தொழிலாளர்கள் போராட்டமும் சித்தாந்தப் போரும்


 

இன்றைய தேதிகளில் பணக்கார நாடுகளில் நடைபெறும்  தொழிலாளர்களின் போராட்டங்கள் விளைவுகளை எதிர்ப் பவைகளே. நெருக்கடியை விளைவிக்கும் காரணங்களை அகற்றிடும் மாற்றுகளை முன்வைத்து நடக்கும் சமூக, அரசியல் இயக்கமல்ல என்பதை, உலக நடப்புகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களால் உணர முடியும். இருந்தாலும் இப்போராட் டங்களின் உயிர் நாடியாக இருக்கும் தத்துவப்போரின் வீச்சு பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆயுதத்தை தீட்ட வேண்டிய அவசியத்தை  உருவாக்கிவிட்டது என்பதை நாம் பார்க்க மறுக்கக் கூடாது. அது பற்றிய ஒரு கருத்தலசலை வாசகர்களின் சிந்தனைக்கு இக்கட்டுரை முன்வைக்கிறது.

முதலாளித்துவத்தின் ஆகப் பெரிய சோகம்

முதலில்  இன்றைய நெருக்கடியின் தன்மைகளை, முந்தையக்கால நெருக்கடியிலிருந்து வேறுபட்டு நிற்பதை பார்க்கத் தவறக் கூடாது. இந்த நெருக்கடி உலகளவில் எதுவும் போதாமையால் வரவில்லை, கடந்த காலத்தைப்போல ஏகாதிபத்திய நாடுகளுக் கிடையே பகைமையாலும் உருவாகவில்லை. சோசலிசமா? முதலாளித்துவமா? என்ற பனிப்போராலும் நெருக்கடி வரவில்லை. இன்றைய நெருக்கடிக்கு அடிப்படையாக கடந்த காலத்தைப்போல அரசியல் சமூகக் காரணங்கள் எதுவுமில்லை. முழுக்க முழுக்க பணம் பெருகி காட்டாறாக, சுனாமியாக பொருளாதாரத்தை அடித்துச் செல்வதை தடுக்க ஒவ்வொரு நாடும் எடுக்கிற முயற்சிகளே நெருக்கடியை உருவாக்குகிறது. வியாதியைவிட மருந்தே அதிக பாதிப்புகளை கொண்டு வந்து விட்டது. அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் ஆகப் பெரிய சோகம்.

காலாவதியான பணக் கோட்பாடு

முதலாளித்துவ பணக் கோட்பாடு காலாவதியாகிவிட்டது. முதலில் வெள்ளி நாணயங்கள் பணமாகியது. அடுத்து தங்கம் வந்தது, தங்க ஸ்டாக்கை அடிப்படையாகக் கொண்டு தாள்பணம் வந்தது. இது கடன் பத்திரத் தாள் கோட்பாட்டிற்கு அடி கோலியது. நடைமுறையிலிருக்கும் சொத்து (நிலம், சரக்குகள் இவைகளின் மதிப்புகள்) அடிப்படை கொண்ட  கடன் பத்திர பணப் புழக்கம் பின்னர் வந்தது. இந்தக் கோட்பாடுகள் அனைத்தும், சரக்கின் மதிப்பு என்பது உழைப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறுக்கும் கோட்பாடுகள், அதிலும் தொழில் நுட்பங்களை புகுத்துவதால் ஒரு சரக்கை உருவாக்க தேவைப்படும் சமூக அவசிய நேரமே மதிப்பாக முடியும் என்ற மார்க்சிய கண்டுபிடிப்பை மறுக்கும் கோட்பாடுகளாகும்.

பணம் என்பது மூலதன வடிவில் மாயா சக்தி கொண்டது. அது தான் சரக்கு உற்பத்தியை ஆக்குகிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ பணக்கோட்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையே எதார்த்தமாக எழும் முரண்பாட்டின் அடிப்படைகளை பார்க்கவிடாமல் தடுக்கிறது. இன்று நடக்கும் போராட்டங்கள் ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பிழப்பு (அதாவது பணவீக்கம்) உருவாக்கும் முரண்பாட் டால் எழுகிறது என்பதை முதலில் நாம் கவனிக்க தவறக் கூடாது. இந்தப் புரிதலோடு, மேலை நாடுகளில் நடக்கும் போராட் டங்களை கவனிப்போம்.

ஐரோப்பா கொதிக்கிறது

பென்ஷன் திட்டம் பழசாகி விட்டதால்  திருத்தப் போவதாகக் கூறி பென்ஷனே கிடைக்காமல் ஆக்கும் சட்டமொன்றை பிரெஞ்சு பாமர மக்களின் எதிர்ப்புக்கிடையே அக்டோபர் (2010) மாதத்தில் பிரான்சு நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து பிரெஞ்சு பொதுத்துறை தொழிலாளர்களும், ஆட்குறைப்பால் பென்ஷன் பெறும் உரிமையை இழக்க நேரிடுவதால் குமுறிக் கொண்டிருக்கும் தனியார்துறை உழைப்பாளிகளும், வேலை வாய்ப்புகளை பறிக்கும் ஆபத்தாக இருப்பதால் மாணவர்களும், பங்கெடுக்கும் போராட்டம் அந்த நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நாட்டு அரசு, செலவினை குறைக்க நகர்புற ஏழைகளுக்கு கொடுத்து வந்த வீட்டு வாடகைப்படியை நிறுத்தி விட்டது. ஏழைகளுக்கு வழங்கிய பள்ளிக் கட்டண சலுகை களையும் நிறுத்திவிட்டது. அரசு தேச ஆரோக்கிய சேவைக்கான நிதியை குறைத்துவிட்டது. இங்கும் ஒரு போர்க்களம் உருவாகிறது. பெல்ஜியத்தில் சமூக நலனை கவனிக்க அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுகலும், ஸ்பெயினும், இத்தாலியும் நெருக்கடியின் கிடிக்கிப்பிடியில் உள்ளன. அமெரிக்கா நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச கரன்சியாகவும் உள்ள டாலர்களை அச்சடித்து குவிக்க அதனால் டாலரின் மதிப்பு குறைய, எல்லா நாடுகளும் கரன்சிகளை போட்டி போட்டு அச்சடிக்க ஒரு கரன்சி யுத்தமே உலகளவில்  அமெரிக்காவால் தூண்டப்பட்டு நடந்து வருகிறது. சுருக்கமாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏதேனும் ஒரு வடிவில் நிதி அமைப்பின் நெருக்கடி முற்றி மக்களிடையே வர்க்க முரண்பாடுகளை மோதலாக ஆக்கிவருகிறது .

முதலாளிகளின் தத்துவத் தாக்குதல்கள்

ஐரோப்பிய அரசுகள் அடக்குமுறை மூலமும், தொழிலாளர் களை தனிமைப்படுத்தும் தத்துவ விளக்கப் பிரச்சாரத்தின் மூலமும் இயக்கங்களை ஒடுக்க முனைகிறது.  உதாரணமாக பென்ஷன்  மறுப்பு சட்டத்தை திணிக்க பிரெஞ்சு அரசு கூறும் விளக்கமென்ன?. “தொழிலாளர்களின் பென்ஷ னால் அரசின் பற்றாக்குறை மலைபோல் குவிகிறது. வேலை  இல்லா காலத்து நிவாரணம், பென்ஷன் போன்ற பல சலுகைகள் உழைக்கும் வர்க்கத்தை திண்ணை தூங்கிகளாக ஆக்கிவிட்டன. வேலைக்கு ஆள்கிடைப்பது அரிதாகிவிட்டது, மேலும் சம்பள உயர்வால் உற்பத்தி செலவு உயர்ந்து, விலை உயர்கிறது, இன்றைய நெருக்கடிக்கு வேலை செய்யாமல் அனுபவிக்க வேண்டுமென்ற தொழிலாளர்களின் பேராசையே காரணம். இன்றைய தேதிகளில் உலக நாடுகளின் பொருளாதாரச் சக்கரத்தை சுழற்றுவது நிதி மூலதன வளர்ச்சியே, அது பெருக, வளர அரசு ஊக்கம் கொடுக்கவேண்டும்”. இது பிரெஞ்சு பூர்சுவாக்கள் தொழிலாளர்கள் மீது வீசும் தத்துவ ஏவுகனை.

பிரிட்டன் நாட்டு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மேல்மட்ட தலைகள் சுரண்டலையும், கரன்சியை வைத்து சூதாடும் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் இருக்க, புதிய தத்துவ விளக்கத்திற்கான சர்ச்சையை கிளப்பி வருகிறது. “சிலருக்கு மூளை அதிகம்  பலருக்கு மூளைக் குறைவு. மூளை அதிகம் உள்ளவர்கள் “செல்வத்தை” பணவடிவில் சேர்க்கிறார்கள், அது அவர்களது திறமை, அவர்களைப் பார்த்து பொறாமைப் படுவதோ, அவர்களது பணம் சேர்க்கும் உரிமையைப் பறிப்பதோ ஏற்க முடியாது. டார்வினது கோட்பாட்டின் படி தகுதி உள்ளதே வாழும்” என்று ஒருவர் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த கருத்தை  கட்சியின் பெரும் தலைகள் ஏற்றவிதம் பிரிட்டிஷ் பூர்சுவாக்கள் ஆட்டுத்தோல் போர்த்திய காட்டு நரிகள் என்பது வெளிப்பட்டது.

மேலை நாட்டு பூர்சுவாக்கள் பைபிளையும், டார்வினது கோட்பாட்டையும் திரித்து தத்துவ விளக்கம் கொடுப்பது என்பது பல  தலைமுறைகளாக உருவான  பண்பாடு என்பதை மறந்துவிடலாகாது. வட்டியை பாவம் என்று கூறிய பைபிளை காட்டியே வட்டி வாங்கும் உரிமையை  நியாயப்படுத்திய காலமுண்டு. முன்பு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய மக்களை அடிமைப்படுத்த இதே போல் முதலில் பைபிளை காட்டினர். பின்னர் அது எடுபடாமல் போகவே “ஆரிய இன” உசத்தியை நிறுவி ஒரு விளக்கம் இவர்களால் முன் மொழியப்பட்டது என்பது வரலாறு. இன்று நிறங்கள், கண்கள், முடிகள், வேறுபட் டாலும்  மானுடம் ஆப்பிரிக்க வழி வந்தவர்களே என்பதை விஞ்ஞானம் கண்டு விட்டது. ஆனாலும் இன உசத்தியை முன்வைக்கும் அரசியல்வாதிகளுக்கு மேலை நாடுகளில் பஞ்சமில்லை. உலகை  சுரண்டும் உரிமை தங்களுக்கே உண்டு, மற்றவர்கள் அடங்கி நிற்க வேண்டும் என்பது அவர்களது வாதம்.

இதை விட இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கு கொடுக்கப் பட்ட நோபல் பரிசு, மேற்கத்திய முதலாளி வர்க்கத்தின் தத்துவக் கண்ணோட்டத்தை தெளிவாகவே எடுத்துக்காட்டுறது.   இந்த ஆண்டு  நோபல் பரிசு பிரிட்டிஷ் நாட்டு லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பேராசிரியர் கிரிஸ்டோபர் பிஸ்ஸாரிடேசி, அமெரிக்க பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் பீட்டர் டைமன்ட், டேல்மார்ட்டன்சன் ஆக மூன்று பேராசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டது. (கூhந க்ஷசவைiளா யஉயனநஅiஉ டிக வாந டுடினேடிn ளுஉhடிடிட டிக நுஉடிnடிஅiஉள ஊhசளைவடியீhநச ஞளைளயசனைநளஇ ஞநவநச னுயைஅடினே டிக ஆஐகூ யனே னுயடந ஆடிசவநளேநn டிக சூடிசவாறநளவநசn ருniஎநசளவைல)

இந்த மூவரின் கண்டுபிடிப்புக்கள் என்ன? “தொழிலாளர் களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், வேலை இல்லா காலத்து நிவாரணங்களும், உழைப்பிற்கு அதன் மதிப்பைவிட அதிக விலையை கொடுக்க வேண்டிய சூழலை  உருவாக்குகிறது. அதோடு வேலையில்லாதோர் எண்ணிக்கையையும் கூட்டுகிறது, சலுகைகளை நிறுத்துவதன் மூலமே, வேலை செய்வோர் பெருகி பொருளாதாரம் வளரும்” என்பது அவர்களது கண்டுபிடிப்பின் சாரம். இந்த அரிய கண்டுபிடிப்பிற்கா நோபல் பரிசு என்று கேட்கத் தோன்றுகிறதா? பணக்காரர்களின் கிளப்புகளிலே உயர் ரக மதுவை உறிஞ்சியபடி வம்பளப்பாகக் கூறுவதை, விஞ்ஞானமாக ஆக்க சிரமப்பட்டதற்காக வழங்கப்பட்ட பரிசு என்றே இதைக் கூறவேண்டும்.  இன்னொரு வகையில் பூர்சுவாக்களைப் பற்றி மார்க்ஸ் சொன்னதை இந்த பரிசு உறுதிப்படுத்துகிறது

மார்க்ஸ் சொன்னது

“முதலாளித்துவ உற்பத்தி உறவில் தொழிலாளர்கள் மானுடராசியாக கருதப்படமாட்டார்கள், சந்தை சரக்குகளில் ஒன்றாக வைக்கப்படுவர், சம்பளம் என்பது, உழைப்பின் விலையே, தவிர அவனது பங்களிப்பால் உருவாகும் தேச மொத்த செல்வத்தில் அவனுக்குரிய பங்கல்ல”, என்பதை 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்ஸ் தனது எழுத்துக்களில் சுட்டிக் காட்டிய உண்மையாகும். 21-ஆம் நூற்றாண்டிலும் முதலாளி வர்க்க குணம் மாறவில்லை என்பதையே இந்த “நவீன” கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.

பிரான்சில் தத்தவப் போரின் கூர்முனை

முதலாளித்துவ பிரச்சாரத்தை எதிர்த்து பிரான்சில் தொழிற்சங்கங்கள் குரல் சற்று மாறுபட்டு இருப்பதால்  மக்களும் பங்கேற்கிற முறையில் எதிர்ப்பு வளர்ந்துவிட்டது. தனியார்மய உருவில் பரவும் உலகமயமே கேடுகளை கொண்டுவந்தது என்ற பிரெஞ்சு தொழிலாளர்களின் பதிலடி பிரெஞ்சு மக்களை மட்டுமல்ல உலகத் தொழிலாளர்களையே உசுப்பிவிடும் குரல் எனலாம். பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் பிரெஞ்சு முதலாளி களின் அரசை குற்றவாளி கூண்டிலே ஏற்றி குற்றப்பத்திரிகையை வாசித்திருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதின.  “வருமானத்தில் 33 சதம் வரியாக செலுத்த கடமைப்பட்ட பணக்கார குடும்பங்கள், பெரிய நிறுவனங்கள் பல சலுகைகள் மூலம் 13 சதமே வரியாக கொடுத்து வருகிறது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக பிரான்சு நாட்டு அரசின் வருவாய் குறையவே பற்றாக்குறையை மலை போல் குவித்துவிட்டது. பணக்கார நாடுகளின் அரசுகள் உலக மய கால கட்டத்தில் எல்லா நாடுகளின் பொருளாதாரங்களையும், அரசின் வருமானங் களையும் காட்டு வெள்ளம் போல் புகுந்து நிர்மூலமாக்கும் பணத்தை பெருக்கி விளையாடும் முதலாளிகளை நெறிப்படுத்தத் தவறியதே நெருக்கடிக்கு முக்கியக் காரணம் எனவே அவர்களை நெறிப்படுத்து! இல்லையேல் அரசே நடையைக்கட்டு!”. இந்த கருத்தை பிரெஞ்சு அரசிற்கு தொழிலாளர்களின் குற்றப் பத்திரிகை என்பதைவிட  முதலாளித்துவ முகாமின் நிதி மூலதன  கோட்டைமீது ஏவப்பட்ட ஏவுகனை எனலாம். பிரெஞ்சு தொழிற் சங்கங்களின் தாக்குதல் ஐரோப்பிய முதலாளிவர்க்கத்தை ஆன்ம பரிசீலனை செய்ய வைத்துவிட்டது என்று ஒரு பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

முதலாளிகளே திருந்துங்கள்!

டொமினிக் மொய்சி என்ற அந்த பிரான்சு நாட்டு சர்வதேச உறவுக்கான பல்கலைக் கழக பேராசிரியர், பூர்சுவாக்களின் நெஞ்சிலே சாம்பலாகி கிடக்கும் 18-ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு புரட்சியின் கனலை தூண்ட முயல்கிறார். அவர் எழுதுகிறார்;

“லெஹ்மென் பிரதர்ஸ் (அமெரிக்க நிதி நிறுவனம்) திவாலானது, ஐரோப்பிய நாணயமான “ஈரோ”விற்கு வந்திருக்கும் நெருக்கடி இரண்டும் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவிட்டது”. “கடந்த 200 ஆண்டுகளாக இந்தியா, சீனா இரண்டு நாடுகளின் உழைப்பையும், செல்வத்தையும் கைப்பற்றி மேலை நாடுகளே உசத்தி, மற்ற நாடுகள் எல்லாம் தனக்கு கீழ் என்று கருதிவந்தோம். இன்று அந்த காலம் மலை ஏறிவிட்டது”

“ஆகஸ்ட் 2007-இல் மேற்கத்திய வங்கி முறை நொறுங்கி விழுந்ததை  உலகம் கண்டது. இன்று சீனாவும் இந்தியாவும் நாமும் வெவ்வேறு வளர்ச்சிக்கட்டத்தில் இருப்பதால் அவர்கள் வேகமான வளர்ச்சியை அனுபவிக்க முடிகிறது. வெகு சீக்கிரம் அவர்களும் நம்மைப்போல்  நாம் உருவாக்கிய நிதி அமைப்பால் விளையும் நெருக்கடியை சந்திப்பர். அதற்கு முன்னரே வங்கி முறையை,  சீர்செய்ய முன்வரவேண்டும் – அமெரிக்காவைப் போல் இந்த மாற்றத்தை ஏற்க மறுப்பதுவோ, அல்லது ஐரோப்பியர்களைப் போல் ஆன்ம சோதனையில் ஈடுபடுவதோ  இதற்கு தீர்வாகாது. உலகளாவிய சீரான  பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க மாடலோ, பிரான்சு நாட்டு சார்கோசி மாடலோ, இத்தாலி நாட்டு பெர்ல்ஸ்கோனி மாடலோ எதுவும் பொருந்தாது – 18ஆம் நூற்றாண்டில் புரட்சிக்கு வித்திட்ட… சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்  இவைகளைக் கொண்ட  அறிவொளி இயக்கம் போல் புதிய அறிவொளி இயக்கமே தீர்வை தேடித்தரும்”

வர்க்க குணம் மாறுமா?

டொமினிக் மொய்சியின் இந்த எழுத்துக்கள் வர்க்க குணத்தை மாற்றிக்கொள்ள முதலாளிகளுக்கு வழங்கிய உபதேசமே! இந்த உபதேசம் எடுபடுமா? கேலிக்கு பலியாகுமா? என்பது இப்பொழுது தெரியாது. ஆனால்  மன்னராட்சி நீடிக்க சாதிப்படிகளும், யுத்தத்தில் மடிய மனித குப்பைகளும் அவசியம் என்ற அர்த்த சாஸ்திரத்தைவிட  மனிதவாடை வறண்டு அணுகுண்டு வாடை வீசும்  தத்துவக் கருத்துக்களை பொருளா தார விஞ்ஞானமாக மேற்கத்திய முதலாளித்துவம் பரப்புவதை முறியடிக்கும் கருத்துப்போர் இன்றையத்தேவை என்பதை டொமினிக் மொய்சி எழுத்துக்கள் நமக்கு உணர்த்தவில்லையா? முதலாளித்துவமும் அதனை வெல்லவல்ல சோசலிசமும் பிறந்த ஐரோப்பிய மண்ணிலே மீண்டும் ஒரு கருத்துப் போர் துவங்கியிருக்கிறது என்பதை இந்த எழுத்து காட்டவில்லையா? இது நல்ல அறிகுறியே.

விழிப்புணர்வு தேவை

இந்த சித்தாந்தப் போர் ஏற்றத்தாழ்வையும், வறுமையையும் வளர்க்கும் நிதி மூலதன ஆதிக்கத்தின் அஸ்திவாரத்தை அசைக்கவல்ல அரசியல், பொருளாதார, தத்துவங்களின் மூன்று முனைப்போராக குணமாற்ற மடையுமா? தான் மாறாமல் சமுதாயத்தை மாற்ற முடியாது” என்ற பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு மீளுமா? பாரிஸ் கம்யூன் உணர்வு மறு பிறவி எடுத்து புதிய கட்டத்தை எட்டுமா? என்ற கேள்விகள் புரட்சிகர மாற்றங்களை நாடுவோர் மனதில் நிச்சயம் எழும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் மெக்கார்த்தியிசமும், ஐரோப்பாவில் ஸ்டாலின் வெறுப்பும் அந்த நாடுகளில்  வர்க்கப் போராட்டங்களால் உருவான பாட்டாளி வர்க்க தத்துவ ஆயுதத்தை புதைத்துவிட்டது.  இன்று பூர்சுவா பிரச்சாரத்தால் பாட்டாளிவர்க்க சித்தாந்தம் அவதூறு செய்யப்பட்டு ஐரோப்பிய பாட்டாளி மக்களின் மனக்கதவு சாத்தப்பட்டு கிடக்கிறது.

ஒரு நூற்றாண்டு வரலாறு போதித்த பாடம்

1847 முதல் 1947-ஆம் ஆண்டு வரை  ஐரோப்பிய அமெரிக்க தொழிலாளர்கள், அறிவாளிகள், விஞ்ஞான வளர்ச்சியால், பூர்சுவாக்களின் மதச்சார்பற்ற பார்வையைத் தாண்டி இயக்க இயல், பொருள் முதல்வாத பார்வையுடன் சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வைப் பெற அமைப்புகளை உருவாக்கினர். அந்த வரலாறும், உண்மையைத்தேட அவர்களுக்குள் நடத்திய சர்ச்சைகளும்  இன்று மறுவாசிப்பிற்கு  அவர்கள் தயாராக வேண்டும். அவைகள் எல்லாம் தனிநபர் உரிமைகளை பறிப்பவை கள், மானுட இயல்பை மறுப்பவைகள் என்ற மனத்தடைகளை அவர்கள் தாண்ட வேண்டும். அவர்கள் 1864-இல் உருவாக்கிய முதல் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் உணர்வுகளை தேடவேண்டும். “பாட்டாளி மக்களின் விடுதலை என்பது உள்ளூர் பிரச்னையல்ல, ஒரு தேசத்தின் பிரச்னை அல்ல, அது நவீன சமூகமாக உள்ள எல்லா நாடுகளையும் தழுவியப் பிரச்னை, அதன் தீர்வு என்பது கோட்பாட்டாலும், நடைமுறை யாலும் நாடுகளுக்கிடையே உருவாகும் ஒத்துழைப்பை நம்பியே இருக்கிறது என்ற விழிப்புணர்வை சார்ந்தே இருக்கிறது”. “கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை, உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை” என்ற அதன் பிரகடன வாசகங்களை ஆழ்ந்து பரிசீலிக்க அவர்கள் தயாராக வேண்டும்.

1847-இல் கம்யூனிஸ்ட் லீக் லண்டனில் தோற்றுவிக்கப்பட்டது. ஐரோப்பிய அரசுகள் அதனை வேட்டையாடி ஒடுக்கினர். சதி வழக்குகள் தொடுத்து 1852-இல் செயலிழக்கச் செய்தனர். கோலோன் சதிவழக்கு வரலாற்றில் மறக்கக் கூடாத நிகழ்வாகும். புரட்சிகர கனவுகளுடன் புரட்சிக்குழுக்களின் ஆயுதம் தாங்கிய மோதல் போதாது, நவீன சமூகமாக உள்ள நாடுகளின் எல்லைகளைத் தாண்டி ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியும், விவசாய மக்களின் நேசமும், அரசை நிர்வகிக்க வல்ல திறமையும் தேவை என்ற பாடத்தை கற்றுக் கொடுத்ததோடு அது மறைந்துவிட்டது. ஆனால் அது உருவாக்கிய புரட்சிக்கனல் ஐரோப்பிய தொழிலாளர்களின் உணர்வாகிவிட்டது. அதன் விளைவாக 1864-இல் கம்யூனிஸ்ட் லீகை விட பக்குவமான சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது. இப்பொழுது அமெரிக்க தொழிலாளர்களும் இவ்வமைப்பில் பங்கேற்கிற முறையில் இருந்தது. நவீன பாட்டாளி வர்க்கம் எங்கெல்லாம் சங்கமாக திரண்டு இருந்தனரோ அங்கெல்லாம் இவ்வமைப்பின் கிளை உருவானது. சர்வதேச உறவு மலர்ந்தது. 1871-இல் பாரிஸ் கம்யூனை ஐரோப்பிய அரசுகள் ஒடுக்கிய பின்னர் கடுமையான அடக்குமுறையால் ஐரோப்பாவில் செயல்பட முடியாமல் இதன் தலைமையகம் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. அங்கும் அது செயல்படுவது தடுக்கப்பட்டதால், அமைப்பு செயலிழந்தது. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி, வழிகாட்ட புரட்சி கரமான தத்துவம், வெகுஜன அமைப்புகள் மூலம் மக்களின் அரசில் பங்கேற்பு இவைகளை உத்தரவாதம் செய்யாமல் விடுதலை கானல் நீரே என்பதை அது கற்றுக் கொடுத்தது.

1880-இல் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக இரண்டாவது பாட்டாளி வர்க்க அமைப்பு உருவானது. தத்துவார்த்த சர்ச்சைகளில் ஈடுபட்டு அது 1917-இல் செயலொற் றுமை இழந்தது. அதன் பிறகு மேலை நாட்டு முதலாளிகளின் சாகசத்தாலும், தத்துவார்த்த தாக்குதலாலும், மேலை நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் பிரபுத்துவ மோகம் பரவி  சர்வதேச உணர்வு நீடு துயில் கொண்டது. தத்துவப் போரின் கூர்முனை மழுங்கியது. 1847 முதல் 1947 இந்திய, சீன விடுதலை வரையிலான பாட்டாளி வர்க்க சர்வதேசிய இயக்கத்தின் வரலாறு இன்றைய பாட்டாளி வர்க்கத்திற்கு தத்துவ ஆயுதத்தைக் கூர்மைப்படுத்த உதவும் அனுபவங்களாகும். ஏற்கனவே செய்த தவறுகளை திரும்ப செய்யாமலிருக்க உதவும்.இதைவிட புதிதாக இருப்பது என்ன என்று அறிய உதவும். வரலாற்று நிகழ்வை விட, தத்துவத் துறையில் நடந்த சர்ச்சைகள், அதன் பரிமாணங்கள் அரசியல் சமூக, பொருளாதாரத் துறைகளின் தத்தவ அடிப்படைகள், மோதல்கள் இவைகளைப் பற்றிய  ஞானம், பூர்சுவா விறுப்பு வெறுப்பு பிரச்சாரத் தாக்குதல்களை சந்திக்க உதவும். வரலாற்றை மறந்தவனுக்கு எதிர்காலமில்லை  என்ற பொதுமறை சோசலிச இயக்கத்திற்கும் பொருந்தும்.

இன்றைய ஐரோப்பிய போராட்டங்களின் சாரமென்ன?

“நிதி மூலதனத்தின் உலகமயமே கேடுகளை கொண்டுவருகிறது” என்ற பிரான்சு நாட்டு தொழிற்சங்கங்ளின் தத்துவத் தாக்குதல் மேலை நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் கடமையை உணரச் செய்யும் காலகட்டத்தின் துவக்கமே இது என்பதில் ஐயமில்லை.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s