மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும்


 

`பூட்டு பூட்டாத்தான் இருக்கு, கட்டு சாதத்தைதான் எலி கொண்டு போச்சு’ என்கிற கதையாக பிரதமர் மன்மோகன் சிங், `ஊட்டச் சத்துக்குறைவும் பசிக்கொடுமையும் நாட்டிற்கு அவமானம்’ என பேசியிருக்கிறார்.

நந்தி ஃபவுன்டேஷன் என்கிற கார்ப்பரேட் தொண்டு நிறுவனம், இளம் இந்தியப் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கான மேடை, பசி மற்றும் வறுமைக்கு எதிரான குடிமைச் சமூகம் உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள் ளிட்ட நான்கு மாநிலங்களில் 100 மாவட்டங் களில் ஆய்வு செய்து அறிக்கையொன்றை வெளி யிட்டு உள்ளது.

ஊட்டச்சத்துக் குறைவினால் எடை, உயரம் குறைந்தும் வறிய நிலையில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பற்றிய ஆய்வு நடத்தியது. அதில் 42 சதமான குழந்தைகள் மிகவும் எடை குறைவாகவும் 59சதமான குழந்தைகள் உயரம் குறைந்தவராகவும் இருப்பதாகவும் கூறியது. 92 சதமான இளம் தாய்மார்களுக்கு சரிவிகித உணவு, ஊட்டச்சத்து குறித்த விஷயமே தெரி யாதவர்களாகவே உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப் புணர்வு, சாப்பிடும் முன் பணி நேரமாயிருந் தாலும் எப்போதும் முன்னதாக கைகழுவ வேண் டும், தடுப்பூசி குறித்த அறிவு, பெண் குழந்தை களின் மீதான அக்கறையின்மை இளம் தாய்மார் களின் சுகாதார அறிவு உள்ளிட்டவற்றை அடுக்கி கொண்டே செல்கிறது. நந்தி ஃபவுன்டேசன் வெளியிட்ட இந்த  ஹங்கமா (ழருசூழுஹஆஹ)  அறிக்கை.

இறுதியாக பூனைக்குட்டி சாக்கிலிருந்து வெளியில் விழுவதுபோல் இந்த அறிக்கை சொல்லுகிறது, `கிராம அளவில் செயல்படும் சேவை நிறுவனங்கள், கிராம அளவில் உள்ள சுய உதவிக்குழுக்கள், தனியார் தொண்டு நிறுவனங் கள் மூலம் குழந்தை வளர்ப்பு, இளம் பெண் களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதுடன், தயாரிப்பு, சேவை, விநியோகம் உள்ளிட்ட நிர்வாகத்தினை அங்கன்வாடி, ஐசிடிஎஸ், மதிய உணவு மையங்களை மேற் கொள்ள தனியார் அமைப்புகளிடம் தந்துவிட லாம் என்பதே பரிந்துரையின் அடிநாதம். உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பு என்ற போர்வை யில் கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களின் பிடியில் சமூகநலத் திட்டங்களை கடத்திச் செல்லும் நடவடிக்கையே இது. பிரச்சனையின் உண்மையான தன்மைக்குச் செல்வதற்கு முன்பு நந்தி ஃபவுண்டேசன் பற்றி அறிவது அவசியம்.

நந்தி ஃபவுண்டேசன் ஒரு தனியார் கார்ப்ப ரேட் தொண்டு நிறுவனம். இதன் தலைவர் டாக்டர் கே. அஞ்சிரெட்டி. இவர் இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனியான டாக்டர் ரெட்டி லேபர்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலாளியாவார். இதன் மற்றுமொரு முக்கிய நபர் திரு. ஆனந்த் மகேந்திரா, பிரபல ஆட்டோமொபைல் நிறு வனம் மகேந்திரா நிறுவனத்தின் முதலாளி.

மூன்றாமவர், திரு மகன்டி ராஜேந்திர பிரசாத். நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனமான சோமா என்டர்பிரைசஸ் கம்பெனியின் முத லாளி. கடந்த 30 வருடத்திற்கும் மேலாக மத்திய பல மாநில அரசுகளின் கட்டுமான காண்ட் ராக்ட்டுகளைப் பெற்றவர்.

மேற்சொன்ன மூவருக்குமான ஆலோசகர் ஒரு பெண். டாக்டர் இஷர் ஜக்ஜ் அலுவாலியா. தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் உறுப்பினர், உணவுக் கொள்கைக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக சமீபகாலம் வரை இருந்தவர். இந்த அமைப்பு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட அமைப்புகளோடு தொடர்புடையது.

நந்தி ஃபவுன்டேசனின் மூலவர்கள் மேலே சொன்ன நான்கு பேரும் எனில் இவர்கள் களத்தில் இறக்கியுள்ள குழுவின் தலைவர் நந்தி யின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மனோஜ் குமார். இவர் உலக வங்கியின் பொருளாதார நிபுணர். அமெரிக்காவின் ஆஸ்பென் க்ளோபல் லீடர்ஷிப் நெட்வொர்க் என்ற அமைப்பின் உறுப் பினர். ஆஸ்பென் அமெரிக்க கொள்கைகளை பல துறைகளில் வடிவமைத்திடும் அமெரிக்க ஏஜன்சிகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பு. நந்தி ஃபவுன்டேசன் கடந்த பனி ரெண்டு ஆண்டுகாலமாக பரந்த அளவில் இயங்கி வருகிறது. இவர்களது வேலையே தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவது, அரசு சமூக நலத்திட்டங்களை குறைகூறுவது, படிப்படியாக அவற்றைத் தாங்கள் கான்ட்ராக்டாகப் பெறுவது என்பதில் போய் முடியும்.

பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒரிசா, நாகாலாந்து பகுதிகளில் மையமாக இயங்கிவரும் இவர்கள், தினசரி 12 லட்சம் குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டம், 1700 பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு இலவச கல்வி, சுமார் 15000 பழங்குடி இன தொழிலாளர்களை உள் ளடக்கிய காபி எஸ்டேட் தொழில் என பரந்து விரிகிறது நந்தியின் ரகசியம். பிரபல அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான டெல் (னுநுடுடு) கம்பெனியின், மைக்கேல் அன்ட் சூசன் டெல் ஃபவுன்டேசனின் அதிக நிதி பெறும் இந்திய அமைப்பு நந்தி!

இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோதுதான் மன்மோகன் சிங் அக்கறையாக அவமானப்பட்டார். பிரதமர் மன்மோகன் சிங் 1991லேயே நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். 2004 முதல் நம் நாட்டின் பிரதமராக இருப்பவர். ஏன் இவருக்கு எளிய மக்களின் வறிய நிலையும் ஆபத்தான நிலையில் அவர்களது குழந்தைகளும் இருப்பது இப்போதுதான் அறிவாரா என்ன?

இல்லை! ஏனெனில் நாட்டின் ஊட்டச்சத்து, சரிவிகித உணவுக் கவுன்சிலின் தலைவரே மன் மோகன்தான்! 2008ல் மன்மோகன் சிங் தலைமை யில் அமைக்கப்பட்ட இக்கவுன்சில் கூடியது ஒரே யொரு முறைதான், நவம்பர் 2010ல். அமைக்கப் பட்டபோது வருடம் பலமுறை கூடி இலக்கு வைத்து செயல்படப் போவதாக இதே மன் மோகன் பேசியிருக்கிறார்.

நந்தியின்  ஹங்கமா அறிக்கை, இதற்கு முன்பு மத்திய அரசின் சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயை, ஆய்வை குறைகூறுகிறது. 2008ல் எடுக்கப்பட்ட அரசின் ஆய்வு ஒன்று நாட்டின் 17 மாநிலங்களில் 95 சதமான மக்களை உட்படுத்தி எடுக்கப்பட்டது. அதன்படி நாட்டின் வளம்பிக்க மாநிலமான பஞ்சாப்கூட ஊட்டச்தத்தின்மை  பிரச்சனையில் எச்சரிக்கை முனையில் இருப்ப தாகக் கூறியது. சதமான வேறுபாடு மட்டுமே இருப்பதாகவும் நாடு முழுமைக்குமான பிரச்சனையாக ஊட்டச் சத்தின்மை, குழந்தை இறப்பு விகிதம், பிரசவகால மரணங்கள், சோகை நோய்  இழை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரசின் தவறான கொள்கைகள் அமலாவ தால் ஏற்படும் சமச்சீரற்ற வளர்ச்சிப்போக்கு, அதன் விளைவாய் பஞ்சமும் பசியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

ஆனால், நந்தி ஃபவுன்டேசன் ஆய்வோ – பிரச் சனைகள் ஏற்படுவதன் காரணமாக `சாப்பிடும் பழக்கவழக்கமும், குழந்தை வளர்ப்புகள் குறித்த அறியாமையுமே’ என கூறுகிறது.

உலகமய தாராளமயக் கொள்கைகள் அம லாகும் இக்காலகட்டத்தில், நாட்டில் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் தோற்றம் காட்டப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய் திருக்கிறார்கள். தானே, நாசிக், நந்தர்பார், மேல் காட், அமராவதி, கத்சிரோலி, சந்த்ரபூர் போன்ற பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. 2009, 2010ம் ஆண்டுகளில் சோகையினால், ஊட்டச் சத்து குறைவினால் மட்டுமே ஐந்து வயதிற்குட் பட்ட குழந்தைகள் 25000க்கும் அதிகமான எண்ணிக்கையில் இறந்துபோயிருக்கலாம் என இரண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.                                (தி டெய்னிக் ஜாக்ரன்/னுசூளு – 12; 13/04/2010)

மராட்டிய மாநிலத்தின் பழங்குடி மக்களுக்கு வேலை என்பதே இல்லை. நிலம் இல்லை, வேலை இல்லை, பொது விநியோகம் – ரேசன் இல்லை – நாங்கள் எங்களை எப்படியோ உயிரோடு வைத் திருக்கிறோம் என்கின்றனர் அவர்கள்.

1940களில் கோதாவரி பாருலேகர் தலைமை யில் அணிதிரண்டு வன நில உரிமைக்கான போராடிய தானே பகுதி பழங்குடி மக்களின் மீதான நிலவுடைமை கொடுமை குறைந்திருப் பினும், நில உரிமைக்கான கேள்வி என்பது இன் னமும் தொடர்கிறது.

இம்மக்களோடு தற்போது களத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மராட்டிய மாநில செய லாளர் டாக்டர் அசோக் தாவாலே, “கடந்த 2007, 2008ஆம் ஆண்டுகளில் இம்மக்களால் நில உரிமை வேண்டி கொடுக்கப்பட்ட மூன்று லட்சம் விண்ணப்பங்களில் ஆயிரம் கூட பரிசீலித்து பட்டா வழங்கப்படாமல் உள்ளது” என்கிறார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப் படையில் இப்பகுதியில் இருவாரம் கூட பணி கிடைப்பதில்லை. இதைவிட ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் நிலைமை வெகு மோசம். பொது விநியோக முறை ஒழுங்காக கிடையாது, மருத்துவ உதவி எலிதில் கிடைக்காது, மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்காது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பெரும் குளறுபடி  என தலைசுற்ற வைத்திடும் அளவு நிர்வாக சீர்கேடுகள். மாற்றம் கோரும் புனிதப் பசுவாக தன்னைப்பற்றி பிதற்றும் பாரதீய ஜனதா கட்சிதான் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில், ஜார்கன்டில் ஆட்சி! ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்பே கிடையாது. 1978ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நிலுவை. பீகாரில் தற்போதுதான் ஒரு உள் ளாட்சி தேர்தல் முடிந்திருக்கிறது. அங்கும் கடந்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு உள்ளாட்டித் தேர்தல்கள் மட்டுமே நடந்திருக்கிறது. அதிகாரக் குவியலும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கான மற்றுமோர் காரணமாகும்.

இப்போதே இப்படியெனில் நாற்பதாண்டு களுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனமான யூனிசிஃப் (ருசூஐஊநுகு), தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனம் (சூஊஹநுஞ) தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இந்தியாவில் 1970களில் நடத்திய பல்வேறு ஆய்வுகளின் விளைவாகவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்கான சேவை மையங்கள் (ஐஊனுளு) உருவானதும், அங்கன்வாடி, மதிய உணவு மையங்கள் தோன்றியதும் நடந்தன.

இடதுசாரி, முற்போக்கு சக்திகளின் தொடர்ச் சியான இயக்கங்களும் போராட்ட அலை களுமே, தற்காலிக நிவாரணங்களையாவது அளித்திடும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்திட காரணியாயிற்று என்பதை நாம் இச்சமயம் புரிதல் அவசியம்.

உதாரணத்திற்கு ஐசிடிஎஸ் மையங்கள் ஏற் படுத்தப்பட்டாலும் அதற்கு நிதி ஒதுக்குவது, ஊழியர் போடுவது உள்ளிட்ட விஷயங்களை அரசு காலதாமதம் செய்யும். 1975ல் உருவாக்கப் பட்ட ஐசிடிஎஸ், அங்கன்வாடி மையங்களுக்கு தற்போதுகூட 75 சதமான மையங்களுக்கு சொந்த கட்டிடம் இல்லை. 60சதமான இடங் களில் கழிப்பிட வசதி கிடையாது. எல்லாவற் றிற்கும் மேலாக மத்திய அரசு ரூ. 100 ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கும். நடைமுறையில் அது ரூ. 60 கூட இருக்காது. சூழல் புரிய மற்றுமோர் உதாரணம் காணலாம்.

உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும், பியுசிஎல் (ஞருஊடு) அமைப்புக்குமாந வழக்கு ஒன்றில் 2001 அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம், “உடனடியாக ஐசிடிஎஸ் மையங்களைப் பரவலாக்குமாறும், மதிய உணவு மையங்கள், அந்தியோதயா அன்ன யோஜனா, முதியோர்/விதவை பென்சன் திட்டங்கள், பிரசவ கால சலுகைகள் திட்டங்கள், தேசிய குடும்ப நலத் திட்டம், அனைத்திற்கும் மேலாக பொது விநியோகம் – ரேசன் முறையை பலப்படுத்துவது” உள்ளிட்டவற்றை செய்யுமாறு இந்திய அரசுக்கு வலியுறுத்தி வழிகாட்டுதல் செய்தது.

தீர்ப்பு வந்து பதினோரு ஆண்டுகள் கழித்தும் ஐசிடிஎஸ் மையங்களின் இலக்கு 14 லட்சத்தை அடையவில்லை. 1,10,000 இடங்களில் கூடுதல் ஐசிடிஎஸ் மையங்கள் ஏற்படுத்தப்படுமென்ற அறிவிப்பு வெறும் காகிதத்திலேயே பல ஆண்டுக ளாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஏற்கெனவே உள்ள 73,000 மையங்களில் அங்கன் வாடி ஊழியர்கள் நியமிக்கப்படவே இல்லை. பல வட இந்திய மாநிலங்களில் ஐசிடிஎஸ், அங்கன் வாடி, மதிய உணவு மையங்கள் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பல இடங்களில் மருந்துக்குக்கூட ஒரு மையம் இல்லை என்பது சுடும் உண்மையாகும்.

ஜார்கன்ட், மத்தியப்பிரதேசம், மகா ராஷ்டிரா, உத்திரப்பிரதேச மாநிலங்களில், பல மாவட்டங்களில் ரேசன் கார்டு கிடைப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களும் மிகவும் பாரபட்ச மாகவே அமலாவதால் ஏழை எளியோரின் நிலை நாளுக்கு நாள் விளிம்பிற்கு சென்றுகொண்டி ருக்கிறது.

சமூக நலத் திட்டங்கள் ஓரளவு சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக தமிழகம், கேரளம், இமாச்சலப்பிரதேசம், வடகிழக்கில் திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களைக் குறிப்பிடலாம். இந்த மாநிலங்களில் உள்ள சாதாரண மக்கள் வட இந்தியாவின் சில மாநிலங்களோடு ஒப்பிடு கையில் ஒருபடி முன்பே உள்ளனர். குறைபாடுகள் பல இருப்பினும் ரேசன், மதிய உணவு திட்டம், ஓய்வூதியம் மற்றும் சில திட்டங்கள் வாயிலான் பணப்பயன், கல்வியறிவில் முன்ன்ற்றம் போன்ற பல அம்சங்களில் முன்னேறியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கல்வியறிவில் சிக்கிம், திரிபுரா ஒப்பீடு நிலை இல்லாதிருப் பினும், மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு, பயனாளிகளின் திருப்தி போன்ற அம்சங்களில் திரிபுரா முதலிடம் பெறு கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு வழிகாட்டி யாக இது விஷயத்தில் இருப்பதாக மத்திய திட்டக் கமிஷன் பாராட்டியிருக்கிறது. தாய்ப் பால் கொடுத்துவரும் இளம் தாய்மார்கலுக்கு சத்துணவு, சுகாதார உதவிகள் விஷயத்திலும் திரிபுரா தொடர் முன்னேற்றம் கண்டுவருவதை குறிப்பிட வேண்டும். மத்திய அரசு மாநிலங் களுக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை திரிபுரா ஊட்டச்சத்து / சரிவிகித உணவுத் திட்டத்திற்கு செலவிடுகிறது என்பதும் கூடுதல் சேதியாகும்.

இத்தகையதொரு சூழலில்தான்-

ஐசிடிஎஸ், அங்கன்வாடி மையங்களையும், மதிய உணவுத் திட்டத்தையும் தனியார் கார்ப ரேட் தொண்டு நிறுவனங்களின் கையில் தாரை வார்க்க மன்மோகன்  அரசு செய்யும் சதியே அவமானப்புலம்பர் வசனங்கள்!

`பழுத்தாலும் பாகற்காய் கசப்புதான்’ என்பது போல எப்படி வந்தாலும் முதலாளித்துவ சக்தி களின் தலையீடு சமூகநலனுக்கு எதிரானதாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடிபட்ட, இஸ்ரோ – தேவாஸ் ஊழலில் அடிபடுகிற தொகையில் இருபதில் ஒரு பங்குகூட சுகாதாரத் துக்கும், மக்கள் நலனுக்கும் செலவிடாத மன் மோகனின் பேச்சுக்கள் வாதும், சூதும், கபடும் மிக்கதே!

தற்பொழுது நம் தேசம் சந்திக்கும் குழந் தைகள் இறப்பு விகிதம், சோகை நோய், பிரசவ கால மரணங்கள், ஊட்டச்சத்தின்மை அனைத் திற்கும் அடிப்படைக் காரணமே இந்திய அரசின் அணுகுமுறையும் செயல்பாடுமே!

கிழட்டு எருமை சினையாகிப்போய் ஈனுவதற் குக்கூட முக்க முடியாமல் போனதுபோல உலக முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இதிலிருந்து விடுபட மலைவிழுங்கி பன்னாட்டு மூலதனத்தின் கொடும்பசிக்கு நம் நாட்டை அப்பலமாக்கி அதன் வாயில் போட திட்டம் போடுகிறது மன்மோகன் அரசு!

நாட்டின் பிரதான பிரச்சனையே மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதும், சமூக  நலம் சார்ந்த அரசு என்கிற தன்மை இல்லாமல் போனதும்தான்! இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

நல்ல உணவு, குழந்தைகல் பராமரிப்பு, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்டவற்றிற்கான பொதுக்கொள்கை அரசின் நிர்த்தாட்சண்யமற்ற நிராகரிப்புக்கு உள்ளாகி பல வருடங்கள் ஆனதே பிரச்சனையின் மையம்!

இதை எதிர்த்து தொடர்ந்து களம் காண் பதும், பாதிக்கப்படும் எளிய மக்களின் கோபத் தைக் கிளறி, அரசின் கொள்கைகளை முறியடிப் பதும்தான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய உடனடிக் கடமையாகும்.

–சு. லெனின் சுந்தர்Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: