மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வெனிசுலா தேர்தலும் – வர்க்கப் போராட்டமும்


உலகமே ஆவலோடு எதிர்பார்த்த வெனிசுலா நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஏப்ரல், 14, 2013 அன்று நடந்து முடிந்தது. இந்த உலகளாவிய ஆவல் டி.வி சீறியல் தொடரின் முடிவை அறிகிற ஆவல் ரகமல்ல! ஆவலில் ஒரு அதிசயம் அடங்கியிருந்தது. அமெரிக்கா உட்பட எல்லா உலக நாடு களிலும் மக்கள், இரு கூறாக நின்று எதிரும் புதிருமான தேர்தல் முடிவிற்கு ஆசைப்பட்டது தான் இந்த ஆவலில்லிருந்த அதிசயமாகும்.

அமெரிக்கா, ஜப்பான் முதல் இந்தியா வரை உள்ள மக்களில் பணக்கார பகுதியினர்  டெமாகிரட்டிக் யுனிட்டி ரவுண்ட் டேபிள் அணியின் வேட்பாளர் ஹென்றிக் கேப்பிரிலெஸ் ராடோன்ஸ்கி வெற்றி பெற வேண்டுமென ஆசைப்பட்டனர். அவர் நாட்டு மேட்டுக் குடியினரின் அந்தஸ்தை காட்டும் தாம் தூம் நுகர்விற்கு பலியாகும் பெரும் பகுதி ஏழை  மக்கள் கிரேட் பேட்டிரியாட் போல் என்ற அணியின் வேட்பாளர் நிக்கோலாஸ் மதுரோ என்பவர் வெற்றி பெற வேண்டுமென ஆசைப்பட்டனர். எப்படி இந்த உலகளாவிய ஆர்வம் ஏற்பட்டது என்பதை அறிய ஒருவர் சிரமப்பட வேண்டியதே இல்லை!  வெனிசுலா நாட்டு தேர்தலை ஒட்டி ஒபாமா அரசும், மேலை நாட்டு ஊடகங்களும் சாவேஸ் கொள்கைக்கு எதிராக உருவாக்கிய பரபரப்பு பிரச்சாரங்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டன. கேப்பிரிலெஸ்சிற்கு உலகளவில் பொருளும், விளம்பரமும் ஏராளமாக கிடைத்தன. மதுரோவிற்கு ஊடகங்களின் அவதூறுகள் குவிந்தன. ஆனால் ஏழை மக்களின் தார்மீக ஆதரவு குவிந்தன. வெனிசுலா நாட்டிற்கு யார் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று தீர்மானிப்பதில் உலகம் பிளவுபட்டது போலவே வெனிசுலா மக்களும் பிளவுபட்டு நின்றனர்.

கேப்பிரிலெஸ் ஜெயிக்கவில்லை என்றால் அதை கோல்மால் தேர்தலாக கருதி வெற்றி பெற்றவரை ஜனாதிபதியாக ஏற்ககூடாது என்று ஒபாமா அரசு தேர்தலுக்கு முன்னரே முடிவு எடுத்தது இப்பொழுது தெறிய வருகிறது. அதன் அடையாளமாக அமெரிக்க அரசு வாக்குப்பதிவு முறையை குறை கூறி மதுரோ வெற்றியை ஏற்க மறுத்து வருகிறது. கேப்பிரிலெஸ் அணியினர் தேர்தல் முடிவை ஏற்காமல் வெனிசுலாவை கலவர பூமியாக ஆக்கி  மதுரோவின் ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்னரோ, தேர்தல் நடந்து வாக்கு என்னுகிறவரை எந்தப் புகாரும் எதிர் அணியினரோ, அந்நிய நாட்டு பார்வையாளர் களோ பதிவு செய்யவில்லை. தேர்தல் ஆணையம் எதிர் கட்சிகள் பின்னர் கிளப்பிய குறைகளை ஆய்வு செய்து கோல்மால் எதுவும் நடக்கவில்லை என்று அறிவித்த பின்னரும் எதிர் அணியினர் வம்பு செய்வதிலே குறியாக இருக்கின்றனர். முன்காலத்தில் சிலி, நிகராகுவா நாடுகளில் மேட்டுக் குடியினரின் உதவியோடு அமெரிக்காவின் செல்வாக்கை நீடிக்க எடுத்த யுக்திகள் இங்கே அரங்கேற்றபடுகின்றன.

2012 அக்டோபரில் நடந்த தேர்தலில் சாவேசை எதிர்த்து போட்டியிட்ட  இதே கேப்பிரிலெஸ் விட 10 சத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரலில் நடந்த தேர்தலில் அவரது கட்சியின் வேட்பாளர் மதுரோ சுமார் ஒரு சத வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. புற்று நோயிக்கு ஆட்பட்ட சவேசின் அகால மரணம் அணுதாப அலைகளை அடிக்க வைத்து. முன்னை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட வைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்த மயிரிழை வித்தியாசத்தில் பெற்ற வெற்றி அதிர்ச்சியை கொடுத்தது. 2006-ல் நடந்த தேர்தலில் சவேஸ் 15 சத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வாக்குகளை அடுத்த தேர்தலில் சவேசால் கூட பெற முடியவில்லை. இதை விளக்குவது எப்படி?

மிகுயெல் டிங்கர் ஸ்லாஸ் என்ற அமெரிக்க போராசிரியர் லத்தீன் அமெரிக்க வரலாற்றையும் அரசியலையும் ஆய்வு செய்பவர். ஒரு கருத்தைக் கூறி நம்மை சிந்திக்க தூண்டுகிறார்.

அமெரிக்காவின் ஆளும் வாட்டாரம் எல்லா வகையான உதவிகளையும் கையூட்டாக கொடுத்தே சாவேஸ் கட்சியினரை  எதிர்க்க கேப்பிரிலெஸ்சை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

நான் நினைக்கிறேன் மதுரோவையும் சவேசின் திட்டத்தையும் எதிர் அணி எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வெனிசுலாவில் எதிரணி அரசியலை கலக்குவதில் முன்னணியில் இருப்பதாக எப்பொழுதுமே நான் நம்புகிறவன். அவர்களுக்கு வெளியிலிருந்து உதவிகளும் கிடைக்கலாம். வெளியில் இருப்பவர்களிடம் ஆலோசனைகளும் பெறலாம், ஆதரவும் கிடைக்கலாம். ஆனால் எதிரணியினர் வெனிசுலா மண்ணின் தன்மையினர், வெனிசுலா பண்பாட்டினர்  என்பதே எதார்த்தம். அமெரிக்க நாட்டு ஏஜென்ட் என்ற தோற்றத்திற்கு அமெரிக்காவும் விடுவதில்லை. வெனிசுலா நாட்டு மத்தியதர வர்க்கப் பகுதியும் மேட்டுக் குடியினரும் சமூக மாற்றத்தால் தங்களது படாடோப வாழ்விற்கு இழப்பு ஏற்படக் கூடாது. தங்களது உயர்ந்த அந்தஸ்திற்கு தனி உரிமைக்கும் பங்கம் வராமல் சமூக மாற்றம் நிகழ வேண்டுமென விரும்புகிறார்கள். எண்ணையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் கிடைக்கிற வருவாயைக் கடந்த காலத்தில் அனுபவித்தது போல் அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். ஏற்றுமதி மூலம் வருகிற அந்த பணத்தில் 60 சதத்தை சமூக நலனுக்கு திருப்பிவிடும்  சாவேசின் கொள்கையை அந்த பிரிவினர் விரும்பவில்லை. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று கருதுகிறார்கள். அமெரிக்காவின் ஆப்த நண்பனாக இருக்கவே ஆசைப்படுகின்றனர். அங்கே அமெரிக்கா நேரடியாக இருப்பதாக நான் கருதவில்லை, வெனிசுலா நாட்டு மேட்டுக் குடியினர் அமெரிக்க  வாழ்வு முறையை ஆதர்சமாக கொள்கின்றனர். அமெரிக்காவின் விசுவாசமான நண்பனாக இருப்பது அவசியம் என்று கருதுகின்றனர். எண்ணையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடாக வெனிசுலா இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மேட்டுக் குடியினர் மனதில் அமெரிக்கா குடியிருக்கிறது என்ற வகையில் அங்கே அமெரிக்க இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

பேராசிரியர் கூறுவதை வைத்து வெனிசுலா தேர்தலை வர்க்க போராட்டமாக பார்க்கும் பொழுதுதான் வாக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும். இயந்திரத்தனமான முறையில் வர்க்கப் போராட்டத்தை புரிந்தாலும் வாக்குச் சரிவை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். வெனிசுலாவில் மேட்டுக் குடியினரும் மேட்டுக்குடி சித்தாந்த பிடிப்பில் இருக்கும் ஏழைகளும் கூட எதிரணிக்கு வாக்களித்தனர். அந்த மக்கள் சுரண்டும் வர்க்க சித்தாந்த பிடியிலிருந்து விடுபட வேண்டும். நிகராகுவாவில் 90-களில் அந்த பக்கம் போனவர்கள் சமீபத்தில்தான் அமெரிக்க பாணியிலிருந்து விடுபட்டு மீண்டும் பாட்டாளி வர்க்க சித்தாந்த அணுகுமுறையே ஏழைகளுக்கு உகந்தது என்று டேனியல் ஓர்டேகாவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலையும் வர்க்கப் போராட்டக் களமாக பார்க்கும் பொழுதுதான் உண்மைகள் புலப்படும்.

வெனிசுலாவில் வறுமை, அறியாமை , உணவுத் தட்டுப்பாடு, கிரிமினல் குற்றங்கள் மலிந்து கிடந்தன. சாவேஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே, இவைகள் குறையத் தொடங்கின. நில சீர்திருத்தத்தால் விவசாயிகளிடையே இருந்த வறுமை அகன்று வருகிறது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி மூலம் உணவுத் தட்டுப்பாட்டை அரசு சாமாளித்து வருகிறது. இதனால் மேட்டுக்குடியினர் நுகரும் அமெரிக்க நுகர் பொருள்கள் கடையிலே கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நுகர்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சில்லறை வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் பிரேசில், அர்ஜெண்டினாவிலிருந்து இறக்குமதியாகும் இறைச்சி முதல் இதர உணவுப் பொருட்கள் வரை அரசு கடைகளிலும் தனியார் சில்லறை கடைகளிலும்  கிடைக்கின்றன. வெனிசுலா நாட்டின் 30 மாநிலங்களில். 7 மாநிலங்களில் தான் அமெரிக்கா ஆதரிக்கும் அணிக்கு  சற்று கூடுதல் வாக்கு மற்ற இடங்களில் மதுரோவே முன்னணி. மக்கள் தங்கள் கையில் அதிகாரமிருப்பதை சமீபத்தில் தான் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த வெற்றியை தோல்வியாக்க சிறுமைப்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு காரணம், வெனிசுலாவில்   சவேஸ் கட்சியின் வெற்றி அமெரிக்காவும் மேலை நாடுகளும் திணிக்கும் தாராளமயத்திற்கு கொடுக்கப்பட்ட முதல் அடியாகும். வர்க்கப் போராட்டத்தில் சுரண்டும் வர்க்க கருத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கும் இதர வர்க்கப் பிரிவினரை விடுவிக்கும் சித்தாந்தப் போரின் முக்கியத்துவத்தை உணரவைக்கும் வெற்றியாகும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: