மதச்சார்பின்மை: பதுங்கியிருக்கும் அச்சுறுத்தல்


 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாட்களில், பி.ஜே.பி. கட்சியின் உயர் மட்டத் தலைவர்களில் முக்கியமானவரான எல்.கே. அத்வானி, ஒரு இரத யாத்திரையைத் தொடங்கினார்.  அந்த யாத்திரை சென்ற வழி தோறும் இரத்த தடயங்களை விட்டுச் சென்றது. சமீபத்தில் அத்வானி, உமாபாரதியுடன், தனது இரத யாத்திரையை துவக்கிய சோமநாத் ஆலயத்திற்கு அந்த நிகழ்வின் இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாட சென்றுள்ளார். எதேச்சையாக அந்த ரத யாத்திரை நடத்த பி.ஜே.பி.யால் பயன்படுத்தப்பட்ட அயோத்தியில் இராமர் ஆலயம் என்ற பிரச்னை தற்போது நீதிமன்றம் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்கும் தீர்ப்பு வெளியிட்டுள்ளதால் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.  மீண்டுமொருமுறை மத அடிப்படை வாதிகள் அவர்களால் மிகச் சிறப்பாக எதை செய்ய முடியுமோ- அதாவது மதவெறிக் கூச்சலை எழுப்பி அதற்கு கூட்டம் சேர்ப்பது அதனை செய்கின்றனர். கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பி.ஜே.பி. தோற்கடிக்கப்பட்டது என்பது நம்மை ஏமாற்றி விடக்கூடாது.  அவர்கள் தோற்றாலும், அவர்கள் இன்னமும் நமது நாட்டின் சமூக-அரசியல் தளங்களில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். நமது நாட்டின் ஆளும் வர்க்கங்களின் நலன்களை உறுதி செய்து கொண்டிருக்கின்றனர்.

மத அடிப்படை வாதம் மீண்டும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது.  இந்த வளர்ச்சியானது மதச்சார்பின்மை, கலாசாரம், மற்றும் தார்மீக இழைகள் ஆகியவற்றை பல நாடுகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.  மத உணர்வுகளை துண்டிவிடும் பயங்கரவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.  தற்காலத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளே மத அடிப்படைவாதம், மற்றும் பிற்போக்குத் தனம் வளர்வதற்கு உலகம் முழுவதும் களம் அமைத்துக் கொடுக்கிறது.  மத அடிப்படை வாதம் மக்கள் மனதில் உள்ள மத உணர்வுகளை தன்னுடைய பிரிவினை கோஷங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

மார்க்ஸ் தெரிவித்துள்ளது போல், மதத்தின் பெயரால் எழுப்பப்படும் அபயக் குரல், என்பது உண்மையிலேயே அபாயகரமான சூழல் நிலவுவதையும் அந்த அபாயத்திற்கு எதிரான போராட்ட குரலேயாகும்.  தற்போது நிலவும் உலகலாவிய பொருளாதார சிக்கல், சாதாரண மக்களின் மீது அதிகரிக்கும் சுமை ஆகிய சூழலில் மக்கள் தங்களின் இறுக்கத்தை குறைத்துக் கொள்ள ஏதாவது வழிகளைத் தேடுவது என்பது இயற்கையே.  இந்தத் தேடலில், அவர்கள் மதத்தை, ஒடுக்கப்பட்டவனின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகத்தின் இதயமாகவும், ஆன்மாவற்ற உலகத்தின் ஆன்மாவாகவும் பார்க்கிறான் (மார்க்ஸ் மேற்கோள் – மொ-ர்).  மார்க்ஸ் தெரிவிக்கிறார், மதம் என்பது மக்களின் அபினாக உள்ளது ஏனெனில் அது அவர்களுக்கு யதார்த்த உலகிலிருந்தும், செக்கு மாடு போன்று உழலும் வாழ்க்கையிலும் சிறிய நிவாரணம் அளிக்கிறது.

சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.  அந்த ஆராய்ச்சியில், பொருளாதார நிலைமை, மனிதர்களின் மனோநிலை, மற்றும் மதம் பற்றிய ஓர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  பிப்ரவரி மாதத்தில் வெளியிடப் பட்ட ஆய்வறிக்கையில் சமூக-பொருளாதார காரணிகளுக்கும் மனிதர்களின் மனோநிலைக்கும் உள்ள தொடர்பு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  மிதமானது முதல் மிக மோசமான அளவு பணச் சிரமத்திற்கு உள்ளான பெண்கள் இந்த ஆராய்ச்சி காலத்தின் போது, தங்களுக்கு மிகுந்த மன அமைதியின்மையும், மனச்சோர்வும் உண்டாவதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் இத்தகைய பணப் பிரச்னை களுக்கு ஆளாகாத பெண்கள் தங்களுக்கு மனஅமைதியின்மை குறைந்துள்ளதாகவும், தாங்கள் மனச்சோர்வின்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  இந்த ஆராய்ச்சிகள் பெண்களிடம் நடத்தப்பட்டாலும், இது ஆண்களுக்கும் பொருத்தமானதாகும்.  மீண்டும் ஜூலை மாதம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வின் முடிவாக கண்டறியப்பட்டது என்னவெனில், மனச்சோர்வு மற்றும் நிச்சயமற்றத் தன்மை என்பது எங்களை மிகவும் கற்பனாவாதிகளாகவும், எங்களின் மத நம்பிக்கைகளை மிகவும் முரட்டுத் தன்மையுடனும் மாறியுள்ளன என்று தெரிவித் துள்ளனர்.

இதுவே தற்காலத்திய இரஷ்யாவின் அனுபவமாக உள்ளது.  சோவியத் யூனியன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நொறுங்கிய போது, கண்கட்டு வித்தைகளும், போலி விஞ்ஞானமும் செழித்து வளர்ந்தன.  இரஷ்யாவின் பழமைவாத சர்ச மீண்டும் மிகுந்த முக்கியத்துவமும் பிரபல்யமும் அடைந்தது;( புரட்சிக்கு முன்பு இது வெறுத்து ஒதுக்கப்பட்டது  மொ-ர்). இவையனைத்தும் மக்கள் திரளின் ஒட்டு மொத்த குழப்பம் மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றின் காரணமாக நடந்தன. பழைய சோவியத் யூனியனில் அனைவரும் அரசாங்கத்தின் பாதுகாப்பான சூழலில் இருந்தனர், அவர்களுக்கு இருப்பிடம் இலவசமாக வழங்கப் பட்டது.  ஆனால், சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு, ஏராளமான மக்கள் கைவிடப்பட்டனர், அவர்கள் எந்த உதவியும் இன்றி நிராதரவாக விடப்பட்டனர்.  அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை.  அவர்கள் உயிர் வாழ எந்த வழிவகையும் இல்லை.  ஏராளமான மக்கள் மனதில் தாங்கள் கைவிடப்பட்டு விட்டது போன்ற உணர்வு மேலோங்கி இருந்தது.  அத்தகைய ஒரு தருணத்தில், மக்களை ஏமாற்றும் கபடதாரிகள் (நம்மூர் சாமியார்கள் போன்று) இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப் பதாகவும், மத அறவுரைகளும் வழங்கி வந்தனர். இது புண்பட்ட மனதுடன் இருந்த மக்களுக்கு இது சற்று ஆறுதல் போன்று இருந்தது.  தற்போது இத்தகயை போலி விஞ்ஞானிகளுக்கும் புதிய இரஷ்ய அரசுக்கும் உள்ள தொடர்பும், அவர்களை இந்த அரசு வளர்த்ததும் தெரியவந்துள்ளது.

உயரும் மத உணர்வு

கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டிலும் மத உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடுவதை நாம காண முடிகிறது.  சி.எஸ்.டி.எஸ் (சென்டர் பார் ஸ்டெடி ஆப் டெவலப்பிங் சொசைட்டிஸ்- வளரும் சமூகங்களை ஆராயும் மையம்) என்ற அமைப்பு நடத்திய தேசிய கணக்கெடுப்பில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியர்க ளிடையே மத உணர்வு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  மத உணர்வு கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து மதங்களை சேர்ந்த மக்கள் சமூகங்களிலும் பொதுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கும் அந்த கணக்கெடுப்பு  குறிப்பாக, வசதிபடைத்த, உயர் சாதியைச் சார்ந்த உயர் படிப்பு படித்தவர்களிடையே மிக அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கிறது.  நகரத்தில் உள்ள மிகவும் பரபரப்பான ஆத்மாக்களுக்கா, எலக்ட்ரானிக் யுகத்தில் புதிய புதிய வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இ-தர்சனம், இ-பூஜை, மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மத மற்றும் ஆன்ம வழிகாட்டுதல்கள் ஆகியவை அபரிமிதமாக கிடைக்கின்றன.

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கும் மற்றொரு தகவல் என்னவென்றால், இந்தியா முழுவதும் 25 லட்சம் வழிபாட்டு தளங்கள் உள்ளன என்பதும், அவற்றில் பெரும்பாலானவை பொது இடங்களில் கட்டப்பட்டுள்ளன என்பதுமாகும். அதே சமயம் நமது நாட்டில் 15  லட்சம் பள்ளிகளும், 75000 மருத்துவமனைகளும் மட்டுமே உள்ளன. உச்சநீதிமன்றம் சமீபத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வழபாட்டுத் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மாநில அரசுகளை கடிந்து கொண்டிருக்கிறது.  பல சமயங்களில் அரசுகள் இந்த வழிபாட்டுத் தளங்கள் மீது கண்டும் காணாத நிலையை எடுக்கின்றன.  முதலில் சிறு இடத்தில் கட்டப்படும் வழிபாட்டுத்தளம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பொது இடத்தை ஆக்கிரமித்து பெரிய வழிபாட்டு நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

இவற்றைத் தவிர ஏராளமான பாபாக்கள், குருஜிக்கள், மற்றும் ஏராளமான மாந்தீரிகர்கள், தொட்டாலே குணப்படுத்தும் சக்தி படைத்தவர்கள் ஆகியோர்களின் எண்ணிக்கை தற்போது முன்னெப்போதையும் விட அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  பல அரசு நிர்வாகிகளும், பிரபல்யங்களும் இத்தகைய சக்தி வாய்ந்தவர்களை சந்தித்து அவர்களிடம் தண்டனிடுகின்றனர்.  அதன் மூலம் அந்த சக்தி படைத்தவர்களின் புகழ் மேலும் பரவுகிறது. தற்போது இத்தகைய மத விஷயங்களுக்காகவே பிரத்யேகமான தொலைக்காட்சி நிலையங்களும், ஏற்கனவே உள்ள நிலையங்களில் இத்தகைய பிரத்யேக நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.  அச்சு ஊடகமும், தன் பங்குக்கு  மத மற்றும் ஆன்மீக விஷயங்கள் குறித்து சிறப்பு மலர்கள் வெளியிடுகின்றன.  அவற்றை கடைபிடிப்பது குறித்த பல்வேறு அறிவுரைகள் அடங்கிய மலர்கள் அல்லது பகுதிகளை வெளியிடுகின்றன.  ஆகவே நாம்  இந்தியாவில் தற்போது காண்பதெல்லாம் சில விமர்சகர்கள் தெரிவிப்பது போன்று, நமது நாடு பல மதங்களின், மதப் பெரியவர்களின், ஆன்மீக உரையாற்றுபவர்களின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் போன்று உள்ளது.  ஒவ்வொரு குடிமகனும் தனது தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற சரக்கை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

சுற்றுலாத் துறையின் விற்பனை பிரிவின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆந்திர மாநிலம் நமது நாட்டின் சுற்றுலாத் தளங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது.  கோயில் நகரமான திருமலைக்கு (திருப்பதி) ஆந்திரா நன்றி சொல்ல வேண்டும்.  நமது நாட்டின் சுற்றுலா பற்றிய ஒட்டு மொத்தமாக ஆய்வு செய்தால், பாக்கேஜ் டூர் என்றழைக்கப்படும், பல தளங்களுக்கான சுற்றுலாவில் பாதிக்கு மேற்பட்டவை மத ரீதியான சுற்றுலாக்களாகும்.  பொது இடங்களில் கட்டப்படும் வழிபாட்டுத் தளங்களை கட்டுப்படுத்தத் தவறும் மாநில அரசுகள், மத சுற்றுலாக்களை ஊக்குவிப்பதில் முன்னணி பங்கு வகிக்கிறது.  வழிபாட்டு தளங்களின் விரிவாக்கத்தை அரசுகள் செய்கின்றன.  வழிபாட்டு தளங்களுக்கு புதிய கட்டமைப்பு வசதிகள் – நல்ல சாலை வசதிகள், தங்குமிடங்கள், ஏனைய வசதிகள் ஆகியவை செய்யப்படுவதும் ஏற்கனவே உள்ளவைகள் உயர்தரமாக்கப் படுவதும் நடைபெறுகின்றன.  ஆந்திராவில் உள்ள கனி பாளையம் கோயிலும், வேலூரில் உள்ள தங்கக் கோயிலும்  – இவையிரண்டும் திருப்பதியிலிருந்து 100 கி.மீ. சுற்றளவில் உள்ளன  ஆகியவற்றை வளர்ப்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

மதங்களின் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவது என்பது, நமது நாட்டின் மதச்சார்பின்மை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றாலும், அவ்வாறு தலையிடுவதை கலாசார வளர்ச்சியின் அடையாளமாக கொள்ளப்படுகிறது. மதத்தையும் கலாசாரத்தையும் ஒன்றே என்று சமப்படுத்தப் படுகிறது.  இது நமது நாட்டில் பெரும்பான்மை மதத்தின் வடித்தை பெறுகிறது. இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சமீபத்தில் வெளி வந்துள்ள பல திரைப்படங்களை பார்த்தால் புரியும், நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பது என்பதன் அர்த்தமாக கற்பிக்கப்படுவது, இந்து மத கலாசாராம் மற்றும் பாராம்பரியமாகும். மத விஷயங்களில் அதிகமான ஆர்வமும், இந்திய கலாசாரத்திற்கும், இந்து கலாசாரத்திற்கும் வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை ஆகியவற்றை மத அடிப்படைவாதிகள் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம்

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி, உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி மக்களின் வாழ்விற்கும், எதிர்பார்ப்பு களுக்கும் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.  ஆளும் வர்க்கங்கள் இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற சில தந்திரங்களை செய்கின்றன.  இந்தப் பொருளாதார நெருக்கடியே அவர்களின் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவேயாகும்.  ஆனால், இதிலிருந்து ஆளும் வர்க்கங்கள் தங்களை மீட்க இந்த சுமை முழுவதையும் சாதாரண மக்கள் தலையில் ஏற்ற எத்தனிக்கின்றனர்.  வேலை பாதுகாப்பின்மை ஒரு ஒப்பந்தக் கூலிக்கு எந்தளவுக்கு யதார்த்தமோ அந்தளவுக்கு ஒரு தகவல் தொழில் நுட்ப வல்லுனருக்கும் பொருந்தும்;.  மத்திய தர வர்க்கம் தனது சேமிப்புகளை ஊக வாணிகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.  இந்த சூழலில் மக்கள் தங்களின் எதிர்காலம் குறித்தும், தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் மேலும் மேலும் கவலை கொள்வது மிகவும் இயற்கையானது. இந்த மனக்கவலை அவர்களை மதங்களை நோக்கி ஓட வைக்கிறது.  அவர்களின் இந்த மனநிலையை சாமியார்களும், பூசாரிகளும், இதர மத அடிப்படை வாதிகளும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மக்கள் வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு குறித்து மிகவும் கொந்தளித்து வெறுப்புணர்வு கொள்கின்றனர். காலனியாதிக் கத்தின் போது அதற்கெதிராக மக்களை திரட்ட மதங்களும் கலாசாரமும் பயன்படுத்தப்பட்டன, தற்போது அவை மக்களின் கோபத்தினை குறைக்கவும், மக்களை பிளவுபடுத்தவும் பயன்படுத் தப்படுகின்றன.  இடதுசாரிகள் மற்றும் முற்போக்குவாதிகளின் குறைந்த அளவிலான செல்வாக்கு மற்றும் அவர்களின் குறைவான வீச்சு இருப்பதை பல நாடுகளிலும், பிற்போக்கு வாதிகளும், மத அடிப்படை வாதிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  பல ஐரோப்பிய நாடுகளில் வலது சாரி கட்சிகளின் வெற்றியும், அமெரிக்க நாட்டில், பல விருந்து கூட்டங்களின் தாக்கமும் பிற்போக்குகளின் வளர்ச்சியை காட்டுகின்றன.  இதன் காரணமாகத்தான், இஸ்லாமிய பெண்கள் படுதா அணிவதற்கு தடையும், பிரான்ஸ் தேசத்தி லிருந்து ரோமா நாடோடிகள் வெளியேற்றப்படுவதும் இந்த பிற்போக்கு வாதிகள், மற்றும் அடிப்படைவாதிகள் ஆகியோர் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை அடிப்படைவாதிகள் மதத்தையும் மதக் குறியீடுகளையும் தங்களின் அரசியல் நோக்கங் களுக்காக பயன்படுத்துகின்றனர் என்பது நிருபணமாகியுள்ள உண்மையாகும்.  இவை போன்ற பல் வேறு விஷயங்களில் அயோத்தி விஷயம் ஒன்று.  சமீபத்தில் 2009 தேர்தலில் கூட இந்துத்துவா வாதிகள் மக்களை திரட்ட யக்ஞங்களை நடத்தினார்கள் என்பது தெளிவு.  மீரா நந்தா என்பவர் எழுதி சமீபத்தில் வெளியிட்டுள்ள புத்தகமான கடவுள் சந்தை: உலகமயம் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்கி யுள்ளது என்ற புத்தகத்தில் நமது நாட்டில் மத உணர்வு உயர்வது குறித்தும், அதனை அரசியலுக்கு எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறது.

தாராள சந்தையும் அடிப்படை வாதமும்.

வழக்கமான அடிப்படைவாத சக்திகளான, ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி., பஜ்ரங்தள், மற்றும் ஜமாத்-இ-உலிமா போன்ற அமைப்புகள் தவிர பல புதிய அடிப்படைவாதக் குழுக்கள் இந்த கால கட்டத்தில் உதயமாவதை நாம் காண்கிறோம்.  அவற்றில் ஒன்று தான் வாய்ஸ் ஆப் இந்தியா (இந்தியாவின் குரல்) என்ற பெயரில் தொடர்ந்து பல்வேறு புத்தகங்களை பதிப்பித்து வருகின்றது. தங்களை பக்தி சத்திரியர்கள் என்று அழைத்துக் கொள்ளும் இவர்கள் கடுமையான இஸ்லாம் வெறுப்பு மற்றும் கிருத்துவ வெறுப்பு உமிழும் பிரச்சாரங்களை தங்களின் எழுத்துக்களினால் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஆர்.எஸ். எஸ்-ஐ விட வலதுசாரிகள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அனைத்து தர்மமும் (மதமும்) இணைந்து வாழலாம் என்ற கொள்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர்.  அவர்களைப் பொறுத்தவரை கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் தரும சிந்தனைகள் கிடையாது மாறாக அவை அசுர சிந்தனைகள் என்கிறது.  வேடிக்கையான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த அமைப்பானது அமெரிக்காவின் பிற்போக்கு அமைப்புகளோடு நல்ல உறவை பேணுகிறது. அந்த அமெரிக்க அமைப்புகளின் முஸ்லீம் எதிர்ப்பு, தாராள கட்டுப்பாடற்ற சந்தை போன்ற கட்டுரைகளை தொடந்து தங்கள் வெளியீடுகளில் பதிப்பிக் கின்றன.

மீரா நந்தா தனது புத்தகத்தில் பழைய சுதந்திரா கட்சியை புதுப்பிக்கும் திட்டம் குறித்தும் விவரிக்கிறார்.  அந்த கட்சியின் தத்துவார்த்த நிலையை புதுப்பிப்பதற்கான முயற்சியை அவர் சுட்டிக் காட்டுகிறார்.  இந்த யோசனையின் பின்னால் இருப்பவர்கள் நமது நாட்டின் தகவல் தொழில் நுட்பத்தின் இரு பெரும் ஜாம்பவான்களான இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், எம்பாசிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியுமான, ஜயத்திரத்தி ராவ் ஆகியோர்களாகும்.  அவர்கள் அடிப்படை யில் புதிய தாராள மயக் கொள்கையின் தத்துவமான, தனி மனிதர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு அரசின் குறைந்த பட்ச தலையீடு என்பதில் அசையா நம்பிக்கை உள்ளவர்கள்.  அவர்கள் இவற்றை உறுதி செய்யும் அரசியல் கட்சிக்கு எத்தனை கோடி ரூபாய்கள் வேண்டுமானாலும் அள்ளிவிட தயாராக உள்ளனர்.  ஆனால், இந்தக் கொள்கை மேடையிலிருந்து தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட இவர்கள், பல்வேறு விதமான என்.ஜி.ஓக்களையும், சிந்தனைவாதிகளையும், தங்களின் தத்துவத்தை பரப்புவதற்கு தேர்ந்தெடுத்து, அரசின் கொள்கை முடிவுகளில் திறந்த தாராள சந்தை கொள்கைகளை அமல்படுத்த களம் அமைக்கின்றனர்.  அவர்களின் இந்த தாகத்தால் அவர்கள் பி.ஜே.பி கட்சியுடன் இணைந்து செயலாற்றினர், குஜராத் கலவரங்கள் நடைபெறும் வரை.  அவர்கள் மத அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் என்றாலும், அவர்கள் உலகத்தை நியாயமற்ற முறையில் பார்க்கப்படும் மத வாதிகளின் பார்வையை வெளிப்படையாக எதிர்ப்பதில்லை.  அந்நாளில் எவ்வாறு சுதந்திரா கட்சி மத வாத ஜனசங்கத்துடன் இணைந்து செயல்பட்டதோ அதைப்போன்ற நடைமுறைகளை இவர்களும் கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு குழுக்களும், சங் பரிவார் அமைப்பிற்கும் பொதுவான பார்வை ஒன்று உள்ளது. அது யாதெனில் கட்டுப்பாடற்ற சந்தை மற்றும் இந்து மதம் ஆகியவை அனைத்தையும் விட உயர்ந்தவை என்ற பார்வை. அவர்களிடையே உள்ள வேறுபாடு என்பது அவர்கள் வலது சாரி கொள்கைகளை கடைபிடிக்கும் வேகத்தில் உள்ள வேறுபாடு மட்டுமே.  அவர்கள் மக்களின் அதிருப்தியின் மீது தங்கள் வேட்டைகளை நடத்துகிறார்கள், ஆனால் அந்த அதிருப்திக்கு அடிப்படையான காரணமாக இவர்கள் விரும்பும் கொள்கைகளே. இதன் மூலம் அவர்கள் மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்துகிறார்கள்.

உலகமயம் என்பது பொருளாதார சுரண்டல் மட்டுமல்ல, மாறாக ஒற்றைக் கலாசாரமும் உள்ளடக்கியதாகும்.  வலதுசாரி வெறியர்களைப் பொறுத்தவரை உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளால் அவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை, மாறாக அந்த உலகமயத்துடன் வரும் கலாசார தாக்குதல் குறித்து மக்களின் உணர்ச்சிகளை விசிறி விடுகின்றனர்.  அதற்கு மதத்தை பயன்படுத்துகின்றனர். இது ஆளும் வர்க்கங்களுக்கு பயன்படுகின்றது.  ஏனெனில் அவர்களின் பொருளாதாரக் கொள்கையின் ஆணி வேர், அடிப்படை தாக்குதலுக்கு உள்ளாவதில்லை.  ஆளும் வர்க்கங்கள் கடைபிடிக்கும் பொருளா தார கொள்கைகள் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியால் அவற்றின் ஆட்சிமைக்கு ஏற்படும் சவால்களை சந்திக்க இத்தகைய வலதுசாரி அடிப்படைவாதிகள் வளர்வதை விரும்பு கின்றனர், ஏனெனில் அவர்களின் ஆட்சிமை இதன் மூலம் இழக்கப்படவில்லை.  பாசிசமும், ஹிட்லரும் நம்மால் மறக்க முடியாத உதாரணங்களாகும்.  அவர்கள் தங்களின் ஆட்சி பீடத்தை காப்பாற்றிக் கொள்ள வெளிப்படையாகவே மக்களின் மத உணர்வுகளை வளர்த்தனர், அதன் மூலம் வலது சாரி அடிப்படைவாதத்திற்கு உணவிட்டு வளர்த்தனர், இருப்பினும் அவர்கள் வெளியில் வலது சாரி அமைப்புகள் வளர்வதற்கு எதிராக முதலைக் கண்ணீர் வகுத்தனர்.

சில மேற்கத்திய சமூகவியலாளர்கள் , மத உணர்வு மற்றும் மதம் ஆகியவை நவீன தொழில்கள் வளரும் போது முடிவுக்கு வரும் என்றும், உண்மையான மதச்சார்பின்மை மலரும் என்றும், மதம் ஆலை வாயிலில் முடியும் என்றும் ஆருடம் தெரிவித்தனர்.  ஆலை வாயிலுக்குள் கோயில் கட்டுவதற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரண நாடாக திகழ்கிறது. நமது நாட்டில் உள்ள ஒரு நடப்பு என்னவென்றால், மிகப் பெரிய ஆலை முதலாளிகள் புதிய கோயில் வளாகங்களை கட்டுவதும், ஏற்கனவே உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தாராளமாக நிதி அள்ளிவிடுவதும் காணக் கிடைக்கிறது(இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களில் உழைக்கும் தொழிலாளர்களின் கூலியை உயர்த்த மட்டும் விரும்ப மாட்டார்கள்).  வேறு சில சமூகவியலாளர்கள், ஏராளமான மதங்களும் அவற்றின் முரண்பட்ட தத்துவங்களும் மக்களை வெறுப்படைய வைத்து அவற்றின் போலித்தன்மையை உணர்ந்து கொள்ள வைக்கும் என்று  தெரிவிக்கின்றனர்.  இதுவும் தவறானது என்று நிருபண மாகியுள்ளது.  மேலும். பல புகழ்பெற்ற அறிஞர்களும், விஞ்ஞானி களும் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாக கடைபிடிக் கிறார்கள்.  இவர்கள் கடவுள் நம்பிக்கை மட்டுமல்லாது பல சாமியார்களின் பின்னாலும் நம்பிக்கை வைத்து அலைகிறார்கள்.

நமது கல்வி திட்டத்தின் குறைபாடு

இந்த இரட்டை தன்மைக்கு அடிப்படை நமது கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடாகும்.  நமது கல்வித் திட்டத்தில் அடிப்படை வாத சக்திகள் இருப்பதும், தங்களின் தத்துவார்த்து வத்தை வளர்த்துக் கொள்கின்றனர் என்பது உண்மையின் ஒரு பக்கமே.  விஞ்ஞானப்பூர்வ, ஜனநாயகத் தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை உள்ளடங்கிய கல்வியை அளிப்பதில் அரசு காட்டும் முனைப்பின்மையே இதற்கு மற்றொரு காரணமாகும். நமது கல்வி திட்டத்தின் அழுத்தம் என்பது நமது மனித வள சக்தியை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தக்கவாறு வார்த்தெடுப்பதும் அதன் மூலம் அபரிமித லாபமீட்டுவதாகவும் உள்ளது.  கல்வியின் இதர பரிமாணங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கங்களின் சிந்தனைக்கு கட்டுப்பட்டு நடக்கும் படியான வடிவமைக்கப் பட்டுள்ளது.  எந்த ஒரு பொருள் குறித்தும் விமர்சனப் பூர்வமான சிந்தனை என்பது கூடிய மட்டும் மழுங்கடிக்கப் படுகிறது.  ஏனெனில், அவ்வாறு விமர்சனப் பூர்வ பார்வை இறுதியில், உற்பத்தி உறவுகள் குறித்து புரிந்து கொள்வதற்கும், அதன் மூலம் தற்போது நிலவும் வர்க்க உறவுகளுக்கு புதிய சவால்களாக அமையும் என்பதையும் அதன் மூலம் தங்களின் ஆளுமை ஆபத்திற்குள்ளாகும் என்பதையும் ஆளும் வர்க்கங்கள் உணர்ந்து கொண்டுள்ளன. ஆனால், மார்க்சியம் போதிப்பது போன்று, சில காலம் கழித்து, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உற்பத்தி உறவுகளில் மாற்றம் கட்டாயம் தேவை.  இந்த முயற்சி விரைவாக முன்னேற, கல்வி மற்றும் மதம் உள்ளடக்கிய கலாசாரம் மிக முக்கியமான ஒரு போராட்ட களமாக மாறும்.

லெனின் தெரிவித்தது போன்று :

“ஓய்வில்லாமல் சுரண்டப்பட்டும் மற்றும் கூட்டமாக கொடுரமாக நடத்தப்படுகிற உழைப்பாளிகளின் மீது கட்டப்பட்ட  சமுதாயத்தில்  மதமாச்சரியங்களை வெறும் பிரச்சாரத்தின் மூலம் மட்டும் போக்கி விடலாம் என்று எண்ணுவதை விட முட்டாள் தனம் வேறில்லை.  அது முதலாளித்துவ குறுகிய மனப்பான் மையின் விளைவாகும்.  மதம் என்ற நுகத்தடி மனித சமூகத்தின் மீது அழுத்திக் கொண்டிருப்பது என்பது சமுதாயத்தின் உள்ளே அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு மற்றும் விளைவாகும்.”

லெனினிடம் மதம் எவ்வாறு தனது பிடியை மக்கள் திரள் மீது தக்க வைத்துக் கொள்கிறது என்று கேள்வி எழுப்பியபோது, முதலாளித்துவ முற்போக்குவாதி, கலகக்காரன் மற்றும் முதலாளித்துவ பொருள்வாதி  மக்களின் அறியாமை என்று தெரிவிக்கிறார். ஆகவே, மதங்கள் வீழட்டும். மத மறுப்பு நீண்டு வாழட்டும்.  கடவுள் மறுப்பு கொள்கையை கடைசி குடிமகன் வரை கொண்டுசெல்வதே நமது தலையாயக் கடமை என்று தெரிவிக்கின்றனர்.  மார்க்சிஸ்ட்டுகளோ இது உண்மையில்லை, இது மேலோட்டமான பார்வை, இது குறுகிய முதலாளித்துவ சிந்தனையின் வெளிப்பாடு.  இது மதங்களின் பிறந்ததிற்கான காரணத்தை நன்கு தெளிவு படுத்துவதில்லை.  இது பொருள்முத வாத அடிப்படையில் பார்ப்பதற்கு பதிலாக கருத்து முதல்வாத அடிப்படையில் பார்க்கிறது.  நவீன முதலாளித்துவ நாடுகளில் இதன் வேர்கள் சமுதாயத்தில் உள்ளன.  மதத்தின் மிக ஆழமான ஆணி வேர் என்பது பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மோசமான பொருளாதாரச் சூழல் ஆகும்.  மேலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் சாதாரண உழைப்பாளி மக்கள் முதலாளித்துவத்தின் குருட்டு தாக்குதலுக்கு உள்ளாகி அனாதரவான நிலையில், கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாத காயங்களை இந்தத் தாக்குதல் ஏற்படுத்தும் நிலையில், யுத்தம், மற்றும் பூகம்பம் போன்றவற்றினால் ஏற்படும் சேதங்களைப் போன்று ஆயிரம் மடங்கு அதிகமான தாக்குதலை ஏற்படுத்தும் போது ஏற்படும் அச்சம் கடவுளைப் படைக்கிறது.  மூலதனத்தின் குருட்டு சக்தியின் மீதான அச்சம், – குருட்டு என்று தெரிவிப்பது ஏனெனில் அது மக்கள் திரளால் முன்கூட்டியே எதிர்பார்க்க முடியாதது, அது ஒரு பாட்டாளி மற்றும் சிறு வணிகரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் காயத்தை ஏற்படுத்தும் என்று அச்சுறுத்துகிறது, பிறகு உண்மையில் திடீரென, எதிர்பாராதவிதமாக, விபத்தாக, அழிக்கிறது, தகர்க்கிறது, பிச்சைக்காரனாக்குகிறது, விலைமாதர்களை உருவாக்குகிறது, உணவு இன்மையால் உயிர்களை பறிக்கிறது, இவையே நவீன மதத்தின் ஆணி வேராகும்.  இதனை ஒவ்வொரு பொருள்முதல்வாதியும் மனதில் கொள்ள வேண்டும்.  இல்லையேல் அவன் பொருள் முதல்வாதப் பயிற்சியில் குழந்தை நிலையில் நிற்பவனாகவே கருத வேண்டியிருக்கும்.  எந்தக் கல்வி புத்தகமும் மதத்தை மக்களின் மனங்களிலிருந்து நீக்க முடியாது.  ஏனெனில் அவர்களின் அறிவு முதலாளித்துவ கடும் உழைப்பால் நசுக்கப்பட்டிருக்கும், மேலும், அவர்கள் முதலாளித்துவத்தின் குருட்டு அழிவு சக்தியின் தயவின் பால் இருக்கும்வரை, மக்கள் திரள் தாங்களாகவே மதங்களின் ஆணிவேரை கண்டு அதற்கெதிராக போராடாதவரை, மூலதனத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து ஒன்றிணைந்து, திட்டமிட்டு, உணர்வு பூர்வமாக போராடாதவரை, மதங்களை அழிக்க முடியாது.

வலது சாரி அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கு எதிரான நமது போராட்டம் என்பது உண்மையில் மூலதனத்தின் குருட்டு சக்திக்கு எதிரான போராட்டம், அதன் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம், அதன் கலாசாரம் மற்றும் தத்துவத்திற்கு எதிராகப் போராட்டம், தற்போது நிலவும் உற்பத்தி உறவுகளுக்கு எதிராகப் போராட்டம்.

அக் 04-10 பீப்பிள்ஸ் டெமாக்ரசியில்

வந்த கட்டுரையின்  தமிழாக்கம்

தமிழில்: தூத்துக்குடி – ஆனந்தன்.

–சு.அருண்குமார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s