மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்


முந்தைய வெளிநாட்டவர் படையெடுப்புகளின் போது படையெடுப்பாளர்கள் நாட்டை சூறையாடி கொள்ளையடித்து திரும்பிய போது பெரும்காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும் தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் பலம் பெற்றது; காயங்கள் ஆறின. படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சியாளர்களான போது கூட அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கேற்றாற் போல் அமைந்திருந்ததே தவிர நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. நாடு உற்பத்தி செய்த பொருட்கள் நாட்டிலேயே தங்கின. நாட்டிற்கான சேவையில் பெற்ற அறிவு, அனுபவம் அனைத்துமே மக்கள் வசமாகின. ஆனால் ஆங்கிலேயரைப் பொருத்தவரை பிரச் சனை நூதனமானதாகும். முதற்கட்டத்தில் போர் களின் மூலம் நாட்டின் மீது ஆங்கிலேயர் சுமத்திய கடன் பெரும்காயத்தை ஏற்படுத்தியது. உயிர்காக்கும் இரத்தத்தை தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம் அடைந்த காயம் ஆறாத வாறு செய்கின்றனர். முன்னாள் படையெடுப் பாளர்கள் எல்லாம் இங்கும் அங்கும் வெட்டிய கசாப்புக்காரர்கள் என்றால், ஆங்கிலேயர்கள் நிபுணத்துவமிக்க கத்தியை இதயத்திற்குள்ளே பாய்ச்சுபவர்களாக உள்ளனர். காயம் வெளியே தெரியாத அளவிற்கு, நாகரிகம், வளர்ச்சி என பேசி அதை மூடிமறைக்கின்றனர்.

அனைத்துலகிற்கும் சவாலிட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்று கொண்டு, எத்தகைய செல்வத்தை காப்பதாகக் கூறுகிறார்களோ, அவற்றையே பின் கதவின் வழியே அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள். மேற்கூறிய தாதாபாய் நெளரோஜியின் கூற்று ஆங்கிலேயரது ஏகாதி பத்திய ஆட்சியின் தன்மை பற்றி அறிய உதவு கிறது. காலனி ஆதிக்கக் கொள்கை விவசாயி களையும், நெசவாளர்களையும் ஏழ்மைப்படுத்தி நாட்டை விட்டு ஒப்பந்தக் கூலிகளாக வெளி யேறச் செய்ததையும் அரசின் நிதி மற்றும் நில வரிக் கொள்கை கொடிய பஞ்சங்களுக்கு வழி வகுத்ததையும் இங்கு விவாதிக்கிறோம். மேலும் இங்கிலாந்து நலனுக்காக எத்தகைய சுரண்டற் கொள்கையை காலனி அரசு மேற்கொண்டது என்பதை இந்திய முதலாளி வர்க்கம் புரியத் தவறியபோது செல்வ வடிகால் கோட்பாடு மூலம் நெளரோஜி போன்ற தேசியவாதிகள் விளக்கியது எவ்வாறு பொருளாதார தேசிய எழுச்சிக்கு அடித்தளம் இட்டது என்பதையும் இக்கட்டுரையில் காண்கிறோம்.

1. ஏழ்மையாக்கப்பட்ட விவசாயிகள்:

ஐந்து நூற்றாண்டுகள் அரசாண்ட இஸ்லாமியர் ஆட்சியின்போது கிராமப்புற வாழ்க்கை சிறிதும் மாறவில்லை. ஆனால் ஆங்கிலேயர் அரசாட்சி தன்னிறைவு பெற்றிருந்த கிராமங்களை சிதைத்து மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியது. இந்திய மன்னர்கள் நிலத்திலிருந்து கிடைத்த விளைச்சலில் 1/6 பங்கு அல்லது 1/4 பங்கு என நிலவரியை விளைபொருளாகவே வசூலித்தனர். இதற்கு மாறாக ஆங்கிலேயர், விவசாயி நிலத்தை பயிர் செய்தாலும் அல்லது தரிசாகப் போட்டிருந்தாலும், அந்நிலம் தரக்கூடிய விளைச்சலின் அடிப்படையில் நிலவரி யைக் கணக்கிட்டு ரொக்கமாக வசூலித்தனர். இத னால் பருவமழை பொய்த்த காலத்தில் நிலத்தை உழுது பயிரிடாத போதும் வாடகை போன்று நிலவரியை விவசாயி செலுத்த வேண்டியதிருந்தது. நடைமுறையில் இருந்த சித்ரவதைச் சட்டம் நிர்ணயித்திருந்த நிலவரியை பலவந்தமாக வசூ லிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் கையாண்ட சித்ரவதைகளை நியாயப்படுத்தின. இச்சட்டம் 1858ஆம் ஆண்டு பேரரசின் நேரடி ஆளுகைக் குள் இந்தியா கொண்டுவரப்பட்ட பின் ஒழிக்கப் பட்டது. இருப்பினும் நிலவரி கட்டத்தவறிய விவசாயிகளின் கால்நடைகள்,  வீட்டில் இருக்கும் தட்டு முட்டு சாமான்கள் ஆகியவற்றைப் பறி முதல் செய்யவும், நிலத்திலிருந்து அவர்களை வெளியேற்றவும் வருவாய்த்துறைக்கு முழு அதி காரம் வழங்கப்பட்டது. 1

அதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாயினர். அரசு வழங்கிய கடன்  மூன்று சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே போதுமானதாயிருந்தது. மீதமுள்ள 97 சதவீதமானவர்கள் வட்டிக் கடைக்காரர்களையே நம்பி இருக்க வேண்டியிருந்தது. இந்த வட்டிக் கடைக்காரர்கள் வருடத்திற்கு 37.5 சதவீதம் முதல் 56.25 சதவீதம் வரை வட்டிவாங்கினர். 2

1853 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 7 சதவீதமான விவசாயிகள் மட்டுமே வட்டிக் கடைக்காரர்களிடம் செல்லாமல் வரி செலுத்த முடிந்தது. மீதமுள்ளோரில் 49 சதவீதத்தினர் விளைந்த பயிர்களை அடமானம் வைத்தும், 34 சதவீதத்தினர் அறுவடை முடிவடைந்த உடனேயே பயிர்களை விற்றும் நிலவரி செலுத்தினர். 3

ஆங்கிலேயர் வருகைக்கு முன் வட்டிக்கடைக் காரர்கள் நஷ்ட பயத்துடன்தான் கடன் கொடுத்து வந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் கடன் திரும்பாவிட்டால் கடன் கொடுத்தவர்கள் அடமானத்திலிருந்த சொத்தை அபகரித்துக் கொள்ளும்  உரிமையை சட்ட ரீதியாகப் பெற்றனர். இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலர் நிலத்தை இழந்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர் ஆயினர். மேலும் நிலம் வேளாண் வகுப்பைச் சாராதவர் கைக்கு பெரும் அளவில் மாற இது வழிவகுத்தது. 4

கந்து வட்டிக் கொடுமை பணக்கார விவசாயிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. பருத்தி சாகுபடிக்காகப் பெற்றிருந்த  கடனைத் திரும்பச் செலுத்த முடியாது தங்களது நிலத்தை இழக்கும் சூழலில் பம்பாய் மாகாணத்தில் புனே, அகமது நகர் மாவட்டத்தில் 1875 இல் வசதியான விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களைத் தாக்கியபோது அது தக்காண கலவரத்திற்கு இட்டுச் சென்றது.

காலனி ஆதிக்கக் கோட்பாடு கச்சாப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்து சந்தை வேளாண்மையை வளர்த்தது. இதனால் விளைவிக்கும் பயிர்கள் நுகர்வதற்கு என்பதுபோய் விற்பனைக்கு என மாறியது. புதிய நிலவரிக் கொள்கையால் விவசாயிகள் செலுத்த வேண்டியிருந்த சுமைமிக்க நிலவரி அவர்களை பணப்பயிர்களைப் பயிரிடத் தூண்டின. பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, கரும்பு, புகையிலை போன்றவை உணவு தானியங்களை விட அதிக வருவாயைத் தருவதாயிருந்தன.

ஐரோப்பிய வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வற்புறுத்துதலால் இந்தியக் கடலோர நகரங்கள் நீராவிக் கப்பல்கள் மூலம் இங்கிலாந்துடனும், உட்பகுதிகள் இருப்புப் பாதைகளின் மூலம் துறைமுகங்களோடும் இணைக்கப்பட்டிருந்ததால் இந்தியா உலகச் சந்தைக்கு தன் உற்பத்திப் பொருட்களை அனுப்ப முடிந்தது.

ஆனால் ஏற்றுமதிக்கான பணப் பயிர்களை விளைவிக்க நீர்ப்பாசன வசதி ஏதும் செய்து கொடுக்க காலனி அரசு முன்வரவில்லை. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இந்தியா வந்து பதின்மூன்று ஆண்டுகள் சுற்றுப் பயணம் செய்த அரபு நாட்டு அறிஞர் அல்பர்னி கங்கை கண்ட சோழபுரம் ஏரியைப் பார்த்துவிட்டு இதுபோன்ற ஏரியை எம்மக்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. பிறகு எப்படிக் கட்ட முடியும்! என அதிசயித்தார். இந்திய மன்னர்கள் அந்த அளவிற்கு நீர்ப்பாசனத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்து பல நீர்த் தேக்கங்களை கட்டி வைத்திருந்தனர். இருந்த நீர்த் தேக்கங்களைக் கூட பராமரிக்க எத்தகையதோர் ஏற்பாட்டையும் ஆங்கிலேயர் செய்யவில்லை.

1854 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் நிலவரி வசூலில் ஒரு சதவீதம் மட்டுமே நீர்ப்பாசனத்திற்கு செலவிடப்பட்டது. 5 காவிரி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா டெல்டா பகுதிகள் உருவாகக் காரணமாயிருந்த ஆர்தர்காட்டன் ரயில் போக்குவரத்தை விட நீர்ப்பாசனத்திற்கு முன்னுரிமை வழங்கக்கூறிய ஆலோசனையை காலனி அரசு நிராகரித்தது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ந்து நேர்ந்த கோரப் பஞ்சங்களினால்தான் சில அணைக்கட்டுகள் கட்டும் திட்டங்களை ஆங்கிலேயர் மேற்கொண்டனர். புதிய அணைக்கட்டு நீர்பாய்ந்த பகுதிகளில் அல்லது பழைய நீர்த் தேக்கங்கள் புனரமைக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்தவர்களிடமிருந்து கூடுதல் தீர்வையை அரசு வசூலிக்கத் தயங்கவில்லை. 6  இதனால் கிராமப்புறக்கடன் அதிகரித்தது. சென்னை மாகாணத்தில் 1895 ஆம் ஆண்டு கிராமப்புற கடன் 450 மில்லியன் ரூபாய் என பிரடரிக் நிக்கல்சன் மதிப்பிட்டார். 7

2. தலையிடாக் கொள்கையும் கோரப் பஞ்சங்களும்

ஆங்கிலேய ஆட்சி ஆரம்பமான ஆண்டாகிய 1765 லிருந்து 1900க்குள் இந்தியாவில் முப்பது பஞ்சங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் பதினெட்டு பிரிட்டிஷ் பேரரசின் கீழ் நாட்டு நிர்வாகம் கொண்டுவரப்பட்ட பிறகு (1858) நடந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பதாண்டுகளில் வெடித்த ஐந்து பெரும் பஞ்சங்களில் மூன்று  கொடியவை..

1876— 78 பஞ்சம் 36 மில்லியன் மக்கள் உயிரைக் குடித்தது.

1896– 97 பஞ்சத்தின்போது 96 மில்லியன் மக்கள் மாண்டனர்.

1899— 1900 பஞ்சம் 60 மில்லியன் உயிர்களை பறித்திருந்தது. 8

பதினேழாம் நூற்றாண்டில் குஜராத் மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் ஏற்பட்ட வறட்சி, அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, விவசாயிகளையும் கைவினைஞர்களையும் கிராமங்களை விட்டு வெளியேறச் செய்தபோது முகலாய ஆளுநர் எடுத்த நடவடிக்கை பற்றி அப்போதைய கிழக் கிந்தியக் கம்பெனி பிரதிநிதி பீட்டர் மன்டி பாராட்டி எழுதியுள்ளார். இலாப நோக்கில் விலையைக் கூட்டியவர்கள், கலப்படம் செய்தவர்கள் அப்போது கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாகவும், பேரரசர் ஷாஜகான் அரசு செலவில் இலவச உணவு அனைவர்க்கும் வழங்க ஏற்பாடு செய்ததாகவும் கூறுகிறார். 9

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசின் தலையிடாக் கொள்கையே பஞ்சக் கோட்பாட்டையும் தீர்மானித்தது. மோசமான பருவமழை மற்றும் போர்களின் விளைவாக பற்றாக்குறை ஏற்படலாம். ஆனால் வேறு எந்தக் காரணத்தையும் விட பற்றாக்குறை ஏற்படுத்தும் பாதிப்பைத் தடுக்க அரசு நடத்தும் வன்முறை மூலமே பஞ்சம் ஏற்படுகிறது என்ற ஆடம் ஸ்மித்தின் கோட்பாட்டை காலனி அரசு தீவிரமாகப் பின்பற்றியது. 10

பற்றாக்குறை மற்றும் பஞ்ச காலங்களில் உணவு தானியங்கள் போதுமான அளவிற்கு இருந்தும் நிவாரண நடவடிக்கைகள் ஏதும் எடுக்காது தலையிடாக் கொள்கையை காலனி அரசு கடைப்பிடித்திருக்கிறது என்பதற்கு போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. 1873 ஆம் ஆண்டு வங்காளத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்ததைக் கேள்வியுற்ற வங்காள ஆளுநர் லெப்டினன்ட் ஜி. கேம்ப்பெல் இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதியாவதைத் தடுத்திடுமாறு வைசிராய் நார்த் புரூக்கிடம் வேண்டினார். ஏற்றுமதியைத் தடை செய்து வர்த்தகத்தை தடம் புரளச் செய்யக் கூடாது எனக்கூறி ஆளுநரின் கோரிக்கையை வைசிராய் நிராகரித்தார். தனது நிலைக்கான நியாயத்தை அவர் இவ்வாறு விளக்கினார். ஏற்றுமதியில் வங்காள அரிசி ஆறில் ஒரு பங்காகிய உயர்தர அரிசி சாதாரண மக்களின் நுகர்வுக்கானதல்ல… சாகுபடியாளர் குறைந்த விலையிலான உணவை வாங்குவதற்கு அவை உதவுகின்றன. மீதமுள்ளவை சாதாரண அரிசி. அவை இலங்கை, மொரீசியஸ், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பேரரசின் காலனிகளில் வாழக்கூடிய வங்காளத் தொழிலாளர்கள் சாப்பிடுவதற்கு அனுப்பப்படுவதால் அதில் தலையிடக்கூடாது. 11

பஞ்சங்களின்போது சந்தையில் பொருட்கள் கிடைத்தபோதிலும் மக்களுக்கு வாங்கும் திறன் இல்லாததாலேயே அவர்கள் பட்டினியால் இறந்தனர் என ஐரோப்பிய பாதிரிகள் பலர் பதிவு செய்துள்ளனர்.

1876— 78 பஞ்சத்திற்குப்பின் 1881இல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழு, பஞ்சத்தின்போது 5.1 மில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

1898 ஆம் ஆண்டு பஞ்சத்தின்போது அமைக்கப்பட்ட விசாரணைக்குழு மற்றொரு உண்மையையும் வெளிக் கொணர்ந்தது. 12

இந்தியாவில் பற்றாக்குறையின்போதும் பஞ்சத்தின் போதும், உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல் விவசாயத் தொழிலாளர்கள் ஊதியம் உயர்வதில்லை; மாறாக விவசாயப் பணிக்கான ஆட்குறைப்பால் வழக்கமானதைவிட குறைந்த ஊதியத்திற்கு பணி செய்ய போட்டி ஏற்படுகிறது.

3. வருமானத்தை இழந்த நெசவாளர்கள்:

ஆசிய சமுதாயங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்தியா பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு தொழில் வளம் மிக்க நாடு. ஜவுளி மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தியில் அது முன்னணி வகித்தது. பருத்தி சாகுபடி நாட்டின் பெரும்பகுதிகளில் பரவலாக நடை பெற்று வந்தது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன் இந்திய பருத்தித் துணிகள், குறிப்பாக கேலி கிளாத், டாக்கா மஸ்லின், காஷ்மீர் சால்வை போன்றவற்றிற்கு இங்கிலாந்தில் அதிகக் கிராக்கி இருந்தது. இங்கிலாந்தில் உற்பத்தியான பருத்தித் துணிகளோடு கேலி கிளாத் போட்டி போட்டதால் இந்தியாவிலிருந்து அத்துணியை இறக்குமதி செய்தவர் மற்றும் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தோர் மீது 200 பவுண்டு வரை அபராதம் விதிக்கலாம் என ஆங்கிலேய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. 13

1813 ஆம் ஆண்டில் கூட இந்திய நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகள் தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியானதாக ராய் சௌத்ரி குறிப்பிடுகிறார். அமியகுமார் பக்சி தான் ஆய்வு செய்த பீஹார் பகுதியில் (1809- 13) கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி 18 சதவீதத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகக் கூறுகிறார். 14

இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்கு முன் இருந்த உட்கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவிலும் இருந்தன. இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் இருந்த தாமஸ் மன்றோ இங்கிலாந்தைப் போன்று இந்தியாவும் பண்டக சாலை வர்த்தகர்களின் தேசம் எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே கண்டுபிடித்திருந்த புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றொரு தொழிற் புரட்சியை ஆங்கிலேயர் இந்தியாவில் நடத்திக் காட்டியிருக்கலாம். மாறாக இங்கிலாந்து ஆலைகளில் நெய்யப்பட்ட ஆடைகளைப் பெருமளவில் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம் இந்திய நெசவுத் தொழிலை திட்டமிட்டு அவர்கள் அழித்தனர். மான்செஸ்டர், லங்காசயர் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட துணிகள் இந்திய கைத்தறித் துணிகளை விட அதிக நேர்த்தியானவையாகவும், நீடித்து உழைப்பவையாகவும், இருபது சதவீதம் விலை குறைவாகவும் இருந்தன. 15 எனவே இந்திய நெசவாளர் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை  இல்லாது போயிற்று. பொருளாதார ரீதியாக அதுவரை சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த கைவினைஞர்கள் குடும்ப வருமானத்தை இழந்ததால் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்க, ஏற்கெனவே நிலங்களை இழந்து விவசாயத் தொழிலாளர் அந்தஸ்துக்குள்ளாகியிருந்தோர் அடியைப் பின்பற்றி நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தனர். 16

1815 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் இலங்கை காப்பித் தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்களை அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை வேண்டிய போது, அந்த மாவட்டத்து மக்கள் மலிவான வாழ்க்கையிலான சொந்த மண்ணை விட்டு வெளியேற விருப்பமற்றவர்கள் எனவும், இலங்கை அரசு பிரத்தியேக ஊக்கத் திட்டங்களின் மூலமே அவர்களை தாய்நாட்டை விட்டு வெளியேறச் செய்ய முடியும் எனவும் கடிதம் எழுதினார். 17 ஆனால் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் காலனி அரசின் நிலவரிக் கொள்கையால் ஏற்பட்ட இரு பஞ்சங்கள் (1833 1843) மற்றும் அரசின் தலையிடாக் கொள்கை எத்தகைய ஊக்க நடவடிக்கையும் இல்லாமலேயே மக்களை வெளிநாடுகளுக்குக் குடியேறச் செய்தது.

1843 முதல் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் சென்னையிலிருந்து இலங்கைக்கு 14,46,407 நபர்கள் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றிருந்தனர். 18

4. தோட்டத் தொழிலாளர், ஆதிவாசிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர் நிலை:

ஆங்கிலேயர் மலைச்சரிவில் காப்பி, தேயிலை, சணல் போன்றவற்றை சாகுபடி செய்யும் முறையை அறிமுகப்படுத்தினர். 1857 இல் சாகுபடி தொடங்கியிருந்தது. காப்பி பயிரிடுவதற்காக பல இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் காப்பி பயிரிடுவதற்காக 500 ஏக்கர் பரப்புள்ள அடர்ந்த காட்டை அழித்ததாகவும், ஆயினும் அங்கு காப்பி விளையவில்லை எனவும் ஹெச்.ஆர். பேட் (திருநெல்வேலி வரலாற்றுக் களஞ்சியத்தின் ஆசிரியர்) குறிப்பிடுகிறார். ஒரு வகை இலைநோய் தாக்கியதால் தென்  இந்தியாவில் காப்பி சாகுபடியைக் கைவிட நேர்ந்தது. ஆயினும் தேயிலை சாகுபடி செழிப்பாக நடந்தது. 1907க்குள் இந்தியாவில் 5,36,000 ஏக்கர் நிலம் தேயிலை சாகுபடிக்குள் கொண்டுவரப்பட்டது.

1858 இல் ஏற்றுமதியான தேயிலை, காப்பி, சணல் ஆகியவற்றின் மதிப்பு அரைமில்லியன் பவுண்டு ஆகும். 1907 இல் இது 32 மில்லியனாக உயர்ந்திருந்தது. 19

வங்காளத்தில் உருவாக்கப்பட்ட ஜமீன்களிலிருந்து பழங்குடியினர் வெளியேற்றப்பட்டிருந்ததால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்த `கோல்கள் 1831லும், `சந்தாலியர்கள் 1855லும் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சிகள் அரசின் இரும்புக்கரங்களால் ஒடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் காடுகள் சிலவற்றை தங்கள் ஏகாதிபத்திய நலனுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து 1865 ஆம் ஆண்டைய வனப்பாதுகாப்புச் சட்டத்தை ஆங்கிலேயர் அமல்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கினர். பூர்வீகமாக அக்காடுகளில் வாழ்ந்து வந்திருந்த ஆதிவாசிகள் தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகக் கூறி அரசு 1878 இல் குற்றப் பரம்பரைச் சட்டம் நிறைவேற்றி அவர்களை காவல்துறை நிர்ணயித்த கிராமங்களில் முடக்க முனைந்தது. இதற்கு எதிராக பில்  முண்டா போன்ற ஆதிவாசி (1899)  இனத் தவர்கள் தொடர்ந்து காலனி அரசுக்கு எதிராகப் போரிட்டனர். 20

பருத்தி, சணல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் இந்தியாவில் ஜவுளி மற்றும் சணல் ஆலைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டன. மும்பையில் முதல் பஞ்சாலை 1854 ஆம் ஆண்டு இந்தியர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. லங்காசயர், மான்செஸ்டர் நகரங்கள் வசதி படைத்தவர்க்கான மெல்லிய ரகங்களை உற்பத்தி செய்தபோது இந்திய நூற்பாலைகள் சாமானிய ருக்கான முரட்டு ரகத்தில் கவனம் செலுத்தியதால் முரண்பாடு ஏதும் ஏற்படவில்லை. அகமதாபாத்தில் நூற்பாலைகள் அனைத்தும் 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்தியர்களால் நடத்தப்பட்டன.

முதல் சணல் ஆலை கல்கத்தாவில் 1855 இல் தோன்றியது வட்டிக் கடையில் சம்பாதித்த பணத்தை மார்வாரிகளில் சிலர் சணல் ஆலை களில் முதலீடு செய்திருந்தனர். 21

அதிகரித்துவந்த ஆலைகளால் ஆலைத் தொழிலாளர் எண் ணிக்கை பெருகியது. 1881, 1891 மற்றும் 1901 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைச் சட்டங்கள் தொழிலாளர் பணி மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திட உதவவில்லை. மாறாக அச்சட்டங்களில் இருந்த பாதுகாப்பு சரத்துக்கள் ஆலை அதிபர்களை தொழிற்சாலை வளாகத்தில் அதிக முதலீடு செய்ய கட்டாயப்படுத்தின. மேலும் அவை மலிவான உழைப்பின் மூலம் பெற்ற ஆதாயம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான ஜவுளிகளுக்கு இந்திய பருத்தி நூல் ஆடைகள் சவாலாக இல்லாமல் ஆக்குவதற்கும் உதவின. எனவே புறக்கணிக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர் நலனில் ஜி.சுப்ரமணி ஐயர் போன்ற தேசியவாதிகளும், அவர் போன்ற தேசியவாதிகள் நடத்திய நாளி தழ்களுமே அக்கறை செலுத்தின.

5. காலனி அரசின் வரிவிதித்தல் மற்றும் நிதிக்கொள்கை:

காலனி அரசுக்கு வேண்டிய நிதியில் பாதி நிலவரி மூலம் கிடைத்தது. மீதமுள்ள பாதி அபின், உப்பு மீதான வரி,  வருமானவரி மற்றும் முத்திரைவரி போன்றவற்றிலிருந்து வந்தன. கிடைத்த வருமானத்தில் 33 சதவீதம் இராணுவத்திற்கும் (பின்னர் காவல்துறைக்கும் சேர்த்து), 22 சதவீதம் சிவில் நிர்வாகத்திற்கும் செலவழிந்தன. எஞ்சியிருந்ததில்தான் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்ற பொதுப்பணிகளுக்கு செலவிடப்பட்டது. 22

கட்டுப்பாடற்ற வாணிபக் கொள்கையை 1833 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றியதால் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்க முடியவில்லை.

1865 ஆம் ஆண்டு வரவு  செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சார்லஸ் டிராவல்யன் (கல்கத்தா அரசுப் பணியில் இருந்த உயர் அதிகாரி), தேயிலை, காப்பி, சணல், தோல் மற்றும் கம்பளி மீது ஏற்றுமதி வரி போட முயன்ற செயல் ஐரோப்பிய வர்த்தகர்களிடையே ஆத்திரத்தை மூட்டியது. இலண்டனில் இருந்த  பேரரசின் அரசுச் செயலர் இவ்வரிக்கு ஒப்புதல் தர மறுத் தது மட்டுமின்றி அந்த ஆண்டு முடிவதற்குள் டிராவல்யனை இங்கிலாந்திற்கு திரும்ப அழைத் துக் கொண்டார். 23

1875 ஆம் ஆண்டு மான்செஸ்டர் வர்த்தக சபை இந்தியாவில் இறக்குமதியான பருத்தி ஆடைகளின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரியது. ஐரோப்பிய  வர்த்தகர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சென்னை வர்த்தக சபை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பேரரசின் இந்திய அரசுச் செயலர் இறக்குமதி வரி தொடர்ந்தால் கன்சர்வேடிவ் கட்சியினர் லங்காஷயரில் பதினான்கு பாராளுமன்ற இடங்களை இழப்பர் என வைசிராய் லிட்டனுக்கு எழுதினார். எனவே அரசு அதிகாரிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி, கட்டுப்பாடற்ற வர்த்தக கோட்பாட்டின் அடிப்படையில் பருத்தி நூல் ஆடைகளின் மீதான இறக்குமதி வரியை லிட்டன் ரத்து செய்தார். 24

இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் இறக்கு மதியான பொருட்கள் மீது மூன்று சதவீத வரி விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆங்கிலேயர் ஜெர்மனியில் இறக்குமதி செய்த பொருட்களுக்கு இருபத்தைந்து சதவீதமும், அமெரிக்காவில் இறக்குமதியானதற்கு ஏழுபத்து மூன்று சதவீத மும் சுங்கவரி செலுத்த வேண்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 25

திட்டமிடுதலில் ஏற்றுமதி இறக்குமதி சமநிலைக் கோட்பாட்டை எப்போதும் பின்பற்றியதாக காலனி ஆட்சியாளர்கள் அறிவித்த போதிலும், தாய்நாட்டுக் கட்டணம் என்ற பெயரில் கீழ்க்கண்ட வகையறாக்கள் இங்கிலாந்திற்கு வடிகாலாகின. 26

கம்பெனி பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலாபம். சேமிப்பு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளது சம்பளம், ஐரோப்பிய வர்த்தகர், தோட்ட உரிமையாளர்கள் அனுப்பி வைத்த தொகை. பிரிட்டிஷ் இந்தியாவில் சிவில், இராணுவப் பதவிகளில் பணியாற்றியோர் ஓய்வு ஊதியம். இலண்டனில் இந்திய அரசுச் செயலர் சம்பளம், அலுவலகச் செலவு மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்க்கான  சம்பளம் மற்றும் ஓய்வூதியம். போர்கள் மற்றும் இரயில் போக்குவரத்து போன்றவற்றிற்கு வாங்கியிருந்த கடன், அதன் மீதான வட்டி. பண்டக சாலைப் பொருட் கள்,  இராணுவத் தளவாடங்கள் மற்றும் இருப்புப் பாதைக்கான உபகரணங்கள் வாங்கியதில் ஆன செலவு.

1837 இல் 130 மில்லியன் பவுண்டுகளாக இருந்த இந்தியாவின் கடன் 1900 இல் 220 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்ததாகவும் இதில் 18 சதவீதமான கடன் போர்களுக்காக (ஆப்கானிஸ்தான் மற்றும் பர்மா மீது ஆங்கிலேயர் தொடுத்தது) பெற்ற கடன் என்று ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. 27 1908 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்தக்கடன் 246,034,071 பவுண்டு எனவும் இதில் இரயில் போக்குவரத்திற்காக வாங்கியது 177 1/2 மில்லியன் பவுண்டு எனவும் அரசு அறிக்கை ஒன்று கூறியது. 28

இங்கிலாந்தில் தேக்க நிலையிலிருந்த மூலதனத்திற்கு ஒரு வடிகால் கொடுப்பதற்காக இந்தியாவில் இரயில் போக்குவரத்திற்கான மூலதனம் அங்கிருந்த தனியார் முதலாளிகளிடமிருந்து பெறப்பட்டது. அவ்வாறு செய்திருந்த முதலீட்டிற்கு ஐந்து சதவீத வட்டியை ஸ்டெர்லிங்கில் (பிரிட்டிஷ் நாணயத்தில்) கொடுக்க உத்திரவாதம் செய்யப்பட்டிருந்தது. இதனால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் 250 மில்லியன் பவுண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 29

இங்கிலாந்தின் இராணுவ எண்ணிக்கையை விட இந்தியாவின் இராணுவ எண்ணிக்கை 1885 இல் இரு மடங்காக இருந்தது. இந்திய இராணுவத்திற்கான செலவு காலனி அரசாட்சியின்போது ஆண்டொண்டிற்கு 20 மில்லியன் பவுண்டு ஆனது. 30 காலனி அரசாட்சியின் நிதிக் கொள்கை பரிமாற்றச் சமநிலையை பாதித்தது. இந்தியா தாய்நாட்டுக் கட்டணம் கட்ட வேண்டியிருந்ததால் வர்த்தக பரிமாற்றச் சமநிலையைக் காக்க நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பைவிட அதிகமாக இருக்க வேண்டும். ஓர் ஆய்வின்படி இந்தியாவில் ஏற்றுமதியின் மதிப்பு இறக்குமதி மதிப்பைவிட 50 முதல் 60 கோடி ரூபாய் அதிகம் இருக்க வேண்டும் என  கண்டறியப்பட்டுள்ளது. 31

எனவே இந்தியா ஏற்றுமதியான பருத்தி, சணல், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போக தாய்நாட்டுக் கட்டணத்தை செலுத்த பல நேரங்களில் விலைமதிப்பில்லா தங்கத்தையே இங்கிலாந்திற்கு அனுப்பியது. பொருளாதார ஸ்திரத்திற்கு உத்தரவாதமான தங்கம் நாட்டை விட்டு வெளியேறியதால் இந்தியா ஓட்டாண்டியானதாக தேசியவாதிகள் கருதினர். 32

மேலும் எப்போதெல்லாம் இங்கிலாந்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் இந்திய ரூபாயை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றதன் மூலம் காலங்காலமாக இந்தியக் குடும்பங்கள் வைத்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி சாமான்களை சந்தைக்கு விற்பனைக்கு வர காலனி அரசு நிர்பந்தித்தது. இறக்குமதியை ஊக்குவிக்க இந்திய ரூபாயின் மதிப்பை செயற்கையாக உயர்த்தியும் தன் கைவண்ணத்தைக் காட்டியது. 33

6. நெளரோஜியும் அவரது வடிகால் கோட்பாடும்:

தீவிரவாதிகளாகக் கருதப்பட்டவர்கள் மட்டுமே தேசியவாதிகள், நாட்டின் அமைதி, சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சியின் பிராப்தம் என பிதற்றுபவர்கள் ஆங்கிலேயர் விசுவாசிகள்; ஆங்கிலேயருக்குச் சமமாக நிர்வாகத்தில் பங்கு பெறவும், சட்ட மன்றத்திற்குள் நுழைந்து காலனி ஆதிக்கக் கொள் கையின் எதிர்மறை விளைவுகளை சுட்டிக்காட்ட விழைந்தவர்கள் மிதவாதிகள் என பொதுவாழ்விற்கு வந்திருந்த உயர்தர மற்றும் நடுத்தர வகுப்பினரை மூன்று வகையாகப் பிரிக்கிறார் அரவிந்தர். (34)

ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகரித்து வந்த ஏழ்மையை இத்தேசம் முதலில் உணர்வது அவசியம்; அப்போதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என ஓங்கி குரல் கொடுத்தவரும், அந்நியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே இந்திய அரசியலின் தலையாயக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்பதை அறிவித்தவருமான தாதாபாய் நெளரோஜி மிதவாதியாக இருக்க முடியாது (35)  என்கிறார் அதே அரவிந்தர்.

ஏழை மக்களின் துயரங்கள் பற்றி மனசாட்சி கொண்ட ஆங்கிலேய சிவில், இராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்ற குறிப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியவற்றைத் தொகுத்து 1901 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏழ்மையும் பிரிட்டானியர் தன்மை அற்ற ஆட்சியும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. 36 நெளரோஜி வங்காளம் மற்றும் பீஹார் மாகாணங்களின் நிலை குறித்த 1806 -1814 ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்கள் அடங்கிய இந்தியா இல்ல. ஆவணங்களை ஆராய்ந்ததக்காண ஆணையர்களில் ஒருவரான மான்ட்கோமரி மார்ட்டின் கிழக்கு இந்தியா பத்திரிகையில் எழுதியதை ஆரம்பகால ஆங்கிலேயரது சுரண்டலை விளக்க மேற்கோள் காட்டுகிறார்.

நூதனமாக பளிச்சென்று தெரிந்த இரு விவசாயங்களை இங்கு குறிப்பிடுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று ஆய்வுக்குட்படுத்திய பிரதேசங்களின் செல்வ வளம்; இரண்டாவது அங்கு வசிக்கும் மக்களின் ஏழ்மை, முப்பது ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மூன்று மில்லியன் பவுண்டு பன்னிரெண்டு சதவீத வட்டி விகிதத்தில் 723,900,000 பவுண்டு ஆகும். ஓர் தொழிலாளியின் ஊதியம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பென்ஸ் என இருந்தபோது, இத்தகைய செல்வ அபகரிப்பு கடுமையான விளைவை இந்தியாவில் ஏற்படுத் தும். 37

1840 இல் குஜராத்திற்கு பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதியாக திரும்பியிருந்த கிபர்ன் பருத்தி வேளாண்மை பற்றிய விசாரணைக்காக அமைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டு மக்கள் அவைக்குழுவிடம் விவரித்தவற்றை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் ஏற்பட்ட சீரழிவை விளக்க நெளரோஜி எடுத்துரைக்கிறார். 38

இந்தியர்களிடையே பணம் படைத்த வர்க்கத்தினரை அதிகமாகக் காண முடியவில்லை. நாட்டை நாம் முதலில் கைப்பற்றியபோது நிலப்பிரபுத்துவ வகுப்பைச் சார்ந்தவர்கள் பகட்டான வண்டிகள், குதிரைகள், சேவகர்களுடன் அழகான ஆடம்பர ஆடைகளில் காணப்பட்டனர். ஆனால் தற்பொழுது அவை ஏதும் காணப்படவில்லை. தாங்கள் ஒரு காலத்தில் பணம் வைத்திருந்ததாகவும், தற்பொழுது அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்பதாகவும் புகார் செய்கின்றனர்.

1851 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பிரசுரம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருந்த குஜராத்தின் அழிவு பற்றிய தகவலை ஆதாரமாகக் கொண்டு கம்பெனி  நிர்வாகப் பணியில் இருந்த ராபர்ட் நைட் என்பவர் பதிவு செய்திருந்ததையும் நெளரோஜி குறிப்பிடுகிறார்.

நாங்கள் 1807 இல் குஜராத்திற்கு வந்தபோது வசதியாயிருந்த பல குடும்பங்கள் இன்று மேலாடை கூட இல்லாமல் உள்ளனர். பணமாக நாம் தாலுக்தாரர்களிடமிருந்து கோருவது, முன்னர் அவர்கள் செலுத்திய தொகையைவிட, எத்தகைய பிரதி பலனும் இல்லாது, மூன்று மடங்கு அதிகம் இருந்தது. அழிவைத் தரும் அதிக வட்டிக்கு வாங்கும் கடன் அவர்களது நிலத்தையும் கிராமங்களையும் எடுத்துக் கொள்ளும் உரிமையை கடன் கொடுத்தவர்கள் கோரமுடிந்ததால் அவர்கள் மேலும் மேலும் மீளமுடியாத அளவிற்கு கடனில் மூழ்குகின்றனர். 39

காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கியிருந்த நிர்வாக அமைப்பை கவனமாக ஆராய்ந்த நெளரோஜி அதிகச் சம்பளம் பெற்ற ஐரோப் பியர்களுக்குப் பதிலாக இந்தியர்களை அப்பதவிகளில் அமர்த்தியிருந்தால், நிர்வாகச் செலவில் நான்கில் ஒரு பங்கைக் குறைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இராணுவம், காவல்துறை மற்றும் கடனுக்கு செலுத்திய வட்டி என்ற முறையில் அரசு செலவழித்ததை வளர்ச்சிக்குப் பயன்படாத தேவையற்றவை எனக் கருதினார். இரயில்வே, பொதுப் பணித்துறை மற்றும் தந்தி ஆகியவற்றின் மீதான உட்கட்டுமான செலவினங்களைக்கூட பேரரசைப் பாதுகாப்பதற்கான யுத்தியாகவே கருதினார். 40

ஒரு சிறைக் கைதிக்கு செலவழிக்கப்படும் தொகையின் அடிப்படையில் ஓர் மனிதன் உயிர் வாழத்தேவை என்னென்ன என்பதைக் கணக்கிட்ட நெளரோஜி, ஓர் குற்றவாளி பெறுகின்ற உணவு, உடை வாங்க தேவையானவற்றிற்குக்கூட நல்ல பருவமழை பெய்த காலத்தில் கிடைத்த விளைச்சல் போதுமானதாக இருக்காது. அப்படி இருக்க, சமயச் சடங்குகளுக்கும், சந்தோச, துக்க காரியங்களுக்கான செலவுகளுக்கும், பருவமழை பொய்த்த காலத்திற்கான தேவைக்கும் ஓர் விவசாயி என்ன செய்ய முடியும்? என வினவினார். 41

ஆங்கிலேயர் ஆட்சி ஏழ்மைக்கு அல்ல வளர்ச்சிக்கு வழிவகுத்தது என அரசின்  தனிநபர் வரு மானப் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, வாதிடும் சில அறிவு ஜீவிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு விவரத்தையும் தாதாபாய் நெளரோஜி ஒருங்கிணைந்த மாகாணத்தின் அரசு அதிகாரி ஏ.எல். ஹல்சி கருத்தின் மூலம் அன்றே தெரிவித்திருக்கிறார்.

பார்த்திராத யாரும் நம்ப முடியாத அளவிற்கு இந்த மாவட்டத்தின் சாகுபடியாளர்களின் ஏழ்மை இருந்தது. இது மிகைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படலாம். இதற்கு ஆதாரமாக புள்ளி விவரங்களைத் தர முடியாது. ஆயினும் இது தான் நான் நேரில் கண்டு அறிந்தது. 42

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தின் தன்மை, இந்திய மக்களிடம் காணப்பட்ட ஏழ்மை பற்றி விளக்குவதற்கு நெளரோஜியின் வடிகால் கோட்பாடு பெரிதும் உதவியது. எதையும் கைமாறாகப் பெறாமல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்வம் சென்றிட காலனிய கட்டமைப்பு உதவிற்று என்பதை அவரது வடிகால் கோட்பாடு விளக்கிற்று. கடந்த ஆண்டுகளில் கொண்டு செல்லப்பட்ட மாபெரும் செல்வம் இந்தியாவிலும் இந்தியர்களின் சட்டைப் பைகளிலும்  இருந்திருக்குமானால், எத்தகையதோர் பலனை இந்தியா அடைந்திருக்கக்கூடும் என்பதை உணர்வதன் மூலம் தான் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பை அறிய முடியும் என்றார்.

நெளரோஜியைத் தொடர்ந்து செல்வ வடிகால் கோட்பாட்டை பொதுத் தளத்தில் வலியுறுத்தி வந்த ஆர்.சி. தத் (முன்னாள் ஐ.சி.எஸ். அதிகாரி) கணிப்பின் படி விக்டோரியா மகாராணியார் கடைசி பத்து ஆண்டு ஆட்சிகாலத்தின்போது (1891 –1901) 647 மில்லியன் பவுண்டாக இருந்த மொத்தவரு வாயில் 159 மில்லியன் பவுண்டு இங்கிலாந்திற்கு வடிகாலானது. இது மொத்த வருமானத்தில் 1/4 பங்கு. 43   இந்த செல்வ இழப்பை ஒரு நேரத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளைக்கு சமமாகக் கருத முடியாது.

அதைவிட மோசமானது. 11 ஆம் நூற்றாண்டின் ஆப்கானிய மன்னன் கஜினி முகமதுவின் கொள்ளையும் கூட 18 ஆவது படை யெடுப்போடு நின்றது. ஆனால் ஆங்கிலேயரது காலனிய செல்வ அதிகரிப்பிற்கு முடிவே இல்லாததுபோல் தோன்றுகிறது என வருந்தினார் நெளரோஜி. 44

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும், பிபன் சந்திராபேராசிரியர் பிபன் சந்திரா தனது முனைவர் பட்டத்திற்காக தில்லி பல்கலைக் கழகத்திற்கு 1963 இல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கை, 1880– 1905, மக்கள் வெளியீட்டகத்தால் 1966 இல் இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் என்ற நூலாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட மறுபதிப்பு செய்யப்பட்ட இந்நூல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கான பொருளாதார அடித்தளம் மற்றும் சுதந்திர தேசப் பொருளாதாரத்திற்கான தேசியவாதிகளின் மாற்றுத் திட்டத்தின் தோற்றம் பற்றியதோர் புரிதலுக்கான முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

தெரிந்தெடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் (1880 – 1905) பிபன் தன் ஆய்வு மூலம் வெளிக் கொணர்ந்த விசயங்கள் மூன்று. ஒன்று, வணிகம், தொழில், நிதித்துறை ஆகியவற்றின் மூலம் நடை பெற்ற மூவகைப் பொருளாதாரச் சுரண்டல்களை தேசியவாதிகள் கண்டறிந்து இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர் பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாலேயே ஏகாதிபத்திய ஆட்சி தொடர்கிறது என்பதைப் புரிந்தனர்.

இரண்டு, கச்சாப் பொருட்கள் உற்பத்தி செய்யவும், ஆங்கிலேயரின் உற்பத்தி பொருட்களை விற்கவும் இந்தியாவை சந்தையாக மாற்றிடும் காலனி பொருளாதார அம்சங்களை வளர்த்திடும் அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்த்தனர். மூன்று, அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன்வைத்த அனைத்து தேசியவாதிகளின் கோரிக்கைகளும் ஓர் சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும் தேசிய பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் விடுவதற்கு உதவின.

இந்நூல் இந்திய தேசிய இயக்கத்தின் முன்னோடிகளான தாதாபாய் நெளரோஜி, கோகலே, திலகர், ஜி. சுப்ரமணிய ஐயர் போன்றோரின் அரசியல் நேர்மை, அறிவுத் திறமை மற்றும் இந்து, சுதேசமித்திரன், அம்ரித் பசார் பத்ரிகா, பெங்காலி, இந்து பேட்ரியாட் போன்ற பத்திரிகைகளின் தேசபக்தியையும் அறிய பெரிதும் உதவுகிறது.

இந்நூலை தமிழ் வாசகர்களுக்கும், இளம் ஆய்வாளர்களுக்கும் கிடைத்திட பாரதி புத்தகாலயம் எடுத்திட்ட முயற்சி பாராட்டுதற்குரியது. பிபன் சந்திரா ஆய்வைத் தொடங்கிய ஆண்டிற்கு (1880) முன்னால் நடந்த நிகழ்வுகளை வாசகர்கள் புரிதலுக்காக சுருக்கமாக எழுதித் தருமாறு பணித்த பாரதி புத்தகாலய நிர்வாகி நண்பர் நாகராஜனுக்கு எனது நன்றி.

துணை நூற்பட்டியல்

  1. Daniel Thorner and Alice  Thorner, Land and Labour in India (Bombay Asia Publishing House 1962), p. 54.
  2. K.A. Manikumar, A Colonial Economy in the Great Depression: Madras, 1929-37 (Chennai: Orient Longman, 2003), p. 44.
  3. A. Sarada Raju, Economic Condition in the Madras Presidency, 1800-1850 (Madras: University of Madras,1941), p. 51.
  4. K.A. Manikumar, “Economic Drain and British Colonialism’’, Historiographer (Nagercoil, 1995), p. 210.
  5. Neil Charlesworth, British Rule and the Indian Economy, 1850-1914(London: Macmillan, 1982), p. 59.
  6. Manikumar, A Colonial Economy in the Great Depression, p. 48.
  7. மேலது, பப. 44-45.
  8. Burton Stein, A History of India (New Delhi: Oxford University, 1998), p. 262.
  9. Burton Stein, A History of India, p. 260.
  10. Elizabeth Manak, ‘‘Formulation of Agricultural Policy in Imperial India, 1872-1929”: A Case Study in the Madras Presidency  (Hawai: University of Hawai 1979), p.19.
  11. Sunanda Sen, Colonies and the Empire (Calcutta: Orient Longman, 1992), p.172.
  12. மேலது., பப. 173-_74.
  13. Manikumar, “Economic Drain and British Colonialism,” pp. 2-10.
  14. Charlesworth, British Rule and Indian Economy, pp. 33-35.
  15. Manikumar, ‘‘Economic Drain and British Colonialism,” pp. 2-10.
  16. Dharma Kumar, Land and Caste in South India (New Delhi: Manohar, 1992), p. 28.
  17. மேலது., ப. 129.
  18. Buchannan, The Development of Capitalistic Enterprise in India (London:Frank Cass 1966), pp. 66-67.
  19. Refer Ranajit Guha’s, Peasant Insurgency in Colonial India & Ramachandra Guha’s, A Fissured Land.
  20. D.H. Buchannan, Development of Capitalistic Enterprise in India, p.465
  21. Burton Stein, History of India, p. 257.
  22. Sabyasachi Battacharya, Financial Foundation of the British Raj (Simla: Indian Institution of Advance Study, 1971), pp. XXXXIII-IX.
  23. R. Tirumalai, The Voice of an Enterprise (Madras: Macmillan, 1986), p. 70.
  24. மேலது.
  25. விரிவான விளக்கத்திற்கு‍ மணிக்குமாரின் 1930களில் தமிழகம் புத்தகத்தை படிக்கவும் (அலைகள் பதிப்பகம், 2006)
  26. Neil Charlesworth, British Rule and Indian Economy, p. 53.
  27. Memorandum on Some of the Results of Indian Administration During Past Fifty Years of British Rule in India (Calcutta: Government Printing Press, 1911), pp. 45-46.
  28. Buchannan, Development of Capitalistic Enterprise in India, p. 184.
  29. E.A. Horne, The Political System of British India with special reference to the Recent Constitutional Changes (Oxford: Clarendon Press, 1922), p. 34
  30. Manikumar, “Economic Drain and British Colonialism,” pp. 2-10.
  31. Manikumar, A Colonial Economy in the Great Depression, pp. 128-129.
  32. For further details read G. Balachandran’s John Bullion’s Empire: Britain’s Gold Problem and India Between the Wars (London:Curzon), 1996.
  33. Buchannan, Development of Capitalistic Enterprise in India, pp. 150-200.
  34. Sri Aurobindo, On Nationalism: Selected Writings and Speeches (Pondicherry, 1996), pp. 101-102.
  35. மேலது.
  36. அதே ஆண்டில் இந்திய பஞ்சநிவாரண நிதிச் செயலராய் இருந்த வில்லியம் டிக்பி செல்வம் கொழிக்கும் பிரிட்டிஷ் இந்தியா என்று‍ கிண்டலான தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
  37. Naoroji, Poverty and Un-British Rule in India (Delhi: Government of India, 1962),
  38. மேலது., ப. 42.
  39. மேலது, பப. 42-43.
  40. S. Ambirajan, “Naoroji in the History of Economic Thought”, Research in the History of Economic Thought and Methodology, Vol.16, 1998,  p. 167.
  41. மேலது., ப. 159.
  42. Naorojini, Poverty and Un-British Rule in India, p. 44.
  43. Charlesworth, British Rule and Indian Economy, p. 53.
  44. S. Ambirajan, ‘‘Naoroji in the History of Economic Thought”, p. 166.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: