மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முதலாளித்துவப் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும்


 

(மனிதன் இயற்கையை மீண்டும் மீளாமல் கெடுக்கத் துவங்கியது 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலி ருந்துதான். அது துவங்கிய இடம் தொழிற்புரட்சி கண்ட லண்டன் மாநகரம் என்றே சொல்ல வேண்டும். தேம்ஸ் நதியை சாக்கடையாக மாற்றியதை எதிர்த்து மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி 1840-களில் குரல் கொடுத்தார். அங்கு வாழ நேர்ந்த ஏங்கெல்ஸ் சுற்றுப்புறச் சூழலைக் கெடுப்பது முதலாளித்துவத்தின் இயல்பு, அதற்காக இயற்கை சும்மாவிடாது மனிதனை பழிவாங்கி விடும் என எச்சரித்தார். ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில் விஞ்ஞானம் இன்று போல் வளரவில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறை நீடித்தால் ஆபத்து என்பது சமூக உணர்வாக ஆகவில்லை, இன்று நிலைமை வேறு.

இன்று, கதிர்வீச்சு அபாயத்திலிருந்து, கரியமில வாயு உண்டாக்கும் தட்ப வெப்ப மாற்றம் , ரசாயான கழிவால், நீர், நிலம் கெடுவது வரை சரி செய்யும் தொழில் நுட்பங்களை மானுடம் கண்டுவிட்டது. பொருள் உற்பத்தி பெருக்க முனைகிற பொழுது  இயற்கையைப் பாதிக்கும் ,  எதிர்பாரா விபத்துக் களிலிருந்து, பாடம் கற்றுக்கொள்ளவும், மானுடம் தவறவில்லை. கழிவுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களை மானுடம் கண்டுபிடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. உயிரியல், தாவரவியல், வேகமாக வளர்ந்து, புதிய சுத்தமான உற்பத்திமுறைகள் உருவாகி வருகின்றன. இவை எல்லாமிருந்தும், மானுடம் இருக்குமா என்ற கேள்வி ஏன் எழுகிறது? இதைச் சுற்றி நடக்கும் தத்துவச் சண்டையை கூர்ந்து கவனித்தால் இரண்டு முகாம்கள் மோதுவதை காணலாம். இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை, சந்தை அமைப்பு, பணக் குவியல் மோகம், மேற்கத்திய ஆடம்பர வாழ்வு, மேற்கத்திய உணவுப் பழக்கம், சுரண்டலுக்கு சுதந்திரம், மோசமான லாப நோக்குடன்  தொழில் நுட்பங்களை வர்த்தக நோக்குடன் மறைப்பது, இவைகளே இயற்கை கெடுவதற்கு காரணம் என்ற உண்மை மக்களை நெருங்கவில்லையே என்று கவலை கொள்கிற முகாம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் மானுட உழைப்பும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் செலவீனமாக கருதப்படுவதால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த உண்மையை மறைக்க முதலாளித்துவ நிபுணர்கள், மக்கள் தொகை பெருக்கத்தை குறை கூறுகிறார்கள், 500 கோடி மக்களை பூமி தாங்காது. இயற்கையை கெடுப்பது புதிய தொழில் நுட்பங்களே என்று விஞ்ஞானத்தை குறை கூறுவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விரயங்களை மறைப்பது, மானுடனின் சமூக உணர்வை மழுங்கடிக்க ஒரு தத்துவ விளக்கமே தருகிற எதிர் முகாம்.

2010 அக்டோபரில் ஐ.நா. சார்பில் ஜப்பானில் நடைபெற்ற (பயோடைவர்சிட்டி) இயற்கையின் பன்முகத்தன்மையை காக்க நடந்த கருத்தரங்கின் முடிவாக 20-10-2010 அன்று வெளியிட்ட அறிக்கை  இந்த உண்மையை சுட்டிக் காட்டுகிறது. 2002-இல் கூடிய இதே மாநாடு  2010-க்குள் சில இலக்கை தீர்மானித்து நிறைவேற்ற ஐ.நா. சபை உறுப்பினர் நாடுகளின் அரசுகளுக்கு ஆலோசனை கூறியது. 2010-இல் அதை பரிசீலிக்கிற பொழுது எடுத்த எந்த முடிவையும் நிறைவேற்ற அரசுகள் அக்கறை காட்டவில்லை. அரசியல் உறுதி காட்டாமல், லாப வெறிக்கு அரசுகள் பணிந்து போயின என்பதையும் அந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது. (hவவயீ://றறற.வநநறெநb.டிசப பார்க்க)  இந்த அறிக்கை தாவரங்கள், மற்றும் ஜீவராசிகளின் பன்முகத்தன்மைகளை காப்பதின் மூலம் லாபம் சம்பாதிக்க முடியுமென்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கையில் ஐ.நா.வின் நல்லெண்ணம் வெளிப்பட்டாலும் தீர்விற்கு இது உதவுமா என்ற சர்ச்சை சூடாக நடைபெறுகிறது. இந்த தத்துவப் போரில் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டவில்லை யானால் பூமி இருக்கும் ஆனால் மானுட சமூகமிருக்காது. டினோசரஸை  அழித்தது போல் மானுட சமூகத்தையும் இயற்கை அழித்துவிடும் என்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மேலை நாட்டு அறிஞரின் கட்டுரையைத் தழுவி பேராசிரியர். ஆர். சந்திரா நமது ஆழ்ந்த சிந்தனைக்கும், செயலுக்கும் வழி காட்டுகிறார்.)

– ஆசிரியர்

இப்பூவுலகைப் பற்றி கவலைப்படுகின்றவர்கள், தற்போது முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது வெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. மாறாக அடிப்படையாக சமூக, பொருளாதார அமைப்பில் மாற்றம்  கொண்டு வர வேண்டும் என்பதுடன் இணைந்ததாகும். 2009-இல் கோபன்ஹேகனில் நடைபெற்ற உலக பருவநிலை ஒப்பந்தம் பற்றி எந்த முடிவும் எடுக்க இயலவில்லை. உலகத்தலைமை தோற்றுவிட்டது என்று கூறப்பட்டது. மாறாக, அதற்கு காரணம், முதலாளித்துவ அமைப்பு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண இயலாததாக இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இயற்கையை பற்றிய புரிதலும், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க முதலாளித்துவ அமைப்பினால் இயலாத நிலையும், பூமி எதிர்காலத்தில் எப்படி இருக்குமென்பதையே கேள்விக்குறியாக் கியுள்ளது. 2009-இல் பிடல் காஸ்ட்ரோ இதுபற்றி கூறுகையில், சமீபகாலம் வரை, எதிர்கால உலக சமூகம் பற்றிய விவாதம் தற்போது நாம் வாழ்கின்ற சமூகம் என்பதைச் சுற்றியே அமைந்துள்ளது. ஆனால், இன்று மனித சமூகம் எப்படி நீடித்திருக்க இயலும் என்பது விவாதப் பொருளாக மாறிவிட்டது. என்கிறார்.

சுற்றுச்சூழல் நெருக்கடி:

பல்லாயிரம் ஆண்டுகளாக சுற்றுச்சூழலால் மனிதர்கள் நாசமாக்கி வந்துள்ளதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன.  காடுகள் அழிப்பு, மண்அரிப்பு, மண்ணின் அமிலத்தன்மை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஆண்டாண்டுகளாக இருந்து வந்துள்ளன.

கிரேக்க அறிஞர் பிளேட்டோ, கிரிட்டாசில், இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். என்ன ஆதாரம் வேண்டும்,ஏதென்ஸ் நகரம் முன்பிருந்தது போல தற்போது இல்லை…. மண்வளம் அழிக்கப்பட்டு பூமி எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறது…. பிளேட்டோ எழுதியதற்கும், இன்றைய நிலைக்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன?  தொழில்நுட்பம் சுற்றுச்சூழலை வேகமாகவும், கூடுதலாகவும் நாசமடையச் செய்கிறது. இன்றைய முதலாளித்துவ, அமைப்பு சுரண்டலுக்கு எல்லை இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பசுமையக வாயு வெளியேற்றத்தால் பூமி சூடாகி வருவது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளாக பிரித்து, கடந்த 130 ஆண்டு காலத்தில் பதிவாகியுள்ள வெப்பத்தை ஆராயும் பொழுது, வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது தெரிகிறது. இந்த 130 ஆண்டுகளில் 2009-ஆம் ஆண்டு வெப்பம் மிக அதிகமாக இருந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றம் என்பது சீராக, ஒரே மாதிரியாக ஏற்படுவதில்லை. மாறாக, பலவிதமான விளைவுகளை வெகுவேகமாக ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. பிரச்சனை தீவிரமடைந்து வருவது தொடர்பான பல ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

¨              ஆர்ட்டிக் கடல் பகுதியில் பனி உருகி, வெண்பனி மீதான சூரியனின் பிரதிபலிப்பு குறைந்துள்ளது. 1970 முதல் வானிலை துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2007-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, ஆர்ட்டிக் கடல் பகுதியில் பனி 40 சதம் குறைந்துள்ளது என பதிவாகி யுள்ளது.

¨              வெப்பம் அதிகரித்து, கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிக் பகுதியிலுள்ள பனி விரிப்புகள் கிழிந்து, உடைந்து கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடல் மட்டம் 1-2 மீட்டர் வரை உயரும்பொழுது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒரு நூற்றாண்டில் கடல் மட்டம் சில மீட்டர்கள் உயர்வது என்பது சகஜம். ஆனால் தற்போது 5 மீட்டர்  வரை கடல் மட்டம் உயர்ந் துள்ள பகுதிகளில் வசிக்கும் 40 கோடி மக்கள், 25 மீட்டர் வரை உயர்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை என்ற கேள்வி எழுகிறது.

¨              உலகிலுள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகினால், இந்த நூற்றாண்டு இறுதியில் அவை முற்றிலுமாக காணாமல் போய்விடும். பூமி வெப்பத்தினால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இமயமலை பனிப்பாறைகள் உருகினால் ஆசியக்கண்டத்தில் வசிக்கும் மக்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். ஒருபுறம் வறட்சி, மறுபுறம் பனிப்பாறைகள் உருகி கட்டுக்கடங்கா வெள்ளத்தை கடந்த சில ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். 2009-இல் ஆஸ்திரேலியா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, வடஇந்தியா கடுமையான வறட்சியை எதிர் கொண்டன.

¨              கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கையில் பயிர் உற்பத்தி பாதிக்கிறது. இரவு நேர வெப்பம் அதிகரித்து, தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் நெல் உற்பத்தி குறைய ஆரம்பித்து விட்டது.

¨              பல  உயிரினங்கள் பருவநிலை மாற்றத்தினால் வேகமாக குடிபெயர இயலாமல் அழிந்து வருகின்றன. இவ்வாறு மறையும் உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

¨              கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரிப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தவிர, தொழிற் சாலைகள் வெளியேற்றும் வாயு, கழிவுகளால் காற்று, நீர் மாசுபடுவது அதிகரித்துள்ளது.

¨              மேலும், பாட்டில்கள், உடைந்த பல்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் என கடலில் வீசப்படும் குப்பைக் கூளங்கள் கடல்நீரின் தரத்தை பாதிக்கின்றன.

¨              உலகிலேயே உயிரி பன்முகத்தன்மைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற உஷ்ணக்காடுகள்(இந்தியா உட்பட) அழிந்து வருகின்றன. காடுகள் அழியும்போது, கார்பன் டயாக்சைடு வெளியேற்றம் அதிகரித்து உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 115 பாலூட்டிகள், 2800 வகை செடிகள், 17000 வகைப் பறவைகள், மிருகங்கள் அழியும் உயிரினங்கள் பட்டியலில் இருப்பதாக 2008-ஆம் ஆண்டின் கணக்கின்படி தெரிய வந்துள்ளது.

பிரபல பருவநிலை ஆய்வாளரும், ‘நாசா’ இயக்குநராகவும் பணியாற்றும் ஜேம்ஸ் ஹான்சன், ‘நாகரிகம் எங்கு வளர்ச்சி அடைந்துள்ளதோ, அந்த பூமி இன்று மீட்க இயலாத அளவுக்கு நாசமடைந்துள்ளது. எரிபொருள் தேவை அதிகரித்து, பல இயற்கை வளங்கள் அழிகின்றன. சுற்றுச்சூழல், அறிவியலில் சமீப கால வளர்ச்சிப்போக்குகள் சில எல்லைகள்’ பற்றி விவரிக்கின்றன. பருவநிலை மாற்றம், கடல் அமிலமயமாதல், ஓசோன் படலம் சிதைவு, உயிரி ரசாயனங்களின் அளிப்பில் மாற்றங்கள், உலகின் நன்னீர் பயன்பாடு, நில பயன்பாட்டில் மாற்றங்கள், உயிரி பன்முகத்தன்மை இழப்பு, சுற்றுப்புறச் சூழலில் அழுத்தம், ரசாயனங்களால் மாசுபடுதல் ஆகிய அனைத்தும ஒன்றோடொன்று இணைந்து, சுற்றுச் சூழலையும் பருவ நிலையையும் சமநிலையில் வைக்க உதவுகின்றன. இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் பணக்கார நாடுகள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில், உலகம் பேரழிவை சந்திக்க நேரிடும்.

புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை. வளரும் நாடுகளிலும், முதலாளித்துவ நாடுகளைப் போன்று நுகர்வு அளவு அதிகரித்து, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. டொனொல்லா மெடோஸ், ஜார்கன் ராண்டர்ஸ் மற்றும் டென்ஸ்மெடோஸ் 2004-ஆம் ஆண்டில் ‘’வளர்ச்சியை கட்டுப் படுத்தும் காரணிகள் பற்றி எழுதுகையில், கிட்டத்தட்ட700 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த பூமியால் இயலாது. மேற்கத்திய நடுத்தர வர்க்க வாழ்க்கை அடிப்படையில் பூர்த்தி செய்ய முடியாது. 2050-இல் உலக மக்கட்தொகை 900 கோடியை தொட்டுவிடும். தற்போதுள்ள வளங்கள் 140 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என ‘உலக கண்காணிப்பு அமைப்பு’ கூறுகிறது.

எவ்வளவு இருந்தாலும் போதாது என்ற மனோபாவம் நுகர்வை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், அதேசமயம் உலக மக்களில் 300 கோடிபேர் நாளொன்றுக்கு 2.50 டாலருக்கு குறைவாக பெற்று வறுமையில் வாழ்கின்றனர் என்பதையும் இந்த சுற்றுச்சூழல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிலர் நினைப்பது போல் ‘பசுமை பூமி’ என பிரச்சாரம் செய்தால் போதாது. பிரச்சனையை தீர்க்க வேண்டிய சுற்றுச்சூழல் அழிவுக்கான காரணங்களை ஆராய வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பு சுற்றுச்சூழல் அழிவுக்கு பிரதான காரணமெனில் மிகையாகாது. முதலாளித்துவ உற்பத்தி முறைகளிலேயே சுற்றுச்சூழல் அழிவுக்கான கூறுகள் அடங்கி யுள்ளன. தற்போது நிலவுகின்ற முதலாளித்துவ உற்பத்தி, விநியோக முறைகள் தொடர்ந்தால், தீர்வு காண்பது கடினம். உலகம் முழுவதிலும் முதலாளித்துவ கருத்துக்கள் வேறூன்றி, போட்டி, பேராசை, உழைக்கும் மக்களை சுரண்டப்படுவது தவிர்க்க  இயலாதது என்று பார்க்கப்படுவதுடன், வளர்ச்சிக்கு முதலாளித்துவ அமைப்பு தேவை என்ற கருத்தும்  பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மாறாக, மனிதகுலம் நீடித்து நிலைக்க, முதலாளித்துவ கட்டமைப்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

முதலாளித்துவ அமைப்பு தொடர்ந்து விரிவடையும் அமைப்பாகும். எனவே வளர்ச்சி தேக்கமடைந்தால், நின்று போனால், இந்த அமைப்பில் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. முதலாளித்துவ அமைப்பின் அச்சாணி லாபம் மற்றும் மூலதனச் சேர்க்கையாகும். தொழில் நிறுவனங்கள் விரிவடையும் பொழுது, இயற்கை வளங்கள், மனித உழைப்பு என அனைத்தும் சுரண்டப்படுகின்றன. வளர்ச்சி இல்லையெனில், முதலீடு குறையும். அப்பொழுது, தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டினால்தான் லாபம் ஈட்ட இயலும். வால்மார்ட் போன்ற ராட்சத கம்பெனிகள் விலை குறைப்பில் ஈடுபடலாம். ஆனால லாபம் ஈட்ட அது போதாது. எனவே, நிறுவனங்களுக் கிடையே போட்டி அதிகரித்து, பெருநிறுவனங்கள், சிறு நிறுவனங்களை வாங்குவது, சந்தையை கைப்பற்றும் முறைகளை கையாளுவது சகஜம். தவிர நிதித்துறை சூதாட்டத்தில் ஈடுபட்டு, முன்னேறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படிப் பட்ட முயற்சிகள் எத்தகைய நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். உற்பத்தியை அதிகரிக்க, யந்திரங்களை பயன்படுத்தி, நவீன மயத்தில் ஈடுபடுவதால், வேலையற்ற கூலிப்டை விரிவடைகிறது. 1949-2008 வரையிலான காலத்தில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன், nவைலயின்மை தொடர்பான புள்ளி விபரங்களை நோக்குகையில், வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்த காலத்தில், வேலையின்மை வெகுவாக அதிகரித்துள்ளதை காண முடியும். வேலைவாய்ப்பு அடிப்படையில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆராய்ந்தால், முதலாளித்துவ அமைப்பில் வேலையுடன் கூடிய வளர்ச்சியாக இல்லை என்பது தெளிவாகிறது.

முதலாளித்துவ அமைப்பில், தொழில் விரிவாக்கம் என்கின்ற போது, மூலப் பொருட்கள், மலிவான உழைப்பு மற்றும் புதிய சந்தைகளைத் தேடி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் உள்நாட்டு சந்தை தேக்க நிலையை அடைகிறது. அப்படிப்பட்ட நிலையில், புதிய சந்தைகளை தேடுகையில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், அவற்றிக்கு ஆதரவாக செயல்படும் அரசுகளும், எண்ணெய், கனிம வளங்களை அந்நிறுவனங்கள் கட்டுப்படுத்த வழிவகை செய்கின்றன. இன்று உலகம் முழுவதிலும் நில அபகரிப்பு பரவலாக உள்ள சூழலில், தனியார் மூலதனமும், அதற்கு ஆதரவான அரசுகளும்,அதை பயன்படுத்தி, உயிரி எரி பொருளுக்கான பயிர் சாகுபடிக்கு பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டும் 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் (ஐரோப்பாவிலுள்ள மொத்த சாகுபடி நிலத்தில் 2/3 பகுதிக்கு சமம்) பணக்கார நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உலக அளவில் நில கையகப்படுத்த (சட்டப் பூர்வமாக நடைபெற்றாலும்) ஏகாதிபத்திய வரலாற்றில் முக்கிய அம்சமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக மூன்றாம் உலக நாடுகள் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டிக் கொழுக்கப்பட்டதைப் பற்றி வரலாற்றில் நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், போர் தொடுப்பதும், அங்கேயுள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க மேற்கொள்ளும் நடவடிக்கை களேயாகும். உலகின் எந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் கிடைக்கின்றதோ, அவற்றை அபகரிக்க பன்னாட்டு வணிக நிறுவனங்கள் முயலுகின்றன.

இயற்கை வளங்கள் அள்ள அள்ளக் குறையாதவை அல்ல. ஆகையால், திட்டமிட்டு பயன்படுத்தினால், எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும். அவற்றை பாதுகாக்க இயலும். உற்பத்தியை அதிகரிக்கும் பொழுது, கூடுதல் வளங்கள் தேவைப்படுகின்றன. சில இயற்கை வளங்களை மீண்டும் புதுப்பிக்க இயலாது. இன்று இருப்பது போல், பெட்ரோல், எரிவாயு நுகர்வு தொடர்ந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் எண்ணெய் கிணறுகள் வற்றி விடும். உரத்திற்கு தேவைப்படும் பாஸ்பரஸ் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முற்றிலும் கிடைக்காத நிலை ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ அமைப்பில் கைவசம் உள்ள வளங்களை எப்படி பயன்படுத்துவது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என திட்டமிடுவது கிடையாது. எனவே, வளங்களின் அளிப்பு குறையும் பொழுது, அவற்றின் விலை அதிகரித்து உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க வளங்களையும், முறையாக முன்னுரிமை அளித்து பயன்படுத்தாவிடில் அழியும் என்பதற்கு சில அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பாக சில வகை மீன்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆழ்கடல் வரை இயந்திரங்களை பயன்படுத்தி, மீன் பிடிப்பதால் கடல் படுகைகள் பாதிப்படைகின்றன.

ட்யூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் டெர்போர் என்ற விஞ்ஞானி, சமீபத்தில் ஒரு சிறிய ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றிருந்தார். அன்னிய பகாசுர நிறுவனங்கள் அங்குள்ள வளங்களை கண்மூடித்தனமாக சுரண்டுவதைக் கண்டார். “அபூர்வமான மரங்களை வெட்டுவது, கடல்வாழ் அபூர்வ மீன் இனங்களை பிடிப்பது… நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. அந்நாட்டு மக்களோ… ஏதோ வளர்ச்சி ஏற்பட்டு விட்டதென்ற மாயையில் உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவ வளர்ச்சியானது, சுற்றுச் சூழலுக்கு அழிவை ஏற்படுத்துவதை கண்கூடாத காண முடிகிறது.

முதலாளித்துவம் என்பது வெறும் பொருளாதார அமைப்பு மட்டுமல்ல. மூலதன குவிப்புக்கு அதரவான அரசியல், சமூக, சட்ட அமைப்புகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும். ஷீம்பீட்டர் என்ற பொருளாதார நிபுணர் கூறுவது போல, முதலாளித்துவ வளர்ச்சிக்கு நுகர்வு தேவை. நுகர்வு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக விளம்பரம் உள்ளிட்ட முயற்சிகள் எடுக்கப்படும். தேவை மற்றும் விருப்பம் இல்லா விட்டாலும், பொருட்களை நுகர மக்கள் தூண்டப்படுகின்றனர். போட்டி, சுரண்டல் மற்றும் நுகரியம் இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட தேவையாக உள்ளன. ‘பேராசை தவறு அல்ல’ என்றும், ‘லாபம் என்பது சாத்தான் அல்ல’ என்றும் கூறப்பட்டு முதலாளித்துவ அமைப்பில் சுரண்டலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. பணக்காரர்களை ஏதோ கடின உழைப்பால் பணக்காரர்களாக இருப்பது போலவும், ஏழைகள் சோம்பேறி களாக, கல்வி அற்றவர்களாக இருப்பதால் (ஏழைகளும் அதை உள்வாங்கி, ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்) தங்களிடம் ஏதோ தவறு உள்ளது போலவும் கருத முதலாளித்துவம் வழிவகை செய்கிறது. ஏழைகள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள, தடைகளை நீக்க எப்படி முயல வேண்டுமென்பது அமுக்கி வைக்கப்படுகிறது.

லாபம் ஈட்டுவது மனிதனின் இயல்பான சுபாவமாக பார்க்கப்படுகிறது. சுய நலம், பொருட் சேர்க்கை ஆகியவற்றை முதலாளித்துவம் நியாயப்படுத்தி, ஊக்குவிக்கிறது. அவ்வாறு லாபம் ஈட்ட எப்படிப்பட்ட முறைகளை கையாண்டாலும், முதலாளித்துவ அமைப்பின் படி அது சரியானதேயாகும். எனவே, முதலாளித்துவ அமைப்பில, சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத, எரிபொருள் சக்தி கொள்கை, சுகாதாரக் கொள்கை, வேளாண், தொழில், கல்வி மற்றும் வணிகக் கொள்கைகளை உருவாக்குவது கடினமாக உள்ளது.

முதலாளித்துவ அமைப்பின் வெற்றிகளுக்கும், தோல்விக ளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. உலகில் பல கோடி மக்கள் வறுமையில் வாடுவது என்பது ஏதோ ‘விபத்து’ எனக் கருத முடியாது. மூலதன சேர்க்கை என்பது முதலாளித்துவத்தின் நேரடி விளைவாகும். ஏழை – பணக்காரர் இடைவெளி, ஏற்றத் தாழ்வுகள் தேவை என்றே பணக்காரர்கள் கருதுகின்றனர். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன அதிகாரி பிரையன் க்ரிஃபித் “ஏற்றத் தாழ்வுகளை நாம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனெனில் வளமை, வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டுமெனில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்யும்” என்று கூறுவதன் மூலம், பணக்காரர்களுக்கு எது நல்லதோ /சாதகமானதோ, அதுவே சமுதாயத்திற்கும் நல்லது என்று கூறி, வறுமை தொடர்வதை நியாயப்படுத்துகிறார். ஒரு நாட்டிற் குள்ளேயும், நாடுகளுக்கிடையேயும், ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

2007ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சொத்தில் 33.8 சதவிகிதம், வசதிபடைத்த 1 சதவிகிதம் மக்களிடமிருந்தது. அடித்தட்டிலிருந்து 50 சதவிகிதம் மக்களிடம் வெறும் 2.5 சதவிகிதம் சொத்து மட்டும் இருந்தது. உலகில் 793 கோடீஸ்வரர்களிடம் உலக மொத்த வருமானத்தில் (60.3 டிரில்லியன் டாலர்கள் 2008-இல்) 5 சதம் (3 டிரில்லியன் டாலர்கள்) உள்ளது. சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் குவியும் பொழுது, அரசியல் அதிகாரமும் குவிகிறது. அப்பொழுது, நிலம், இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள், ஆலைகள் என உற்பத்திக்கு தேவையான அனைத்தும் அவர்கள் வசம் வந்து விடுகிறது. அதன் விளைவாக வாங்கும் சக்தியையொட்டி, நுகர்வின் அளவு மாறுபடுகிறது. அதனால், ஏழைகளால் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என்பது முதலாளித்துவ அமைப்பின் இயல்பான வளர்ச்சிப் போக்காக பார்க்கப்படுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்பதை மறந்து, சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க இயலுமென சில சுற்றுச் சூழலியலா ளர்கள் கருதுகின்றனர். சில கார்ப்பரேட் நிறுவனங்களும், இயற்கையை பாதுகாப்பது தங்கள் கடமையென பறைசாற்று கின்றன. ஆனால், எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்கின்றனவா? சில விஞ்ஞானிகள், அணுசக்தி மூலம் எரிபொருள் பிரச்சனையை தீர்க்க இயலுமென கருதுகின்றனர்.

குறிப்பாக ஜேம்ஸ் லவ்லாக், ஜேம்ஸ் ஹான்சன் ஆகிய சுற்றுச்சூழல் அறிஞர்கள், அணுசக்தியை நல்ல மாற்று என்று கூறினாலும், அதுவும் பல சுற்றுச் சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதே போன்று கார்பன் வெளியேற்றத்தை தடுப்பது, அதை பூமியில் செலுத்துவது போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. பசுமையக வாயு எந்த அளவு வெளிப்படுத்தலாம் என்பதற்கு உச்சவரம்பு வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது.

வெனிசுலா காட்டும் வழி:

சுற்றுச் சூழல் பிரச்சனைகள் தொடர்பாக பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது நிலவும் முதலாளித்துவ அமைப்பில் தீர்வு காண்பது கடினம். “லா வியா கேம்பெஸ்னியா” என்ற உலக அளவிலான விவசாயிகள் அமைப்பு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வேளாண் முறைகளை முன்வைத்து போராடி வருகிறது. வெனிசுலாவில், அதிபர் சாவேஸ் முதலாளித்து வத்திற்கு மாற்றாக ஒரு சமத்துவ சமுதாய அமைப்பு மட்டுமே சுற்றுச் சூழல் நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்று வலியுறுத்தி யுள்ளார். அனைவருடைய அடிப்படை தேவைகளையும் எப்படி பூர்த்தி செய்வது? எந்த அளவுக்கு முதலீடு செய்வது? எவ்வளவு உற்பத்தி செய்தால், மக்களின் தேவைகள் பூர்த்தியாகும்? இந்த கேள்விகளுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் விடை காணப்பட வேண்டும். வெனிசுலாவில் “கம்யூனிட்டி கவுன்சில்கள்” உள்ளன. அவற்றின் மூலம், அந்தந்த பகுதியில் உள்ள மக்கள், அவர்களின் தேவைகள், இருப்பில் உள்ள வளங்களை கணக்கில் கொண்டு முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இவ்வாறு ஆராய்ந்து, விவாதித்து, பள்ளிகள் மருத்துவமனைகள், வீடுகள் என அனைத்து இடங்களுக்கும் தேவைப்படும் குடிநீர், மின்சாரம், எரிபொருள் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின், எஞ்சியுள்ள உபரி வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கம்யூனிட்டி கவுன்சில்கள் தீர்மானிக்கின்றன.

சுற்றுச் சூழல் என்பது சமுதாயத்திற்கு வெளியே உள்ள அமைப்பு அல்ல. மாறாக, அனைத்து ஜீவராசிகளின் வாழ்வோடும் இணைந்ததாகும். பொருளாதாரத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும். தனியார் வாகனங்களுக்கு பதில் பொது போக்குவரத்து சேவையை அதிகரித்தால், பணிபுரியும் இடங் களுக்கு அருகே வசித்தல், காடுகளை பாதுகாத்தல், சிறிய நகரங்களை அமைத்தல், சூரிய வெப்பத்தை பயன்படுத்துதல், இயற்கையான முறையில் வெப்பத்தை தணித்தல், வீணாகும் பொருட்களை மீண்டும் பயன்படுத்த ஏதுவாக தயாரித்தல், சுற்றுச் சூழலுக்கு ஊறு ஏற்படாத விவசாய முறைகளை கடைபிடித்தல் என ஏராளமான வழிமுறைகளை பின்பற்ற இயலும்.

முதலாளித்துவ அமைப்பின் ஏற்றத் தாழ்வுகளை நீக்க சோசலிச அமைப்பை உருவாக்க போராட வேண்டும். இது எளிதானது அல்ல. இருபதாம் நூற்றாண்டில் ஏழையான பின்தங்கிய நாடுகளில் புரட்சி ஏற்பட்டு, ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து, சோசலிச அமைப்பை முறியடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சோசலிச சமுதாயம் படைப்பதில் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அதேசமயம் விடுதலைக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் தேவையான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்த வேண்டும்.

“இந்த பூவுலகு பாதுகாக்கப்பட வேண்டுமெனில் ‘நான் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?’ என்ற கேள்விக்கு பதில் ‘மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்புவதன் மூலம், மனிதர்கள் மட்டுமின்றி, நம்முடைய வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள மற்ற உயிரினங்களை பாதுகாக்க இயலும்’ (செப்டம்பர் 2009-இல் ‘மன்த்லி ரெவ்யூ’வின் 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ஜெரமையா ரைப்டின் உரையலிருந்து)

குறிப்பு:

இந்த கட்டுரை 2010 ‘மன்த்லி ரெவ்யூ’ (ஆடிவோடல சுநஎநைற) பத்திரிகையில், “றுhயவ நஎநசல நnஎசைடிnஅநவேயட நேநன வடி மnடிற யbடிரவ உயயீவையடளைஅ” என்ற தலைப்பில், ‘பிரெட் மெக்டாஃப், ஜான் ஃபாஸ்டர் ஆகியோரின் கட்டுரையை தழுவி எழுதப்பட் டுள்ளது)Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: