சீனாவில் ஐ.எல்.ஓ சார்பில், ஆசியா பசிபிக் பிராந்திய அளவில் நடைபெற்ற தொழிற்சங்க ஆய்வுப் பட்டறை, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை முன்வைத்தது. அதோடு மாற்று அணுகுமுறை குறித்த விவாதத்தையும் தீவிரமாக கிளறிவிட்டுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள்வதில், தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் பங்கினை இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமா? என்பது பற்றி தேசிய அரசுகள் கவலை கொள்ளாமல், தொழிற்சங்கங்களை அங்கீகரித்து, அதன் கூட்டு பேர உரிமையைப் பலப்படுத்தி தொழிலாளருக்கான வருவாயை உயர்த்துவதன் மூலம், முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான, தற்காலிகத் தீர்வு காண முடியும், என ஐ.எல்.ஓ வலியுறுத்துகிறது. ஐ.எல்.ஓ என்பது அரசு நிர்வாகம் தொழிலாளர் அமைப்பு என்ற மூன்று அமைப்புகளின் பங்கேற்பு சார்ந்தது. இந்த அமைப்பு சொல்வதில் இருக்கும் நியாயத்தை, அரசுகளும், தொழில் நிர்வாகங்களும் உணர வேண்டும். சமூக மாற்றத்தின் மூலமே தீர்வு என வலியுறுத்தும், மார்க்சிஸ்ட்டுகள் ஐ.எல்.ஓ-வின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கான தேவை இல்லை என்ற போதிலும், நெருக்கடியில் இருந்து மீள்வது, தொழிலாளி வர்க்க நலனுக்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. வருவாய் இடைவெளி கார்ப்பரேட்டுகளுக்கும், தொழிலாளருக்கும் இடையில் மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது. குறைந்த பட்ச ஊதியம் வளரும் நாடுகளில் பெரிதாக உயரவில்லை. அதேபோல் வேலை வாய்ப்பு திறனற்ற, முறைசாரா கூலி உழைப்பாளர்களை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த மூன்று அம்சங்களும் உரிய வகையில் முதலாளித்துவ சமூகத்தால் தீர்க்கப்படும் பட்சத்தில், பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஐ.எல்.ஓ மற்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
வருவாய் இடைவெளியும் நாடுகளின் அனுபவமும்:
உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாங்கள் 99 சதம் என்ற முழக்கம் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இது வருவாய் இடைவெளி காரணமாக ஏற்பட்ட அதிருப்தி முழக்கம் ஆகும். தங்களுக்கு கிடைக்க வேண்டிய சொற்ப நலன்களையும் ஒரு சதம் எண்ணிக்கையுடைய கார்ப்பரேட் உரிமையாளர்கள் பறித்துச் செல்வதால் வந்த ஆதங்கமும் இணைந்த முழக்கமாக வளர்ந்தது சிறப்பம்சம். அதாவது சம்பளம் பெறும் தொழிலாளரின் வருவாய் உயராமல், மிகப்பெரும் அளவில் முதலாளிகளின் வருவாய் உயர்ந்தது. காண்ட்ராக்ட் போன்ற உதிரித் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது, மூலமாக தனது லாபத்தை பல மடங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
தொழிலாளரின் உண்மை ஊதியம் உயராத காரணத்தால், சாதாரண மக்களுடைய நுகர்வின் அளவில், பாதிப்பை ஏற்படுத்தி, உற்பத்தியில் தேக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக வேலையின்மையை உருவாக்கி, வருவாய் குறைப்பைத் தொழிலாளர் குடும்பங்களில் உருவாக்கியதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு நேர்மாறாக, வருவாய் அதிகரித்துள்ள ஒரு சதமான கார்ப்பரேட்டினருக்கு, மூலதனம் குவிக்கப்படுகிற நாட்டில் இருந்து வரிச்சலுகை கிடைப்பது ஒருபுறம் என்றால், தங்கள் நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக வழங்கப்படும் வரிச்சலுகை மற்றொருபுறம் என இரண்டு நாடுகளில் இருந்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிச்சலுகைகளை ஏராளமாகப் பெற்று, பலமடங்கு லாபத்தை ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அரசோ வரிச்சலுகைகளை முதலாளிகளுக்கு வாரி இறைத்துவிட்டு, பொதுச் செலவினங்கள் மூலம், பொதுமக்களிடையே, உருவாக்க வேண்டிய பணப் புழக்கத்தை உருவாக்கிட முடியாமல் தவிக்கின்றன.
சமீபத்தில் லத்தீன் அமெரிக்க கண்டத்தின் சில நாடுகள் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. அர்ஜெண்டைனா, வெனிசூலா போன்ற நாடுகளின் அனுபவம் உலக நாடுகளின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் நடுத்தர மக்கள் மீதான வரி விதிப்பின் அளவு குறைக்கப்பட்டு, கார்ப்பரேட் மற்றும் இதர நிறுவனங்களுக்கான வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக ஏற்றத் தாழ்வின் அளவில் 16 சதம் குறைந்துள்ளதாக, பேரா.ஜெயதிகோஷ் ஃபிரண்ட்லைன் ஏட்டில் எழுதியுள்ளார். இதன் காரணமாக அரசுக்கான நிதி வருவாய் அதிகரித்துள்ளது.
மேலும் அரசு மூலமான பொதுச் செலவினத்தையும் அதிகரிக்கப் பயன்பட்டுள்ளது. இப்போது ஐரோப்பா கண்டம் சந்திக்கும் பிரச்சனை அரசின் பொதுச் செலவினம் குறைகிறது என்பதாகும். அரசின் பொதுச் செலவினம் குறைகிறபோது, வருவாய் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ள, தொழிலாளர் மற்றும் நடுத்தரப் பிரிவினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரீஸ் போன்ற நாடுகளில் கடன் மூலம் பெறுகிற தொகையையும் கூட பொதுச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை, என்பதாலும், பெருமுதலாளிகளுக்கு இழப்பீடு என்ற பெயரில் சலுகைகளை வழங்குவதாலும், தொழிலாளர் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் முடியும் நிலையில் தேசிய அரசுகள் பாடம் கற்றுக் கொள்ளாமல், அதே முதலாளித்துவ உலகமயமாக்கல் கொள்கைகளை அமலாக்கி வருகின்றன. குறிப்பாக தொழிலாளருக்கான வருவாய் அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கத் தவறுகின்றன.
சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:
பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படுகிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கான வருவாய் சராசரி 1970-களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது. ஆனால் 1980-களில் சரியத் துவங்கியது. 2010-ம் ஆண்டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970-களில் 70 என்பதில் இருந்து 1980-களில் 75 என உயர்ந்து பின்னர் 2010-ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வருவாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010-ல் 53 என குறைந்துள்ளது. அதாவது, இந்தியா போன்ற, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத்தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்கவில்லை என்பது துயரம் தரும் செய்தியாகும்.
இந்தியாவில் தொழிலாளருக்கான வருவாய் குறைப்பு, கடந்த 30 ஆண்டுகளில் தீவிரம் அடைந்து, நிறுவனங்களுக்கான வருவாய் பலமடங்கு அதிகரித்த விவரத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் 20-வது அகில இந்திய மாநாட்டு அறிக்கையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் உற்பத்தித் துறையில் 1999-ன் போது இருந்த உற்பத்தி அளவு 2010-ன் போது, பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இது நிரந்தரத் தொழிலாளர்களுக்கான வருவாயில், குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பையும், காண்ட்ராக்ட் மற்றும் இதர பகுதி உழைப்பாளர்களின், வருவாயை, பெரும் பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. வேலைவாய்ப்பின் மீது உறுதியற்ற நிலையையும் ஏற்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் தன்மை வளர்ந்த நாடுகளில், அதிகரித்து வருகிறது.
மேற்படி நிலைமைகளின் தாக்கம் பலவகையில் உள்ளது. அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. 2008-ல் 6.9 மாக இருந்த, ஐரோப்பாவின் வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9 சதமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை 23.5 சதமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
காண்ட்ராக்ட் முறையின் மூலமான வேலை வாய்ப்பும், சுயவேலைவாய்ப்பு என்று பெயரளவிற்கு சொல்லிக் கொள்கிற வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது. இவை கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
இதற்கு நேர்எதிராக அர்ஜெண்டைனாவில் தொழிலாளர் சம்பள விகிதமும், வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 12 ஆண்டு களில் அர்ஜெண்டைனாவில் தொழிலாளர் நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2001 வரை 50 சதத்திற்கும் குறைவான தொழிலாளர்கள் தான் மாதச் சம்பளத்தின் போது, சம்பள ரசீது பெறும் நிலையைக் கொண்டிருந்தனர். ஆனால் 2004 சட்டத் திருத்தத்திற்குப் பின் இப்போது 81 சதமான தொழிலாளர்கள் சம்பள ரசீதுடன் கூடிய ஊதியம் பெறுகின்றனர். இதன் விளைவாக தேசத்தின் வருமானத்தில் தொழிலாளர் சம்பளத்தின் மூலமான பங்களிப்பு 34.3 சதத்தில் இருந்து, 43.6 சதமாக உயர்ந்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 1997-ன் போது 37 சதமானவர்கள் மட்டுமே பலனடைந்தனர். 2009-ல் 86 சதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், வருவாய் இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கைவிடுகிறபோது, அர்ஜெண்டைனா அதை அமலாக்க காரணம் இடதுசாரிகள் வலுவான நிலையில் நின்று, ஆட்சியாளர்களை பின்பற்றச் செய்துள்ள கொள்கைகள் ஆகும்.
எனவே முதலாளித்துவ உலகமயமாக்கல், வருவாய் இடைவெளியை, குறிப்பாக செல்வத்தை அதிகமான மனிதர்களிடம் பறித்து, குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களிடம் குவித்து வந்துள்ளது என்ற உன்மையை மேற்கண்ட நடவடிக்கைகளில் இருந்து அறியலாம்.
குறைந்த பட்ச ஊதியமும் நாடுகளின் அனுபவமும்:
மேலே விவாதித்த வருவாய் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கையின் முதல் அடி, குறைந்தபட்ச ஊதியத்தின் அளவை உயர்த்துவது ஆகும். அநேகமாக 2000-க்குப் பின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் தொழில் மூலதனம் பெரும் அளவில் குவிந்துள்ளது. பன்னாட்டு மூலதனம் இந்த பிராந்தியத்திற்கு வருவதற்குக் காரணம், மனிதவளம் நிறைந்து இருப்பதும், குறைவான ஊதியத்தில் நிறைவான உற்பத்தியை உருவாக்க முடியும் என்பதாலும் ஆகும். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் கொண்டு வர மூலதனத்தின் உரிமையாளர்கள் விரும்பவில்லை. சீனாவைத் தவிர்த்து, வேறு எந்த அரசுகளும் இதில் பெரும் அளவிற்கான மாற்றம் காண முயற்சிக்கவில்லை. இந்தியாவில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குறைந்தபட்சம் ஊதியம் மாதம் 10 ஆயிரம் என்பதை சட்டமாக்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த பிப். 20,21 வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மத்திய அரசு இப்போது விவாதித்து வருகிறது. இந்தியாவில் 15-வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டை மத்திய தொழிலாளர் துறை நடத்துகிற போது, டாக்டர். அக்ராய்டு வழங்கிய கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்ச ஊதியத்திற்கான வழிவகைகள் உருவாக்கப்பட்டன. அக்ராய்டு குறிப்பிட்ட தேவைகளை இன்று கணக்கிட்டால், தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறைவானது, என்றே கருத முடியும்.
ஐரோப்பாவின் அனுபவத்தில் அல்லது, உலக பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியத்தில் ஏற்படுத்தும் மாற்றம் உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியின் தேவையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகிறதோ, அந்த அளவிற்கு, அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத் தன்மையுடன் இருக்கும், என்பதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமை எந்த நாடுகளில் இன்றும் உறுதியாக உள்ளதோ, அங்கு உள்நாட்டு சந்தையை மையப்படுத்தி தொழில் உற்பத்தி ஓரளவு நீடித்து நிற்கிறது. குறிப்பாக தேசிய அரசுகள், சட்ட நடவடிக்கைகள் மூலம், குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவது, உள்நாட்டு சந்தையை விரிவாக்கும் என்பதைப் புரிந்து இருந்தாலும், பெருமுதலாளிகளை மேலும் பில்லியனர்களாக உயர்த்துவதற்கே முன்னுரிமை தருகின்றனர். சீனாவின் அனுபவத்தில், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் தற்கொலைகளைத் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2010ல் 12 தொழிலாளர்கள் சீனாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் அந்நாட்டில், இளம் தொழிலாளர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய தீவிர ஆர்வம் காட்டவில்லை. இவைகளை எதிர்கொள்ள அரசு மற்றும் அனைத்து சீன தொழிற்சங்க கூட்டமைப்பு, ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள்ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் நடத்தும் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், போதுமான ஊதியம் வழங்கப்படாதது என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக்காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப்பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் ஹோண்டா நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உருவானது. அதாவது, குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகச் சீனாவில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தொகை அந்த நாட்டினுடைய விலைவாசி, வீட்டு வசதி போன்றவைகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு அதிகமானது ஆகும்.
மேற்படி நடவடிக்கை, இளம் தொழிலாளர்களிடம் தனியார் துறையில் வேலையில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சராசரி ஊதிய உயர்வு 2008-ல் 2.8 ஆக இருந்தது, 2009-ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்துவிட்டால், ஆசியா கண்டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டுமொத்த ஆசிய நாடுகளின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது. 1980-களில் உலக மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 1.78 சதம் ஆகும். ஆனால் 2012-ல் உலக மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 10.4 சதமாக உயர்ந்துள்ளது. இதற்கு சீனாவில் உள்ள தொழிற்சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் என்பதை அரசுகள் உணர வேண்டும். சீனாவின் இத்தகைய நடவடிக்கை, அந்த நாட்டின் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. ஆகவேதான் ஏற்றுமதியில் அதிக ஈடுபாடு செலுத்திய சீனா, உலக பெருமந்தத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இன்றைக்கும் அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, 9 சதம் என்பதைப் பராமரிக்க முடிகிறது. எனவே குறைந்தபட்ச ஊதியம் குறித்து நாடுகள், தனித்தனி சட்டங்கள் உருவாக்கி இருந்தாலும், அதைச் செயல்படுத்துவது முக்கியமானதாகும். சில மேலை நாடுகள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியத்தைத் நிர்ணயம் செய்துள்ளன. இதையும் இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றுவது குறித்து விவாதிக்க வேண்டும். மற்றொருபுறம் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைப்பது அரசுகளின் கடமை. சீனாவில் அந்நாட்டு மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பண்டம் மற்றும் நுகர்வுப் பொருள்களின் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. அதே நேரத்தில் குறைந்தபட்ச ஊதியமும் நியாயமான விகிதத்தில் உள்ளது. எனவே தான் உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இதர பொருள்களும் நுகரப்படுகின்றன. அதன் காரணமாகவே உள்நாட்டு சந்தை விரிவாக்கம் சாத்தியமாகியுள்ளது.
நாகரீகமான வேலையும் நிரந்தரமற்ற வேலை வாய்ப்பும்:
மேலே விவாதித்த வருவாய் இடைவெளியைக் குறைப்பது, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்துவது, ஆகிய இரண்டும் நாகரீகமான வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கையுடன் இணைந்தது. இன்று இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள் அனைத்தும் ஏற்றுமதியை முன் வைத்து உற்பத்தியை செய்துவருகின்றன. அதற்காகவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி வருகிறது. இது நிதிமூலதனத்தின் வரவின் காரணமாக, ஏற்கனவே இருந்த நிறுவனங்களில் வேலை இழப்பை உருவாக்கியது. அதைவிட பரவாயில்லை என்ற தன்மையில் தொழில் மூலதனத்தின் வருகை ஓரளவு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இருந்தாலும், நாகரீகமான வேலையையும், நிரந்தரமான வேலையையும், ஊதிய உயர்வையும் நிராகரிக்கின்றன. ஆனால் அரசு தரப்பில் கூடுதலான வேலை வாய்ப்புகான திறவுகோல்களாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தளவில் மொத்த உழைப்பு சக்தியில் 17 சதமானோர் தான் தொழில் உற்பத்தித் துறையில் பணிபுரிகின்றனர். இதில் இன்னும் கூடுதலான வளர்ச்சி தேவைப்படுகிறது. இதில் 79 சதமானம் அந்நிய நேரடி முதலீடு சார்ந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 சதம் பங்களிப்பு செய்யக் கூடியது. 53 சதம் இந்திய ஏற்றுமதியில் முன் நிற்கிற துறை என அரசு கருதுகிறது. வரிச்சலுகை உள்ளிட்ட ஏராளமான அரசின் வார்த்தைகளில் சொல்லப்படுகிற ஊக்கத் தொகைகளை வாரி வழங்கினாலும், உற்பத்தித்துறை மூலமான வேலைவாய்ப்பு உயர்வில் இந்தியாவைப் பொறுத்த வரை முன்னேற்றம் பெரிதாக இல்லை.
ஆனால் சீனாவில் 2000ல் உற்பத்தித் துறை மூலமான வேலை வாய்ப்பை 20 சதம் கொண்டிருந்த நிலையில் இருந்து 2011ல் 34 சதம் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது. இதற்கு காரணம் ஏற்கனவே குறிப்பிட்ட படி, ஏற்றுமதிக்கான தொழில் மூலதனமாக இல்லாமல், உள்நாட்டு சந்தையை விரிவு செய்தது ஆகும். இது நேர்மறை விளைவாக இருந்தாலும் மறுபுறம் இடம் பெயர்தல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று, சீனா ஒத்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு சந்தையில் கிராக்கி இருக்கிற காரணத்தால், துறைமுகம், விமானநிலையம், பெருநகரம் என்ற உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்தாலும், தொழில் மூலதனம் உற்பத்தியை வளர்ச்சி குறைவான பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய, மூலதன உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.
ஃபாக்ஸ்கான் தற்கொலையைத் தொடர்ந்து ஊதியத்தில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக, நிறுவனத்தின் துணைத் தலைவரிடம், சீன அரசு தொழிற்சாலையின் புதிய யூனிட்டை, வளர்ச்சியற்ற பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டுகோள் வைத்தது. இதை அதிக உற்பத்தி செலவு பிடிக்கும் ஏற்பாடு என, முதலில் நிறுவனம் மறுத்தாலும், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஒன்று அதன் மூலம் இடம்பெயர்தலைக் குறைக்க முடியும். இரண்டு நிறுவனத்திற்கும் அந்தப் பகுதியில் இருக்கும் வாழ்க்கைத் தரம் காரணமாக ஊதியத்தின் அளவு சற்று குறைந்தாலும், உள்ளூர் வேலை வாய்ப்பு என்ற முறையில் தொழிலாளரும் சம்மதிக்கும் சூழல் அமையும் என்பதாகும். குறிப்பாக இடம்பெயர்தல் குறைவது, பரவலான வளர்ச்சிக்கும், விவசாயத்தில் தொடர் கவனம் செலுத்தவும் முடியும் என்கின்றனர். இந்தியா உள்ளிட்ட இதர ஆசிய நாடுகள் இந்த அனுபவத்தை பின்பற்ற வேண்டியுள்ளது. மேற்கூறிய திட்டமிடல் தெளிவாக இருந்தாலும், சீனா வளர்ந்து வரும் வேலையின்மையை எதிர் கொள்ள கடும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, என்பதையும் கூறுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில், இடம் பெயர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண் ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவை திட்டமிட்டு அதிகப்படுத்துவதால், நாகரீகமற்ற வேலைத் தன்மையும், நிரந்தரமற்ற வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இதை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தீவிர முயற்சி எடுக்க வேண்டியுள்ளது ஆக மொத்தத்தில், வருவாய் இடைவெளியைக் குறைப்பது, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது, நாகரீகமான வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, நிரந்தரமற்ற வேலைவாய்ப்பைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அத்தகைய அடிப்படை வளர்ச்சியை, கூட்டு பேர உரிமையைப் பலப்படுத்துவதன் மூலமே எட்ட முடியும். எனவே கூட்டு பேர உரிமையின் மூலம் மேற்கூறிய சில சிறிய சாதனைகளை செய்வதன் மூலம், முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்து மீள முடியும்.