கூட்டுறவு உணர்வு பரவ ஒரு நீண்ட பயணம்


கூட்டுறவு என்றாலே மக்களின் பங்கேற்பை உத்தரவாதம் செய்து இயங்கும் அமைப்பு என்று பொருள்படும். பிறரோடு எந்த அளவிற்கு ஒருவன் ஒத்துழைக்கிறானோ அந்த அளவிற்கே அவனது நலன் பாதுகாக்கப்படுகிறது என்ற உண்மையை கூட்டுறவு அமைப்புகள் உணர்த்துகின்றன.

“சுயநலத்தைதேடு, பொது நலனை கடவுள் பார்த்துக் கொள்வார்” “தகுதி உள்ளது வாழ, மற்றது அழியும்” என்பன போன்ற வாழ்வியல் போதனைகள், கலாசாரங்கள் மனிதனை மனிதன் அழிக்கும் நிலைக்கு தள்ளி கற்பனைக்கெட்டாத சிரமங்களை கொண்டு வந்துவிட்டன. இந்த கசப்பான உலக அனுபவங்களே கூட்டுறவு அமைப்புகள் தோன்ற முதற் காரணமாகும். அது மட்டுமல்ல வரலாற்றிலே கேட்பதற்கு இனிமையாக இருக்கிற சுதந்திர சந்தை, சந்தையில் போட்டி என்பவைகள் மனிதனுக்கு எதிராக மனிதனை நிறுத்தின, இரண்டு உலக யுத்தங்களை கொண்டு வந்தன. சந்தை மனிதனுக்கு எதிராக மனிதனை நிறுத்துவது இன்றும் தொடர்கின்றன. இவைகளை தவிர்க்க மக்கள் கண்ட அமைப்பே கூட்டுறவு ஆகும். இனக்குழுவாக வாழ்ந்த காலத்திய  தற்காப்பு மனோபாவங்களிலிருந்து விடுபட்டு,  சோசலிச சமூக உறவே ஆக்க பூர்வமானது என்ற கட்டத்தை நெருங்கும் இவ்வேளையில் முன்னைவிட   கூட்டுறவு அமைப்பு களின் தேவை 4 காரணங்களால் முக்கியமாகிவிட்டன.

  1. உலகமயமாகிவிட்ட நவீன சந்தையில் விலைகளின் நிச்சயமற்ற போக்கால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற மக்களின் சேமிப்பு நிதி மூலதன வடிவில் தறிகெட்டலைவதை தடுத்து  ஆக்கத்திற்கு திருப்ப.
  2. பொருள் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம், நுகர்வு ஆகிய நான்கிலும் மக்களின் நலனை முதன்மைப்படுத்த.
  3. விவசாயிகளுக்கும், சுயவேலை செய்து பிழைப்போருக்கும் குறைந்த வட்டியில் முதலீட்டு முன்பணம் கிடைக்க, வாழ்விற்கேற்ற வருவாயை உத்தரவாதம் செய்யும் வருமானம் கிடைக்க.
  4. அரசாங்க அமைப்பினுள்  ஜனநாயக முறைகள் பரவ, அதாவது மக்களுக்காக மக்களின் ஆட்சி என்பதை நடை முறையில் அனுபவிக்க, தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் ஆட்டம் போடுவதைத் தடுக்க.

கனவும் நனவும்

ஆனால் இந்த நோக்கங்கள் வெவ்வேறு வார்த்தைகளில் இனிமையாக சொல்லப்பட்டாலும் நமது அனுபவங்கள் வேறு, கூட்டுறவு அமைப்புகளை  தீபிடித்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற பார்வையோடு நடத்தப்படுவதை காண்கிறோம். அந்த அமைப்புகளை சட்டத்தாலும், அரசாங்க உத்திரவாலும் அதிகார மையங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டதால் கூட்டுறவு என்ற சொல் கேலிகூத்தாகி விடுகிறது, அந்த அமைப்பு ஊழலின் ஊற்றுக் கண்ணாகிவிடுகிறது, கூட்டுறவு அமைப்புகளில் திரண்டு கிடக்கும் மக்களின் சேமிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், ஆளும் கட்சியின் புள்ளிகள் கைகளுக்கு போவதால் ஆட்சியில் ஒட்டிக் கொள்ளும் பசையாக மாறி விடுகிறது. உறுப்பினர்களும் அவர்கள் தயவில் இருக்க தள்ளப்படுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுறவு  ஒரு வேட்டைக் காடாக ஆகிவிடுகிறது. இதனால் உறுப்பினர்களின் நலன் பறி போகிறது. பல ஆயிரம் கோடிகள் பணம் திசை மாறி புரளுவதால் காலப்போக்கில் நாட்டுப் பொருளாதாரத்தில் பல பாதிப்புகளை கொண்டு வருகிறது. ரூபாயின் மதிப்பை சீரழிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாகி விடுகிறது. ஏன்? நல்லெண்ணத்தோடு உருவான ஒரு அமைப்பு இப்படி ஆனது? பொருளாதாரத்தின் பொது நலனை கவனியாமல் கூட்டுறவு அமைப்பு தடுமாறிப் போனதேன்? இந்த அவலத்தை மாற்ற முடியுமா? கேள்விகள் எளிது, பதில்கள் அவ்வளவு எளிதல்ல. முதலில் கேள்விகளை தேடுவோம், நிறைவாக பதில்களை ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் முயற்சிப்போம்.

பின் நோக்கி பார்த்தால்

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நாட்டு கூட்டுறவு அமைப்பு எவ்வாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை மேலோட்டமாக பார்த்தாலே ஏராளமான கேள்விகள் மனதில் எழும். எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சியிலிருந்தது இன்று இருக்கிறது என்று பாராமல் எத்தகைய அரசியல் கலாசாரம், கொள்கை அல்லது சட்டம் தமிழக கூட்டுறவு அமைப்புகளை பாழ்படுத்தி வருகிறது என்பதை  பரிசீலிப்பதே நமது நோக்கம். நேற்று-இன்று என்று வரலாற்றுப்படி பார்க்காமல் இன்று இப்படி ஆனதற்கு நேற்று என்ன நடந்தது என்று இங்கே பின் நோக்கி பார்க்கப்படுகிறது.

ஏன் உயர் நீதிமன்றம் அவசரச்சட்டத்தை ஏற்றது?

சென்ற வருடம் (2012) அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் கூட்டுறவு சங்க உறுப் பினர் சேர்க்க அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்று அறிவிக்க 50 அமைப்புகள் தொடுத்த மனுக்களை நிராகரித்து விட்டது. கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகம் அதிகாரிகள் கையில் இருந்ததால் புதிய உறுப்பினர் சேர்ப்பை முந்தைய தீர்ப்பு ஒன்று தடை செய்திருந்தது. இந்த தடையை நீக்கவே அரசியல் நிர்ணயசட்ட 97-வது திருத்தப்படி அவசர சட்டம் போட்டதாக அரசு கூறியது., தடையை போட்ட முந்தைய தீர்ப்பில் புதிய உறுப்பினரை சேர்க்கும் உரிமை பொதுக்குழுவிற்கோ அல்லது அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவிற்கோ உண்டே தவிர அதிகாரிகளுக்கில்லை என்ற விளக்கமும் இருந்தது. ஆனால் அந்த தீர்ப்பு முறையாக தேர்தல் நடத்துக என்று அன்றைய அரசிற்கு சொல்லவில்லை.

அவசர சட்டத்தை எதிர்த்த மனுக்களில் இந்த அவசரச் சட்டம் தேவையில்லை   ஏற்கனவே இருக்கிற உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்க தேர்தலை அறிவிக்கட்டும். இந்த அவசர சட்டம் ஆளும் கட்சியினர் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றும் நோக்கம் கொண்டது என்று வாதாடின. அரசு தேர்தல் நடத்தப் போவதாக கொடுத்த வாக்குறுதியை ஏற்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நீதிமன்றம் 2008-ம் ஆண்டு ஒரு அவசர சட்டத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்த மறுசீரமைப்பை காட்டி தேர்தலை நடத்துக அந்த குழு புதிய உறுப்பினரை சேர்க்கட்டும் என்று கூறாமல் புதிய உறுப்பினர் சேர்த்த பிறகு தேர்தல் நடத்தினால் போதும் என்று கூறியதேன்? அது என்ன 2008 அவசர சட்டம்? அதன்படி தேர்தல் அன்றே ஏன் நடக்கவில்லை?

பத்திரிகை தந்த தகவல்கள்

உறுப்பினர் சேர்ப்பு அவசரச் சட்டத்தை செல்லுபடியாகும் என்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்தியன் கோஆப்பரேட்டிவ் என்ற இணையதளம்  கடைசியாக தேர்தல் வந்தது என்ற தலைப்பில் ஒரு செய்திச் சுருளில் கூட்டுறவு இயக்கத்திற்கு  மிகவும் மோசமான உதாரணமாக இருக்கும் தமிழகத்தில் உயர்நீதி மன்ற நிர்பந்தத்தால் தேர்தல் வரப்போகிறது. கடந்த 30 ஆண்டுகளாக நடக்காத அதிசயமிது என்று எழுதியது. மார்ச் 5,2013 தேதியிட்ட இந்து பத்திரிகை ஏப்ரலில் தேர்தல் நடத்த அரசு அறிவிப்பை வெளியிட்ட செய்தியோடு. கீழ்கண்ட தகவலையும் நினைவூட்டியது.

கடைசியாக 2007-ல் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது சட்டம் ஒழுங்கு சீர் குலைந்ததாக கூறி நிர்வாகக் குழுவை அரசு கலைத்துவிட்டது. அதற்கு முன்னால் 1996-ல் தேர்தல் நடந்தது 2001-ல் அது கலைக்கப்பட்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்று பழசை நினைவூட்டியது. கேள்வி என்னவெனில் 30 ஆண்டுகளில் ஒரு முறைதான் தேர்தல் மூலம் உருவான நிர்வாகக் குழு  5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 25 ஆண்டுகள் அதிகாரிகளே நிர்வாகம் செய்யட்டும் என்று அரசு விட்ட தேன்? 2007ல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கலைக்கப்பட்டபிறகு  கூட்டுறவு சங்க தேர்தலை மீண்டும் தகுந்த பாதுகாப்போடு ஏன் அன்றைய அரசு நடத்த முன்வரவில்லை?

இன்றைய தமிழக அரசிற்கும் தேர்தல் நடத்துவதில் அக்கறையில்லை என்பது உண்மையே. 2012-13 கூட்டுறவு அமைச்சர் சட்டமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கை அறிக்கையில் தேர்தலைப் பற்றிய எந்த விவரமும் இல்லை. பல தகவல்களோடு கூட்டுறவு வங்கிகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய். மக்களின் டெபாசிட் மற்றும் அவைகளின் சொத்துக்கள் பற்றிய  தகவல்கள் இருந்தன. கூட்டுறவு இயக்கத்தை புகழ்ந்து கூறிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளரின் மேற்கோள்  இருந்தது. ஆனால் அறிக்கையில் தேர்தல் பற்றி எதுவுமில்லை, கடந்த 30 ஆண்டு நிகழ்வுகளை கணக்கில் கொண்டால் இந்த அக்கறையின்மை இன்றைய ஆட்சியாளர்களின் ஏகபோகமல்ல!  கூட்டுறவு அமைப்புகளை அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கிற பொழுதுதான் ஒட்டு மொத்த கூட்டுறவு சங்கங்களின் பிடி ஆளும் கட்சியிடம் இருக்கும் என்ற கருத்திற்கு ஆளுவோர்கள் யாராக இருந்தாலும் அடிமையாகிவிடுகிறார்கள், ஏன் ஜனநாயகத்தைக் கண்டு ஆளுவோர் பயப்பட வேண்டும்?

நிர்பந்தம் வந்தால்  அரசு தேர்தலைப் பற்றி யோசிக்கிறது என்றும் சொல்ல முடியாது. எந்த திசையிலிருந்து நிர்பந்தம் வருகிறது என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்போ அல்லது 356 அரசியல் சட்ட பிரிவை வைத்திருக்கும் மத்திய அரசோ நிர்பந்தித்தால் மட்டுமே தேர்தல் வருகிறது.  அதன் வழியில் தேர்தலை நடத்தவும் செய்கிறது. மற்றப்படி தொழிற்சங்கமோ, விவசாய சங்கமோ, இடதுசாரி கட்சிகளோ, கூட்டுறவு சங்க உறுப்பினர்களோ குரல் எழுப்பினாலோ, இயக்கம் நடத்தினாலோ அவைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கருதப்பட்டு காவல்துறை தலையிடுகிறது.

ஏன் இந்த நிலை?

இன்று நடந்த தேல்தல்களில் ஆளும் கட்சி செய்த தில்லு முல்லுகள் எதுவும் மக்களுக்கு புதிதல்ல. கடந்த காலத்திலும் அபூர்வமாக நடந்த இரண்டு தேர்தல்களும் இதே பாணியில்தான் நடந்தன. கேள்வி என்னவெனில்  எதிர்கட்சியாக இருக்கிற பொழுது அரசை கண்டித்தவர்கள் ஆளும் கட்சியானவுடன் அதே தவறை செய்ய வெட்கப்படவில்லையே ? ஏன்?   2008ல் அப்போது இருந்த அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. கூட்டுறவு அமைப்பை சீரமைப்பு செய்யும் நோக்கம் கொண்டது என அறிவித்தது. இந்த அவசரச் சட்டம் பிறப்பித்த காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்பட்டு அதிகாரிகளே நிர்வகித்தனர் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இந்த அவசரச் சட்டம் கூட்டுறவு சங்க பொதுக்குழுவிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிற்கும் அதிகார வரம்பை விரிவுபடுத்தியது. எப்பொழுது நிர்வாகம் குழுவை கலைக்கலாம் என்பதற்கு விதிகளை உருவாக்கியது. இந்த அவசரச் சட்டப்படி துவக்க நிலை கூட்டுறவு வங்கியை தொடர்ந்து மூனறு ஆண்டுகள் நஷ்டம் இருந்தால்,  பெருமளவு பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தால், பொதுக்குழு கூட்டம் மூன்று முறை கூட்ட முயற்சித்தும் கோரம் இல்லாமல் போனால் ஒழிய கலைத்து அதிகாரிகளை நிர்வாகிகளாக ஆக்க முடியாது. நிதிநிர்வாகம், ஊழியர் நியமனம், சம்பளம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு உட்பட வேண்டும்.  நிதிகளை ரிசர்வ் வங்கி வகுத்த விதிப்படியே செலவு செய்யும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதிகாரிகள், அமைச்சர்கள் விதிகளுக்கு விரோதமாக தலையிட முடியாது. உத்திரவு போட முடியாது. வேடிக்கை என்னவெனில் அவசரச் சட்டம் போட்ட  அன்றைய அரசு அதன்படி தேர்தல் நடத்த முன்வரவில்லை ஏன்? தேர்தல் நடந்தால் தங்களது பிடி பறிபோய்விடும் என்று அன்றைய ஆளும் கட்சி பயந்ததா? அல்லது  தேர்தல் மூலம் வரும் நிர்வாகக் குழுவை முன்பு போல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கலைக்க முடி யாது என்ற நிலை அவர்களை பயமுறுத்தியதா?

பின் ஏன் அந்த சட்டத்தை மாநில அரசு அழகு பார்க்கவா கொண்டு வந்தது? இல்லை! இதற்கும் கொஞ்சம் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது.  ஊழலாலும், நிர்வாகக் கோளாறாலும்  அரசின் கடன் ரத்து அறிவிப்பாலும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் நிலைமை மோசமானது. 4400  முதல் நிலை வங்கிகளில் 1100 வங்கிகள் செயலிழந்தன.  2006ம் ஆண்டில் ரூ.6800/- கோடி விவசாயிகளின் கடன் ரத்து செய்த அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு ஈடுகட்ட பணம் ஒதுக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுத்த பணம் என்பது அதன் சேமிப்பும், மக்கள் சேமிப்பு கணக்கில் போட்ட  டெபாசிட்டாகும். வங்கிகள் வறண்டு போனதால் டெபாசிட்தாரர்களுக்கு வட்டியும் கொடுக்க இயலவில்லை, அசலையும் கொடுக்க இயலவில்லை. அரசு கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல்  கூட்டுறவு வங்கியை நம்பிய டெபாசிட்தாரர்களின் பணத்தை எடுத்து, விவசாய கடனை ரத்து செய்துவிட்டது. கூச்சல் கிளம்பவே வெறும் 100 கோடி ஒதுக்கிவிட்டு கை கழுவிவிட்டது. (ஆதாரம் ஃபைனான்சியல் எக்ஸ் பிரஸ் ஜூலை 3, 2006)

மேலும் விவசாயக்கடன்  வழங்குவதை விட அமைச்சர்கள், அதிகாரிகள் நிதியை வேறு வகைக்கு பயன்படுத்தியதால், விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் தயவில் வாழத் தள்ளப்பட்டனர். விவசாய சங்கங்கள் ஆங்காங்கு கூட்டுறவு வங்கிகளை பாதுகாக்க பலவிதமான கோரிக்கைகள் வைத்து குரல் எழுப்பினர். தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பின. தேர்தல் நடத்தவும், நிதியை விரயம் செய்வதை தடுக்கவும் கோரின.  பத்திரிகைகளுக்கோ டி.விகளுக்கோ இந்த நெருக்கடி பரபரப்பான செய்தியாகப்படாமல் போயிருக்கலாம். ஆனால் கிராமப்புற வாக்கு வங்கி சரிவதை ஆளுவோர் உணராமலா இருந்திருப்பர்! மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் நபார்டு என்ற வங்கியையும் நாடாமலா இருந்திருப்பர். அவைகள் 2004-ல் நியமித்த வைத்தியநாதன் குழுவின் சிபாரிசுகளை ஏற்றால் தான், ரிசர்வ் வஙகியும், நபார்டும் நிதி கொடுக்க முடியும் என்ற நிலை எடுத்திருக்கும்.

இந்து பத்திரிகை (அக்டோபர் 24, 2008) செய்தி அன்று என்ன நடந்தது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. கிராமப்புறத்தில் குறுங்கால கடன் வழங்க வைத்தியநாதன் குழுவின் சிபாரிசுகளை அமலாக்கும் இலக்குடன் கூட்டுறவு அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய  தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த வருடம் ஜனவரியில்  மாநில அரசு மத்திய அரசோடும், நபார்டு வங்கியோடும் வைத்தியநாதன் குழுவின் சிபாரிசை ஏற்று கூட்டுறவு சங்க சட்டங்களை திருத்த ஒப்பந்தம் போட்டதின் விளைவாக இந்த அவசரச் சட்டம் போடப்பட்டுள்ளது.  ஊழலாலும், நிர்வாகக் கோளாறினாலும் சிதிலமடைந்து கிடக்கும் கூட்டுறவு வங்கிகளை இயக்கவில்லையானால் அரசிற்கு எதிராக இயக்கம் வலுக்கும் என்ற பயமே 2008ல் அன்றைய அரசு அவசரச் சட்டம் போட்டது. ஆனால் தேர்தல் நடத்தி கூட்டுறவு நிர்வாகத்தை தேர்ந்தெடுத்த குழுவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை ஏன்? ஒரு வேளை மத்திய அரசு மிரட்டியிருந்தால் தேர்தல் நடந்திருக்குமோ? வைத்தியநாதன் குழு சிபாரிசை ஏற்றால்தான் நிதி தரப்படும் என்று உறுதிகாட்டிய மத்திய அரசு ஏன் தேர்தலை வற்புறுத்தவில்லை?  இந்த அவசரச் சட்டம் கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளை மாநில அரசின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட உதவலாம். ஆனால்  மத்திய அரசின்  ஆலிங்கனத்தால் யார் பயனடைவர்? என்பதை இப்பொழுது சொல்ல முடியாது.

அடுத்த கேள்வி கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் சுயேச்சையாக இயங்க இன்று இயலாவிட்டாலும் நாளை இயங்க சட்டம் உள்ளது. மற்ற கூட்டுறவு அமைப்புகளின் கதி என்ன? சான்றாக தமிழ் நாட்டில் கரும்பு விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் இலக்கோடு உருவான கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஒன்று கூட உருப்பட்டதாக கூறமுடியாது. மகாராஷ்ட்ராவில் நிலத்திமிங்கலங்களின் அரசியல் கருவியாக உள்ளன. அங்கு விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவோருக்கு வறுமையும், அரசியல் தர்மவான்களின்  தயவில் நாளையாவது விடியுமா? என்ற ஏக்கத்தையும் கொடுத்து வருகிறது. விடுதலை பெற்ற துவக்க காலத்தில் இவ்வளவு ஊழல் பேர்வழிகள் புகுந்து  பல அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்காத காலத்தில் ஏன்? சில வருடங்களுக்கு முன்புவரை நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த உதவின. சென்னை நகரில் காமதேனு போன்ற கடைகள் வால்மார்ட் கடைகள் வந்தால் கூட விரட்டி அடிக்கும் ஆற்றலோடு இருந்ததை அறிவோம்.  விலைகளை கட்டுப்படுத்த நுகர்வோர்க்கும் அரசு மான்யம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத நிலை இருந்தது. இன்று கூட்டுறவு என்றாலே ஊழல், கொலைவெறி என்றாகி விட்டது.

கூட்டுறவு சட்டம்: ஒரு வரலாறு

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே  இந்தியாவில் நிலவும் பழைய பாணி பொருள் உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு நகர்த்த வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் என்றால் கடன் அமைப்பு முறையில் பொருள் உற்பத்தியை இயக்குவது ஆகும். விவசாயமே அன்று முக்கிய தொழிலாக இருந்ததாலும், விவசாயிகளிடம் பண வடிவில் வரி வசூலை எளிமையாக்கவும், கந்து வட்டியால் விவசாயிகளின் கோபம் அரசின் மீது திரும்பாமலும் இருக்க  அரசு கூட்டுறவு முறையை புகுத்தியது. அதாவது அரசு கூட்டுறவு வங்கிக்கு வடன் கொடுக்கும், கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும். இதன் தொடர்ச்சியாக 1904ல் கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் கடன் சங்கங்களை மட்டுமே அனுமதித்து, 1912-ல் கடன் சார்பற்ற சங்கங்களையும் உள்ளடக்கிய சட்டம் இயற்றப்பட்டது. 1919-ல் மாண்டேகு சேம் போர்டு அரசியல் சாசன சீர்திருத்தங்களின் கீழ் மாநில பட்டியலுக்கு கூட்டுறவுகள் மாற்றப்பட்டது.

தமிழகத்தில் 1932-ல் சென்னை கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. நாடு விடுதலைப் பெற்ற பின் 1951-ஆம் ஆண்டு விவசாயத்திற்காக நிதி உதவி அதிகரிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி எ.டி.கோர்வாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1954-ல் அறிக்கை தாக்கல் செய்தது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட திரு.சந்தானம் குழு சிபாரிசுகள், கூட்டுறவு சட்டம் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல், இதர மாநில சட்டங்களில் அடங்கியுள்ள  அம்சங்களை ஒருங்கிணைத்து  தற்போதுள்ள 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டமும், 1988-ஆம் ஆண்டு கூட்டுறவு சட்ட விதிகளும் உருவாக்கப்பட்டு 13.4.1988 முதல் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்ய ஆட்சியாளர்கள் அவசரச் சட்டம் கொண்டு வருவதும், பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக்குவதும் தொடர் நடைமுறையில் உள்ளது.

கூட்டுறவில் ஜனநாயகம்

ஜனநாயக முறையில் நிர்வாகம் என்பது முக்கிய கூட்டுறவு தத்துவமாகும். அங்கத்தினர்களால் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம், உறுப்பினர்களாலேயே ஜனநாயக கோட்பட்டின் படி நிர்வகிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகமும் சட்டம், விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் இருக்கும்.  இந்த குழு சட்டம், விதிகள் மற்றும் துணைவிதிகளின் படி அளிக்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் செயல்படுத்தும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 33-ல் வரையறுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுக்களை கலைத்துவிட்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 89(1)ஐ பயன்படுத்தி தனி அலுவலர்களை நியமிப்பதும் தொடர்ந்து தனி அலுவலர்களது பதவிக் காலத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீட்டிப்புச் செய்வதும் வழக்கமானதால் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பார்வை ஒரு தலை முறைக்கு தெரியாமலே உள்ளதை உணர முடிகிறது.

அரசியல் சாசன சட்டதிருத்தம்

இந்திய அளவில் கூட்டுறவு அமைப்புகள் விரிவடைந்து பல லட்சம் கோடிகள் புரளும் களமாகிவிட்டது. பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கிக்கு ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த எடுக்கிற முயற்சிகளுக்கு இந்த லட்சக்கணக்கான கோடிகளும் உட்படுத்த வேண்டியிருக்கிறது. ஊழலாலும், நிர்வாகக் கோளாறுகளாலும், கூட்டுறவு வங்கிகளில் திரண்டு கிடக்கும் பணம் விவசாயிகளுக்கு பயன்படாமல், வேறு இடங்களுக்கும், ஊக வாணிபத்திற்கும் போவதால், கிராமப்புற வாழ்வு நரகமாகி விவசாயமே அழியும் நிலை வேகப்பட்டு வருகிறது இதனை உணர்ந்த மத்திய அரசு கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தவும், கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி பெறவும், அரசியலமைப்பு சட்டத்தில் 97-வது திருத்தம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிட்ட பிறகு கூட்டுறவு தேர்தல் நடத்தாத அனைத்து மாநிலங்களிலும் நடத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் நோக்கமே மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தின் நோக்கமாகும், கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசின் ஊழல் பிடியிலிருந்து விடுதலை என்றாலும் மத்திய அரசின் ஊழல் பிடியில் மாட்டிக் கொள்ளும் அபாயமுண்டு. மத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயகத்தை நேசிக்கிற வெனிசுலா சாவேஸ் அல்லது திரிபுரா முதலமைச்சர்கள் பாணியில் உள்ள மக்களை நேசிக்கும் அரசியல் தலைவர்கள் அமராமல் கிராமப்புற ஏழைகளுக்கு விமோசனம் இல்லை.

கேள்விகளுக்கு பதிலைத் தேடுவோம்

ஏன் நல்லெண்ணத்தோடு உருவான ஒரு அமைப்பு இப்படி ஆனது? கடந்த 30 ஆண்டு அனுபவம் நமக்கென்ன போதிக்கிறது?

தமிழக அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் தேவை என்பதையே அனுபவங்கள் உணர்த்துகின்றன, இதையே நிபுணர்களும், பாமர மக்களும் கருதுகின்றனர். இங்கே பல அரசியல்கட்சிகள் உள்ளன, இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற இயக்ககங்கள் ஜனநாயகம் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இடதுசாரி கட்சிகள் தங்கள் திட்டங்களிலே ஜனநாயகம் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த கருத்தை ஏற்காதவர்கள் அதனை விமர்சிக்க முடியும். எழுதி வைத்திருப்பதற்கு விரோதமாக நடந்தால் அவர்களை விமர்சிக்க முடியும், அம்பலப்படுத்த முடியும். ஆனால் மற்ற தமிழக அரசியல் கட்சிகள் இதில் தெளிவாக இல்லை.

சில நிபுணர்கள் சித்தாந்த பிடிப்பில்லாத அரசியலே இந்த கட்சிகளை வழி நடத்துவதாக கூறுகின்றனர். வேறு சில நிபுணர்கள் அப்படி சொல்ல முடியாது. மானுடம் இனக் குழுவாக வாழ்ந்த காலத்தில் இருந்த தற்காப்பு உணர்வே பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு தத்துவ அடிப்படையாக இன்று இருக்கிறது. மானுடம் இனக்குழுவாக வாழ்ந்த காலத்தில் ஜனநாயக உணர்வு பிறக்காத காலம். உயிர்வாழ பிற இனக்குழுவோடு போராட வேண்டியிருந்த காலம். எனவே அந்தப் பார்வையோடு இருக்கிற கட்சிகளுக்கு ஜனநாயக உணர்வு அநேகமாக இருக்காது.  இந்த இனக்குழு பார்வைதான் ஆட்சியில் அமர்ந்தவுடன் அதிகாரத்தை இஷ்டம் போல் பிரயோகிக்கும் உரிமை வந்துவிட்டதாக கருத வைக்கிறது. அதன் விளைவாக உள்ளாட்சி அமைப்புகளும், கூட்டுறவு அமைப்புகளும் எந்த அதிகாரமுமின்றி செயல்பட வைக்கின்றனர் தங்கள் தயவில்லாமல் அணைகளின் மடை கூட திறக்காது என்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்கின்றனர். இந்த கட்சிகள் ஒரு வகையில் சர்வாதிகார நிர்வாக முறையே, சிறந்த நிர்வாகம் எனக் கருதுகின்றனர் என்பதை நம்மாலும் ஊகிக்க முடியும். இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? என வினவலாம். எந்த சர்வாதிகாரியும் அடக்குமுறையை மட்டும் நம்பி நிற்பதில்லை. ஆங்கிலத்தில் காரட்  அன்ட் ஸ்டிக் பாலிசி என்பர்.  அடக்கு முறையும், சலுகைகளும் வைத்தே ஆட்சி செய்வர்.

உலகத்திலேயே மோசமான சர்வாதிகாரி ஹிட்லர், அவனது சித்தாந்தம் இன உணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது, அவனது அரசாங்க நிர்வாகம் கேரட்டும், ஸ்டிக்கும் கொண்டதாகும். இரண்டாம் உலக யுத்த முடிவில்  யுத்தத்தை தூண்டிய குற்றத்திற்காக நாசி கட்சியின் 22 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஜெர்மன் நாட்டு நுரேம்பர்க் நகரில் சோவியத் யூனியன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 4 நாட்டு நீதிபதிகள் அமர்ந்து விசாரனை நடத்தப்பட்டது. அந்த விசாரனைக்கு பிறகுதான் யூதர்களையும், ஆட்சியை எதிர்ப்பவர்களையும் பெரும் திரளாக  முகாம்களில் கொல்ல விஷவாயு அறைகள் இருந்தன என்பதும், ஜெர்மன் மக்களுக்கே தெரிய வந்தது. அதுவரை ஜெர்மன் மக்கள் ஹிட்லரை ஈவிரக்கம் கொண்ட சர்வாதிகாரியாகவே கருதினர்.  ஹிட்லரை மக்கள் நேசித்தனர், ஆனால் ஹிட்லரோ மக்களை நேசிக்கவில்லை  என்பதை வெகுநாள் கழித்தே மக்கள் உணர்ந்தனர். சுருக்கமாகச் சொன்னால் இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தப் பார்வை ஜனநாயகத்தை ஏற்காது. மக்களை நேசிக்கவும் செய்யாது. மதிக்கவும் செய்யாது. மக்களை நம்பவும் செய்யாது. அடக்குமுறை, சலுகைகள் மூலம் ஆளவே முயற்சிக்கும். எதிர்ப்போரை துவம்சம் செய்யும். இன்னொரு சர்வாதிகாரியை கண்டு பயப்படும், சண்டை போடும் அல்லது முசோலினி, ஹிட்லர் காலில் விழுந்தது போல் பணிந்து போகும்.

தென்அமெரிக்காவில் மக்கள் பல நாடுகளில் சர்வாதிகாரிகளின் கேரட் அன்ட் ஸ்டிக் பாலிசியை வெகு காலம் நம்பி மோசம் போயினர். சாவேஸ் என்ற ராணுவ அதிகாரி அதை மாற்றி அமைத்தார். மக்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைக் கூட திரும்ப அழைக்கலாம் என்று ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் வெனிசுலா நாட்டு சட்டத்தை திருத்தினார். மக்களால் உருவாக்கப்படும் அரசே நிலைக்கும். மக்களின் நம்பிக்கையை இழந்தவர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்துவிடுகிறார்  என்பது சாவேஸ் அரசியலாக இருந்தது. அந்த திருத்த அடிப்படையில் திருப்பி அழைக்க வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின, அமெரிக்க அரசு உதவியுடன் சாவேசிற்கு எதிராக அவதூறுகளை விதைத்தனர். வாக்கெடுப்பை சந்தித்த சாவேஸ் முன்னைவிட அதிக வாக்குகள் பெற்றார்.

லெனின், சேகுவேரா, காஸ்ட்ரோ முதலியோர் மக்களை நம்பியது போல் போல்   நானும் மக்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன் அவர்கள் வீட்டிற்கு போ என்றால் அதனை ஏற்பேன். இதுதான் ஜனநாயக உணர்வு.

தமிழ்நாட்டு அரசியலில் ஜனநாயக கலாசாரம் புகாமல், மாற்றங்கள் சாத்தியமில்லைஅதைப் புகுத்துவது எளிதல்ல. ஜனநாயக உணர்வை  அரசியலில் மேலோங்க வைப்பது ஒவ்வொரு மார்க்சிஸ்ட்டின் கடமையாகும். பதவிகளைப் பற்றிய பார்வையில் மார்க்சிச சித்தாந்தப் பார்வை மிளிர வேண்டும் .அதாவது பதவிக்காகவோ, புகழுக்காகவோ, பட்டயங்களுக்காகவோ நாங்கள் போராடவில்லை. நாங்கள் சரி என்று கருதுகிற கருத்திற்காக போராடுகிறோம் என்ற உணர்வே மேலோங்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கட்சி திட்டத்தில் உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். பதவிகள் முக்கியமல்ல, கூட்டுறவு அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் அரசு அலுவலகங்களும் மக்களுக்கு சாதகமாக செயல்பட வைப்பது அன்றாட வேலைகளில் ஒன்றாக வேண்டும். மக்களை வேடிக்கை பார்ப்பவர்களாக ஆக்காமல் அவர்களும் பங்கெடுக்க வைக்கும் கிளர்ச்சி பிரச்சார வடிவங்களை காண வேண்டும்.

– ஏ.கிருஷ்ணமூர்த்தி, வே.மீனாட்சி சுந்தரம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s