ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்


VI Lenin
VI Lenin

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமானதாக ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் துவக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும். இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (மாநாடு) 1903 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் அக்கட்சியின் திட்டமும் அமைப்பு விதிகளும் மத்திய தலைமையும் உருவாக்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாக ஜனநாயக மத்தியத்துவம் லெனினால் முன்மொழியப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு 1921-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபனக் கோட்பாடாக ஏற்கப்பட்டது.

எதிர்ப்புகள்:-

இந்தக் கோட்பாடு லெனினால் முன்மொழியப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது. ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மென்ஷ்விக் (சிறுபான்மை) என பிளவுபடுவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகவும் இருந்தது.

தோற்றத்தில் தொடங்கி இன்று வரை அது கடுமையான தாக்குதல்களையும் எதிர்ப்பையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இந்த எதிர்ப் பிற்கான அடிப்படைகளை மூன்று விரிவான தலைப்பில் அடக்கலாம்.

  1. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பு.
  2. கம்யூனிஸ்ட் விரோதிகளின் எதிர்ப்பு.
  3. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள்,  வெளியேற்றப்பட்டவர்களின் எதிர்ப்பு.

கம்யூனிஸ்ட், ஆதரவாளர்களின் எதிர்ப்பு:-

மேலே குறிப்பிட்டுள்ளபடி ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி பிளவுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அந்தக் கட்சியிலிருந்த மென்ஷ்விக்குகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

கட்சியின் முடிவுகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று கூறுவது அதிகார வர்க்கத் தோரணையாகும் என்று கூறினர். பெரும்பான்மையான முடிவிற்கு சிறுபான்மையினர் உட்பட வேண்டும் என்று கூறுவது கட்சி உறுப்பினர்கள் விருப்பத்தை இயந்திரம் போல் நசுக்குவதாகும் என்று கூறினர். அனைத்து கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் பொதுவான கட்சிக் கட்டுப்பாட்டை வேறுபாடின்றி கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது, கட்சிக்குள் பண்ணையடிமைத்தனத்தை உருவாக்குவதாகும் என்று கூறினர்.

(சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷ்விக்: 76)

லெனின் இந்த வாதங்களையெல்லாம் காங்கிரசிலேயே தவிடு பொடியாக்கினார். மேலும் ஸ்தாபன கோட்பாடுகளைப் பற்றி குறிப்பாக மத்தியத்துவம் குறித்த விமர்சனங்களையும், அவை எப்படி தவறானவை என்பதையும் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தன் புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.

அமைப்பையும், கட்டுப்பாட்டையும் கண்டு பாட்டாளி வர்க்கம் பயப்படவில்லை…. கட்சியிலுள்ள சில குறிப்பிட்ட படிப்பாளிகளுக்குத் தான் கட்டுப்பாட்டு உணர்விலும் ஸ்தாபன உணர்விலும் சுய பயிற்சி இல்லாமல் இருக்கிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு இவை இருக்கிறது.

(ஓரடி முன்னால், ஈரடி பின்னால்)

லெனினது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்கிற படைப்பு முழுவதுமே ஸ்தாபன கோட்பாடுகளுக்கெதிரான வாதங்களை முன்வைத்து அவற்றை அம்பலப்படுத்துவதும் அதான் முன்மொழிந்த ஸ்தாபன கோட்பாடுகள் எப்படி சரியானவை என்பதை நிலை நிறுத்துவதுமேயாகும்.

பாட்டாளி வர்க்கக் கட்டுபாட்டையும் அமைப்பையும் கண்டு பாட்டாளி வர்க்கம் பயப்படவில்லை. முதலாளித்துவ படிப்பாளிகள்தான் அதை உதறித் தள்ளினார்கள். மார்டவ் வகுத்திருக்கும் கருத்து பரந்த அளவுள்ள பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை வெளித்தோற்றத்தில் ஆதரிக்கிறது. ஆனால், உண்மையில் அது முதலாளித்துவ படிப்பாளிகளுடைய நலன்களுக்குச் சேவை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வார்த்தைகளுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிருக்கிறது என்ற மார்க்சின் நிர்ணயிப்பையும் உட்கட்சிப் போராட்டம் என்பது சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பே என்கிற லியோ சோஷியின் கருத்தையும் இணைத்து லெனினது மேற்கண்ட வரிகளைப் படித்தால் ஸ்தாபன கோட்பாடுகளுக்காக ஏன் லெனின் இவ்வளவு கடுமையாகப் போராடியிருக்கிறார் என்பது புரியும். அதாவது கட்சிக்குள் நடக்கும் கருத்துப் போராட்டங்கள் சமூக வர்க்கங்களின் கருத்துக்களுக்கிடையிலான போராட்டங்களே என்கிற புரிதலோடு இதை அணுக வேண்டும். ஆனால், இதன் பொருள் அத்தகைய கருத்துக்களை கூறுவோரின் நோக்கம் எதிரி வர்க்கத்தின் கருத்துக்களை வலியுறுத்த வேண்டும் என்பதல்ல. மாறாக எதிரி வர்க்க கருத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதே பொருள். நோக்கம் சரியாக இருப்பினும் விளைவு வர்க்க சமரசத்திற்கோ பகை வர்க்கத்தின் நலனுக்கு அடிபணிவதற்காகவோ இருந்து விடக் கூடாது என்பது தான்.

Rosa Luxemburg
Rosa Luxemburg

புகழ் படைத்த கம்யூனிஸ்ட் போராளியான ரோசாலக்ஸம்பர்க்கும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து லெனினது கருத்துக்களை விமர்சித்தார். தற்போதைய நிலையில் இத்தகைய பரிசோதனை ரஷ்ய சமூக ஜனநாய இயக்கத்திற்கு இரட்டை அபாயகர மானதாகும். ஜாரை எதிர்த்த தீர்மானகரமான போராட்டத்தின் விளிம்பில் அவர்கள் நிற்கிறார்கள். ரஷ்ய சமூக ஜனநாயக இயக் கம் ஏற்கனவே அல்லது தற்போது அனைத்து வகையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு வந்திருக்கிறது. கட்சியைச் சுற்றிலும் முள்வேலிகளைக் கட்டுவது தற்போதைய நிலையில் செய்ய வேண்டிய பணியை கட்சி செய்ய முடியாமல் தடுப்பதாகும். இங்கு நாம் வைத்துள்ள சோசலிச மத்தியத்துவம் குறித்த பொதுவான கருத்துக்கள் ரஷ்யக் கட்சியின் அமைப்பு விதிகளை உருவாக்குவதற்கு போதுமானவை அல்ல. இறுதியாக இத்தகைய (மத்தியத்துவம்) கோட்பாடு குறிப்பிட்ட காலச்சூழலில் நடைபெறும் ஸ்தாபன நடவடிக்கைகளாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த ஒரு அமைப்பு விதியும் தவறுகளே இல்லாதது என்று கூறிக் கொள்ள முடியாது. நெருப்பில் நீந்தித்தான் அது தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மத்தியத்துவம் கட்சியைச் சுற்றிலும் முள்வேலிகளை கட்டியிருந்தால் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியே நடந்திருக்க முடியாது. லெனின் புரட்சியை மக்களின் திருவிழா என்று கொண்டாடினார். மக்களை கட்சியின்பால் நெருங்கவிடாத ஒரு கோட்பாட்டை புரட்சி கனியும் தருவாயில் அனுமதித்திருக்க மாட்டார். அனுபவமும் அதையே உறுதிப்படுத்தியது. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவி 70 ஆண்டு காலம் தாக்குப்பிடித்த தன் மூலம் நெருப்பில் நீந்தி ஜனநாயக மத்தியத் துவம் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது என்பது வரலாற்று அனுபவம்.

நல்ல நோக்கத்திலான மற்றொரு விமர்சனம், ஜாரின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் செயல்பட வேண்டியிருந்த கட்சியின் ஸ்தாபன கோட்பாடே ஜனநாயக மத்தியத்துவம். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் சட்டப்படியும் பகிரங்கமாகவும் செயல்படும் கட்சிக்கு இந்தக் கோட்பாடுகள் பொருந்தாது என்பதாகும்.

ஒழுங்காக வேலைகளைக் கவனிப்பதற்கும் மக்களை முறையாக வழிகாட்டி நடத்துவதற்கும் மத்தியத்துவம் என்ற சித்தாந்தத்தின் பேரில் அமைப்பு ரீதியாக கட்சி உருவாக்கப்பட வேண்டும். கீழிலிருந்து தேர்தல் மூலம் அமைப்புகளைக் கட்டுவது என்ற சிந்தாந்தத்தின் பேரில் அந்தக் காலத்தில் கட்சி அமைப்புகளைக் கட்ட முடியவில்லை. இதன் பயனாய், பரம ரகசியமாக கண்டிப்புடன் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கட்சியின் வாழ்நாட்களில் இது தற்காலிக அம்சம்தான். இந்த தற்காலிக அம்சம் ஜார் ஆட்சியை அகற்றியவுடன் அகன்றுவிடும் அப்போது கட்சி பகிரங்கமாகவும் சட்ட ரீதியாகவும் வேலை செய்யும். அப்போது ஜனநாயத் தேர்தல் என்ற சிந்தாந்தத்தின் பேரிலும் ஜனநாயக மத்தியத்துவம் என்ற சித்தாந்தத்தின் பேரிலும் கட்சி அமைப்புகள் கட்டப்படும் என்று லெனின் கருதினார்.

(பக்கம்:82-83 சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஸ் விக்) கட்சியின் வரலாறு:- சென்னை புக்ஸ் 1979 (அழுத்தம் சேர்க்கப்பட்டது))

அடக்குமுறை அமைப்பின் கீழ் மத்தியத்துவம் என்பதும் பகிரங்மாக பணியாற்றும் போது ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கோட்பாடும் தான் லெனினால் வரையறுக்கப்பட்டது.

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் கூட முதலாளித்துவ வர்க்கம் தான் ஆட்சி பொறுப்பிலிருக்கும். அது இடையறாது அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் கம்யூனிஸ்ட்களின் மீது தாக்குதல் தொடுக்கும்: தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இந்தக் கோட்பாடு வடிவமைக்கப்பட்டது. கடுமையான தாக்குதல்கள் வந்த போதும் ஆட்சியில் இல்லாத பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்குபிடித்து நின்றதற்கு அவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடித்ததுதான் காரணம். அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களி லிருந்து கட்சியைக் காப்பாற்ற முடிந்தது. மாறாக ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டிருந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் துயரம் மிகுந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஆட்சியிலில்லாத சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியாகிய இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டது. பின்னர் மார்க்சியத்தையும் கைவிட்டது என்பதையும் நாம் பார்க்கிறோம். ஜனநாயக அமைப்பிலும் கூட ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது எத்தகைய தாக்குதல் தொடுக்கும் என்பதற்கு சிலி ஒரு வருந்தத்தக்க உதாரணமாக இருக்கிறது.

இத்தகைய நல்லெண்ணம் கொண்டோரின் மற்றொரு விமர்சனம் ஜனநாய மத்தியத்துவம் ஒரு சிறு பகுதியினரை கட்டளை இடுவோராகவோ கட்சியின் இதர பகுதியினரை இடப்பட்ட கட்டளைகளை நிறைவோற்றுவோராகவும் மாற்றிவிடுகிறது என்பதாகும். கீழ்மட்டத்தில் உள்ளோர் பணத்திற்காகவோ அல்லது சுயநலத்தை எதிர்நோக்கியோ இருந்தால் மட்டுமே மேலிருந்து கொடுக்கப்படும் கட்டளைகளை தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் கடமையின் பொருட்டும் வாழ்வாதாரத்தின் பொருட்டும் ஏற்றுக் கொள்கிறவர்களாக இருப்பார்கள். அனைத்துத் தியாகங்களுக்கும் தயாராக ஒட்டு மொத்த சமூகத்தின் உயர்வுக்காகத் தானே முன்வந்து புரட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற வர்க்க உணர்வு படைத்த முன்னணிப் படை மேலிருந்து வரும் கட்டளைகளை அவை தனக்கு உடன்பாடு இல்லை என்கிற நிலையில் அமல்படுத்துமா?. எனவே, மத்தியத்துவம் செயல்பட வேண்டுமானால் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கட்டளை ஜனநாயக அடிப்படையில் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எந்த அளவுக்கு ஜனநாயகம் விரிவாகக் கடைபிடிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு மத்தியத்துவம் வலிமையுடையதாக இருக்கும். கருத்துருவாக்கத்தில் விரிந்து பரந்த ஜனநாயகம் என்பதும் செயல்பாட்டில் உருக்கு போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய ஒற்றுமையும் என்பதே ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படை.

நட்புப் பகுதியினரிடமிருந்து வரும் இத்தகைய விமர்சனங்கள் கட்சியோ அல்லது சோசலிசமோ பின்னடைவைச் சந்திக்க நேரும் போதெல்லாம் வெளியிடப்படுகின்றன. சோவியத் யூனியன், சோசலிச முகாம் தகர்விற்குப் பின்னர் இத்தகைய விமர்சனங்கள் கூடுதலாக எழுந்தன. சில கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவத்தை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாக அறிவித்தன. பின்னர் இத்தகைய கட்சிகள் மார்க்சியத்தையே கைவிட்டதையும் உலகம் கண்டது.

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் விமர்சனம்

கம்யூனிஸத்தின்பால் அக்கறை கொண்டோரின் விமர்சனத்தைப் போலன்றி கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் தவறான நோக்கத்திலிருந்து சரியோ என தோன்றும்படியான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகளைப் பொறுத்த மட்டில் மார்க்ஸிய தத்துவத்தை எதிர்ப்பவர்கள். தத்துவத்தின் மீதான தாக்குதலின் ஒரு பகுதியே ஸ்தாபன கோட்பாடுகளின் மீதான தாக்குதல். ஜனநாயக மத்தியத்துவமும் மார்க்சிய தத்துவத்துவமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஏனெனில், கம்யூனிசத்துக்கு முந்திய எல்லா சமூக அமைப்பும் பல்வேறு வர்க்கங்களை, பகை வர்க்கங்களை கொண்டவையே. எனவே, சோசலிசத்தின் உயர்ந்த கட்டம் வரை கம்யூனிஸ்ட்  கட்சிக்குள்ளும் பல்வேறு வர்க்கங்களின் தாக்கம் தவிர்க்க முடியாது. எனவே, ஜனநாயக மத்தியத்துவமும் தவிர்க்க முடியாதது.

முதலாளித்துவ ஜனநாயம் என்பது ஜனநாயகத்தின் உயர்ந்தபட்ச வடிவம் போன்று தோன்றுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகத்தில் எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் தனது ஸ்தாபன கோட்பாடுகளை தனது உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு ஜனநாயகப் பூர்வமாக முடிவு செய்வதில்லை. இந்தியாவில் காங்கிரஸில் 6 தலைமுறையாக நேருவின் குடும்பத்தினரே கட்சிப் பொறுப்பில் அல்லது ஆட்சிப் பொறுப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்தியில் மட்டுமின்றி மாநிலங்களிலும் இதே நிலை. பாஜக, திமுக, அதிமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் என்று எந்தவொரு கட்சியிலும் இதைக் காண முடியும்.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் கூட தன்னை தேர்வு செய்த மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பவர்களாக இருப்ப தில்லை என்பது உலகம் முழுவதுமுள்ள அனுபவம். எனவே, ஜனநாயக மத்தியத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்குகிற தார்மீக உரிமை முதலாளித்துவ நெறிகளை தூக்கிப்பிடிப்போர்க்கு கிடையாது. முதலாளித்துவ ஜனநாயகத்தை விட ஜனநாய மத்தியத்துவம் என்பது ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவம் என்பதையே முதலாளித்துவ கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு வரலாறு ரீதியாக நிரூபிக்கிறது.

அனுபவம் செழுமைப்படுத்தும்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஒருவர் அவருடைய பலவீனத்தின் காரணமாகவோ அல்லது கட்சியின் ஏதேனும் நிலைபாட்டினை ஏற்காததாலோ அல்லது தான் நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டதாக கருதும் போதோ ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது தாக்குதல் தொடுப்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இவையெல்லாம் இருப்பினும் ஜனநாயக மத்தியத்துவத்தில் எது மேலோங்கியிருக்கும் என்பது அவ்வபோது எழுந்து வரும் புதிய நிலைமைகளோடு சம்பந்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சூழலில் மத்தியத்துவம் மேலோங்கியிருக்க வேண்டிய தேவையும் மற்றொரு குறிப்பிட்ட சூழலில் ஜனநாயகம் மேலோங்கியிருக்க வேண்டிய தேவையும் எழலாம். இவை இன்ன விகிதத்தில் இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே நிர்ணயிப்பது சாத்தியமல்ல. ஸ்தாபனத்தின் முதிர்ச்சி நிலைக்கேற்ப இதில் மாற்றமென்பது இயங்கியல் ரீதியாக நடந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964-ல் தனது கட்சி திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இயங்கியல் ரீதியாக தேவையின் அடிப்படையில் இவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் கூட போராட்டங்களினூடாக இத்தகைய மாற்றங்கள் நடைபெறும்.

இதுவரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சில.

  1. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு மக்கள் ஜனநாயக அரசு ஜனநாயக மத்தியத் துவத்தின் அடிப்படையில் இயங்கும் என்பது கைவிடப்பட்டுள்ளது. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சிக்கானதே தவிர அரசுக்கான தல்ல.
  2. மாநாடுகளின் போது மேல் கமிட்டிகள் கீழ் கமிட்டிகளுக்கான செயலாளர் பெயரை முன்மொழியக் கூடாது என வழிகாட்டப்பட் டுள்ளது. ஆனால், புதிய கமிட்டிக்கான ஆலோ சனைகளை பழைய கமிட்டி முன்வைக்கும்.
  3. போட்டி இருக்கும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்புடன் தேர்தல் நடைபெறும். கண்ட் ரோல் கமிஷன் முன்பு மத்திய கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது கட்சி காங்கிரஸ் நேரடியாக தேர்ந்தெடுக்கிறது.
  4. வெகுஜன ஸ்தாபனங்களின் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை கட்சிக் கமிட்டிகள் தீர்மானிப்பது கூடாது.

இந்த மாற்றங்கள் முந்தைய வடிவங்களை நிராகரிப்பது என்று அர்த்தம் ஆகாது. இது வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அனுபவத்தின் அடிப்படையிலான வளர்ச்சியாகும். ஜனநாயக மத்தியத்துவம் இத்தகைய வளர்ச்சி அடிப்படையிலான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் அது வளர்ந்து கொண்டும் இருக்கும். அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டும் இருக்கும்.


மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் அரசு என்பதை வெளிப்புறத்தைச் சேர்ந்த ஒரு கருத்தினமாக மனித வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் அரசு என்பதே இருக்கவில்லை என்பதை நிரூபிக்க கடினமாக உழைத்திருக்கிறார்கள்.  அதேபோல் வர லாற்றில் அரசு என்பதே இல்லாத ஒரு கட்டம் மீண்டும் வரும்.

கேரளா  லா டைம்ஸ் என்ற இதழுக்கு இ.எம்.எஸ். எழுதிய கடிதத்தில் இருந்து….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s