சீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ


 

சீனப்புரட்சியின் வெற்றிக்கு மாசேதுங் அளித்த பங்கை நாம் ஆழ்ந்து பரிசீலிப்பது அவசியம். ஏனெனில், அவரது பெயரில் இங்கு குட்டி பூர்சுவா குழப்பவாதிகள் கம்யூனிச இயக்கத்திற்கு சொல்லொண்ணா சேதாரத்தைக் கொண்டு வருவதால் அது தேவைப்படுகிறது.

சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் 1921-இல் சிறு குழுவாக உதயமானபொழுது சீன சமூக அரசியல் நிலவரத்தை முதலில் கவனிக்க வேண்டும். 1911-இல் சன்யாட்சென் தலைமையில் ஏற்பட்ட எழுச்சியால், மன்னராட்சி அகற்றப்பட்டு சீன குடியரசு உதயமானது. குடியரசின் தலைவராக அவர் இருந்தாலும் சீனாவின் பெரும்பகுதி ஏகாதிபத்தியவாதிகளின் துணையோடு மன்னராட்சி காலத்திய தளபதிகளே மைய அரசை மதிக்காமல் ஒருவருக்கொருவர் ஆதிக்க எல்லையை விரிக்க சண்டை போட்டு சீனாவை ரணகளமாக்கிக் கொண்டிருந்தனர். சன்யாட்சென் னையே நாட்டை விட்டு துரத்தினர். சீன குடியரசை நிறுவ அவருக்கு விசுவாசமான ராணுவத்தை வைத்து சண்டையிடும் தளபதிகளை ஒடுக்கவும், ஏகாதிபத்திய கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் முயற்சித்து கொண்டிருந்தார்,

இந்த கட்டத்தில் தான் சோவியத் புரட்சியின் தாக்கத்தாலும், மார்க்ஸ்- எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் எழுதிய நூல்கள் சீன மொழியில் கிடைத்ததாலும் சில இளம் கம்யூனிஸ்ட்டுகள் புரட்சிகர உணர்வோடு செயல்படத் துவங்கினர். 1921-இல் கம்யூனிஸ்ட் குழு அமைக்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனல் ஆலோசனைப்படி சன்யாட்சென்னின் கோமிங்டாங் கட்சியில் சேர்ந்து செயல்பட்டனர். அதில் ஒருவர் மாவோ. புத்தகத்தின் மூலம் பெற்ற பொது அறிவை, எதார்த்த நிலைக் கேற்ப பொறுத்துவது அவரது நடைமுறையாக இருந்ததே இளம் மாவோவின் சிறப்பாகும். ரஷ்ய நிலைமைக்கேற்ப ரஷ்ய புரட்சி நடந்தது. அதனை ஈயடிச்சான் காப்பி அடிக்கக் கூடாது என்று இதர நாட்டு இளம் கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் சொன்னதை உறுதியாக மாவோபற்றி நின்றார். 1925-இல் சன்யாட்சென் மறைவிற்குப் பிறகு கோமிங்டாங் கட்சியில் கம்யூனிசக் கோட்பாடுகளை விரும்பாத சர்வாதிகார குணமுள்ள சியாங்கைஷேக் பதவிக்குப் வந்த பிறகு கம்யூனிஸ்டுகளை வெளியேற்றி  வேட்டையாடி அழித்தொழிக்கத் தொடங்கினார். இருந்தாலும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், அமைப்பு ரீதியாக திரட்டுவதிலும், அவர்களது உடைமை களையும் உயிர்களையும் காப்பதிலும், அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பணியால் மக்கள் மனதிலே நீங்கா இடத்தை பிடித்துவிட்டனர். கம்யூனிஸ்டுகள் தங்களது உயிரைத் திறனமாக மதித்து தியாகம் செய்ய தயங்காததாலும் கம்யூனிஸ்ட் இயக்கம் வேகமாக பரவியது. 1924லிருந்து 1926ஆம் ஆண்டு ஆரம்பம் வரையிலும் வேகமாக அபிவிருத்தி அடைந்தது. குவாங்டுங்கில் புரட்சித் தளம் பலப்படுத்தப்பட்டது. 1926-இல் வடக்கத்திய படையெடுப்பு நடைபெறும் தருணத்தில் நிலைமை இவ்வாறு தான் இருந்தது. எனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த சர்ச்சை இயக்கத்தை முடக்குகிற அளவிற்கு இக்காலத்தில் உருவானது. நெருக்கடியான காலத்தில் யார் புரட்சியை வெற்றியை நோக்கி தலைமை தாங்கிச் செல்ல முடியும் என்று அடிப்படையான பிரச்னையின் மீது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு இருந்தது. இன்னும் அதனை திட்டவட்டமாக சொல்ல வேண்டுமென்றால் புரட்சியின் தலைவனாக யார் இருக்க வேண்டும் – பாட்டாளி வர்க்கமா? அல்லது பூர்ஷ்வா வர்க்கமா? தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான நேச சக்தியாக யார் இருக்க வேண்டும். விவசாயிகளா? அல்லது பூர்ஷ்வாக்களா? இத்தகைய பிரச்னைகளால் கருத்து வேறுபட்டு கோஷ்டி பூசலில் கட்சி சிக்க நேர்ந்தது. சீனாவில் ஷெண்டு-யுஷியின்  தலைமை தாங்கிய வலதுசாரி சந்தர்ப்பவாத கும்பல் ஒரு கருத்தை முன்வைத்தது. இது பூர்ஷ்வா ஜனநாயக புரட்சிகட்டம் எனவே பூர்ஷ்வா வர்க்கத்தினால் தலைமை தாங்க வேண்டுமென்றும் அதன் குறிக்கோள் ஒரு பூர்ஷ்வா குடியரசை நிலைநாட்டுவதென்றும், தொழிலாளி வர்க்கத்துடன் ஒன்று சேரக் கூடிய ஒரே ஜனநாயக சக்தி பூர்ஷ்வா வர்க்கம் தான் என்று சாதித்தது. பூர்ஷ்வா வர்க்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தில் அந்த அளவுக்கு அவர்கள் மூழ்கிப் போய் இருந்தமையால் மிக அடிப்படையான நேசசக்தி விவசாயிகள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். பாரிஸ் கம்யூன் படிப்பினையாக மார்க்ஸ் சுட்டிக்காட்டிய தொழிலாளி- விவசாய வர்க்க இணைப்பை மறந்துவிட்டார்கள். அதன் விளைவாக வர்க்கப் போராட்ட களத்தில் அவர்கள் தங்களை பலவீனமாகவும், கையாலாகாத வர்களாகவும் காட்டிக் கொண்டார்கள். மறுபுறத்தில்  இடதுசாரி சந்தர்ப்பவாதிகள், தொழிலாளி வர்க்க இயக்கத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்களும் விவசாயிகளை புறக்கணித்தார்கள். இருவகைப்பட்ட சந்தர்ப்பவாதிகளும் தங்களுடைய சொந்த பலவீனத்தை முழுமையாக தெரிந்திருந்தார்கள். எனினும் சக்தி வாய்ந்த நேசசக்திகளை எங்கே உற்று நோக்க வேண்டுமென்று அவர்களுக்கு தெரியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவிய இத்தகைய இரண்டு தவறான போக்குகளை எதிர்த்து போராடும் பொருட்டு தோழர் மா.சே.துங், 1926 மார்ச்சில் சீன சமுதாயத்தில் வர்க்கங்களைப் பற்றி அலசி ஆராய்தல் (ஹயேடலளளை டிக வாந உடயளளநள in ஊhiநேளந ளடிஉநைவல) என்ற கட்டுரையை எழுதினார். மார்க்சிய லெனினிய நிலைபாடு அதன் கருத்தோட்டமுறை மற்றும் காலனிகளில் தேசிய புரட்சி நடத்துவது சம்பந்தமான லெனினிய தத்துவம் ஆகியவற்றின் மீது தன்னை அடிப்படையாக நிறுத்திக் கொண்டு தோழர் மா.சே.துங்., புதிய ஜனநாயக புரட்சியின் தொழிலாளி விவசாயி கூட்டணியை அடிப்படையாக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தினால் தலைமை தாங்கப்படும் பரந்துபட்ட வெகு ஜனங்களில் ஒரு புரட்சிக்கான அடிப்படையான கருத்துக்களை வகுத்தார்.

முதலாவதாக சீன சமூகத்தில் வரலாற்று ரீதியாக உருவான வர்க்கங்களின் சமூக பொருளாதார அடிப்படைகளைவைத்து, வர்க்கங்களையும் வர்க்க உறவுகளையும் அலசினார்.

அடுத்து ஏகாதிபத்தியத்தோடு கூட்டணி சேர்ந்துள்ள வர்க்கங்கள் எவைகள் என்பதை பட்டியலிட்டார். சர்வாதிகாரி களாக இருந்த வட்டார தளபதிகள் (இவர்கள் சீன அரசர்களின் காலத்திய வட்டார வரிவசூல் தளபதிகள், பிற்காலத்தில் தங்கள் பகுதியை சொந்தமாக்கி கொண்டவர்கள் யுத்தம் நடத்தியும் விவசாயிகளை கொள்ளை அடித்தும் ஆடம்பரமாக வாழ்ப வர்கள், இவர்கள் யுத்த பிரபுக்கள் என அழைக்கப்பட்டனர்), அதிகார வர்க்கத்தினர், தரகு முதலாளிகள், பெரும் நிலச்சுவான் தார்கள் அவர்கள் மீது சார்ந்து நிற்கும் புத்தி ஜீவிகளின் பிற்போக்கு பகுதியினர் நம்முடைய எதிரிகளாவர். இயந்திரத் தொழில் பாட்டாளி வர்க்கம் நம் புரட்சியில் தலைமை தாங்கும் சக்தியாகும். அரை பாட்டாளி வர்க்கம், குட்டி முதலாளி வர்க்கம் ஆகியோரில் அனைத்து பகுதிகளும் நம்முடைய மிக நெருக்கமான நண்பர்களாவர்.

ஊசலாடிக் கொண்டிருக்கும் நடுத்தர பூர்ஷ்வா வர்க்கத்தை பொருத்தவரை தோழர் மாவோ. குறிப்பிட விரும்பியது, வலதுசாரி பகுதி நம்முடைய எதிரியாக மாறலாம். மற்றும் அதனுடைய இடதுசாரி பகுதி நம்முடைய நண்பனாக மாறலாம் என்கிறார். அதோடு நிற்காமல் இடதுசாரி பகுதியினரின் பால் நாம் இடைவிடாமல் கண்காணிப்போடு இருந்து நம்முடைய முன்னணியில் குழப்பத்தை உண்டாக்க அனுமதிக்காதபடி பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என்று மாவோ குறிப்பிடு கிறார். சீனாவில் தொழிலாளிவர்க்கம், விவசாயிகள், குட்டி முதலாளி வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கம் ஆகியவை புரட்சிகர வர்க்கங்களாக இருந்தன. தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் பலத்தின் காரணமாகவும், பூர்ஷ்வா வர்க்கத்தின் மிதமிஞ்சிய பலவீனம் காரணமாகவும், சீனபுரட்சியின் தலைமையை இயல்பாகவே தொழிலாளி வர்க்கம் ஏற்க வேண்டி வந்தது என்றும் மாவோ விவரிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தொழிலாளி வர்க்கம் சீனாவில் புதிய உற்பத்தி சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்திற்று என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் நவ சீனத்தில் மிக முற்போக்கான வர்க்கமாகவும் தொழிலாளி வர்க்கம் இருந்தது என்று குறிப்பிட்டால் அது மிகையாகது. மிதமிஞ்சிய அளவிற்கு தாழ்வானதொரு பொருளாதார அந்தஸ்தையும் பெற்றிருந்தது. அதன் விளைவாக புரட்சிப் போராட்டத்தில் மிக போர்க்குண முடையதாக அது தன்னை காட்டிக் கொண்டது என்று மாவோ. வர்ணிக்கிறார். சமீப காலத்திய வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாலுமிகள், ரயில்வே தொழிலாளிகள், சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் விசேசமாக ஷாங்காய் – ஹாங்காய் தொழிலாளிகளின் வேலை நிறுத்தங்களில் இதன் வலிமை ஏராளமாகக் காணப்பட்டது. இத்தகைய விபரங்களி லிருந்து தொழிலாளி வர்க்கம் தான் சீனப்புரட்சியின் தலைவனாக இருக்க வேண்டுமென்று மறுக்க முடியாத முடிவிற்கு தோழர் மா.வோ. வந்தார். மாவோவின் தத்துவார்த்த உறுதியே கம்யூனிஸ்டுகளுக்கிடையே ஒற்றுமைக்கு உறுதியாக இருந்தது. மாசேதுங் சீன நிலைமைக்கேற்ப அரசியல், ராணுவ யுக்திகளை உருவாக்கினார்.  உள்நாட்டு திமிர்பிடித்த தளபதிகளின் வட்டார நிர்வாகம் சண்டையிட்டு ரணகளமாக சீனா இருந்த நிலையில், சியாங்கை ஷேக்கின் மைய அரசும் ஒரு கேவலமான சண்டை பிரபு போல் கம்யூனிஸ்டுகளை வேட்டை ஆடிக் கொண்டிருந்ததால், விடுதலை பிரதேசங்களை உருவாக்கி கம்யூனிஸ்டுகள் செயல்பட நேர்ந்தது. பூகோள ரீதியாக இதற்கு வாய்ப்புமிருந்தது. அந்த யுக்தி அந்த நேரத்தில் சீனாவிற்கு பொருந்தியது. அந்த கோட்பாட்டை காப்பி அடிப்பது மாவோயிச சிந்தனை ஆகாது. வீரம் செரிந்த தெலங்கானா போராட்டம்  நமக்கு கற்றுத்தந்த பாடம் நமது புரட்சியின் பாதையை மக்கள் பங்கேற்கிற வெகுஜன அமைப்புகளின் மூலம் நாடு தழுவிய இயக்கம். இடதுசாரி அரசியல் அணியின் நாடாளுமன்ற வேலை, அடக்குமுறை வருமேயானால் அதனை சந்திக்கிற ஸ்தாபன அமைப்பு. சீனக் கம்யூனிஸ்ட்கட்சி மாவோ சிந்தனையின் சிறப்புக்களை கூறுவதோடு நிற்கவில்லை, பிற்காலத்தில் அவரும் தவறு செய்ய நேர்ந்ததை சுட்டிக் காட்டுகின்றனர். இதனையும் நாம் கற்றறிவது அவசியம்.

–ஐ.வி. நாகராஜன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s