மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கல்வி உரிமைச் சட்டம் கானல் நீரா?


இந்தியாவில் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பின் நிறைவேறி யுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்த்த தன்மையில், இந்த கல்வி உரிமைச் சட்டம் அமையவில்லை, என்ற ஏமாற்றம், சட்ட வரையறைகளுக்குள் செல்கிற போது, நிறையவே ஏற்படுகிறது. இருந்த போதிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள கல்வி உரிமைச் சட்டத்தை, மக்கள் பயன்படுத்த முயற்சிக்கிறபோது, நேரடியாக சந்திக்க உள்ள பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு, ஆளும் வர்க்கத்திற்கும், மக்களுக்குமான முரண் பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டியவர்களாக மார்க்சிஸ்டுகள் இருக்கிறோம்.

இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட் டத்தில், அடிப்படைக் கல்வி வணிகமயமாகி இருப்பதைத் தடுக்கவோ, தனியார் வசம் உள்ள ஆரம்பக் கல்வி நிறுவனங் களைக் கைப்பற்றவோ எந்த வழிகாட்டுதலும் இல்லை. மாறாக தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது, 25 சதம், இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் சுற்று வட்டார மாணவர்களை சேர்க்க வேண்டும் என வழி காட்டியுள்ளது. இதை பொதுவான முறையில் வரவேற்கும் எண்ணமே தலைதூக்கும். கடந்த கால அனுப வத்தைக் கணக்கில் கொண்டு இச் சட்டத்தை அணுகினால், இது பெரிய பலன் தருவதற்கான ஏற்பாடல்ல என்பதை அறிய முடியும். உண்ணி கிருஷ்னன் என்ற மாணவருக்கும் ஆந்திர அரசுக்குமான வழக்கில், உச்ச நீதிமன்றம் கல்வி கற்கும் உரிமை வாழும் உரிமையுடன் இனைந்தது எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 50 சதமான மாணவர் சேர்க்கையை அரசு மூலமான தேர்வு வழியாக குறைந்த கட்டணத்தைக் கொண்ட இடங்க ளாகவும், 35 சதமான சேர்க்கையை அரசு தரும் பட்டியல் மூலம் கூடுதல் கட்டணம் கொண்ட இடங்களாகவும், எஞ்சி யுள்ள 15 சத இடங்களை நிர்வாகமே நிரப்பிக் கொள்ளும் இடங்களாகவும் கொள்ளவேண்டும் என வழிகாட்டியது. இந்த தீர்ப்பைத் தமிழகத்தை ஆட்சி செய்த ஆட்சி யாளர்கள், புதிய அரசு கல்லூரிகளைத் திறக் காமல் இருக்க, மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இத் தீர்ப்பு 1993 ம் ஆண்டு பிப் மாதம் வெளி வந்தது. அதன் பிறகு தமிழகத்தில் மட்டும் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் தனியாரால் துவக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாப் பல்கலைக் கழகம் மாணவர் சேர்க் கைக்கான பட்டியல் தயாரிப்பு வரையில்தான் தனியார் கல்லூரிகளில் தலையிட முடிகிறது. மாணவர் சேர்க்கையில் ஓரளவு தகுதி, இட ஒதுக்கீடு ஆகியவை பின் பற்றப்படுகிறது.

அதே ஆண்டில், மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடு செய்த மாணவர்களிடம் வழி காட் டுதல் படி கட்டணம் வசூலிக்காமல், கூடுதல் கட்டணம் கேட்டு, தாழ்த்தப்பட்ட மாணவிகளை வெளியில் அனுப்பிய விவரங்களை நாம் அறி வோம். அதைத் தொடர்ந்து நடைபெற்ற மாண வர் போராட்டங்கள் தனியார் நிறுவனங்களின் கொள்ளையையும், அரசின் அலட்சியத்தையும் அம்பலப்படுத்த உதவியது. கல்வி உரிமைச் சட்டத்தை இந்த அனுபவங்களில் இருந்து வேறு படுத்திப் பார்க்கவும், எதிர்ப்பு இயக்கங்களில், வெகு மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற் காகவும் பயன்படுத்த வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையை விடவும், ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர் களின் எண்ணிக்கை அதிகம். பொறியியல் கல்வியை உரிமைக்கான போராட்டத்தை விடவும், ஆரம்பக் கல்வி உரிமைக்கான போராட் டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்.

இந்த இரண்டு காரணங்களையும் உள் வாங்கிக் கொண்டுள்ள மக்கள் இயக்கங்களால் ஆளும் வர்க்கத் திற்கும், மக்களுக்குமான முரண் பாட்டைத் தீவிரப்படுத்த முடியும். சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டம், தனியார் பள்ளிகளில் கட்ட ணத்தை அரசு தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கானதாகும். தி.மு.க ஆட்சியில் இருந்த போது, தீர்மானிக்கப் பட்ட கட்டணம் நியாயமற்றது என்ற எதிர்ப்பு இருந்தாலும், நடுத்தர வர்க்கம், சற்று நிம்மதி பெருமூச்சுடன், ஒரு வழிகாட்டுதல் இருக்கும் காரணத்தால், கூடுதல் கட்டணம் கேட்கும் இடங்களில், பெற் றோர்களைத் திரட்டி போராடி வருகின்றனர். இதை பெற்றோர் மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைத்து வருகிறது. இதன் மூலம் முத லாளித்துவ அமைப்பில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், வழிகாட்டியவர்களாலும், ஏற்றுக் கொண்ட நிறுவனங்களாலும் மீறப் படுகிற போது, அவர்களைக் காப்பாற்றுகிற ஏற்பாடும் இருக்கிறது இதை தெளிவுபடுத்தும் விதத்திலான போராட்டத்தின் மூலமே இன்றைய முதலாளித்துவ ஆட்சியமைப்பின் மீதான மோதலைத் தீவிரப்படுத்த முடியும். சமச்சீர் கல்விக்கான போராட்டம், பலதரப்பினரை போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக மாற்றி யது என்பதை சமீபத்தில் நாம் பார்த்திருக்கி றோம்.

ஆனாலும் தி.மு.க பெயரளவிற்கான அம லாக்கத்தை தான் முன்வைத்தது. அ.தி.மு.க அதையும் நிராகரித்தது. மார்க்சிஸ்டுகள் உள் ளிட்டு கல்வியாளர்கள், மாணவர் இயக்கங்களின் போராட்டங்கள் அமலாக்கியதைத் தடுக்காதே என நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத சமச்சீர் கல்வி முறையை அமலாக்க வலியுறுத்திய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. எனவே ஆட்சியாளர்களின் சட்டங்கள் பெயரள விற்கானதாக இருந்தாலும், மக்கள் இயக்கத்தால் தான் அதையும் கூட அமலாக்க வைக்க முடியும்.

அமலாக்கத்திற்கான விதிகள்:

மத்திய அரசு 2009 ஆகஸ்டில் சட்டம் இயற்றி பின் 2010 ஏப்ரலில் விதிகளை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து மாநிலங்களும், விதிகளை உருவாக்கி சட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது இந்திய ஆட்சியமைப்பு முறையில் உள்ள நடைமுறை. விதிகள் இல்லை என்றால், சட்டத்தை அமலாக்காத நிறுவனங்களை கேள்வி கேட்க முடியாது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கி உள்ளன. தமிழ்நாடு அரசு 2011 நவம்பரில் விதிகளை வெளியிட்டது. அரசாணை எண் 180/2011 ல், 2010 ஏப்ரலில் இருந்து அமலுக்கு வந்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தை தமிழ கத்தில் அமலாக்க நடவடிக்கை எடுக்க இருப்ப தாக தெளிவு படுத்தியுள்ளது. சட்டத்தின் பிரிவு 12 ல், உபபிரிவு 1 ன் படி, தனியார் கல்வி நிறுவ னங்கள், கல்வி நிறுவனத்தைச் சுற்றி 1 கி.மீ தொலைவில் உள்ள மாணவர்களில் இருந்து, முதல் வகுப்பு துவங்கி ஐந்தாம் வகுப்பு வரை யிலும், அதேபோல் 3 கி.மீ சுற்று வட்டாரத்தில் இருந்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், 25 சதம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். அந்த மாணவர்கள், வாய்ப்பு மறுக்கப் பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்களாக இருக்க வேண்டும் என்பதாகும்.

இரண்டாவதாக, அரசாணை வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள் எனக் குறிப்பிடுகிற போது, 1, மாணவர்கள் ஆதரவற்றவர்களாக இருத்தல், 2. எச்.ஐ.வி பாதிப்பிற்கு ஆளான வர்கள், 3. மூன்றாம் பாலினத்தவர், 4. துப்புரவு உள்ளிட்ட சமூகம் வரையறை செய் துள்ள கீழான வேலைகளைச் செய்வோரின் குழந்தைகள் என்று இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அடுத்து பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்பதை தமிழக அரசு வரையறை செய்கிற போது, ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த தகுதிகளை விரிவாக ஆய்வு செய்த பின் மாநில அரசு, 25 சதம் இடஒதுக்கீடு என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை, அரசே செலுத்தும் என ஒப்புக் கொண்டுள்ளது. மேற்படித் தகுதிகளை நிரூபிக்க இயலாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எத்தனை கி.மீ தூரத்தில் அரசுப் பள்ளிகள் இருந்தாலும், அதைத் தேடிச் சென்று படிக்க வைப்பவர்களாக இருக்க வேண்டும், என அரசு விதிகளை உருவாக்கி உள்ளது. இது 25 சத வாய்ப்பைப் பயன்படுத்த நினைக்கும் பெற்றோர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது. தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கிடு என்ற சமூக நீதிக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் வேண்டுமானால் குதூகலம் அடையலாம். ஒரு கம்யூனிஸ்ட் இதன் உள்நோக்கத்தை உற்று நோக்க வேண்டியிருக் கிறது. அரசு செய்துள்ள வரையறைப்படி ஒரு மாணவர் சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி யில், 25 சத இடஒதுக்கீடுபடி சேர்ந்துவிட முடி யுமா? சென்னையில் சில பள்ளிகள் சுற்றறிக்கை மூலம் பெற்றோர்களுக்கு, இது போன்ற இட ஒதுக்கீடு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே பெற் றோர்கள் மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க முன் வரவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள் ளனர். அதேபோல் சில நிறுவனங்கள், தங்கள் பள்ளியில் 25 சத இடஒதுக்கீடு வழங்கினால், அதன் காரணமாக உழைக்கும் மக்களின் பண்பாடு, பிற வசதியான குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்ளுமே என்ற கவலையை வெளிப் படுத்தியுள்ளனர். போதனா முறையிலும் ஆசிரி யர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். நடுத்தர மற்றும் வசதிபடைத்த வீட்டுக் குழந்தை முன் பள்ளிப்பருவக் கல்வி பெற்று முதல் வகுப்பிற்கு வரும் நிலை இன்று அனைத்து தனியார் பள்ளி களிலும் இருப்பதால், அந்த அனுபவம் கொண்ட குழந்தைகளுக்கு கற்றுத்தருவது எளிது. ஆனால் முன் பள்ளிப்பருவக் கல்வி இல்லாது வாய்ப்பு மறுக்கப்பட்ட அல்லது 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட பெற்றோர் களின் குழந்தைகளுக்கு எப்படி பாடத்திட்டத் தைப் போதிப்பது என கேள்வி எழுப்புகின்றனர். மொழிப்பாடங்களைப் பொறுத்தவரையில், ஆரம்பக் கல்வியிலேயே இரண்டு மொழிகளைக் கற்பிப்பது தனியார் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் முன் பள்ளிப்பருவக் கல்வி இல்லாத  இடஒதுக்கீடு மூலம் வருகிற குழந்தை களை எப்படி அத்தகைய உயரத்திற்கு மேம் படுத்துவது? இது ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலை என்றும் வினா தொடுக்கின்றனர்.

இவற்றை எல்லாம் பொதுவாகப் பார்த்தால் பெற்றோர், இந்த முதலாளித்துவ அமைப்பு முறையில், ஓரளவு நல்ல நிலையில் உள்ள தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற உணர்வு நிலைக்கு வருவார்களா? வரக்கூடாது என்பதற்காக திட்ட மிட்டே மேற்படிப் பள்ளிகளும், ஆளும் வர்க் கமும் திட்டமிட்டு சாதாரண பெற்றோர்களுக்கு உருவாக்குகிற தாழ்வு மனப்பான்மை ஆகும். ஏழைகள் இத்தகைய பள்ளிகளுக்கு வருவதற்கு தகுதிபடைத்தவர்கள் அல்ல என்ற கருத்தை உளவியல் ரீதியில் திணிக்கிற ஏற்பாடு ஆகும். அரசு முன்மொழியும் சட்டங்களைச் செய லிழக்கச் செய்வதற்கான கருத்துப் பிரச்சாரம் ஆகும்.

எனவே அரசு அறிமுகம் செய்துள்ள சட் டத்தை தமிழகத்தில் அமலாக்கிட, குறிப்பாக உள்ளூர் மாணவர்களுக்கான 25 சத இட ஒதுக்கீடு தனியார் கல்வி நிறுவனங்களில் அம லாக்கிட போராட்டத்தை நடத்த வேண்டி யுள்ளது. முதலாளித்துவ சமூகத்தின் அடக்கு முறைக் கருவியான காவல் துறையிடம் உழைக்கும் மக்களும் நீதி கேட்டு புகார் கொடுப் பதும், அதற்காகப் போராடுவதும்  தொடர் வதால் தான், காவல் துறையுடன் உழைக்கும் மக்களுக்கு உள்ள முரண்பாடு அதிகமாக இருக்கிறது. அது போல், இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் சமூக நீதிக்கு எதிரானது, பணக் கார வர்க்கத்திற்கானது, என்பதை அம்பலப் படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. குறிப் பாக கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க் கத்திற்கு, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் இயற்றப் படும் சட்டங்கள் மீது சில மாயைகள் இருக்கிறது. 25 சதமான இடஒதுக்கீடு இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தில் கண் துடைப்பு நோக்கில் முன்வைத்திருக்கலாம். ஆனால் அதை அரசு அமலாக்க இயலாமல் செயலற்று நிற்பதை  நேரடி அனுபவத்தின் மூலம் சுட்டிக் காட்டும் போது தான், மேற்படி மாயைகள் தகரும். மாயைகள் தகருவதன் மூலமே மாற்று சமூகத்திற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்த முடியும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனது கட்சித் திட்டத்தில், ஆறாவது பாகத்தில் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும் எனும் தலைப்பில், பல்வேறு அம்சங்களை விவாதிக் கிறது. அதில் 16 வது பாரா, அனைத்து நிலை களிலும் விரிவான மற்றும் அறிவியல் பூர்வ கல்வி கிடைத்திட பொதுக் கல்வி நிறுவன முறை வளர்க்கப் படும். மேல்நிலைக் கல்வி வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படும். கல்வியில் மதச்சார்பற்ற கல்வி முறை உத்தரவாதப்படுத்தப் படும். உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி நவீனப் படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். முழு அளவி லான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மூலம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கப் படும். விளையாட்டு நட வடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விரிவான விளையாட்டுக் கொள்கை நிறைவேற்றப் படும். என்று குறிப்பிடுகிறது.

இதை எப்படி அமலாக்குவது என்ற கேள் விக்கு, கட்சி திட்டம் தெளிவான பதிலையும் முன் வைக்கிறது. இன்றைய முதலாளித்துவ ஜன நாயகத்திற்கு மாற்றான, பாட்டாளி வர்க்க ஜனநாயக புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்க வேண்டியிருக்கிறது எனக் குறிப் பிடுகிறது. இன்றைய ஏகாதிபத்திய உலகமய மாக்கல் சூழலில், மூலதனம் லாபத்தைத் தேடி எல்லா துறைகளிலும் கால் பதிப்பதைப் பார்த்து வருகிறோம். அந்நியப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி என்ற ஆலோசனையும், சர்வதேச பள்ளி (இண்டர்நேசனல் ஸ்கூல்) என்ற பெயர் பலகை தாங்கிய பள்ளிகளும் அதற்கான அடித் தளம்தான். இத்தகைய பொருளாதாரக் கொள் கையைக் கொண்ட ஒரு அரசு நிச்சயமாக தான் கொணர்ந்த கல்வி உரிமைச் சட்டத்தை முழுமை யாக அமலாக்கப் போவதில்லை. எனவே நடுத்தர மற்றும் அதற்கு அடுத்து கீழ் நிலையில் உள்ள மக்கள், சந்திக்கப் போகும் ஏமாற்றங்களில் ஒன்றாக இது இருக்கக் கூடும். இந்த ஏமாற்றம் அரசு மீதும், இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் மீதுமான அதிருப்தியாக, முரண்பாடாக மாறும். மீண்டும் நமது அனுபவத்தில் இருந்தே முடிவுக்கு வரவேண்டியுள்ளது. தமிழகத்தில் கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளில் தீர்மானித் தாலும், அதை மீறுகிற போது பெரு நகரங்களில் பெற்றோர்கள் போராட்ட களத்திற்கு வந்தனர். அதை பெற்றோர்-மாணவர் கூட்டமைப்பு இருக்கும் இடங்களில் ஒருங்கிணைக்க முடிந்தது. இல்லாத இடங்களில் அதிருப்தி இருந்தாலும், எதிர்ப்பு வலுவான வடிவம் பெறவில்லை. அரசின் கொள்கைகள் மீது மக்கள் மோதுகிற சூழலை உருவாக்குவது வெகுஜன இயக்கங்களின் மிக முக்கிய கடமை என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இதைக் குறிப்பிடுகிற போது மார்க் சிஸ்ட் கட்சி மத்திய அரசும், மாநில அரசும் முன்வைத்துள்ள கல்வி உரிமைச் சட்டம் மற்றும் விதிகளில் முழு உடன்பாடு கொண்டு விட்டதாக பொருள் கொள்ளக் கூடாது. முன் பள்ளிப் பருவக் கல்வி தருவது அரசின் பொறுப்பு என் பதை மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. 6 முதல் 14 வயது வரை இலவசக் கட்டாயக் கல்வி என்ற முன் மொழிவை, 0 முதல் 14 வயது வரை எனதிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையில் தனிக் குடும்ப வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பல குழந்தைகளுடன் வாழ்ந்த தால், கிடைத்து வந்த குழந்தைகளுக்கான அறிவுத் திறன் தனிக் குடும்பங்களில் குறைவது இயற்கை. எனவே முன் பள்ளிப் பருவம் (கிண்டர் கார்டன்) மிக அவசியம் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்த காரணத்தினால் தான், 0 முதல் 14 வரை இலவச கட்டாயக் கல்வி என்ற திருத் தத்தை முன் வைத்தது. இலவச கட்டாயக் கல்வி வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளது. பொதுக் கல்வி நிறுவன முறை வளர்க் கப்படும். மேல்நிலைக் கல்வி வரை இலவச கட்டாய கல்வி என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

இந்த மாற்று அணுகுமுறையை இன்றைய முதலாளித்துவ அரசு அமலாக்காது என்பத னால்தான், மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக முன்னணி மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்துவது என்றும், அதற்கும் முன்னதாக இடது மற்றும் ஜனநாயக முன்னணியை உருவாக்குவது என்றும் விவாதித்து வருகிறது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி முதன் முதலில் உருவான 1957 ன் போது, 1958ல் கல்விச் சட்டத்தை முன் வைத்து அமலாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய 2009 கல்விச் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு 2010 ல் உருவாக்கியுள்ளது. அதில் பாகம் 4 அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் பொறுப்பு என சில வரையறைகளை முன்வைத்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இலவச கல்வி வாய்ப்பை 1 கி.மீ தூரத்திற்குள் அமையும் வகையில் அருகமைப் பொதுப் பள்ளி முறையை உருவாக்க வேண்டும் என்றும், 1 முதல் 5 வரை இருக்கும் பள்ளிகளை 1 முதல் 8 வரை யிலும் தரம் உயர்த்துவது என்றும் விதிகளை உருவாக்கி உள்ளது. அரசே நிதிச் செலவினத்தை ஏற்றுக் கொள்ளும், மத்திய அரசிடம் அதற்கான ஒத்துழைப்பைப் பெறுவது என்றும் குறிப்பிட் டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளி களில் இடஒதுக்கீடு அடிப்படையில் பெற்றோர் விண்ணப்பம் செய்தால், அதற்கான தொகையை அரசு செலுத்தும் என குறிப்பிட்டுள்ளது. கட்ட ணத்தில் 50 சதத்தை முதலிலும், மீதி 50 சதத்தை அடுத்த கட்டமாகவும் அரசு, சம்மந்தப் பட்ட கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு மின்னனு மூலம் பணப்பட்டுவாடா செய்யும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது. அதோடு மேற்படி தனியார் பள்ளிகள் இடஒதுக்கீடு அடிப் படையில் சேருகிற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளது. மேலும் கேரளத்தில் உள்ள தனியார் பள்ளி களில் 25 சதம் இட ஒதுக்கீடு இல்லை. மாறாக 1:1 என்ற அடிப்படையில், அருகமைப் பகுதி மாண வர்களைச் சேர்க்க வேண்டும் என்பதைக் குறிப் பிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி யின் போதே சட்டத்தை அமலாக்குவதற்கான விதிகள் உருவாக்கப் பட்டது. அருகமைப் பள்ளி களை பயன்படுத்துவது, கிராமம், நகரம் என்ற பாரபட்சம் இல்லாமல், ஆரம்பக் கல்விக்கு 1 கி.மீ தூரத்தில் பள்ளிகள் உருவாக்கப் பட்டுள்ளன. உயர்நிலைப் பள்ளிகள் நகரமாக இருந்தால் 1.கி.மீ தூரத்திலும், கிராமமாக இருந்தால் 2.கி.மீ தூரத்திலும் செயல்படுத்துவது என்பதை விதி சொல்கிறது. மத்திய சட்டம் உயர்நிலைப் பள்ளி 3 கி. மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. இருந்த போதும் இடது முன்னணி அரசு அருகமைப் பள்ளிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த வசதி களையும் மீறி அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட அளவில் கல்வி ஆய்வாளர்கள் மூலம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய விதிகள் வழிவகை செய்துள்ளது. கட்டணத்தை அரசு கொடுப்பது எனவும், அதை கல்வி ஆய்வாளர்கள் மூலம் சம்மந்தப் பட்ட பள்ளிகளில் சேர்ப்பது என்றும், பள்ளி துவங்கி மூன்று மாத கால அவகாசத்தில் பணம் பட்டு வாடா செய்யப்படும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் இன்றைக்கும் மார்க் சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி தான் ஆட்சியில் இருக்கிறது. அங்கு அருகமைப் பொதுப்பள்ளி முறை குறித்த அக்கறை மாநில விதிகளில் வெளிப்படுகிறது. மாவட்ட கல்வி அதிகாரி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படி பின்பற்றப் படுகிறது என்பதைக் கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப் படுகிறார். இலவச கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் 25 சத இடஒதுக்கீடு எங்கள் பள்ளிகளில், பள்ளி நிர்வாகம் விளம்பரம் செய்ய வேண்டும். அப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, சேர்க்கை முடிந்தவுடன் கட்டணத்தை மாவட்ட கல்வி அதிகாரி மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப் படும். மாதந்திர அடிப்படையில் கட்டணம் செலுத்தப்படும். பள்ளி நிர்வாகமும் மாதம் தோறும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் குறித்த மதிப்பீட்டை அரசுக்கு அளிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் மாணவர்களின் மீதான தொடர் அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந் திருக்கிறது.

தமிழக அரசு இதுபோல் அக்கறை எடுத்து விதிகளை உருவாக்கவில்லை. கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களைவிட  தமிழகத்தில்தான் தனியார் பள்ளிகள் அதிகம். இந்த பின்னணியில் தமிழக விதிகள் முழு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

சட்டம் முழுமையாக இந்த முதலாளித்துவ ஆட்சி அமைப்பில் அமலாகாது என்பது மார்க் சிஸ்டுகள் அறிந்தது. இருந்தாலும், சட்டம் என்ற வடிவத்தை இந்த முதலாளித்துவ அரசு இயற்றி இருப்பதால், போராடும் சக்திகளுக்கான பலம் அதிகரித்து இருக்கிறது. இரண்டாவதாக முத லாளித்துவ ஆட்சி அமைப்பிற்கு மாற்றான கொள்கைகள் மீது பிரச்சாரம் செய்யவும், அரசு மீது முரண்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில் இந்த அரசுகளை அம்பலப் படுத்தவும் கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குவதற்கான தீவிர போராட்டம் அவசியம். குறிப்பாக அருகமைப் பொதுப்பள்ளி முறைதான் தீர்வு என்பதை புரிய வைக்கவும், சட்டத்தை அத்தகைய தேவைக்கான திருத்தத்திற்கு உட்படுத்தவும் போராட்டம் அவசியம். இது கல்வி ஆண்டு துவங்கும் காலம் என்பதால் வெகுமக்களின் கூட்டு இயக்கம் தமிழகத்தில் வலுவான போராட்டத்திற்கு திட்டமிட வேண்டும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: