மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


“மகாத்மாவும் – அவரது இசமும்” நூலில் தோழர் இ. எம்.எஸ்.


காந்தியிசத்தின் வெற்றி எது? தோல்வி எது?

“காந்தியின் தலைமையில் சுதந்திரத்தை வென்றுவிட்டோம் என்று கோடிக்கணக்கானவர்கள் மகிழ்ந்த தருணம் அது.ஆனால் காந்தியோ, மனிதர்களின் நல்லியல்புகளைப் புத்துயிர்ப்பு செய்வதென்ற தனது லட்சியம் தோற்று விட்டது .என்று கருத்து தெரிவித்தார். பிரிட்டிஷ்காரர் களுக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் உத்தியாகவும், தந்திர மாகவும் காந்தியிசம் வெற்றி பெற்றது. ஆனால் மனித இயல்பு களைப் புத்துயிர் பெறச் செய்யும் புதிய முறை, புதிய சமூகச் சித்தாந்தம் என்கிற வகையில் காந்தியிசம் முழுத் தோல் வியைக் கண்டது என்பதற்கு அவரது வார்த்தைகளை விட தெளிவான தீர்ப்பு வேறு இருக்க முடியாது”

– பக்கம் 138

எப்படி மதிப்பிடுவது காந்தியை?

“இது சுலபமான பணி அல்ல. மற்ற பல வரலாற்று நாயகர்களைப் போன்றே காந்தியும் மிகச் சிக்கலான ஆளுமை கொண்டவர். ‘தேசிய இயக்கத்திற்கு உத்வேகம் தந்து ஏகாதி பத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்’ என்றோ அல்லது ‘தேசிய இயக்கம் புரட்சிகரப் பாதையில் வளர்வதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்த எதிர்ப் புரட்சிக் காரர்’ என்றோ மிக எளிதாக அவரைப் பற்றிய மதிப்பீடிற்கு வந்துவிட இயலாது”

– பக்கம் 140

“பிற்போக்கான சமூகக் கண்ணோட்டம் கொண்ட காந்தியே நவீன தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு பெருந்திரளான. கிராமப்புற ஏழை மக்களை ஈர்த்த புரட்சிகர, அற்புதமான காரண கர்த்தா என்று எவரேனும் கூறினால் அது அவரின் சுய முரண்பாடு போல் தோன்றலாம். ஆனால் இச் சுயமுரண்பாடு , தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு தலைமை தாங்கிய முதலாளித் துவ வர்க்கம் நிலபிரபுத்துவத்துடன் கொண்டிருந்த தொடர்பு எனும் நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப் பாடே”.   – பக்கம் 142

காந்தியின் உண்மை, அறம், அகிம்சை பரிபூரணமானவையா ?

முதல் உலக யுத்தத்தில் பங்கேற்பதை பாவம் என்று காந்தி கண்டிக்கத் தவறியது ஏன்? மேலும் குஜராத் மாகாணத்தில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அளவிற்கு ஆதரவாகச் செயல்பட்டது ஏன்? இரண்டாம் உலக யுத்தத்தில் எல்லாச் சாத்தியமான வழிகளில் இருந்தும் ஒதுங்கியதோடு,அதைப் பாவம் என்று சொன்னது ஏன்? முதல் உலக யுத்தம் ஒழுக்க மாகவும், இரண்டாவது உலக யுத்தம் பாவமாகவும் மாறியது எப்படி? 1921 ல் சைத்தான் என்று அரசாங்கத்தை அழைத்தவர், சட்டசபைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றவர் பின்னர் சுயராஜ்யவாதிகளை சட்டசபைகளில் அனுமதிக்க- மாற்றுக் கருத்துள்ளவர்களைச் சம்மதிக்கச்செய்ய- தனது செல்வாக்கை பயன்படுத்தியது ஏன்? சௌரி சௌராவில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதும் ஒத்துழையாமை உள்ளிட்ட  போராட்டங் களைத் திரும்பப் பெற்றவர், மாகாண காங்கிரஸ் அரசாங்கங்கள் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவற்றை ஆதரிக்கத் தயங்காதது ஏன்? … மற்ற எந்த மனிதரையும் போல காந்திக்கும் உண்மை, அறம், அகிம்சை போன்றவை பரிபூர்ணமானவை அல்ல, மாறாக சார்புத் தன்மை கொண்டவையே ”                – பக்கம் 150

காந்தி எப்படி முதலாளித்துவ வர்க்கத்தின் தலைவராக

ஆரவாரமாக ஆமோதிக்கப்பட்டார்?

“முதலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப உண்மை, அறம், அகிம்சை போன்ற கோட்பாடுகளை அவர் பிரயோகப்படுத்தியதால்தான் அவர்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் காந்திக்கு கைவசமானது. உழைப்பாளி மக்களை கட்டவிழ்த்து விட்டதிலும், பிரிட்டிசாருக்கு எதிராக அவர்களை ஒன்றுபடுத்தியதிலும், அதே நேரத்தில் அவர்களின் செயல்பாடுகளை முதலாளித்துவ வர்க்கத்தின் பாதுகாப்பு எல்கைகளுக்குள் கட்டுப்படுத்தியதிலும் காந்திக்கு இருந்த திறமை அவ்வர்க்கத் தால் பாராட்டப்பட்டது… காந்தி மக்களின் நாடித் துடிப்பை அறிந்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டார்.ஆனால் மககள் களத்தில் இறங்கும்போது அந்த  தீ தங்களையும் விழுங்கிவிடுமே என்று அஞ்சியவர்களையும் அத் தணல் அண்டாமல் பார்த்துக் கொண் டார். உண்மை, அறம், அகிம்சை போன்ற கோட்பாடுகள் இப்படி நேர்த்தியாக பிரயோகிக்கப்பட்ட விதத்தினால்தான் முதலாளிகளின் பிரதிநிதிகள் அவரை தங்களின் தலைவர் என ஆரவாரமாக ஆமோதித்தனர்”. – பக்கம் 151

சுரண்டும் வர்க்கங்கள் வினோபா பாவே போன்றவர்களை வாழ்த்துவது ஏன்?

மார்க்சிய மூலவர்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பிரகடனம் செய்தார்கள். எந்த வர்க்கமும் தனது அரசியல் அதிகாரத்தை தானே விட்டுக் கொடுக்க முன் வருவதில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக தனிநபர்கள்,வினோபாவே போன்ற லட்சிய வாதிகளின் போதனைகளைக் கேட்டு அதிகாரத்தையோ, உடைமையையோ துறக்கலாம். ஆனால் முதலாளிகளோ, நிலப் பிரபுக்களோ, இதர சுரண்டும் வர்க்கங்களோ ஒரு வர்க்கம் என்ற வகையில் சமுக மாற்றத்துக்கு விருப்பத்தோடு இசைய மாட்டார்கள். ஆதலால் வினோபா பாவே மற்றும் அவரின் சகாக்களை இச் சுரண்டும் வர்க்கங்கள் நிச்சயமாய் வாழ்த்துவார்கள். பூதான இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு உதவவும் செய்வார்கள்” – பக்கம் 156

மார்க்சிய, லெனினிய மதிப்பீடு என்ன ?

“காந்தியத்தை மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் மதிப்பிடும்போது முதலாளித்துவ தத்துவம், நடைமுறை என்ற வகையில் அதன் சாதக, பாதகங்களை கணக்கிற் கொள்ளவேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூமிதான இயக்கத்தின்போது நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு, 1970 களில் சர்வாதிகார எதிர்ப்பு என தேச சுதந்திரம், விவசாய சீர்திருத்தங்கள், ஜனநாயகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக காந்தியம்போராடியுள்ளது. அதே நேரத்தில் அதன் இருண்மைவாத சமூகக் கலாசாரக் கண்ணோட்டத்தின் காரணமாக மககள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும் அது மாறியது… காந்தியத்திற்கு எதிரான கொள்கைரீதியான தத்துவார்த்த ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் “.

தொகுப்பு: சாமிநாதன்Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: