மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதியமைப்பிற்கு எதிராகவும் குறிப்பாக தீண்டாமை மற்றும் இதர சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவதில் சமீப காலங்களில் கூடுதலான கவனம் செலுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இதர பிரிவினர்களிடமும் ஜனநாயக உள்ளம் படைத்தவர்கள் மத்தியிலும் இந்நடவடிக்கைகளுக்கு பலமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள் சமூக நீதித் தளத்திலும் அரசியல் தளத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன. ஆந்திராவில் கே.வி.பி.எஸ். என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதும் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு விரிந்து பரந்த ஜனநாயக மேடையாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவிகரமாக உள்ளன. தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வுகளும் அவை மூலம் வெளிப்படுத்தப்பட்ட தீண்டாமை வடிவங்கள் மற்றும் வன்கொடுமைகளும் மனித உரிமையில் அக்கறையுள்ளோரை வியப்படைய வைத்ததோடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வையும் பலப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய களப் போராட்டங்களும் (உத்தபுரம் உள்பட பல தீண்டாமை சுவர்கள் உடைப்பு, அருந்தியர் உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்டங்கள், இரட்டைக்குவளை ஒழிப்பு, மயான உரிமைப் போராட்டங்கள் போன்றவை) இதர இயக்கங்களும் (பஞ்சமி, நிலமீட்பு மாநாடு, தலித் – பழங்குடியினர் உப திட்ட செயலாக்கம், இடஒதுக்கீடு அமலாக்கம் போன்றவை) ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே பல தலித் அமைப்புகள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கமாக இணைந்திருப்பது ஆகும். தொழிற்சங்கங்கள், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், எழுத்தாளர் சங்கம் மற்றும் மத்திய தர வர்க்க அமைப்புகளோடு மாநில அளவில் 18 தலித் அமைப்புகளும் மாவட்ட அளவில் 67 தலித் அமைப்புகளும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்திருப்பது குறிப்பிட்டத்தக்க அம்சமாகும். தீண்டாமை ஒழிப்பில் இதுவரை கிடைத்த வெற்றிகளும் முன்னேற்றங்களும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்களை மேலும் வலுவாகக் கொண்டு செல்ல உத்வேக மூட்டியுள்ளன.
மார்க்சியத்திற்கு எதிராக
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல வெகுஜன அமைப்புகளின் இந்நடவடிக்கைகள் சமூக நீதித் தளத்திலும் அரசியல் தளத்திலும் புதிய விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. ஆரோக்கியமான விமர்சனங்களையும், விவாதங்களையும் வரவேற்பதில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சிக்கு என்றும் தயக்கமில்லை. ஆனால் சில அமைப்புகள், பத்திரிகைகள் மற்றும் அறிவு ஜீவிகள் மார்க்சியத்திற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கை களை தவறாக விமர்சித்தும் எழுதி வருகின்றனர்.
‘தலித் முரசு’ என்ற பத்திரிகை இக்கண்ணோட்டத்தில் பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதில் பிஸ்வாஸ் என்பவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. இக்கட்டுரை பல பகுதிகளாக தலித் முரசு இதழில் வெளியிடப்படடு வருகிறது. இக்கட்டுரை முழுவதும் மார்க்சியத்திற்கு எதிரான தவறான விமர்சனங் களையும் தாக்குதல்களையும் கொண்டதாக அமைந்துள்ளது.
‘பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் – ஒரு அம்பேத்கரிய ஆய்வு’ என்ற தலைப்பில் எஸ்.கே. பிஸ்வாஸ் என்பவர் எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து ‘தலித் முரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. வர்க்கப் போராட்டம் மூலம் சமூக மாற்றம் என்பது இந்தியப் பொருளாதார அமைப்பில் ஒரு சாத்தியமற்ற வழிமுறையாகும் என்பது இந்தக் கட்டுரையின் சாராம்சமாகும். இதற்குக் காரணமாக கீழ்க்கண்ட அம்சங்களை இந்தக் கட்டுரை முன்நிறுத்துகிறது.
¨ மார்க்சியம் சாதிய சமூகத்துடன் ஒரு தத்துவமாகப் பொருந்தவில்லை.
¨ ஒரு மேம்பட்ட சமூக பொருளாதார நிலையை அடைந்த பிறகே மார்க்சியம் பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். 1. மூலதனத்தை உருவாக்குதல், 2. இலவச உழைப்பின் உருவாக்கம், 3. உழைக்கும் வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட உள்ளூர் சந்தை மற்றும் தொடர்ந்து விரிவடையும் அதன் தன்மை, 4. உற்பத்தி முறையில் குறுக்கீடற்ற மாற்றத்தைக் கொண்ட நடைமுறை, 5. சமூகப்படி நிலையில் எல்லையற்ற சமூக மாற்றங்கள் ஆகிய ஐந்து அடிப்படை சமூகக்காரணிகள் தான் ஒரு நாட்டில் முதலாளித்துவம் உருவாகி வளர்ந்து, வளம் பெற்று இறுதியில் அழிவடைதற்கு ஏற்ற சாதகமான சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவைகளாகும் இந்த அடிப்படைக் காரணிகள் எதுவும் இந்தியாவில் உயிர்ப்புடன் இல்லை. இவை இல்லாமல் வகுப்புப் (வர்க்க) போராட்டத்திற்கான காரணிகளாக இந்தியாவில் புதிய காரணிகள் என்னவாக இருக்கும் என்பது வெளிப் படையான சிக்கலாகும்.
¨ மேற்கண்ட 5 அம்சங்களில் முதல் 2 அம்சங்கள் இந்திய சமூகத்தில் பரவலாக இருக்கின்றன. ஆனால் மற்ற மூன்று காரணிகள் அதாவது முதல் 2 காரணிகளையும் உந்தித் தள்ளக் கூடியவையான மற்ற மூன்று காரணங்களும் இந்திய சமூகத்தில் அறவே இல்லை.
புரட்சியின் தன்மையும் இலக்கும்
மார்க்சியத்தைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே திசை திருப்பும் நோக்கத்துடன் செயயப்பட்டுள்ள விமர்சனங்கள் இவை. முதலில் மார்க்சியம் என்பது ஒரு வறட்டுச் சூத்திரமல்ல. மனித குலத்தின் கடந்த கால வரலாறுகளை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்து எதிர்கால திசை வழியைக் காட்டும் வழிகாட்டுதலே மார்க்சியம் ஆகும். மார்க்ஸ் வாழ்ந்த காலம் முதலாளித்துவம் அரும்பி வளர்ந்த காலம். முதலாளித்துவ அமைப்பையும் அதன் கோட்பாடுகளையும் ஆய்வு செய்த மார்க்சியம் இதர சுரண்டல் அமைப்புகளைப் போலவே முதலாளித்துவ அமைப்பும் வளர்ச்சியடைந்து பின்னர் ஒரு கட்டத்தில் வீழ்ச்சியடைந்தே தீரும் என்பதை இயக்க இயல் வரலாற்றியல் ரீதியாக நிரூபித்துக் காட்டியது. முதலாளித்துவத் துக்கு முந்தைய கால சமூக அமைப்புகளின் வீழ்ச்சிக்கு எவ்வாறு உற்பத்தி சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு அந்த அமைப்புகளின் உற்பத்தி முறை ஒரு கட்டத்தில் தடையாக மாறி வீழ்ந்தனவோ அதே போல முதலாளித்துவ அமைப்பும் வளர்ச்சி யடைந்து ஒரு கட்டத்தில் மேற்கொண்டு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அதன் உற்பத்தி முறை தடையாக மாறி வீழும் என்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டியது. இத்தகைய சமூக மாற்றங்களையே மார்க்ஸ் சமூகப் புரட்சி எனச் சித்தரித்தார். இந்த சமூக மாற்றமும் தானாக நிகழாது என்றும் சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்குமிடையே நடைபெறும் வர்க்கப் போராட்டங்கள் படிப்படியாக வளர்ச்சி யடைந்து ஒரு கட்டத்தில் புரட்சியாக மாறி சமூக மாற்றம் ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தினார். இந்த மாற்றங்கள் உலக அளவில் ஏககாலத்தில் நிகழ்வதில்லை என்பதும் பல்வேறு நாடுகளில் உள்ள பிரத்யேக சூழ்நிலை களுக்கு ஏற்ப புரட்சியும் மாற்றங்களும் ஏற்படும் என்பதே மார்க்சிய வழிமுறையாகும். சோவியத் ரஷ்யா, சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா போன்ற நாடுகளில் புரட்சியின் தன்மையும் வழிமுறையும் ஒரே மாதிரியானதாக இல்லை என்பது அனுபவமாகும். இந்த நாடுகளில் நிலவிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழல்களைக் கணக்கிலெடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரட்சிகர இயக்கங்களும் புரட்சியின் பாதை மற்றும் கடமைகளை வரையறுத்தன.
முதலாளித்துவம் ஐரோப்பாவின் சில நாடுகளிலும், அமெரிக்காவிலும் வளர்ச்சியடைந்த போது வேறு பல நாடுகளில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் நிலவியது என்பதும் சில நாடுகளில் அடிமை சமுதாயத்தின் மிச்ச சொச்சங்கள் நிலவின என்பதும் பல நாடுகளில் காலனியாதிக்கம் இருந்தது என்பதும் கண்கூடு. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துதான் அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப நிலப்பிரபுத்துவம் ஏகாதிபத் தியத்திற்கு எதிரான ஜனநாயகப் புரட்சியா அல்லது முதலாளித் துவத்திற்கு எதிரான சோசலிசப்புரட்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்திலும் இதுதான் அணுகுமுறையாக இருக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார ஒடுக்குமுறைகளை மட்டுமல்ல சமூக ஒடுக்கு முறைகளையும் புரட்சிகர இயக்கங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது.
இந்திய சாதியமைப்பு – மார்க்சிய அணுகுமுறை
அதேபோல இந்தியாவில் இன்றுள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களைக் கணக்கிலெடுத்து மார்க்சிஸ்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். தங்களது செயல்பாடுகளை பரிசீலித்து கடந்த கால செயல்பாடுகளில் பலவீனங்கள் இருந்தால் அவற்றைக் களைந்தும் மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப அவ்வப்போது தேவையான மாற்றங்களையும் செய்து கொள்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை முதலாளித்து வத்துக்கு முந்தைய கால நிலப்பிரபுத்துவம் இன்றளவும் வலுவாக உள்ளது. இந்தியாவில் பல நூற்றாண்டுகள் அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொண்டு தான் தன் மேலாதிக்கத்தை நிலை நாட்டியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்ற பெருமுதலாளிகள் இந்த வரலாற்று உண்மையை அறிந்திருந்த போதிலும் தங்களது வர்க்க நலன் கருதி அதே நிலப்பிரபுத்து வத்துடன் கூட்டுச் சேர்ந்து தான் ஆட்சி நடத்தி வருகிறார்கள். தங்களது சுரண்டலை உலகளாவிய அளவில் விஸ்தரிக்கும் நோக்கத்துடன் பன்னாட்டு நிறுவனங்க ளுடனும் ஏகாதிபத்தியத் துடனும் சமரசம் செய்து கொண்டுள் ளனர். ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்கு இரையாகி இந்தியச் சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவதோடு அந்நிய நிதி மூலதனத்தை தங்கு தடையின்றி இந்தியாவில் அனுமதிக்கவும் செய்கின்றனர். இதனால் இந்தியாவில் வாய்ப்புகளுக்கு ஏற்ற தொழில் வளர்ச்சியோ பொருளாதார வளர்ச்சியோ ஏற்படவில்லை. கோடானுகோடி மக்கள் வறுமைப் படுகுழியிலும் வேலையின் மையிலும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மறுபுறம் இந்தியாவின் சாதியமைப்பு தனித்தன்மை வாய்ந்த சவாலாகும். உலகின் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய சாதியமைப்பு கிடையாது, இதன் துவக்க காலம் இந்தியாவில் ஆண்டான் அடிமைத்தனம் உருவான காலமாகும். மேற்கத்திய நாடுகளில் ஆண்டான் அடிமை சமுதாயம் உருவான போது இந்தியாவில் அதுவே ஆரியர்கள் தாசர்கள் கொண்ட சமூக அமைப்பாக உருவானது. அதாவது வர்க்க சமுதாயமே வருண சமுதாயமாக உருவெடுத்தது. இதனையே இந்தியாவின் தலை சிறந்த மார்க்சிய ஆய்வாளரான டி.டி. கோசாம்பி, “இந்தியாவின் துவக்க கால வர்க்க சமுதாயத்தில் வர்க்கமே சாதியாக இருந்தது” எனக் குறிப்பிடுகிறார். பின்னர் நிலப் பிரபுத்துவ சமுதாயத்தில், வர்ணாசிரம சாதியமைப்பு கெட்டிப் படுத்தப்பட்டது. இதற்கு இந்தியாவில் உருவான வேதங்களும், மனுநீதியும் அடித்தளமாகச் செயல்பட்டன. இந்தியாவின் சாதியமைப்பை ஒரு நிறுவனமாக மாற்றியதில் இந்து மதத்திற்கும் அதைச் சார்ந்த இந்துத்துவாவுக்குமுள்ள பங்கை மிகச் சரியாகவே தோலுரித்துக் காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இதே போல சமுதாயம் சுரண்டும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கங்களுமாக உருவெடுத்த காலத்தில்தான் பெண் அடிமைத்தனம் உருவாக்கப்பட்டது என்பது சமூக வரலாற்று உண்மையாகும். இந்தியாவுக்கும் அது பொருந்தும். அதே சமயம் இந்தியாவின் தனித் தன்மைக்கு ஏற்ப இங்கு சாதியமைப்புக்கும் பெண் அடிமைத்தனத்திறகும் உள்ள பிணைப்பும் மறுக்க முடியாதாகும். சாதியமைப்பைப் பாதுகாக்க பெண் அடிமைத்தனம் வகிக்கும் பாத்திரத்தை தக்க ஆதாரங் களுடன் வரலாற்று ரீதியாக மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் டாக்டர் அம்பேத்கர்.
பின்னர் இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியச் சாதியமைப்பையும் தகவமைத்துக் கொண்டனர் ஆளும் வர்க்கத்தினர். அடிமைச் சமுதாயத்திலிருந்து இன்றைய முதலாளித்துவ சமுதாயம் வரை சாதியமைப்பின் வடிவத்திலும் செயல்பாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்ற போதிலும் ஆளும் வர்க்க நலன் கருதி சாதிய ஏற்றத்தாழ்வும், ஒடுக்குமுறைகளும் பாதுகாக் கப்பட்டே வந்துள்ளன. இந்தியச் சமூகத்தில், சாதியமைப்பின் பங்கை அங்கீகரித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இங்கு சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்துள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம் சாதிய – தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கவனம் செலுத்தியது. 1920-ஆம் ஆண்டில் துவங்கிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் செயல்பட்டு வந்த நிலையிலும் 1928-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் “இந்தியாவுக்கு விடுதலை என்றால் அது தலித்துகளுக்கும், விடுதலையாக இருக்க வேண்டும்” என முழங்கியது. இக்கண்ணோட்டத்தோடு விடுதலைப் போராட்ட காலங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுடன் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதிலும், கம்யூனிஸ்டுகள் கவனம் செலுத்தி வந்தனர். இந்தியச் சாதியமைப்பின் சிக்கலான கட்டமைப்பு பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்ற நூல் குறிப்பிடுவதாவது:
“கிராம சமூகம் என்ற சமூக அமைப்பு முறை பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நீடித்து வந்துள்ளது. இந்த சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த விவசாயிகளும் பெரும் எண்ணிக்கையிலான கூலியாட்களும் நிறுவனமயமாகிப் போன சாதியமைப்பு முறையினால் சுரண்டப்பட்டு வந்துள்ளனர். உலகில் காணப்படும் அனைத்து சமூக அமைப்புகளிலும் இந்திய நாட்டின் சாதியமைப்பு முறை தான் மிகுந்த சிக்கலான ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பின்னடைவு ஏற்படக் கூடிய நேரத்திலும் அழிந்து விடாமல் மீட்சி பெறக் கூடிய இதன் ஆற்றல் குறிப்பிடத்தக்கது… பல அடுக்குகளைக் கொண்ட சாதிய அமைப்பு முறையில் ஒவ்வொரு சாதியும் மற்றொரு சாதியை விட மேலாகவோ அல்லது கீழாகவோ உள்ள ஒரு இடத்தில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களும் செய்யும் வேலை, பின்பற்றும் சடங்குகள் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான தடைகள், பிற சாதியினருடன் சமமாக அமர்ந்து உண்ணுவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் ஆகியவற்றில் நெருக்கமான முறையில் பிணைக்கப்பட்டுள்ளனர்.”
சூழ்நிலை குறித்த இன்றைய மதிப்பீடு
2000-ஆம் ஆண்டு கட்சித்திட்டத்தை மேம்படுத்தும் பணியில் இறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டத்தின் பல அம்சங்களை மேம்படுத்தியதோடு இந்தியச்சாதியமைப்பு குறித்தும் ஆய்வு செய்து தனது மதிப்பீட்டை வெளியிட்டது. இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி சிபிஐ(எம்) திட்டம் குறிப்பிடுவதாவது :
“இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்திற்கு நிண்ட நெடிய வரலாறு உண்டு என்பதோடு இது முதலாளித்து வத்திற்கு முந்தைய கால சமூக அமைப்பிலேயே ஆழமாக வேரூன்றியிருந்தது. தொடர்ந்து வளர்ந்த முதலாளித்துவ வளர்ச்சியோடு கூடிய சமூகம் இன்றைய சாதிய அமைப்புடன் சமரசம் செய்துகொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவ வர்க்கம் சாதிய வேறுபாடுகளை ஊட்டி வளர்க்கிறது. தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு சாதியமைப்புக்கு எதிரான ஒற்றுமையும், தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒற்றுமையும் முன்தேவையாகும். மிகக்கணிசமான தலித் மக்கள் உழைக்கும் வர்க்கத்தின் பிரிவினரேயாவர். வலுவான சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் மூலம் இந்தியச்சாதியமைப்புக்கும், அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுவது, இந்திய ஜனநாயகப் புரட்சியின் முக்கியக்கடமையாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தது ஆகும்.”
(கட்சித் திட்டம் பாரா 5.12)
எனவே மார்க்சியம் சாதிய சமூகத்துடன் பொருந்தி வராத தத்துவம் என்ற பிஸ்வாசின் கூற்றை ஏற்க முடியாது. மார்க்சிய எதிர்ப்பு நிலையிலிருந்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியச்சூழலில் சாதியமைப் பையும், ஒடுக்குமுறைகளையும் உள்வாங்கிக்கொண்டுதான் தனது திட்டத்தை இந்தியாவில் உருவாக்கியுள்ளது. அதனை ஒழிக்கவும் உறுதி பூண்டுள்ளது.
துரதிருஷ்டவசமாக சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தும் போராடியும் வரும் பல தலைவர்களுக்கு சாதிய ஒடுக்குமுறையில் உள்ளடங்கியுள்ள பொருளாதார ஒடுக்குமுறைகள் குறித்து சரியான புரிதலோ, பார்வையோ இல்லை. இது குறித்து தோழர் இ.எம்.எஸ். கூறுவதாவது.
“சாதியத் தலைவர்களும் மற்றவர்களும் சாதிய ஒடுக்குமுறை என்பதை ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை சாதி மக்களை ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சாதியினர் அடிமைப்படுத்தி வைத்திருப்பதல்லாமல் வேறொன்றுமில்லை என்று தான் நினைத்தனர். ஆனால் மார்க்சிஸ்டுகள் அதற்கு மாறாக சாதிகளுக்கு மத்தியில் பிளவுகள் இருப்பது, பெரும்பான்மை யினர் சிறுபான்மையினரால் பாகுபாடு செய்யப்படுவது என்பதற் கெல்லாம் காரணம் பெரு நிலப்பிரபுக்கள். அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகள் நிலப்பிரத்துவ நாட்டாண்மைகள், ஆளும் வம்சக் குடும்பத்தினர் ஆகியோரின் சமூகப் பொருளா தாரக் கலாச்சார ஆதிக்கம் நிலவுவதில் அடங்கியிருக்கிற தென்பதைக் கண்டறிந்தனர். கலாச்சார, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒட்டுமொத்த யதார்த்தத்தின் ஒரு பகுதிதான் பெரும்பான்மை சாதியினருக்கு எதிரான சிறுபான்மை சாதியினரின் ஒடுக்குமுறை என்பது.
இத்தகைய அனுகுமுறையுடன் இடதுசாரிகள் வலுவாக உள்ள மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வலுவாகப் போராடிய அதே நேரத்தில் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக அனைத்துச் சாதிகளையும் சார்ந்த உழைப்பாளி மக்களையும் அணிதிரட்டிப் போராட்டங்களும் நடந்தன. இந்த இருமுனைப் போராட்டங் களின் காரணமாக இம்மாநிலங்களில் இதர மாநிலங்களைப் போலல்லாமல் கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு பரவலாக நிலம், விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்வான கூலி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு உண்மையான அதிகாரம், சாகுபடியாளர்களுக்கு உயர்வான உரிமைகள் உத்தரவாதமாகி நிலப்பிரபுத் துவம் பலவீனமடைந்தது. மறுபுறம் சாதிய ஒடுக்குமுறைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.
இந்தியாவில் வர்க்கப் போராட்டம்
எனவே இந்தியாவில் ஒரு மேம்பட்ட சமூகப் பொருளாதார நிலையை அடைந்த பிறகே (அதாவது முதலாளித்துவ வளர்ச்சி முற்றுப்பெற்ற பிறகே) மார்க்சியம் பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்ற பிஸ்வாசின் கூற்று மார்க்சியம் குறித்த அவரது எதிர்நிலையையே காட்டுகிறது. பிஸ்வாசின் கூற்றுக்கு அர்த்தம் வளர்ச்சியடைந்த முதலாளித் துவ நாடுகளில்தான் மார்க்சியம் செல்லுபடியாகும் என்பதாகும். இந்தியாவிற்கு அது பொருந்தாது என்பதாகும். மனிதகுல வரலாற்றை இயக்கஇயல் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்த மார்க்சியம் ஒவ்வொரு நாட்டிலும் அடுத்த கட்டமாக நிறைவேற்றப்பட வேண்டிய சமூக மாற்றம் அல்லது புரட்சி எது என்பது அந்தந்த நாடுகளின் சமூக பொருளாதார நிலைகளைச் சார்ந்தது என்பதை தெளிவாக வரையறுக்கிறது. திட்டவட்டமான நிலைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமாக முடிவு செய்வதே மார்க்சிய அணுகுமுறை ஆகும். அப்பின்னணியில் இந்திய சமுதாயம் ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்ற முறையில் (இங்கு நிலப்பிரபுத்துவம் முற்றிலும் ஒழிக்கப்படவுமில்லை. முதலாளித்துவம் முழுமையாக ஸ்தாபிக்கப்படவுமில்லை). இங்கு முதலாளித்துவத்தை முற்றாக ஒழிக்கும் சோசலிசப் புரட்சியை உடனடிக்கடமையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கவில்லை மாறாக நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்திய தலையீடுகளையும் அதற்கு துணைபோகும் பெருமுதலாளித்துவத்தையும் ஒழிக்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியையே முன்வைத்துள்ளது. இந்தப்புரட்சியின் பின்னிப் பிணைந்த கடமையாக சாதிய ஒழிப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறை களுக்கு முடிவு காண்பதற்கான போராட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.
அடுத்து இந்தியாவில் மூலதன உருவாக்கமும் அதற்குத் தேவையன இலவச உழைப்பும் இருப்பதாகவும் , ஆனால் முதலாளித்துவம் வளர்ந்து வளம் பெற உள்ளூர் சந்தை விரிவாக்கம், உற்பத்தி முறையில் குறுக்கீடற்ற மாற்றம், சமூகப்படி நிலையில் எல்லையற்ற மாற்றம் போன்ற அம்சங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் இதற்குக்காரணம் இந்தியச்சாதியமைப்பு என்றும் எனவே, இந்தியாவில் முதலாளித்துவம் தங்குதடை யின்றி வளர வாய்ப்பு இல்லாததால் வர்க்கப் போராட்டத் திற்கான காரணிகள் இல்லை என்ற வாதத்தை பிஸ்வாஸ் முன்வைக்கிறார்.
வர்க்கப் போராட்டம் என்றால் அது முதலாளித்தவ சமுதாயத்தில் முதலாளித்துவத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் மடடுமே என்று மார்க்சியம் வரையறுத்தது போல பிஸ்வாஸ் வாதாடுகிறார். மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என்பதே வரலாற்று உண்மையும் மார்க்சிய நிலைபாடும் ஆகம். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த திட்டமிட்டுள்ள மக்கள் ஜனநாயகப்புரட்சி நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு பெருமுதலா ளித்துவ எதிர்ப்பு வர்க்கப் போராட்டமாகும். இதன் பிரிக்க முடியாத அம்சமாக சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்டமும் இணைந்துள்ளது என்பது இந்தியாவின் பிரத்யேக சூழலாகும்.
பொருளாதார சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக
அடுத்து இந்தியாவில் உள்ளூர் சந்தை விரிவாக்கம் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடைகளாக நிலப்பிரபுத்து வமும், ஏகாதிபத்தியச்சுரண்டலும் முக்கியக் காரணிகளாக உள்ளன. நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தி நிலக்குவியலை உடைத்து (இன்றைய சூழலில் நிலப்பிரபுக்கள் ரியல் எஸ்டேட் காரர்கள், பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களிட மிருந்து நிலங்களைப் பறித்து) லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கிராமப்புற மக்கள் தொகையில் 70 சதமானமாக விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்காமல், அதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தாமல், உள்ளூர் சந்தை விரிவடைய வாய்ப்பில்லை. இதோடு நகர்ப்புற கிராமப்புற உழைப்பாளி மக்களின் ஊதியத்தை உயர்த்துவதும் முக்கியத் தேவையாகும். இந்நோக்கத்தையடைய கிராமப்புற நகர்ப்புற உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத் துவது தேவையாகும். இதற்கு கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளி மக்களின் ஒற்றுமை முன்தேவையாகும். இந்த ஒற்றுமைக்கு சாதியமைப்பும் சாதிய ஒடுக்குமுறைகளும் முக்கிய தடைகளாக உள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆகவேதான் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கான போராட்டமும் சரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டமும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே நிலை எடுத்துள்ளது. பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கும், சாதிய ஒடுக்குமுறை களுக்கும் எதிரான போராட்டங்களை ஏககாலத்தில் நடத்துவதன் மூலம் உழைக்கும் வர்க்க ஒற்றுமை பலமடைந்து நிலம், கூலிக்கான போராட்டங்கள் வெற்றி பெற்று உள்ளூர் சந்தை விரிவடைய முடியும். அதன்மூலம் தங்கு தடையற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் வழி காண முடியும். கூடவே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டவும் சாதியமைப்பை பலவீனப்படுத்தி படிப்படியாக ஒழிக்கவும் முடியும். இதுதான் இந்தியச்சூழலில் இந்தியப்புரட்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் மார்க்சிஸ்ட்கள் முன்வைக்கும் திட்டமாகும்.
கடந்த காலங்களில் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் ஏககாலத்திலும் இணைத்தும் நடத்துவதில் பலவீனம் இருந்துள்ள நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். இவற்றை யெல்லாம் பரிசீலனை செய்து மண்ணுக்கேற்ற முறையில் மார்க்சிய நிலைபாடுகளையும், நடைமுறைகளையும் சிபிஐ(எம்) மேம்படுத்தியுள்ளது. 2000-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட சிபிஐ(எம்) கட்சித்திட்டம் இதற்கு வழி வகுக்கிறது.
சிபிஐ(எம்)-மின் இந்த நிலைபாட்டை புரிந்து கொள்ளாமல் அல்லது புறக்கணித்து சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் மார்க்சிஸ்டுகள் அக்கறையில்லாமல் இருப்பதாக சாடுவதில் நியாயம் இல்லை.
மறுபுறம் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே இத்தகைய விமர்சனங்களை மார்க்சிஸ்ட்டுகள் மீது வைப்பதாக நாம் கருத முடியும்.
இந்நோக்கோடுதான் இந்தியாவில் நிலவும் சாதியமைப்பு காரணமாக வர்க்கப் போராட்டம் சாத்தியமற்றது என வாதாடுகிறார் பிஸ்வாஸ். அவரது மதிப்பீடு வருமாறு :
“பாரம்பரிய தொழில் மற்றும் தொழிலாளர் பாகுபாடுதான் சாதியமைப்பின் அடிப்படையாகும். சமூகவியலாளர்கள் விளக்கும் வகையில் சாதிய சமூகம் என்பது ஓர் இறுக்கமான வர்க்க சமூகமாகும். இந்த சமூகத்தில் கீழ் மேலாகவோ, குறுக்குவாட்டிலோ நிலைமாறுதல் என்பது இயலாத ஒன்று. அதனால் சாதிய நிலை என்பது போராட்டத்தின் மூலம் மாற்ற முடியாது அதை இழக்கவோ பெறவோ முடியாது.
ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையுடனான தொடர்பையும் சாதியே தீர்மானிக்கிறது….. மாற்றம் இல்லாத வர்க்கமே சாதி. மாற்றத்துடன் கூடிய சாதியே வர்க்கம். இதன் காரணமாக உற்பத்தி முறையில் மாற்றம் என்பது சாத்தியமற்றுப் போனது”.
இந்தியாவில் வர்க்கப்போராட்டம் சாத்தியமல்ல என்றும் போராட்டங்கள் நடத்தினாலும் சாதிய நிலையில் மாற்றம் வராது என்பதுமே இதன் சாராம்சம். இது அவநம்பிக்கையின் உச்சபட்ச வெளிப்பாடு. மாற்றம் சாத்தியமல்ல என்பதை ஒருபோதும் மார்க்சிஸ்டுகள் ஏற்கமாட்டார்கள். முதலில் சாதியமைப்பின் கடினத்தன்மையை நாம் அங்கீகரிக்கிறோம். பொருளாதார, கலாச்சார, அரசியல் ஒடுக்குமுறைகள் இதில் உள்ளடங்கியுள்ளன. பிஸ்வாஸ் கூறுவதுபோல, சாதியமைப்பு இந்து மதத்தோடும், கடவுளோடும் பிணைக்கப்பட்டுதான் கெட்டிப்படுத்தப் பட்டுள்ளது. சாதியைமப்புக்கு எதிரான போராட்டத்தில் இந்துத்துவா கோட்பாடுகளுக்கும் பத்தாம் பசலித்தனமான மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான கடினமான போராட்டமும் உள்ளடங்கியுள்ளது. இப்புரிதலோடு கரடு தட்டிப்போன சாதியமைப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னிலும் முனைப்பாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதில் வர்க்க இயக்கங்களும் சமூக சீர்திருத்த இயக்கங்களும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.
மாற்றமும் பலவீனமும்
அடுத்து இந்தியச் சாதியமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற பிஸ்வாசின் வாதத்தை பரிசீலிப்போம். இந்திய வர்க்க சமுதாயத்தின் துவக்கக் கட்டத்தில் சாதியே வர்க்கமாக இருந்தது உண்மைதான். ஆனால் சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் சாதியமைப்பில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் வராது என்பதும் உண்மையல்ல.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான பொருளதார வளர்ச்சியும், மறுபுறம் நடத்தப்பட்ட வர்க்கப் போராட்டங்களும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் சாதியத்தை முற்றிலுமாக தகர்க்கவில்லை என்ற போதிலும், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மறுக்கப்பட முடியாததாகும். இந்தியாவில் இடதுசாரிகளால் தலைமை யேற்று நடத்தப்பட்ட தெலங்கானா போராட்டம், புன்னப்புரா, வயலார் போராட்டம், மலபார் போராட்டம், தெபாகா போராட்டம், வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம், கீழ்த் தஞ்சை போராட்டம் போன்ற பல போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்களாக இருந்துள்ள போதிலும், சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிரான உள்ளடக்கமும் இப்போராட்டங்களில் பொதிந்திருந்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
மேற்கு வங்கத்தில் ராஜாராம் மோகன்ராயைத் தொடர்ந்து இடதுசாரி இயக்கம் சமூகச்சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து நடத்தியதும், கேரளாவில் தோழர்கள் ஸ்ரீநாராயணகுரு, அய்யன் காளை போன்றோர் நடத்திய சமூக சீர்திருத்த இயக்கங்களும் இவற்றைத் தொடர்ந்து ஏ.கே.ஜி, ஈ.எம்.எஸ் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்ற ஆலய நுழைவுப்போராட்டம் உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் குறிப்பிடத்தக்க போராட்டங்களாக இருந்தன. இதனால் இடது சாரிகள் பலமாக உள்ள மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சமூக பொருளாதார நிலை இதர மாநிலங்களின் சமூக பொருளாதார நிலையிலிருந்து மாறுபட்டுள்ளதைக் காண முடிகிறது.
இம்மாநிலங்களில் நிலப்பிரபுக்களிடமிருந்து லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் நில சீர்திருத்தச் சட்டங்களின் மூலம் பறிக்கப்பட்டு ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதாவது லட்சக் கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சுரண்டும் வர்க்கங்களிடமிருந்து சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு கைமாறியுள்ளது. இதோடு இதர மாநிலங்களை ஒப்பிடும்போது இம்மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறை மிகவும் குறைவு. தீணடாமைக் கொடுமைகள் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் மிகக்குறைந்த அளவே வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரமே பறை சாற்றுகிறது. எனவே வர்க்க ஒடுக்குமுறைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராக வலுவான போராட்டங்கள் நடந்த மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் சாதியமைப்பு தகர்க்கப்படவில்லையெனினும், சாதிய ஒடுக்குமுறைகள் பெருமளவில் குறைந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்திய நாடு முழுவதும் இத்தகைய போராட்டங்களை கொண்டு செல்வதும் மென்மேலும் வலுப்படுத்துவதும்தான் சரியான வழிமுறையாக இருக்க முடியும்.
மறுபுறம் மகாராஷ்டிரா உள்பட சில வடமாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் ஜோதிபா புலே, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் தலைமையில் நடைபெற்ற சமூக சீர்திருத்த இயக்கங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக இம்மாநிலங்களில் நடைபெற்ற சமூக சீர்திருத்த இயக்கங்களும் இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டங்களும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் (பிற்படுத்தப்பட்ட சாதிகளின்) ஒரு பகுதியினரின் ஓரளவு முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும். இம்மாநிலங்களில் இன்றளவும் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுகிற போதிலும் இந்த சாதகமான அம்சத்தையும் சேர்த்து அங்கீகரிக்க வேண்டும். இம்மாநிலங் களில் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்களுக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் தேவையான இணைப்பு இல்லாதது பலவீனமான அம்சமாகும். இத்தகைய இணைப்பு இருந்திருந்தால் சாதிய ஒடுக்குமுறைகள் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போல மேலும் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது எனக் கருத இடமுண்டு.
கடந்த காலங்களில் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்க இயக்கத் திற்கும் தேவையான இணைப்பு இல்லாமல் இருந்த பலவீனத்தை அங்கீகரித்து வலுவான இணைப்பை உருவாக்குவது காலத்தின தேவையாகும். இடதுசாரி இயக்கங்கள் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களோடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் சமீப காலங்களில் வலுப்படுத்தி வரும் நிலையில் சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள சமூக சீர்திருத்த இயக்கங்களும் அமைப்புகளும், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் வர்க்க வெகுஜன அமைப்புகள் இடைக்கால பலவீனத்தைக் களைந்து சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தற்போது செலுத்தி வரும் கவனத்தை மேலும் மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அல்லாமல் சாதி ஒழிப்பில் இடதுசாரிகளுக்கு அக்கறையில்லை என குற்றம் சுமத்துவதும் வாதாடிக் கொண்டிருப்பதும் இன்றைய நிலைமைகளுக்குப் பொருத்தமானதாகவோ ஒடுக்குமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவதாகவோ இருக்காது.
தலித்துகள் மீது தனிக்கவனம்
இன்றைய சூழலில் சாதிய அமைப்பால் கடுமையான பாதிப்புக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் தலித்துகள். மிகக் கொடூரமான தீண்டாமைக் கொடுமை களுக்கும், வன்கொடுமை களுக்கும் இவர்கள் ஆட்படுத்தப் படுகிறார்கள். அதுவும் சாதியமைப்பால் மிகவும் வஞ்சிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும், தலித்துகளுக்கும் இடையே முரண்பாடுகளும், மோதல்களும் அதிக அளவில் தற்காலத்தில் காணப்படுவது வருந்தத்தக்க நிலையாகும். இந்தியாவில் ஏழை எளிய மக்களும் உழைப்பாளி மக்களும் இந்த இரு பிரிவினர்களிடையே மிக அதிகமாக உள்ளனர் என்பது கணக்கில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமாகும். உழைக்கும் வர்க்க ஒற்றுமையும் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பும் பின்னிப் பிணைந்த கடமைகளாக உள்ளன என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும்.
இப்பார்வையோடு தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிவரும் இதேகாலத்தில் தலித் விடுதலையிலும் தீண்டாமை ஒழிப்பிலும் அழுத்தமான கவனம் செலுத்துகிறது. இதனைத் தனது திட்டத்தின் ஒரு பகுதியாகவே இணைத்துள்ளது.
“முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்ட தவறியுள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் அட்டவணைச் சாதியினரே. தீண்டாமையும் இதர சாதிய ஒடுக்குமுறைகளும் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தலித்துகள் இக்கொடுமைகளுக்கு பெரிதும் ஆட்படுத்தப் படுகிறார்கள். தலித்துகள் மத்தியில் மேலோங்கி வரும் விடுதலைக்கான விழிப்புணர்வு கொடூரமான அடக்குமுறை களாலும் வன்கொடுமைகளாலும் ஒடுக்கப்படுகிறது. தலித்துகளின் எழுச்சி மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாகும். சாதியடிப்படையிலான இச்சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களது உரிமைகளை வென்றெடுத்து வருகிறார்கள்”.
(கட்சித் திட்டம் பாரா 5.10)
சிபிஐ (எம்) உறுதி
எனவே தலித்துகள் மீதான தீண்டாமை உள்பட சகல சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்கவும், இறுதியாக சாதியமைப்பிற்கு முடிவு கட்டவும் போராட சிபிஐ(எம்) உறுதி பூண்டுள்ளது. தனது செயல்பாடுகளைப் பரிசீலித்து அனுபவங்களின் அடிப்படையில் சாதி ஒழிப்பிற்கான தனது நடவடிக்கைகளையும், நிலைபாட் டையும் மேலும் மேம்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறையோடு உள்ளது. இந்நிலையில் பிஸ்வாஸ் போன்றவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தவறான விமர்சனங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் இவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
Leave a Reply