அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!


மார்க்ஸ்-எங்கல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் – டேவிட் ரியாஜெனோவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்.

இந்த புத்தகத்தின் தலைப்பு ஈர்ப்பாக இல்லை என்ற எண்ணமும் தலைப்பிற்கும் புத்தகத்தின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை என்ற கருத்தும் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் எண்ணற்ற படைப்புகளும் அவர்களை பற்றிய ஏராளமான புத்தகங்களும் வெளிவந்துவிட்ட சூழலில் இந்த சின்ன புத்தகத்தில் அப்படி என்ன இருந்து விடப்போகிறது என்ற குறை மதிப்பீட்டோடு உள்ளே நுழைந்தால்….. வெளியே வரமுடியாத அளவுக்கு மாறுபட்ட கோணத்திலும் ரத்தின சுருக்கமான விளக்கமும், தமிழ் வாசகர்கள் இதுவரை அறிந்திராத புதிய தகவல்களையும் புத்தகத்தின் ஆசிரியர் கொடுத்துள்ளார் சில பக்கங்களில் பல நூற்றாண்டுகளின் வரலாற்றையும் சில வரிகளில் பல நூல்களையும் சில வார்த்தைகளில் பல சம்பவங்களையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார்.

Engels“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான். புதிதாக சாதனை ஒன்றை ஒருவாக்கும் எந்த மேதையும் அதை தனக்கு முன்னால் அடையப்பெற்ற சாதனைகளை அடிப்டையாகக் கொண்டே உருவாக்குகிறான். சூன்யத்திலிருந்து அவன் உதிப்பதில்லை. எனவே, மார்க்சை புரிந்து கொள்ள முதலில் அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றின் பின்புலத்தையும், அது அவர் மீது செலுத்திய தாக்கத்தையும் ஆராய முற்படுவோம்”.

உருவாக்கம்

இருவரும் ஐரோப்பாவின் 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்த வேகமான நிகழ்வுகளின் தாக்கத்திற்கு உட்பட்டனர். மார்க்ஸ், எங்கேல்ஸ் இருவரும் சமூக உணர்வு மிக்க இளைஞர்களாக உருவாகும் முன்பே மாபெரும் பிரெஞ்சு புரட்சியும், பிரம்மாண்ட தொழில் புரட்சியும் நடந்து முடிந்திருந்தது. 1830 களில் பிரெஞ்சு நாட்டில் துவங்கிய புரட்சி கிழக்கிலிருந்து மேற்கு வரை தீவிரமாக பரவியதுடன் ரஷ்யா மற்றும் போலந்தையும் எழுச்சி கொள்ளச் செய்தது. இக்காலத்தில்…

  • முதலாளித்துவ நாடாக இங்கிலாந்தின் வளர்ச்சி,
  • உருவாகி பெருகிவந்த தொழிலாளி வர்க்கம்,
  • இயந்திரமயமாகி வந்த கைவினை கூடங்கள்,
  • விசைத்தறி, நீராவி என நாட்களும் மாதங்களும் கண்டுபிடிப்புகளின் கைவசமாகின,
  • பிரெஞ்சு தனியாத அரசியல் தாக்கம்,
  • இயந்திர அழிப்பு இயக்கமான லுத்திட்டுகள் துவங்கி சாசன இயக்கம், தொழிலாளர் கல்விக்குழு என பல அமைப்புகளின் தோற்றம்.

என பொங்கி எழுந்த புரட்சிகரமான புறச் சூழலை உள்வாங்கி எதிர் வினையாற்றியதன் விளைவே மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரு மேதைகள் என்பதை அழுத்தமாக பதிய வைத்துள்ளார்.

இரு சூழல், இரு பாதை, ஒரு முடிவு

இருவரின் எழுத்துக்களில் மதம் சார்ந்த விசயங்களில் எங்கெல்ஸ் கூடுதலாக பங்களித்திருப்பார். அதற்கான புறக்காரணம் எது என்பதை கோடிட்டு காட்டுகிறார் ஆசிரியர். மார்க்சின் குடும்பம் பிரெஞ்சு நாட்டின் பொருள்முதல்வாத தத்துவ ஞானிகளின் செல்வாக்கிற்கு ஆளான குடும்பம். மார்க்சின் தந்தை ஹென்ரிச் மார்க்ஸ் புத்தகங்களைத்தான் படித்ததுடன் தனது மகனையும் படிக்கத் தூண்டினார். இவர் யூதமத்தில் இருந்தார் என்பதை காட்டிக் கொண்டாலும், அதனுடன் இருந்த தொடர்புகளை அறுத்தெறிந்து 1824-ல் கிறித்துவ மதத்தைத் தழுவினார். காரணம் அன்றைக்கு ஜெர்மனியில் இருந்த யூத எதிர்ப்புதான். ஆனால் எங்கெல்ஸ் குடும்பமோ இதிலிருந்து மாறுபட்டிருந்தது. இவரது தந்தை கிருத்துவ மதப்பிடிப்பு நிறைந்த புனிதத் தன்மை வாய்ந்த சூழலில் எங்கெல்ஸ் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை சொந்த வாழ்வில் தீவிர மதப்பற்று உள்ளவர். அதேநேரத்தில் தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டார். புற உலகில் உருவான புதிய கருத்துக்களை எங்கெல்ஸ் உள்வாங்கிய போது தந்தைக்கும் மகனுக்குமான உறவு மோதலாக மாறியது.

இந்த வேறுபாடுகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பிற்கால எழுத்துக்களிலும் காணப்பட்டது. மதம் சார்ந்து எழுப்பப்பட்ட பல பிரச்சனைகள் காரல் மார்க்சை பெரியதாக பாதித்ததில்லை. ஆனால் ஏங்கெல்சிற்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மதத்திற்கு எதிராக இடைவிடாத பகிரங்கப் போர் செய்ய வேண்டுமென்று எங்கெல்ஸ் எழுதி வந்தார். இது இவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் மட்டுமல்ல இதே போன்ற கருத்து மோதல்கள் பரவலாக சமூகத்தில் இருந்தது. பிற்காலத்தில் அனுபவ ஆய்வு மூலமாக இருவருமே மதம் பற்றி ஒரே கருத்துக்கு வந்தனர்.

அமைப்பாளர்கள்

மார்க்சும், எங்கெல்சும் இருவருமே ஆய்வாளர்கள், தத்துவஞானிகள், நூலகங்களுக்குள்ளும், நூல்களுக்குள்ளும் வாழ்ந்தவர்கள் என்ற புனைவுகள் பூர்ஷ்வா வர்க்கத்தால் எழுப்பப்பட்டது. அவர்கள் பொது களப்பணியாளர்கள், புரட்சியாளர்கள் என்பது ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இவர்கள் இருவரும் ஸ்தாபன அமைப்பாளர்கள் என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக புதிய தகவல்களுடன் நிலை நிறுத்தியுள்ளார் ஆசிரியர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இதற்கு உதாரணமாக முன்வைக்கிறார். நம்மிடம் வேறுபல உண்மை தகவல்களும் உள்ளன. இவைகள் மேற்கூறிய விசயங்களுடன் ஒத்துப்போகாத தகவல்களாக உள்ளன. மார்சும், ஏங்கெல்சும் ஸ்டெக்லோ நிறுவ முயற்சி செய்வது போல் பெறும் கருத்தியல்வாதிகள் மட்டுமல்ல, நடப்பில் உள்ள சமூக ஒழுங்கில் கொண்டுவரப்பட வேண்டிய தேவையான புரட்சிகர மாற்றங்கள் உழைக்கும் வர்க்கத்தையேநம்பி உள்ளது என்ற முடிவுக்கு வந்தவுடன். மார்க்ஸ் தொழிலாளர் மத்தியில் செயல்பட சென்றுவிட்டார். எங்கெல்லாம் தொழிலாளர்கள் மாறுபட்ட தாக்கங்களுக்கு உள்ளாகினரோ அங்கெல்லாம் அப்படிப்பட்ட இடங்களிலும் அமைப்புகளிலும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் ஆழமாக புகுந்துவிட முயற்சி செய்தனர்.

லண்டன், பாரீஸ், ஜெர்மன், பிரெஸ்ஸெல்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் இருவரும் தொழிலாளர் அமைப்புகளை உருவாக்கினர். அவர்களிடையே இருந்த பலவிதமான கருத்தோட்டங்களை வெற்றி கொண்டே இப்பணிகளை செய்தனர். எனவே, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதுவதற்கு காலதாமாதம் ஏற்பட்டதை கம்யூனிஸ்ட் லீக்கின் தலைவர்கள் மார்க்சிடம் எழுத்துப்பூர்வமாக சுட்டிக்காட்டி காலவரையறையும் தீர்மானித்தனர். மேலும் ஒரு உதாரணமாக முதலாவது அகிலம் என்ற அமைப்பை உருவாக்கும் சிந்தனையும், அதற்கான சிந்தாந்தமும், அதைவிட மிக கடினமான பணியாகிய அமைப்புச் சட்டத்தை இவ்விருவர்களும் உருவாக்கியது இவர்கள் சிறந்த அமைப்பாளர் கள் என்பதை நிலைநாட்டுகிறார் ஆசிரியர்.

தத்துவ தர்க்கத்திலிருந்து விஞ்ஞான கம்யூனிசத்திற்கு

புரட்சிகர புறச்சூழலில் போராட்ட களத்திலும், தொழிலாளர் மத்தியிலும் எதிர் வினை யாற்றி அரசியல், ஸ்தாபன விசயங்களை உள்வாங்கினரோ அதேபோல் அக்காலத்தில் நடைபெற்ற தத்துவார்த்த ரீதியிலான தர்க்கங்களில் தங்களை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி மிகப்பெரிய அறிவு கருவூலத்தை பெற்றனர். இம்மானுவேல் கான்ட் தத்துவத்தில் இரட்டை பாதை நடைபோட்டார். அதாவது கடவுள் இல்லை என்று வாதிடுவார். நடைமுறைக்கு கடவுள் தேவை என்றும் வாதிடுவார்.  சொர்க்கத்திற்குள் புயல் போல்நுழைந்து அதன் படைகளை தன் வாள் வீச்சால் வெட்டி சாய்ப்பார். உலகை ஆளும் கடவுள் தனது ரத்தத்திலேயே உணர்ச்சியற்று நீந்தி கொண்டிருந்தார். அழிவற்ற ஆன்மாவின் சாவு அதன் முன்னால் சத்தம் போட்டு கேவிக் கொண்டிருந்தது என்று மற்றவர்களால் வர்ணிக்கும் அளவிற்கு மதத்தை சாடிய காண்ட் நடைமுறை காரணம் கடவுள் இருப்பை உறுதி செய்யட்டும் என்ற கூறினார். இதுதான் அவரின் இரட்டை பாதை. அவரின் இந்த போக்கு இவர்கள் இருவராலும் புறந்தள்ளப்பட்டது.

ஹெகலின் தத்துவம் இவர்கள் இருவரையும் ஈர்த்தது. காரணம் அவரின் இயக்கவியல் ஆய்வு முறை. அண்டத்தை சரியாக புரிந்து கொள்ள அவை எவ்வாறு உள்ளதோ அதை அப்படியே ஆராய வேண்டுமென்பது மட்டுமல்ல. அவை எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதையும் ஆராய வேண்டுமென்றார். அண்ட விரிவாக்கம், இயக்கம், முரண்பாடு, வளர்ச்சி என எண்ணற்ற கோணங்களில் இவரது ஆய்வுகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரையும் ஈர்த்தது. தங்களது ஆசானின் படைப்புகளை ஆழமாக ஆய்வு செய்தபோது அதில் உள்ள தீவிரமான பலவீனங்களை கண்டு பிடித்தனர். கருத்தியலை முன்னிறுத்தி முழுமுதல் கருத்து என்பதில் ஹெகல் கொண்டு சென்று விட்டார் என்பதை உணர்ந்தனர். மறுபுறத்தில் லூத்விக் பயர்பாக் ஹெகலின் கருத்தை மறுத்து பொருள் தான் முதலில் இருந்தது என்பதை நிலைநிறுத்தினார். ஆனால் இயக்க மற்ற பொருளாகவே அதை பார்த்தார். கடவுள் மனிதனை படைக்கவில்லை, மனிதன் தான் கடவுளை படைத்தான் என்பதை நிலைநிறுத்தினார். மனிதனை அடிப்படை கொள்கையாக்கினார். மனிதன் இயற்கையின் படைப்பு என்று மட்டும் வரையறுப்பதை மார்க்ஸ் மறுத்தார். மனிதனுக்குள் நிகழும் மாற்றங்களும், மனிதனில் ஏற்படும் மாற்றங்களும் இயற்கை மனிதன் மீது செலுத்தும் ஆதிக்கம் மட்டுமல்ல மனிதன் இயற்கை மீது செலுத்தும் ஆதிக்கத்தின் விளைவுகளே மனிதன் என்று கண்டுபிடித்தார்.

மார்க்ஸ் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் வர்க்கம் என்பதை தத்துவார்த்த ரீதியாக சொல்லவில்லை. புறஉலகின் விதிகளிலிருந்தே இதை வரையறுத்தார். அதிலும் குறிப்பாக ஜெர்மானிய நிலைமைகளை கண்டறிந்தபோது பாட்டாளி வர்க்கம்தான் அங்கு நம்பிக்கைக்குரிய வர்க்கம் என்ற முடிவிற்கு வந்தார். இந்த வர்க்கம் தத்துவார்த்த அரசியல் விசயங்களை கைவர பெற்றுவிட்டால் ஓட்டுமொத்த விடுதலையும் மாறும் என்பதை தெரிவித்தார். இதையே பின்நாட்களில் மேலும் வளப்படுத்தினார். கற்பனாவாத சோசலிஷ்ட்டுகள் பாட்டாளி வர்க்கம் வறுமையிலும் துன்பத்திலும் வாடும் வர்க்கம், உயர்மட்ட மற்றும் பண்பாட்டில் உயர்ந்த வர்க்கத்தால் பராமரிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பரிதாப உணர்ச்சியோடு பார்த்தனர். ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கம் மிகவும் துன்பத்திற்கு உள்ளான வர்க்கமாக இருப்பதுடன், பூர்ஷவா சமூக ஒழுங்கை எதிர்த்து செயலூக்கத்துடன் போராடும் வர்க்கம் அதுதான் என்பதை முதலில் எடுத்துக்கூறியவர்கள் இவர்களே.

புரட்சி எப்போது?

1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பல தீர்க்கமான முடிவுகளை எழுதி இருந்தனர். இதற்கு காரணம் 1845 லிருந்து 47 வரை இருவரும் மேற்கொண்ட விஞ்ஞான பூர்வமான அனைத்து பணிகளின் முடிவுகளும்தான் இதில் இடம்பெற் றுள்ளன. கருத்து முதல்வாதத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்துடன் பொருள்முதல் வாதம் பற்றிய அறிவுக் கருவூலத்தையும் பெற்றனர். சொத்துடைமை சம்பந்தமாக புருதோனுடன்  நடத்திய வாதங்கள், புருதோனின் வறுமையின் தத்துவம் என்ற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை என்ற நூலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதுவதற்கு மிகப்பெரிய அளவிற்கு உதவி செய்தது. இதன் தொடர்ச்சியாக லஸ்ஸேல் உடன் நடத்திய விவாதங்கள், அவரின் கூட்டுறவு பற்றிய தவறான கருத்து, அனைவருக்குமான வாக்குரிமை மீது மாய மதிப்பீடு, தொழிற்சங்கம் பற்றிய அவநம்பிக்கை பார்வை ஆகியவற்றை எதிர்த்து மார்க்சின் தீர்க்கமான முடிவுகள் தொழிலாளி வர்க்கத்திற்கு பேராயுதமாக மாறியதை வலுவான முறையில் ஆசிரியர் பதியவைத்துள்ளார். மேற்கண்ட தத்துவ தர்க்கவியல் மூலமாகவே விஞ்ஞான கம்யூனிசத்திற்கு வந்தடைந்தனர் என்பதை அழுத்தமாக பதிய வைத்துள்ளார்.

1848-ம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தவுடன் மீண்டும் புரட்சியை உருவாக்க வேண்டுமென்று தொழிலாள தலைவர்கள் அனைவரும் விரும்பினர். மார்க்ஸ் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பினார். ஆனால் அவர் முதலாளித்து வத்தை ஆய்வு செய்தபோது நெருக்கடிகள்தான் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் கம்யூனிச குழுக்களில் இருந்த பலர், சில நபர்களும், தலைவர்களும் இணைந்து புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ் முடிவுகள்தான் வரலாற்றில் நடைந்தேறியது.

அதேபோல் தொலாளி வர்க்கத்திற்குள் சந்திக்கக்கூடிய நெருக்கடிகளையும் மார்க்ஸ் எவ்வாறு ஆய்வு செய்தார் என்பதை 1867 – 68 -ல் நடைபெற்ற நெருக்கடிகள் மூலமாக விவரிக்கின்றார். தொழிலாளர் மத்தியில், அமெரிக்க ஆஸ்திரேலிய குடியேற்றம், சாசன இயக்க எழுச்சியினை தொடர முடியாத நிலை கூட்டுறவு சொசைட்டியின் பால் தொழிலாளர்களை ஈர்த்தது, திறனற்ற தொழிலாளர் என்ற பிரிவுகள் போன்றவை எப்படி நெருக்கடிகளை உருவாக்கியது என்பதை விவரித்துள்ளார் ஆசிரியர்.

காரல் மார்க்சின் முற்போக்கான பூர்ஷ்வா வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்ததையும் பிற்காலத்தில் மார்க்ஸ் அதை மாற்றிக்கொண் டாலும் புத்தக ஆசிரியர் விமர்சனப் பார்வையுடன் அணுகியுள்ளார். எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சம்பந்தமாக 40 ஆண்டுகள் கழித்து எழுதிய குறிப்புகளில் நினைவலைகள் மாறி இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் உருவாக்கத்தை ஆதாரப்பூர்மாக எடுத் துரைக்கிறார்.

255 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அபராஜிதன் அபாரமான முறையில் மொழி பெயர்த்துள்ளார். பல புதிய சொற்பிரயோகங்களை பொருத்தமாக கையாண்டுள்ளார். வாசிப்பதற்கு தடையின்றி சரளமாக சென்று கொண்டிருக்கிறது.

புத்தகத்தின் கடைசி பத்தியுடன் இந்த மதிப்பீடை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

இந்த இரண்டு நண்பர்களும் கல்லினால் எழுப்பப்படும் எந்த நினைவுச்சின்னத்தை காட்டிலும் வலுவான நினைவு சின்னத்தை விட்டுச்சென்றுள்ளனர். எந்த கல்லறை வாசகத்தைக் காட்டிலும் சொல் வன்மைமிக்க எழுத்தை விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் நமக்காக விஞ்ஞான ஆய்வு முறை ஒன்றையும், புரட்சிகர உத்தி மற்றும் நடைமுறை தந்திரங்களுக்கான விதிகளையும் விட்டுச் சென்றுள்ளனர். அவை இன்னும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ள எதார்த்தத்தை ஆய்ந்து முழுவதும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆழம் காண முடியாத இருப்பிடமாக விளங்கி வருகிறது.

ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. சமு தாயம் என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பல கோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாக வுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.

சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளை சார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s