மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்திய இடதுசாரிகளும் விக்டர் கெய்ர்னனும்


 

1938 ஆம் ஆண்டு துவங்கி 1946 ஆம் ஆண்டு வரை விக்டர் கெய்ர்னன் இந்தியாவில் வசித்தார்.   அவருக்கு புகழ் தேடித்தரத்தக்க முக்கியமான ஆய்வுக் கருதுகோள்களை கவனிக்க விடாமல் பல ஆண்டுகளுக்கு  இந்தியா எதிர்பாராத வகையில் இழுத்து சென்றுவிட்டது எனச் எரிக்ஹாப்ஸ்வாம் (இவரும் புகழ்மிக்க மார்க்சிய வரலாற்று ஆசிரியர்) சொன்னது உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால், அவர்  நீண்டகாலம் தங்கியது இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் எங்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. அவர் அங்கே இருந்திருக்க வில்லையானால், இக்பால் மற்றும் பாய்ஸ்-அஹமத்-பாய்ஸ் ஆகியோரின் எழுத்துக்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகளோ,  இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் சொன்னதை அலசிய  இவரது கட்டுரைகளையோ அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அதன் கடைசி காலனியுடன் கொண்டிருந்த உறவுகளைப் பற்றி அவரின் பார்வையிலான படைப்புகளோ நமக்கு கிடைத்திருக்காது.

கெய்ர்னன் இந்தியாவில் செலவிட்ட 7 ஆண்டுகளும், இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலமாகும், அதே காலத்தில் இந்தியா தேசிய இயக்கத்தின் ஆகப் பெரும் எழுச்சியைப் பார்த்தது, அத்துடன் அப்போதுதான் நாட்டின் சில பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் விடத் துவங்கியது. சொந்த நாட்டிற்கு கெய்ர்னன்  திரும்பிய ஓராண்டில்  இந்தியா விடுதலையடைந்தது, பாகிஸ்தானும் ஏற்படுத்தப்பட்டது.

1930-களின் கடைசி கட்டத்திலும் 1940-களின் துவக்கத்திலும் இந்தியாவின் கம்யூனிச இயக்கத்திற்கு மிக குறிப்பிடத்தக்க காலமாக இருந்தது. 1920ஆம் ஆண்டிலேயே தாஸ்கண்டில் கட்சி துவக்கப் பட்டிருந்தாலும், உண்மையில் 1934-35 ஆண்டுவாக்கில் மீரட் (சதிவழக்கு) கைதிகளின் விடுதலைக்குப் பின்னர்தான் அது வீச்சுடன் இயங்க ஆரம்பித்தது.

கட்சியின் தலைமையகம் பம்பாயில் செயல்படத் துவங்கிய 4 ஆண்டுகள் கழித்து கெய்ர்னன் அங்கே வந்தார். பொதுச் செயலாளர் பி.சி.ஜோசியின் நட்புறவில் பிணைந்தார்.  அப்போது துவங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு , சில அடிப்படை பிரச்சினைகளை கோட்பாடு ரீதியாக  புரிந்துகொள்ள இந்திய இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் வாதப் பிரதிவாதங்களில் போராடிவந்தனர். அப்பிரச்சினைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்;

இந்திய முதலாளி வர்க்கத்தின் இயல்பு;

¨              ஏகாதிபத்தியத்துடனான அதன் உறவு; ( சேர்தலும், மோதலும்)

¨              நிலப்பிரபுத்துவத்துடன் அதற்கிருந்த உறவு; மற்றும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் கட்சி பங்கு பெறும் முறைகள்  கட்சி அமைப்பு.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளில் ஒருசிலவற்றை கருத்தில் கொள்ளவும் அலசவும்,கெய்ர்னன்னுக்கு கட்சியின் நண்பர் என்ற முறையிலும் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற முறையிலும்  அவரது நிலைபாடுகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்தது .

இரண்டாம் உலக யுத்தத்தை, ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணித்ததுடன் அந்த யுத்தத்தை முழுக்க எதிர்ப்பதாக எடுத்த கட்சியின்  துவக்க கால நிலைப்பாட்டை கெய்ர்னன் விமர்சித்தார். 1939 இல் கட்சி தடைசெய்யப் பட்டது. கட்சியின் தலைமை, இந்த யுத்தம் சோவியத் யூனியனுக்கு எதிராக திரும்ப இருக்கும் வாய்ப்பையும், பாசிசத்தின் அபாயத்தையும் கணிக்கத் தவறிவிட்டதை கெய்ர்னன் கண்டுணர்ந்தார்.

அதே விசயத்தில், சில காலத்திகுப் பின்னார் 1941, நவம்பர் மாதத்தில், கட்சி மற்றொரு எல்லைக்குச் சென்று இரண்டாம் உலக யுத்தத்தை மக்கள் யுத்தமென முடிவு செய்ததுடன் போருக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தையும் அவர் விமர்சித்தார்.

நாசிசத்திற்கும், ஜப்பானிய ராணுவ ஆக்கிரமிப்புக்கும் எதிராக நடைபெற்ற உலகளாவிய போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என கட்சி எடுத்த முடிவு சரியானதே. அதேசமயம், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விடுவிக்கவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கான அரசமைப்பை ஏற்படுத்தவும் வலியுறுத்தி 1942 ஆம் ஆண்டில்  நடைபெற்ற வெள்ளையனையே வெளியேறு இயக்கத்தில் கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. ஆனால், 1942 இயக்கத்திற்கு எதிரான நிலை எடுத்ததன் மூலம் கட்சி தவறு செய்துவிட்டது. சர்வதேச அளவிலான முரண்பாட்டை (அதாவது பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை) தேசிய முரண்பாட்டுடன் (தேச விடுதலைக்கான போராட்டத்துடன்) இணைத்து நோக்குவதற்கு கட்சி தவறிவிட்டது.

பல்வேறு காலகட்டங்களில், இந்திய முதலாளிகளைப் பற்றி கட்சி கொண்டிருந்த புரிதல்களின் அடிப்படையில்,காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய இயக்கம் இவைகளோடு கொள்ள வேண்டிய அணுகுமுறையையும்,யுக்தியையும் கட்சி தீர்மானித்தது.

அக்காலத்திய மார்க்சிஸ்டுகள் கெய்ர்னன் உட்பட  இந்திய முதலாளிகள் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.அன்று நிலவி வந்த கருத்து என்னவெனில் பெருமளவில்  தொடர்ந்துவந்த முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவுகளிலும், நிலப்பிரபுத்துவத்திலும் இந்தியாவில்  காலனி ஆதிக்கத்தின் கீழ் சிறகு முளைக்கும் முதலாளிவர்க்கத்திற்கு ,  ஆரோக்கியமான, சீரான முதலாளித்துவ வளர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் இல்லை என்பதுதான்.

“கண்ணுக்கு புலப்படாத தடைகளையும், இறந்தகால சுமையையும் மார்க்ஸ் குறைத்து மதிப்பிட்டார். மாற்றம் கொண்டுவர தடுக்கவியலாத ஆற்றல் கொண்டது முதலாளித்துவம்  எனவும் அவர் கருதினார்  யதார்த்ததில், முதலாளித்துவமும், அதை தொடர்ந்து சோசலிசமும் உள்நாட்டு பின்புலத்தின் ஆழமான தாக்கத்திற்கு உள்ளாகும்.” என்ற கருத்தை கெய்ர்னன் கொண்டிருந்தார் (கெய்ர்னன் எழுதிய ஏகாதிபத்தியமும் அதன் முரண்பாடுகளும் புத்தகம் பக்.62)

இந்த கருத்திற்கு ஆதரவாக “இந்திய முதலாளிகள், ஒட்டு மொத்தமாக இயலாமையை நிரூபிப்பவர்கள்,  அவர்களுக்கு தொலை நோக்குப்பார்வை கிடையாது, உறுதி கிடையாது எதையும் பெரிதாகச் செய்கின்ற பார்வையே அவர்களுக்கு இல்லை” என்று சுதந்திரம் கிடைத்தவுடன் நேரு  சொன்னதை கெய்ர்னன் சுட்டிக் காட்டினார். மேலும் , “இன்னும் 30 வருடங்கள் கடந்தாலும், இந்தியாவின் முதன்மையான தொழில்களில் ஒன்றாக ஜோதிடமே இருக்கும்” என்று அவர் கிண்டல் கலந்து விமர்சித்தார்.

இந்தியாவின் முதலாளித்துவம் ஆச்சரியமூட்டும் வகையில் உறுதி கொண்டது, விரைவாக பரவும்தன்மை உண்டு என்பதை  நிரூபித்துவிட்டது. இந்திய இடதுசாரிகளின் சிதைவிற்கு காரணம் இந்த வர்க்கத்தை குறைத்து மதிப்பீடு செய்து , இதனால் எதுவுமாகாது என்று கழித்துக் கட்டும் போக்கு இருப்பதுதான்.இந்தியாவின் பல்வேறு தீவிர இடதுசாரிக் குழுக்களும்,  இப்பொழுது முளைத்திருக்கும்  மாவோயிஸ்டுகள் உட்பட இந்த மனப்போக்கின் அடையாளங்களே.

இடதுசாரிகள் மத்தியில் முதலாளிவர்க்கத்தை எதிர்பார்ப்போடு கவனித்த மற்றொரு சிந்தனைப் போக்கு இருந்தது. சுதந்திரத்திற்கு முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியில் இடதுசாரி தேசியவாதப் போக்கு இருந்தது. விக்டர் கெய்ர்னனின் சில நண்பர்கள் (அவர்களில் சிலர் கேம்பிரிட்ஜில் இருந்து வந்தவர்கள்) கட்சியினுள்ளும் இந்தப் போக்கைப் பிரதிபலித்தனர். அவர்கள் தேசிய முதலாளிகளையும், அவர்களின் ஆற்றலைக்கொண்டு  நடைபெற்ற தேசிய இயக்கங்களையும் முற்போக்கு தன்மை கொண்டதாக பார்த்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் முதலாளிகள் அரசியலதிகாரத்தை கையிலெடுத்தவுடன், முதலாளிகளுடன் இணைந்து செயல்படவும், அவர்களுடன் ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்ளவும் மேற்குறிப்பிட்ட இடதுசாரிகளில் ஒருபகுதியினர் இழுக்கப்பட்டனர்.“முற்போக்கு தேசிய முதலாளி வர்ககத்துடன்” கூட்டணியை கட்டினர். முன்னாள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் சிபாரிசு செய்யப்பட்ட கோட்பாடு .

ஏகாதிபத்திய நிதிமூலதனத்துடன் உள்ளார்ந்த சச்சரவையும், கூட்டணியையும் கொண்டிருக்கும் இந்திய முதலாளிகளின் இரட்டை குணத்தைப் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு 40 வருடங்கள் பிடித்தது. தராளவாத சலுகைகளைப் பெற்று இந்திய முதலாளிவர்க்கம் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறைத்து மதிப்பிடப்பட்ட அதன் ஆற்றல் இப்போது முழுமையான அளவில் பெருகி ஓடுகிறது . ஆனால், விக்டர் கெய்ர்னன் குறிப்பிட்டதைப்போல, இந்த முதலாளித்துவம், உள்நாட்டு பின்புலத்தின் ஆழமான தாக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளது.

கெய்ர்னன் அவரது ஏகாதிபத்தியமும், அதன் முரண்பாடு களும் என்ற புத்தகத்தில் இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “மேலும், விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி இவைகளில் பெருமைப்படுகிற அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்தியா அதன் பழைய சமூகக் கட்டமைப் பிலிருந்து இன்னும் உடைத்துக் கொள்ளவில்லை, எனினும், இப்பொழுதைய கட்டமைப்பிற்குள் தீர்க்கமுடியாததாக தோன்றுகிற பிரச்சனைகளை அது சந்தித்துவருகிறது”.

இந்தியாவின் முதலாளிவர்க்கத்தின் தன்மைகளை மார்க்சிய முறையில் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது.இந்திய முதலாளிகளைப் பற்றிய மார்க்சிய ஆய்வு முழுமையானதாகவும் நவீனப்படுத்திய முறையிலும்,இருக்கவேண்டும். இன்று, இங்குள்ள சில கல்வியாளர்கள் அத்தகைய ஆய்வுகளை சமர்ப்பிப்பார்கள் என்றும் மற்றவர்கள் எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

இந்திய சமூகத்தில் கோட்பாடுரீதியாகவும் நடைமுறையிலும் வர்க்கப்பிரிவினையோடு மேற்குடி கீழ்குடி என்ற பாகுபாட்ட மைப்பும், புறக்கணிப்பும், ஒடுக்குமுறைகளும் எப்படி பின்னிப் பிணைய நேர்ந்தது, உதாரணமாக  சாதியம்,பழங்குடி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைகள் எவ்வாறு ஒரு பகுதி நிலப்பகுதி முழுவதையும்  சுதந்திரத்திலிருந்தும், வளர்ச்சியிலிருந்தும் ஒதுக்கி தள்ள முடிகிறது என்பதையும் நமது கவனத்திற்கு கொண்டு வருகிறது.

1941 முதல் 1948 முதலான காலத்தில், மையமான இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்ததுடன் அவற்றை தலைமையேற்று இயக்கம் நடத்திய பகுதிகளிலேயே இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேராதரவு கிடைத்துவருகிறது. அவை காலனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், சுரண்டலுக்கு ஆட்படும் கிராமப்புற மக்களின் விடுதலைக்கும் நடத்திய போராட்டம் ஆகும். எந்தப் பகுதியில் கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களையும் இணைத்து, அத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு தலைமையேற்றார் களோ அந்தப் பகுதிகளில் மக்கள் ஆதரவை அவர்கள் பெற்றனர். உதாரணமாக, தெபாகா எழுச்சி (பெங்கால்), வடக்கு மலபார் (கேரளா), பழங்குடியினர் போராட்டம் (திரிபுரா) மற்றும் தெலங்கானா போராட்டம் உள்ளிட்டவை அவற்றில் சில.

கெய்ர்னன் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பராகவும், ஆதரவாளராகவும் இருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் பொதுவாகக் காணப்பட்ட பலவீனங்களைப் போக்குவதற்கான விமர்சன ஆய்வை மேற்கொள்வதிலிருந்து அவர் விலகிட வில்லை. பம்பாயில் கட்சியின் தலைமையகத்திற்கு அடிக்கடி வந்து செல்பவர் என்ற முறையில், அவர் கட்சியின் தலைவர்கள் மற்றும் முன்னணியாளர்கள் மத்தியில் இருந்த தத்துவக் கல்வி மீதான ஆர்வமின்மையை பார்த்து புலம்பினார்.அவர்கள் அனைவரும் காரியவாதிகளாகவும், நடைமுறை சார்ந்தவர் களாகவும் இருந்தனர். இது டீக்கடை பெஞ்சு அறிவாளிகள் துவக்கி வைக்கும் அரசியல் கிசுகிசுக்களிலிருந்தும், நோக்கமில் லாத முடிவற்ற தத்துவ விவாதங்களின் எதிர்வினையாகவும் எற்பட்டிருக்கலாம் என்பதையும் கெய்ர்னன் கவனித்தார் .

“இந்த 8 வருடங்களில், நான் ஒரு தடைவ கூட எந்த சித்தாந்த பிரச்சினைகளையும் விவாதித்ததாக நான் கேள்விபடவில்லை” என்கிறார் கெய்ர்னன். இது கட்சி தலைமையகச் சூழலிலிருந்து பார்க்கும்போது ஒருபகுதிதான் உண்மையாக இருக்கலாம். தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒன்றிணைக்கும் வேலைகளில் கட்சி ஈடுபட்டிருந்த பகுதிகளில் சித்தாந்தமும், நடைமுறையும்  கிளைத்தெழுந்தன . உதாரணமாக ஏற்கனவே கேரளாவில்,  இஎம்எஸ் நம்பூதிரிபாட் கேரளாவின் தேசியம் குறித்த கேள்விகள் பற்றிய ஆரம்பப் படைப்பை எழுதியிருந்தார். அதில் அவர் கேரள முன்னேற்றத்தின் நோக்கில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை பொருத்தியிருந்தார். எனினும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஒருசில பகுதிகளிலேயே தன் மக்கள் ஆதரவுத் தளத்தையும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் கொண்டுள்ளது என்ற உண்மையைக் கணக்கிலெடுத்தால் அது ஒரு குறையே. இன்று கம்யூனிஸ்டுகள் 120 லட்சம் மக்களை ஒருங்கே கொண்டிருக்கும் 3 மாநிலங்களில் அரசை வழிநடத்தி வருகிறார்கள். பாராளுமன்ற அமைப்பில் பணியாற்றுவதன் மூலம் மதிப்புமிக்க அனுபவத்தை கம்யூனிஸ்டுகள் பெற்றுள்ளனர். இந்த அனுபவத்தையும் தத்துவார்த்தமாகப் புரிந்து கொள்வதிலும்,  சோசலிசத்தின் கீழும், பல அரசியல் கட்சிகளைக் கொண்ட சூழலில்  பணியாற்றுவதற்கான  அனுபவங்களையும்  அவர்கள் பெற்று வருகின்றனர்.

பல நாட்களுக்குப் பின்னர், கெய்ர்னன் எனக்கு எழுதிய கடிதத்தில், அக்கால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது மிகக் கடுமையாக விமர்சனத்தை வைத்தேனோ? என்று கேட்டிருந்தார். அந்தத் தலைமுறையின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ள தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் அவர் வியந்து போற்றினார். உண்மையில், 1940ஆம் ஆண்டுகளில், கம்யூனிஸ்டுகள் மக்களுடன் இணைந்து பணியாற்றினார்கள், மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தார்கள் பெரும் தியாகங்களைச் செய்தார்கள். மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளுடன் சிறை சென்ற இங்கிலாந்து கம்யூனிஸ்ட் பென் பிராட்லி உட்பட பெரும்பாலானவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையிலும் இருந்தார்கள்.

இன்றைய இந்தியாவில் இடதுசாரிகள்:

இன்றும் கம்யூனிஸ்டுகள் கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கு அவசியமான நிலச்சீர்திருத்தத்திற்கான போராட்டத்தை தொடர்கிறார்கள். இந்த வகையில், இப்போராட்டங்கள் துவக்கப்பட்ட 1940ஆம் ஆண்டுகளின் நிகழ்ச்சி நிரலை இன்றும் தொடர்கிறார்கள். மேலும் அவர்கள், நில உறவுகளில் தொடரும் சுரண்டலை அகற்றுவதற்கு நிலப்பிரபுத்துவத்தை மட்டுமின்றி, இந்திய சமூகத்தில் தூக்கலாகத் தெரிகின்ற சாதி, சமூக மற்றும் பாலின ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது.

புதிய தாராளவாத முதலாளித்துவம் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதால், சமத்துவமின்மை மேலும் கூர்மையா கியுள்ளது. போர்ப்ஸ் இதழின் சமீபத்திய செய்தியின்படி கடந்த ஆண்டில் 52 ஆக இருந்த டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 69 ஆக உயர்ந்துள்ளது. இது மூன்றில் ஒருபங்கு அதிகரிப்பாகும். கோடீஸ்வரர்களின் வளர்ச்சி கூடுதலாகிக்கொண்டேயுள்ளது. மூலதன ஆதித் திரட்டலின் சில வடிவங்களும் தொடர்கின்றன. புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போரிடுவதுடன், இடதுசாரிகள் மாற்றுக் கொள்கைகளையும் முன்வைக்கிறார்கள்.

சாதியையும் மத வகுப்புவாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட அடையாள அரசியலையும் அம்பலப்படுத்துவதன் மூலம், மூலம் மக்களை ஒன்றுபடுத்த அவர்கள் கடும் முயற்சிகளைச் செய்துவருகிறனர்.

புதிய தாராளமயத்தின் வருகையால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வந்துவிட்டது. அமெரிக்காவுடன் அரசியல் இராணுவக் கூட்டை புகுத்தி யுள்ளது. இது அரசின் உள்நாட்டுக் கொள்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அதிகரித்துவரும் அமெரிக்கச் சார்பினை எதிர்த்தும், இந்திய மக்களுக்கு உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும் சுயேச்சையான வெளியுறவுக்  கொள்கையை இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

நான் கெய்ர்னனின் 90வது பிறந்த நாள் சமயத்தில், அவரது இந்தியாவைப் பற்றிய எழுத்துக்களின் தொகுப்பை புத்தகமாக் கினேன். அடுத்தவருடம்,  இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நாங்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களின் ஒருவரான பாய்ஸ் அஹ்மட் பாய்ஸின் பிறந்தநாள் நூற்றாண்டை கடைபிடிக்கவுள்ளோம். அந்த சமயத்தில், இப்போது பதிப்பில் இல்லாத கெய்ர்ன் மொழிபெயர்த்த பாய்ஸ்-இன் கவிதைகளை மீண்டும் பதிப்பில் கொண்டுவருவோம். அத்துடன், பாய்ஸ் பற்றிய அவரது கட்டுரைகளும், பேட்டிகளும் இணைக்கப்பட இருக்கிறது. இது, இந்தியாவின் உண்மையான நண்பர் விக்டர் கெய்ர்னனின் பணிகளை துணைக்கண்டத்தின் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதாக அமையும்

(பின் குறிப்பு: ஏகாதிபத்தியத்தின் வரலாற்றை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்த வரலாற்று அறிஞர்களில் விக்டர் கெய்ர்னன் முக்கியமானவர். பிரகாஷ் காரட் அவரது மாணவர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்.22 ஆம் தேதி தனது ஆசிரியரின்  நினைவாக  ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்  கலந்துகொண்டு உரையாற்றினார்.  இடதுசாரிகளை அவதூறு செய்ய அவரது உரையை முலாளித்துவ பத்திரிகைகள் திரித்தன. அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம், தவறான பிரச்சாரத்தை முறியடிக்க இது உதவும்.)

– தமிழில் இரா. சிந்தன்

 Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: