மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முதலாளித்துவத்தின் கோர வடிவம் = நரேந்திர மோடி


பின்னணி:

மக்கள் கவி பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் இல்லையே என்ற ஏக்கம் தற்போது எழுகிறது. ஏனெனில் மக்களை பிடிக்கும் நவீன பேய்களுக்கு தாயத்து விற்றவன் ஆயிற்றே. இப்பொழுது இந்திய முதலாளி வரக்கம் நமது மக்களின் இரண்டு பேய்களை முன்னிருத்துகிறது. இரண்டு பேரும் மக்களின் வாழ்வை சூறையாடும் கொள்கைகளை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அமல்படுத்தும் எத்தரகள். நம்மூரில் மக்களை ஏமாற்றி வித்தை காட்டினால் அதற்கு பொதுவாக வைக்கப்பட்டுள்ள பெயர் மோடி மஸ்தான் வேலை. தற்போது இந்திய அரசிலுக்கு இதைவிட கணக் கச்சிதமாக பொருந்தும் வேறு பெயர் இல்லை.

பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகம் ஆகிய இரண்டுமே தொடர்ந்து கடந்த சில வருடங்களாக மோடி குறித்து முழு உண்மையைத் தெரிவிக்காமல் பெரிய பாதி உண்மைப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பா.ஜ.க-வின் இரட்டை அடையாளங்களில் ஒருவரான அத்வானியை (இரும்பு மனிதராம்- இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் பாராளுமன்றத் தாக்குதல் முதல் காண்டகார சரணாகதி வரை நடைபெற்றது) முன்னிருத்தி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற கற்பனையில் இருந்த மதவாத பா.ஜ.கவிற்கும் அதன் மூல இயக்கு விசையைக் கட்டுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் இது சொல்ல முடியாத பேரிடியாக இருந்தது.

ஒரு புறம் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் முன்னின்று நடத்தியவர நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தி இரத்த ஆறுகளை ஓட வைத்தவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்ளக் கூடிய வர இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தம் (முஷாரப் -வாஜ்பாய்) கையெழுத்தாவதை தடுத்து நிறுத்தியவர் வாஜ்பாய்க்கு அடுத்தபடியான மிக மிக உயரமான தலைவர் என்ற முறையில் வெற்றி நிச்சயம் என்று முன்னிருத்தினர். தோல்வியின் சோர்வுடன் பா.ஜ.க.வில் அடுத்த மாற்றாக யாரை முன்னிருத்துவது என்பது மிகப்பெரிய வெற்றிடமாகியது.

இந்த நிலையில் மிக அதிக காலம் முதல் மந்திரியாக (சொந்தக் கட்சிக் காரர்களாலேயே வழக்கமாக காலை வாரிப்படுவது காங்கிரசிலும் பா.ஜ.க.விலும் வாடிக்கைதானே) மக்களால் அறியப்படும் மோடி மட்டுமே அவர்கள் முன்னிருந்த ஒரே தேர்வு. ஆனால் 2002 குஜராத் கலவரம் மற்றும் அதற்குப் பின் முஸ்லீம் மக்களை குறிவைத்து போலி என்கவுண்டர் மூலம் தீர்த்துக் கட்டியது போன்ற எதிர்மறையான உருவகம்தான் அவர் குறித்த கருத்தாக நாட்டு மக்களிடையேவும் உலகத்தின் பார்வையிலும் இருந்தது. இதர இரண்டாம் தரத் தலைவர்கள் எல்லாருக்கும் (ஜேட்லி, சுஷ்மா, சௌகான், ராஜ்நாத், கட்கரி போன்றவர்கள்) பிரதமர் பதவி ஆசை இருந்தாலும் அவர்களுக்கு கட்சியை தலைமை தாங்கி வெற்றிக்கு இட்டு செல்லக் கூடிய வாய்ப்பில்லை என்ற எண்ணமும் மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை அப்படியே அமலாக்கக் கூடிய ஒருவரும் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். கருதியதால் மோடியே அவர்களின் ஒரே தேரவாக ஆக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இதனால் பத்திரிக்கைகளில் அவரைப் பற்றியிருந்த மதவாத கறைகளை கழுவ வேண்டிய கட்டாயம் பா.ஜ.விற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் ஏற்பட்டது. ஆகவே அவர் ஆட்சி செய்கிற மாநிலத்தில் பாலாறும் தேனாறும் கட்டற்று ஓடுவதாகவும் அங்கு மக்களுக்கு எந்த இலவசமும் இல்லை என்றும் அதற்கு தேவையே இல்லாமல் மக்கள் உழைத்து முன்னேற வாய்ப்பு அளிக்கும் மாநிலம் என்ற பிரச்சாரம் செய்வது மட்டுமே அவர் மீதிருந்த கறைகளை அப்புறப்படுத்த உதவும் என்று  வலது சாரி அரசியல் அமைப்புகள் முடிவெடுத்து ஊடகங்களில் தங்களின் உயர்சாதி பின்புலத்தை பயன்படுத்தி இலகுவாக அமல்படுத்தியது.

அதே சமயம் நாட்டு அரசியல் தளத்தில் இடதுசாரிகளை பாராளுமன்றத்திலிருந்தும் அவர்கள் ஆட்சியிலிருந்து மே.வங்கம் மற்றும் கேரளாவில் கணிசமான தோல்விகளை அளித்ததில் வெற்றியடைந்த முதலாளித்துவம் (ஏகாதிபத்தியத்தின் அனைத்து கருவிகளின் உதவியோடு) விரைவாக தன்னுடைய நிகழ்ச்சி நிரலை தனக்கு சாதகமான பாராளுமன்ற அமைப்பின் உதவியோடு அமல்படுத்தத் தொடங்கியது.

நாட்டின் வளங்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் கொள்ளைகள் ஆரம்பிக்கப்பட்டன. சட்ட ரீதியான கொள்ளைகளும் சட்டத்திற்கு புறம்பான சூறையாடல்களும் எந்தத் தடையும் இன்றி ஆரம்பிக்கப்பட்டது. ஆளும் வர்க்கம் மற்றும் அதன் கூட்டாளியான ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான கொள்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. அதற்கான எதிர்ப்புகள் உதாசீனப்படுத்தப்பட்டது.

அதே சமயம் ஏகாதிபத்திய அமெரிக்காவில் ஏகாதிபத்தியத்திற்கும் அதனை தலைமை தாங்கும் நிதி மூலதனத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அடி அதன் பிழைத்திருத்தலுக்கும் இந்தியா போன்ற வளமான சந்தைகளில் தீவிரமாக செயல்பட தேவையும் அதற்கான தடைகளை உடைத்தெறிவது அவசியம் என்ற நிலையும் உருவாகியது. பொருளாதார மந்த நிலையைப் பயன்படுத்தி தொழில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மக்களின் வாழ்வோ வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. விலைவாசி உயர்வு வேலை இழப்பு கல்வி, மருத்துவம், தண்ணீர், சாலை என மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காடாக மாற்றியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை நசிந்தும் வாழக்கைத் தரம் வீழ்ச்சியடைந்ததும் வந்தது.

இதற்கிடையே மத்தியிலும் மாநிலங்களிலும் புதிய தாரளமயக் கொள்கையின் விளைவாக சுதந்திர வரலாற்றில் மக்களின் அறிவுக்கு எட்டாத எண்களில் லட்சம் கோடிகள் என்ற முறையில் ஊழல்கள் வெடித்து வெளிவரத் தொடங்கின. இரண்டாம் அலைக்கற்றை ஊழல் இஸ்ரோ ஊழல் நிலக்கரி ஊழல் இயற்கை எரிவாயு ஊழல் ஹெலிகாப்டர் ஊழல் என ஒவ்வொரு நாளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்சியாளர்களோடு இணைந்து அடித்த ஊழல்கள் அம்பலமாயின. அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு பற்றிய விமரசனத்தை அடக்கியும் அதே சமயம் ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி அதிகமாகவும் (அவர்களே முக்கிய குற்றவாளிகள் என்றாலும்) ஊடகங்கள் ஊதிக் கொண்டிருந்தன.

இதற்கிடையே மக்களிடையே இருந்த அதிருப்தியின் வெளிப்படாகக் காங்கிரஸ் கட்சி பல மாநிலத் தேர்தல்களில் தனது இளவரசர் ராகுல் தலைமையில் பிரச்சாரம் செய்தும் படுதோல்விகளை தழுவத் தொடங்கியது. மேலும் பல ஊழல் வழக்குகளில் மத்திய புலனாய்வுக் கழகம் விசாரிக்காமல் அமைதி காத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் வழக்கு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசியல் தலைவர்கள் சிறைக்கு தள்ளப்பட்டவுடன் அடுத்த கட்டமாக முதலாளிகள் விசாரணை என்ற நிலை. அதேசமயம் மக்களிடையே அதிருப்தி மிக அதிகமான எழுச்சியுடன் மேலெழும்பியது. அதுவே ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு நாடு முழுவதும் கிடைத்த அங்கீகாரம். மேலும் சுமார் எட்டு கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தமும் ஆளும் வர்க்கத்தை அச்சமுறச் செய்தது. இந்த நிலையில் தங்களின் கொள்கைகளை தொடரவும் தொடர்ந்து தங்களின் கொள்ளைகளை அனுமதிக்க யார் சிறந்தவரோ அவரையே மக்கள் முன் வலுவான மாற்றாக வைக்க முதல்முறையாக ஆளும் வரக்க அமைப்புகளான சி.ஐ.ஐ. மற்றும் பிக்கி (எப்.ஐ.சி.சி.ஐ) களம் இறங்கியுள்ளன. ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்களான 24 X 7 தொலைக் காட்சி ஊடகங்கள் அதனை நேரடியாக ஒளிபரப்புகின்றன.

ராகுல் Vs மோடி

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படும் ராகுல் காந்தி இந்திய தொழில்  கூட்டமைப்பிலும் (சி.ஐ.ஐ) அதற்கு பதிலடியாக மோடி பிக்கி இந்திய தொழில் வர்த்தக அமைப்பின் மேடையிலும் தங்களது பிரதமர் வேட்பாளர் பேச்சை துவங்கியுள்ளதாக ஊடகங்கள் கூத்தாடுகின்றன. இவர்கள் இரண்டு பேரும் கனவுகளை விற்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தக் கனவுகள் மூலம் மக்களை தேனாறும் பாலாறும் ஓடும் கற்பனை தேசத்திற்கு அழைத்து செல்ல இருவரும் முயற்சிக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பட்டு வேட்டி பற்றிய கனாவில் கட்டியிருந்த கோவணமும் பறிபோய் விட்டது என்ற நிலைமை வரக்கூடாது என்று ஆம் ஆத்மி இந்தியன் நினைக்கிறான்.

மக்களின் தேவைகள் அவரகளின் நிஜவாழ்க்கையின் நிலைமைகள் மாற வேண்டும் என்பதுதான். பல நேரம் கனவு பயங்கரக் கனவாக முடியும் என்று பீப்பிள்ஸ் டிமாக்ரசி தலையங்கம் எச்சரிக்கிறது.

மோடி ஒரு பாசிசவாதி:

பாசிசத்தின் தன்மை பற்றி பிரபல இடது அறிவுஜீவி பிரபாத் பட்நாயக் சில வரையரைகளை தருகிறார்.

பாசிசத்தின் தன்மை:

பாசிசம் இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டது. ஒன்று அதன் வர்க்கத் தன்மை,  இரண்டு அதன் வெகுஜனத் தன்மை. அதன் வர்க்கத் தன்மை குட்டி பூர்ஷ்வா இயக்கமாக ஆரம்பித்து பின்னர் அது ஏகபோகங்களோடு ஐக்கியமாகி, அதன் வக்கிலாக மாறிவிடும். அதன் வெகுஜனத் தன்மை அதிதீவிர தேசீய வாதம், இன அல்லது மத வாதம் இவைகளின் அடிப்படையில் பெரும்பான்மையைப் பிரேயாகித்து அந்த சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும் சிறுபான்மை சமூகமே காரணம் என்று பெரும்பான்மை அரசியலில் நிலை கொள்ளும். சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பாசிசவாதி கூட பிரதமர் பதவிக்கு முன்னிருத்தப்பட வில்லை.

பொதுவாக குஜராத்தில் பி.ஜே.பி.யும் குறிப்பாக மோடியும் வியாபர வர்க்கத்தின் துணையுடன் அவர்களின் பிரநிதிப்படுத்திய இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று கார்ப்பரேட்களின் வெறி கொண்ட வக்கீலாக மாறியுள்ளதைக் காண்கிறோம். இன்று குஜராத் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கத் தாம்பாலத்தில் அனைத்து சலுகைகளையும் அள்ளி வழங்கும் காமதேனு மாநிலமாகும். டாட்டா நேனோ நிறுவனத்திற்கு குஜராத் விவசாயப் பல்கலைக் கழகத்தின் 20,000 ஏக்கர் நிலத்தை தானமாக அள்ளிக் கொடுத்ததை நினைவில் கொள்ளவும்.  இன்று பிக்கி மேடையில் கார்ப்பரேட் துணையுடன் தன்னை இந்த நாட்டின் பிரதம வேட்பாளராக முன்னிருத்துகிறார். நவீன தாரளமயக் கொள்கைகளை இன்னமும் தீவிரமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு இணங்க செயல்படுத்த வேண்டும் என்று வாதாடுகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் இரயில்வேயை தனியார்மயம், பாதுகாப்புத் துறையில் தனியார்மயம், நாட்டின் கேந்திரமான அனைத்து துறைகளையும் தனியார் மயம் என்று குரல் எழுப்புகிறார்.

சர்வதேச நிதி மூலதனத்தின் ஆசிகளைப் பெறவே அவர் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளை தாஜா செய்ய காரணம் போட்டு வித்தை காட்டுகிறார். நவீன தாராளமயத்தில் கொஞ்சம் கூட மனித முகத்துடன் இருப்பதாக பாவலா கூட செய்யத் தயராக இல்லை. இதற்கிடையே பெண்கள் பொருளாதார ரீதியில் தன்னுடைய காலில் நிற்க தனது அரசு தான்  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அதற்கு அவர் தரும் விளக்கம் சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் அதற்கு பத்திர பதிவு வரியிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் இதன் காரணமாக தனது அரசின் வருவாய் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர்). ஆனால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்பதை அளிக்க வில்லை என்பதை கவனிக்கவும். இதுவும் பாசிசத்தின் ஒரு தன்மையே.

குஜராத் உண்மை நிலை:

பொதுவாக வலதுசாரி சார்புடைய இந்திய ஊடகங்கள் சமீப காலமாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரம் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒளிர்கிறது என்றும் குஜராத் வளர்ச்சி மாதிரியை இந்தியாவெங்கும் நீட்டிக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மோடியும் அதனை செய்கிறார். இந்தியாவின் திட்டமிட்ட வளர்ச்சியை அவர் பிக்கி கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து தனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அவர் அதன் பெயரில் உள்ள மகாத்மா என்பதை நீக்க வேண்டும் என்ற கோரி தனது இந்துத்வா வெறித் தன்மையை வெளிப்படுத்துகிறார். உண்மையில் குஜராத் ஒளிர்கிறதா? புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம். இந்த புள்ளி விவரங்களை எள்ளி நகையாடுகிறார் என்பது வேறு விஷயம்.

விவசாயிகளுக்கு எதிரானவர்:

தனது அரசின் சாதனையாக கடந்த மிகக் குறைந்த காலத்தில் விவசாயக் கால்வாய் வெட்டியதாக மாரதட்டுகிறார் மோடி. உண்மையில் ஊடகங்கள் மறைத்த மிகப் பெரிய கொடூரம் அங்கு 2003- முதல் 2007 வரை சவுராஷ்ட்ரா பகுதியில் 489 விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர் என்ற விவரத்தை மறைத்ததுதான். இந்த புள்ளி விவரங்களை அரசு மறைத்த வைத்திருந்தது. ஊடகங்களும் அமைதி காத்தன. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தகவலறியும் சட்டத்தின் துணை கொண்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அது அசாதாரண இறப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

2007-லிருந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது இந்த இறப்புகளுக்கு காரணமாகும். மிகவும் ஔ மயமான குஜராத்தில் பல விவசாயிகள் தாங்கள் வாங்கிய 50,000-70,000 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. இங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசு அதிகாரிகளோ அல்லது ஆளும் அரசியல் பிரமுகரகளோ எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. இந்தப் போக்கை எதிரத்து பா.ஜ.க.வின் கன்னுபாய் கன்சாரியா கண்டனக் குரலெழுப்ப அவரை மோடி கட்சியை விட்டே துரத்தி அடித்தார். கிராமப்புறத்தில் மொத்தம் 10 மணி நேரம் கூட மின்சாரம் கிடையாது. அதிலும் 6 மணி நேரம் இரவு நேரத்தில்தான் வழங்கப்படும். 26.25 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்தில் உள்ளது. அரசின் கவனமின்மை காரணமாக உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வருகிறது.

பருத்தி உற்பத்தி

ஆண்டு

உற்பத்தி (ஹெக்டேருக்கு)

2007-08

775 கி.கி

2008-09

650 கி.கி

2009-10

635 கி.கி

2011-12

611 கி.கி

ஆதாராம்: காட்டன் அட்வைசரி போரடு

குஜராத் அரசு மோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தின் வருவாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதன் விளைவாக விவசாயம் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆண்டு தோறும் 12 மில்லியன் பேல் பஞ்சு உற்பத்தி செய்யும் குஜராத் இந்த ஆண்டு வெறும் 7 மில்லியன் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. விவசாய நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. அன்னிய மூலதனம்:

தொடர்ந்து ஊடகங்கள் ஊதிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சாரம் நமது நாட்டிலேயே அன்னிய முதலீடும் மூலதனமும் குவியும் முதல் மாநிலம் குஜராத் என்பதாகும். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை உள்ள கிட்டதட்ட 12 வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது. குஜராத் முதல் இடத்திலும் இல்லை முதல் மூன்று இடத்திலும் இல்லை என்பதை கீழே கண்ட அட்டவணை அம்பலப்படுத்தும். மகாராஷ்ட்ராதான் இந்தியாவில்  முதல் மாநிலமாகும். தமிழ்நாடு கூட குஜராத்தை விட முன்னனியில் உள்ளது.

அன்னிய நேரடி மூலதனம் ஏப் 2000- ஜூன் 2012 வரை (ரூ கோடியில்)

மகராஷ்ட்ரா

254624

டெல்லி

155722

கர்னாடகா

45021

தமிழ்நாடு

40297

குஜராத்

36913

வைப்பரண்ட் குஜராத்:

ரஜினி பாணியில் சொன்னால் குஜராத் என்றாலே சும்மா அதிருதில்ல என்ற பெயரில் ஆண்டு தோறும் மிகவும் படோடோபமாக விளம்பரப்படுத்தப்படும் விழா குஜராத்தில் அந்த விழாவின் மூலமாக அன்னிய மூலதனம் திரட்டப்படுவதாக தம்பட்டம் அடிக்கிறது. இதிலும் எவ்வுளவு பொய் புரட்டு என்பது புள்ளி விவரத்தை பார்த்தலே தெரியும். குஜராத் அரசின் சமூக பொருளாதார அறிக்கை 2011 வெளியிடும் புள்ளி விவரமே மிகவும் சுவாரசியத் தகவல்களை தருகிறது. 2011-ல் முதலீடு செய்யப்படும் தொகை என்று அறிவிக்கப்பட்டது 20 லட்சம் கோடி ருபாய். ஆனால் உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகை வெறும் ரூ.29,813 கோடி மட்டுமே. அந்த ஆண்டிலேயே கையெழுத்தான மொத்த 8,300 புரிதல் ஒப்பந்தங்களில் வெறும் 250 மட்டுமே அமலாகியது. குஜராத் வளரச்சி மாடல்  தொழிற்சாலை விரிவாக்கத்தின் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த அணுகுமுறை வெற்றிபெற வேண்டுமானால் அரசு தனியார் மூலதனத்தை பெறுவது அவசியமாகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வைப்பரண்ட் குஜராத் மாநாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீடும் உண்மையில் செய்யப்பட்ட முதலீட்டையும் பார்த்தாலே முதலீட்டாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியும் முதலீடுகளை விட அதிகமாக வாக்குறுதி அளிப்பது தெரியும்.

வைப்பரண்ட் குஜராத் சம்மேளன் மூலம் திரட்டப்பட்ட நிதி (ரூ கோடியில்)

ஆண்டு

வாக்குறுதி

நிறைவேற்றப்பட்டது

2003

66068

37746

2005

106160

37939

2007

465309

107897

2009

1239562

104590

2011

2083049

29813

தனிநபர் வருமானம்:

குஜராத்தில் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அங்கு ஜி.டி.பி. வளர்ச்சி என்பது மிகவும் அதிகம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆகவே பொது மக்கள் அங்கு தனிநபர் வருமானம் மிகவும் என்று நினைக்கத் தூண்டப்படுகின்றனர். ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. தனிநபர் வருமானத்தில் குஜராத் முதல் 5 இடங்களில் கூட கிடையாது. டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இது மக்களின் உண்மையான வருமானத்தை கணக்கிட சரியான அளவில்லை என இடதுசாரிகளின் கருத்து முற்றிலும் உண்மை என்றாலும் முதலாளித்துவக் கணக்குப்படியே கூட குஜராத் கதை வேறாகத்தான் உள்ளது.

தனிநபர் வருமானம் 2010-11   (ரூபாயில் வருடத்திற்கு)

டெல்லி

108876

மகாராஷ்ட்ரா

62729

கோவா

102844

ஹரியானா

59221

சண்டிகர்

99487

அந்தமான்

54765

பாண்டி

79333

குஜராத்

52708

ஆதாரம்: திட்ட கமிஷன்
தொழிலாளர் ஊதியத்தில் நிலைமை:

தனிநபர் வருமானம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையில் அங்கு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை ஒரு அளவு கோளாக எடுத்துப் பார்த்தாலும் மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் முழுவதும் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிரந்தரமற்ற தினக் கூலிகளை வைத்தே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு தொழிலாளர்கள் ஊதியம் பணி நிலைமைகள் போன்றவற்றிற்கு சங்கம் அமைத்து கோரிக்கை வைப்பது கிட்டதட்ட முடியாது என்பதே நிலைமை. அதற்கு முக்கிய காரணம் பணிகளில் பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் அங்கு ஆண்டுக் கணக்காக பதலிகளாக தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். இந்நிலையில் மிக அதிகமான ஜி.டி.பி. உள்ள மாநிலத்தில் தொழிலாளர்கள் கூலி மிகக் குறைவாகும். அது நகர்ப்புற தொழிலாளர்கள் கூலி நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம்.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசீய மாதிரி சர்வேயின் புள்ளி விவரப்படி அங்கு நாளொன்றுக்கு கூலி ரூ.218/- குஜராத்திலோ நகரப்புறத்தில் ஒரு நாள் கூலி வெறும் ரூ.106/- தான். கிராமப்புறத்திலும் ஒரு நாள் கூலி இந்தியாவிலேயே அதிகம் பஞ்சாப்பில் தான். இங்கு ஒரு நாள் கூலி ரூ.152/- குஜராத் நாட்டில் 12 வது இடத்தில் உள்ளது அங்கு ஒரு நாள் கூலி (கிராமப்புறத்தில்) வெறும் ரூ.83/- ஆகும். மிக அதிக ஜி.டி.பி. மிகக் குறைந்த ஒரு நாள் ஊதியம் என்பது சுரண்டலின் அளவைக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு விகிதம்

தொழில்துறையில் மிகவும் அதிகமான வளர்ச்சி அடைந்தால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமே. ஆனால் வேலை வாய்ப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த வளர்ச்சியும் இன்றி குஜராத் இருந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள வளர்ச்சி நிலங்களை விவசாயம் செய்யாமல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் தற்போது நிதி இருந்தாலும் மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இது இட்டு செல்கிறது. வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடங்களை தங்கள் வீட்டுப் பெண்களின் பெயரில் பதிவு செய்தால் பத்திரப் பதிவு கட்டணமும் கிடையாது. மோடியின் வர்க்க அரசியல் செயல்படும் விதம் இதுதான். குழந்தைகள் ஊட்டச்சத்து  மிக மோசமான மாநிலங்களில் ஒன்று

தொழிலாளர்களின் குறைவான ஊதியம் மற்றும் மிக மோசமான வாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக மால்நியுட்ரிஷன் என அழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு தொழிலாளர்களிடமும் அவர்தம் குழந்தைகளிடமும் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகள் 2012 புள்ளவிவர மதிப்பீடு என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.

  1. இந்த அறிக்கையின் படி குஜராத்தில் 40 முதல் 50 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது. இது ஒன்றே குஜராத் வளரச்சி என்ற மாயையை வெடித்து சிதற வைக்க போதுமானது. இவ்வாறான மிகக் குறைவான எடையுள்ள குழந்தைகள் மிக அதிகமாக உள்ள இதர மாநிலங்கள் மேகாலாயா, சட்டீஸ்கர், உ.பி. மற்றும் ஒடிசா. ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கை 2011 குஜராத்தில் கிட்டதட்ட பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எடை குறைவான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவான குழந்தைகள் மிகமிகக் குறைவாக உள்ள மாநிலம் மேகாலயா.
  2. இங்கு 19.9 சதவீதம் குழந்தைகள் எடைகுறைவாக உள்ளது. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடைகுறைவாக உள்ள மாநிலங்கள்: ம.பி.(60), ஜார்க்கண்ட்(56) மற்றும் பீகார் (55.9)
  3. 40 சதவீதத்திற்கு மேல் 50 சதவீதத்திற்குள் உள்ள மாநிலங்கள்: குஜராத் மேகாலயா சட்டீஸ்கர உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா. (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் -மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தை இறப்பு விகிதம்:

குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் விகிதத்தின் அடிப்படையிலான பட்டியலில் குஜராத் 11-வது இடத்தில் தான் உள்ளது. அதாவது 1,000 குழந்தைகள் பிறப்பிற்கு 44 குழந்தைகள் இறக்கின்றன. கிராமப்புறத்தில் மிகக் குறைவான மருத்துவ வசதிகள் உள்ள நிலையில் பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்டிருப்பதனால் இவர்களின் குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு யுனிசெஃப் நிறுவனம் மாநில வாரியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதல் குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இரண்டில் ஒன்று (ஐம்பது சதவீதம்) ஊட்ட சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டள்ளன.  குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டில் மிகவும் குறைவாகவே குறைந்துள்ளது… குஜராத்தில் மூன்றிலொரு தாய்மார்கள் மிக மிக குறைவான ஊட்டசத்துடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது.

குழந்தை இறப்பு விகிதம் (ஆயிரம் குழந்தைப் பிறப்பிற்கு) 2010

மத்திய பிரதேசம்

62

மேகலயா

55

உத்திரபிரதேசம்

61

சட்டீஸ்கர்

51

அஸ்ஸாம்

58

பீகார்

48

ராஜஸ்தான்

55

ஆந்திரா

46

மகராஷ்ட்ரா

55

ஹரியானா

48

குஜராத்

44

ஆதாரம்: (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் – மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தைகள் கல்வி:

ஆர்.எஸ்.எஸ். தனது நாசகார மதவெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் கேந்திரமான துறை கல்வித் துறையாகும். இருப்பினும் இங்கும் பாசிச மோடியின் கார்ப்பரேட் கலாச்சாரமே மேலோங்கி உள்ளது. உயர் கல்வியில் அன்னியப் பல்கலைக் கழகங்களோடு பங்குதாரர்களாக செயல்பட வேண்டும் என்று மோடி தனது அரசின் கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளார். பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும்  நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (8-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அரசு தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தில் பயணிப்பதுதான்.

பள்ளிக் கல்வியில் தொடரும் ஆண்டுகள்

1

கேரளா

11.33

10

ஆந்திரா

9.66

2

ஹிமாச்சல் பிரதேசம்

11.05

11

பீகார்

9.58

3

தமிழ்நாடு

10.57

12

அஸ்ஸாம்

9.54

4

உத்தரகாண்ட்

10.23

13

சட்டீஸ்கர்

9.31

5

மகராஷ்ட்ரா

9.86

14

ராஜஸ்தான்

9.19

6

பஞ்சாப்

9.80

15

உத்திரபிரதேசம்

9.19

7

ஜார்கண்ட்

9.68

16

மத்திய பிரதேசம்

8.95

8

ஹரியானா

9.68

17

மே.வங்கம்

8.87

9

கர்னாடகா

9.75

18

குஜராத்

8.79

ஆதாரம் : யு.என்.டி.பி.

வறுமை ஒழிப்பில் ஒடிசாவைவிட பின்தங்கிய மாநிலம்

தேசீய மாதிரி கணக்கெடுப்பு 2004 முதல் 2010 ஆண்டு வரைக்கான காலக் கட்டத்தில் ஒடிசா மாநிலமே 20.2 சதவீதத்துடன் வறுமைக் குறைப்பு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தோ 8.6 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான ஜி.டி.பி வளரச்சியைக் கொண்டுள்ள மாநிலமாகும். கரிப் கல்யாண் மேளா என்பன போன்று மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக நடைபெற்றன என்றாலும் உண்மையில் வறுமை ஒழிப்பிற்கான கறாரான திட்டமிடல் ஏதுமில்லை.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையில் 2004-க்கும் 2010-க்கும் இடையே வீழ்ச்சி (சதவீதத்தில்)

மாநிலம்

சதவீதம்

மாகாராஷ்ட்ரா

13.7

தமிழ்நாடு

12.3

கர்னாடகா

9.7

ராஜஸ்தான்

9.6

குஜராத்

8.6

ஆந்திரா

8.5

ஆதாரம்: தேசீய மாதிரி கணக்கெடுப்பு இருப்பிடம்

குடிநீர் மற்றும் சுகாதாரம்:

குஜராத்தில் இருப்பிடம் உணவு துணி ஆகியவற்றின் விலை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் தேவைகளுக்காக செலவுகள் நாட்டிலேயே குஜராத் 8 வது இடத்தில் உள்ளது. குஜராத்தின் கிராமப்புறத்தில் 16.7 வீடுகள் பொது குழாய்களையே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத கிராமம் மிக அதிகமாக உள்ளது. அதே போன்று கிராமப்புறத்தில் 67 சதவீதம் பேர்களும் நகர்ப்புறத்தில் 69 சதவீதம் பேர்களும் பொது இடங்களையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றன.

மாசுக்கட்டுப்பாடு:

குஜராத்தில் ஒரு தொழில் செய்பவருக்கு அளிக்கப்படும் முழு சுதந்திரமே அவர் நிலம் நீர் காற்று என எதை வேண்டுமானாலும் தான் விரும்புகிறவரை மாசுபடுத்தலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது (புத்தகத்தில் இருந்தாலும் மோடியின் மாநிலத்தில் அவை எள்ளவும் பயன்படுத்தப்பட மாட்டாது). சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் ஆலங் துறைமுகத்தில் பிரான்சு தேசத்தின் விமானந்தாங்கி கப்பல் கிளமன்சு உடைப்பதற்காக வந்ததே ஞாபகம் உள்ளதா? அதனை தடுத்த நிறுத்த சமூக ஆர்வலர்கள்தான் முயன்றார்களே தவிர, கடைசி வரை குஜராத் அரசு அந்தக் கப்பலை உடைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. பொதுவாக நிலம், நீர், காற்று ஆகியவை எந்தளவுக்கு மாசுபட்டுள்ளது என்பதை அளக்க சி.இ.பி.ஐ (Comprehensive Environmental Pollution Index) பயன்படுத்தப்படுகிறது. இதில் 70 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அந்தப் பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாகும். இதன் அர்த்தம் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுவை அந்த நிலம் தானாக சரிசெய்யும் அளவைத் தாண்டிவிட்டது என்பதாகும். மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் புள்ளி விவரத்தின் படி குஜராத்தின் அங்கிலேஷ்வர் மற்றும் வேப்பி பகுதிகள் நாட்டின் மிக அதிகமான மாசுபட்ட 88 நகரங்களில் முதலிடங்களில் உள்ளன. அங்கிலேஷ்வர் பெற்றுள்ள குறியீட்டெண் 88.50. வெப்பி 88.09 புள்ளிகள் பெற்றுள்ளன. முதல் 88 நகரங்களில் 8 நகரங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதி நீண்ட காலமாக நிலக்கரி சுரங்கங்களால் மிகவும் மாசுபட்ட பகுதியாக அறியப்படும் பகுதியாகும். அந்தப் பகுதி 13 வது இடத்தில்தான் உள்ளது.

முடிவுரை:

மோடி முதல்வாரன பிறகு குஜராத்தில் நடைபெறும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார பரிசோதனைகள் இந்தியாவை ஒரு மதவாத பாசிச அரசிற்கான முன்னோட்டமாகும். இங்கு ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்று தொழில் வளர்ச்சி இருக்கும். ஜி.டி.பி. வளர்ச்சி இருக்கும் ஆனால் மனித வளர்ச்சி குறியீடு மிக மோசமாக இருக்கும். குஜராத்தின் மோசமான மனித வளர்ச்சிக் குறியீடுகளுக்கு அதன் சமூகப் பார்வையான மிக ஏழ்மையில் உள்ள தலித் பழங்குடியினர் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர்களை உதாசீனப்படுத்தும் போக்கின் நேரடி விளைவாகும். அவர்கள் பயன்படுத்தும் பொது கல்வி, சுகாதாரம் மருத்துவம், வேலைவாய்ப்பு உரிமை, குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றில் அரசு விலகிவருவதனால் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரன்ட்லைன் மார்ச் 8 2013 வந்த கட்டுரைகளை தழுவி எழுதியது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: