“உலக நாடுகளிடையே அரசியல் ஒத்துழைப்பை தேடிய வெனிசுலா அதிபர் ஹியுகோ ரபேல் சாவேஸ் பிரியாஸ் இன்று இல்லை. அமெரிக்க கார்ப்பரேட் அதிபதிகளும், சி.ஐ.ஏயும் இனைந்து சாவேசை அகற்றி அரசை நிலைகுலைய செய்ய நடத்திய சதிகளை தோற்கடித்தவர் புற்றுநோயிடம் தோற்றுவிட்டார். பேரழிவு ஆயுதக் குவியல்கள் மற்றும் கரன்சி பலத்தைக் கொண்டு ஏக துருவ உலகை நிறுவ எத்தனிக்கும் ஏகாதி பத்தியவாதிகளை “கந்தக நாற்றமடிக்கும் மிஸ்ட்டர் டேன்ஜர்” என்று ஐ.நாவில் விளித்த அந்த குரலை இனி கேட்க முடியாது.
மத்திய ஆசிய எண்ணை வள நாடுகளின் ஆட்சியாளர்கள் போல் மேல் தட்டு மக்களின் ஆடம்பர வாழ்விற்காக எண்ணை வளத்தை பகாசூர எண்ணை நிறுவனங்களிடம் அடகு வைக்காமல் சொந்த நாட்டு உழைக்கும் மக்கள் குடிமையில் உயரவும், கல்வி ஞானம் பெறவும், உலக நாடுகளின் ஏழைகளை நெறுக்கும் வறுமைப் பிடியை சற்று தளர்த்தவும் வெனிசுலா எண்ணை வளத்தை அற்பணம் செய்த அந்த கரங்கள் ஓய்வெடுக்க சென்றுவிட்டன. எண்ணை வளத்தை டாலராக குவிக்காமல் இருப்பதால் வெனிசுலாவின் பொருளாதாரத்தை சாவேஸ் சீர்குலைக்கிறார் என்று மேலை நாட்டு எல்லா ரக பொருளாதார நிபுணர்களும் பீதியை கிளப்பினர். “ டாலர் அல்ல, தொழில் நுட்பம் தெறிந்த உழைக்கும் கரங்களே செல்வத்தை உருவாக்குகிறது. நாணயத்திற்கு மதிப்பை கொடுக்கிறது என்ற உண்மையை அறியாத முட்டாள்தனம் பீதியை கிளப்புகிறது, வெனிசுலா உழைப்பாளிகளே! விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுங்கள்! நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த பிற நாடுகளோடு ஒத்துழையுங்கள் என்று நம்பிக்கை ஊட்டிய அந்த குரல் தூரத்தே சென்றுவிட்டது.
சென்ற இடமெல்லாம் “இன்றைய தேதிகளில் முதலாளித்துவம் என்பது வருடத்திற்கு 26 லட்சம் ஏழைகளை உற்பத்தி செய்து உலகை நரகமாக்கும் எந்திரமாக இருக்கிறது. புதிய மேன்மைப்பட்ட உலகை அடைய சோசலிசமே சரியான பாதை,” என்ற இடி முழக்கம் எங்கே என்று நம்மை ஏங்கவைத்து சென்றுவிட்டது. பணக் குவியலை திரட்ட வெறிகொண்ட சிலரின் சுயநலனுக்கு மக்கள் பலியாக கூடாது என்று நேர்மையுடனும், மன உறுதியுடனும் பாடுபட ஒரு புதிய மனிதனாக வாழ்ந்து காட்டிய ஒருவரை உலகம் இழந்துவிட்டது.
சேகுவேரா என்ற மாமனிதன் எத்தகைய புதிய மானுடத்தை உருவாக்க உயிரைக் கொடுத்தாரோ அந்த புதிய மனிதனாக வாழ்ந்து காட்டிய சாவேஸ் இன்று இல்லை. “ நான் என் இதயத்தை தருகிறேன். உன் உள்ளங்கையில் விடிகிற வரை மடக்கிவைத்துக்கொள். விடிந்தவுடன் கையைவிரி ஒளிபட்டு எனது இதயம் துடிக்கட்டும்” என்று ஒரு கொரில்லா போர் வீரன் காதலிக்கு எழுதி வைத்துவிட்டு போருக்கு சென்றதைப் போல சாவேஸ் தனது இதயத்தை புதிய உலக உறவை உருவாக்கும் ஆற்றல் படைத்த பாட்டாளி வர்க்கத்தின் உள்ளங் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
யார் இந்த ஹியுகோ ரபேல் சாவேஸ் பிரியாஸ்?
1954ல் வெனிசுலா நாட்டின் சபனேட்டா என்ற கிராமத் தில் ஒரு பள்ளி ஆசிரியர் குடும்பத்தில் 7 குழந்தைகளில் ஒருவனாக சாவேஸ் பிறந்தார். வறுமையின் காரணமாக சவேசையும் அவனது அண்ணனையும் பெற்றோர்கள் பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். குழந்தை பருவத்தில், வேதனை, வறுமை, சோத்துக்கு பஞ்சம் இருந்தாலும் தாயினும் சாலப் பறிந்து அரவவனைக்கும் பாட்டியால் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை என்று சாவேஸ் தனது குழந்தைப்பருவத்தை நினைவு கூறுகிறார். அருகிலிருந்த சர்ச்சில் இருந்த பாதிரியாருக்கு பூசைக்கு உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது. பாட்டியிட மிருந்த நேர்மை, ஏசுவின் மனிதாபிமானம், பிறருக்கு உதவு வதில் மகிழ்ச்சி சிறுவனையும் பற்றிக் கொண்டது.
17வது வயதில் வெனிசுலா ராணுவ கல்லூரியில் சாவேஸ் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவ பாடத்திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சேகுவேராவின் டைரி. அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் காஸ்ட்ரோவை பாசமும், நேசமும்மிக்க தோழனாக அந்த டைரியே சாவேசை கருத வைத்தது. மார்க்ஸ் – எங்கெல்ஸ் நட்பு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சிகர தத்துவத்தை வழங்கியது போல், பின் நாளில் சவேஸ்- காஸ்ட்ரோ நட்பு நிதி மூலதனமெனும் பிரேக் இல்லா ரோடு ரோலர் தென் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்காமல் தடுக்கும் அரசியல் பொருளாதார யுக்திகளை உருவாக்கியது.
மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த்தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின. அவரது வார்த்தைகளிலேயே அதை சொல்வதென்றால் “ மானுடத்தின் எந்தப்பகுதியும் தனித்த கிரகமாக அதற்கென தனி இயக்க விதிகளோடு, பிறபகுதி மக்களோடு தொடர்பற்று தனித்து வாழ இயலாது”. “உலகத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் உதவாமல், ஒத்துழைக்காமல், இனி மானுடம் வாழ இயலாது”. “ஒரு நாட்டு ராணுவம் அந்த நாட்டு உழைப்பாளிமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர சுரண்டும் சதைப்பிண்டங் களுக்கு பாதுகாவலனாக இருக்க கூடாது”.“ பாட்டாளி வர்க்கம் தனது போராட்டங்களிலிருந்து தன்னை புதிய மனித னாக மாற்றிக் கொள்ளாமல் புதிய உலக உறவு சாத்திய மில்லை”.
ராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது சேகுவேரா கணவு கண்ட ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். ராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுலா அரசிலமைப்பு உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதை கண்டார். 19ம் நூற் றாண்டின் முற்பகுதியில் ஸ்பெயின் மன்னரின் ஆதிக்கத்தி லிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்தி பேராடிய சைமன் பொலிவர் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களை காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இனைந்து புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் – 200 என்ற ரகசிய அமைப்பு உருவாக்கினார். ஆட்சியை கைப்பற்ற எடுத்த முயற்சி தோற்கவே சிறையில் அடைக்கப்பட்டார். சேகுவேராவின் டைரி அவரது மனச்சாட்சியாக இருந்ததால் மாற்றி யோசித்தார், ராணுவம் வெற்றி பெற மக்கள் ஆதரவு தேவை மக்களின் ஆதரவு பெற மக்களின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் உயிரோடு இருக்காது என்பதையும் உணர்ந்தார்.
இப்பொழுது பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்டரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார். அதன் விளைவாக வெனிசுலாவில் மக்கள் ஜனநாயக ஆட்சி மலரத் தொடங்கியது. 20 நாடுகளைக் கொண்ட தென் அமெரிக்க கண்டத்தில் பெரும்பாலான நாடுகளில் இடதுசாரிகளின் அரசுகள் வந்துவிட்டன, கொலம்பியாவில் மட்டுமே அமெரிக்க ஆதரவு அரசு உள்ளது. அங்கும் இடதுசாரி அல்லாத அரசுகள் இருக்கிற சிலி போன்ற நாட்டிலும் உலக வங்கியோ, மேலை நாட்டு பன்னாட்டு நிறுவனங்களோ முன்பு போல் வலாட்ட முடியவில்லை. டாலரை நம்பி நிற்கும் நிலையை வெகுவாக குறைக்க இந்த நாடுகள் ஒத்துழைக்க அமைப்புகள் உருவாகிவிட்டன.
சாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்பட எத்தனிக்கும் ஜனாதிபதியை மக்கள் அகற்றும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது . இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்கட்சிகள் 2004ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார். உள்நாட்டின் மக்களின் ஒத் துழைப்பு, அண்டை நாடுகளின் அரசியல் ஆதரவு இவைகளை சம்பாதித்த சாவேசின் அரசியல் நேர்மையை வியக்காமல் இருக்க முடியுமா?
சாவேஸ் இன்று இல்லை
ஆனால் அந்த புதிய மனிதன் வித்திட்ட அமெரிக்க மக்களின் பொலிவேரியன் புரட்சி தொடரும். அதில் ஏற்ற இரக்கங்கள் வரலாம் ஆனால் அந்த புரட்சி தடைகளை தாண்டி படரும். பல துருவ உலகை உருவாக்கி அமெரிக்க, நாட்டோ ராணுவ ஏக துருவ அரசியலை புதைகுழிக்கு அனுப்பும் போராட்டமாக அது தொடரும். பெரும் திரள் மக்களை கொல்லும் ஆயுதங்களான அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களை ஸ்டாக்காக வைத்துக் கொண்டதோடு, கரன்சியையும் (அதாவது டாலரை) ஆயுதமாக்கி ஏழை நாடுகளை மிரட்டும் ஏகாதிபத்தியவாதிகளை வெல்ல சாவேஸ் காட்டிய வழியில் உலகம் உருளும். சாவேஸ் மறைவை ஒட்டி 16 நாடுகள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கஅறிவுத்துள்ளது. 42 நாடுகளின் அரசியல் தலைவர்கள் வணக்கம் செலுத்த செல்லுகின்றனர். சாவேஸ் வெனிசுலாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே சொந்தமானவர் என்பதின் அடையாளமாகும்.
புதிய மனிதன் சாவேஸ் புதிய மானுடத்தின் வித்தாகிவிட்டார்.
அவருக்கு மார்க்சிஸ்ட்டின் செவ்வணக்கம்
சாவேஸ் மேற்கோள்:
முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் இருக்க இயலாது. முதலாளித்துவம் என்பது அநீதி ஆட்சி செய்யும் இடமாகவும், பணக்காரர்கள் ஏழைகளுக்கெதிரான கொடுமை கள் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது.. அதிகாரம் பலம் படைத்தவர்கள் பலமற்ற ஏழைகளை நசுக்குகிறார்கள். சட்டத்தின் ஆட்சி மட்டுமே அவர்களை விடுவிக்கு மென்று ரூசோ சொன்னார். உலகை ஜனநாயக சோசலிசத் தின் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். ஜனநாயகமென்பது 5 ஆண்டிற்கு ஒரு முறை வாக்குரிமை கொடுப்பது மட்டுமல்ல. அதைவிட அதிகமானது. அது ஒரு வாழ்வியல் வழி. அது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுப்பது. மேலை நாட்டு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி என்று கூறப்படுகிற நாடுகளில் இருப்பதைப்போல்.பணக்காரர்களின் அரசு ஏழைகளை ஆட்சி செய்வதல்ல.
சாவேஸ், ஜுன் 2010
Leave a Reply