அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு: சட்டத்தை மீறியவர்களுக்கு வெற்றி


 

செப்டம்பர் 30-ஆம் தேதி 2010இல் லக்னோவில் அயோத்தி பிரச்னைக்காக, நிறுவப்பட்ட அலஹாபாத் நீதிமன்றத்தின் அயோத்தியா இனா (பெஞ்ச்) தன்னுடைய தீர்ப்பின் சுருக்கத்தை, அதிகாரப் பூர்வமான மையத்தின் மூலம் வெளியிடுவதற்குச் சற்று முன்பாகவே – “இந்துக் கட்சிகளை”ச் சேர்ந்த வழக்கறிஞர்கள், “இரட்டை விரலைக் (‘ஆங்கில ‘வி’ போன்று விரலை உயர்த்திக்) காட்டிய வண்ணம் வெளியே வந்தார்கள். அங்கே அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த ஒலி பெருக்கிகளைப் பிடுங்கினார்கள். “எதிர்த் தரப்பினருடைய வாதங்களை ஏற்காமல், நீதிபதிகள் ராமனை அவருக்கே உரிய அவருடைய பிறந்த இடத்திலேயே, மீண்டும் வீற்றிருக்கச் செய்தார்கள்” என்று அறிவித்தார்கள். இதுமட்டுமல்ல, ஒரு வழக்கறிஞர் “இனி முஸ்லிம்கள் அவர்களுக் கென்று ஒதுக்கிய அந்தச் சிறிய இடத்தையும் விட்டுக் கொடுப்பது தான் நல்லது. அப்போது தான், வெற்றிபெற்ற (அதாவது “இந்து” தரப்பினரை) வர்களோடு சமரசம் செய்து கொள்ள முடியும்” என்று வேறு கூறினார். மேற்கூறியபடி இந்த வழக்கறிஞர்கள் பேசியதே அயோத்தியா தீர்ப்பின் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பு எனலாம்.

இந்த வழக்கின் தீர்ப்பின் சுருக்கமும், அதன் முக்கிய பகுதிகளும் தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பை ஆழ்ந்து பரிசீலித்த பலரும், “ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒரு தலைப்பட்சமாக அமைந்துள்ளது இந்தத் தீர்ப்பு” என்று குறிப்பிட்டனர். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவரும் இவ்வாறே குறிப்பிட்டார்.

சர்ச்சையின் தன்மை

இந்த சிக்கலின் முதன்மையான அம்சம், இது அடிப்படையில் ஒரு சொத்துப் பிரசனை” என்பது தான். உயர்நீதிமன்றம் இதை எப்படி கையாண்டிருக்கிறது என்பதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். 1949 டிசம்பர் 22-23-ஆம் தேதி இரவில் ராமர் வழிபாட்டுச் சிலைகள் பாபர் மசூதிக்குள் இரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன என்பதை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்குப் பிறகு, நிர்வாகம் மற்றும் நீதிமன்ற ஆணைகளின் மூலம் முஸ்லிம் களுக்கு பாபர் மசூதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இத்தகைய ஆணைகளின் மூலம் மட்டுமே சொத்துரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. அதனால், டிசம்பர் 22-23, 1949 நடந்த நிகழ்ச்சிக்கு முன்பு அந்த இடத்தில் உரிமை யாரிடம் இருந்தது, அங்கே இருந்தவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் நீதிமன்றத்தின் முன்பிருந்த முக்கிய விஷயமாகும். மேற்கூறிய அடிப்படையில், நிர்மோஹி அகரா, ஸன்னி வக்ஃபு வாரியம் ஆகிய இருதரப் பினருக்கும் இடையேயான இந்தப் பிரச்னையில் தலையிட்டு, நீதிமன்றம் வழக்கை விசாரித்திருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்திற்கு இந்த இரண்டு குழுக்கள் தான் உரிமை கொண்டாடுபவர் களாயிருக்க வேண்டும். ஆனால் உயர்நீதிமன்றமோ, இந்தப் பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அனைத்து நீதிபதிகளுடைய தீர்ப்பு (குறிப்பாக நீதிபதி சர்மா, அகர்வால் இருவருடைய தீர்ப்பும்) இந்து சமய நம்பிக்கையின் அடிப்படையில், ராமனுடைய பிறந்த இடம் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே மையப்படுத்தி, வழக்கின் மிக முக்கிய அம்சமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்களின் நம்பிக்கைப்படி வழிபாட்டுக்குரிய சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பாபர் மசூதியின் மேற்கூரையின் கீழ் பகுதியிலுள்ள இடம் தான் ராமன் பிறந்த இடம் என்றும், இதை மையப்படுத்தித்தான் வழக்கே தொடுக்கப்பட்டிருக்கிறது; இதுதான் வழக்கின் முக்கிய அம்சம் என்பதை மையப்படுத்தி இந்த விஷயத்தில் தீர்ப்பு உறுதிபட வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீதிபதிகள் நம்பிக்கைக்கும் பிரசாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உணரத் தவறி விட்டார்கள். இந்த வேறுபாடு மிகவும் அடிப்படையான வேறுபாடாகும். பொதுவாக இந்துக்கள் ராமன் அயோத்தியில் பிறந்தார்  என்று நம்புகின்றனர். “ராம சரித்திர மான்ஸ்” என்ற இந்தி ராமாயண காவியத்தை எழுதிய துளஸிதாஸரும் இவ்வாறுதான் குறிப்பிடுகிறார். அண்மைக் காலம் வரை நாட்டுப்புறப், புராணக் கதைகளில் கூட பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்ததாகக் கூறப்படவில்லை.

திடீரென்று முளைத்த கல்வெட்டு (“நடப்பட்ட” கல்வெட்டு)

பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதியன்று வேண்டுமென்றே இடிக்கப்பட்ட பிறகு, விஸ்வ இந்து பரிஷத் மசூதி இருந்த இடத்தில், ஒரு கல்வெட்டைத் தங்கள் கர சேவகர்கள் (தொண்டர்கள்) கண்டெடுத்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். இது வடமொழிக் கல்வெட்டு என்றும், இது மசூதியின் இடிபாடுகளுக்கிடையே இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தக் கல்வெட்டு, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கல்வெட்டில், அனைய சந்திரன் என்ற மன்னன் அந்த இடத்தில், விஷ்ணு ஹரியின் கோவில் ஒன்றைக் கட்டியதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விஸ்வ இந்து பரிஷத் இந்தக் கல்வெட்டை ஒரு சான்றாகச் சமர்ப்பித்தது. ராமன் பிறந்த இடத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டதற்கான சான்றாக இந்தக் கல்வெட்டைக் காட்டினார்கள். விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் கல்வெட்டுச் செய்தியில், இந்தக் கோவில் ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்தக் கோவிலைக் கட்டிய குடும்பத்தின் “வீரத்தின் பிறப்பிடம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் “சர்வே”-யின் முன்னாள் தலைவர் கல்வெட்டுத் துறையைச் சேர்ந்த, முனைவர் கே.வி. ரமேஷ் மேற்கூறிய குறிப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தின் சாட்சிகளில் ஒருவரும், நீதிமன்றத்தில் இதையேதான் கூறியுள்ளார். தவிர ‘இந்திய வரலாறு காங்கிரஸ்’, 2003-ஆம் ஆண்டு, தனது 64வது கூட்டத்தை நடத்திய போது, புஷ்பபிரஸாத் என்றும் ஆய்வாளர், தன்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றை அந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதிலும் மேற்கூறியவாறே குறிப்பிட்டுள்ளார். சட்டத்தில் ஒரு விதி உண்டு. அதன்படி, ஒரு வழக்கில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய தரப்பு அளித்த சான்றைத் தாங்களே, கேள்விக்குரியதாக ஆக்கக் கூடாது (உயn nடிவ ளூரடிவயவiடிn வைள டிறn நஎனைநnஉந) என்பதுதான் அந்த விதி. விஸ்வ இந்து பரிஷத் மேற்கூறிய கல்வெட்டு இடிபாடுகளுக்கிடைய கிடைத்தது என்று கூறுகிறது. அத்தோடு அந்தக் கல்வெட்டில் காணப்படும் செய்தியைப் பற்றி ஆய்வாளர்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறது. அப்படியானால் ஒரு விஷயம் தெளிவாகிறது. 900 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்வெட்டைச் செதுக்கியவர்களுக்கு அந்தக் கோவில் கட்டப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த இடம் என்பது தெரியாது என்பது தான் அது. இந்தக் கல்வெட்டின்படிப் பார்த்தாலும் கூட ராமர் கோவில் 900 ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் கூறுவதைப் போல் “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்” இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். (உண்மையில் இந்தக் கல்வெட்டே, அந்த இடத்தில் அண்மையில் நாட்டப்பட்டதுதான்; இதே போன்று கல்வெட்டு ஒன்று லக்னோ அருங்காட்சி யகத்தில் உண்டு. அது சமீபத்தில் காணாமல் போய்விட்டது!) 1971-இல் பேராசிரியர் ஆர்.எஸ். சர்மாவும், அவருடைய சக பேராசிரியர் களும், ராமஜென்ம பூமி, பாபர் மசூதியைப் பற்றி “நாட்டு மக்களுக்கு ஓர் அறிக்கை” என்ற கட்டுரையை பிரசுரித்தார்கள். அந்தப் பிரசுரத்தில் “அயோத்தியா மஹாத்மியம்” (அயோத்தியின் இறப்பு) என்ற பகுதியில் ராமஜென்ம பூமியைப் பற்றிய வருணனை காணப் படுகிறது. இந்தப் புராணம் 16-ஆம் நூற்றாண்டிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொகுக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் சூழலைப் பார்க்கும் போது, இந்த புராணத்தின் வருணனை அத்துடன் பொருந்த வில்லை என்று குறிப்பிடுகிறார்கள். அந்தப் புராணத்தைப் பொருத்த வரையில், சரயூ நதிக்கரையில் அமைந்தி ருக்கும் ரேன மோசன என்ற இடத்திற்கும், பிரம்ம குண்டம் என்ற இடத்திற்கும் இடையில் தான் ராம ஜென்ம பூமி, (ராமர் பிறந்த இடம்) என்று தான் நம்பினார்கள் என்று தெரிகிறது. 1885-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி, மஹந்த் ஒருவரதாஸ் என்பவர் அன்றைய அரசுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் பாபர் மசூதிக்கு அருகில் இருந்த “சபுத்ரா”-வில் ராமருக்கு ஒரு சிறிய கோவில் கட்டுவதற்கு அனுமதி கோரினார். இந்த வழக்கில் அந்த ‘சபுத்ரா’ என்பது தான், ராமர் பிறந்த சரியான இடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இடம் 21க்கு 17 என்ற அளவில் இருந்தது. இதுவும் பாபர் மசூதியின் திறந்த முற்றத்தை விட்டு (ஊடிரசவ லயசன) விலகியே இருந்தது. மசூதியின் உட்புறப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட வில்லை. மேலும் மசூதியின் மையக் கூரைப் பகுதிக்குக் கீழே தான் ராமனின் பிறப்பிடம் இருந்ததாக எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடியது அண்மைக்கால நிகழ்வே

1943-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்களுக்குப் பிறகு, பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று அயோத்தியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த சிலர் குரலெழுப்பத் தொடங்கினார்கள். குறிப்பாக 1949 – டிசம்பர் 22, 23 தேதிகளில் கடவுளர் சிலைகள் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டது ‘சிலைகள் வைக்கப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த இடம்’ என்று அழுத்தமாகக் கூறப்பட்டது. மூன்று நீதிபதிகளும், சிலைகள் அங்கே வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொண்டாலும் “இந்தச் செய்கை சமய நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டது; அதனால் இது ஒன்றும் பெரிய குற்றமல்ல” என்று கூறி “போனால் போகிறது”- என்பதைப் போல் விட்டுவிட்டனர். 1980 முதல் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் இரண்டும் “சிலைகள் வைக்கப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த இடம்” என்று பிரச்சாரம் செய்யத் துவங்கினர். இதுவரை ஒரு சில உள்ளூர்காரர்களால் மட்டுமே நம்பப்பட்ட இந்த விசயம், விஸ்வ இந்து பரிஷத்தால்” ஒரு மாபெரும் உண்மை”-என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரசாரத்திற்கு நிதி உதவியும் தாராளமாகக் கிடைத்தது. பிரசாரமும், நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் சொல்வதையெல்லாம் மத நம்பிக்கையுள்ள இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதாக, எந்தவித ஆதாரமும் இன்றி, அலஹாபாத் நீதிமன்றமும் முடிவுக்கு வந்து விட்டது.

இவ்வாறு, ஒரு மசூதி இருந்த இடத்தைக் கைப்பற்று வதற்காக புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மரபை ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். ஆனால் ஏராளமான இந்துக்கள் ஏற்றுக் கொள்ளும் இன்னொரு மரபு ஒன்று உண்டு; அதாவது “ராமன் கருணையே உருவான ‘நீதியின் உறைவிடம்’ என்ற இந்த நம்பிக்கை மிக, மிகப் பழமையானது. தற்போதைய “ராமஜென்ம பூமி”யைப் பற்றிய நம்பிக்கையை விட வலுவானதும் கூட மேற்கூறிய மரபை நீதிமன்றம் கவனிக்காமல் விட்டுவிட்டது. அது மட்டுமல்ல. இந்த நீதிமன்றம், ராமனை ஒரு சட்டரீதியான, சாதாரண நபர் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. பாபர் மசூதி இருந்த நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடுவதற்காக ராமனின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு ராமருக்காக வழக்காடுவதாகக் கூறிக் கொள்ளும் விஸ்வ இந்து பரிஷத்தின் ஆதாரமற்ற வாதங்களுக்கு  சட்ட ரீதியான அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. ராமரை ஒரு வெறும் மனுதாரராக ஆக்கிவிட்டது. விஸ்வ இந்து பரிஷத்தால் முன்னிறுத்தப்பட்ட அமைப்பு 1989இல் தான் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தது. சாதாரணமாகப் பார்க்கப் போனால், இந்த வழக்கு குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி விட்டதால், காலாவதியாகிப் போயிருக்க வேண்டும். பார்க்கப் போனால், நிர்மோஹி அகரா என்ற அமைப்புதான் இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய அமைப்பு. விஸ்வ இந்து பரிஷத்திற்கும் சிலைகள் வைக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய இடத்திற்கும் 1949-க்கும் முன்பு எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இந்த வழக்கில் விஸ்வ இந்து பரிஷத். தன்னையும் இணைத்துக் கொண்டதை, நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம், ராமரையும் சட்ட ரீதியான ஒரு நபர் என்று ஏற்றுக் கொண்டதால், ஒரு ஆதாரமற்ற உரிமை கொண்டாடுதலுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டது.

இப்படி ஒரு தெய்வீக நிலையிலிருக்கும் ஒரு விஷயத்தை, நீதிமன்றம் சட்டரீதியான நபராக ஏற்றுக் கொண்டது என்பதை நம்பவே முடியவில்லை. இது நம் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மதச்சார்பின் மைக்கும் சற்றும் பொருந்தவில்லை. நீதிமன்றம் இதற்கு முன் நடந்த ஷாஹித் கஞ்ஜ் மசூதி வழக்கில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில், “பிரிவி கவுன்சில் (காலனி ஆட்சிக் காலத்தில் மிகுந்த உயர்மட்ட நீதிக்குழு) தீர்ப்பை முன்னுதாரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளது. இதுவும் ஏற்கத்தக்கதல்ல. ஷாஹித் கஞ்ஜ் மசூதி வழக்கில் ‘ஒரு மசூதி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொது இடம். ஆனால் ஒரு இந்துக் கோவில், ஒரு குறிப்பிட்ட கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம். இதனால் கோவிலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென்று” அந்த வழக்கில் பிரிவி கவுன்சில் குறிப்பிட்டது. பிரிவி கவுன்சிலின் இந்தத் தீர்ப்பு இன்றைய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் 15, 25, 26- இந்தச் சட்டப் பிரிவுகளுக்கு முரணானது. இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்டிபாட்டிற்கு முரணானது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல

அதிகபட்சமாக “இந்தியா ஒரு குடியரசாக (அதாவது சனவரி 26, 1950) அறிவிக்கப்படுவதற்கு முன்னால், கோவில்கள் பெற்று வந்த பொருளுதவிகள் போன்ற கொடைகளைத் தொடர்ந்து பெறலாம்.” என்று வேண்டுமானால் நீதிமன்றம் கூறலாம். ஆனால் இந்தியா குடியரசு என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு இல்லாத ஒரு சிறப்புரிமையை (யீசநஎடைநபந) ஒரு அறக்கட்டளைக்கோ, ஒரு நன்கொடை அமைப்புக்கோ (நுனேடிறளஅநவே) இன்றைய கால கட்டத்தில் ஒரு நீதிமன்றம் வழங்க முடியுமா? நமது அரசியல் சட்டத்தின் முன்னுரை ஜனவரி 3-ந் தேதி 1977-இல் திருத்தப்பட்டு அதில் “மதச்சார்பற்ற குடியரசு”, என்ற சொற்றொடர் இணைக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் மேற்கூறிய சிறப்புரிமையை அளிக்க முடியுமா?

மனுதாரர்கள் மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடி, வழக்குத் தொடர்ந்தார்கள். அவர்களுக்கு ராமனைப்பற்றி ஒரு குறிப்பிட்ட கருத்து இருந்தது. ஆனால், நம்நாட்டின் தந்தை என்று போற்றப்படும் காந்திக்கும் ராமனைப்பற்றி ஒரு கருத்து உண்டு. விஸ்வ இந்து பரிஷத் போன்றவர்களுடைய கருத்தை விட மாறுபட்ட காந்தி விரும்பிய ‘ராம்தூன்’ (ரகுபதி ராகவ….. என்ற பாடல்) கூறியபடி, “ராமன் மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன்.”, ஈஸ்வரன் அல்லா இரண்டுமே உன் பெயர்கள் தான், எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடுப்பாய்  இறைவா”. இதுதான் நம் நாட்டு தந்தை கண்ட ராமன்.

வரலாறும்-தொல்லியலும்

பாபர் மசூதி, ராமஜென்ம பூமிப் பிரச்னையில் நீதிமன்றம் வரலாறு, தொல்லியல் தொடர்பான விஷயங்களில் கூடத் தன்முடிவுகளைக் குறிப்பிட் டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவுகள் வினோதமா யுள்ளன. மசூதியில் பார்க்க மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இருந்தது. இது மசூதியைக் கட்டிய பாபரின் ஆணைப்படி செதுக்கப் பட்டது. இத்தகைய கல்வெட்டுக்களைத் தான் வரலாற்று அறிஞர்கள் முக்கிய சான்றுகளாகக் கருதுவார்கள். ஆனால், நீதிபதிகள், இந்தச் சான்றுகளை ஏற்றுக்கொள்ள வில்லை. ஒதுக்கி விட்டார்கள். இத்தகைய கல்வெட்டுக்கள் தான் அடிப்படை.  இந்தக் கல்வெட்டு ஒரு செய்தியை உறுதிப்படுத்துகிறது. பாபர் மசூதி, பாபரின் படைத்தலைவர்களில் ஒருவரான மீர்பாகி என்பவரால் 1528-இல் கட்டப்பட்டது. மீர்பாகி அப்போது ‘அவத்’ (அயோத்தி) பகுதியின் ஆளுநர் பொறுப்பில் இருந்தார் என்பது தான். கோவில் ஒன்று அந்த இடத்தில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்ட தாகவோ எந்தச் செய்தியும் அதில் இல்லை. அப்படியொரு நிகழ்ச்சி நடந்திருந்தால், ‘இஸ்லாமிய மதத்தின் சிறப்பிற்காகக்” கோவிலை இடித்த செய்தியைக் கட்டாயம் குறிப்பிட்டி ருப்பார் மீர்பாகி!

தொல்லியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் (ஹரி மஞ்ஜி, பி.ஆர். மணி) தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் சார்பில் கொடுத்த அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது நீதிமன்றம். இந்த அதிகாரிகளைப் பற்றி யாரும் அதிகம் கேள்விப் பட்டதில்லை.

இந்திய ஆய்வுக்கழகமோ அப்போது பதவியிலிருந்த பாஜ கட்சியின் பிரதிநிதியாகவே செயல்பட்டது. பாஜ கட்சியின் அமைச்சர்களோ, “ராம ஜென்ம பூமி”  இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மேற்கூறிய அறிக்கையில் இருந்த திரித்துக் கூறப்பட்ட செய்திகள், தவறான செய்திகள், அறிக்கையில் விட்டுப்போன முக்கியச் செய்திகள் இவற்றைப் பல மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள், நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்கள். இவை எதுவுமே, நீதிபதிகளின் மீது எந்தத் தாக்கத்தயும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த மூத்த ஆய்வாளர்கள் எழுப்பிய மறுதலிப்புகளை (டிதெநஉவiடிn) நியாயத்தின் அடிப்படையில் ஆராய்வதை விடுத்து, அந்த மூத்த ஆய்வாளர்களின் திறமையையே சந்தேகிக்கும் வண்ணம் பேசினார் நீதிபதி சுதீர் அகர்வால். இந்த மூத்த ஆய்வாளர்களின் திறமை வரலாற்று அறிஞர்களுக்கே தெரியும். அவர்களுடைய திறமைக்கு நீதிமன்றச் சான்றிதழ் தேவையில்லை. மேலும் அன்றைய பாஜ கட்சி அரசாங்கத்தின் கீழ், பதவி உயர்வுக்கு ஆசைப்படும் அதிகாரிகள், சுதந்திரமாய்ப் பணியாற்ற முடிந்திருக்குமா என்று நீதிபதிகள் யோசித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. அதுமல்ல, மேற்கூறிய அறிக்கையைத் தயாரித்தவர்களுக்கு தொல்லியல் ஆய்வில் அனுபவம் அந்தஸ்து என்ன என்பதைப் பற்றியும் யோசித்தமாகத் தெரியவில்லை.

நிலத்தைத் தோண்டியெடுத்து, அகழ்வராய்ச்சி என்ற பெயரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னத்தை அடையாளமே இல்லாமல், முற்றுமாய் அழித்தது எந்த விதத்தில் நியாயம்? என்பதை நீதிமன்றம் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்புக்குப் பறிகு ‘ஸஹமத்’ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் பின்வரும் செய்தி காணப்பட்டது.

பாபர் மசூதியின் தரைப்பகுதி தோண்டப்பட்டபோது அந்த இடம் முழுவதிலும், பல்வேறு விலங்குகளின் எலும்புகள் காணப்பட்டன, “ஸூர்க்கி”, சுண்ணாம்புக் காரை மேலும் மெழுக்கேற்றப்பட்ட பல பாண்டங்கள் இவையெல்லாம் கண்டெடுக்கப்பட்டன. இவை யெல்லாம் அந்த இடத்தில் முஸ்லிம்கள் வசித்து வந்தததற்கான சான்றுகள். இதைத் தொல்லியல் ஆய்வுத்துறையால் மறுக்க முடியவில்லை. இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது, இந்துக் கோவில் ஒன்று மசூதிக்கடியில் இருந்திருக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது தெளிவாகிறது. மசூதியின் தரைக்குக் கீழ்த் தூண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தூண்கள் கிடந்த அடிமட்டப் பகுதி, தூண்கள் பொருத்தப்பட்டிருந்த விதம், இவற்றை ஊன்றிப் பார்க்கும் போது அங்கே தூண்கள் இருந்திருக்க முடியாது, அது பொய்யான செய்தி என்று தெரிய வருகிறது. இந்தத் தூண் அடித்தளம் என்பது வெறும் கற்பனையே. தொல்லியல் ஆய்வுத்துறை கூறியதைப் போல் அங்கே “பெரிய” கோவிலோ அல்லது எந்தவிதமான கோவிலோ இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிகிறது. மஞ்ஜி, மணி இருவரும் அளித்த அறிக்கையையே “வேத வாக்காக” மதித்துள்ளது உயர்நீதிமன்றம். (இதில் மணி என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும்) இவர்களுடைய அறிக்கையின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வுத்துறை பதிவு செய்துள்ள சிறியதும், பெரியதுமான பொய்களைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால், ஷீரின் ரத்னாகர், டி. மண்டல் ஆகியோர் 2007-இல் எழுதியுள்ள “அகழ்வாராய்ச்சிக்குப் பின் அயோத்தியில் தொல்லியல்” என்ற வெளியீட்டைப் படிக்கவும்.

மசூதி இடிப்பு நியாயப்படுத்தப்பட்டது. உயர்நீதி மன்றம் வெளிப்படையாகச் செய்யப்பட்ட பெரிய குற்றங்கள் மிக எளிதாக ஏற்றுக் கொண்டது. எல்லாப் பிரச்னைகளையும் விட மிகவும் கவலைப்பட வேண்டிய பிரச்னை. 1949-இல் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்தது. சிலைகளை வேண்டுமென்றே வலுக் கட்டாயமாக மசூதியின் நடுக்கூரைக்கும் கீழே வைத்தது. அதன் பிறகு நிர்வாகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் மூலம் முஸ்லிம்களை, மசூதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது; விஸ்வ இந்து பரிஷத், அத்வானி போன்றவர்களின் தூண்டுதலின் பேரில், 1992-இல் கரசேவைக் கும்பல் மசூதியை இடித்துத் தள்ளியது – இதில் மசூதி இடிப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிச் செய்யப்பட்டது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளில் எதையுமே நீதிமன்றம் கண்டிக்க வில்லை. இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் டி.ஆர். அகத்யார் ஜூனா என்பவர் அக்டோபர் 3-ஆம் தேதி “இந்து” நாளேட்டில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“ஒரு வழக்கில் ஒரு தரப்பினர் சட்டத்தை தாங்கள் கையில் எடுத்துக் கொண்டு, ஏற்கனவே இருந்த நிலைமையைத் தங்களுக்கும் சாதகமாக மாற்றிக் கொண்டால் (இங்கே இந்த வழக்கில் வாதி தரப்பைச் சேர்ந்த இந்துக்கள் 1992-இல் மசூதியை இடித்து நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியில்) நீதிமன்றம், முதல்படியாக குறிப்பிட்ட மாற்றத்திற்கு முன்பிருந்த அதே நிலையை மீட்டெடுக்க உத்தரவிடும். இதுதான் வழக்கமான செயல்பாடு. 1992 டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த மசூதி இடிப்பை அலஹாபாத் நீதிமன்றம் கண்டிக்கவேயில்லை. அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இது வெளிப்படையாகத் தெரிகிறது’ – என்கிறார்.

நீதிமன்றம் சிலைகள் 1949-ஆம் ஆண்டுதான் மசூதியின் மையப் பகுதியில் வைக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், அந்தச் சிலைகள் அதே இடத்தில்தான் இருக்க வேண்டுமென்றும் அந்தச் சிலைகள் வைக்கப்பட்ட மையப்பகுதி விஸ்வ இந்து பரிஷத்தின் ஆதரவைப் பெற்ற அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும் என்றும் குறிப்பிட்டதன் மூலம், மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து, சிலைகளை வைத்த செயலை நியாயப்படுத்திவிட்டது. மேலும் மசூதி இருந்த நிலத்தில் 2/3 பகுதியை விஸ்வ இந்து பரிஷத், நிர்மோஹி அகரா ஆகிய இரு அமைப்புகளுக்கும் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிய நிகழ்ச்சியாகவே மசூதி இடிப்பைக் கருதியிருக்கிறது. மசூதிக் கட்டடம் அங்கே இருந்திருந்தால், இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கவே முடியாது.மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த இடத்தைக் காலி மனையாக ஆக்கியதால் தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமாயிற்று. இதையும் முன்னாள் தலைமை வழக்கறிஞர் (ளுடிடiஉவைடிச ழுநநேசயட டிக ஐனேயை) 1992-இல் நடந்த மசூதி இடிப்பை, அலஹாபாத் நீதிமன்றம் இவ்வாறு இந்தத் தீர்ப்பில் நியாயப்படுத்தி விட்டது. இதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாது. அலஹாபாத் நீதிபதிகள் 1994-இல் உச்சநீதிமன்றம் (ளுரயீசநஅ உடிரசவ டிக ஐனேயை) குறிப்பிட்டதைப் படிக்கவில்லை போலும்! 1994-இல் உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பை “நாட்டிற்கு நேர்ந்த பெருத்த அவமானம்” என்று கூறியது.

இந்தப் பிரச்னைக்கு இனியும் சட்டத்தின் மூலம் தீர்வுகாண முயல வேண்டுமென்றும், அதாவது உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்றும், இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சிலர் நல்லெண்ணத்தோடு கூறுகிறார்கள். ஆனால் இந்த இரு தரப்பினரைத் தவிர வேறொரு, மூன்றாம் தரப்பினரும் உண்டு என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். இந்திய மக்கள் தான் இந்த மூன்றாம் தரப்பினர். அவர்கள்தான்.  அரசியல் நிர்ணயச் சட்டத்தை நமக்கு அளித்தவர்கள். மக்கள் தமக்காக இயற்றிய அரசியல் சாசனத்தின் முன்னுரையில், இந்தியாவில், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சமுதாய மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் இந்திய ஒரு மதச்சார்பற்ற குடியரசாக விளங்க வேண்டு மென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முன்னுரையில் குறிப் பிட்டுள்ள கருத்து ஒவ்வொன்றையும், அலஹாபாத் நீதிமன்றம் மீறியுள்ளது என்று தோன்றுகிறது. தனக்குக் கீழே செயல்படும் நீதிமன்றங்கள்அனைத்தும், இந்திய மக்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இது உச்சநீதிமன்றம் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை. இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் செய்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே நடந்த தவறை சரி செய்வதற்குச் சட்ட ரீதியான முயற்சிதான் ஒரே வழி. சமரசம் செய்வது என்ற பெயரில் சட்டரீதியான முயற்சிக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது.

(“பீப்பிள்ஸ் டெமாக்கரசி”-யில் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரை).

– தமிழாக்கம் எஸ். ஹேமா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s