சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற 43வது இந்திய தொழிலாளர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றிய இந்திய பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள், “இந்திய தொழிலாளர் நல சட்டங்கள் பேப்பர் அளவில் மட்டுமே முற்போக்காக உள்ளது , அவை தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை, இன்றைய நமது எதிர்பார்ப்பு களையும் இந்தச் சட்டங்களால் நிறைவேற்ற இயல வில்லை” என கருத்து தெரிவித்துள்ளார். தொழிலாளர் நல சட்டங்களைப் பற்றிய மறு ஆய்வு அவசியம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் இது வரவிருக்கும் கடுமையான தொழில் விரோத நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களின் முன்னறிவிப்பாகும் என்பதை உறுதிபட கூறலாம்.
பிரதமரின் கரிசனம் யார் பக்கம்?
1.11.2000 முதல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்ததாலும், 2005-ஆம் வருடம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தினை இயற்றி, இம்மண்டலங்களிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவிகித வருமான வரிவிலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவிகித வருமான வரிவிலக்கு மேலும் இம்மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு, மத்திய சேவை வரிவிலக்கு, கலால் வரிவிலக்கு என இந்திய முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியுள்ள திரு.மன்மோகன்சிங் தலைமையிலான அரசு இம்மண்டலங்களில் பணியாற்றும் தொழிலாள ர்களின் ஒட்டுமொத்த உரிமைகள் மறுக்கப்படும் வகையில் பல பிரிவுகளை இச்சட்டத்தில் கவனமாக இணைத்துள்ளது. தொழில் தகராறுகள் சட்டம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்கு முறைச்சட்டங்கள் இம்மண்டலங் களில் நடைமுறைப்படுத்த இயலாதபடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 சதவிகிதத்திற்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்து உற்பத்தியை செய்துவரும் இம்மண்டல நிறுவனங்கள், 8 மணி நேர பணி நேரம், ஷிப்ட் சிஸ்டம், பணிநேரம் குறித்த பெண்களுக்கான சிறப்பு பாதுகாப்பு, முதியோர், பென்ஷன் பேறு கால விடுமுறை போன்ற எந்தவிதமான உரிமைகளையும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க மறுப்பதுடன் குறைந்த பட்ச கூலியையும் தராமல் 12 மணி நேர பணி மூலம் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டு கின்றன. இம்மண்டலங் களின் ஆளுமை யிலிருந்து தொழிற்சங்க சட்டத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டி ருப்பதால் இங்கு பணியாற்றும் தொழிலாளிகள் தொழிற்சங்கங்களையும் ஏற்படுத்த முடியாமல் கொத்தடிமைகளாய் பணியாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2008-ஆம் வருடம் ஏற்பட்ட மூலதன நெருக்கடியை காரணம் காட்டி ரூ.1,70,000/- கோடிகளுக்கும் மேலாக இந்திய முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கிய மன்மோகன்சிங் அரசு, இந்திய தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் கோடிகளை இந்திய முதலாளிகளின் முதலீடுகளுக்காக தாரை வார்த்ததுடன், நஷ்ட ஈடு ஏதுமின்றி இந்தியா முழுவதும் 1 கோடி தொழிலாளர் களை ஆட்குறைப்பு செய்து அந்தப் பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாட்களை வேலைக் கமர்த்தவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நாடு முழுவதும் அமல்படுத்தவும் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திக் கொள்ளவும் இந்திய முதலாளி களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவ்வளவும் போதாது என்று பேப்பர் அளவில் முற்போக்காக இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் மாற்ற வேண்டும் என உரையாற்றுகிறார்.
முற்போக்கு தாளிலும் கூடாது
பேப்பர் அளவிலும் முற்போக்கு கூடாது என்பதே இன்றைய இந்திய ஆளும் வர்க்க நிலைபாடு. எனவேதான் பேப்பர் அளவில் இருக்கும் முற்போக்கை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, அதையும் ஒழித்து கட்ட முடிவு செய்கிறார்கள்.
சோசலிச நாடுகளுக்கு அடுத்தபடியாக நூற்றுக் கணக்கான தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டது இந்தியாவில் எனலாம். ஆனால் 60 ஆண்டுகள் சென்ற பின்னரும் அச்சட்டங்கள் பேப்பர் அளவில் மட்டுமே முற்போக்கு சட்டங்களாக இருக்கின்றன என்றால் இந்திய ஆளும் வர்க்கத்தின் வளர்ச்சியையும், தொழிலாளர்கள் மீதான இவர்களது கொள்கை யையும், இந்திய நீதித்துறையின் பங்களிப்பையும், மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் செயல்பாடு களையும் ஆய்வு செய்வது இன்று அவசியமாகிறது.
சுதந்திர இந்தியாவின் தொழிலாளர் கொள்கை
இரண்டாம் உலகப்போரின் முடிவானது ஏகாதிபத்தியங் களை பலவீனப்படுத்தியதுடன் சோவியத் யூனியனின் சோசலிச கொள்கைகளின் அவசியத்தையும் முக்கியத்து வத்தையும் உலக மக்கள் அனைவரையும் அங்கீகரிக் கும்படி செய்தது. இந்தியாவிலும் தொழிலாளர் இயக்கங்கள் பிரமாண்டமாய் வளர்ந்திருந்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்திய ஆளும் வர்க்கத்தினர் தொழில் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்நிய ஏகபோகங் களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதுடன் உலக அரங்கில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும் தங்களது வளர்ச்சிக்கு அவசியம் என்பதை நன்கு புரிந்திருந்தனர். மேலும் இவர்கள் தங்களது பலவீனமான மூலதன நிலைமையையும் நன்கு புரிந்திருந்தனர். பலமான பொதுத்துறையின் மூலமே தாங்கள் வளர முடியும் என்பதை உணர்ந்திருந்த இவர்கள் இந்தியாவில் பலமான பொதுத்துறையை கட்டமைத்து அதன் உதவியுடன் அந்நிய ஏகபோகங்களை இநதியாவில் இருந்து வெளியேற்றி தங்களை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டனர்.
சுதந்திரப் போராட்ட அனுபவங்கள் மூலம் இவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும், அந்நிய ஏகபோகங்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றவும், பொதுத் துறையை வளர்த்தெடுக்கவும் தொழிலாளர் களுடன் இணக்கமான உறவு அவசியம் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தனர்.
இந்தியாவில் மட்டுமின்றி, அன்று, உலக முதலாளித்துவ நெருக்கடியை தவிர்க்க உலகம் முழுவதும் மூலதனத்திற்கு எதிரான பாட்டாளிவர்க்க இயக்கத்தின் வீச்சை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், உற்பத்தியில் கிடைக்கும் உபரியில் ஒரு குறிப்பிட்ட பங்கை தொழிலாளிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்தளித்து தொழிலாளிகளது வாங்கும் சக்தியை தொடர்ந்து மேம்படுத்துவது அவசியம் எனவும் இவற்றை நிறைவேற்றிடும் வகையில் அரசின் கண்டிப்பான தலையீடு தொழில் துறையில் அவசியம் எனவும் இத்திட்டங்களே முதலாளித்துவ நெருக்கடிகளை மட்டுப்படுத்தும் என மேலைநாடுகளிலும் வலியுறுத்தப் பட்டது.
இந்திய ஆளும் வர்க்கத்தினரும் இத்திட்டங்களை பின்பற்றி பலமான பொதுத்துறையை கட்டமைத்ததுடன் இந்திய தொழிலாளிகளுக்கு பல சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கும் வண்ணம் நூற்றுக் கணக்கான தொழிலாளர் நலச் சட்டங்களையும் இயற்றினர். நூற்றுக்கணக்கான தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அச்சட்டங்கள் தொழிலாளர்களுக்கு முழுமையான பயன் அளிக்கும் வகைகளில் அமல்படுத்தப் படவில்லை எனலாம். தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கி வைத்திருக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் இந்திய முதலாளிகள். இந்திய மக்களுக்கு தொழிற்சங்கம் ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை வழங்கிடும் மசோதா தாக்கலான மறுதினமே தடுப்பு காவல் சட்டத்திற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பலத்த ஆட்சேபனைக்கு பிறகு இரண்டும் நிறைவேற்றப் பட்டது.
தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டமும், தொழிற் தகராறுகள் சட்டமும் தொழிலாளர்களுக்கு வழங்கி னாலும் அதன் அங்கீகாரத்திற்கான வழிமுறைகள் இச்சட்டங்களில் வரையறுக்கப்படாததால், தொழிற்சங்க ங்களின் அங்கீகாரத்தில் இன்று வரை சட்டச் சிக்கல் நீடிக்கிறது. தொழிற் சங்கம் துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்த சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் அது இன்று வரை அமல்படுத்தப்படாமல் இருப்பதானது, தொழிலாளர் நலச்சட்டங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் நிலைபாட்டை அம்பலப்படுத்துகிறது.
இந்திய இடதுசாரி கட்சிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதுடன் சட்டப்படியான பல்வேறு உரிமைகளையும் சலுகை களையும் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவதுடன் தொழிலாளர்களுக்கு அனுகூலமான பல சட்டங்களை இயற்றும் வகையில் அரசை நிர்ப்பந்தப்படுத்தியும் பல வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்கள். இதன் விளைவாய் இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் உருவாகியதுடன், தொழிற் சங்க நடவடிக்கைகளும் இந்தியா முழுவதும் பரவியது. இப்போராட்டங்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட இந்திய ஆளும் வர்க்கம், பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை, பணியின்போது 4 மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்தால் 1/2 மணிநேர ஓய்வு, 11 நாள் வேலை செய்தால் 1 நாள் ஈட்டுவிடுப்பு, நோயுற்றால் மருத்துவ விடுப்பு, மாதத்திற்கொருமுறை தற்செயல் விடுப்பு, வாரத்திற்கொருமுறை ஓய்வு, ஆண்டுக்கு 12 நாள் பண்டிகை விடுமுறை, 3 மாத மகப்பேறு மருத்துவ விடுமுறை, பென்சன் என பல சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்கினர்.
இந்திய நீதித்துறையும் சட்டங்களை, தொழிலாளர் களுக்கு பயனளிக்கும் வகையில் விளக்கம் செய்து பல்வேறு வகையான சலுகைகளை உத்தரவாதப் படுத்தியது. இருப்பினும் அன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் நிலைபாடு மூலதனத்தை கட்டுப்படுத்து வதே ஒழிய முதலாளித்துவத்தை ஒழிப்பது அல்ல. அதாவது கூலியுழைப்பை சுரண்டி செல்வம் திரட்டும் முறையை ஒழிப்பது இவர்களது நோக்கமாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளோடு வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கும்படியான ஒரு சமுதாயம் தன்னுடைய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ பாதையில் சென்று தீரவேண்டும் என்கிற மார்க்சிய நிலைபாடு இங்கு கவனிக்கத்தக்கதாகும். பொதுத்துறைகள் பிரமாண்ட மாய் உருவாக்கப்பட்டாலும் மூலதனத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அரசியலதிகாரம் அந்த வர்க்கத்தின் கையிலிருப்பதால் இந்தியா முதலாளித்துவப் பாதையில்தான் செல்லும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இந்தியா அடைந்திருக்கும் இன்றைய வளர்ச்சி மேற்படி மார்க்சிய நிலைப்பாட்டை மெய்ப்பிக்கிறது. 100 கோடி மக்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான இந்திய சந்தையின் பயனாகவும், பலமான மத்திய தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தியின் பயனாகவும், பொதுத்துறையின் பலத்தாலும், ஆரம்ப கட்டத்தில் படிப்படியாக வளர்ந்த இந்திய முதலாளிகள், 1975-ஆம் ஆண்டிற்கு பிறகு மூலதனத்தின் மீதான கட்டுப்பாடு களை தளர்த்தி தங்களை வேகமாக வளர்த்துக் கொண்டதுடன் இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் பாய்ச்சல் வளர்ச்சி பெற்று அசர வளர்ச்சி பெற்றுள் ளனர்.
இந்திய மக்களில் பெரும்பான்மையோர் அடிப்படை வசதி இன்றி இன்னமும் வறுமைக் கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்திய பெரு முதலாளிகள் உலகத் தர வரிசையில் முதல் வரிசைக்கு சென்றுவிட்டனர். இன்று இவர்கள் மேற்கத்திய மூலதனத்திற்காக கையேந்தி நிற்கும் நிலையில் இல்லை. மாறாக மேற்கத்திய மூலதனங்களுடன் இணைந்தும், தனித்தும் இந்திய முதலாளிகளது மூலதனங்கள் உலகம் முழுவதும் முதலீடு செய்யப்படுகின்றன. அன்று வெளியேற்றப்பட்ட அந்நிய ஏகபோகங்களை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய முதலாளிகள் அவர்களோடு இணைந்து இந்திய தொழில் துறை முழுவதையும் தங்களது லாப வேட்டைக்கான துறைகளாக மாற்றியிருப்பதுடன் பொதுத்துறையையும் தங்களது வளர்ச்சிக்குரிய நிறுவனங்களாய் மாற்றி வருகின்றனர். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவையும் நிச்சயமாக எடுத்துக் கொள்வது என்பதே முதலாளிகளின் சித்தம் என்றார் மார்க்ஸ். எவ்வளவு அதிகமாக லாபத்தை ஈட்ட முடியுமோ அதை அடைய எவ்வளவு அதிகமாக தொழிலாளர்களை சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டுவது என்பதே இந்திய ஆளும் வர்க்கத்தின் இன்றைய நிலைபாடு.
மூலதனத்தின் வேட்டைக்காடு
சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 1 என்றால் இன்று 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய முதலாளிகளோ தங்களது ஆண்டு வளர்ச்சிக்கான இலக்கை 10லிருந்து 100, 200 எனத் துறைகளின் நிலைமைகளுக்கு ஏற்ப உயர்த்தியுள்ளனர். கம்ப்யூட்டர், ஆயில் நிறுவன முதலாளிகள் 500 க்கும் மேலாக வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிக்கின்றனர் என்றால் ஆயுதத்துறை, மருத்துவத்துறை முதலாளிகள் 1000 க்கும் மேலாக வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித் துள்ளனர். கூலி எந்த அளவுக்கு குறைகின்றதோ அந்த அளவுக்கு லாபம் உயருகிறது. கூலி எந்த அளவுக்கு உயருகிறதோ அந்த அளவுக்கு லாபம் குறைகிறது என்றார் மார்க்ஸ். தொழிலாளர்களைச் சுரண்டுவதும் அவர்களின் உழைப்பின் மறுபயனான உபரியை அபகரித்துக் கொள்வதுமே முதலாளிகளின் லாப வளர்ச்சிக்கான அடிப்படை.
இந்திய தொழிலாளர்களது உரிமைகளைப் பறித்து அவர்களை கொத்தடிமைகளாக்கி ஒட்டச்சுரண்டியே இந்திய முதலாளிகள் தங்களது 500 சதவிகிதம் 1000 சதவிகிதம் என வளர்ச்சி இலக்குகளை அடைகின்றனர். லாப விகிதம் வளர்ச்சி பெறும்போது, மூலதனத்தின் தன்மை எங்ஙனம் மனித சமூகத்திற்கு விரோதமாக மாறுகிறது என்பதை மார்க்ஸ் பின்வருமாறு ஒரு மேற்கோளை காட்டி விளக்குகிறார். மூலதனம் லாபமெதுவும் இல்லாமல் போகுமோ அல்லது சிறுலாபம் மட்டுமே கிடைக்குமோ என்று அஞ்சுகிறது, போதுமான லாபமிருந்தால் மூலதனம் மிகவும் தைரியம் பெறுகிறது. நிச்சயம் 10 சதவிகிதம் லாபம் கிடைத்தால் எங்கானாலும் அது ஈடுபடுத்தப்படுவது உறுதி. நிச்சயம் 20 சதவிகிதம் கிடைத்தால் ஆவல் தூண்டப்படும். 50 சதவிகிதம் என்றால் திட்டமான போக்கிரித்தனம் தோன்றும். 100 சதவிகிதம் லாபம் கிடைத்தால், சகல மனித விதிகளையும் துவம்சம் செய்ய தயாராகி விடும். 300 சதவிகிதம் என்றால் அதன் மனசாட்சி உறுத்தக்கூடிய குற்றச்செயலே மிச்சமிருக்காது. அதன் சொந்தக்காரர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட அது இறங்கிப் பார்க்காத விஷப்பரீட்சையேதும் பாக்கி நிற்காது. கொந்தளிப்பும், குமுறலும் லாபமளிக்கும் என்றால் இரண்டையும் இஷ்டம் போல் ஊக்கப்படுத்தும், இந்தியா முழுவதும் இன்று நிலவும் கொந்தளிப்பான சமூக சூழ்நிலைமைகளுக்கு இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்ளை லாப வேட்டையே காரணம்.
இந்தியச்சட்டங்களும் – நீதிபரிபாலனமும்
இந்திய முதலாளிகள் தங்களது மனசாட்சி உறுத்தக் கூடிய செயல்களுக்கு ஏற்ப இந்திய சட்டங்களை மாற்றுவதுடன் புதிய சட்டங்களையும் கொண்டு வருகின்றனர். இந்திய சட்டத்துறை மற்றும் நீதித் துறையையும் புதிய நிலைமைகளுக்கேற்ப படிப்படியாக மாற்றி வருகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடம் தேர்தலுக்காக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக திருத்தினால் அது அவர்களுக்கு தேர்தலை சந்திப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் சூட்சமமாக வாய்ப்புள்ள சட்டங்களை மட்டும் திருத்திக் கொண்டு, புதிய சட்டங்களை இயற்றிக்கொண்டு, இதர விஷயங்களை பொறுத்தமட்டில் இருக்கும் சட்டங்களை நீதிமன்றங்கள் துணையுடன் மீறி வருகின்றனர்.
தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சட்ட விளக்கம் கொடுத்த அன்றைய நீதிமன்றங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மறுத்து முதலாளி களுக்கு ஆதரவாகவும், ஏகபோக நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இன்று சட்ட விளக்கம் அளித்து வருகின்றன. உலக மய, தனியார் மய கொள்கைகள் விரிவாகவும் ஆழமாகவும் அமல்படுத்தப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கு விரோதமாக பலசட்டங்கள் மாற்றப்பட்டிருப்பதுடன், புதிய சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களும் செயலில் இருக்கும் சட்ட நிலைமைகளையும் மீறி பல தீர்ப்புகளை தொழிலாளர் களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் வழங்கிவருகின்றன. இன்றைய நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்கள், தொழிலாளர் நலனை முன்னிலைப் படுத்திய சட்டங்களுக்கு பதில் சந்தை நலனை பாதுகாக்கும் சட்டங்களையே முன்னிலைப் படுத்துகின்றன. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் இன்று எந்த அளவுக்கு தொழிலாளிகளுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மாறிவருகின்றன என்பதனை பரிசீலிப்பது இங்கு அவசியம்.
தொழிலாளர் நலச்சட்டங்களில் நீதிமன்றங்களின் தீர்ப்பு, அன்றும்-இன்றும்
இந்தியா முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்து ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில் மத்திய அரசு 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தை இயற்றியது. இதே நோக்கங்களுக்காக மாநில அரசுகளும் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டங்களை இயற்றியுள்ளது. இதன்படி ஒரு ஆண்டில் 240 நாட்களுக்கும் மேலாக வேலை பார்த்துள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யும்போது அதில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இச்சட்டத்தை பின்பற்றி “ஏர் இந்தியா சாட்சுயேட்டரி கார்ப்பரேஷன்” நிர்வாகத்திற்கு எதிராக யுனைடெட் லேபர் யூனியன் தொடுத்த வழக்கில் 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒரு நிறுவனத்தில் முடிவுக்கு கொண்டு வரும்போது அதன் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
ஹூசேன் பாய்க்கும் அலாத் பாக்டரி யூனியனுக்கும் ஏற்பட்ட தொழில் தகராறில் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பில், நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளிகள் மட்டுமின்றி ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களும், நிறுவனத் திற்காக வீடுகளில் பீடி சுற்றும் தொழிலாளிகளும் நிறுவனத்தின் தொழிலாளிகளே என்றும் இவர்களும் பணி நிரந்தரம் பெற தகுதியுடையவர்கள் என தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்படும் இன்று மேற்படி தீர்ப்புகளை மறுக்கும் வண்ணம் ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கும் நேஷனல் யூனியன் வட்டர் பிரன்டிற்கும் எழுந்த தாவாவில், 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்டபெஞ்ச் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை முடிவுக்கு கொண்டுவரும்போது அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக (யளெடிசb) மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பை பின்பற்றி 2006-ஆம் வருடம் கர்நாடக அரசிற்கும் உமாதேவிக்கும் ஏற்பட்ட தொழில் தகராறு வழக்கில் 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய போதிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோர முடியாது எனவும் இவர்கள் விதிமுறைகளை மீறி தேர்வு செய்யப்பட்டவர்கள், நிறுவனத்தின் பின் கதவு வழியாக வந்தவர்கள். எனவே பணி நிரந்தரம் கோர முடியாது என ஒரு கொள்கையை வரையறை செய்து தீர்ப்பு வழங்கியது.
விதிமுறைகளை மீறி ஒப்பந்தத் தொழிலாளர்களை தேர்வு செய்தவர்களை தண்டிக்க இத்தீர்ப்பில் வழி வகை செய்யவில்லை. தேர்வு செய்து கொண்டிருப்ப வர்களையும் தண்டிக்கவோ தடுக்கவோ வழிவகை செய்யவில்லை. இதன் விளைவு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இறக்கும் வரைஎவ்வித உரிமையும் இன்றி, ஒப்பந்தத் தொழிலாளியாகவே பணி செய்வது அல்லது எவ்வித நிவாரணமும் இன்றி பணியில் இருந்து துரத்தப்படுவது, மத்திய மாநில அரசுகளே இத்தீர்ப்பிற்கு பின்னர் நிரந்தரப் பணியாளர்களின் அளவீடுகளை மிகவும் குறைத்து அப்பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு ஈடு செய்கின்றன. ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் ரத்து செய்யப்படாமல் செயலாக்கத்தில் இருக்கும் நிலையி லேயே அச்சட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வகையில் உச்சநிதிமன்றம் மேற்படி தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இன்று அரசுத் துறை நிறுவனங்கள் என்றாலும், தனியார் துறை நிறுவனமானாலும் 80 சதவிகித தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களே. 2004-05 ஆண்டின் அரசு சர்வே 43.3 மில்லியன் அமைப்பு சாரா தொழிலாளிகள் (26 மில்லியன் அமைப்பு சார்ந்த தொழிலாளிகள்) உள்ளனர் எனவும், 2006-07-இல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் எனவும் இது 2009-10-இல் 13.9 மில்லியனாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது. பீகார், ஆந்திரா, ஒரிசா, அசாம், மத்தியபிரதேசம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் துறைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் களின் எண்ணிக்கையோ 10 லட்சத்தையும் தாண்டுமாம். இவர்கள் அனைவரது உரிமைகளும் மேற்படி தீர்ப்புகளால் பறிக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ச கூலிக்கும் ஆப்புவைத்த தீர்ப்பு
பி.யு.டி. ஆர் எதிர் இந்திய அரசு மற்றும் ராப்டகாஸ் வழக்கில் குறைந்த பட்ச கூலி வழங்காமல் வேலை வாங்குவது கட்டாய வேலை பெறுவதற்கு ஒப்பாகும் எனவும் இது குறைந்த பட்ச கூலி சட்டத்திற்கு எதிரானது எனவும். இதனை அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது எனவும், குறைந்த பட்ச கூலியை வழங்காத நிறுவனத்தை மூடிவிடவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது அன்று உச்சநீதிமன்றம்.
அதே உச்சநீதிமன்றம் 2006-இல் மேற்படி உமாதேவி வழக்கில் தொழிலாளிகள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக கூலி வழங்க லாம் என தீர்ப்பளித்தது. தொழலாளர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவனை ஒட்டச் சுரண்ட முதலாளிகளுக்கு அனுமதி வழங்கி விட்டது உச்சநீதிமன்றம்.
1979-ஆம் வருடம் ஹிந்துஸ்தான் டின் பிரைவேட் லிமிடெட்டிற்கு ஊழியர்கள் தொடுத்த வழக்கில் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என ரத்து செய்யப்படும்போது அவன் பணி நீக்கத்தில் இருந்த காலத்தை பணி செய்த காலமாக கருதி முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. தொழிற் தகராறுகள் சட்டமும் இவ்வுரிமையை தொழிலாளிக்கு வழங்கியுள்ளது.
ஆனால் 2005-ஆம் வருடம் “அலகாபாத் ஜால் சந்தனுக்கும், தயாசங்கருக்கும்” மிடையே எழுந்த தாவாவில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பணிநீக்கம் செல்லாது என உத்திரவிடப்பட்டாலும் நிர்வாகம் பணிநீக்க காலத்திற்கு சம்பளம் வழங்க தேவையில்லை என உத்தரவிட்டது. பணிநீக்க காலத்தில் தொழிலாளி உற்பத்தி செய்யவில்லை என இவ்வழக்கில் விசித்திர மான விளக்கமும் அளித்தது உச்சநீதி மன்றம்.
2006-ஆம் வருடம் இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்த கோபிநாத் சர்மா வழக்கில் பணிநீக்க காலத்திற்கு தொழிலாளிக்கு சம்பளம் கேட்கும் உரிமை கிடையாது என கூறியதுடன் “பணியுமில்லை சம்பளமுமில்லை” (nடி றடிசம nடி யீயல) என்கிற கொள்கையையும் உருவாக்கி பணிநீக்க காலத்திற்கு நிர்வாகம் தொழிலாளி களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய கடமை கிடையாது என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளியின் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவன் பெற்ற கடைசி சம்பளத்தை தொடர்ந்து மாதந்தோறும் பெற்றுக் கொள்ளக் கூடிய பரிகாரத்திற்கான வழிமுறை தொழிற் தகராறுகள் சட்டத்தில் இல்லாததது ஏற்கனவே தொழிலாளியை பலவீனப்படுத்தியுள்ள நிலையில், பணிநீக்கம் செல்லாது என்றாலும் வழக்கு நிலுவையிலிருந்த காலத்திற்கு சம்பளம் வழங்கப்படத் தேவையில்லை என்கிற இத்தீர்ப்புகளால் தொழிலாளி இறக்கும் வரையில் அல்லது ஓய்வு வயதை அடையும் வரையில் முதலாளிகள் இனி வழக்கை நடத்தி தொழிலாளிகளின் உரிமையை மறுப்பார்கள். இந்திய நீதித்துறை கட்டமைப்புகளில் இதற்கு வாய்ப்புகள் மிக அதீதம். இனி பணிநீக்கம் தவறு என்று தீர்ப்பு கூறினாலும் நிவாரணம் பெறுவதாக இருக்காது.
மகாலஷ்மி டெக்ஸ்டைல் மில்ஸ் எதிர்த்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் வழக்கில் தொழிலாளியை பணிநீக்கம் செய்யும்போது ஒரு சம்பவத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது அவரது சர்வீஸ் பதிவேடு முழுவதையும் பரிசீலனை செய்தே முடிவெடுக்க வேண்டும் எனவும் நிறுவன நிலையாணையில் (ஸ்டான்டிங் ஆர்டர்) நடவடிக்கை எடுக்கலாம் என இருப்பினும் முழு சர்வீஸ் பதிவேடுகளை பரிசீலித்தே நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் இன்றைய உலகமய, தனியார்மய காலத்தில், ஆயிரக்கணக்கான கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பேர்வழி களையோ, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் பேர்வழி களையோ, அல்லது அரசு நிலங்களை முறைகேடாக அபகரித்துக் கொள்ளும் முதலமைச்சர்களையோ, உயர்நீதிமன்ற நீதிபதிகளையோ தண்டனை வழங்கிட மறுக்கும் உச்சநீதிமன்றம், சாமானிய தொழிலாளி என்றால் உடனே பணிநீக்கம் செய்துவிடுகிறது.
சில பிரயாணிகளுக்கு டிக்கட் வழங்காததுடன், அவரிடம் கூடுதலாக சிறிது பணம் இருந்ததால் பணிநீக்கம் செய்ப்பட்ட கண்டக்டர் ஒருவரை, தனக்கு பணிநீக்க காலத்தில் சம்பளம் வேண்டாம் எனவும், புதிய தொழிலாளியாக தன்னை சேர்த்துக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உயர்நீதிமன்றம் அவருக்கு பணி வழங்க உத்திரவிடுகிறது. ஆனால் இழப்பின் அளவு முக்கியமில்லை எனவே அவருக்கு பணி வழங்க உத்திரவிட்டது செல்லாது என அவரை பணிநீக்கம் செய்து தனது அதிகாரத்தை ஒரு சாதாரண தொழிலாளிக்கு எதிராக நிலைநாட்டியது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பை பின்பற்றி. ஏ.பி எஸ்.ஆர். டி.சிக்கும் வி. ரமணாவிற்கும் இடையே நடந்த வழக்கிலும் கண்டக்டர் சில பயணிகளுக்கு டிக்கட் வழங்க வில்லை என்பதாலும் ரிக்கார்டுகளை சரிவர பராமரிக்க வில்லை என்பதாலும் அவரை பணிநீக்கம் செய்தது சரி என உத்திரவிட்டது ஆந்திர உயர்நீதிமன்றம்.எல். கே.வர்மா, ஹெச்.எம்.டி நிர்வாகத்திற்கு எதிராக நடந்த வழக்கில் (2006-இல்) இந்திய பொருளாதாரக் கொள்கைகள் மாறிவரும் நிலையில் பணியில் ஒழுக்கத்தை கெடுக்கும் தொழிலாளிகள் தொடர்ந்து பணியில் இருக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.
பணிநீக்கம் செய்ய கடந்தகால சேவையை கணக்கில் எடுக்க வேண்டும் என்ற நியாயத்தை புதைக்க பணியில் ஒழுக்கம் என்பதை அளவு கோலாக ஆக்கியதன் மூலம் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தை ஒழுக்கம் என்கிற போர்வையில் நிலைநிறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.
பி.ஆர்.சிங் மற்றும் சிலர் எதிர் மத்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமை என்பது தொழிலாளர் களின் கூட்டு பேரத்தின் (உடிடடநஉவiஎந யெசபயinபே ) ஒரு பகுதியாகும் எனவும், இது ஒரு மதிக்கத்தக்க உரிமை எனவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமை எனவும், இவ்வுரிமையை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19(1)(சி) உறுதி செய்கிறது எனவும் தீர்ப்பு வழங்கியது.
தொழிற்தகராறுகள் சட்டப்படி அனைத்து தொழிலாளர்களும் நிர்வாகத்திடம் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பு கொடுத்த பின்னர், அரசு தன்னுடைய அறிவிப்பாணை மூலம் அதனை தடை செய்யவில்லையெனில் வேலை நிறுத்தம் சட்டப்படி செல்லும் என்பதே 2000-ஆம் ஆண்டு வரையிலான நிலை. இந்நிலைமையை உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ள போதிலும் 2003ஆம் வருடம் உச்சநீதிமன்றம், ரங்கராஜன் எதிர்த்த தமிழக அரசு வழக்கில் தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய சட்டப்படியான உரிமை ஏதும் கிடையாது என தீர்ப்பளித்து தொழிலார்களின் அடிப்படை உரிமையை பறித்துள்ளது.
தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம், சமூக ரீதியாக பின்தங்கியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டமாகும். சமூக ரீதியாக பின்தங்கியோருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையிலும், பணியாளர்கள் பயன்பெறும் வகையிலும் இச்சட்டத்தை பொருள் கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பதே இதனை உருவாக்கியவர்களின் நோக்கம். இதனடிப்படையில் 1989-இல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் கோபால கிருஷ்ண னுக்கும் இடையே நடந்த வழக்கில் கண்டக்டர் ஒருவர் பணியின்போது மாரடைப்பால் இறந்ததற்கு, இறப்பிற் கான காரணத்திற்கும் பணிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் தொழிலாளிக்கு நிர்வாகம் நஷ்ட ஈடு தரவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஒருவர் தினக் கூலி (காசுவல் லேபர்) என்பதால் அவருக்கு பணியின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு மறுக்கப்பட கூடாது எனவும் உச்சநீதிமன்றம் முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்றம் 2006-இல் ஆதெம்மா எதிர் பிளான்ட் இன்ஜினியரிங் -நெல்லூர் -வழக்கில் பணியின்போது மாரடைப்பால் இறந்த தொழிலாளிக்கு, அவரது இறப்பிற்கும் – பணியின் தன்மைக்கும் நேரடி தொடர்பு இல்லை என காரணம் கூறி நிர்வாகம் நஷ்ட ஈடு தர வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்தது. மேலும் அதே 2006-ஆம் வருடம் உச்சநீதிமன்றம் சி.எம் பி டி.ஐக்கும், ராமுபாசிக்கும் இடையே நடந்த வழக்கில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றாலும் அவர் ஒரு காசுவல் லேபர் என்பதால், பணியின்போது அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அவர் நஷ்ட ஈடு பெற தகுதியற்றவர் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இவற்றிற்கும் மேலாக 2006-ஆம் வருடத்திலேயே“ பீடி மாவட்ட கோ ஆப்ரேட்டிவ் வங்கிக்கும், மகாராஷ்டிர அரசிற்கும்” இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தொழிலாளர் நலச் சட்டங்கள் சமூக நலச் சட்டங்கள் என்பதாலேயே அதனை தொழிலாளிகளுக்கு சாதகமாக பொருள் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என தீர்ப்பளித்து தனது தொழிலாளர் விரோத நிலைபாட்டை தெளிவாக உச்சநீதிமன்றம் உணர்த்திவிட்டது.
இங்ஙனம் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து, அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலைவாங்கும் உரிமையை முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்திய நீதிமன்றங்கள் வழங்கி யுள்ளன. இந்திய முதலாளிகளின் தொழிலாளர் கொள்கையான “அமர்த்து-துரத்து” கொள்கையை மறைமுகமாக தனது தீர்ப்புகள் மூலம் இந்திய நீதிமன்றங்கள் அமல்படுத்தி வருகின்றன.
தொழிலாளர்களுக்கு எதிராக சட்டதிருத்தங்கள்
எஜமானர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் இடையி லான வேற்றுமைகளை முறைப்படுத்த சட்டம் முயன்ற போதெல்லாம் அதன் ஆலோசகர்கள் எஜமான்களே என்றார் ஆடம்ஸ்மித். இன்றைய உலகமய தனியார்மய காலத்திலும் தொழிலாளர் நல சட்டங்கள் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கேற்பவே அவர்களின் ஆலோசனைகளுக்கேற்பவே மாற்றப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன. ஒரு நிறுவனத்தை கலைத்துவிடும்போதோ அல்லது மூடிவிடும்போதோ, அந்நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய சம்பள பாக்கி மற்றும் இதர தொகைகளை செலுத்திய பின்னரே அவ்வாறு செய்ய முடியும் என்பதே முந்தைய சட்டம். தொழிற் தகராறுகள் சட்டம் எல்லா நிலைகளிலும் தொழிலாளர்களின் சம்பள பாக்கிகளை அவர்களுக்கு முதலில் செலுத்த வேண்டும் என உறுதி செய்துள்ளது. ஆனால் தற்போது வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையில் வங்கி ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தி அதன் சொத்துக்களை “எஸ்.ஏ.ஆர்.எஃப். ஏ.ஈ.எஸ். ஐ” சட்டப்படி (கூhந ளுநஉரசவைளையவiடிn யனே சுநஉடிளேவசரஉவiடிn டிக குiயேnஉயைட ஹளளநவள யனே நுகேடிசஉநஅநவே டிக ளுநஉரசவைல ஐவேநசநளவ (ளுஹசுகுஹநுளுஐ) ஹஉவ) பணவடிவிலான சொத்துக்களையும் அதற்கான வட்டியையும் உறுதிப்படுத்தும் (2002-ஆம் ஆண்டு சட்டம்) விற்கும் நிலையில் முதலில் தொழிலாளர்களின் பாக்கிகளை செலுத்த வேண்டும் என்கிற சட்டப்பிரிவை திருத்தி பிரிவு 529யை உட்புகுத்தி இதன்படி நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தினை தொழிலாளர் பாக்கிகளுக்கும் வங்கி கடன்களுக்கும் சமவிகிதாசாரத்தில் பிரித்து தர வேண்டுமென சட்டத்தை மாற்றிவிட்டனர். இதனால் நடைமுறையில் தொழிலாளர் களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் இனி மிக சொற்பமாகவே கிடைக்கும்.
ஆனால் இதையும் மறுக்கும் ஒரு நிலையை உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் எடுத்துள்ளது. 2007ஆம் வருடம் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கும் சிரிகுப்பா சுகர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் இடையே நடந்த வழக்கில் நிறுவன கலைப்பு நடவடிக்கை நிலுவையில் இல்லாத நிலையில் தொழிலாளர் சம்பள பாக்கிகளை பிணையற்ற கடனாக கருத வேண்டும் (அன்செக்யுர்டு கிரெடிட்) என தீர்ப்பளித்து, வாய்ப்பிருந்த விகிதாச்சார உரிமை யையும் பறித்துள்ளது. இத்தீர்ப்பின்படி முதலில் பிணையுள்ள கடனுக்கு மட்டுமே பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அதாவது வங்கி கடன்கள்,அதற்கான வட்டி உட்பட, அரசு பாக்கிகள் (வரிபாக்கி உட்பட) போக மீதம் ஏதும் இருந்தால் இதர கடன்தாரர்களோடும் பயனாளி களோடும் சேர்ந்து தொழிலாளி சம்பள பாக்கிக்கான தொகையை சம விகிதத்தில் பிரித்துக் கொள்ளலாம் என்பது தீர்ப்பாகும். ஏமாற்றுபவனின் விளக்கமாகவே இத்தீர்ப்பு உள்ளது. நிறுவனம் நடைபெற்றாலும் சரி, நிறுவனத்தை மூடிவிட்டாலும் சரி இனி தொழிலாளர் களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதே இன்றைய நிலை. தொழிலாளிக்கு நிர்வாகத்தில் பங்கு என்ப தெல்லாம் வெத்து வேட்டு என்று ஆக்கப்பட்டுவிட்டது.
ஓய்வூதிய உரிமை
தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை பாரமாக கருதும் இன்றைய உலகமய தனியார்மய ஆளும் வர்க்கத்தினர் ஓய்வூதியச் சட்டத்தில் பல்வேறு கட்டுப் பாடுகளை இணைத்து, பலதிருத்தங்களை கொண்டுவந்து ஓய்வூதிய உரிமையை மிகவும் பலவீனப்படுத்தி யுள்ளனர்.
தொழில் தகராறுகள் சட்டத்தில் தொழிலாளி என்பதற்கான விளக்கவுரையில் ஒப்பந்தத் தொழிலாளி யையும் இணைக்கும் வகையில் திருத்தத்தை கொண்டு வந்து இந்தியா முழுமைக்கும் முதலாளிகளின் கோரிக்கையான“அமர்த்து-துரத்து” கொள்கையை சட்டப்படி நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை களையும் இவர்கள் எடுத்து வருகின்றனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை முற்றிலுமாக முடக்கிடும் வகையில் முக்கிய திருத்தங்கள் தொழிற் சங்க சட்டத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது. 7 தொழிலாளர்கள் இணைந்தால் ஒரு தொழிற்சங்கத்தை துவங்கலாம் என்கிற பழைய நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவகையில் 2001-ஆம் வருடம் தொழிற் சங்கங்கள் சட்டத்தில் பிரிவு 9ஏ இணைக்கப்ட்டு அதன்படி ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களில் 10 சதம் பேர் அல்லது குறைந்தது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த அளவு உறுப்பினர் இருந்தால் மட்டுமே தொழிற்சங்கம் துவங்க முடியும் என சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. தொழிற்சங்கங்கள் ஆண்டுதோறும் மேற்படி உறுப்பினர் எண்ணிக்கையை உத்தரவாதப் படுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் தங்களது தொழிற்சங்க அந்தஸ்தை இழக்க நேரிடும் எனவும் வரையறுக்கப்பட்டது. மேற்படி குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கையை கொண்ட எல்லா தொழிற்சங்கங் களையும் அங்கீகரித்து அனைத்து தொழிற்சங்கங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்பட வேண்டும் என்கிற நிலையும் தற்போது மாற்றிவிட்டனர். இதன்படி மேற்படி குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் தேர்தலில் பங்குகொண்டு அதில் அதிகமான வாக்கு பெறும் தொழிற்சங்கம் மட்டுமே 5 ஆண்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருக்கும் எனவும் வெற்றிபெற்ற தொழிற்சங்கத்திடம் மட்டும் நிர்வாகம் தொழிலாளர் பிரச்சனை சம்மந்தமாக ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்ளலாம் எனவும் நிலைமையை மாற்றிவிட்டனர். இனி முதலாளிகளுக்கு தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவது சுலபம். தங்களோடு சண்டையிடும் படையில் பெரும்படையை போர்க்களத்தி லிருந்து வெளியே நிறுத்திவிட்டனர் இந்திய முதலாளிகள். தொழிலாளர்களது உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. அரசியல் போராட்டங்களை பிரமாண்டமாக நடத்த வேண்டிய தொழிற்சங்கங்களோ இன்று பலவீனப்பட்டி ருக்கின்றன.
அரசியல் போராட்டங்களே தொழிற்சங்கங்களை வளர்க்கும்
இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் 1905-ஆம் வருடம் வ.உ.சிதம்பரம் அவர்களால் ஹார்வி மில்லில் துவங்கப்பட்டது. வ.உ.சிதம்பரம் கைதாகிய சிறிது காலத்தில் இச்சங்கம் முடங்கிப் போனது என்றாலும், 1919-ஆம் வருடம் சென்னையில் பக்கிங்ஹாம் கர்னாடிக் மில்லில் மீண்டும் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. திரு.வி.க., சர்க்கரை செட்டியார், கிருஷ்ணாராவ், வாடியா ஆகியோர் இச்சங்கத்திற்கு தலைமை தாங்கினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தில் தொழிலாளர்களது போராட்டம் பெரும் பங்காற்றியது. இந்திய தொழிற்சங்க வரலாறு நூற்றாண்டு வரலாறாகும்.
ஆனால் தொழிலாளர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த உரிமைகளையும், சலுகைகளையும் இழந்து, தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையும் இன்றி கொத்தடிமைகளாய் பணியாற்ற வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டு விட்ட போதும், தொழிலாளர்களை மாபெரும் போராட்டங்களின் கீழ் அணி திரட்டி இந்திய ஆளும் வர்க்கத்திற்கு, இந்திய முதலாளிகளுக்கு ஏகபோக நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமையின்றி உள்ளன இன்றைய தொழிற்சங்கங்கள். 1980களில் பிரம்மாண்டமாக வளர்ந்த இடதுசாரி தொழிற்சங்கங் களும் 1990களில் பலவீனமடைந்து, இன்று இந்திய ஆளும் வர்க்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் எவ்விதமான போராட்டத்தையும் செய்ய முடியாமல் சம்பிரதாயமான போராட்டங்களை செய்யும் தொழிற் சங்கங்களாக பின்தங்கியுள்ளன. 1989-இல் இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.2 மில்லியன். இது 1990-ஆம் வருடம் 6.1 மில்லியனாக குறைந்து 1993-இல் 3.13 மில்லியனாக குறைந்துள்ளது. இன்று இன்னும் மிக குறைவான தொழிலாளர்களே தொழிற் சங்கங்களில் இணைந்துள்ளனர். தொழிலாளர்களை வென்றெடுக்கும் பலத்திலும், தொழிலாளர்களை மாபெரும் போராட்டங்களுக்காக அணிதிரட்டும் பலத்திலும் தொழிற்சங்கங்கள் உலகமய தனியார்மயக் காலத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும், இடது சாரி கட்சிகளும் இது குறித்த ஆய்வை விரிவாகவும் ஆழமாகவும் செய்யவேண்டியது இன்று மிக அவசியமான பணியாகும்.
தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையைக் குறிப்பதாயுள்ள, சாத்தியமான அளவுக்கு மிகவும் விரைவான மூலதன வளர்ச்சியுங்கூட எவ்வளவுதான் அது தொழிலாளியினுடைய பொருளா தார வாழ்நிலையை மேம்படுத்திய போதிலும் தொழிலாளியின் நலன்களும் முதலாளித்துவ வர்க்கத்தாரின், முதலாளிகளின் நலன்களுக்கும் உள்ள பகைமை நீங்கிவிடாது என்றார் மார்க்ஸ். தொழிலாளர் களின் உதவியுடன் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து, இந்தியாவிலிருந்து பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களை வெளியேற்றி தங்களை பலமாக வளர்த்துக் கொண்ட இந்திய முதலாளிகள் இன்று ஏகாதிபத்தியங்களுடன் இணைந்து, இந்தியாவிற்குள் பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று இந்திய தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து ஒட்டச் சுரண்டுகின்றனர். இன்றைய இந்திய நிலைமை மேற்படி மார்க்ஸின் கூற்றை மெய்ப்பிக்கிறது. இந்திய ஆளும் வர்க்கங்கள் கொண்டுவந்த பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் அவர்களுக்கு தொழிலாளி வர்க்கத்துடனான பகைமையை நீக்கிவிடவில்லை. மாறாக அச்சட்டங்கள் அவர்களது வளர்ச்சிக்காக பெரிதும் உதவின. இந்திய ஆளும் வர்க்கங்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில் அவர்களுக்கு தொழிலாளி வர்க்கத்துடனான பகைமை நன்கு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு நேர் எதிரானவை என்று பாட்டாளி வர்க்கத்திற்கு காட்டுவதற்கு சோசலிஸ்டுகளுக்கு முழு வாய்ப்பு எப்பொழுதும் இருந்து தீர வேண்டும் என்றார் லெனின். கூலியுழைப்பும் மூலதனமும் எதிரெதிர் நலன் கொண்டவை என்கிற மார்க்சிய போதனையை ஆழமாகவும் விரிவாகவும் கடந்த காலங்களில் இடதுசாரிகள் தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை. மூலதனத்தை கட்டுப்படுத்தி பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தும் போராட்டப் பயிற்சியே தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டது. மூலதனத்தை முற்றிலுமாக வீழ்த்தக்கூடிய அரசியல் போராட்டங்களுக்கான பயிற்சி கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நியாயமான அளவு வேலைக்கு நியாயமான கூலி என்கிற குறிக்கோளுக்காகவே தொழிற்சங்க நடவடிக்கைகள் அமைந்தனவே ஒழிய கூலி அமைப்பு முறை ஒழிக என்கிற புரட்சிகரமான நிலைப்பாட்டின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் வளர்த்தெடுக்கப் படாததுடன், இதற்குரிய அரசியல் தெளிவையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை. பிரம்மாண்ட மான பொதுத்துறையும் மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகளும் இந்திய முதலாளிகளையும் இந்திய மூலதனத்தையுமே அடிப்படையில் வளர்க்கப் பயன்படும் எனவும், இந்திய முதலாளிகள் தங்களது ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் பொதுத்துறையையும் சுவீகரித்துக் கொண்டு மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி கட்டுப்பாடற்ற முதலாளித்துவ வளர்ச்சிக்குள் செல்வர் என்கிற அரசியல் தெளிவையும் தொழிலாளர்களிடம் பரப்பவில்லை.
சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அதாவது பிரிட்டிஷ் மூலதனத்தை, அதாவது ஏகாதிபத்திய மூலதனத்தை இந்தியாவிலிருந்து விரட்டுவதே இந்தியாவிற்கான சுதந்திரம் எனவும், அதாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே எதிரி அவர்களை விரட்டுவதுவே இலக்கு என தொழிலாளர்களை அணி திரட்டிய இடதுசாரிகள் சுதந்திரத்திற்கு பின் நிலப்பிரபுத்துவ முறையை எதிர்த்து ஏகாதிபத்தியங்களை எதிர்த்து பல்வேறு அரசியல் போராட்டங்களை நடத்தினாலும் இந்திய ஆளும் வர்க்கங்களாகிய இந்திய முதலாளிகளுக் கெதிராக இந்திய மூலதனத்திற்கெதிராக இடதுசாரிகள் பொருளாதார போராட்டங்களையே நடத்தினார்கள். பொருளாதார போராட்டங்கள் இறுதியில் மூலதனத்துடன் இணக்கத்தையே ஏற்படுத்தும். இந்த இணக்கம் இறுதியில் மூலதனத்திற்கே பலம் சேர்க்கும். இந்திய மூலதனம் ஏகாதிபத்தியங்களோடு இணைந்து உலகை வலம் வருகின்றது. இந்திய முதலாளிகள் உலக அரசியலில் இன்று முக்கிய பங்காற்றுகின்றனர். இந்திய அரசியலிலும் நேரடியாக செயல்படுகின்றனர். இந்திய முதலாளிகளுக்கு தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இன்று இந்திய அரசியலில் இவர்களே பலம் வாய்ந்தவர்கள். தங்களது அரசியல் பலத்தால் நெருக்கடி களின் சுமைகளை தொழிலாளிகள் மீதும் மக்கள் மீதும் சுமத்தி நெருக்கடிகளிலிருந்து மீள்கிறார்கள். இந்திய முதலாளிகளது அரசியல் நிலைபாடுகளையும் அவர்களது உலகளாவிய அரசியல் தொடர்புகளையும் தொழிலாளி களிடம் ஸ்தூலமாக அம்பலப்படுத்த வேண்டும். பொருளாதார அம்பலப்படுத்தல்கள் எப்படி தனிப்பட்ட தொழிற்சாலை முதலாளிகளுக்கெதிரான போர் பிரகடனங்களாக உள்ளனவோ அதுபோல் அரசியல் அம்பலபடுத்தல்கள் முதலாளித்துவ அரசாங்கத்துக் கெதிரான போர்ப் பிரகடனங்களாகும் என்றும் பொருளாதார போராட்டத்துக்கே அரசியல் தன்மை கொடுக்கும் பணி எவ்வளவு ஆழமுள்ள தானாலும் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான அரசியல் பணியல்ல என்றும் கூறினார் லெனின். வெறும் பொருளாதார போராட்டங்களில் மூலதனமே அதிக வலிமையுடைய தரப்பு என கூறினார் மார்க்ஸ். மூலதனத்தை வீழ்த்தக்கூடிய, முதலாளித்துவத்தை வீழ்த்தக்கூடிய அரசியல் அம்பலப்படுத்தல்களை செய்வதே இடதுசாரிகளின் கடமை எனவும் தொழிலாளர் களை புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதுதான் அதாவது ஒவ்வொரு தொழிலாளியையும் ஒரு முழுநேரக் கிளர்ச்சியாளனாகவும், அமைப்பாளனாகவும், பிரச்சார கனாகவும் இலக்கிய விநியோகஸ்தனாகவும் ஆவதற்கே தொழிற்சங்கங்கள் பயிற்சியளிக்க வேண்டுமேயொழிய, தொழிலாளிகளை உழைக்கும் மக்களின் தரத்திற்கோ, சராசரி தொழிலாளியின் தரத்திற்கோ இறக்குவது தொழிற்சங்கங்களின் பணியல்ல என லெனின் கூறுவது இன்று இந்திய தொழிற்சங்கங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
இந்திய தொழிற்சங்கங்கள் இந்திய தொழிலாளிகளுக்கு கூலியுழைப்பும் மூலதனமும் எதிரெதிர் நலன் கொண்ட பகை உறவு கொண்டவை என்கிற அரசியல் தெளிவை ஏற்படுத்தி அதற்குரிய பயிற்சி அளிக்காததே, மாறிய இன்றைய இந்திய நிலைமையில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பின்னடைவுக்கு காரணமாகும். இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தி யத்தோடு இணைந்து மூலதனத்தின் மீதான கட்டுப் பாடுகளை அகற்றி சுதந்திரச் சந்தையில் மூலதனத்தை கட்டுப்பாடில்லாமல் அனுமதித்துள்ளன. மூலதனத்திற்கும் இந்திய தொழிலாளிகளுக்குமான உறவு இணக்கம் காண முடியாத முற்றிலும் பகை உறவாக மாறிவிட்டுள்ள இன்றைய சூழலில் மூலதனத்தை வீழ்த்துவதற்கான முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான அரசியல் போராட்டமே தொழிலாளர்களுக்கு அவசியமானதாகும். இதுவே தொழிலாளர்களை ஓரணியில் ஒன்று திரட்டி தொழிற்சங்கங்களுக்கு பலம் சேர்க்கும். பழைய நிலைபாடுகளின் அடிப்படையிலான போராட்டங்கள் இன்றைய அவசியத்திற்கு பயன்படாது. இனி அத்தகைய போராட்டங்கள் தொழிலாளர்களை ஓரணியில் அணி திரட்டாது என்பதுடன் ஏகாதிபத்தியத்துடன் இணைந்து செயல்படும் இந்திய முதலாளிகளின் அரசியல் பலத்தையும் வீழ்த்தாது. அவசியத்தை அறிந்து தேற்றுக் கொள்வதே சுதந்திரம் என்கிறார் மார்க்ஸ். இன்றைய அவசியமே மூலதனத்தை வீழ்த்துவது தான். இதற்கான அரசியல் போராட்டங்களை இந்திய முதலாளிகளுக் கெதிராக வளர்த்தெடுப்பதுதான், சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணி திரட்டுவது தான் இனி தொழிற்சங்கங்களின் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும்.
இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதற்காக எத்தகைய அரசியல் தெளிவை தொழிலாளர்கள் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர் என்பதையும் லெனின் பின்வருமாறு கூறுகிறார், “பொருளாதார வகைப்பட்ட அரசியல் எனும் நீர்த்துபோன கஞ்சிமட்டும் ஊட்டப்பெறுவதற்கு தொழிலாளர்களாகிய நாங்கள் குழந்தைகள் அல்ல. மற்றவர்கள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்பு கிறோம். அரசியல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் விபரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாக கலந்து கொள்ள விரும்புகிறோம். இதை நாங்கள் செய்வதற்கு அறிவு ஜீவிகள் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதைப் பற்றி பேசுவதைக் குறைத்துக் கொண்டு எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும் எங்கள் தொழிற்சாலை அனுபவத்திலிருந்தோ, பொருளாதார வகைப்பட்ட அனுபவத்திலிருந்தோ நாங்கள் என்றை க்கும் தெரிந்து கொள்ள முடியாததாக இருக்கும் விஷயத்தைப் பற்றி அதாவது அரசியல் அறிவு பற்றி எங்களிடம் அதிகமாகப் பேசவேண்டும். இதுவரை செய்ததை விட நூறு மடங்காக ஆயிரம் மடங்காக அவ்வறிவை எங்களிடம் கொணர்வது உங்கள் கடமையாகும். விவாதங்கள், குறுநூல்கள் கட்டுரைகள் வடிவத்தில் அதை எங்களுக்கு கொணர்வது மட்டுமின்றி நமது அரசாங்கமும் ஆளும் வர்க்கங்களும் இந்த வினாடியில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது பற்றிய எடுப்பான அம்பலப்படுத்தல்கள் வடிவத்திலேதான் அவைகளை கொண்டு வரவேண்டும் என தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நமக்கு விளக்குகிறார் லெனின். அதாவது இந்தியாவின் தற்கால அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர்கள், பாட்டாளிகளின் நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்தமுடியாத பகைமை உறவே உள்ளது எனவும் அந்த பகைமை உறவு மக்களின் எல்லா வாழ்க்கை துறைகளிலும் வெளிப்படுகின்றது என்பதனை இந்திய தொழிலாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலான அரசியல் தெளிவை அவர்களுக்கு வழங்க வேண்டியதே இந்திய அறிவு ஜீவிகளின் கடமை, இடது சாரிகளின் கடமை, தொழிற்சங்கத்தினரின் கடமை.
–ஐ. ரத்தினவேல்
Leave a Reply