மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தோழர் பி. சுந்தரய்யாவின் போதனை “துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு“


இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கியதிலும், அவற்றைக் கட்டியெழுப்பியதிலும், சுதந்திரத்திற்குப் பின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்களிப்புகள் எண்ணிலடங்காதவை மட்டுமல்ல, குறிப்பிடத்தக்கவைகளுமாகும். இவற்றில் பல வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய விடுதலைக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவரது பங்களிப்புகள் கணக்கில் அடங்காதவைகளாகும். அவை அனைத்தையும் இச்சிறு கட்டுரையில் கொண்டுவருவதென்பது இயலாத ஒன்று. எனவே, இன்றைய தினம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நவீன இந்தியாவை உருவாக்கியதில் மட்டுமல்ல எதிர்காலத்தில் சோசலிஸ்ட் இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை அமைத்துக் கொடுத்ததிலும் அவரது வாழ்விலும் பணியிலும் அவர் மேற்கொண்ட நான்கு மிக முக்கியமான அம்சங்கள் குறித்து மட்டும் விளக்கிடலாம் எனக் கருதுகிறேன்.

தேசிய இனப்பிரச்சனை

இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை குறித்தும் அதன் மூலமாக நவீன இந்தியாவின் அரசியல் கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்பது முதலாவதாகும்.

நமது நாடு சுதந்திரம் மற்றும் பிரிவினை அடைந்த சமயத்தில், இந்தியா, பிரிட்டிஷாரின் காலனிய நிர்வாக எல்லைகளையும், 666-க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களையும் பெற்றிருந்தது. மன்னர் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பிரச்சனையை சமாளிக்க வேண்டியிருந்தது. அநேகமாக இப்பிரச்சனை மிகவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்ட போதிலும், காஷ்மீர் பிரச்சனை போன்று இன்றளவும் நாட்டைப் பீடித்திருக்கக்கூடிய சில பிரச்சனைகளும் உண்டு. நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மன்னர் சமஸ்தானங்களும் இணைக்கப்பட்டபின் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950 இல் நிறைவேற்றப்பட்ட சமயத்தில், அதன் முதலாவது பிரிவே நமது நாட்டை, இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் என்று வரையறுத்தது. இவ்வாறு வரையறுத்த பின், இந்த மாநிலங்களை எப்படி உருவாக்குவது அல்லது வரையறுப்பது என்று இயற்கையாகவே ஒரு கேள்வி எழுந்தது.

1928 இல் மோதிலால் நேரு ஆணையம் காங்கிரஸ் கட்சி அமைப்பானது மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்த போதிலும், பிரதமரான ஜவஹர்லால் நேரு ஆரம்பத்தில் அத்தகைய அடிப்படையை ஆதரித்த போதிலும், பின்னர் தன் நிலையை மாற்றிக்கொண்டு, மாநிலங்களை மறுசீரமைப்புக்கு திறமைமிகு நிர்வாகப் பிரிவுகளையே ஏற்படுத்திட வேண்டும் என்றார். எனவே அதற்காக, ஏ,பி,சி,டி என்று மாநிலங்களை முன்மொழிந்தார்.

இந்தப் பின்னணியில் தான் தோழர் பி.சுந்தரய்யாவின் சிறுபிரசுரமான ஒன்றுபட்ட ஆந்திராவில் மக்கள் ஆட்சி (Vishalandhralo Prajarajyam – Peoples’ Rule in Unified Andhra) என்னும் நூல் நாட்டின் நிகழ்ச்சி நிரலில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு மிகவும் தெளிவான முறையில் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துத் தந்தது.

ஒரு தேசிய இனத்தை உருவாக்கிடும் முக்கியமான மூலக்கூறு மொழி மட்டுமே அல்ல. மாறாக மொழியும் ஒன்று என்கிற மார்க்சியப் புரிந்துணர்வை முன்னெடுத்துச் சென்று, தோழர் பி.சுந்தரய்யாவும் கட்சியும் இந்தியாவை பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்கான போராட்டத்தில் பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடு என்று வருணித்ததுடன், நவீன இந்தியக் குடியரசை அமைத்திட இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்கள்.

இத்தகைய நிலைப்பாடானது அன்றைய தினம் மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்த தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்திலும் தெலுங்கு பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட ஒரே பகுதி உருவாக வேண்டும் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதற்காக வெகுநாட்கள் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பொட்டி ஸ்ரீராமுலு வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து இவ்வியக்கம் உச்சத்தை அடைந்தது.

இக்கிளர்ச்சியின் விளைவுகள் நாட்டின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது. ஐக்கிய கேரளா மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகியவற்றிற்கான இயக்கங்களை மற்றவர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினார்கள்.

இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்கள்தான் இந்திய ஆளும் வர்க்கத்தினரை இந்திய மாநிலங்களை மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கச் செய்வதற்கு நிர்ப்பந்தத்தை அளித்தன. இவ்வாறுதான் 1956 இல் – சுதந்திரம் பெற்று முழுமையாக ஒன்பது ஆண்டுகள் முடிந்த பின்னர் – நவீன இந்தியாவின் அரசியல் வரைபடம் உருவானது.

நம் நாடு தழைத்தோங்க வழிவகுத்த இத்தகைய பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஒற்றுமையானது, தோழர் பி.சுந்தரய்யாவின் தொலைநோக்குப் பார்வையின் படி, பிரஜா ராஜ்யம் அல்லது மக்கள் ஆட்சி என்பதுடன் இணைய வேண்டியது அவசியம் என்பதாகும். அவ்வாறு இல்லையெனில், மொழிவாரி மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் கூட மோதல்களும் முரண்பாடுகளும் முட்டிமோதுவது சாத்தியமே என்று அவர் கூறினார்.

மக்கள் ஆட்சி இல்லையேல், வர்க்கச் சுரண்டலை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு ஏதுவாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசமைப்பு முறையையே ஆளும் வர்க்கங்கள் விரும்பும். எனவே அவை மாநிலங்களுக்கு உண்மையான சுயாட்சி அந்தஸ்தை அளிக்க மறுப்பதன் மூலம் மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளே பிற்பட்ட பகுதிகளாக விளங்கும் தெலங்கானா, விதர்பா போன்ற பகுதிகளுக்கிடையிலும் மக்களுக்கிடையே தோன்றும் இத்தகைய மோதல்களை, மக்கள் ஒற்றுமையைப் பிரித்திடவும், வர்க்க ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒற்றுமையுடன் வலுப்படுவதை சீர்குலைத்திடவும் பயன்படுத்திக் கொள்ளும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுனைப்படுத்திக் கெட்டியாக்கிக் கொள்வதற்காக, எப்போதுமே இத்தகைய மோதல்களையும் முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ளும். மக்களுக்குத் தேவையான அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்திடும், தேவையான சுயாட்சியையும் மாநிலங்களுக்கு வழங்க மறுத்திடும்.

1968 இல் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தோழர் பி.சுந்தரய்யா மத்திய, மாநில உறவுகளுக்கு இடையிலான இப்பிரச்சனையை மிகவும் சரியாக உயர்த்திப் பிடித்தார்.

மேலும், தோழர் பி.சுந்தரய்யா, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது கட்சித் திட்டத்தில் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக இருந்த ஷரத்தை நீக்குவதற்கான திருத்தத்தைக் கொண்டு வந்தார். பின்னர் இது 1972 இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் 9 ஆவது அகில இந்திய மாநாட்டில் இறுதிப்படுத்தப்பட்டது.

மீண்டும் ஒருமுறை “துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல்” என்ற விதியைச் சரியாக பிரயோகிப்பதன் மூலம், அனைத்துத் தேசிய இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமை தொடர்பாக மார்க்சிச-லெனினிசக் கருத்தாக்கம் இந்தியாவில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்குப் பொருந்தாது என்ற முடிவுக்குக் கட்சி வந்தது.

கொடுமைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கும் அதன் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக அது பிரயோகிக்கப்படுவதால், அது இந்நாட்டிற்குப் பொருந்தாது என்று கட்சி நிலை எடுத்தது.

இன்றைய நிலையில் உள்ள இந்திய ஒன்றியத்திலும் கூட இந்த முழக்கம் அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு முன்னிருந்ததைப் போல ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று அல்ல என்றும், அதன் பின்னர் கொடுமைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு எதிரான (oppressornation) ஒன்றுமல்ல என்றும், (ஏனெனில் அப்படி ஒரு தேசம் எந்த வடிவத்திலும் இங்கே இல்லை என்றும்) அப்போது கட்சி முடிவெடுத்தது. இதனை விளக்கும் விதத்தில் கட்சி ஆவணத்தில், பல்வேறு மொழிவாரி இனங்களின் தற்போதைய நிலைமைகளும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அவை மேற்கொள்ளும் போராட்டங்களும் இந்திய ஒன்றியத்தில் உள்ள கொடுமைப்படுத்தும் குறிப்பிட்ட ஒரு தேசத்திற்கு எதிரான ஒன்று அல்ல என்றும், மாறாக அது பொருளாதாரப் பின்தங்கிய நிலைமைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் நடத்திடும் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியே யாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆவணத்தில், இவ்வாறு அனைவராலும் நடத்தப்படும் பொதுவான போராட்டம் இந்திய ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்து வைப்பதன் மூலமே எளிதாய்ச் செய்து முடிக்க முடியும். அதற்கு மாறாக, பிளவுபடுத்தும் சக்திகளின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு, போராடும் மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் உதவிடும். என்றும் குறிப்பிட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் இந்த ஒற்றுமைதான், மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்கான வல்லமையாகும். மாறாக ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தங்களிடமே குவித்து வைத்துக் கொண்டுள்ள போக்குகள் பல்வேறு மாநிலங்களில் மாநிலங்களுக்குள்ளேயே பிற்பட்ட பல பகுதிகள் நிலையாக இருப்பதற்கும், இதன் காரணமாக மக்கள் மத்தியில் எழுந்த மோதல்களையும் முரண்பாடுகளையும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்வதற்கும் வழிவகுத்துத் தந்துள்ளதை உழைக்கும் மக்கள் ஒற்றுமை மூலமாகத்தான் முறியடித்திட முடியும். இத்தகைய மக்களாட்சி இந்தியாவில் மலரக்கூடிய விதத்தில் தோழர் பி.சுந்தரய்யாவின் வாழ்வும் பணியும் நமக்கு என்றென்றும் உத்வேகம் ஊட்டும்.

நிலப் பிரச்சனை

தோழர் பி.எஸ். எடுத்துக் கொண்ட இரண்டாவது பிரச்சனை மக்களாட்சி என்னும் மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதுடன் அதனுடன் மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாகும்.

அதாவது தோழர் பி.எஸ் எடுத்துக் கொண்ட இரண்டாவது நிகழ்ச்சி நிரல் நிலப் பிரச்சனையாகும். வீரம்செறிந்த தெலங்கானா ஆயுதப் போராட்டத்தை நடத்திய முன்னணித் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஹைதராபாத் நிஜாம் என்னும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலனின் ஆட்சியை அடித்து நொறுக்கி, ஜமீன்தாரி அமைப்பு முறையை முற்றிலுமாக அழித்து, மக்களாட்சியை நிறுவி, மூன்று ஆண்டுகளில் நான்காயிரம் கிராமங்களை விடுவித்து, உழுபவர்களுக்கே நிலங்களைச் சொந்தமாக்கி, மக்களாட்சியை நிறுவினார்.

இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமானவகையில் நிலப் போராட்டங்கள் வெடித்தன. கேரளாவில் புன்னப்புரா வயலார், மகாராஷ்ட்ராவில் வார்லி ஆதிவாசிக் கலகம், பஞ்சாப்பில் சிறந்த வாரத்திற்கான இயக்கம் (anti-betterment levy), வங்கத்தில் நாலில் மூன்று பங்கு வாரம் கோரி நடைபெற்ற தேபகா (Tebhaga) இயக்கம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கு போராட்டங்கள் என நிலம் சம்பந்தமாக வீரம் செறிந்த எண்ணற்ற போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றன. நிலத்திற்கான இப்போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்டன.

இப்போராட்டங்கள் தான் இந்திய ஆளும் வர்க்கத்தினரை ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர நிர்ப்பந்தித்தன. ஆயினும் (ஆளும் வர்க்கக் கூட்டணியில் நிலப்பிரபுக்களும் ஓர் அங்கமாக இருந்ததால்) நடைமுறையில் இந்தச் சட்டம், இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தவிர வேறெங்கே யுமே அமல்படுத்தப்படவில்லை.

நிலப்பிரச்சனைக்குத் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்களிப்பு என்பது நிலப் பிரபுத்துவத்தை ஒழித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் தெலங்கானாவில் உழுபவனுக்கு நிலத்தைக் கொடுத்து, மக்களாட்சியை நடத்திக் காட்டிய சமயத்தில், நிலம் மற்றும் உழைப்பாளிகளின் உற்பத்தித்திறன் கணிசமான அளவிற்கு அதிகரித்தது. இவ்வாறு அவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலம் பொருளாதார ஆதாயத்தையும் அதிகரித்துக் காட்டினார். இதன் மூலம் அவர் சமத்துவ சமுதாயத்தின் கொள்கைகள் எந்த அளவிற்குப் போற்றத்தக்கது மற்றும் அவசியமானது என்பதையும் மக்களுக்கும் சமூகத்திற்கும் எடுத்துக் காட்டினார்.

ஜனநாயகத்தின் மூலவேர்கள் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தை விட இந்தியாவில் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கும் இவைதான் முக்கிய காரணங்களாகும். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் போது இந்தியத் துணைக் கண்டத்தில் இந்நாடுகள் அனைத்தும் அவர்களின் ஒரே குடையின் கீழ் இருந்தவை என்ற போதிலும், சுதந்திரத்திற்குப் பின் அவை வழி விலகிச் சென்றதற்கு இந்தியாவில் நடைபெற்றதைப் போன்ற இயக்கங்கள் அங்கே நடை பெறாததே முக்கிய காரணமாகும்.

பெயரளவில் என்றாலும் கூட ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டிருப்பதானது, உழைக்கும் மக்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரில் பெரும் பகுதியினர் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில், ஜனநாயக உரிமைகளின் அனுகூலங்களையும் மதிப்பையும் நன்கு அறிந்து கொண்டு முன்னேறுவதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்துள்ளது.

1975 இல் இந்திரா காந்தியால் அவசரநிலைப் பிரகடனம் திணிக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக முறியடிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இது அமைந்தது. பாகிஸ்தானோ, வங்கதேசமோ தங்கள் நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திடக் குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன என்று நாம் கம்பீரமாகக் கூறும் அதே சமயத்தில், நிலப்பிரபுக்களால் சட்டவிரோதமாகவும் உச்ச வரம்புச் சட்டத்திற்கு மேலேயும் வைத்திருந்த நிலங்களைத்தான் கையகப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகித் திருக்கிறோம் என்பதையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நிலங்கள் மட்டுமே நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலப்பிரபுக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற அடிப்படைப் பணி இன்னமும் முழுமையாக நிறைவேறாமலேயே இருக்கின்றன. ஜனநாயக விவசாயப் புரட்சியை முழுமையாக்கு வதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்வேகத்தை அளித்திட தோழர் பி.எஸ். வாழ்வும் பணியும் நமக்கு என்றென்றும் துணைநிற்கும்.

சமூக நீதிக்கான போராட்டம்

மூன்றாவதாக, சமூக நீதி மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தோழர் பி.எஸ் செலுத்திய பங்களிப்பு என்பது மிகவும் ஆழமானதும் விரிவானதுமாகும். தனிப்பட்ட முறையில் அவர் தன்னுடைய பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த ரெட்டி என்ற சாதிப் பெயரை வெட்டி எடுத்து, சாதி வெறிக்கு எதிரான தன் உறுதியான நிலையை சமூகத்தின் மத்தியில் நிலைநிறுத்தினார். இது, என்னைப் போன்றே பல தலைமுறையினருக்கு சாதி அடையாளத்தைக் கைவிட உத்வேகம் அளித்தது.

மக்களாட்சிக்கான போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் அவர் கருதிய தோடு, நடைமுறையிலும் உழைக்கும் மக்களே ஒன்றுபடுங்கள் (‘unity of the toilers’) என்ற முழக்கத்தினை முன்வைத்து, அனைவரையும் சாதி வித்தியாசமின்றி மிகவும் வலுவான முறையில் ஒன்று திரட்டினார். தெலங்கானா போராட்டக் காலத்தின் போது, இத்தகைய உழைக்கும் மக்கள் ஒற்றுமை வெற்றியையும் புகழையும் தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், சாதி மற்றும் சமூக அடையாளங்களைப் பின்னுக்குத் தள்ளவும் வழிவகுத்தது.

இன்றைய நிலையில், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் மற்றும் தலித்துகள் மத்தியில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இது ஓர் ஆக்கபூர்வமான அம்சம்தான். ஆனால், அதே சமயத்தில், சாதி உணர்வுகளையும் சாதி அடிப்படையில் ஒரு சமூக அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய சக்திகள் மக்களை பொதுவான ஜனநாயக இயக்கத்திலிருந்து கத்தரித்துத் தனியே கொண்டு செல்ல முயல்கின்றன. மேலும் இத்தகைய போக்கானது, சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு குழுவினரை அவ்வாறே சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மற்றொரு குழுவினருடன் மோதச் செய்யக்கூடிய ஆபத்தையும் கொண்டு வருகிறது. எனவே, இத்தகைய எதிர்மறைப் போக்குகள் ஆளும் வர்க்கத்தினர் தங்கள் வர்க்க ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கே வலிமையை அளித்திடும்.

தோழர் பி.எஸ். அவர்களின் வாழ்விலிருந்தும், பணியிலிருந்தும் கற்றுக் கொண்டு, இத்தகைய மக்கள் பிரிவினர் அனைவரையும் பொது ஜனநாயக இயக்கத்தில் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளில் கடுமையாக ஈடுபட வேண்டும். பொது ஜனநாயக இயக்கமும் கட்சியும் சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டத்தை, பொருளாதாரச் சுரண்டலுக்கான போராட்டத்தோடு சரியாக இணைக்கும் போது தான் இதனை வெற்றிகரமான முறையில் நடத்திட முடியும். புரட்சிக்கான அச்சாக விளங்கும் தொழிலாளர் – விவசாயிக் கூட்டணியைக் கட்ட இது ஒன்றே வழியாகும்.

கட்சி ஸ்தாபனம் குறித்து

நிறைவாக, தோழர் பி.எஸ். ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு அவசியம் என்றும், அதில்லாமல் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் எப்போதுமே நமக்கு நினைவுபடுத்தி வந்தார். வலுவானதோர் ஸ்தாபனமில்லையேல், கட்சியால் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாமல் போகுமாதலால், சரியானதொரு அரசியல் நிலைப்பாடும் கூட அர்த்தமற்றதாகிவிடும். புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி முன்வைக்கும் முழக்கங்களை மக்கள் தாங்களே எழுப்பக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் மக்களைத் தயார்படுத்திட வேண்டும். இதனை எய்திட வேண்டுமெனில், துல்லியமான நிலைமைகளை அடிக்கடி ஆய்வு செய்வது அவசியமாகும். உதாரணமாக, நிலத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து, பணக்கார விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாட்டை தோழர் பி.எஸ். அடையாளம் கண்டார். பணக்கார விவசாயிகளைப் பொறுத்தவரை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைக்க விரும்பினார்கள். விவசாயத் தொழிலாளர்களோ கூலி உயர்வுக்கான போராட்டத்தை நடத்த விரும்பினார்கள். இவர்கள் இருவருமே ஒரே ஸ்தாபனத்திற்குள் இருந்ததால் ஸ்தாபனம் விரும்பிய விளைவினை உண்டு பண்ணுவதற்கு இயலாததாக இருந்தது. இவ்வாறு துல்லியமான நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், தோழர் பி.எஸ். விவசாய சங்கத்திலிருந்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தனியே பிரித்து அமைத்திட வேண்டும் என்று வாதிட்டார்.

அதேபோன்று, இந்திய இளைஞர்கள் மத்தியிலும் படித்த இளைஞர்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் படிக்காத இளைஞர்களும் இருப்பதையும் அவர் அடையாளம் கண்டார். படித்தவர்களுக்கு மாணவர் சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், படிக்காத இளைஞர்களைப் பொறுத்தவரை எவ்விதமான அமைப்பும் இல்லாமலிருந்தது. எனவேதான் அவர் இளைஞர்களுக்கான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முன்வந்தார். இவ்வாறு, உழைப்பாளிகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்துவதற்குத் தேவையான ஸ்தாபனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு துல்லியமானப் பங்களிப்புகளை அவர் புரிந்துள்ளார்.

அரசியல் நிலைப்பாட்டிற்கும் ஸ்தாபன நடைமுறைக்கும் இடையிலான இயக்கவியல் தொடர்புக்கு  (dialectical linkage), சமூகத்தில் வர்க்கங்களுக்கு இடையே, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் குணாம்சங்களைப் புரிந்து கொள்ள துல்லியமான ஆய்வுகளை நடத்திட அவர் கொடுத்து வந்த அழுத்தம் அவரது பங்களிப்பின் மற்றோர் அம்சமாகும்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ரஷ்யாவில் விவசாயிகள் இடையேயிருந்த வித்தியாசங்களையும் துல்லியமாக ஆய்வு செய்ததன் மூலமாகத்தான் ரஷ்யப் புரட்சி வெற்றி சாத்திய மானது என்கிற லெனினது செயல்பாட்டிலிருந்து நன்கு பாடம் கற்றுக் கொண்ட தோழர் பி.எஸ். இங்கும் கிராமங்களில் ஏற்பட்டு வரும் வேறுபாடுகளையும் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஸ்தாபன நடைமுறையில் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் நன்கு புரிந்துகொள்வதற்காக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தத் தேவையான அளவிற்கு இதனைத் தொடர முடியவில்லை. இது அவசரரீதியில் சரி செய்யப்பட்டாக வேண்டும்.

குறிப்பாக, நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இக்காலகட்டத்தில் இது மிகவும் அவசியமாகும். ஓர் உதாரணம் மூலமாக இதனை விளக்கலாம் என்று கருதுகிறேன். சில பத்தாண்டுகளுக்கு முன்னால், உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், கட்சியை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் அமைப்பும் இயக்கமும் முக்கியமான பங்கினை ஆற்றின. முப்பதாண்டுகளுக்கு முன்னால் அவர்கள் வாங்கிய ஊதியம் என்ன? இன்று அவர்கள் வாங்கும் ஊதியம் என்ன? ஒப்பிட்டுப் பாருங்கள்.

இன்றையதினம் அது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இத்தகைய வருமானத்துடன் உள்ள அவர்களின் விருப்பங்கள் பங்குச்சந்தை (Sensex) பக்கம் திரும்புவது இயற்கையேயாகும். நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தாங்கள் வாங்கியுள்ள பங்குகளுக்கு கூடுதலான தொகைகளைக் கொண்டுவந்து கொட்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய மனோபாவங்கள் இன்றையதினம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒரு வர்க்க வேறுபாடு (class differentiation) வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக்கோபமும் கிடையாது. மாறிவரும் சூழ்நிலைகளில் அவர்கள் முக்கியமானதோர் பங்கினை ஆற்றி இருக்கிறார்கள். இன்றைய ஆசிரியர்கள் அவர்களுடைய வாழ்வாதாரங் களையும், போராட்டங்களையும் பாதிக்கக்கூடிய விதத்தில் புதுவிதமான பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இத்தகைய நிலைமைகளின் கீழ்தான், நம்முடைய கோரிக்கைகளுக்கான உடனடி முழக்கங்களையும், கிளர்ச்சிக்கான வடிவங்களை யும் நடைமுறைகளையும் மிகவும் சரியான விதத்தில் உருவாக்குவதற்கு, துல்லியமான நிலைமைகளின் கீழ் துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் இந்திரஜித் குப்தா ஒருமுறை கூறினார். தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு ஒருவர் பயணம் செய்கிறபோது ரயில்வே லைனின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் அநேகமாக அவர்கள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்களாகவும் எம்பி-க்களாகவும்தான் இருப்பார்கள் என்றார். ஆனால் இன்றைய நிலை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகள் தோன்றிவிட்டன என்று மேலெழுந்தவாரியான விளக்கங்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாகவோ (comprehensively) அல்லது அறிவியல் பூர்வமாகவோ (scientifically) விளக்கிடாது. நமது வர்க்கங்களுக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்க வேறுபாடுகள் குறித்து மிகவும் துல்லியமான முறையில் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ஒருகாலத்தில் செங்கொடியின் கீழ் அணி திரண்டவர்கள் இப்போது மற்ற முதலாளித்துவ கட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. உதாரணமாக, சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வளர்ந்து கொண்டிருப்பது போன்று மேலும் சில பிரச்சனைகளும் இருக்கின்றன.

எகிப்தில் தாஹ்ரீர் சதுக்கத்திலும், வங்கதேசத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஷாபாக் இயக்கத்திலும் மிகவும் வித்தியாசமான விதத்தில் மக்கள் எப்படி அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். இவை குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இவை எவ்வாறு நடை பெற்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமல்ல, நம் நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இவற்றைப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற் காகவும் இவற்றை நாம் ஆய்வு செய்திட வேண்டும்.

“துல்லியமான நிலைமைகள் குறித்துத் துல்லியமான ஆய்வு மேற்கொள்வது என்பது இயக்கவியலின் ஜீவனுள்ள சாரம்” (“concrete analysis of concrete conditions, is the living essence of dialectics”) என்று லெனின் ஒருமுறை கூறினார். லெனின் கூறிய இவ்வழிகாட்டுதலின் படி தான் தோழர் பி.எஸ். வாழ்வும் பணியும் இருந்தது என்பது நான் மேலே விவரித்த அவரது நான்கு அம்சங்களிலிருந்தும் நன்கு தெளிவாகும். இன்றையதினம், அவரது பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், இத்தகைய புனிதமான லெனினது கொள்கையை ஆறத்தழுவிக் கொள்ளவும், நம் நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் நாம் எடுத்துக் கொண்டுள்ள உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்வோம்.

தோழர் பி.சுந்தரய்யாவுக்கு செவ்வணக்கம் !

சீத்தாராம் யெச்சூரி

(தமிழில்: ச.வீரமணி)Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: