மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி!


அறிமுகம்

இந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது.

விடுதலைக்குப் பின் 1950-51 முதல் 1964-65 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 3.3  என்ற அளவில் அதி கரித்தது. ஓரளவு ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகை மற்றும் வார சாகுபடி தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் பாசனம், மின்சார உற்பத்தி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சார்ந்த துறைகளில் அரசு மேற்கொண்ட பொது முதலீடுகளும் இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. இந்த வளர்ச்சி பாசனப் பெருக்கத்தாலும் கூடுதல் நிலங்கள் சாகுபடிக்குள் கொண்டு வரப்பட்டதாலும் நிகழ்ந்தது. ஆனால் ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூல் பெருமளவிற்கு உயரவில்லை. பாசனம் மூலம் மட்டுமே சற்று அதிகரித்தது. மேலும் நில ஏகபோகம் தகர்க்கப்படவில்லை. மாறாக, உச்ச வரம்பு சட்டங்கள் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டன. இதனால், இந்த வேளாண் வளர்ச்சி நிலைத்த தன்மை பெற்றிருக்கவில்லை.

1966-ல், பருவ மழை பொய்த்த பின்னணியில் ஆகப்பெரிய உணவு நெருக்கடி வெடித்தது. அமெரிக்காவில் இருந்து தானியம் இறக்குமதி செய்து உணவு நெருக்கடியை சமாளிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இது இந்திய அரசின் அயலுறவுக் கொள்கைகளில் தலையிட வும் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்பு அளித்தது. உணவு உற்பத்தியை அதிகரிப்பது என்பது உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச் சினை மட்டும் அல்ல, நாட்டின் இறையாண்மை சம்மந்தப்பட்டதும் கூட என்பதை இந்த நெருக்கடி வெளிக் கொணர்ந்தது.

இந்த பின்புலத்தில்தான் ஆளும் வர்க்கங்கள் பசுமை புரட்சி கொள்கையை அமலாக்கினர். பசுமைப் புரட்சி என்பது தொழில் நுட்பம் மட்டும் அல்ல. தானிய உற்பத்தியைப் பெருக்கிட,  உயர் மகசூல் விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட ஒரு புதிய தொழில் நுட்பம், அதோடு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தானியங்களுக்கு குறைந்தபட்ச விலை உத்தர வாதம், அரசு கொள்முதல் ஏற்பாடு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பை வலுப்படுத்துதல், விரிவாக்கப் பணி அமைப்பினை வலுப்படுத்துதல், மான்ய விலையில் உரம் உள்ளிட்டடு பொருட் கள், சாகுபடிச் செலவுகளுக்கும் நவீன வேளாண் உற்பத்திக் கருவிகளை வாங்கவும், கிணறு, பம்பு செட்டில் முதலீடு செய்யவும் வங்கி/கூட்டுறவு கடன் என்று பல வகைகளில் அரசு முன் முயற்சிகளை மேற்கொண்டதும் சேர்ந்து தான் பசுமை புரட்சி கொள்கை என்பதாகும். பாசன வசதி பெற்ற நெல் மற்றும் கோதுமை சாகுபடி தான் இதில் பிரதானமாக பயன் அடைந்தது என்பது உண்மை.

எனவே, பயிர்கள், பகுதிகள், வர்க்கங்கள் என்ற மூன்று வகைகளிலும் பசுமை புரட்சி ஒரு பகுதி விவசாயிகளுக்கே கூடுதல் பயன் அளித்தது என்பதும் உண்மை. எனினும், சாகுபடி பரப்பளவு சிறிதளவே அதிகரிக்கும் என்ற நிலையில், பசுமை புரட்சி கொள்கைகள் 1960-களின் பிற்பகுதியில் இருந்து தானிய உற்பத்தியை பெருக்கவும் வேளாண் வளர்ச்சியை சாத்தியமாக்கவும் முக்கிய பங்கு ஆற்றின என்பது மறுக்க முடியாத உண்மை. 1965-66 முதல் 1974-75 வரை தானிய உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 3.4 சதவிகிதம் என்ற வேகத்திலும் வேளாண் உற்பத்தி 3.2 சதவிகிதம் என்ற வேகத்திலும் அதிகரித்தன. இந்த வளர்ச்சி மகசூல் உயர்வால் தான் பெரும் பகுதி சாத்தியம் ஆகியது. சாகுபடி பரப்பளவு சிறிதே அதிகரித்தது. 1969-ல் 14 தனியார் வணிக வங்கிகள் நாட்டு உடைமையாக்கப்பட்டன. மக்கள் அவையில் இடதுசாரிகள் ஆதரவு கிடைத்ததால் தான் இது சாத்தியம் ஆயிற்று. வேளாண்துறைக்கு நிறுவனக் கடன் கிடைக்க, வட்டி விகிதம் குறைய, இந்த நடவடிக்கை பெரிதும் உதவியது.

1970-களில் அரசு பாசன விரிவாக்கத்திலும் தொடர்ந்து முதலீடு செய்தது. வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விரிவாக்க அமைப்பு, மற்றும் தானியக் கொள்முதல் அமைப்பு ஆகியவை வலுப்பெற்றன. இத்தகைய கொள்கைகள் 1980 முதல் 1991 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் என்ற அளவிலும் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, முறையே ஆண்டு ஒன்றுக்கு 3.84 சதவிகிதம், 4.38 சதவிகிதம்  என்ற அளவிலும் அதிகரிக்க பெரிதும் உதவின.

சுருக்கமாகச் சொன்னால், காலனி ஆதிக்க காலத்தில் தேக்க நிலையில் இருந்த வேளாண் உற்பத்தி மதிப்பு 1950 முதல் 1990-களின் நடுப்பகுதி வரை சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 3 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்தது.  தாராளமயக் கொள்கைகளும் வேளாண்துறையும்

1991-ல் இருந்து தாராளமய, தனியார்மய கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. இந்தக் கொள்கை கள் வேளாண்மையும் விவசாயிகளும் இதர கிராமப்புற உழைக்கும் மக்களும் சந்தித்து வரும் கடும் நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம். தாராளமயக் கொள்கைகள் வேளாண்துறை மீது ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளைக் காண்போம்:

அன்னிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியே சென்று விடக் கூடாது, அதை இங் கேயே தக்க வைப்பதே அரசின் வரவு செலவு கொள்கைகளின் மைய நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தாராளமய, உலகமயக் கொள்கைகளின் அடிப்படை அம்சம். குறிப்பாக, இந்தக் கொள்கைகளின் படி, அரசு தனது வரவுகளுக்கு உட்பட்டே செலவு செய்ய வேண் டும். செல்வந்தர்கள், அந்நிய, இந்திய பெரும் கம்பெனிகள் மீது அவர்கள் ஊக்கம் குறையாது இருக்க குறைந்த வரி தான் போட வேண்டும். மக்களுக்குப் பயன் தரும் மானியங்களைக் குறைத்துத் தான் செலவை வரவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வேளாண் துறையில் இக்கொள்கை உரமானியத்தையும் இடுபொருள் மானியங்களையும் வெட்டிச் சாய்க்கிறது.

1991-ல் இருந்து உர விலை, எரிபொருள் விலை, போக்கு வரத்து கட்டணங்கள், டீசல் விலை, மின் கட்டணங்கள் போன்றவை தொடர்ந்து உயர்த் தப்படுவது  தொடர்கிறது. இடதுசாரிகள் நீங்க லாக, அனேக மாநில அரசுகளும் மத்திய அரசு பின்பற்றும் தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி-.2  அரக்கத் தனமாக செயல்பட்டுள்ளது. விவசாயிகளின் அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் தொடர் எதிர்ப்பையும் புறந்தள்ளி இடுபொருட்கள் விலைகளை தொடர்ந்து வேகமாக உயர்த்தி வருகிறது. இவ்வாறு இடுபொருட் செலவுகள் அதி கரித்து வரும் நிலையில், 1990-களின் பிற்பகுதியில் இருந்து, உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி இந்திய அரசு இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கி விட்டது. இறக்குமதி வரிகளையும் குறைவாகவே வைத்திருந்தது. இதே காலத்தில் பன்னாட்டு சந்தைகளில் வேளாண் பொருட்களின் விலைகள் சரிந்து கொண்டிருந் தன. இந்த இரண்டினாலும், இந்தியாவில் வேளாண் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதை ஆயிற்று  விவசாயிகளுக்கு. பின்னர் பன்னாட்டு சந்தைகளில் விலை உயர்ந்த பொழுதும் அதன் பலன் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை, மாறாக ஊக வணிகர்களுக்கும் வர்த்தக சூதாடி களுக்கும் சென்றது. விவசாயிகளுக்கு மிஞ்சியது விலைகளின் தாறுமாறான ஏற்ற இறக்கம் தான்.

மோசமான நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரை களில் துவங்கிய நிதித்துறை தாராளமயம் விவசாயிகளுக்கான கடன் வசதியை சுருக்கியது. வட்டி விகிதங்கள் உயர்ந்தன. கடன் அளவு சரிந்தது. வங்கிகள் அளிக்கும் கடன்கள் பற்றிய முடிவுகளில் அரசு தலையிடக் கூடாது என்றும் லாப நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 1990-களில் இருந்து 2005 வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கடன் கொள்கையில் சில மாற்றங்களை அரசு அறிவித்த போதிலும், சிறு குறு விவசாயிகள் நிறுவனக் கடன் வசதி பெறுவது கடினமாகவே உள்ளது. மறுபுறம் நகர்ப்புற செல்வந்தர்களுக்குக் கூட வேளாண் கடன் தரப்படுகிறது! கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 1969-ல் இருந்து 1991 வரை வேகமாக அதிகரித்த நிலைமை தலைகீழாக மாறி அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவை அளிக்கும் கடனும், பெரும்பாலான சாதாரண விவசாயிகளைப் பொருத்த வரையில் குறைந்து வருகிறது. விவசாயிகள் கந்து வட்டியில் மீண்டும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. (திருச்சி மாவட்டத்தில் நானும் வேறு சில ஆய்வாளர் களும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வில் இதைத் தெளிவாகக் காண முடிந்தது)

அரசின் செலவுகளை குறைக்கும் முகமாய் ஊரக வளர்ச்சிக்கான அரசு ஒதுக்கீடு 1991-க்குப் பிறகு தொடர்ந்து தேச உற்பத்தியின் சதவிகித அளவில் குறைந்து வருகின்றன. பொதுத்துறை முதலீடுகள் கணிசமாக வெட்டப்பட்டுள்ளது. இதனால், பாசன விரிவாக்கம் பழங்கதையாகிப் போனது. மின்சார உற்பத்தி வளர்ச்சி சுருங்கிப் போயிற்று. வேளாண்மைக்கான கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படவில்லை. வேளாண் விரிவாக்கப் பணி அமைப்பும் வலுவிழந்துள்ளது. அதேபோல், தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு அரசு முதலீடுகளைப் பெற இயலாமல் பன்னாட்டு வேளாண் பெரும் கம்பெனிகளை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உரம், பூச்சி மருந்து, விதை, வேளாண் கருவிகள், உற்பத்தி நடைமுறைகள் இவை அனைத்திலும் பன்னாட்டு வேளாண் பெரும் கம்பெனிகளின் ஆதிக்கம் வலுப் பெற்றுள்ளது. தாராளமயக் கொள்கைகள் விதை, உரம் போன்ற இடுபொருட்கள் தரம் குறித்தும் விலை குறித்தும் இருந்த ஒழுங்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும்  நீக்கி உள்ளதும் விவசாயிகளுக்குப் பெரும் கஷ்டங் களை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய-மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சிக் கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டது கிராமப்புற கிராக்கியையும் பாதித்துள்ளது. கிராமப் புறங்களில் மக்களின் வாங்கும் சக்தி வளராமல் தடுக்கப்பட்டுள்ளது. இதில் அண்மைக் காலங் களில் ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவை முறிப்பு ஏற்படுத்தி உள்ளதாக அரசு விளம்பரம் செய்து வருவது மிகவும் மிகையான மதிப்பீடு.

பெரும்பகுதி விவசாயிகள் சொந்த சாகுபடியால் மட்டுமே தங்களது உணவு தானியத் தேவையை சந்தித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. இந்த பின்புலத்தில், தாராளமயக் கொள்கைகளின் பகுதியாக 1997-ல் லக்குசார் பொது வினியோக அமைப்பு புகுத்தப்பட்டு, 2001-ல் தானிய வழங்கு விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டதும் ஊரக பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள அரசின் கொள்கை விளைவுகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 2,50,000-க்கும் அதிகமான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியுள்ளன. ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1984-85 முதல் 1994-95 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 4.1 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால் 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம்  என்று அதல பாதாளத்திற்கு சென்றது. பருத்தி நீங்கலாக, இதர அனைத்து முக்கிய பயிர்களின் உற்பத்தி வளர்ச்சியும் மகசூல் வளர்ச்சியும் 1980-1991 காலத்தில் இருந்ததை விட 1991-க்குப் பின்பான தாராளமய சீர்திருத்த காலத்தில் பெரிதும் குறைந்துள்ளன. இதை கீழ்க் காணும் அட்டவணைகளில் காணலாம்:

அட்டவணை 1 :

முக்கிய பயிர் வகைகளின் ஆண்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 1967-81, 1981-91  1991-2010, சதவிகிதத்தில்:

பயிர்வகை 1967-81 1981-91 1991-2010
தானியங்கள் 2.56 3.32 1.45

பருப்பு வகைகள்

-0.11 1.7 0.33
மொத்த தானியங்கள் 2.29 3.2 1.37
எண்ணெய்  வித்துக்கள் 1.45 6.41 1.96
பருத்தி 2.26 2.06 4.37
கரும்பு 2.53 4.02 1.44

அட்டவணை 2:

முக்கிய பயிர்வகைகளின் மகசூல், ஆண்டு வளர்ச்சி விகிதம், 1967-81, 1981-91  1991-2010, சதவிகிதத்தில்:

பயிர்வகை 1967-81 1981-91 1991-2010
தானியங்கள் 2.11 3.64 1.61
பருப்பு வகைகள் -0.59 1.94 0.42
மொத்த தானியங்கள் 1.83 3.51 1.51
எண்ணெய் வித்துக்கள் 0.68 3.10 1.47
பருத்தி     2.26      2.32 3.06
கரும்பு 1.30 2.01 1.63

1990-களின் பிற்பகுதியில் தொடங்கி தாராளமய கொள்கைகளின் தாக்குதலின் எதிர் விளைவுகள் வெளிவரத் துவங்குகின்றன. 1996-க்குப் பின் விவசாயிகளின் தற்கொலைகள் வேக மாக அதிகரிக்கின்றன. அதேபோல் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை மிகத் தெளிவாக அட்டவணை 3-ல் தரப் பட்டுள்ள தானிய உற்பத்தி விவரங்களில் காண லாம்.

அட்டவணை 3:

மொத்த உணவு தானியங்கள், பரப்பளவு, உற்பத்தி, மகசூல், 1997-98  2006-07 :  

ஆண்டு

பரப்பளவு லட்சம்

ஹெக்டேர்களில்

உற்பத்தி

பத்து லட்சம்

டன்களில்

மகசூல் ஒரு

ஹெக்டே க்கு

கிலோ கிராம்

1998-99 125.17 203.60 1627
1999-00 123.11 209.80 1704
2000-01 121.05 196.81 1626
2001-02   122.78 212.85  1734
2002-03 113.86 174.77 1535
2003-04 123.45 213.19 1727
2004-05 120.08 198.36 1652

2005-06

121.60 208.60 1715
2006-07 124.07 211.78 1707

 1998-ல் இருந்து 2007 வரை தானிய பரப்பளவும் உற்பத்தியும் மகசூலும் கிட்டத்தட்ட தேக்க மாகவே உள்ள நிலையைக் காணலாம். இதே போல் இக்காலகட்டத்தில் இடுபொருட்கள் பயன்பாடும் தேக்கமாகவே இருந்தது. எடுத்துக் காட்டாக, 1991-97 காலத்தில் மொத்த பாசனப் பரப்பளவு ஆண்டுக்கு 2.6 சதவிகிதம் என்ற அளவிலும் விவசாயத்தில் மின் நுகர்வு 9.4 சதவிகிதம் என்ற அளவிலும் இருந்தது. ஆனால், 1997 முதல் 2006 வரையிலான காலத்தில் பாசனப் பரப்பளவு அதிகரிக்கவே இல்லை. வேளாண் துறை மின் நுகர்வு ஆண்டுக்கு 0.5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்தது. 2005-க்குப் பின் சிறிதளவு மீட்சி உற்பத்தியிலும் மகசூலிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது உறுதியாகவோ நிலைத்ததன்மை கொண்டதாகவோ இல்லை.

வேளாண் நெருக்கடியில் ஏற்ற இறக்கம்:

கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் தாராளமய கொள்கைகளின் விளைவாக வேளாண் துறையும் விவசாயிகளும் ஊரக பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதை நாம் மேலே கண்டோம். அதே சமயம் இந்த நெருக்கடி சில காலங்களில் மிகக் கடுமை யாகவும் சில காலங்களில் மீட்சி தன்மை கொண்டதாகவும் உள்ளது என்பதும் உண்மை. குறிப்பாக, 1991 முதல் 1997 வரை தாராளமய கொள்கைகளின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி வேளாண் பொருட்களின் இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கும் காயம் பின்னர் 1999-ல் தான் செய்யப்படுகிறது. அதேபோல் நிதித் துறை சீர்திருத்தங்களும் படிப்படியாகத் தான் அமலாகிறது.

ஆனால், அதன் பின், 1997 முதல் 2004 வரையிலான காலத்தில் வேளாண் நெருக்கடி மிகவும் தீவிரம் அடைகிறது. 2004-05-க்குப் பிறகு சிறிதளவு மீட்சி ஏற்பட்டுள்ளது. காலம், பயிர், பகுதி, வர்க்கம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் வேளான் நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபடுகின்றன என் பதைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. ஏற் கெனவே, பருத்தி பயிர் உற்பத்தியிலும் மகசூ லிலும் இக்காலத்தில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதை பார்த்தோம். தாராளமயக் கொள்கை களின் தாக்கம் எல்லா பயிர்களின் மீதும் ஒரே மாதிரி இல்லை. அதே போல், மிக முக்கியமாக, கிராமப்புற அல்லது வேளாண் பகுதி மக்கள் அனைவர் மீதும் ஒரே மாதியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒரு பகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன் பெற்றுள் ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள் ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன.

1992 முதல் 2003 வரையிலான காலகட்டத் தில் கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண் துறையில் இயந்திரங்களின் உடைமை யும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05-க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற் கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித் துள்ளது. இதை அட்டவணை 4-ல் காணலாம்:

அட்டவணை 4:

டிராக்டர்கள், பவர் டில்லர்கள் விற்பனை, 2004-05  2010-11 (டிசம்பர் வரை)

ஆண்டு விற்பனை

டிராக்டர்  விற்பனை (எண்களில்)

பவர் டில்லர் (எண்களில்)

2004-05 2,47,531 17,481
     2005-06 2,96,080 22,303
2006-07 3,52,835 24,791
 2007-08 3,46,501 26,135
  2008-09 3,42,836 35,294
2009-10 3,93,836 38,794
2010-11 5,45,109 55,000
2011-12 4,19,270 39,900

 வேளாண் நெருக்கடியும் வர்க்க முரண்பாடுகளும்:

நமது விவாதம் ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறது. ஒட்டு மொத்தமாக, இந்திய விவசாயிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் முரண்பாடு என்றும் இது தான் கிராமப் பகுதிகளின் இன்றைய பிரதான முரண்பாடு என்றும் முடிவு செய்வது சரி அல்ல.

2000ஆம் ஆண்டில் சி.பி.ஐ (எம்) ஏற்றுக் கொண்டுள்ள திட்டம் கிராமப் பகுதியில், இந்திய வேளாண்மை துறையில் ஏகாதி பத்தியத்தின் ஊடுறுவலை, நேரடி தாக்கத்தை, பதிவு செய்கிறது. அதே சமயம், இந்திய புரட்சி யின் முக்கிய அம்சமாக ஏழை விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளிகளையும் அடிப்படை சக்தியாகக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இதர விவசாயிகளையும் திரட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக, நில ஏகபோகத்தை தகர்த்து விவசாயப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அது வலி யுறுத்துகிறது. 1964ஆம் ஆண்டு திட்டத்தின் இந்தியப் புரட்சியின் கட்டம் பற்றிய நிர்ண யிப்பை உறுதியும் செய்கிறது. கடந்த இருப துக்கும் மேலான தாராளமயக் கொள்கைகள் இந்த நிர்ணயிப்பு சரி என்றே நமக்கு உணர்த்துகிறது.

கிராமப் புறங்களில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது உண்மையே. குறிப்பாக, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், வேளாண் தொழில் நுட்பம், நிலம் உள்ளிட்டு எல்லா விஷயங்களிலும் பன்னாட்டு மூல தனத்தின் பங்கு கூடி உள்ளதும் உண்மையே. ஆனால், இந்திய அரசும் வேளாண் துறையில் தொடர்ந்து ஒருமுக்கிய பங்கு வகிக்கிறது. 2004-க்குப் பின், குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 ன் ஆட்சி காலத்தில், இடதுசாரி களின் நிர்ப்பந்தம் காரணமாக, வேளாண் துறையில் அரசு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன.

கடந்த 7-8 ஆண்டுகளில் வேளாண் துறையில் உற்பத்தி சக்திகள் வளர்ந்துள்ளன, மகசூல்கள் உயர்ந்துள்ளன. 1991-2013 காலத்தில் உற்பத்தி மற்றும் மகசூல் வளர்ச்சி விகிதங்கள், 1980-91-ஐ ஒப்புநோக்குகையில் குறைந்துள்ளன என்பது சரி. ஆனால் 1991-2013 காலத்திலும், முன்பை விட குறைந்த வேகத்தில் என்றாலும், வளர்ச்சி ஏற் பட்டு உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் விவசாய இயந்திரங் களின் உற்பத்தியும் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகவே, வேளாண் துறையில் உற்பத்தியில் கிடைக்கும் உபரி மூலம், உழைப் பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத் துக்களை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு இந்நாட்டு ஏகபோகங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும், ரியல் எஸ்டேட் கொள்ளை மூலமும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற வகையிலும் மூலதனக் குவியல் ஆரம்ப மூலதன சேர்க்கை பணியில் தொடர்கிறது.

இவ்வகை நிலைமைகளையும் முரண்பாடு களையும் எதிர்கொள்வதற்கு, சமகால நெருக் கடியில் இருந்தும், நில ஏகபோகம் என்ற கட் டமைப்பு அடிப்படையிலான இந்திய விவ சாயத்தின் அடிப்படை நெருக்கடியில் இருந்தும் நாட்டையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் விடுவிக்க, நிலப் பிரபுக்களுக்கும், சாதி-பழங்குடி-பாலின ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கிராமப்புற இயக்கத்தை, விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தனது அச்சாணியாகக் கொண்டு, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையில் செயல்படும் வலுவான ஜனநாயக இயக்கம் அவசியம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: