மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிறுபான்மையினர் செல்வந்தர் ஆவதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம்! பீட்டர் மெர்டென்ஸ் பெல்ஜியத் தொழிலாளர் கட்சியின் தலைவர்


அக்டோபர் 14,2012-ல் நடந்த நகராட்சி மற்றும் பிராந்திய மன்றங்களின் தேர்தல்களில், பெல்ஜியத் தொழிலாளர் கட்சி கணிசமான வெற்றிகளைக் கண்ட பிறகு பல்வேறு நிகழ்வுகள் நடந்துவிட்டன. கட்சி நிலையான வளர்ச்ச்சியை அடைந்தது. கடந்த வருடம் இரண்டாயிரம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதை கட்சி எப்படி எதிர் கொள்கின்றது? ஆண்ட்வெர்ப் நகரத்தின் ஒரு பகுதியாகிய போர்ஜெர்ஹௌட்டின் தலைமைப் பதவி கட்சிக்கு கிட்டியுள்ளது; அப்பகுதியின் ஆளும் முற்போக்குப் பெரும்பான்மை அணியில் கட்சி பங்கேற்றுள்ளது. இது கட்சிக்கு மக்களிடமிருந்து  கிடைத்துள்ள  முதல்  ஆணை ஆகும். (நகராட்சியின் தலைவர் மேயர் ஆவார்; அவரே ஆல்டெர்மன் என்று அழைக்கப்படுகிறார்) கட்சி இதை எவ்வாறு பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் இவ்வெற்றியின் காரணமாக தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு கட்சி ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. கட்சியின் தலைவர் பீட்டர் மெர்டென்ஸ், அதிதீவிர வலதுசாரி இயக்கத்தவரான ஃபில்ப் டிவின்டருடன் ஒப்பிடப்படுகிறார். இதற்கிடையில் எதிர்காலம் நம்மை அழைக்கின்றது. பெல்ஜியத் தொழிலாளர் கட்சியின் இலட்சியம் என்ன? சோஷலிசம் 2.0 என்பதன் பொருள் என்ன? பெ.தொ.கட்சியின் தலைவர் பீட்டர் மெர்டென்ஸ் இவற்றுக்கான விடைகளைத் தருகிறார்.

அக்டோபர் 14-லிருந்து, பெ.தொ கட்சி கணக்கில் கொள்ள வேண்டிய கட்சியாக இருந்து வந்துள்ளது. புதிய உறுப்பினர்களும் கட்சியில் இணைந்துள்ளனர்.

எத்தனை புதிய உறுப் பினர்கள் கட்சிக்குள் வந்துள்ளனர்?

பீட்டர் மெர்டென்ஸ்: நாங்கள் இப்போது 6,811 உறுப்பினர் எண்ணிக்கையை எட்டியுள்ளோம். 2012ல் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர் கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் வரலாற்றிலேயெ மிக அதிக என்ணிக்கையில் உறுப்பினர் இணைந்துள்ளது தற்போதுதான் நிகழ்ந்துள்ளது. பல புதிய கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. கட்சிக்கு இந் நிகழ்வுகளினால் நம்ப முடியாத அளவுக்கு சக்தியும், அனுபவமும் கிடைக்க வழி பிறந்துள்ளது. கட்சியில் ஒவ்வொருவருக்கும் சரியான தகுதிகளை வழங்குவதில் சவால்கள் உள்ளன; கட்சியை இயக்கச் செறிவுடன் வைத்துக் கொள்வதிலும், மார்க்சிஸ்ட் அமைப்பாக கட்டிக் காப்பாற்றுவதிலும், மட்டுமல்ல, நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கும் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. பெல்ஜிய அரசாங்கம் வளர்ச்சி விகிதத்தை ஏறக்குறைய பூஜ்யம் என்ற அளவிற்கு திட்டமிட்டுள்ள நிலையில், ஃபோர்டு ஜெங்க், ஆர்செலோர் மிட்டல் போன்ற நிறுவனங்களின் மூடல்கள் என்பது நாட்டில் புதிய ஆலை மூடல்களுக்கும் மறுகட்டமைப்புக்குமான வழிவகைகளேயன்றி வேறெதற்குமில்லை. (ஆசிரியர் குறிப்பு: தீர்க்க தரிசனமான வார்த்தைகள்; ஏனெனில் பீட்டர் மெர்டென்ஸ் இக்கருத்துக் களைக் கூறிய போது, கேட்டர் பில்லர் கோஸ்ஸெலைஸ் என்ற நிறுவனம் 1400 தொழிலாளிகளைக் காவு கொடுக்கப் போகும் விஷயம் அவருக்குத் தெரியாது) அதே சமயத்தில் அரசாங்கம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் பொதுச் சேவைகளுக்கான செலவினங்களிலும் மேலும்  வெட்டு செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நெருக்கடியின் காரணமாக அதிகமான மக்களுக்கு இவை தேவை என்ற கட்டத்தில் அரசாங்கம் இவற்றை மேற்கொண்டுள்ளது.

இதன் பொருள் பெ.தொ.க-விற்கு முக்கிய மான பணி காத்திருக்கிறது?

பீட்டர் மெர்டென்ஸ்:  ஆம், 2013ம் ஆண்டில், நாங்கள் சமூகப் பாதுகாப்புக்கான போராட்ட இயக்கத்தை கட்சியின் அனைத்துப் பகுதிகளிடையேயும் வலுப்பெறச் செய்ய விரும்புகின்றோம்; தற்போதைய நெருக்கடியை, ஆளும் வர்க்கங்கள், உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கவே பயன்படுத்துகின்றது. இதை, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஜன நாயக ரீதியாகவும் மட்டுமல்லாமல் அறநெறியின் அடிப்படையிலும் அரசாங்கம் இதைச் செய்ய முற்படுகின்றது. எனவே நாம் அதிகாரம் சார்ந்த உறவுகளை உருவாக்க வேண்டும். இதன் பொருள் நாம் இயன்ற அனைத்து இடங்களிலும் வாத விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டும். மக்கள் அமைப்பு ரீதியாக திரள்வதற்கு உதவ வேண்டும். சிறு காண்ட்ராக்டர்களிடமிருந்து பெரிய நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் வரையும், ஆளில்லாத சுற்றுப்புறங்களிலிருந்து பிதுங்கி வழியும் நகரங்கள் வரையும் இதைச் செய்ய வேண்டும். மக்கள் முடியாது என்று எதிர்ப்பைக் கூறுவதற்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்; இதுதான் எதிர்ப்புக்கான முதல் படி. அஞ்சல் அலுவலகங்களை மூடுவது, சமூக வீட்டு வசதியைக் குறைப்பது, அருகாமை நூலகங்களை மூடுவது, பொது வெளிகளை அழிப்பது போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வாங்கும் சக்தியை முடக்கும் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும்; கூலி முடக்கம், அதிக அளவு நெளிவு சுளிவு கொண்ட, இஷ்டம் போல் வேலையை விட்டு அனுப்பும் கொள்கைகள், குறைவான கூலி தரும் அதிக வேலைச்சுமைகள் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாற்று திசையில் சமூகத்தை வழிநடத்திச் செல்ல அடிமட்டத்திலிருந்து நிர்ப்பந்தம் தரக் கூடிய எதிர்ப்பு இயக்கம் ஒன்றே நமக்கு இப்போதைய தேவை.

மற்ற கட்சிகள் சில சமயம் கூறுவது: இப்போதைய நெருக்கடியின் காரணமாக புதிய உறுப்பினர்களை பெ தொ கட்சி கவருவது சாதாரண விஷயமே. இது ஏற்புடையவாதமா?

பீட்டர் மெர்டென்ஸ்: இதைப் பற்றி உறுதி யாக எனக்குத் தெரியாது. ஜெர்மனியைக் கொஞ்சம் பாருங்கள். ஜெர்மனியில், குறைந்த கூலியும் இஷ்டம் போல் தொழிலாளர்களை நடத்தும் கொள்கையும் கொண்ட அமைப்பு இருந்த போதிலும், அச்சூழ்நிலை தானாகவே அனைத்து தொழிலாளி வர்க்கத்தை இடதுசாரி பக்கம் தள்ளிவிட்டதா? புதிய தாராளமயக் கொள்கைகளுடன் உள்ள உடன்பாடின்மை காரணமாக இடதுசாரி சக்திகள் வலுப்பெறுமா என்பது மார்க்சிச கட்சிகளின் செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளது. அக்கட்சிகளின் நடவடிக்கைகள் சரியாக இயங்குகின்றனவா? அவைகள் மக்களுக்கு விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லி அவர்களை ஒன்று திரட்டுகின்றனவா? அதுவே அங்குள்ள முக்கிய அம்சமாகும்.

சரி,  தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெல்ஜிய மொழி மற்றும் ஃப்ரெஞ்சு மொழி சார்ந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் (வடபெல்ஜியம் மற்றும் தென் பெல்ஜியம் சார்ந்த கட்சிகள்) தொழிலாளர் இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதனால் மிகக் குறைவான மக்களே அக்கட்சி களை சாதகமான கண்ணோட்டத்துடன் இன்று பார்க்கிறார்கள். பெல்ஜிய பிரதம மந்திரி டி ரூபோ தாவோஸில், உலகப் பொருளாதார மேடையில், பெரு நிறுவனங்களுக்கு சாதகமான வரிச் சலுகைகளை அறிவிக்கும் போதே இங்கு ஆர்செலோர் மித்தல் நிறுவனம் லிய்க் என்னு மிடத்தில் உள்ள நவீனமான உருக்கு ஆலையை மூடிவிடும் முடிவை எடுத்துள்ளது என்பதி லிருந்தே இக்கொள்கைகளைப் பற்றி அதிகமாக  ஒன்றும் கூறத் தேவையில்லை. மேலும் கிறித்துவ தொழிலாளி இயக்கங்களைச் சார்ந்த தன்னார்வலர்களும், உறுப்பினர்களும் மேலும் மேலும் பெருமளவில் நம்மை நோக்கி வருகின்றனர். முதலாளித்துவ கொள்கையின் அடிப்படையில் இயங்கும் பெரிய வங்கிகளுடன் இணைந்து செயலாற்றியது, கூட்டுறவு முறையில் சேர்த்து வைத்த தங்களுடைய சேமிப்புகளின் அழிவுக்கே காரணமாக இருந்ததை உணர்ந்து கொண்டனர். மேலும், கிறித்துவ தொழிலாளி இயக்கம், கிறித்துவ பெண்கள் அமைப்பு,,கிறித்துவ இளைஞர் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான தன்னார்வலர்களுக்கு உரியவற்றை கூச்ச நாச்சமின்றி மறுக்கும் வகையிலேயே (முதலாளித்துவ கொள்கைகள்)  இச்சூழ்நிலையைப் பயன்படுத்தப்படுவதையும் காண முடிகின்றது. இருந்த போதும், செயலூக்க மும் படைப்பூக்கமும் நிறைந்த மார்க்சிச சக்தியாக இயங்கினாலன்றி மக்கள் நம்மை நாட மாட்டார்கள். எனவே எதுவும் தானாகவே நிகழாது.

கட்சி வளர்ச்சி பெற்று வருகின்றது. அதிக அளவில் உறுப்பினர்கள் சேருகின்றனர். இத்தகைய புதிய சக்திகள் அனைத்திற்கும் கட்சி உரிய இடத்தை கொடுக்க முடி கின்றதா?

பீட்டர் மெர்டென்ஸ்: இந்த வளர்ச்சி நமக்கு மிகவும் அவசியமான ஒன்றே. இதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். வலதுசாரி கொள்கைகள் பக்கம் அதிகமாக அரசாங்கம் சாய்வதை எதிர்க்க வேண்டுமென்றால், நமக்கு வலிமையுடன் கூடிய சக்தி தேவைப்படுகின்றது. சீரிய அமைப்புடன் கூடிய கட்சி தேவைப்படுகின்றது.. கட்சி புதுமையான வழிகளைக் கண்டறிய வேண்டும். புதுப்பிக்கப்பட்ட வளங்களை நாட வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. நாம் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது; சமூகத்தில் பங்கேற்பவர்களாகவும் இருக்க வேண்டும். சமூக நிகழ்வுகளில் தலையிட்டுப் பங்காற்றும் உயிர்ப்புடன் கூடிய சக்தியாக நாம் இருக்க வேண்டும்.

ஆனால், கட்சியில் இணையும் புதிய உறுப்பினர்கள் கட்சியின் திட்டத்தையோ, கட்சியின் தொலைநோக்குப் பார்வையையோ, தாங்களாகவே அறிய மாட்டார்கள். இன்றைய மார்க்சிசம் குறித்த ஆழ்ந்த புரிதலும் கொண்டிருக்கமாட்டார்கள். எனவே 2013-ம் ஆண்டில் கணிசமான நேரத்தை, எல்லா மட்டங்களிலும் கட்சிக் கல்வியைப் பலப்படுத்துவதில் செலவிட வேண்டும். கட்சியின் முதுகெலும்பை பலப்படுத்த வேண்டும். நடைமுறைத் தந்திரமும், நெகிழ்ந்து வளைந்து கொடுக்கும் பண்பும் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் முது கெலும்பு தேவையான ஒன்றாகும். இல்லையென்றால் நெகிழ்வுத்தன்மை என்பது உயிரற்ற துணிப் பொம்மை போன்றாகிவிடும். பெ.தொ கட்சியின் பெருக்கம் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஆனால், மறுபுறம் செயலூக்கம் மிக்க உறுப்பினர்களாக வளர விரும்பும் புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டவும், கல்வி புகட்டவும் தேவையான நேரத்தைச் செலவிடவும் விரும்புகிறோம்.

ஊடகங்களில் பெ.தொ கட்சியின் வெற்றியை சில சமயம் அந்நிய உதாரணங்களுடன் ஒப்பிடுகின்றனர்: நெதெர்லாந்தின் சோஷலிசக் கட்சி, கிரீஸ் நாட்டின் சிரிஜா ஃப்ரான்சின் மெலாஷா போன்றோருடன் ஒப்பீடு செய்யப் படுகின்றது.

இத்தகைய ஒப்பீடுகள் சாத்தியமா?

பீட்டர் மெர்டென்ஸ்: இத்தகைய நெருக்கடியான காலங்களில் சமூக ஜனநாயக கட்சிகளின் இடதுசாரிப் பிரிவுகளின் குரல் ஓங்கி ஒலிப்பது என்பது இயல்பானதே. ஏனெனில் ஐரோப்பாவின் சமூக ஜனநாயக சக்திகள் தங்களை முதலாளித்துவத்துக்கு முழுமையாக  அடிமையாக்கிக் கொண்டுவிட்டன; அவர்கள் சோஷலிச சமுதாயம் உருவாக்கும் எந்த ஆசையும் இன்றியே உள்ளனர். இந்த நிலை கொஞ்ச நாட்களாகவே இந்த ரீதியில் தான் உள்ளது. ஆகவே அரசியலில் அந்த இடத்தை பல வேறுபட்ட வழிகளில் வகைகளில் நிரப்ப சாத்தியங்கள் உண்டு இயல்பாகவே நாம் எதிர்ப்பு சக்திகளை திரட்டும் முறையும், சமூகத்தைக் குறித்த தொலை நோக்குப் பார்வையும் மற்ற எந்த கட்சிகளையும் விட போர்த்துகல் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒத்திருக்கிறது. இதுதான் உண்மை; ஆனால், இதிலிருந்து, நாம் மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கான வழிகளோ அல்லது அவர்களிடமிருந்து படித்துத் தெரிந்து கொள்ளவோ எதுவும் இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது.

உலகப் பொருளாதார கருத்தரங்கு மேடையில் பெரிய நிறுவனத் தலைவர்களும், வங்கியாளர்களும், அரசாங்கத் தலைவர்களும், சமூகத்தில் ஏழை-பணக்காரர்கள் இடையே உள்ள பெரும்  இடைவெளி பிரச்சனைக் குரியதாக வளர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். அமைப்பும் பன்னாட்டு கம்பெனிகள் வரிகளை ஏய்ப்பதாக தன் பங்குக்கு குற்றஞ்சாட்டியுள்ளது.

இவை, சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் இதே ரீதியில் தொடர முடியாது என்ற புரிதலுக்கு முதலாளித்துவவாதிகள் வந்துள்ளனர் என்பதற்கான அறிகுறிகளா? பீட்டர் மெர்டென்ஸ்: இல்லை. பிரச்சனை சுட்டிக் காட்டப்படுகிறது  என்பதாலேயே  அப்பிரச்சனையை அவர்கள்  தீர்க்க விரும்புகின்றனர் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவர்கள் அப்பிரச்சனையைச் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பூமியில் அப்பிரச்சினையை அறிந்து கொண்ட கடைசி நபர்கள் அவர்களாகவே இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள வேறுபாட்டைக் களைய விரும்புவதாகக் கூறுகின்றனர். அதற்காக பெயரளவில் சில அடையாள  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் இதற்கிடையில் சமூகத்தில் நிலவும்  மாபெரும்  பிளவை இன்னும் அதிகரிக்கவே செய்யும், அடிப்படையான அமைப்பு முறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றனர். உதாரணத்துக்கு, நிதிக் கொள்கை நடவடிக்கைகளக் காண்போம். உலகம் முழுவதும் உயர்ந்த வரி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன; மேலும் பன்னாட்டு மூலதனங்களின் நிர்ப்பந்தங்களின் காரணமாக கார்ப்பரேட் வரிகளும் குறைக்கப்படுகின்றன. ஆக்மென்ஸ் வென் ஹார்ரென் என்ற கம்பெனியின் தலைமை நிர்வாகி, லூக் பெட்ராண்ட், நமது நாட்டில் மார்க்சிஸ்ட் அரசாங்கம் உள்ளது என்று கூறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார். ஆனால் அதே சமயம் அவரது நிறுவனம் நாட்டின் மொத்த வரியில் வெறும் 0.002 சதவீதமே வரி கட்டுகின்றது. ஆனால் அதுவே மிக அதிக வரியாக கருதப்படுகின்றது. நவீன தாராளமய நிதிக்கொள்கைப் புரட்சி  காரணமாக ஒவ்வொரு வருடமும், ஆயிரங்கோடிக்கணக்கில் யூரோக்களை அரசாங்கம் இழந்து கொண்டு வருகின்றது. அந்தப் பணம் பொதுச் சேவைகளின் சேமிப்பிலிருந்து பெறப்பட்டவையாகும்; சமூக வீட்டு வசதிகள் அரசாங்கத்தால் புதுப்பிக்கப்படுவதில்ல; போக்குவரத்துத் தடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. உடல் நலச் சேவைகளுக்காக காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

நாம் (சமூக) அமைப்பின் இயக்கத்திலேயே பிரச்சனை இருப்பதைக் காண்கிறோம். போட்டியின் அடிப்படையில் இயங்கும் அமைப்பு முறைக்கு அதிக உற்பத்தித் திறனை நாட வேண்டியுள்ளது. சந்தையில் அதிக பங்கினையும் நாட வேண்டியுள்ளது. இத்தகைய போக்கு தொழிலாளர்களின் கூலி மீதும் அவர்களின் வாழ் நிலைமைகள் மீதும் தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. மேலும் அது மக்களின் வாங்கும் சக்தியை குறைப்பதிலேயே சென்று முடிகின்றது.

எனவே முதலாளித்துவவாதிகள் எடுக்கும் அடையாள நடவடிக்கைகளின் குறிக்கோள் என்ன?

பீட்டர் மெர்டென்ஸ்: அரசாங்கத் தரப்பில் மிகத் தெளிவாகக் கூறப்படுவதாவது: மக்களைத் திருப்திகரமான நிலையில் வைத்துக்கொள்ள சில அடையாள பூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். வர்த்தகம் மற்றும் நிதிப் பத்திரிகைகளில் பொருளாதாரவாதிகள் இத்தகைய பயங்கரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் காலங்களில் கூட மக்கள் அமைதியாக இருப்பது ஏன்?  என்பது தெரியவில்லை என்று எழுதுகின்றனர். பெரிய அளவில் சமூகத்தில் அமைதியின்மை ஏற்படக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. ஐரோப்பாவின் நிலைமையைக் காணும் போது இதற்குக் காரணங்கள் உண்டு என்பது தெளிவு. ஐந்தாண்டுகளாக நீடித்த நெருக்கடிக்குப் பிறகு, 2013ல், மீண்டும் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளதை காண்கின்றோம். ஐரோப்பிய யூனியனில் 2,60,00,000 நபர்கள் வேலையின்றி உள்ளனர். மக்கள் தொகையில் பெரும்பாலோர் ஏழ்மையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இளைஞர்கள் மத்தியில் நிலைமை இன்னும் பரிதாபகரமாக உள்ளது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் வேலையின்றி தவிக்கும் போக்கு உள்ளது. வேலை உள்ளவர்களின் நிலையும் சிறப்பாக ஒன்று மில்லை. ஐரோப்பாவில் வேலையில் உள்ளவர் களில் 8.7 சதவீதம் பேர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைமையில் இல்லை. இவர்கள் அனைவரும் பணிபுரியும் ஏழைகள் ஆவர், இத்தகைய நிலைமை ஜெர்மனியில் 22 சதவீதத்தை அடைந்துள்ளது. அதாவது ஐந்து பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் உள்ளது.

இதற்கு மாறாக மறுபுறம் வாயைப் பிளக்க வைக்கும்  அளவுக்கு செல்வம் ஒரு சிலர் கையில்  கொட்டிக் கிடக்கின்றது. பெர்னார்ட் ஆர்நால்ட் ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரர்; ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளவர். நிதிக் கொள் கைகள் ஐரொப்பாவில் சாதகமாக இருந்ததால் பெல்ஜியத்துக்கு வந்தவர் ஆவார். கடந்த வருடம் தன் கணக்குக்கு 81,000 கோடி டாலர்களைத் தன் சொத்துக் கணக்கில் சேர்த்தவர் ஆவார். அவருடைய தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 28,800 கோடி டாலர்களாகும். இவ்வாறு சிறுபான்மை யிலும் சிறுபான்மையினர் பணக்காரர்களாக ஆவதற்கு அனுமதிக்கும் நிலை, பொதுவான, பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கின்றது .இது ஜனநாயக பூர்வ மான அமைப்பு அல்ல; சில குறிப்பிட்ட பேர்களே, தங்கள் நலன்களுக்காக, இணைந்து நடத்தும் ஆட்சியாகும்.

இங்கு செல்வக் குவியல் என்பது அதிகார மையத்தைக் குறிக்கின்ற்து.  மூலதனம் குவிதலுக்கு எதிராக பெ.தொ.கட்சி ஒரு நடவடிக்கைக்கான யோசனையைக் கூறியுள்ளது. அது ஒரு அபூர்வமான தீர்வா?

பீட்டர் மெர்டென்ஸ்: எங்களுக்கு நாளைய சமுகத்தைக் குறித்த தொலைநோக்குப் பார்வை உண்டு. ஆனால், அந்தத் திசையில் செல்வதற்குத் தேவையான அரசியல் உந்து சக்திகள் நமக்குத் தேவை ப்ரூனோ டோப்பாக் (ஃப்ளெமிஷ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்) அரை ஆண்டுக்கு முன்னால், கூறியது:, நெருக்கடிக்குத் தீர்வாக, திருவாளர் மெர்டென்ஸ் கோடீஸ்வரர் வரியை அறிமுகப்படுத்த விரும்புகின்றார். ஆனால் இதைவிட உண்மைக்குப் புறம்பான விஷயம் எதுவும் இருக்க முடியாது; கோடீஸ்வரர்களுக்கு விதிக்கப்படும்  வரிகள் நெருக்கடியைத் தீர்க்க உதவாது. ஆனால் இத்தகைய வரிகள் வேறு காரணங்களுக்காக தேவைப்படுகின்றன. நாட்டின் பணக்காரக் குடும்பங்கள் மேலும் பணக்காரர் ஆவதைச் சிறிது தடை செய்யும் கருவியாகவே அவை இருக்கும். கடந்த இரண்டு வருடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாகவே அவர்களின் செல்வம் அதிகரித்தது. நாட்டையே கைக்குள் வைத்துக்கொண்டு பெரும் பகுதி செல்வத்தைக் கொள்ளையடிக்கும் ஸ்போயெல்பெர்க் மற்றும் ஃப்ரேரெ குடும்பங் களுக்கு அவர்களின் செல்வத்தை நாட்டுக் கருவூலத்துக்கு திருப்பிவிடும் வகையில் திரும்பச் செலுத்தும் வரியை விதிக்கலாம்.

கோடீஸ்வரர்களின் வரி என்பது நாட்டுக்கு 90 லட்சம் யூரோக்களை வருமானமாக ஒரு வருடத்தில் ஈட்டிக் கொடுக்கும். இதன் மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். புதிய பள்ளிகளை கட்டுதல், ஆசிரியர்களை நிய மித்தல், மருத்துவமனைகளில் செவிலியர்களை நியமித்தல் போன்ற அத்தியாவசியமான திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் உள்ள அரசால் இப்பணத்தைக் கொண்டு அவற்றை நடை முறைப்படுத்த இயலும். 9000 கோடி யூரோக்களைக் கொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட உறுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இதனால் மீண்டும் அளவீடுகளின் அடிப்படை யில் வேலைகளை உருவாக்க முடியும். ஜெர்மனியில் உள்ளது போல் குறைந்த கூலிக்கும், இஷ்டம் போல் தொழிலாளர்களை நடத்தும் கொள்கைகளின் அடிப்படையிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தேவையில்லை. நாட்டின் இருநூறு பணக்காரக் குடும்பங்கள் தங்கள் சுகங்கள் எதையும் இழக்கத் தயாராக இருக்க மாட்டர்கள். எனவே, இத்தகைய நடவடிக்கை (கோடீஸ்வரர்கள் வரி) என்பது மிகைப்படுத்தப்பட்ட விஷயம் அல்ல; இதற்கு மாற்று வழி என்பது, சாதாரண உழைக்கும் மக்கள்—– வேலையில் உள்ளோர், வேலையில் இல்லாதவர், எந்தக் கணக்கிலும் சேர்க்கப்படாத சாதாரண மக்கள்—- ஆகியோர் தான் இந் தெருக்கடியின் தீர்வுக்கு விலை கொடுக்க வேண்டி யிருக்கும்.

மற்ற கட்சிகளிடமிருந்து, கோடீஸ்வரர்கள் வரி என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்ற எதிர்வினை உருவாகியுள்ளதே?

பீட்டர் மெர்டென்ஸ்: இங்கு இரண்டுவிதமான கண்ணோட்டங்கள் மோதுகின்றன; ஒருசாரார் நடைமுறைக்கு ஏற்றது என்று கருதுவது என்பது மற்றொரு சாராருக்கு நடை முறைக்கு ஏற்றதாக இல்லை. வாழ்நாள் முழு வதும் உழைத்தவர்கள் மிகச் சிறிய ஓய்வு ஊதியத்தில் காலந்தள்ள வேண்டும் என்பதை நாங்கள் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று கருதுகின்றோம். ஒபெல், க்ரௌன் கார்க், ஃபோர்டு, ஆர்செலோர் மித்தல் போன்ற பல நிறுவனங்களில் வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தொழிலாளர்கள் வறுமையின் விளிம்பில் வாழ்க்கை நடத்துவது நடைமுறைக்கேற்றதல்ல என்பதை நாங்கள் காண்கின்றோம்.

பன்னாட்டு மூலதனங்களின் லாபங்கள் விண்ணை முட்டும்போது, தொழிலாளர்களின் ஊதிய முடக்கம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று நாங்கள் கருதுகிறோம். அரசாங்க வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு இவையெல்லாம் நடைமுறைக்கேற்றவையாகத் தோன்றுகின்றது; ஆனால், மேல்தட்டு வர்க்கங்களின் மீது ஒரு சிறிய வரி போடுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததாக அவர்களுக்குத் தோன்றுகின்றது. ஆனால், அடுத்த சில வருடங்களில்,  நாங்கள் 88,000 கையெழுத்துக்களைத் திரட்டிவிட முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம். (ஆசிரியர் குறிப்பு: பெல்ஜியத்தில் பத்து லட்சம் யூரோக்களுக்கும் மேலாக சொத்து வைத்திருப் பவர் எண்ணிக்கை 88,000 ஆகும்) இப்பிரச்சனையை மையமாகக் கொண்ட ஒவ்வொரு தேர்தலிலும், 75 சதவீதம் முதல், 80 சதவீதம் வரை மக்கள் கோடீஸ்வரர் வரி விதிப்பதற்கு  ஆதரவு தருகின்றனர். எனவே இந்நடவடிக்கைக்கு அடிமட்டத்தில் பெரிய ஆதரவு உள்ளது; ஆனால் நாடாளுமன்றத்தில்தான் இதற்கான ஆதரவு காணப்படுவதில்லை. அதைப் பற்றிக் கவலையில்லை.

குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்யும் கொள்கைக்கும் இவ்வாறுதான் நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லாத நிலை இருந்துவந்தது; இருந்தும் குழந்தைத் தொழிலாளர் தடை சட்டம் நடைமுறைக்கு வருவது யதார்த்தமாயிற்று. எப்படி? அதற்கான ஆதரவு உழைக்கும் மக்கள் மத்தியில் இருந்தது; அதனால் கீழிருந்து நிர்ப்பந்தம் கொடுக்க முடிந்தது. எனவே அதே முறையிலேயே கோடீஸ்வரர் வரிக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இயங்க வேண்டும்.

மற்றொரு விஷயம் ஒன்று கேட்க வேண்டும். மற்ற ஊடகங்கள் நேர்முகங்கள் காணும் போது, அவ்வளவாக நற்பெயர் பெறாத கம்யூனிஸ்ட் ஆட்சிகள் குறித்து கேள்விகள் கேட்டு சங்கடத்தில் ஆழ்த்துகின்றனர். இது உங்களை புண்படுத்தவில்லையா?

பீட்டர் மெர்டென்ஸ்: இங்கே பாருங்கள்; பல்வேறு அச்சுகளை மையங்களாக கொண்டு இயங்கும் எதிர்கால சோஷலிசத்துக்கான திட்டத்தை நாம் முன்வைத்து குரல் கொடுக்கின்றோம். இந்த பூமியையும் அதில் வாழும் மக்களையும் 21 ஆம் நூற்றாண்டில் முன்னே எடுத்துச்செல்ல உதவுவதற்கு இது தேவை என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் அனுபவங்களை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிடுவதும் முட்டாள்தனமான செயலாக முடிந்துவிடும். மேலும் அது அறிவுத் தளத்தில் ஒரு நேர்மையற்ற செயலாகிவிடும். சோஷலிசம் எண்ணற்ற, தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய, சாதனைகளைச் சாதித்துள்ளது. சோவியத் யூனியனும் சீனாவும்  வளர்ச்சி குறைந்த நாடுகள் என்ற நிலையிலிருந்து நவீனமான உற்பத்தி மிகுந்த நாடுகளாக வளர்ந்துள்ளன. அந்நாட்டு மக்களுக்கு இதுவரை இல்லாத சாத்தியப்பாடுகள் கிடைத்துள்ளன. உதாரணமாக, தேசிய சுகாதார நலவாழ்வு சேவை. அதை தூக்கி எறிந்துவிட நம்மால் முடியுமா? சோவியத் யூனியன்தான் இந்த திட்டத்தை  மிகவும் விரிவான முறையில் அமல்படுத்தியது. கிரேட் பிரிட்டனில் ஓரளவுக்கு இந்த திட்டம் தேசிய சுகாதார திட்டமாகவும், நமது நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகவும் கை கொள்ளப்பட்டன. சமூகப் பாதுகாப்பு என்பதே சோஷலிசம் சார்ந்த எண்ணப்பாடு ஆகும். அடுத்து கல்வி அமைப்பு குறித்து சிறிது பார்ப்போம். இன்றைக்கு சர்வதேச அளவில் நடந்த ஆய்வுகள் அனைத்தும் ஃபின்லாந்து நாட்டு கல்விமுறையே மிகவும் முற்போக்கான கல்வி அமைப்பு முறை என்று கூறுகின்றன. சிறப்புக் கல்வி வழங்கல் முறையிலும், சமூக சமத்துவத்தி லும் சிறந்த பலன்களை கொடுக்கும் முறையாக அது விளங்குகின்றது. ஃபின்லாந்து நாட்டு கல்வி அமைச்சரே அக்கல்விமுறை ஜெர்மன் ஜன நாயகக் குடியரசின் (கிழக்கு ஜெர்மனியின்) பல் தொழில்நுட்ப கல்விமுறையை அடிப்படையாக கொண்டதென்கிறார்.இதை நாம் ஏன் மறந்து விட வேண்டும்? பெண்களின் விடுதலை என்ற விஷயத்திலும், மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. இன்று கியூபாவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளில் 65 சத வீதம் பேர் பெண்களாகவே உள்ளனர். ஆனால் இவை குறித்து பேச இங்கு அனுமதிக்கப் படுவதில்லை.

ஃபாசிசத்தை முறியடித்ததில் சோஷலிசத்தின் முக்கியத்துவத்தை நாம் மறக்க முடியாது. 2 கோடி 70 லட்சம் சோவியத் மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்யாமலிருந்தால், இன்று உலகம் ஒட்டுமொத்தமாக வேறு மாதிரித்தான் காட்சி யளித்திருக்கக் கூடும். 1948ல்,  உலகளாவிய அனை வருக்கும் பொதுவான உரிமைகளை வடி வமைத்து அறிவிப்பதற்கு முழுமூச்சுடன் ஈடு பட்டு உதவியது  சோவியத் யூனியன். அடிப்படை உரிமைகளை வடிவமைக்கவும்  தீவிரமாக செயலாற்றியது. மக்கள்  இன்று, அவர்களின் பிறப்பிடம், பால் நம்பிக்கை, உரிய ஆவணங்கள் வைத்திருக்கிறாரா இல்லையா போன்ற பல காரணங்களைக் கடந்து மனிதனுக்கு அடிப்படை யான உரிமைகள் இன்று கிடைத்துள்ளன. தீவிர தேசியவாத வலதுசாரிகள் மீண்டும் ஒருமுறை இந்த அடிப்படை உரிமைகளை பார்த்து உணரட்டும்.

நாம்  20ம் நூற்றாண்டு சோஷலிசத்தின் சாதகமான அம்சங்களை 21ம் நூற்றாண்டின் சோஷலிசத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தெளிவான ஒன்றாகும். ஆனால் மறுபக்கம், ஜனநாயகம், மக்களின் பங்கேற்பு, அரசு ஆட்சி இயந்திரம், புதுமை காணும் முயற்சிகளை பயன்படுத்துதல் போன்றவற்றில் நடந்துள்ள தவறுகளை மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடமாட்டோம். அத் தவறுகளிலிருந்து எதிர்காலத்துக்கான படிப்பினைகளை நாம் பெற வேண்டும். கடந்த காலத்திலிருந்து படிப்பினைகள் பெறாதவன் முன்னேற முடியாது.

கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகள் பெறுவது என்ற அடிப்படையில் , 2008 கட்சி காங்கிரஸ் நடந்து முடிந்ததிலிருந்து., பெ தொ கட்சி ஏராளமான மாற்றங்களை அடைந்துள்ளது இல்லையாகுறுகிய மனப்பான்மைப் போக்கு  குறைந்துள்ளதாகவும் வறட்டுத்தனம் குறைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனரே?

பீட்டர் மெர்டென்ஸ்: 2008 காங்கிரசுக்குப் பின் நாம் செல்ல வேண்டிய திசை குறித்து குறிப்பிட்டுள்ளோம். பல்வேறு அச்சுகளை மையமாகக் கொண்டு இயங்குவதென்ற முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. கட்சியின் கொள்கை களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம். சமூக ஜனநாயகப் பாதையில் நடை போடும் ஆசை எங்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது. முதலாளித்துவத்தின் கூரிய விளிம்புகளை மட்டுமே நீக்கிவிட்டு இந்த அமைப்பை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் கட்சியாக எங்கள் கட்சி இல்லை. எங்கள் கட்சி, நவீன சோஷலிச சமூகத்தை நிறுவ விரும்பும் மார்க்சிஸ்ட் கட்சியாகும்.

ஆனால் கட்சியில் மாற்றங்கள் செய்து நவீனப் படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப் பினரும் இயல்பாக இருக்கும் வகையில் திறந்த கட்சியாக ஆக்க வேண்டியுள்ளது; பல்வேறு வகயான மக்களுடனும் சங்கங்களுடனும் மத் தியதர வகுப்பு அமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் கட்சியாகவும், மற்ற சமூக அமைப்புகளை தொடர்ந்து தாக்குதல் நடத்தாத கட்சியாகவும் மாற வேண்டியுள்ளது.வறட்டுத்தனம் இல்லாத கட்சியாகவும் இருக்க வேண்டியுள்ளது. சோஷ லிசம் என்பது இத்தனை கிராம் இந்தப் பொருளையும் இத்தனை கிராம் அந்தப் பொருளையும் போட்டு சமையல் அறையில் செய்யப்படும் உணவுப் பொருள் அல்ல.  ஒவ்வொரு பிரச் சனைக்கும் தீர்வு என்பது எங்களிடம் இல்லை. நாங்கள் சொல்வதுதான் அனைவரும் கேட்டே யாகவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. கண்டிப்பான பள்ளி ஆசிரியர் போன்று போதிக்கவும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால், மக்களுடன் சேர்ந்து பிரச்சினைகளுக்கான ஆகச் சிறந்த தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். இறுதியாக நாம் ஒரு மாற்று மொழியை பயன் படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்; அம்மொழி வியப்பும் கூச்சலும் அற்ற மொழி யாகவும் கொச்சையான மொழியாக இல் லாமலும் இருக்க வேண்டும்; நகைச்சுவை உணர்ச்சி மிகுந்த மொழியாக இருக்க வேண்டும்.

மக்களுடைய அறிவுத் தளத்திற்கும் பகுத்தறிவுடன் மட்டுமே நாம் உரையாடல் நடத்தவில்லை; அவர்களுடைய உணர்வுமையம், உணர்ச்சிகள், ஆகியவற்றுடன் உருவக மொழியில் பொதுவான ரீதியில் நாம் மக்களுடன் உரையாடுகின்றோம்.

கடந்த வருட தேர்தலின் சாதகமான முடிவுகள் இத்தகைய மாற்றங்களின் விளைவுகளா?

பிட்டர் மெர்டென்ஸ்: அதன் ஒரு பகுதிதான் அது. நாங்கள் ஆன்ட்வெர்ப் மற்றும் லிய்ஜ் நகரங்களில் உடைத்து முன்னேற வேண்டு மென்று விரும்பினோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட முடிவுகள் சிறப்பாக அமைந்தன. இப்போது வரவிருக்கும் 2014 நாடாளுமன்ற தேர்தல்களுக்காக  எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுள்ளோம். முதலில் உழைக்கும் மக்களிடையே கட்சியை இன்னும் எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். ஏனெனில், சமூக வரலாறு கொடுக்கும் படிப்பினை என்ன வென்றால், நாட்டில் சாதிக்கப்பட்ட முக்கிய மான சமூக சீர்திருத்தங்கள் அனைத்தும் மக்க ளிடமிருந்து எழுந்த நிர்ப்பந்தங்களின் காரண மாக ஏற்பட்டவையே என்பதாகும். பல்வேறு வகைப்பட்ட உழைக்கும் மக்கள் உள்ள நாட்டில் நம்முடைய இயக்கத்தை வளர்த்தெடுப்பது எப்படி?. உதாரணமாக ஃபோர்ட் ஜெங்க் மற்றும் அதன் காண்டிராக்டர்களையும் எடுத்துக் கொள்வோம். இந்நிறுவனங்கள் கதை முடிந்து விட்ட தாக அறிவிக்கப்பட்டு  பத்து முறைக்கும் மேலாக பத்திரிகைகள் அந்நிறுவனங்களுக்கு சமாதி கட்டிவிட்டன. ஆனால் எதிர்ப்பு உணர்வு என்பது மற்ற பகுதிகளில் இருப்பதைக் காண முடியும். ஆர்செலோர் மித்தல் மற்றும் பொதுச் சேவை நிறுவன ஊழியர்கள் ஆகியோர் மத்தியில் எதிர்ப்பு உணர்வு இருப்பதைக் காண முடியும். ஆம். எங்கள் கட்சி நெளிவு சுளிவு மிகுந்த நெழ்ச்சியான, திறந்த கட்சியாக மாறியுள்ளோம்; ஆனால் இந்த நெளிவு சுளிவுத் தன்மை எதிர்ப்பு உணர்வு சூழ்னிலைக்கு சிறந்த சேவை செய்ய உதவுகின்றது.

முதன் முறையாக பெ.தொ கட்சி உள்ளூர் மாநகராட்சி அரசில் பங்கேற்றுள்ளது, ஆன்ட்வெர்ப் மாவட்டத்தில் போர்ஜெர் ஹௌட் பகுதியில் பங்கேற்றுள்ளது.

கட்சி கூட்டணி  அமைப்பில் ஆட்சி செய்ய விரும்புகின்றதா?

பீட்டர் மெர்டென்ஸ்: நாம் ஒவ்வொன்றையும் சரியான கண்ணோட்ட்த்தில் காண வேண்டியுள்ளது. பொர்ஜெர்ஹௌட் என்பது 40,000 மக்கள் வசிக்கும் பல்வேறு வகைப்பட்ட, அதேசமயம், வயதில் குறைந்தவர் நிறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளது. அப்பகுதி பிரச்சனைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை, ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய வேறுபாடுகள், வறுமை, வீட்டுவசதிப் பிரச்சனை போன்றவை நிறைந்துள்ளன. அந்தப் பகுதியில் நாங்கள் 17 சதவீதம் வாக்குகள் பெற்றோம். ஆனால் ஆண்ட்வெர்ப் பகுதியில், 9 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் வலது சாரி கட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்தச் சூழ்நிலையில், க்ரீன் கட்சி, ஃப்லெமிஷ் சமூக ஜனநாயக கட்சி, மற்றுமொரு சுயேச்சை வேட் பாளர் ஆகியோருடன் இணைந்து முற்போக் கான கூட்டணியமைக்க தயாரா என்ற கேள்வி பெ தொ கட்சி முன் வைக்கப்பட்ட்து. நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் அப்பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தோம். போர் ஜெர்ஹௌட்டை வலது சாரி கட்சியின் கையில் விட்டு விட முடியாது. அக்கட்சியின் தலைவர் பார்ட் டி வெவெர் ஆன்ட்வெர்ப்பை சுதந்திர குடியரசு அமைப்புக்கான திட்டத்துக்கான சோதனைக்களமாக கருதுகின்றார். ஆகையால் ஆன்ட்வெர்ப் பகுதி முழுவதும், உழைக்கும் மக்களுக்கும், நகர்வாழ் மக்களுக்கும், துறைமுக பணியாளர்களுக்கும் ஆன்ட்வெர்ப்பின் ஒவ் வொரு குடிமகனுக்கும், இன்னல்கள் நிறைந்த காலமாக இருக்கும்;  போர்ஜெர்ஹௌட்டில் நாம், ந்ம்முடைய திட்டத்தின் அடிப்படையில், சமூகநலம் சார்ந்த திட்டத்தை அமல்படுத்த உதவுவோம் . நாம் இதில் எதிர் நீச்சல் போட வேண்டியுள்ளது என்பதை நன்கு அறிவோம்.

போர்ஜெர்ஹௌட் பகுதியில் நமக்கு வாக்களித்த வாக்காளர்கள் இதையே நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த கட்டமாக, அரசாங்க அமைப்பில், அதாவது, பிராந்திய தேசிய அளவில் நிர்வாகத்தில் பங்கேற்பது சாத்தியமா?

பீட்டர் மெர்டென்ஸ்: இது தற்போது நம் முன்னால் உள்ள பிரச்சனையே அல்ல. நம் முன்னால் இப்போதைக்கு எழக்கூடிய பிரச் சினையும் அல்ல. தற்போது ஐரோப்பாவில் நிலவும்  சூழ்நிலையில், ஐரோப்பிய யூனியனின் அதிகாரப்பூர்வமான கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்த விரும்பாத கூட்டணிகளில் பங்கேற்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே தோன்றுகின்றது. ஐரோப்பிய கமிஷனின் மக்களுக்கு அழிவை உண்டாக்கும் கொள்கைகளை உடைத்தெறிந்து ஒரு மாற்று  திட்டத்தை அமல்படுத்த விரும்பும் கொள்கைக்கு உறுதியான பெரும்பான்மை கிடைத்தாலன்றி, ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்ட விரும்பும் போக்குக்கு   பெரும்பான்மை கிடைத்தாலன்றி , நாங்கள் அரசில் பங்கேற்க மாட்டோம். எனவே அந்தப் பிரச்சினையே எழவில்லை. 2014-ல் லீய்ஜ் நகரில் ராவுல் ஹெட்பௌ தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்கே இப்போது நாங்கள் முன்னுரிமை கொடுக்கின் றோம். இதன் மூலம் பாராளுமன்றத்தில் இரு மொழியில் பேசும் வல்லுநர் உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் இருந்து கொண்டு நாடு முழு மைக்கும் சேவை செய்ய முடியும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: