நூல் அறிமுகம் மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 5, 6
கம்யூனிஸ்டுகளின் முன் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வும் வழியும் உண்டு
(மாவோ)
மக்கள் சீனத்தில் சோஷலிச புரட்சி கால கட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், சோஷலிசத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது பற்றிய மாவோவின் கருத்துக்கள் தொகுதி ஐந்தில் முன் வைக்கப்படு கின்றன. முதல் ப்ளீனக் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரையுடன் இத்தொகுதி துவங்குகிறது. முதல் இரண்டு கட்டுரைகள் வாழ்த்துச் செய்திகளாக உள்ளன. தொகுதி ஐந்தில் முக்கியமான கட்டுரையாக வருவது 1950ல் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உள்ளன. விவசாய அமைப்புகளைக் கட்டுதல், வர்க்க உணர்வை ஊட்டுதல் போன்றவற்றிற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
புரட்சிக்குப்பின் பொருளாதார கட்டமைப்பு
ஏழை விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாட்டில், அரசு அவர்களுக்கு கடன் உதவி செய்தல் விவசாயிகள் நிலத்தை அரசுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்று மாவோ வலியுறுத்தியுள்ளார். அதே போன்று, வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க, ஒழிக்க, தொழில் மற்றும் வணிகத் துறைகளில் முறையான சீரமைப்பு செய்ய வேண்டும். வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். கடவுள்தான் மனிதனை உருவாக்கி னான் என்று கூறினால், கூறிவிட்டு போகட்டும் நாம் கூறுவோம் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று. நாட்டிலுள்ள சிந்தனையாளர் களில் பலர் முதியவர்கள். அவர்கள் நமது கட்சி யையும், மக்கள் அரசையும் ஆதரிக்கின்ற வரை நாமும் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய் வோம். அதுபோன்று மக்கள் தொகையில் கணிசமாக உள்ள தேசிய சிறுபான்மை இன மக்களுடைய ஒற்றுமையை கட்டுதல் அவசியம். இவற்றையெல்லாம் செய்யாமல், புரட்சி வந்த வுடன் அனைத்து துறைகளிலும் மாற்றம் வந்து விடாது. சோஷலிச கட்டமைப்பை கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என விளக்குகிறார். மற்றும் எதிர்புரட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது, புரட்சியின் பலன்களை எப்படி தக்கவைத்துக்கொள்வது, மேம்படுத்துவது என்றும் மாவோ நிறைய எழுதியுள்ளார். இப் பகுதியில் மக்கள் சீன எதிர்புரட்சி நடைபெற்ற காலம் சூழல் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.
மாவோ ஒரு சிறந்த புரட்சியாளர் மட்டுமல்ல, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பல பரிமாணங்கள் அவருக்கு உண்டு. ஒரு திரைப் படத்தை எப்படி விமர்சன கண்ணோட்டத் துடன் அணுக வேண்டும் என்பதற்கு மே 1951ல் `ஆசூனின் வாழ்க்கை வரலாறு என்ற திரைப் படத்தை பற்றிய அவரது சிறிய கட்டுரை சான் றாகும். அதில் வரலாறு பற்றிய அவரது பார்வை குறிப்பிடத்தக்கதாகும். வரலாறு என்பது பழையதை தூக்கி எறிந்துவிட்டு புதிய தடத்தில் முன் நகர்வதல்ல, மாறாக, எல்லாவித பிரயத் தனங்களையும் செய்து பழையதை அப்படியே பாதுகாப்பதன் மூலமே வரலாறு நகர்கின்றது என சில எழுத்தாளர்கள் கருத்தை கூறிவிட்டு, வரலாற்றை எப்படி பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வரலாறு முன்னேறுகிறது என்பதற்கு அடையாளம் தூக்கி எறிந்தே ஆக வேண்டிய பிற்போக்குவாத நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களைத் தூக்கியெறியும் குறிக் கோளுடன் வர்க்க போராட்டத்தை முன்னெடுத் துச் செல்வது அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டவர் களின் வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதும், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைவதே வரலாறாகும் என்று வாதிடுகிறார்கள்,. இது தவறு என மாவோ சுட்டிக்காட்டு கிறார். வரலாற்றை ஆராயும்பொழுது, தர்க்க ரீதியான விமர்சனங்களை எழுப்ப வேண்டும். பிற்போக்கு தத்துவங்களிடம் சரணாகதி அடையக் கூடாது.
ஊழல்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? ஊழல் சிறியதோ, பெரியதோ, எதுவாக இருப் பினும் களைய வேண்டும். மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவில் தவறு செய்தவர்களை மறு உருவாக்கம் செய்வதன் மூலம் மீண்டும் தவறு செய்வதை தடுக்க முடியும். அதன் மூல மாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தால் அரிக் கப்படும் அபாயத்திலிருந்து கட்சி உறுப்பினர் களை காப்பாற்ற இயலும் என்று மாவோ 1952ல் எழுதியது இன்று மிகவும் பொருத்தமானதாகும். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஊழல் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது. லஞ்சம், வரி ஏய்ப்பு, பொதுச் சொத்தை திருடுவது, அரசு வேலைகளுக்கான ஒப்பந்தங் களை ஏய்ப்பது, பொருளாதாரம் குறித்த தகவல் களை திருடுவது போன்ற மக்கள் விரோத செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஐந்து தீமைகளுக்கு எதிரான போராட்டம் என்பதன் கீழ் நிறைய ஆலோசனைகளை முன்வைக்கிரார். குறிப்பாக, ஊக வணிகத்தை அழித்து ஒழித்தால் தான் முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படும்படி செய்ய இயலும் என்கிறார்.
தனியார்துறையை பொறுத்தவரை, அரசு வரையறுத்துள்ள எல்லைகளுக்கு உட்பட்டு தனியார் தொழில்களை வளர்க்கலாம். காலப் போக்கில் தனியார் வணிகத்தைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தனியார் முதலீட்டுக்கு லாப விகித உச்ச அளவை நிர்ணயித்து, சிறிது லாபம் ஈட்ட ஏதுவாக வழி செய்யலாம். ஆனால் அதுவே கொள்ளை லாபமாக இருந்துவிடக் கூடாது. வரி ஏய்ப்பு செய்தவர்களை கட்டாயமாக வரி செலுத்த அனுமதிப்பது இல்லையெனில் சொத்து பறிமுதல் செய்து அரசுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பெரும் பொருளாதார இழப்பு களை ஈடு செய்ய இயலுமென்கிறார்.
திபெத் பற்றி மாவோ
தற்போது, இந்திய தலைநகரில் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் திபெத்திய மக்களின் போராட்டங்கள் – தீக்குளிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வருவதைக் காண்கிறோம். 1952ம் ஆண்டு திபெத் பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அந்த பிரச்சனைகளின் பின்னணியை புரிந்துகொள்ள உதவும். திபெத் ஒரு வித்தி யாசமான தேசிய சிறுபான்மை இன மக்களைக் கொண்ட பூமி என்பதை சீனா உணர்ந்துள்ளது. அம்மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமெனில், வரவு-செலவிற்கு திட்டமிடுவது, ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது, அம்மக்களை வென்றெடுக்கும் அடிப்படையாக இருக்கட்டும். தலாயையும் அங்குள்ள உயர்மட்டக்குழுவில் உள்ள பெரும்பான்மையை வென்றெடுக்க வேண் டும் எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, இந்தியா வுடன் வணிக உறவுகளை ஏற்படுத்தி வணிகப் பொருட்களை கொண்டு செல்வது, திபெத்திய மக்களின் வாழ்க்கைத் தரம் கீழே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ஐர். மாவோ இதை எழுதி (1952) 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. சீன ராணுவத்தைக் கண்டு திபெத்தியர்களிடம் ஒரு அச்சமிருப்பதாக பொதுக் கருத்து நிலவுகிறது. திபெத்திய மக்களின் ஆதரவும் இல்லை என்று அப்பொழுதே குறிப் பிடப்பட்டுள்ளது. தலாய் லாமாவின் எச்சரிக்கை பற்றியும் மாவோ சுட்டிக் காட்டியுள்ளார். இன்றுவரை தீர்க்கப்படாத சூடான பிரச்சனை யாக உள்ளது.
இளைஞர் சங்கம்
வாலிபர் சங்கம் கட்சி சாராமல் செயல்பட வேண்டுமென மாவோ வலியுறுத்துகிறார். தனியாக இயங்குவது மட்டுமின்றி, சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்கிறார். வாலிபர் சங்கம் தனது பணிகளில் இளமையின் குணநலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். வாலிபர் சங்கம், கட்சியின் மையத் திட்டங்களுடன் தனது செயல் பாடுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்படும் வாலிபர் சங்கம், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தொழிற்சாலைகள், வயல்கள், ராணுவப் பிரிவு கள், பள்ளி, கல்லூரி, பலகலைக்கழகங்கள் என இளைஞர் இல்லாமல் வெற்றிஈட்ட முடியாது. சீனாவில் சோஷலிசத்தை கட்டுவதில் இளைஞர் பங்குபற்றி மாவோ அழுத்தமாக கருத்துக்களை முன்வைக்கிறார். சோஷலிச கட்டுமானத்திற் கான பணிகளை செய்ய ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்தவர்களுடன் இளைஞர்களை ஒன் றிணைத்து தலைமைதாங்கிச் செல்வது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. 14 – 20க்கு உட்பட்ட இளைஞர்கள் கல்வி பயில் வதுடன் வேலை செய்கின்றனர். இளமை பருவம் உடல் வளர்ச்சிக்கான பருவம் என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும். முதியோரிடமிருந்து, நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமது பருவத்திற்கேற்ப கண்ட நேர விளையாட்டு, மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால், அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. காதல், திருமணம் ஆகியவை இல்லையெனில் இளமை என்பதன் பொருள் என்ன என மாவோ வினவுகிறார். உடல்நலம், கல்வி, வேலைகளில் வெற்றி பெற இளைஞர்கள் முயல வேண்டும். மனமகிழ்வு, ஓய்வு, தூக்கம் மிகவும் முக்கியம். மூத்த தோழர்களுக்கு, இளம் தலைமுறையை காக்கும் கடமை உள்ளது.
தலைவர்கள் புரட்சிகரப் பணிகளில் ஈடுபடும் போது, அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றதோ, அதனடிப்படையில்தான் அவர் கள் மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுகின்றனர். ஒரு இளைஞன் இயக்கத்தில் புதிய பொறுப்பை ஏற்கும்போது, விமர்சனங்கள் ஏற்படும். பெரிய மரியாதையும் இருக்காது. வெளிப்படையாக கருத்துக்களை சொல்ல இடமில்லாமல், கிசுகிசுக்கள் பரவும். எனவே, முழுமையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்வது, எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது என மாவோ இளைஞர் கள் செயல்பட வேண்டிய விதம் பற்றி நிறையவே எழுதியுள்ளார். இந்த கட்டுரை வாலிபர் சங்கத் தோழர்களுக்கு மிகவும் பயனிளிக்கும் என்பதில் ஐயமில்லை.
தொகுதி ஐந்தில் நிறைய கட்டுரைகள் பொரு ளாதாரம் சம்பந்தப்பட்டவை. குறிப்பாக விவ சாயத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர் திருத்தங்கள், கூட்டுறவுத்துறைகள் செயல்பட வேண்டிய விதம் பற்றி மாவோவின் கருத்துக்கள் இன்றைய இந்திய சூழலுடன் பொருத்திப்பார்க்க இயலும். தமது விவசாயத்தை தனியார் சொத்து என்ற நிலையிலிருந்து கூட்டுறவுத்துறை சொத்து என்ற அமைப்புக்கு கொண்டுவர வேண்டு மெனில் விவசாயிகளை அதற்கு தயார்படுத்த வேண்டியுள்ளது.
முதலாளித்துவ சிந்தனை கட்சிக்குள் இருப் பதை எதிர்த்து போராட வேண்டுமென வலி யுறுத்தும் மாவோ, அது எளிதானதல்ல என் கிறார். ஏனெனில் முதலாளித்துவம் மிகவும் கவன மாக தனது துப்பாக்கி ரவைகளை மக்களை நோக்கி பாய்ச்சுகிறது. அந்த ரவைகள் கரடுமுர டானவை அல்ல. மாறாக பூப்பந்தைப்போல் மென்மையான ரவைகள். சோஷலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமானால், கட்சிக்குள் இருக்கின்ற வலது சந்தர்ப்பவாத சிந்தனைகளை, முதலாளித்துவ சிந்தனைகளை எதிர்த்துப் போராட வேண்டும். முந்தைய தொகுப்புகளில் வெளியிட்டதைப் போல, இதிலும் அகநிலைவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு முதலாளித்துவம்
சீன சோஷலிச கட்டமைப்பு – சோவியத் யூனியனில் நடைபெற்றதிலிருந்து மாறுபட்டது. முதலாளித்துவம் சோஷலிச கட்டுமானத்திற்கு உதவுமா என்ற கேள்வி எழும். 1953ல் எழுதிய கட் டுரையில், முதலாலித்துவத்திலிருந்து சோஷலிச கட்டத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரே வழி அரசு முதலாளித்துவம் என்கிறார் மாவோ. தனியார் தொழில் மற்றும் வணிகத்தை அரசு முதலாளித்துவத்தின் மூலம் சோஷலிச கட்டத் திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும், அதற்கு மூன்று திட்டங்கள் உள்ளன என்றும் கூறுகிறார்.
- அரசு – தனியார் கூட்டு நிர்வாகம்
- பொருட் களை உற்பத்தி செய்வதற்கான ஆணைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்குதல்
- அதற்கான மூலப் பொருட்களை அரசே வழங்கி, உற்பத்தி செய்யப்பட்ட பொருளை (அதிகபட்ச பொருளை) அரசே எடுத்துக்கொள்ளுதல். அரசு முதலாளித்துவ பொருளாதாரத்தில் லாபம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதைக் கூட மாவோ விளக்குகிறார்.
வருமானவரி 34.5 சதம், நலநிதி 15 சதம், தொடர் சேமநிதி 30 சதம். முதலாளிகளுக்கு லாபம் 20.5 சதம். எது அவசியமோ, எது சாத் தியமோ அதன் அடிப்படையில்தான் அரசு முத லாளித்துவம் அமைக்கப்பட வேண்டும் என் கிறார். தேசத்தின் தொழில்மயத்தை முதலில் சோஷலிச கட்டத்துக்கு கொண்டுவருவது, விவசாயம், வணிகம் என அனைத்தையும் அதை நோக்கி கொண்டு செல்வது அவசியம். இதை உடனடியாக சாதிக்க முடியாது. பல ஐந்தாண்டு திட்டங்கள் பிடிக்கலாம் என்கிறார்.
எது தேசபக்தி?
பிற்போக்குவாதத்தை விமர்சிக்கையில் மூன்று வகையான தேசபக்தியைப் பற்றி மாவோ விளக்குகிறார்.
- உண்மையான தேசபக்தி
- போலி தேச பக்தி
- அரைகுறை ஊசலாட்ட தேசபக்தி. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் பிற்போக்கு வாதிகளாக இருந்தாலும் அவர்கள் உண்மை யான தேசபக்தி கொண்டவர்கள் என்கிறார்.
(தற்போதைய சீனத் தலைமை ஏகாதிபத்தியம் என்ற சொல்லையே பயன்படுத்தாத சூழலில், அவர்களின் தேசபக்தி எப்படிப்பட்டது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. போலி தேசபக்தர் கள் அழகான முகமூடி அணிந்திருப்பார்கள் என்றும், அரைகுறை ஊசலாட்ட தேசபக்தி உள்ளவர்கள் சமயத்திற்கேற்ப வேஷம் போடு வார்கள் என்றும் விளக்கும் மாவோ, அன்றைய சூழலில் சீனாவில் பெரும்பான்மையோர் உண் மையான தேசபக்தர்கள் என்கிறார். அவரது விளக்கத்தின் அடிப்படையில், இன்றுள்ளவர் களின் தேசபக்தி விவாதப் பொருளாகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.)
சோஷலிச கட்டுமானத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை பல இடங்களில் வலியுறுத்துகிறார். அதிலும் கிராமப்புறங்களில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் நிறுவுவது மிகவும் அவசியம். ஏனெ னில் விவசாயிகள் உற்பத்தியில் சாதனை புரிய அத்தகைய அமைப்பு தேவை. நிலவுடைமைக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையேயான முரண் பாட்டை தீர்ப்பது, நிலம் யார் கையில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடுவது உடனடியாக செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கு அழகான பழமொழியை மேற்கோள் காட்டுகிறார். மீன்வலையின் தலைக்கயிற்றை இழு, மொத்த வளையும் திறந்து கொள்ளும் முக்கிய கண்ணியை கையில் வைத்துக்கொண் டால், மற்ற அனைத்தும் தானாகவே அதனதன் இடத்தில் பொருந்திவிடும். முக்கிய கண்ணி என்பது மையமான கருப்பொருள்-அதாவது சோஷலிசத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் இடையேயான முரண்பாடு. இதற்கான படிப் படியான தீர்வுதான் மையக் கருப்பொருள். முக்கிய கண்ணி, அதைக் கைப்பற்றினால் மற் றவை அதற்கேற்ப பொருந்திவிடும். சொத் துடமை தொடர்பாக ஸ்டாலினின் கருத்துக் களை மேற்கோள் காட்டுகிறார்.
1955ம் ஆண்டிலேயே மூன்றாவது உலகப் போர் என மூண்டால், அதற்கு முழு பொறுப்பு அமெரிக்காவே என மாவோ சாடுகிறார். அணு ஆயுதங்களை பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டுவதை கடுமையாக கண்டிக்கிறார்.
தொகுதி ஐந்தில் நிறைய பக்கங்கள் சோஷலிச கட்டுமான பணியைச் செய்வது பற்றிய கருத்துக் களை கொண்டவை. சோஷலிச நிர்மாணத்தில் ஊழியர்களின் பங்கைப் பற்றி குறிப்பிடுகையில், கிராமம், நகரம் என வேறுபாடின்றி அனைத்துப் பகுதிகளிலும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். `ஐயோ நதியினில் வெள்ளம், கரை யிலோ நெருப்பு என்று பயந்தால் ஊழியர்களை உருவாக்க முடியாது. ஊழியர்களை உருவாக்கி, சங்கங்களை வலுவாக கட்ட வேண்டும். தரம் தான் முக்கியம். எண்ணிக்கைகளை பூதாகரமாக காட்டுவதால் பயனில்லை என்ற கொள்கையை கறாராக துவக்கத்திலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும் கடந்தகால அனுபவங்களின் அடிப் படையில் திட்டமிட வேண்டும். தவறான ஆலோசனைகளை விமர்சிக்க வேண் டும். விமர்சனம் பற்றிய விளக்கத்தில், விமர்சனம் கூர்மையாக இருக்க வேண்டும் என்கிறார் மாவோ. கூர்மையாக விமர்சனம் வைத்தால், சக தோழர்களுடனான உறவு சகஜமாக இருக்கும். எருதுக்கு இரண்டு கொம்புகள் உண்டு. எதற்கு? சண்டையிடுவதற்கு, தற்காப்புக்கு, தாக்குவதற்கு… கொம்புகளை உள்ளே இழுத்துக்கொள்ளாதீர் கள்… கொம்பு தேவை. அது மார்க்சிய தத்துவத் திற்கு உடன்பாடான ஒன்றுதான். மார்க்சியத்தின் தனித்துவமான கோட்பாடுகளில் விமர்சனமும், சுய விமர்சனமும் ஒன்று… (பக்கம் 239)
கிராமப்புறத்தில் சோஷலிசத்தை கட்டமைப் பதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக, கூட்டுறவு சங்க செயல்பாடு பற்றி ஏராளமான விபரங்களை, பொருத்தமான எடுத்துக்காட்டுகள், அனுபவங் கள் மூலம் விளக்கியுள்ளார். யார், யாரை சங்க பதவிகளில் அமர்த்துவது, அரசு பண்ணைகள் செயல்பட வேண்டிய விதம் பற்றிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. நூற்றுக்கணக்கான பக்கங் களில் கிராமங்களில் சோஷலிச கட்டுமானம் பற்றி எழுதியுள்ள மாவோ, பெண்களின் பங் களிப்பை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வலிமையான சோஷலிச சமூகத்தை கட்டும் நமது நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் நமது சமூகத்தின் பெண்கள் உழைப்பில் ஈடுபடுவது மிக முக்கியமானதாகும். `சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்ற கோட்பாடு ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானது. ஒட்டு மொத்த சமுதாயமும் சோஷலிச கட்டத்தை எட்டும்போதுதான் உண்மையான பாலியல் சமத்துவம் என்பது எட்டப்படும்.
கிராமப்புறங்களில் கைவினைக் கலைஞர்கள் அதிகம். கைவினைக் கலையை சோஷலிசமாக்கல் பற்றிய பத்து அம்ச கட்டுரை மிகவும் மிக்கிய மானது. அதையடுத்து முக்கியமான பத்து உறவு கள் என்ற கட்டுரையில் (1956) சீனப் பொருளா தாரம் எதிர்கொண்ட பத்து பிரச்சனைகள் பற்றிய விரிவாக குறிப்பிட்டுள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிச கட்டுமானம் மேற் கொண்ட பொழுது அவர்கள் செய்த தவறுகள் தடுக்கப்பட வேண்டிய விதத்தையும் சுட்டிக் காட்டுகிறார். சோவியத் யூனியனில் கடைப் பிடித்த வழிகள் விவசாயிகளை கசக்கிப் பிழிவ தாக இருந்தன என விமர்சிக்கையில் கோழிக்கு தீனி போடாமல் நாம் சொல்லும் பொழுதெல் லாம் முட்டைபோட வைக்க முடியுமா, குதி ரையை மேய விடாமல் ஏறி அமர்ந்ததும் காற் றாய் பறக்க வேண்டும் என்றால் முடியுமா? இது என்ன கொள்கை என வினவுகிறார். இந்த கட்டுரை முழுவதும் முக்கியமான விஷயங்களை விவாதிக்கின்றன.
கட்சியை பலப்படுத்துவோம் என்ற கட்டு ரையில் முந்தைய தொகுதிகளில் சுட்டிக்காட்டப் பட்ட பிரச்சனைகளை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். குறிப்பாக அகநிலை தவறு கள் பற்றி எழுதுகையில் ஸ்டாலின் ஏன் சில தவறுகளை செய்தார் என்ற கேள்வியை எழுப்பி, பல விஷயங்களை ஸ்டாலின் யதார்த்த நிலையில் இருந்து அணுகாமல், அகநிலையிலிருந்து அணு கியதே காரணம் என்ற பரிசீலனையை முன்வைக்கிறார். சோவியத் யூனியனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றும், அங்கே நன்மைகள் அதிகம், தவறுகள் குறைவு என்றும் மாவோ கூறுகிறார். ஏழாவது மத்தியக் குழு தேர்தல், நம்பர்கள் பற்றியும் அகில சுவாரசிய மாக விளக்கியுள்ளார். (பக்கம் 455, 456, 457) நகைச்சுவையுடன் பழமொழிகளை பயன்படுத்தி வலுவாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார்.
கட்சி வரலாற்றில் சில அனுபவங்கள் (1956) என்ற கட்டுரை அருமையான கட்டுரை சீன வர லாறும், கட்சி வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளதையும், கட்சி பிரச்சனைகளை சந்தித்த விதமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அதை யடுத்த கட்டுரையில் டாக்டர் சன்யாட் சென் ஆற்றிய பணி, அவருக்கு சூட்டிய புகழாரம் பற்றியதாகும். அந்த அற்புதமான மனிதரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிட்டுகிறது.
அதையடுத்த கட்டுரைகளில் சோவியத் யூனியன் மற்றும் ஹங்கேரியில் நடைபெற்ற நிகழ்வுகளில் சீனாவின் நிலைபாட்டை விளக்கு கிறார். ஸ்டாலின் ஆதரவாளர்களோ, அவரது எதிரிகளாக மாறியதும், ஹங்கேரியில் அதிக ஜனநாயகம் பாசிசத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டே, சோஷலிசம் உயர்ந்த தத்துவம் அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுவதை மாவோ விமர்சிக்கிறார். நூறு பூக்கள் மல ரட்டும் நூறு சிந்தனைகள் மலரட்டும் என்ற கோஷத்தைக் கூட தவறாக திரித்து, சோஷலிசத் திற்கெதிராக பயன்படுத்தியதை சாடுகிறார். எந்த ஒரு கோஷமும், எதிர்புரட்சியாளர்களால் எவ் வாறு பயன்படுத்தப்படுமென்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. (இந்த கோஷத்திற்கு வர்க்க குணாம்சம் கிடையாது. ஆனால் பாட்டாளி வர்க்கம், இதை தனக்கு சாதகமாக திருப்பிக் கொள்ள முடியும்.) மார்க்சிய இயக்கவியல் பற்றிய ஸ்டாலின், லெனின் மற்றும் க்ளாஷ் வைட்சினின் கருத்துக்களை விவாதம் செய் கிறார். முரண்பாடுகள், எதிர்மறை கூறுகள், ஒத்தியல்பு பற்றிய விளக்கம் மார்க்சிய தத்துவத்தை ஆராய, விவாதிக்க உதவும்.
மக்களிடையே நிலவும் முரண்பாடுகளை எவ்வாறு களைவது? தொழிலதிபர்கள், வணிகர் கள், மாணவர்கள், அறிவு ஜீவிகள் தொடர்பான கொள்கைகள் மூலம் மாவோ எத்தகைய அணுகு முறை வேண்டுமென சுட்டிக்காட்டுகிறார். மார்க்சிய தத்துவத்தை இந்த உலகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடக்கத்தில் பல திசைகளிலிருந்தும் கடும் தாக்குதல்களை சந்தித்தது. அது ஒரு நச்சுப்பயிர் என்றார்கள். இப்போதும் அப்படித்தான்… சோசலிச நாடு களிலும் மார்க்சியத்தை ஏற்காதவர்களும், எதிர்ப் பாளர்களும் இப்போதும் இருக்கின்றார்கள் என்பது வெளிச்சமான உண்மை. (பக்கம் 600)
பிரச்சார உத்திகளை வகுப்பது எப்படி? என்ற கட்டுரையும் மிகவும் பயனுள்ள கட்டுரை யாகும். இதில் அறிவு ஜீவிகளை எவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி அணுக வேண்டுமென்று மாவோ விவரிக்கிறார். சீனாவில் ஏறத்தாழ ஐம்பது லட்சம் அறிவு ஜீவிகள் இருப்பார்கள் என 1957ல் அவர் குறிப்பிட்டு, அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்ய உளப்பூர்வமாக விரும்புபவர்கள் மட்டுமே சோஷலிச அரசை விரும்பாதவர்கள், கசப்புடன் சந்தேகக் கண் ணுடன் பார்ப்பவர்கள். ஏகாதிபத்தியமா, தேசமா என்ற கோள்வி எழுகையில் தாய் நாட்டிற்காக நிற்பார்கள். ஆனால் சிலர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்களாக உள்ளனர். இந்த அறிவு ஜீவிகளில் பத்து சதம் பேர் மார்க் சியத்தை, கம்யூனிசத்தை புரிந்து கொண்டவர்கள் என்றும், அவர்கள்தான் மாபெரும் இயக்க சக்தியாக, கருத்து பெட்டகமாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். மார்க்சியத்தை பயின்றாலும் பலருக்கும் உறுதியான நிலை எடுக்க முடிவதில்லை.
மதப்பற்று உள்ளவர்களில் பலர் தேசியவாதி கள் மார்க்சிஸ்டுகளை கடவுள் மறுப்பாளர்கள் என்று பார்க்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்கள் என்று பார்க்கிறார்கள். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டுமென வற்புறுத்த முடி யுமா? களப்பணியில் ஈடுபடும் தோழர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு மார்க்சியத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார் மாவோ. அதுமட்டுமின்றி, அறிவு ஜீவிகளை மறு உருவாக்கம் செய்வது எளிதா என்ற கேள்வி எழாமல் இல்லை. அறிவு ஜீவிகள் ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கலைஞர் களாக, விஞ்ஞானிகளாக, தொழில்நுட்ப வல் லுனர்களாக பணிபுரிகின்றனர். இவர்களில் பலருக்கும் முதலாளித்துவ சிந்தனை இருக்கும். மார்க்சிய நூல்களை கரைத்து குடித்ததாகக் கூட சிலர் நினைக்கலாம். சிலர் புத்தகப் புழுக்கள் மார்க்சியம் படித்திருப்பார்கள். ஆனால், நடை முறை வாழ்க்கையில் சிக்கல்கள், போராட்டங்கள் வரும்பொழுது, இவர்கள் உழைக்கும் வர்க்கத் துக்கும், விவசாயிகளுக்கும் முற்றிலும் எதிரான நிலை எடுப்பார்கள். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அறிவு ஜீவிகளுக்கும் மறு உருவாக்கம் தேவையென மாவோ வற்புறுத்துகிறார். மாறும் சமூக சூழலுக்கேற்ப, மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து கற்க வேண்டும். கற்பதை நிறுத்தவே கூடாது. புத்தகங்களிலிருந்தும், அதற்கு அப்பாற்பட்டும் கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. ஒரு நல்ல ஆசிரியனின் முதல் தகுதி ஒரு நல்ல மாணவனாக இருப்பதுதான் என்கிறார் மாவோ.
அறிவு ஜீவிகள் கிராமங்களுக்கும், தொழிற் சாலைகளுக்கும் சென்று, விவசாயிகள், தொழி லாளர்களுடன் கலந்து பழகி வாழவேண்டும். சில அறிவு ஜீவிகள் எப்பொழுதாவது கிராமத் திற்கு, தொழிற்சாலைக்கு செல்வார்கள் – சுற் றுலா செல்வதைப்போல – பல்லக்கில் அமர்ந்து தோட்டத்தை பார்வையிடுவதால் என்ன பலன்? என்ற கேள்வி, நம் கட்சியில் உள்ள அறிவு ஜீவி களுக்கும் பொருந்தும். புத்தக அறிவுடன் அனுபவ அறிவும் இணையும்போதுதான் அறிவு முதுமை பெறுகிறது (பக்கம் 625) அறிவு ஜீவிகளுக்கு மாவோ வேண்டுகோள் விடுக்கிறார்: அனைவருக்கும் பொதுவான தேச பக்தியின் மொழி, சோஷலிச சமூக அமைப்பின் மொழி, கம்யூனிச உலகப் பார்வையின் மொழி என்பதை…. கற்றுக்கொள்ள முடியும் வெறும் புத்தக அறிவு போதாது, மக்களுடன் நெருங்கி உறவாடுங்கள். வர்க்கப் போராட்டமும், அன்றாட வாழ்க்கை அனுபவமும் மட்டுமே மார்க்சியத்தை கிரகிக்க வழி செய்யும்….
முந்தைய தொகுப்புகளில் நெறிப்படுத்தும் இயக்கம் பற்றி எழுதியுள்ளதைப் போலவே, இந்தத் தொகுதியிலும், அணுகுமுறை, கட்சி தலைமை, ஊழியர் செயல்பாடு, நெறிப்படுத்து தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக உள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பிட வேண்டியது, கருத்துக் களை எப்படி உரக்கக் கூறுவது பற்றிய விவாத மாகும். கதவுகளை அகலத் திறந்து வைக்கலாமா? அல்லது கட்டுப்பாடு விதிக்கலாமா? என்ற கேள்விகளை எழுப்பி, மாவோ விடையும் அளிக் கிறார். இதோ இரண்டு வழிகளில் தேசத்தை நடத்திடலாம். அகலமாக திறந்து வைப்பது என்றால், மக்கள் தங்கள் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த சுதந்திரம் அளிப்பது என்றாகும். தவறான ஆபத்தான கருத்துக்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதும் சுதந்திரமே. விமர்சனம், எதிர் விமர்சனத்தை வெளிப்படுத்த விவாதங்களை தூண்டிவிடும் சுதந்திரம் அளிக் கப்பட வேண்டும். தவறான கருத்துக்களை மக்கள் மீது திணிப்பது சுதந்திரமாகாது. கட்டுப்பாடு விதிப்பது என்றால் தடை விதிப்பது. கருத்துக் களை வெளிப்படுத்தினால், ஒரே அடியில் அடித்து வீழ்த்தி விடுவது இது அணுகுமுறை முரண்பாடுகளை தீர்க்க உதவாது. மாறாக, முரண்பாடுகளை கூர்மையாக்கி, முற்றச்செய்யும். (அறிவு ஜீவிகளுடன் கம்யூனிஸ்டுகள், கட்சிகள் இணைந்து நிற்க வேண்டுமானால், அவர்களது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பி னால் கதவுகளை அகலத் திறந்து வைக்கும் கொள்கையே சிறந்தது என்ற பதிலை அளிக்கிறார்.
கதவுகளை அகலமாக திறக்கையில் விமர்சனங் கள் எழும். மார்க்சியம் என்பது விஞ்ஞான உண்மை. விமர்சனங்களைக் கண்டு அது அஞ்சுவ தில்லை. எந்த விமர்சனத்தாலும் மார்க்சியம் அழிந்துவிடாது… தீய விஷயங்கள் எப்போதும் இவ்வுலகில் இருந்துகொண்டுதானிருக்கும். அது குறித்து கவலைப்படவோ, அஞ்சவோ அவசியம் இல்லை. அஞ்சிப்பயனில்லை என்று அழுத்த மாக மாவோ குறிப்பிடுகிறார்.
கம்யூனிஸ்டுகள் எளிமையான வாழ்க்கை, கடும் உழைப்பு, சாமானிய மக்களுடன் இணைந்த வாழ்க்கை என்பதை கடைப்பிடிக்க வேண்டு மென மாவோ வலியுறுத்துகிறார். சீனாவில் புரட்சிக்குப் பின், பல தோழர்களின் புரட்சிகர சிந்தனை தேய்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார். ஒரு கம்யூனிஸ்டுக்கு ஊசலாட்டம் என்பது கூடாது. புரட்சிகர உணர்வு மழுங்க ஆரம்பித் தால், அதற்கான காரணங்களை கண்டறிந்து, தன்னை கூர்மைப்படுத்திக் கொண்டு சரியான தடத்தில் நடைபோட வேண்டியது கம்யூ னிஸ்டின் கடமை என்கிறார். மூத்த தோழர் களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களின் அளப்பரிய தியாகங்களை மக்கள் பாராட்டும் அதே நேரத்தில், தவறு செய்தால் ஏற்க முடியாது என்பதையும் கூறுகிறார். உயர் பதவி, மூப்பு என்பதை நம்பி செயல்படக் கூடாது. புதிய ஊழியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷ யங்கள் உள்ளன என்பதை மூத்த தோழர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
உட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்க வியல் அணுகுமுறை பற்றிய கட்டுரையுடன் ஐந்தாம் தொகுதி நிறைவுறுகிறது. அதையடுத்து பிற்போக்கு வாதிகள் காகிதப் புலிகள் என்று முந்தைய தொகுதிகளில் வெளிப்படுத்தப்பட்ட இருபக்க கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. உட் கட்சி ஒற்றுமை கட்டுதல் தொடர்பாக வறட்டு வாதம், தவறான சிந்தனைகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விளக்கப் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட் டால் ஒருவர் ஞானியாகி விடுவார் என்று அர்த்த மல்ல. மார்க்சிய – லெனினிய தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படாதவரை, அடுத்தவர்கள் கருத்தை ஏற்பது சரி. தவறு செய்யும் தோழருடன் மார்க் சியத்தை சரியாக புரிந்துகொள்ளும் போராட் டத்தை நடத்த வேண்டும். ஒரு தோழரை இழந்து விடாமல் இருக்க அவருடன் இணைந்து நிற்க வேண்டும். தத்துவமும், இணக்கமும் இணைந்து செல்வதுமே மார்க்சிய தத்துவம். அது எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரியான அணுகுமுறை மூலம்தான் தவறான சிந்தனைகளிலிருந்து வெளி வர முடியும் என்று முடிக்கிறார் மாவோ.
தொகுதி ஐந்தை தமிழாக்கம் செய்திருப்பவர் மு. இக்பால் அகமது. சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.
தொகுதி ஐந்து அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் – 760
விலை ரூ. 480
Leave a Reply