மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நூல் அறிமுகம்: தோல்


 

மண்ணில் உழைப்பார் எல்லாம் வறியராம்

உரிமை கேட்டால் அவர் புண் மீது அம்பு பாய்ச்சும்

புலையர் செல்வராம்

இதை பகலெல்லாம் தம் கண் மீது கண்டு கண்டு

அந்திக்குப் பின் விண்மீனாய் கொப்பளித்த

விரிவானம் பாராய் தம்பி

– பாவேந்தர் பாரதிதாசன்

இரவு நேரத்தில் விண்ணில் தோன்றும் விண் மீன்களைக் குறித்து பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள வரிகளில் “புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வர்’’ என்று குறிப்பிட்டிருப்பது உணரத்தக்கது. ஏற்கனவே புண்ணாக இருக்கும்போது அதில் வேல் வைத்து பாய்ச்சினால் என்ன வேதனை இருக்கும் என்பதை எவரும் உணர முடியும்.

தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்னென்ன சித்ரவதைகளுக்கு ஆளானார்கள் என்பது தோல் எனும் பெயர் கொண்ட இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழந்தமிழர், ஆதி தமிழர், தாழ்த்தப் பட்டோர், பஞ்சமர், புலையர், அவர்ணர், இழிசனர், பறையர் என்றும், ஸ்ரீராமானுஜர் அவர்களால் திருக் குலத்தார் என்றும், தேசப்பிதா என்றழைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களால் ஹரிஜன் என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட மக்கள் சொல்லொ ண்ணா தொல்லைகளுக்கு ஆளான விபரங்கள் இந்நூலின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு ஒடுக்கப்பட்டார்களோ அதேவேகத்தில் எழுந்து நின்ற வரலாறும் குறிப்பிடப் பட்டுள்ளது. நாவலின் பக்கங்கள் மொத்தம் 695. கதை மாந்தர்கள் எண்ணிக்கை 117.

பல இதழ்களில் கதைகளை வெளியிடக் கூடியவர்கள் ஒரு அறிவிப்பை தெரிவிப்பார்கள். கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் எவரையும் குறிப்பிடுபவன அல்ல. அனைத்தும் கற்பனையே என்று வெளியிடுவார்கள். ஆனால், இந்த நாவல் கற்பனை யல்ல. ஆழமான உண்மை. உண்மையிலும் பேருண்மை. பாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள் ளனவே தவிர, அவர்கள் அனைவரும் வாழ்ந்தவர்கள். இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

கதைக்களம் திண்டுக்கல் நகரம். அதிலும், கதையின் நிகழ்விடம் புனித சவேரியார் பாளையம் என்றழைக்கப்படும் பகுதி. தோலால் உருவான பொருட்கள் ஏராளமாக புழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை உருவாக்குவதற்குள் அதற்குரிய தொழிலாளர்கள் எந்த அளவுக்கு  பாடுபட்டு புழுங்கி தவித்தார்கள் என்பது இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

சுண்ணாம்புக் குழியில் அதன் வேதனையை தாங்கி அதனால் உள்ளங்கையும், உள்ளங்காலும் வெந்து வேதனைப்படுவது அங்கே உள்ள முதலாளி களால், அவர்களது கையாட்களால் தாக்கப்படுவது,

“தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’’ என்கிற குறளுக்கேற்பவும், உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடைதரும் வகையில் நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் குறிப்பிட்ட தற்கேற்ப கேவலமான சொற்களை பிரயோகம் செய்யும் கேவலமான பிறவிகளின் வசவுகளையும் தாங்கி அதோடு நில்லாமல் அவர்கள் தரும் கசையடிகளையும் தாங்கி அனற்பட்ட புழுவாக அம்மக்கள் துடித்துக் கிடந்ததையும், செங்கொடி இயக்கம் அவர்களோடு இணைந்து தைரியம் கொடுக்கும் கிரியா ஊக்கி ஆக செயல்பட்டு விழுந்து கிடந்த மக்களை படிப்படியாக எழுந்து நிற்கச் செய்த வரலாறு இதில் விவரிக்கப் பட்டுள்ளது.

கதை மாந்தர்கள் சாதாரண பாத்திரங்கள் அல்ல. படித்தவுடன் மறந்துவிடக் கூடிய அளவில் இல்லை. கற்சித்திரங்களைப் போல என்றும் மனங்களில் தங்கி விடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஓசேப்பு, அருக்காணி, வக்கீல் சங்கரன், அவர்தம் பெற்றோர், பேராசிரியை வடிவாம்பாள், மினிசாமி, சார்லஸ், சந்தன தேவன், கழுவத்தேவன், தாயாகாமலே தாயாகிய தாயம்மாள், ஆசிரியர் இருதயசாமி, கணேசய்யர், வக்கீல் பொன்னுசாமி நாயுடு, நாராயண  மூர்த்தியா பிள்ளை தேசியவாதி நரசிம்ம பாரதி, காங்கிரஸ் சோசலிஸ்டு தோழர் வேலாயுதம், கலெக்டர் அனந்த சயனம், ஜஸ்டிஸ் ஜனார்தனம், வக்கீல் சேதுராமன், தோல்சாப் முதலாளி காஜியார் அசன் ராவுத்தர், பாயிண்ட்ஸ்மேன் ரெங்க கோனார், தஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கந்தசாமி, கிறிஸ்துவ சாமியார் பள்ளியில் பயின்ற சகோதரர் தங்கசாமி, போலீஸ் உதவி சூப்பரிண் டன்டண்ட் வெள்ளைத்துரை, தேவசகாயம், பாலையன், தீச்சட்டி கோவிந்தன் போன்ற காவல் துறையினர், சின்னக்கிளி, வெட்டியான் காக்கையன், மூக்கன், முத்துப்பேச்சி, சியான் தேவர், சுப்பவாடன், பூச்சி நாயக்கன், சிட்டம்மாள், சிறையில் மாண்ட அக்கினி பிழம்பு அக்னீஷ்மேரி, மாடத்தி, பேச்சி, பேச்சியாத்தாள், சுயமரியாதை இயக்கத் தலைவர் வீரபத்திர நாடார் என்று எண்ணற்ற பாத்திரங்கள் நமது நெஞ்சத்தை விட்டு என்றென்றும் அகலமாட்டார்கள்.

ஓசேப்பு ஓர் நல்ல இளைஞன். இளைஞன் என்று கூட கூற முடியாது. வளரிளம் பருவத்தினன் சின்னக் கிளி என்கிற ஆதிதிராவிட சகோதரியை அசன்ராவுத்தர் மைத்துனர் முஸ்தபா மீரான் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து உயிரையும் பறித்தது கண்டு கொதித்தெழுகிறான். முதலாளி அசன் ராவுத்தரின் மைத்துனன் தங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளி ஆதிதிராவிட சமூகத்தினன் தாக்கி விட்டான் என்கிற செய்தி காட்டுத் தீயாக பரவியது. ஓசேப்பின் வாழ்க்கை இதோடு முடிந்தது என்று தான் அப்பகுதி மக்கள் அஞ்சினர். அந்த அச்சம் நனைந்த குருவி களுக்கு ஏற்பட்ட நடுக்கம் போல் அமைந்திருந்தது. எங்கேயாவது தப்பி ஓடிவிடு என்று ஓசேப்பை கெஞ்சினர். வேறுவழியின்றி ஓசேப்பு ஓட நினைக்கிறான். எங்கே ஓடுவது என்று தெரியவில்லை. பாண்டிச்சேரி தனது பூர்வீகம் என்பது ஓசேப்புவின் தாய் தந்தையர் கூற கேட்டிருக்கிறான். தமது ஊரிலிருந்து வடக்கு திசையில் இருப்பது மட்டும் தெரியும். எந்த ரயில், எந்த பேருந்து, எந்த வழி என்பது எதுவுமே தெரியாது. அப்போதைக்கு தப்பினால் போதுமென்று அருகாமையில் உள்ள ரயில் நிலையத்திற்குச் செல்லு கிறான். ரயில் வரும் வரை ஒரு கழிவறையில் தஞ்சம் புகுகிறான். மனமெல்லாம் கலக்கம். உடலெல்லாம் நடுக்கம். தாய் தந்தையரைப் பற்றி கவலை. தனக்கு பிடித்தமான தன்னோடு பழகிய பெண்ணைப் பற்றியும் எண்ணம். ஒரு வழியாக நீண்ட தாமதத்திற்குப் பிறகு ரயில் வருகிறது. பெட்டியைப் பிடித்து ஏறும் போது சில முரட்டுக் கரங்கள் பிடித்து இழுக்கின்றன. திமிர முடியவில்லை. பிடித்தவர்கள் யார் என்றால் ஏற்கனவே தோல் ஷாப்புகளில் வேலைக்கு வந்து சேரும் போது ‘முறி’ எழுதிக் கொடுத்து வேலை செய்து கொண்டி ருக்கும் போதே தப்பி ஓடக் கூடியவர்களை பிடித்து மீண்டும் ஒப்படைப்பதற்காக முதலாளிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொடியவர்கள் தான் அந்த முரடர்கள். அவர்களால் பிடிக்கப்பட்டு ஊருக்குள் கொண்டு வரப்படுகிறான் ஓசேப்பு. மீண்டும் தாக்குதல். அனைத்தையும் தாங்க வேண்டிய அவல நிலை. இந்த இளைஞன் தான் படிப்படியாக வளர்ந்து தொழிற்சங்கத்தின் ஊழியனாகவும் மாறுகிறான். இவனது தாயும் தந்தையும் மடிந்த பிறகும் தாயாக இருந்து வளர்க்கிற பெண்மணியாக தாயம்மாள் இருக்கிறார்.  அழகும், ஓசேப்பின் மீது பாசமும் கொண்ட அருக்காணி என்கிற பெண் தனக்கு மருமகளாக வர வேண்டுமென்று தாயம்மாள் நினைக்கிறார். அருக்காணியும் அதே நிலை. காதல் மிகுதியால் ஒரு நாள் அருக்காணியும், ஓசேப்பும் உடலுறவும் கொள்கிறார்கள். ஆனால் வேறொரு வனுக்கு வாழ்க்கைப்பட வேண்டிய நிலைமை அருக்காணிக்கு ஏற்படுகிறது. கண்ணீரோடு தான் இந்த காரியத்திற்கு அவளும் ஒப்புக் கொள்கிறாள். ஓசேப்பு மனதிற்குள் புழுங்குகிறான். ஒரு நாள் அருக்காணியிடம் நீ என்னோடு வந்து விடு, நாம் சேர்ந்து வாழுவோம் என்று கூறுகிறான். அருக்காணி அழுகையோடு மறுக்கிறாள். ஓசேப்பு நீ முன்பு மாதிரி வெறும் கூலிக் காரன் இல்லை, ஒரு முக்கியமான தொழிற்சங்கத்தின் முன்னணி ஊழியர். மக்கள் மத்தியில் தலைவராக இருக்கிறாய் நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் ஊர் என்ன சொல்லும். அடுத்தவன் பெண்டாட்டியை கூட்டிக்கொண்டு ஓடியவன் என்று தானே ஊர் பேசும். உன்னையும், என்னையும் பேசினால் பரவாயில்லை. நம்மையெல்லாம் படிப்படியாக உயர்த்தி வரும் சங்கத்தின் பெயரும் களங்கப்படும் அல்லவா, தயவு செய்து இந்த யோசனையை கைவிடு. நான் வர முடியாது என்று மறுத்து விடுகிறாள். ஓசேப்பு ஒடிந்து போன நிலையில் வீட்டிற்கு செல்கிறான். இருவரும் சேர்ந்து வாழா விட்டாலும் வாசகர்களின் மனதில் இணைந்து வாழ்கிறார்கள்.

இப்படி இழிநிலையிலிருந்த மக்கள் படிப்படியாக வளருவதற்கு திண்டுக்கல் அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஐயர் குடும்பத்தில் தோன்றிய சங்கரன் உறுதுணையாக இருக்கிறார். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது குடும்பம் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தோடு தொடர்புடையது. அதுமட்டுமல்ல சங்கரனின் மூதாதையர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி என்று பலரால் அழைக்கப் பெற்ற ராமபெருமானை இவர் ஒன்றும் மூர்த்தியல்ல, அவருக்கு கீர்த்தியும் அல்ல. சராசரி மனிதனை விட சாமானிய மனிதன் என்று அக்ரஹாரத்திற்குள்ளிருந்து குரல் கொடுத்தனர். இதனால் இக்குடும்பம் அக்ரஹாரத்தின் அதிசயக் குடும்பமாக கருதப்பட்டது. பிராமணர்களுக்குரிய சடங்குகளும், ஆச்சாரங்களும் பின்பற்றப்பட்டாலும் மேற்கண்ட குணாதிசியங்களும் அக்குடும்பத்திற்கு இருந்தது. அதில் விளைந்த நற்பயிர் தான் சங்கரன். ஒரு சடலத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்வதற்கு தடை ஏற்படும் போது அதனை மீறி சட்டத்தின் துணையோடு அம்மக்களை திரட்டி முன்செல்கிறார். இதைக் குறிப்பிடும் போது மதுரை வைத்தியநாதய்யர் குறிப்பிடப்படுகிறார். காந்திஜியின் அரிஜன சேவை குறிப்பிடப்படுகிறது. தொடர்ச்சியாக சங்கரனின் தொழிலாளர் பணியும், தொழிற்சங்க பணியும், கட்சிப் பணியும் கூறப்படுகிறது. சங்கரனுக்கும் மாற்று சாதி பெண்ணாகிய பேராசிரியை வடிவாம்பாளுக்கும் ஏற்படுகிற காதல் உணர்வும் கூறப்படுகிறது. இது ஒரு மென்மையான மற்றும் உண்மையான காதல். ஒரு நாள் இருவரும் தனித்திருக்கிற போது வடிவாம்பாள் பேச்சை தொடங்குகிறார். என்னை விரும்புகிறீர்கள் எனக்குத் தெரியும். நான் விரும்புவது உங்களுக்கும் தெரியும். மணம் முடிப்பதில் என்ன தயக்கம். ஒருவேளை எனது சாதியை நினைத்து தயங்குகிறீர்களா என்று கேட்டவுடன் சங்கரன் துடித்துப் போகிறார். என்னைப் பற்றி இப்படித் தான் புரிந்து கொள்கிறாயா என்று தெரிவிக்கிறார். இந்த இடம் குறிப்பிடப்படும்போது நமது இதயங்களில் ஓவியமாக பதிகிறது. இதற்கிடையில் சங்கரனின் கம்யூனிஸ்ட்  கட்சி காங்கிரஸ் ஆட்சியால் தடை செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் தோழர் கந்தசாமி அவர்கள் தோழர் சங்கரனுக்கு கடிதம் அனுப்புகிறார். தலைமறைவுக் காலம் எவ்வாறு இருந்தது என்பது இதை படிப்பவர் களால் புரிய முடியும். எண்ணற்ற விபரங்களை கூறிக் கொண்டே போகலாம்.

பிரிட்டிஷ் ஆட்சி காலம், அதற்கும் முந்தைய கம்பெனி ஆட்சிகாலம், விஜயாலய சோழன் ஆட்சி காலம், மராட்டிய மன்னர் ஆட்சி காலம் என்ற காலங்களும், உலக யுத்தங்களும், அதையொட்டி திண்டுக்கல்லில் நிகழ்ந்த நிகழ்வுகளும், தொழிற்சங்க இயக்கம் தடை செய்யப்படுவதும், சங்கங்கள் பூட்டப்படுவதும், அமரர் சக்கரை செட்டியார் வந்து தலையிட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் பூட்டப்பட்ட சங்கங்கள் திறக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளன. தோழர் சங்கரன் பொறுக்கிகளால் இரண்டு முறை தாக்கப்பட்டதும் ஒருமுறை ஒரு ரௌடியை அவரே மடக்கிப் பிடித்ததும், மற்றொரு முறை மக்கள் திரண்டு ரவுடியை விரட்டியடித்ததும் வியக்க வைக்கிறது. இன்னல்கள் ஆயிரம் சூழ்ந்து நின்று தாக்கினாலும் தொழிலாளி வர்க்க இயக்கம் மென்மேலும் முன்னேறும் என்பதற்கு இந்நூல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

நாடு விடுதலையடைவது வரை உள்ள நிகழ்வுகள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. நாடு விடுதலை பெற்றாலும், கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டதும், சிறையில் அடைக்கப்பட்டதும், மீண்டும் வெளியே வருவதும், தலைமறைவு வாழ்க்கையும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளி வர்க்க இயக்கம் ஒவ்வொரு சூழலிலும் என்னென்ன தன்மைக்கு ஆளானது, மூலதனத்தை வைத்திருந்தோர் அவர்களது அடியாட்கள் மூலம் என்னென்ன அக்கிரமங்களை தொடுத்தார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாடு விடுதலையடைவதற்கு முன் தேசிய இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் சுதந்திர இந்தியாவில் முதல் பேர்வழிகளாக முந்தி நிற்பதையும் இந்நூல் காட்டுகிறது.

ஆசிரியர் செல்வராஜ் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் என்பது தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும்.  எழுத்து வன்மையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். அந்தந்தப் பாத்திரம் எப்படி பேசுமோ அவ்வாறு பேசும் வகையில் எழுதியுள்ளார்.  இந்தளவுக்கு  வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார் என்கிற அவரின் மொழி ஆளுமை  வியப்பளிக்கிறது.

பொது வாழ்வில் ஈடுபடக்கூடிய இளைஞர்கள் இந்நூலைப் படித்தால் சோர்வின்றி பணியாற்ற உதவும். கம்யூனிஸ்டுகள் கட்டாயம் பயில வேண்டும். தீண்டாமை கொடுமை ஒழிய விரும்புவோருக்கு இந்நூல் ஒரு பேராயுதம். சம்பவங்களை கதையாக வடிவமைக்க ஒரு திரைக்கதை போன்று வடிவமைக்க விரும்புவோருக்கு இந்நூல் ஒரு பாடமாக அமையும். ஒவ்வொரு அத்தியாயமும் நாடகத்தன்மையோடு, திரைப்படத்தின் திரைக்கதை தன்மையோடு அமைந்திருக்கிறது. ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் தாம் கூற வந்ததில் ஒன்று பிறிதொன்றாதல்  என்ற இலக்கண குற்றத்திற்கு இரையாகாமல் எங்கு சென்றாலும் மீண்டும் தொட்ட இடத்திற்கே வருவதில் வெற்றி மேல் வெற்றி காண்கிறார்.

ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளி வர்க்கம் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகி இருந்தது, அதிலிருந்து எங்ஙனம் படிப்படியாக மீண்டது என்பதையெல்லாம் தமிழக படைப்பாளிகள் வெளிப்படுத்துவது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு பேருதவியாக அமையும். சோவியத் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் வழி நின்று எழுதத் தொடங்கிய தோழர். செல்வராஜ் தனது பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளார். எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கும், வெளியிட்ட என்.சி.பி.ஹெச் நிறுவனத்தாருக்கும் நமது வாழ்த்துக்கள்.

-என். நன்மாறன்

– நூலாசிரியர்: டி. செல்வராஜ்

வெளியீடு: நியூசென்சூரி புக் ஹவுஸ்Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: