ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1, தனது 2004 குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு தனியார்துறை பணிகளில் ஒதுக்கீடு உத்தரவாதப் படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியது. ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும், இதை அமலாக்க அரசு தவறியுள்ளது. சமூக நீதியை வழங்கும் அரசியல் உறுதி ஆளும் அரசிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இப்பிரிவு மக்களுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்திய முதலாளிகள் பிரதமரிடம்;- “வேலையில் இடஒதுக்கீடு தர இயலாது, இது திறனை பாதிக்கும்” என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தொழில்துறையின் மூன்று பெரும் கூட்டமைப்புகளான சி.ஐ.ஐ., ஃபிக்கி, அசோகாம் ஆகியவற்றின் தலைவர்கள் அடங்கிய குழு, பிரதமர் அலுவலகம் சென்று, “எங்களால் தனியார்துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான 5 சதவிகித இடஒதுக்கீட்டை தர இயலாது” என்று விவாதங்களுக்கு வழிவிடாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அறிவித்து விட்டு வெளியேறிய செய்தி உள்ளது. அரசுக்கும் மேலாக தனியார்துறை ஆதிக்கம் கோலோச்சுகிறது என்பது இதனால் மீண்டும் நிரூபணமாகிறது.
தங்களது பணிக்கு ஆள் எடுக்கும் முறை உட்பட எதிலும் அரசு தலையீடு கூடாது என்ற தங்கள் நிலைபாட்டிலிருந்து, மிக பிடிவாதமாக இந்த ஒதுக்கீட்டு ஆலோசனையை மறுத்துள் ளனர் முதலாளித்துவ ராஜாக்கள்.
தாராளமயக் கொள்கை காவலர்களான இவர்கள், மக்களுக்கான அரசின் கடமைகள் அனைத்தையும் அரசு கைவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், சமீபத்திய பொருளாதார தேக்க காலத்தில் தங்களை பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும். சலுகைகள் மற்றும் மீட்பு நிதி திட்டங்களை தங்களுக்கு வாரி வழங்கிட வேண்டும் என்று வெட்கம்கெட்ட முறையில் அரசை நிர்பந்தித்தனர். தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு கவசமான ஒதுக்கீட்டு முறையின் பலன்களை தின்று கொழுத்து நின்றபடி, தற்பொழுது வேலையில் ஒதுக்கீடு என்ற வழிகாட்டலுக்கு எதிராக ஆர்ப்பரிக்கின்றனர்.
‘தடையற்ற போட்டி’ என்ற சந்தை மாய உலக காலத்திலும் கூட அந்நிய நிறுவனப் போட்டியை எதிர்கொள்ளும் ஆயுதங்களாக அரசிடமிருந்து பல்வேறு சலுகைகள் மற்றும் வரி விடுமுறைகளை (கூயஒ ழடிடனையலள) கேட்டு பெற இவை சிறிதும் தயங்கவில்லை. அவர்களுக்கு அப்பொழுதுதான் “சம ஆடுதளம்” அமையுமாம்! ஆனால் வாழ்விழந்து வாய்ப்பிழந்து நிற்கும் தாழ்த்தப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கு ஒதுக்கீடும், அரசு உதவியும் சம ஆடுதளத்தை உருவாக்கும் என்று நாம் சொன்னால் ‘இல்லை, இல்லை’, என்று காதுகளை மூடிக் கொள்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத் திற்கு தாங்களே மனமுவந்து சிலவற்றை செய்ய இருப்பதாக ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். எக்காரணம் கொண்டும் தனியார் துறையின் பணிகளில் தாழ்த்தப் பட்டோருக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எப்பொழுதும் நிர்பந்திக்கக் கூடாது என உக்கிரம் காட்டுகின்றனர்.
ஆனால் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா? தனியார்துறை பணிகளுக்கு ஆள் எடுப்பு முறையில் சாதிய பாகுபாடு ஆட்டம் போடுகிறது என்பது தான். “சாதியால் தடை: நவீன இந்தியாவில் பொருளாதாரத் தடை” என்ற நூலை சுகதியோ தோரட் மற்றும் கேத்ரின். எஸ். நியூமேன் என்பவர்கள் பல்வேறு கள அனுபவங்கள் மற்றும் ஆய்வுகளின் தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் முறைசார் துறையில், மேல்சாதி விண்ணப்ப தாரர்களை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ தகுதி பெற்றிருந்தும் வேலைக்கான ஆட்கள் தேர்வில் வடிகட்டலில் கீழ் சாதியினர் தப்பித்து தேர்வாவது மிக அரிதாகவே உள்ளது என்ற உண்மையை இந்நூல் முன்வைக்கிறது. 25 இந்திய தொழில் நிறுவனங்களை சார்ந்த மனிதவள மேலாளர்களை பேட்டி கண்டு ஆய்வு செய்யப்பட்டது. இவர்கள் ஆட்கள் தேர்வுக்கு பின்பற்றும் சில ஒரே பாணியிலான வடிகட்டும் முறைகளால் கல்வி மற்றும் திறன் பெற்றிருந்தும் சம போட்டியிட முடியாமல் தவிக்கும் கீழ்நிலை சாதியினரை நிராகரிப்புக்குள்ளாக்கும் தந்திரம் மேற்கொள்ளப் படுகிறது.
ஏராளமான நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, சாதிய பாகுபாடு ஏதோ பழைய கால பிரச்னை என்று புறந்தள்ள இயலாது என்று உணர முடிகிறது. சாதியம் சமத்துவமின்மை உருவாக ஒரு சார்பு காரணம் என்று குறைத்து எடை போடுவது தவறு. மேல்மட்டத்தினருக்கும் கீழ்மட்டத்தினருக்கும் சமூகத்தில் வளர்ந்து வரும் மிகப்பெரும் இடைவெளியை உருவாக்கும் தீவிர செயலூக்கம் கொண்ட தீய சக்தியாக உள்ளது” என்ற முடிவுக்கு இந்த ஆய்வுகள் வருகின்றன.
சாதிய பாகுபாடு திட்டமிட்டு அமலாகிறது. இது கல்வி பெறுதலில், வேலை பெறுதலில், மூலதன சொத்து மற்றும் வேலைவாய்ப்பு கை கொள்ளுதலில், வருமான வேறுபாட்டில் எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி காட்டுகிறது.
இதுவே சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரின் ஏழ்மையை அதிகப்படுத்துவதிலும், நேரடியாகவும் மறைமுகமாக வும் செயலாற்றுகிறது என்பதையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
“தன் சமூக வடிவ மறு உற்பத்தி” என்ற அணுகுமுறை வேலைக்கான ஆட்கள் தேர்வில் நிகழ்கிறது. பெரும் நிறுவனங் களில் செல்வாக்கான பதவியிலிருப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்கள் தான் திறமையாக செயலாற்று வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பணிக்கான தேர்வில் தங்கள் சமூகத்தினரையே தேர்வு செய்யும் போக்கு பெரும்பாலான மனிதவள மேலாளர்களுக்கு பரவலாக உள்ளது. இதைத்தான் “தன் சமூக வடிவ மறு உற்பத்தி” என்கிறோம்.
தங்கள் சமூகத்திற்கு வெளியில் இருக்கும் சில சாதி பிரிவினர் பல வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என்ற எண்ணம் பலரிடம் மேலோங்கியுள்ளது. சமூகத் தொடர்புகள் பலமாக உள்ளவர்களுக்கு பணிவாய்ப்பு பெறும் வழி திறக்கிறது. காரணம். சமூகத் தொடர்பு என்பது சமஅந்தஸ்து நிலவும் குழு மத்தியில் நிகழ்வதால் அவர்களை சார்ந்தோருக்கு பணி பரிந்துரை செய்யப்படுகிறது. சமூகத் தொடர்பு மூலமே இன்று நிபுணத்துவ பணியிடங்களும், இடைநிலை பணி பெறும் வாய்ப்பும் சாத்தியமாகிறது. இதுதான் யதார்த்த நிலையாக உள்ள கட்டத்தில், “நாங்கள் தன்னார்வமாக தாழ்த்தப் பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் சில முயற்சிகளை செய்வோம்” என்று முதலாளிகள் சொல்வதை ஏற்க இயலாது. எனவே, தனியார் துறையில் எஸ்.சி./எஸ்.டிக்கான வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதை சட்டப்பூர்வமாக்கியே தீர வேண்டும்.
சந்தைப் போட்டி உலகில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தரம், திறன் குறைவு ஏற்பட்டு, போட்டியில் பின் தங்க நேரிடும் என கூச்சலிடுகிறது முதலாளித்துவம். ஆனால் மேற்சொன்ன ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? “தரம், திறன் அளவுகோலின் நிகழ்வாக சாதிய குருட்டுப் பார்வை நிற்கிறது. இதனால் தகுதியும், திறனும் பெற்றிருந்தும் கீழ்நிலை சாதி விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படாத அவலம் தினம் தினம் தொடர்கிறது” என்று சுட்டுகிறது.
சாதிய குருட்டுக் கொள்கையின் துணையுடன் நிற்கும் தரம் சார் ஆள் தேர்வு முறையை தடை செய்யும் சாதிய பாகுபாட்டுக்கு எதிரானச் சட்டம் தேவை. பல இடங்களில் குடும்பப்பின்னணி அறிதல் என்பது ஏற்கப்பட்ட தேர்வு படிகளில் ஒன்றாக உள்ளது. இது மறைமுகமாக சாதியை அறியும் பணியே. இவ்வழக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
இந்த ஆய்வுகளில் தரம் உற்பத்தியாகும் முறை கேள்விக்குள் ளாக்கப்படுகிறது. “உயர்திறன் பெறல் என்பது ஒரு தனிநபரின் திறமையை பொறுத்து மட்டும் அமையவில்லை. பொதுப் பள்ளிகளில் அரசு காட்டும் அக்கறை, முதலீடு மற்றும் அரசு சுகாதார சேவை, சத்துணவு போன்ற பல அம்சங்களை பொறுத்தே திறன் வளர்ச்சி கிடைத்தல் உள்ளது. இதில் காட்டப் படும் பாரபட்சம், நிறுவனசார் புறக்கணிப்பு பல கோடி தாழ்த்தப் பட்ட சாதி இந்தியர்களை வாழ்வு காலம் முழுவதும் வறுமைக்கு தள்ளி, புறக்கணிக்கப்பட்டவர்களாகவே வைக்கின்றது. இந்த ஆடுகளம் மாற்றியமைக்கப்படாத வரையில், தரம் பற்றி பேசும் எந்த போட்டி ஆட்டமும் நியாயமற்றதாகும்.
தனியுடைமை கோலோச்சும், சமூகத்தில் பிறப்பு சார்ந்த உரிமைகள் நிலவும் சமூகத்தில் தரம் பற்றி பேசுவது சிறிதும் பொறுத்தமற்றது. தர்க்கரீதியில் பேசினால் தரம் என்பது ஒருவர் தனது துவக்க நிலையிலிருந்து இறுதி நிலைக்கு எப்படி வழங்கப்பட்ட விசை எறியலில் நகர்கிறார் என்பதை அளவிடுத லேயாகும். 1965-இல் லண்டன் ஜான்சன் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த உரை தான் அமெரிக்காவில் அமலாகும் “நிலை உயர்த்தும் செயல்” திட்டம் உருவாகக் காரணம். “பல ஆண்டு காலம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கிடந்தவனை ஒரு தருணத்தில் விடுவித்து பந்தயக் கோட்டில் நிறுத்தி நீ எல்லோருடனும் போட்டியிட சுதந்திரம் பெறுகிறாய் என்று சொல்ல முடியுமா? வாய்ப்புகளின் கதவுகளை மட்டும் திறந்தால் போதாது. இக்கதவுகளின் வழியே நடக்கும் திறன் எல்லா குடிமக்களுக்கும் சாத்தியமாக வேண்டும்”.
அது சாத்தியமாகும் காலம் வரை விளிம்பு நிலை மக்களின் ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்கான அனைத்து வகை மாற்றுத் திட்டங்களும், நியாயமான நிறுவன நிதி ஒதுக்கீடுகள் பகிர்வும் தேவை” என்பது அந்த உரையின் பிரதானப் பகுதியாகும்.
சன்காய் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உலகின் முதல் தர 500 பல்கலைக்கழக பட்டியலில் (இந்திய பல்கலைக்கழகம் 2) இடம் பெற்றுள்ள பல்கலைக் கழகங்கள் அனைத்திலும், பல்வேறு கலாச்சார மொழி மற்றும் சமூக இனம் சார்ந்த பல தரப்பினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதை காட்டுகிறது. “அறிவாக” உள்ளதால் மாணவர்களை சேர்க்காமல் “ஆர்வம்” உடையவர்களாக இருப்பதால் இவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் ஒரு பன்முகத் தன்மையை இப்பல்கலைக் கழகங்களுக்கு வழங்குகின்றனர். இப்படி பல்வேறு தரப்பினரை சேர்த்தால், ஹார்வேர்ட், ஆக்ஸ் ஃபோர்ட் பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் பொருளாதார மையம் இவற்றின் தரம் தாழவில்லை. ஹார்வேர்ட் மாணவர்களின் 37 சதவிகிதம் மாணவர்கள் கருப்பு இனத்தவர் ஆவர் (ஞநடியீடந டிக ஊடிடடிரச)
எனவே, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதால் நிறுவனத்திற்கு பாதிப்பு இல்லை. வேலையை முடிப்பதில், அனுபவத்தில் வளம் சேர்ப்பார்கள் என்ற உண்மையை இந்திய முதலாளிகள் உலகம் உணர வேண்டும். ஒப்புக் கொள்ள வேண்டும்.
“எல்லோரையும் உள்ளடக்கிய ‘வளர்ச்சி’ பற்றி அதிகம் அக்கறை கொள்வதாக வெற்றுக் கூச்சலிடுகிறது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ‘எல்லோருக்குமான வளர்ச்சி’ சாத்தியமாக வேண்டுமெனில் அதை எட்டுவதற்கான துல்லியமான திட்டங்கள் அவசியம். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான வலுவான சட்டத்தின் துணை இவ்வளர்ச்சிக்கு அவசியம். தனியார் துறையில் எஸ்.சி./எஸ்.டிக்கான இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் தேவை. இந்நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு தினந்தோறும் எழுப்பப்படும் பாகுபாட்டுத் தடைகளை தகர்க்க வேண்டும். இவற்றின் செயல் அவசியத்தை அரசு உணர வேண்டும்.
இவையெல்லாம் இடைகால நிவாரணங்கள் மட்டுமேயாகும். பொதுத்துறையை பலப்படுத்தல், வேலை உத்தரவாதத்தை உறுதிப்படுத்தல் மற்றும் நிலச் சீர்திருத்த அமலாக்கம் போன்ற முழுமையான தீர்வுகளும் செயல்படுத்தப்பட வேண்டும்.
– தமிழில்: ச. ஹேமலதா
மூலம்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
–மம்தா