மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்


 

மார்க்சிய இலக்கியம் எனும் சொல்லாட்சியில் இரு அம்சங்கள் உள்ளன: ஒன்று: வாழ்வு பற்றிய கண்ணோட்டம்: இரண்டு: இலக்கியம் பற்றிய கண்ணோட்டம்.

மனித வாழ்வின் சகல கூறுகளையும் பொருளாதாரமே தீர்மானிக்கிறது என்பது தான். அது பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்பதாக அது உருவான காலத்திலேயே பேச ஆரம்பித்தார்கள். இதை அப்போதே சட்டென்று மறுத்துக் கூறினார் மார்க்சின் மனசாட்சியாகத் திகழ்ந்த ஏங்கெல்ஸ். ஜோசப் பிளாக்கிற்கு அவர் எழுதிய (21-9-1890) கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார்.

இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி என்பதற்கும் ஒரே காரணி என்பதற்கும் மலையளவு உயரத்திற்கும் கடலளவு அகலத்திற்கும் வேறுபாடு உண்டு. அதே கடிதத்தில் மனித வாழ்வைத் தீர்மானிக்கிற இதர காரணிகள் பற்றி – தனி மனிதர்கள் மற்றும் அவர்களது சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளிட்ட இதரவை பற்றி – பட்டியலிட்டுச் சொல்லி இறுதியாக அதிலே பொருளாதார இயக்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்றார் அந்த இரட்டை மாமேதைகளில் ஒருவர்.

வாழ்வு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தின் சாரம் இதுதான். உவமைகள் எல்லாம் குறையுடையவையே என்பார்கள். இந்தக் கண்ணோட்டத்தை விளக்கப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் உதாரணத்தை – அஸ்திவாரம், மேற்கட்டுக்கோப்பு எனும் விவரணத்தை – சிலர் இயந்திரகதியில் புரிந்து கொண்டார்கள். அதிகாரத்தின் மீது செல்வாக்கு செலுத்தாத மேற்கட்டுக்கோப்பாக – பொருளியல் வாழ்வு மீது இதர காரணிகளுக்கு பங்களிப்பே இல்லை என்பதாக –புரிந்து கொண்டார்கள். இதைத்தான் ஏங்கெல்ஸ் தனது காலத்திலேயே சரி செய்தார். பல காரணிகளுக்கிடையே பரபர செல்வாக்கு நடக்கிறது. முடிவில் அங்கே பொருளியல் காரணி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்ன?

ஒரு சிந்தனைத்துறை என்ற முறையில் ஒரு காலகட்டத்திய இலக்கியத்தில் அந்தக் காலகட்டத்திய ஆளும் வர்க்கத்தின் சிந்தனையே ஆளுகை செலுத்துகிறது. வாழ்வைப் பிரதிபலிப்பதே, அதைப் போலி செய்து மறுஉருவாக்கம் செய்வதே. அப்படிச் செய்யும் போது படைப்பாளி தனது கைச்சரக்கையும் – கற்பிதத்தையும் – சேர்ப்பதே இலக்கியம் என்பதால் வர்க்க சமுதாயம் எனும் வாழ்வின் அடிப்படை உண்மை அதிலும் தனது இயங்கு நிலையைத் தக்கவைத்துக் கொள்கிறது.

அதேநேரத்தில், மற்றொரு உண்மையும் உள்ளது. மனிதனின் கலை-இலக்கியப் படைப்பாற்றல் வளர்ந்ததற்கு உழைப்பின் மகத்தான பங்கு உண்டு என்பதை 1844-லேயே உணர்ந்து கூறினார் மார்க்ஸ். அவ்வமயம், “அழகின் விதிகளுக்கு (Laws of Beauty) ஏற்பவே அந்தப் படைப்பு வேலை நடக்கிறது என்பதையும் சேர்த்தே  கூறினார். “சமுதாய விதிகள்” (Laws of Society) எனும் பரந்த யதார்த்தத்தின் ஊடே இந்த அழகின் விதிகளையும் இயல்பாகக் கைவரப் பெற்று அல்லது முயற்சி செய்து, கற்று ஒரு படைப்பாளி தனது சிருஷ்டியை வார்த்தெடுக்கிறான். அப்போதுதான் இலக்கியமானது இதர அறிவுத் துறையிலிருந்து தனித்து வெளிப்படுகிறது. வெறும் பேச்சிலிருந்து – சைகையிலிருந்து கலையும், வெறும் எழுத்திலிருந்து – உரை நடையிலிருந்து இலக்கியமும் வேறுபடும் இடம் அதுதான். இதர அறிவுத்துறைகள் தராத கலை இன்பம் – இலக்கிய இன்பம் என்பதை அது தரவேண்டும். அதை வரவழைப்பதற்கான வித்தையின் தொகுப்பே அழகின் விதிகள், அதாவது அழகியல் எனப்படுவது.

மார்க்சிய இலக்கியமானது தனது உள்ளடக்கமாக உழைப்பாளி வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது என்றால், தனது உருவமாக முழு மனிதகுலமும் காலப்போக்கில் உருவாக்கிய அழகியல் விதிகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் முயங்கி எழுந்த யதார்த்தவாதம் எனும் இலக்கியக் கோட்பாட்டை வரித்து அதே மனிதகுலத்திற்கு – குறிப்பாக உழைப்பாளி வர்க்கத்திற்கு – அது அருமையான கலை-இலக்கியப் படைப்புகளை அள்ளித் தருகிறது.

யதார்த்தவாதம் என்பது வாழ்வின் மெய்ம்மைகளை சார்பு இன்றி விண்டு காட்டுவதாகவும் இருக்கலாம், உழைப்பாளி வர்க்க சார்பு நிலை எடுத்து அவற்றை விமர்சனப்பூர்வமாகச் சித்தரிப்பதாகவும் இருக்கலாம். பின்னதை விமர்சனப்பூர்வ யதார்த்தவாதம் என்கிறோம். இவற்றின் அடுத்த நிலையாக, வாழ்வின் அவலமான மெய்ம்மைகள் அவற்றின் உள் முரண்களால் மோதி உடைந்து இன்னும் சிறந்த சமுதாயம் நோக்கி நகர்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்வது அமைகிறது. அதையே சோசலிச யதார்த்தவாதம் என்கிறோம்.

மின்னாகாட்கி என்பாருக்கு அவரது நாவல் பற்றி எழுதியபோது இந்த அர்த்தத்திலேயே சோசலிச பிரச்சனை நாவல் எனும் சொல்லாடலை ஏங்கெல்ஸ் பயன்படுத்தியிருக்கிறார். தான் சித்தரிக்கிற சமூக முரண்பாடுகளின் எதிர்கால வரலாற்றுத் தீர்வை சொல்லுகிற படைப்பையே அவர் அப்படி அழைத்தார். அதை வெளிப்படையாகப் படைப்பாளி சொல்லாமல் – ஒரு தாம்பாளத்தில் வைத்து  வாசகன் முன் நீட்டாமல் கதைச் சூழலிலிருந்தும் பாத்திரங்களின் செயல்பாடுகளிலிருந்தும் – வெளிப்பட வேண்டும் என்று அவர் அதற்கான அழகியல் விதியைக் அருமையாக வகுத்துக் கொடுத்தார்.

ரஷ்யாவில் புரட்சி வெற்றிபெற்று, கம்யூஸ்னிட் கட்சி அங்கே சோசலிச நிர்மாணத்தில் இறங்கிய போது, புதிய சமுதாயத்திற்கான எதிர்கால நம்பிக்கை துவக்கமாக வெளிப்பட்டபோது இத்தகைய யதார்த்தவாதத்தின் கூடுதல் தேவை  முன்னுக்கு வந்தது. அந்த 1936 இல் சோவியத் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டில் – மாக்சிம் கார்க்கி சோசலிச யதார்த்தவாதம் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்.

உலக வாழ்வின் மகத்தான மகிழ்ச்சிக்கான தனிமனித ஆற்றல்களின் தடையற்ற வளர்ச்சியே இதன் நோக்கமாகும் என்று அதற்கு இலக்கணம் தந்தார்.

ரஷ்ய எழுத்தாளர்களின் இரண்டாவது மாநாட்டில் (1965) பேசிய மகத்தான இலக்கிய வாதியாகிய ஷோலக்கோவ் புதியதோர் உலகைப் படைப்பதில் சிறப்பாக மனிதனுக்கு உதவி செய்கிற எந்தக் கலையும் சோசலிச யதார்த்தவாதக் கலையே என்று அதற்கு  இன்னும் அகலமான அதிவாரம் போட்டார்.

ஆக, மார்க்சிய இலக்கியம் என்பது யதார்த்தவாதம் – விமர்சனப்பூர்வ யதார்த்தவாதம் – சோசலிச யதார்த்தவாதம் என்று அதன் சகல கூறுகளையும் உள்ளடக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தகைய இலக்கிய ஆக்கமானது வெகுகாலமாகவே நடந்து வந்தது என்றாலும் 1975-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைந்தது அதற்கு ஓர் புதிய  உத்வேகத்தைத் தந்தது. அந்த அமைப்பின் கொள்கை அறிக்கையானது மார்க்சிய இலக்கியம் பற்றிய கொள்கைச் சாரத்தை எல்லாம் உள்வாங்கியும், தற்போதைய இந்திய – தமிழக நிலைமைக்கு ஏற்ப அதைப் பிரயோகிக்கும் வகையிலும் அன்று இப்படிக் கூறியது: வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதைச் சித்தரிப்பதோடல்லாமல்  அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தங்களது படைப்புகளில் கோடிட்டுக் காட்டுவதன் மூலமே ஓர் எழுத்தாளர் தனது சமுதாயக் கடமையை முழுமையாகச் செய்ய முடியும். இதையே இலக்கியத்தில் சோசலிச யதார்த்த அணுகுமுறை என்று கூறுகிறோம். எனினும், இன்றுள்ள நிலைமையில் முற்போக்கு எழுத்தாளர்களாகிய நம்மிடையே யதார்த்த சித்தரிப்பு என்ற அணுகுமுறையினைப் பொதுவாக நிலவ வேண்டிய வழிமுறையாகக் கொள்கிறோம்.

யதார்த்தவாதத்தைப் பொது நோக்காகவும், சோசலிச யதார்த்தவாதத்தை லட்சிய இலக்காகவும் கொண்டு படைப்புத் தொழிலில் இறங்கச் சொன்ன அமைப்பு தமுஎச என்பதால் அதில் இணைந்த மார்க்சிய இலக்கியவாதிகள் தமது சிருஷ்டி ஆக்கத்தில் தீவிரமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டார்கள். சிறுகதை, கவிதை, நாவல் எனும் இலக்கியத்தின் அந்த மூன்று துறைகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள்.

1990 இல் தமுஎச படைப்பாளிகளின் முதல் சிறுகதைத் தொகுப்பாகிய புதிய காற்று வந்தது. பின்னர் விரியும் சிறகுகள்,  தொடரும் வெளிச்சம், ஆடிப்பெருக்கு என்று மொத்தம் நான்கு தொகுப்புகள் வந்தன. இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் கூட சில உண்மைகள் சட்டென்று புலப்பட்டன. கந்தர்வன், மேலாண்மை, டி.செல்வராஜ், காயபன், தமிழ்ச் செல்வன், வேல.ராமமூர்த்தி, முத்துநிலவன், மாதவராஜ், பிரேமா, பவா.செல்லதுரை, தேனி சீருடையான், ஷாஜஹான், காமுத்துரை, உதய சங்கர், அல்லி உதயன், ரோஜாகுமார்,  கிருஷி, கமலாலயன் போன்றோரைக் கொண்ட ஒரு பட்டாளம் விடாதோ அல்லது விட்டுவிட்டோ சிறுகதை உலகில் சஞ்சரித்து வந்தது.

சஞ்சாரம் என்றால் ஏதோ என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்கிற மாதிரியாக அல்ல.  படைப்புத் தொழிலில் புதுப்புது சிகரங்களைத் தொட்டார்கள். விதவிதமான விஷயங்கள், வகைவகையான மனிதர்கள் இந்தக்  குயவர்கள் கையில் கச்சாப் பொருளாகி, சிருஷ்டி எனும் வண்டிச் சக்கரத்தில் சுழன்று அழகழகான பூஜாடிகளும், பயனுள்ள பாண்டங்களும் வந்தன.

தொடக்க காலத்திலிருந்தே சிறுகதை எழுத்தாளர்களைப் போலக் கவிஞர்களும் தமுஎச-வில் அதிகம் இருந்தனர். தமிழில் புதுக்கவிதைக்கு வழிவிட்டு மரபுக் கவிதை ஒடுங்கிக் கொண்ட போது தமுஎசவிலும் அதுவே நடந்தது. எவரும் கையாளத்தக்க எளியதாய்க் கவிதை ஆகிப்போனது. அதற்காக, எவரும் வெற்றி பெறத்தக்க துறையாக அது மாறிவிடவில்லை. அப்போதும் சில கவிஞர்களே அல்லது பல கவிதைகளே இந்தக் கலையின் அரசியைக் கட்டியாண்டார்கள். கட்டியாண்டன. கந்தர்வன், வெண்மணி, ஜீவி, சு.வெங்கடேசன், நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம், வல்லம் தாஜுபால், சூரியதா, முருகேஷ் கம்பம் மாயவன், வெண்ணிலா, ஸ்ரீரசா, இரா.தெ.முத்து போன்றோர் புதுக்கவிதையில் தடம் பதித்தார்கள் என்றால் நவகவி, நா.வே.அருள், வையம்பட்டி முத்துச்சாமி போன்றோர் அப்போதும் மரபுக்கவிதையை விட்டுவிடாது அதில் வெற்றிக்கொடி நாட்டினார்கள். குழந்தை இலக்கியமானது மரபுக் கவிதையின் ஒரு கிளையாகவே இருக்கமுடியும். குழந்தைகள் மனதில் கவிதை ஏறி உட்கார சந்தநயம் கூட்ட வேண்டியது அவசியம். அதை உணர்ந்து பாப்பா பாட்டு பாடினார்கள் நன்மாறன், எரியீட்டி, கு.பாரதிமோகன், புதுச்சேரி ஆ.கோவிந்தராஜுலு போன்றோர்.

நாவல்துறையில் துவக்கம் முதலே நமக்கு நல்ல வழிகாட்டிகள் உண்டு. கு.சின்னப்ப பாரதியின் தாகம், சங்கம், டி.செல்வராஜின் மலரும் சருகும், தேநீர், கே.முத்தையாவின் உலைக் களம் ஆகியவை தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. மேலாண்மையின் முற்றுகை, இனி பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றவை.  தமுஎச நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற மணிவண்ணனின் ஓரடி முன்னால, இரண்டாம் பரிசு பெற்ற முகிலின் ஞானம் புதுசு மூன்றாம் பரிசு பெற்ற சீருடையானின் கடை ஆகிய மூன்றுமே மிகத் தகுதிவாய்ந்த படைப்புகளாக இருந்தன. சோலைசுந்தர பெருமாளின் செந்நெல் நம்மிடையே இருந்த வெகுநாளைய ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது. வெண்மணிக் கொடூரம் பற்றி தமுஎசவினர் யாரும் நாவல் படைக்கவில்லையே எனும் ஆதங்கத்தைப் போக்கியது.

இப்படிக் காரியமே கண்ணாக மார்க்சிய எழுத்தாளர்கள் சிருஷ்டி உலகில் பயணப்பட்டு வந்தபோது சில கொள்கைப் பிரச்சனைகள் கிளம்பின. தமிழ் இலக்கிய உலகில் எழுந்த அவற்றை தமுஎச எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துணிவோடு எதிர்கொண்டது. 1996 இல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதன் ஏழாவது மாநில மாநாடு தலித்தியம், பெண்ணியம் எனும் இரு இலக்கியச் சிந்தனைகளை உற்சாகத்தோடு உள்வாங்கியது. அவற்றை யதார்த்தவாதம் எனும் அடிப்படை இலக்கியக் கோட்பாட்டிற்கு எதிரானவையாகப் பார்க்காமல், அதன் இயல்பான உட்கூறுகளாக அவதானித்தது.

மனித சமுதாயம் அடிப்படையில் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளது என்றாலும், அதற்குள்ளேயே சாதி, பால் போன்ற உப பிரிவுகள் இருக்கின்றன. வாழ்க்கை இப்படிக் கிடக்கும் போது அதைப் பிரதிபலிக்கிற இலக்கியத்தில் மட்டும் உபபிரிவுகள் எப்படி இல்லாமல் போகும்? விரிந்தும், நுணுகியும் வாழ்வை அலசுகிற படைப்புலகின் தனித்தன்மையின் விளைவுகளே யதார்த்தவாதமும் அதன் உட்கூறுகளும் என்பதை மாநாடு சுட்டிக்காட்டியது.

அதே நேரத்தில், வர்க்கப் போராட்டத்தையும் சாதி – ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று முரணாகப் பார்த்து ஒடுக்கப்பட்ட மாந்தரைத் தனித்து  ஒதுக்குகிற வேலையை மாநாடு ஏற்கவில்லை. அந்தப் போக்கு தலித்துகள் எழுதுவதே தலித் இலக்கியம் என்றும், பெண்ணின் மனோநிலையை ஆனால் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது என்றும் ஒருவித இலக்கிய உத்தரவுகளாகவே தமிழகத்தில் உலாவந்தது. இதை தமுஎச மாநாடு ஏற்கவில்லை.

தலித்துகள் பற்றி தலித்துகளே, பெண்கள் பற்றி பெண்களே எழுதினால் சொந்த அனுபவம் பேசும் என்பது உண்மையே. ஆனால் படைப்புத் தொழில் எனும் வினோத வித்தைக்கு அது மட்டுமே போதுமானதல்ல, அதற்கு அழகியல் விதிகளைப் பிரயோகிக்கும் ஆற்றலும் வேண்டும். அந்த இரண்டும் சேர்ந்து படைக்கப்படுமேயானால் நிச்சயம் அது தனிச்சிறப்போடு திகழும், அத்தகைய படைப்புகளை தமுஎச உற்சாகத்தோடு வரவேற்கும்.

அதற்காக மற்றவர்கள் அந்த விஷயங்களுக்குள் நுழையவே கூடாது என்று தடை விதிப்பது நியாயமல்ல. ஒரு பகுதி மாந்தர்களின் வாழ்வைக் கருப்பொருளாகக் கொள்ள முயலுகிற படைப்பாளி கள ஆய்வின் மூலமும், கூர்ந்த கவனிப்பின்  மூலமும், மனோரீதியாக அதே மாந்தர்களாகக் கூடுவிட்டுக் கூடு பாய்வதன் மூலமும் தமக்குச் சொந்த அனுபவம் இல்லாததை ஈடுகட்ட முடியும். அற்புதமான பெண் பாத்திரங்களைப் படைத்த உலகப் புகழ்பெற்ற ஆண் எழுத்தாளர்களும், அருமையான கறுப்பினப் பாத்திரங்களைப் படைத்த அமெரிக்க – ஐரோப்பிய வெள்ளை இன எழுத்தாளர்களும், துடிப்பான தலித் பாத்திரங்களைப் படைத்த தலித் அல்லாத இந்திய எழுத்தாளர்களும் அந்தப்படியாகவே தங்களின் சிருஷ்டித் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை இப்படிப்பட்ட சட்டாம்பிள்ளைத் தனமான  ஆணைகளைச் சொல்லிக் கெடுத்துவிட வேண்டாம் என்று மாநாடு கேட்டுக் கொண்டது.

அடுத்த மாநாடு 1999 இல் கோவையில் நடை பெற்றபோது பின்-நவீனத்துவம் எனும் கோட்பாடு தமிழகத்தில் தீவிரமாக அடிபட்டது. இது பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தது தமுஎச. யதார்த்தவாதத்திற்கு மாற்றாகவே இந்தக் கோட்பாடு முன்வைக்கப்படுவதை அது புரிந்துகொண்டது. கலை கலைக்காகவே என்று பழைய பாணியில் பச்சையாகச் சொன்னால் எடுபடாது என்பதால் தங்களுடையது நவீனத்திலும் நவீனம் என்றார்கள். உள்ளே புகுந்து பார்த்தாலோ பழசிலும் அரதப் பழசாக இருந்தது; கலை – இலக்கியத்தின் சமூக நோக்கைக் கழித்துவிட்டு மற்ற கூறுகளை – குறிப்பாக வடிவப் பிரச்சனைகளை – மட்டும் உயர்த்திப் பிடிக்கிற வேலையாக  இருந்தது. இதைக் கறாராக மறுதலித்த மாநாடு, அதே வேளையில் பின்-நவீனத்துவம் முன்மொழிகிற சில உத்திகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்றது. விஷயம் என்னவென்றால் கலை – இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் மார்க்சிய நோக்கிலிருந்து எழுந்த யதார்த்தவாதக் கோட்பாட்டை சிதைத்துவிடக் கூடாது என்பதுதான்.

இந்த மாநாட்டில்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு, பின்-நவீனத்துவம் குறித்து அருமையானதொரு கருத்துரை வழங்கினார். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள கற்பனை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் படைப்பாக்கம் உள்ளதே தவிர, அதைச் சிதைப்பதில் இல்லை, அதை வெறும் மாயாஜாலமாக மாற்றுவதில் இல்லை, அதை சர்ரியலிசமாக – குழப்பமான கனவு நிலையாக-ஆக்குவதில் இல்லை என்று நறுக் கென்று சொன்னார் அந்த மேதை.

பிறகு என்னாயிற்று? சமையலின் சிறப்பு அது பற்றிய கையேடு தயாரிப்பதில் இல்லை. அதன் ருசியில் உள்ளது. அதுபோல, இலக்கியத்தின் சிறப்பு அது பற்றிய இசங்களில் இல்லை, அதன் படைப்பாக்க வெற்றியில் உள்ளது. பின்- நவீனத்துவத்தின் பிரிவுகளாக சர்-ரியலிசம், டிரக்சுரலிசம், எசிடென்சியலிசம்- இத்யாதி இத்யாதிகள் முன்வைக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்று சில நாவல்களுக்கு முத்திரை குத்தி வெளியிடப்பட்டன. வேடிக்கை என்னவென்றால் ஒரு பின்-நவீனவாதி எழுதியதை இதர பின்-நவீனவாதிகள் ஏற்கவில்லை. மொத்தத்தில் எதையும் எவரும் ஏற்கவில்லை. கூடுதல் வாசக அனுபவம் உள்ள வாசகருக்குக் கூட அவை புரிபடவில்லை. இந்த இசங்களின் பொதுமை இருண்மைவாதம் என்பது மட்டுமே புரிபட்டது. முடிவில் அவை படுதோல்வி கண்டன.

தமிழ் இலக்கிய உலகம் தனது யதார்த்தவாதப் படைப்புப் பாரம்பரியத்தை நல்லவேளையாக விட்டுவிடாதிருந்ததால் அதிலேயே தொடர்ந்து நடைபோட்டு சில சாதனைகளைச் செய்தது. மார்க்சிய வட்டாரத்திற்கு உள்ளும் வெளியிலும் யதார்த்தவாதப் படைப்புகளே பரவலாகப் பேசப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் சரி 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சரி.

மார்க்சிய இலக்கியம் இந்தக் காலத்தில் சில புதிய உச்சங்களைத் தொட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட தோழர்கள் பலரும் இந்தக் காலத்திலும் படைப்பிலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பைச் செய்தார்கள். கு.சி.பா. புதிய  நாவல்களைத் தந்தார் என்பது மட்டுமல்லாது, அவரது படைப்புகள் உலக மொழிகள் பலவற்றிலும் பெயர்க்கப்பட்டு நானாதிசைகளிலும் பேசப்பட்டது. டி.செல்வராஜும் தொடர்ந்து எழுதியது மட்டுமல்லாது அவரின் தோல் நாவல் சாகித்ய அகாதமி பரிசைப் பெற்று சிரசு உயர்த்தி நின்றது. அதுவும், அதற்கும் முன்னதாக மின்சாரப் பூ  சிறுகதைத் தொகுப்புக்கு மேலாண்மைக்கு அந்தப் பரிசு கிடைத்திருந்ததும் யதார்த்தவாத இலக்கியத்திற்கு சூட்டப்பட்ட கிரீடங்களாகத் தகதகத்தன. யதார்த்தவாதத்தில் காலூன்றி படைப்புவானில் கர்ணங்கள் அடிக்க பின்-நவீனத்துவ உத்திகள் சிலவற்றைப் பயன்படுத்தலாம் என்றோம். அதற்கோர் உதாரணமாய் வந்தது காவல் கோட்டம் வரலாற்றுப் புதினம். அதற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. இளமைக்கும், நமது கோட்பாட்டிற்கும் ஒருங்கே கிடைத்த வெற்றி.

இந்தக் காலத்தின் மிகப்பெரிய சோகம் கந்தர்வனின் மறைவு. அது கவிதைக்கும் சிறுகதைக்கும் நேர்ந்த அகால விபத்து. சொல்லப் போனால் நாவலுக்கும் கூட அந்த கதியே. அவர் வாழ்ந்திருந்தால் நிச்சயம் நாவல் உலகில் அடியெடுத்து வைத்து ஒரு கலக்கு கலக்கியிருப்பார். முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக் காகிலும் அதை ஈடுகட்டும் வகையில் புதிய படைப்பாளிகள் வந்தார்கள். புதிய படைப்புகளும் வந்தன. ம.காமுத்துரை நாவலாசிரியராய் பரிணாமம் பெற்றது, சீருடையான் இத்துறையில் புதிய சாதனைகள் செய்தது என்பவை நமது  படைப்புக் கண்ணி அறுபடவில்லை; மாறாக வலுப்பெற்றது என்பதற்கு உதாரணங்கள். வரலாற்று நாவல்கள், இதிகாச மறுவாசிப்புகள் என்று அருணன் படைப்புலகில் புகுந்து வந்தது. இந்தத் துறைகளிலும் மார்க்சியவாதிகளால் காலூன்ற முடியும் என்பதைக் காட்டியது. சமீபத்தில் செந்தில் நாதனும் நாவல்துறையில் இறங்கியிருக்கிறார். விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறும் ரசவாதம் தொடர்கிறது. நமது படைப்பாளிகள் மூவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது மட்டுமல்லாது இன்னும் சில எழுத்தாளர்களுக்கும் வேறு சில முக்கிய இலக்கியப் பரிசுகளும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் மார்க்சிய  இலக்கியங்கள் அவற்றின் சொந்த வட்டாரத்தில் மட்டுமல்லாது வெளி வட்டாரத்திலும் அங்கீகரிக்கப்படுவதின் சத்தான ஆதாரங்கள்.

நம்மவர்களின் படைப்புகள் சில பாடப்புத்தகங்களாக அல்லது அவற்றின் அங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மார்க்சிய இலக்கியங்களின் பங்களிப்பைக் கழித்துவிட்டு இனி எவராலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முடியாது. அப்படி ஒருவர் எழுதினால் அவரது நாணயம் கேள்விக்குறியாகிவிடும்.

இப்படியெல்லாம் எழுதி வருவது திருப்தி மனோபாவத்திலிருந்து அல்ல. மார்க்சிய இலக்கியத்தின் நியாயமான பெருமைகளைப் பதிவு செய்யத்தான். அதே நேரத்தில், இவையெல்லாம் காலத்தின் தேவைக்குப் போதுமானவையல்ல என்பதும் உண்மையே. இருப்பதை முதலில் அங்கீகரித்துவிட்டு அடுத்த இலக்கைச் சுட்ட வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது சாதியச் சிந்தனைகளும், பழமைவாதச் சிந்தனைகளும், முதலாளித்துவ கட்டமைப்பே இயல்பானது – சாதகமானது எனும் ஆளும் வர்க்கச் சிந்தனைகளும் மண்டி வருகின்றன. அறிவுஜீவிகள் மத்தியிலேயே இவைதான் கோலோச்சுகின்றன என்றால் வெகுமக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

1920-களில் இங்கே காந்தியம் – பெரியாரியம் – மார்க்சியம் என்பவை வேர்விடத் தொடங்கின, 1950-கள் வரை காந்தியம் தழைத்தோங்கி பிறகு பட்டுப்போக, பிறகு பெரியாரியம் பற்றிப் படர்ந்தது. 1980-களிலோ அதனுடைய சத்தும் வடிந்துபோனது. சோகம் என்னவென்றால் அந்த இடத்தை மார்க்சியம் இன்னும் கைப்பற்றவில்லை என்பதுதான். காந்தியம் – பெரியாரியத்தின் போதாமையை அல்லது தோல்வியை சாதிய – பழமைவாத – முதலாளித்துவ சக்திகள் கைப்பற்றி வருகின்றன. இந்த ஆபத்தைச் சமாளிக்க மார்க்சியம் புத்தெழுச்சியோடு புறப்பட வேண்டிய காலமிது.

காந்தியத்தைப் பின்னுக்குத் தள்ளி பெரியாரியம் முன்னுக்கு வந்ததற்கு அது பண்பாட்டுத் தளத்தை – குறிப்பாக கலை, இலக்கியப் பரப்பை – வசமாகப் பயன்படுத்தியது ஒரு முக்கிய காரணமாகும். இன்று அந்தத் துறையில் அனேகமாக நிலவும் அதன் வெறுமை அதனுடைய போதாமை அல்லது தோல்வியின் தெளிவான அடையாளமாகும். அப்படியெனில், விழுந்திருக்கிற வெற்றிடம் பழமைவாதிகள் கையில் போகாமல் மார்க்சியவாதிகளின் கையில் வரவேண்டுமென்றால் பண்பாட்டுத் தளத்தில் நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

இதை மார்க்சிய இலக்கியவாதிகள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. சந்தேகமில்லை முன்பைக் காட்டிலும் த.மு.எ.ச.வில் அவர்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். கலைஞர்களை அங்கே அதிகம் சேர்த்து அதன் வெளிப்பாடாய் அதை த.மு.எ.க.ச.வாக மாற்றியிருக்கிறார்கள். காலத்திற் கேற்றவாறு அதன் கொள்கை அறிக்கையை நவீனப்படுத்தி அந்த வெளிச்சத்தில் வேக நடைபோடுகிறார்கள். எல்லாம் சரி, ஆனால் ஆறரைக் கோடித் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்னும் வளரவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. பண்பாட்டின் சகல கூறுகளில் இல்லாவிட்டாலும் ஏற்கெனவே நல்ல பாரம்பரியத்தளம் உள்ள படைப்பிலக்கியத்திலும் கூட பெருவாரியான வாசகர்களை நாம் எட்டவில்லை.

கலை – இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் முழக்கம் காரியார்த்த வடிவம் எடுக்க அந்த மக்கள் திரளின் பலவித அடுக்குகள் மற்றும் பலவித ரசனைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். சகல அடுக்குகளுக்கும், சகல ரசனைகளுக்கும் கலை-இலக்கியம் படைப்பதில் தவறில்லைதான். ஆனால் உயர் அடுக்கு மற்றும் உயர் ரசனைக்கு மட்டுமே படைத்து, அவர்களது பாராட்டைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டால் அந்த மைய முழக்கம் தனது புரட்சிகர அர்த்தத்தை இழந்து போகும். உழைப்பாளி வர்க்கம் மற்றும் சாதாரண மத்தியதர வர்க்கத்தின் சராசரி வாசகர்களே – ரசிகர்களே ஆகப் பெரும்பாலோர். அவர்களையும், அவர்களது ரசனையையும் எட்டுவது, எட்டி அவர் களது கைப்பிடித்து மேலே உயர்த்துவது என்பதே அந்த முழக்கத்தின் மையக் கருத்தாகும். அந்த இலக்கை நோக்கி பயணப்படுவதில் இன்னும் சிரமப்படுகிறார்கள் மார்க்சிய இலக்கியவாதிகள். வேறு வார்த்தைகளில் சொன்னால் தரத்தையும் ஜனரஞ்சகத்தையும் கச்சிதமாகக் கலந்து கொடுப்பதில் இன்னும் பயிற்சியும், உள்ளார்ந்த ஈடுபாடும் தேவைப்படுகிறது. உதாரணமாக, உழைப்பாளி மக்களை எளிதில் அடையக்கூடிய, வாசிக்க சுகமான சந்தம் தழுவிய கவிதை, அதன் இயல்பான நீட்சியாகிய இசைப் பாடல் ஆகியவற்றை எழுதுவதில் சுணக்கம் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

படைப்பாளிகள் பக்கம் இப்படிச் சில ஊனங்கள் உண்டு, அவற்றைக் களைய அவர்கள் தன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றால், உழைப்பாளி வர்க்கமானது இவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், மக்களுக்கு ஏற்ற படைப்புகள் வரும்போது அவற்றை வரவேற்றுக் கொண்டாடி மகிழ வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பணியை மேற்கொள்ள வேண்டும். பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டியிருக்கும் காலமிது. குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல இலக்கியவாதியும் கூட கொண்டாடும் இடத்தில்தான்.

இப்படி படைப்பாளியும் உழைப்பாளியும் சரியான புள்ளியில் சந்தித்தால் அதுதான் மார்க்சிய இலக்கியத்திற்கு யோகம் பிறக்கும் வேளை. அது நடந்துதான் தீரும்.

ரவி நுழைய முடியாத இடத்திலும் கவி நுழைவான். அந்தக் கவியை ராஜாக்கள் நிராகரித்தாலும் குடிமக்கள் வரவேற்பார்கள்.

மழையாய் மாறிவிட்ட மேகம் மண்ணை அடைந்தே தீரும். மார்க்சியப் பயிர் செழிக்க தமிழ் இலக்கியம் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கும் நாள் வெகுதொலைவில் இருக்க முடியாது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: