மக்கள் ஜனநாயக கிளர்ச்சிப் பிரச்சாரத்திற்கு ஒரு கையேடு
336 பக்கங்களைக் கொண்ட தகர் நிலையில் உலக நிதிமூலதனம் என்ற நூல் மேலை நாட்டு பொருளாதார கோட்பாடுகளின் நச்சுத் தன்மையை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த நூல் பொதுவாக இன்றைய பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப் பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும். அதைவிட இந்த நூல் ஒரு மக்கள் ஜனநாயக கிளர்ச்சிப் பிரச்சாரகனுக்கு உதவும் கையேடு எனலாம்.
இந்த நூலின் சிறப்பு பொருளாதார, அரசியல் துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களையும், ஆவணங்களையும், பத்திரிகை செய்திகளையும் ஆழ்ந்து படித்து, பரிசீலித்து, சலித்து தேவையானதை தேர்வு செய்து எழுதப்பட்டுள்ளது என்பதே. இன்று பிரபலமாக இருக்கும் போன நூற்றாண்டு கீன்ஸ் முதல் நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர்கள் மில்ட்டன் பிரிட்மென், பால்க்ரெக்மென், ஸ்டிக்கிளிட்ஸ் மற்றும் ஜான் கால்பிரெயித் வரை உள்ள ஆங்கிலோ, அமெரிக்க பொருளாதார நிபுணர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், சொன்ன கருத்துக்கள் இவைகளை வைத்தே அந்த கோட்பாட்டு நச்சை இந்த நூல் வாசகனுக்கு காட்டுகிறது.
இந்த நூலின் இன்னொரு சிறப்பு இன்றையத் தேதிகளில் மேலைநாட்டு அரசியல் பொருளாதார நிபுணர்கள் நடத்தும் கோட்பாட்டு சண்டைகளை இலக்கிய நடையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பொருளாதாரம் என்றாலே விளக்கெண்ணெய் என்று கருதுபவர்கள் கூட, தலைப்புக்களை பார்த்து படிக்கத் தொடங்கிவிடுவர், பின்னர் முழுவதையும் படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழேவைக்க மாட்டார்கள். இந்த நூலில் 27 தலைப்புக்களில் பொருளாதார பிரச்சனைகள் அலசப்படுகிறது. 27 தலைப்புக்களுமே படிப்பவர்களை மேலும் படிக்கத் தூண்ட வல்லது. சான்றாக சில தலைப்புக்களை பாருங்கள் உருகி அழியும் உலக நிதிச்சந்தை தத்துவத்தின் இறுதி யாத்திரை கீதம் (4), போன்சியை மிஞ்சும் போன்சி (14) டாலர் சாம்ராஜ்யத்தின் பிரசவ வேதனை (19) கடவுள் கைவிட்ட போது அன்றும் இன்றும் (1929-30 2008-2010) (23).
இந்த நூலில் போகிற போக்கில் குறிப்பிடுகிற சில விஷயங்கள் நம்மை அதை நோக்கி ஓடி தேட வைத்து விடுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் என்ற கேடயத்தை, எப்படி ஒரு நிறுவனம் ஏமாற்றுக்களை உருவாக்கி பாலிசிதாரிகளின் பணம் மாயமாக மறைந்ததை குறிப்பிடுகிற பகுதியில் (பக்கம் 71-97) ஜான்கிரிஷாம் எழுதிய ரெயின் மேக்கர் என்ற புதினம் குறிப்பிடப்படுகிறது. அந்த புதினம் அமெரிக்க பணம் பன்னிகள் (மனி மேக்கர்ஸ்) இன்சூரன்சை ஏமாற்று கருவியாக்கி மக்களை ஏமாற்ற கையாண்ட யுக்திகளை அம்பலப்படுத்துகிறது. இந்த குறிப்பு அந்த நாவலையும், சினிமாவையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அது போல் அமெரிக்க தத்துவ மேதை ஜான் ராவ்ல்சின் மேற்கோளை படிக்கிற பொழுது அவர் எழுதிய நீதியின் கோட்பாடு (தியரி ஆப் ஜஸ்டிஸ்) என்ற நூலைச் தேட ஆர்வம் பிறக்கிறது.
மார்க்சை பொருத்த வரையில், அறிவியல் என்பது ஒரு வேகமிக்க, புரட்சிகர சக்தி என்றே கருதினார். ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் புதிய தத்துவார்த்தக் கண்டுபிடிப்பு ஏற்பட்டால், அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அதே சமயம், ஒரு கண்டுபிடிப்பு உடனடியாக தொழில் துறையிலும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியிலும் புரட்சிகர முன்னேற்றத்தைக் கொண்டு வருமானால், அவரது மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில், எல்லாவற்றுக்கும் முன்பாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளர். அவரது வாழ்வின் நோக்கமே, ஏதாவது ஒரு வழியில் முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கியுள்ள அரசு அமைப்புகளையும் தூக்கி எறிவதாகும். மேலும், நவீன தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு பங்காற்றுவதாகும். தனது சொந்த நிலையையும் தேவைகளையும் அந்த வர்க்கம் உணர்ந்திடவும், அதன் விடுதலைக்கான நிபந்தனைகளை அது உணர்ந்திடவும் முதல் முதலாகச் செய்தவர் மார்க்ஸ் தான்.
தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ். சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறுத்தனர், நாடு கடத்தினர், முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார். மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும் பொழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல பத்து லட்சம் தொழிலாளிகள் அவரை வணங்கினர், கண்ணீர் சிந்தினர். நான் ஒன்று சொல்ல முடியும். மார்க்ஸை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அவருக்கு ஒரு நபர் கூட தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை. அவர் பெயரும் அவர் பணியும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
இன்றைய மேலை நாடுகளின் உந்து சக்தியால் இயங்கும் உலகமய பொருளாதாரத்தின் விளைவுகளை பணம் பண்ணுகிற கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பதை புரிய இந்த நூல் உதவுகிறது. பணம் என்ற ஒன்று வர்த்தக மூலதன வடிவிலும், தொழில் மூலதன வடிவிலும் சுழன்று, சுழன்று சரக்குகளை உருவாக்கி, பரிவர்த்தனை மூலம் பரவலாக்கி மக்கள் நுகர வழி வகுப்பதையே பொருளாதாரம் என்கிறோம். இந்த இரண்டு வடிவ வழிகளை புறம் தள்ளி பணத்தை (நிதி மூலதனம்) நேரடியாக பெருக்கும் முயற்சியில் ஈடுபடுத்தும் பணத்தின் அளவு கூடுகிற பொழுது பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகிறது, இது தான் இன்று மேலை நாடுகளை பிடித்திருக்கும் நோயாகும். ஒரு கட்டத்தில் அது குமிழியை உருவாக்கி நிதி மூலதன அமைப்பை தகர்த்துவிடுகிறது. அப்படி ஒரு நோய் மேலைநாடுகளின் செலவாணிகளுக்கு வந்துவிட்டது. அதன் விளைவாக பொருள் உற்பத்திபடுத்து குமிழி (பபுள்) தோன்றி தகர் நிலைக்கு உலக நிதி மூலதனத்தை தள்ளிவிட்டது என்று கூறும் மேலைநாட்டு பொருளாதார நிபுணர்களும், இது நோயல்ல வளர்ச்சியின் அறிகுறி, தனிமனித சுதந்திரத்திற்கு இது தேவை என்று கூறும் பொருளாதார வல்லுநர்களும் மோதும் நிலைமை இன்று அங்கே நிலவுகிறது. இந்த மோதலை பற்றி கட்டத்திற்கு கட்டம் கவனப்படுத்தும் விளக்கமாகவும் இந்த நூல் உள்ளது. அதே நேரம் இந்த நோய் ஒட்டுவார் ஒட்டி வகையானதால் உலகமயத்தால் எல்லா நாட்டு செலவாணிகளையும் எப்படி தொத்தி குமிழியாக வீங்க வைக்கிறது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
புத்தகத்தின் துவக்கமே வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகை அமெரிக்க நிதிநெருக்கடியை பற்றிய செய்தியை சொல்லி குமிழி (பபுள்) என்ற நவீன பொருளாதார நோயை விளக்குகிறது. முன்பெல்லாம் பணவீக்கம், (இன்பிளேசன்) தேக்க வீக்கம் (ஸ்டாக்பிளேசன்) என்ற நோய்களே ஒரு நாட்டு பொருளாதாரத்திற்கு வரும். அரசு அந்த நோயை போக்கிவிட முடியும். பபுள் என்ற புதிய பொருளாதார நோய் அரசாலும், யாராலும் குணப்படுத்த முடியாத புற்று நோய். இந்தபுற்று நோயால் பணம் பெருகிக் கொண்டே போகும். நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர் பால்கிரெக்மென்னை மேற்கோள் காட்டி இந்த பணத்திற்கு வந்த இந்த குமிழி நோய் சந்தையால் வருகிறது என்பதை இந்த பகுதி விளக்குகிறது. அதற்கு அடுத்த பகுதி சந்தையால் நோய் எப்படி வந்தது என்பதை விளக்குகிறது. கடவுள் கைவிட்ட போது (23வது) என்ற பகுதியிலும் சில விளக்கங்கள் உள்ளன. 1929-களில் இப்படி ஒரு நெருக்கடி பங்குச் சந்தையால் ஏற்பட்ட பொழுது மேலைநாட்டு அரசுகள் சில சந்தை நெறிமுறைகளை பின்பற்ற சட்டங்களை இயற்றின. அதில் சில நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக ஆக்கின, 1970-ல் நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர் மில்டன் பிரிட்மென்னின் பணம் பண்ணும் சுதந்திரம் கோட்பாடு மக்களை கவ்விப் பிடிக்கவே மூலதன அமைப்பே தகர்நிலைக்கு வந்தது என்பதை இப்பகுதிகள் காட்டுகின்றன. தங்கத்திற்கும் டாலருக்கும் உள்ள உறவை (பக்கம்107) நிக்ஷன் துண்டிக்க மில்டன் பிரிட்மென்னின் கோட்பாடே காரணமாகியது.
1980-களில் ரீகன், தாட்சர் ஆட்சிக் காலத்தில் இந்த சட்டங்களின் பற்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டு புஷ் ஆட்சிக் காலத்தில் நெறிமுறைகளே புதைக்கப்பட்டன. சந்தை தாறுமாறாகப் போனாலும் அரசு தலையிட முடியாத நிலை வந்துவிட்டது.
சந்தைகளின் பேயாட்டம் (பக்கம் 49) என்ற பகுதி பணம் எப்பொழுது பேரழிவு ஆயுத மாகிறது என்பதை விளக்குகிற பகுதியாகும். வாரன் பபெட் என்ற அமெரிக்க பங்குசந்தை நிபுணர் அணுகுண்டை விட அதிக பேரழிவை கொண்டு வரும் ஆயுதமாக பணத்தை ஆக்கும் செயலை சுட்டிக் காட்டுகிறார். கடன் பத்திரங்கள், கடன் மாற்று பத்திரங்கள் பேரழிவை கொண்டு வரும் நிதி ஆயுதங்கள் (பைனான்சியல் வெப்பன் பார் மாஸ் டெஸ்டரக்ஷன்) என்று அவர் வர்ணிப்பதை மேற்கோளாக இந்நூல் காட்டுகிறது.
மேலைநாடுகளின் பணக் கோட்பாடுகள் பற்றிய சர்ச்சைகளை இந்த நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது. தாமஸ் கிரஸ்ஹாம் குறிப்பிட்ட கெட்ட பணம் நல்ல பணத்தை விரட்டுகிறது, ஸ்டிக்கிளிட்ஸ விளக்கிய பணம் எப்போது குப்பையாகும் (பக்கம் 89) இவைகளை காட்டுவதோடு, பணம் எப்போது டைம் பாமாக ஆகிறது என்பதையும் குறிப்பிடுகிறது..
இந்த நூலின் 25-வது பகுதியை படிக்கிற பொழுது மனதிலே ஒன்றுபடுகிறது. அமெரிக்க கலாச்சார சீரழிவை அப்பகுதி படம் பிடித்துக் காட்டுகிறது. அதோடு அமெரிக்க நிபுணர்களும் அமெரிக்க நாடாளுமன்றமும் இன்றைய பொருளாதாரத்திற்கு வந்திருக்கும் நோயையையும் அது எவ்வாறு உலகளவில் பரவுகிறது என்பதையும் கண்டுபிடித்து விட்டனர், வேதனை என்ன வெனில் இதற்கான வைத்திய முறைதான் நோயைவிடக் கொடுமையாக உள்ளது என்ற உண்மை தெரிகிறது. இதற்கு ஆதாரமாக அமெரிக்க வங்கிகளின் அதிகார துஷ்பிரயோகம், மோசடி இவைகளை கண்காணிக்க செனட்டர் பிராங்சர்ச் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை இந்த பகுதி காட்டுகிறது. அந்த கமிட்டி கண்டுபிடிப்புகளில் ஒன்று பிற நாடுகளின் முதலீட்டை அமெரிக்க வங்கிகள் ஈடுபடுத்திய விதம் உலக சநதையில் நெருக்கடியை விளைவித்ததை கண்டதாகும். போன்சியை மிஞ்சிய போன்சி என்ற தலைப்பில் கூறுபவைகளை உள்வாங்கினால், அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தில் புரட்சிகர மாற்றங்களின் அவசியத்தை உணர முடிகிறது. எது உண்ணதமானது என்ற பார்வையே அங்கு கோளாறாக உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. பணம் பண்ணுவதற்கு எது உதவுமோ அது உண்ணதமானது என்ற பார்வையே அங்கு மக்களை அலைக்கழிக்கிறது.
இத்தகைய மேற்கத்திய பண்பாடுகளிலும், தத்துவப் பார்வையிலும் சமீப காலமாக ஏற்பட்ட திரிபுகளை எதிர்க்கும் கருத்துக்களுக்கும் அங்கு பஞ்சமில்லை என்பதை ஜாஜ் ராவ்ல்ஸ் என்ற தாராள மனப்பாங்கு கொண்ட அமெரிக்க தத்துவ ஞானியின் கருத்தை மேற்கோளாக இந்த நூல் காட்டுகிறது. சோசலிச மனப்பாங்கின் சில கூறுகள் அதில் இருப்பதையும் காட்டி நூல் நிறைவு பெறுகிறது. நூலாசிரியரின் மேற்கோள்கள் அனைத்தும் 1970-க்குப் பிறகு உருவான சுதந்திர சந்தையால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கும் இருக்கிறார்கள் என்பதையும் ஏகாதிபத்திய ஆசைகளைக் கொண்ட அரசுகள் தனிமைப்படுகின்றன என்பதையும் காட்டுகிறது,
படித்து முடித்தவுடன் மேலைநாட்டு பொருளாதார கோட்பாடுகளையும், பணவியல் கோட்பாடுகளையும் பண்பாடுகளையும் நாம் காப்பி அடித்தால் உறுப்பட மாட்டோம் என்ற எண்ணம் உருதிப்படுவதோடு நிற்கவில்லை. மேலைநாட்டு முதலாளித்துவத்திற்கு இறுதி கீதம் பாடி புதைக் காமல்விட்டால் அது மானுடத்தை புதைத்து விடும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. ஜனநாயக அரசியலை நிலை நாட்டும் இயக்கங்களிலே பங்கு பெறும் ஆர்வம் பிறக்கிறது.
இந்த நூலின் ஆசிரியர் என்.எம்.சுந்தரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைமைப் பொறுப்பை வகித்தவர் என்று மட்டும் சொல்வது அறிமுகமாகாது.1970-80-களில் சென்னை நகர தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்ட களத்தை வழிநடத்திய தளபதிகளில் இவர் ஒருவர். இன்சூரன்ஸ், அரசு ஊழியர், வங்கி ஊழியர், மத்திய அரசு ஊழியர், ஆயில் நிறுவனம், டிரான்ஸ்போர்ட், மின்சாரம், துறைமுகம் இந்த பாசறைகளில் உருவான இந்த தளபதிகளின் கிளர்ச்சிப் பிரச்சாரமே சென்னை நகரில் அன்று வர்க்க ஒற்றுமையை உருவாக்கியது. அவரது ஆழ்ந்த பொருளாதார ஞானமும், வர்க்க போராட்ட கள அனுபவமும் இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் மிளிர்வதை வாசகன் என்ற முறையில் நான் உணர்ந்தேன்.
இந்த நூலின் ஒரு குறை இன்சூரன்ஸ் மாத இதழில் தொடராக வந்ததை அப்படியே தொகுத்து வெளியிட்டது. அதன் காரணமாக சில கருத்துக்கள் திரும்பத் திரும்ப வருவதாகத் தோன்றும் அதை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம். என்.எம் சுந்தரத்தின் இலக்கிய நயம் கொண்ட ஆங்கிலக் கட்டுரைகளை நயம் குறையாமல் மொழிபெயர்த்த இ.எம்.ஜோசப் பாராட்டுதலுக்கு உரியவராகிறார். இந்த நூலை அடுத்த பதிப்பில் எடிட் செய்து வெளியிட்டால் பக்கங்களும் குறையும் படிக்க வேண்டிய மக்கள் கையில் மலிவு விலையில் சேரும்.
“தகர் நிலையில் உலக நிதி மூலதனம்”
ஆசிரியர்: என். எம். சுந்தரம்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம்
Leave a Reply