன என்றால் மொத்த உற்பத்தியில் தொழில் துறையின் பங்கு கணிசமாக உள்ளது. இது பற்றிய சில விபரங்கள் வருமாறு:

மக்கள் சீனம் மொத்த உற்பத்தியில் துறையின் பங்கு (சதவிகிதத்தில்)

ஆண்டு    வேளாண்  தொழில் துறை  சேவை துறை

மற்றும் இதர    (இரண்டாம் நிலைத்    (மூன்றாம்

முதல் நிலைத் துறை துறை)     நிலைத் துறை)

1978       28.2        47.9        23.9

1989       25.1        42.8        32.1

1997       18.3        47.5        34.2

2005       12.2        47.7        40.1

2007       11.3        48.6        40.1

* முதல்நிலைத்துறை: பயிர் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்பிடி, வனம் உள்ளிட்டது.

அதே சமயம், உழைப்புப் படை இம்மூன்று துறைகளுக்கிடையே எவ்வாறு பிரிந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.

துறையில் உழைப்புப் படையின் பங்கு (சதவிகிதத்தில்)

ஆண்டு    வேளாண்  தொழில் துறை  சேவை துறை

மற்றும் இதர    (இரண்டாம் நிலைத்    (மூன்றாம்

முதல் நிலைத் துறை துறை)     நிலைத் துறை)

1978       70.5        17.3        12.2

1989       60.1        21.6        18.3

1997       49.9        23.7        26.4

2005       44.8        23.8        31.4

2007       40.8        26.8        32.4

வளர்ச்சியில் வரும் சவால்

இந்தியா, சீனம் ஆகிய இரு நாடுகளுமே சந்திக்கும் ஒரு பிரச்சனையை இங்கு காணலாம். உற்பத்தி வளரும் பொழுது, நவீனமடைந்து வரும் பொருளாதார அமைப்பில், வேளாண் உள்ளிட்ட முதல்நிலைத் துறையின் பங்கு குறைவது இயல்பானதே. சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மொத்த தேச உற்பத்தியில் வேளாண்மை உள்ளிட்ட முதல்நிலைத் துறையின் பங்கு கடந்த 30 ஆண்டுகளில் பெரிதும் குறைந் துள்ளது. ஆனால் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், உழைப்பாளர்களில் கணிசமான சதவிகிதத்தினர் இத்துறையி லேயே நீடிக்கின்றனர் என்பது தான். 2007-இல் சீனாவின் தேச உற்பத்தியில் முதல்நிலைத்துறையின் பங்கு 11.37 தான். ஆனால் சீன உழைப்பாளிகளில் 40.8 சதவிகிதம் பங்கினர் முதல் நிலைத் துறையில் உள்ளனர். தொழில் துறைக்கும் முதல்நிலைத் துறைக்கும் இடையே உள்ள மிக அதிகமான உற்பத்தித் திறன் இடைவெளியை இது காட்டுகிறது.

இந்தியாவின் நிலைமை என்னவென்றால் சீனாவை விடவும் கூடுதல் இடைவெளி உள்ளது. முதலாவதாக இந்திய உற்பத்தி மதிப்பில், தொழில்துறை பங்கு 2007-இல் 30 சதவிகிதத்திற்கும் குறைவு. சீனாவில் கிட்டத்தட்ட 49 சதவிகிதம். உழைப்புப் படையைப் பொருத்த வரையில் 2007-இல் சீனாவில் முதல்நிலைத் துறையின் பங்கு 40.8 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் 50 சதவிகிதத்திற்கும் அதிகம்.

ஆகவே சீனா, இந்தியா இரண்டு நாடுகளுமே முதல்நிலைத் துறையிலிருந்து உழைப்பாளி மக்கள் பிற தொழில், சேவைத் துறைகளுக்குச் செல்வது என்ற வளர்ச்சிப் பாதையில் பெரும் சவால்களை சந்திக்கின்றன. இது பெரும்பாலான வளர்முக நாடுகளுக்கும் பொருந்தும். இன்று வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளாக உள்ள மேலை நாடுகளும் ஜப்பானும் அவர்கள் வளர்கையில் பிற நாடுகளை அடிமைப்படுத்தி, காலனிகளாக ஆக்கி அங்கு தங்களது உழைப்பாளி மக்களை “ஏற்றுமதி” செய்ய முடிந்தது. ஆனால் இன்றைய வளரும் நாடுகளும் சோசலிச அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மக்கள் சீனமும் இதைச் செய்ய முடியாது. முதல்நிலைத் துறையை நவீனப்படுத்தி அதன் உற்பத்தித் திறனை உயர்த்துவதும், அதே சமயம் இதனால் முதல் நிலைத்துறையில் ‘உபரி’யாகும் உழைப்பாளி மக்களுக்கு தொழில் மற்றும் சேவைத்துறைகளில் தக்க பணியிடங்களை உருவாக்குவதும் சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் சந்திக்கும் வளர்ச்சி சார்ந்த சவாலாகும்.

சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கி வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் சீனம் இந்தச் சவாலை மிகக் குறுகிய கால வரம்பிற்குள்ளோ, சோசலிச முழக்கங்களாலோ சாதித்து விட முடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இச்சவாலை சந்திப்பதற்கு தொழில் வளர்ச்சியும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும் தேவை. அது மட்டுமல்ல இன்றைய ஏற்றத் தாழ்வுமிக்க உலகப் பொருளாதார அமைப்பில், நவீன தொழில் நுட்பங்களைப் பெறவும் தொழில் வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியிலும் தொழில் நுட்பம் – சந்தை – நிதி – ஊடகம் என்று பல துறைகளில் ஏகபோக வலுப் பெற்றுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளுடனும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுடனும் பொருளாதார உறவுகள் கொள்வது தவிர்க்க இயலாதது. சீன வளர்ச்சி யுக்திகளை இந்தப் புரிதலுடன் பரிசீலிக்க வேண்டும்.

மக்கள் சீனம்: சவால்களும் – சாதனைகளும்

1949 முதல் இன்று வரையிலான சீனப் பொருளாதார வளர்ச்சியை பரிசீலிக்கும் பொழுது ஒரு புறம் அதன் சாதனைகள் பளிச்சென்று தெரிகின்றன. வேளாண், தொழில், சேவை என்று அனைத்துத் துறைகளிலும் பெரும் உற்பத்தித் திறன் உயர்வையும், உற்பத்திப் பெருக்கத்தையும் மக்கள் சீனம் சாதித்துள்ளது. கல்வி, மக்கள் நல்வாழ்வு, மக்களின் சராசரி வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1950 முதல் 1980 வரை உலகில் மக்கள் சீனம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் தற்சார்பை மையமாகக் கொண்டு, நிலச்சீர்திருத்தம், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி, அரசுத்துறை மூலம் தொழில் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி, ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களை சந்திக்கும் அளவிற்கு சீனாவின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தல் ஆகியவை பிரதான பணிகளாக அமைந்தன. 1980-க்குப் பின் சீனா ‘திறந்த கதவுக் கொள்கை’ அடிப்படையில் அந்நிய தனியார் மூலதனங்களை வரவழைத்து சீன வளர்ச்சியில் ஈடுபடுத்துவது, மையப்படுத்தப்பட்ட அரசுப் பொருளாதார மேலாண்மை பங்கை குறைத்து, மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளுக்குப் பொருளாதார மேலாண்மையில் கூடுதல் பங்கு அளிப்பது, சந்தைப் பொருளாதார உறவுகளை வளர்த்து, வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது, அரசு தொழில் நிறுவனங்களை நவீனப்படுத்திச் சீர் செய்வது போன்ற பல புதிய யுக்திகளை சீன அரசு பின்பற்றி வந்துள்ளது. புதிய கொள்கைகள் பலவும், படிப்படியாக முதலில் பரிட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, பிறகு திருத்தங்களுடன் விரிவுபடுத்தப் பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. 1980-2010 கால கட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய முப்பது ஆண்டுகளை விடவும் மிக வேகமாக நிகழ்ந்தது. சில புள்ளி விபரங்கள் இதுபற்றி கீழே தரப்பட்டுள்ளன. சில விபரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, 1980-ஆம் ஆண்டில் 100 என்று வைத்துக் கொண்டால் 2007-இல் சில பொருட்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை கீழே காணலாம்.

பொருள்   1980 – உற்பத்தி குறியீடு 2007 – உற்பத்தி குறியீடு

எஃகு 100         1323

மின்சாரம்  100         1090

தொலைக்காட்சி

பெட்டிகள்  100         3373

குளிர்சாதனப்

பெட்டிகள்  100         8794

இந்த உற்பத்திப் பெருக்கம் எல்லாமே உள்நாட்டு நுகர்வுக்காக அல்ல. சீனாவின் ஏற்றுமதியும் பல மடங்கு பெருகியுள்ளது. உலகின் மிக அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக, ஜெர்மன், ஜப்பான் போல் சீனா இன்று இடம் பெறுகிறது. சீனாவின் உற்பத்திப் பெருக்கமும் ஏற்றுமதி வளர்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பெரும் எரிச்சலைத் தருகின்றன. 2007 பிற்பகுதியிலிருந்து தொடரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் பின்புலத்தில், சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகளை பணக்கார நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா – கடுமையாகத் தாக்குகின்றன. உலகப் பொருளா தாரத்தில் கிராக்கி மந்தமாக உள்ளது. ‘சீனா மிகவும் கூடுதலாக ஏற்றுமதி செய்து வல்லரசுகளுக்கு பிரச்சனை ஏற்படுத்துகிறது. “சீன அரசு சீன நாணய மதிப்பை உயர்த்த வேண்டும். அப்பொழுது தான் சீன ஏற்றுமதிப் பண்டங்களின் விலை உயர்ந்து பன்னாட்டுச் சந்தைகளில் “நியாயமான” போட்டி நிகழும்’ என்று வல்லரசுகள் ஓலமிடுகின்றன.

இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், கடந்த முப்பது ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சிப் பாதை பல புதிய பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. ஒன்று, அந்நிய முதலீடுகளை ஈர்த்து, தொழில் உற்பத்தியைப் பெருக்குவது என்பது, பன்னாட்டு முதலாளிகளுக்கு சீனாவில் முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தியும், மலிவான கூலியில் சீன உழைப்பாளி மக்களின் உழைப்பு சக்தியைப் பெற்றும், பெரும் லாபங்களை ஈட்டுகின்றனர். சீனப் பொருளாதார சீர்திருத்தங்களால் உருவாகியுள்ள சீனச் செல்வந்தர்களும் சீன உழைப்பாளி மக்களின் உழைப்பு சக்தியை பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றனர். இவ்வாறு பன்னாட்டு – உள்நாட்டு முதலாளிகளையும், சீனப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும் கடந்த முப்பதாண்டு கொள்கைகள் வளர்த்துள்ளன. இந்த வளர்ச்சி என்பது பிரதானமாக சீனாவின் கிழக்குப் பகுதி, கடற்கரைச் சார்ந்த மாநிலங்கள் ஆகியவற்றில் தான் அதிகமாக நிகழ்ந்துள்ளது.

மேற்கு, வடமேற்குப் பகுதிகளாலும், சீனாவின் கிராமப்புறங் களிலும் கிழக்குப் பகுதிகளையும் நகர்ப்புறங்களையும் ஒப்பு நோக்குகையில் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஒட்டு மொத்தமாக, 1978 முதல் குறிப்பாக 1993-க்குப் பின் – செயல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கைகள்;

¨              வருமான ஏற்றத் தாழ்வுகள்

¨              நகர – கிராமப் பொருளாதார இடைவெளி

¨              சீனாவின் பல்வேறு மாநிலங்கள் பகுதிகளுக்கிடையேயான இடைவெளி

¨              தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்கும் வேளாண் துறைக்கும் இடையிலான இடைவெளி

ஆகிய அனைத்தையும் அதிகப்படுத்தியுள்ளன.

சீன வளர்ச்சி போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக் காததால், வேலையின்மையும் பிரச்சனையாக முன் வந்துள்ளது. இந்தியாவைப் போல் அல்லாமல், வேலையிழந்த தொழிலா ளிக்கு மக்கள் சீனத்தில் சமூகப் பாதுகாப்பு உண்டு என்ற போதிலும், இது ஒரு பிரச்சனையே. அதேபோல் விவசாயிகள் குடும்பங்களிலிருந்து உழைப்பாளிகள் நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து தொழிற்சாலைகளின், பிற பணிகளில் ஈடுபடும் பொழுது, அவர்கள் ஏராளமான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளை சீனத் தொழிலாளி வர்க்கம் சந்தித்துப் போராடி வருகிறது.

இவ்வாறு சீனா சந்திக்கும் வருமான ஏற்றத் தாழ்வு, கிராம – நகர ஏற்றத் தாழ்வு, மாநில / பகுதிவாரி ஏற்றத் தாழ்வு, புலம் பெயர்ந்த உழைப்பாளிகள் பிரச்சனைகள், பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல் உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் மறுப்பதற்கில்லை. அதே சமயம், சீன அரசியல் தலைமையும் இந்தப் பிரச்சனைகளை உற்று நோக்குகிறது, கவலையுடன் பார்க்கிறது. இவற்றிற்க்குத் தீர்வு காண பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையும் நாம் மறந்து விடலாகாது. அண்மையில் நடந்து முடிந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மத்தியக்குழுவின் ஐந்தாவது கூட்டம் (பிளீனம்) இப்பிரச்சனை களை விவாதித்து வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2016) இவற்றை எதிர்கொள்ள சில யுக்திகளை தீர்மானித்துள்ளது. சீனத் தலைவர் ஹூ ஜின்டாவின் உரையிலும், பிரதமர் வென் அவர்களின் உரையிலும், மத்திய கமிட்டியின் அறிக்கையிலும் மேற்கூறிய ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பது, புலம் பெயர் உழைப்பாளிகளின் உரிமைகளை நிலை நிறுத்தி வாழ்நிலையை மேம்படுத்துவது, வேளாண் வளர்ச்சி, ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பது, தொழிற்சாலை களிலும் இதர பணியிடங்களிலும் தொழிலாளர் உரிமையைப் பாதுகாப்பது, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் நிலைத் தகு வளர்ச்சிக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது ஆகிய முடிவுகள் இடம் பெற்றுள்ளன.

பிரகடனங்களாலும், அறிக்கைகளாலும், அறிவிப்புகளாலும் மட்டுமே பிரச்சனைகள் தீர்ந்து விடாது. ஆனால் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் பின்தங்கிய ஒரு நாட்டில் சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்கும் அரசியல் இயக்கம் வெற்றி பெற்று விட்ட உடனே பிரச்சனைகள் தீர்ந்து விடாது. முரட்டுத் தனமான ஏகாதிபத்திய, நிதி மூலதனப் பிடிப்பில் உள்ள ஒரு பன்னாட்டுச் சூழலில், தொழில்நுட்பம், சந்தை, நிதி, ஊடகம், பேரழிவு ஆயுதங்கள் என்ற அனைத்துக் கேந்திரமான விஷயங்களிலும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் தொடரும் நிலையில், சோசலிச முகாம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சீனம் சோசலிசத்தை நிர்மாணிக்க மிகப் பெரிய சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது என்ற ஆகப் பெரிய வரலாற்றுக் கடமையில் மானுடம் பல முறை ஏறி, சறுக்கி விழுவது வியப்பல்லவே? சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள கடும் முயற்சிகளை நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். தோழமையுடன் கவலைகளையும் எச்சரிக்கைகளையும் வெளிப்படுத்தலாம். ஆனால் நமது விமர்சனம் பரிவுடன் கூடியதாக மட்டுமின்றி, நம்மிடம் விடைகள் எல்லாமே இல்லை என்ற பணிவுடனும் முன்வைக்கப்பட வேண்டும்.

62-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் சீனத்தில் மகத்தான சாதனைகளை அங்கீகரித்து வாழ்த்துவோம். சந்திக்கும் சவால்களையும் தொடரும் பாதையையும் அறிவியல் பூர்வமாகவும் பரிவுடனும் கூர்ந்து ஆராய்ந்து உரிய வகையில் நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். சீனப் புரட்சியின் வெற்றிக்கு துணை நிற்போம்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: