மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அரசியல் மாற்றை நோக்கி!


2013 பிப்ரவரி  மார்ச் மாதங்களில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த நாடு தழுவிய பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. ஜுலை 1-ல் டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகளின் சிறப்பு மாநாட்டில், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இடதுசாரிகள் கூட்டு இயக்கம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பிலும், பொதுக்கூட்டங்களிலும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர், மாற்றுக் கொள்கைகளை முன்வைப்பதன் மூலம், ஒரு அரசியல் மாற்றை உருவாக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார். இந்த அரசியல் மாற்று என்பது, தேர்தல் காலக் கூட்டணி அல்ல என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இதனுடைய பின்னணி என்ன?

இந்திய மக்களுக்கு, தேசிய அளவில் பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்சிகள் இரண்டில் ஒன்றை அல்லது அவற்றின் அணியைத் தேர்வு செய்யும் நிர்ப்பந்தமே நிலவுகிறது. இரண்டில் எது ஆட்சிக்கு வந்தாலும், அந்நிய நிதிமூலதனம் மற்றும் பெருமுதலாளிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும். இதற்கு ஒரு அரசியல் மாற்று தேவை. அது இடது ஜனநாயக மாற்று தான். 16-வது மாநாட்டிலிருந்து மூன்றாவது மாற்று என்ற முழக்கத்தைப் பயன்படுத்தினோம். அது, கொள்கை அடிப்படையில் உருவாகும் அரசியல் கட்சிகளின் மாற்று என்றும் இடது ஜனநாயக மாற்றுக்கு அது வழி கோலும் என்றும் கூறினோம்.  ஆனால், அது, காங்கிரஸ், பிஜேபி  அணிகளில்  இல்லாத இதர கட்சிகளை இணைத்து தேர்தல் காலக் கூட்டணி அமைப்பது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டது.

மேலும், இந்த மாநில முதலாளித்துவக் கட்சிகளின் வர்க்கத் தன்மை மாறி வருவதையும், காங்கிரஸ்-பிஜேபி குறித்தும், நவீன தாராளமயக் கொள்கைகள் குறித்தும் அவை சந்தர்ப்பவாத நிலைபாடு எடுப்பதையும் கணக்கில் எடுக்க வேண்டியிருந்தது. அத்துடன், மக்கள் ஜனநாயக அணி, அதற்கு முன்னதாக இடது ஜனநாயக அணி, அதற்கு முன்னால் மூன்றாவது மாற்று என்பது, புரட்சிகர இலக்கை தூரத்து இடி முழக்கமாகவே காட்டியது. எனவே 20வது அகில இந்திய மாநாடு, மூன்றாவது மாற்று என்பதை ஒரு முழக்கமாக வைக்கவில்லை. இடது ஜனநாயக அணியை உருவாக்குவதில் அழுத்தம் கொடுத்தது. இந்தப் பின்னணியில் இன்று நாம் கூறுகிற மாற்றுக் கொள்கைகள், அது உருவாக்க வேண் டிய அரசியல் மாற்று குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஜலந்தர் மாநாடு:

1978ல் ஜலந்தரில் கூடிய கட்சியின் 10வது அகில இந்திய மாநாடு, இரண்டு வித நடைமுறை உத்திகளை வகுத்தது. வலுவான சர்வாதிகார எதிர்ப்பு இயக்கங்களின் மூலம் அவசர நிலை முடிவுக்கு வந்த நேரம் அது.

 • எதேச்சதிகார எதிர்ப்பு மேடை ஒன்றை உருவாக்கி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுகிற முதலாளித்துவக் கட்சிகளை அந்த விரிவான மேடைக்குள் கொண்டு வருவது என்பது ஓர் உத்தி. முதலாளித்துவக் கட்சிகளுக்கிடையே உருவாகும் மோதல்களை, கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் அடிப்படை.
 • முதலாளித்துவ கட்சிகள் அனைத்திலும் இருந்து மாறுபட்ட இடதுசாரி ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில், வெகுஜன இயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் இடதுசாரி ஜனநாயக அணியை வளர்த்தெடுப்பது என்பது மற்றொரு உத்தி.

இடதுசாரி ஜனநாயக அணி:

அவசரகால நிலை முடிவுக்கு வந்த பிறகு ஆளும் வர்க்கம், இருக்கிற ஜனநாயக உரிமைகளை ஏககாலத்தில் காலி செய்வது என்ற நிலைக்கு மீண்டும் போகவில்லை. எனவே, முதல் உத்தியான இந்த சர்வாதிகார எதிர்ப்பு  மேடைக் கான அறைகூவல், பின்னால் வந்த மாநாடுகளில் மீண்டும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், ஜனநாயக உரிமைகளைத் தக்க வைக்கும் முயற்சிகள் தொடர வேண்டியிருக்கின்றன. மத்திய அரசின் சில நடவடிக்கைகள் மற்றும் (பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் என்ற பெயரில் ஜனநாயகத்தை ஓரம் கட்டுவது), சில நீதிமன்றத் தீர்ப்புகள் ஜனநாயக உரிமைகளைப் பலிகடா வாக்குகின்றன.

இரண்டாவது உத்தியான இடதுசாரி ஜனநாயக அணி என்பது, மக்கள் ஜனநாயக அணிக்கு மாற்று அல்ல. மக்கள் ஜனநாயக அணியில் திரட்டப்பட வேண்டிய சக்திகளை, வர்க்கங்களை ஸ்திரப்படுத்தும் ஏற்பாடே. அரசியல் பொருளாதாரக் களத்தில் முதலாளித்துவக் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதான, மக்கள் நலனை உறுதிப்படுத்தும் இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்த வேண்டும்  என 10-வது மாநாடு மதிப்பீடு செய்தது. இதைத் தொடர்ந்து, 11-வது மாநாடு, மக்கள் ஜனநாயக முன்னணியின் திட்ட அடிப்படையிலான கோஷத்தைப் பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில், இடதுசாரி ஜனநாயக முன்னணி என்பதை நடைமுறைக்கான கோஷம் என்ற வகையில், அதை உடனடியாக அடைவதென்ற ரீதியில் நாம் போராடுகிறோம் என்று வலியுறுத்தியது.

12வது மாநாடோ, இடதுசாரி ஜனநாயக அணியை உருவாக்குவது மிகவும் அவசரமான, முக்கியமான கடமை என்று சுட்டிக் காட்டியது. அடுத்து வந்த மாநாடுகளிலும், இது ஏதோ தொலை தூரத்தில் உள்ள இலக்காகக் கருதக் கூடாது, விரைவுபடுத்த முடியும் என்பது அழுத்தமாக முன் வைக்கப்பட்டது. 20வது மாநாடும், மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்து, உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரோடும் கட்சி நெருக்கமாகப் பணியாற்றும். இடது ஜனநாயக மேடையை மையப்படுத்தி, அவர்களை அணி திரட்டும் என்பதை, அடுத்த 3 ஆண்டுகளுக்கான கடமையாக முன்னிறுத்துகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளால் வகுப்புவாத அபாயம் அதிகரித்து வருவதை 11-வது அகில இந்திய மாநாட்டிலிருந்து கட்சி சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்த சவாலை எதிர்நோக்குவதிலும் இடது ஜனநாயக மேடை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

இந்த அணியை எவ்வாறு கட்டுவது, யார் அதில் இடம் பெறுவது என்பது ஜலந்தர் மாநாட்டு அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப்பட்டது. புரட்சியின் நோக்கங்களான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்புக் கருத்துக்களைப் பரவலாக்க வேண்டும். சோஷலிச உணர்விலும், மார்க்சிய லெனினிய உணர்விலும் தொழிலாளி வர்க்கம் பயிற்றுவிக்கப்பட்டு, தனது தலைமைப் பாத்திரத்தை உணரச் செய்ய வேண்டும். தொழிலாளி வர்க்கம், அதன் கட்சி ஆகியவற்றின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளும், வளர்ந்து வரும் அதன் வலிமையும், இடதுசாரி ஜனநாயக அணியைக் கட்டுவதற்கு மிகவும் அவசியமாகும் என்றும் ஜலந்தர் மாநாடு குறிப்பிடுகிறது. அதாவது கட்சியின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன அழுத்தம் இதற்குத் தேவைப்படுகிறது.

 1. மார்க்சிஸ்ட் கட்சி அதன் தலைமையில் இயங்கும் வர்க்க வெகுஜன ஸ்தாபனங்கள்
 2. இதர இடதுசாரி கட்சிகள், அவற்றின் அமைப்புகள்
 3. இதர முதலாளித்துவக் கட்சிகளில் இருந் தாலும், பிரச்னைகளில் முற்போக்கு நிலைபாடு எடுக்கக் கூடிய சக்திகள்
 4. ஜனநாயக மாற்றங்களை வலியுறுத்துகிற குழுக்கள், தனி நபர்கள், சுயேச்சையானவர்கள்
 5. ஏகாதிபத்தியம், ஏகபோகம், நிலப்பிரபுத் துவ எதிர்ப்புக் கொள்கைகளைப் பின்பற்றுகிற அமைப்புகள், தனி நபர்கள்
 6. ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட சில மாநில முதலாளித்துவ கட்சிகள்

ஆகியோர் இந்த அணியில் திரட்டப்பட வேண்டும். எனவே, கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சியும், இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையும் இந்த அணியின் அஸ்திவாரம் என்பது சொல்லாமலே புரியும்.

அப்படியானால், ஏற்கனவே இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலுவாக இருக்கக் கூடிய மேற்குவங்கம், கேரளா, திரிபுராவைப் பாதுகாப்பது என்பதும், இந்த அணியைக் கட்டுவதன் ஒரு பகுதி தான். இங்குள்ள இடதுசாரி அரசு களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் கட்சி எடுத்த முடிவு, ஏதோ நமக்கு அரசாங்கம் உள்ளது, அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எடுத்தது அல்ல. அரசியல் பார்வையுடன் எடுத்த முடிவு. எந்த சக்திகளைத் தேசிய அளவில் திரட்ட வேண்டும் எனப் பாடுபடுகிறோமோ, அத்தகைய சக்திகள் முன்னேற்றமாக இருக்கும் தளங்களைப் பாதுகாத்து கெட்டிப்படுத்துவது நமது இலக்கின் ஒரு பகுதியே. 20வது அகில இந்திய மாநாட்டின் அரசியல், ஸ்தாபனத் தீர்மானம், மேற்கு வங்கத் தில் உள்ள நமது கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கத்தை ஆதரிப்பது நமது மிக முக்கிய கடமை என்று குறிப்பிடுகிறது. தற்போதும், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் மீட்கப் பட வேண்டும் என ஆகஸ்ட் 7ம் தேதி நாடு தழுவிய இயக்கம் நடத்த வேண்டும் என்ற அரசியல் தலைமைக் குழுவின் வழிகாட்டுதலும்,  தாக்கு தலுக்கு உள்ளாகிற தோழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சேர்ந்து, இந்த அரசியல் கடமையுடன் தொடர்புடைய விஷயம் என்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள்:

இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கு, கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தப் பார்வை கட்சியின் பல மட்டங்களில் மேம்பட வேண்டியிருக்கிறது. 2002ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சியின் 17வது மாநாட்டில், இது குறித்த விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், அரசின் நடவடிக்கைகள் மக்களின் வாழ்வுரிமை மீது தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்தும் கட்சியின் அறைகூவல்கள் வரும்போது, பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற வடிவங்களில் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். இவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் இவை மட்டுமே சுயேச்சையான இயக்கம் என்று வாசலை அடைத்துவிட முடியாது. வர்க்கச் சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரைத் திரட்டி போராட்டங்களை உருவாக்குவதே பிரதானமான சுயேச்சை நடவடிக்கையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த முறையில் தான் வர்க்கப் போராட்டம் முன்னேறும். இடதுசாரி ஜனநாயக அணி, வர்க்கங்களைத் திரட்டி உருவாக்கப்படுவது என்றால், வர்க்கங்களைத் திரட்ட வேறு எதுவும் குறுக்கு வழி கிடையாது. வர்க்கப் போராட்டங்களை உருவாக்குவதே ஒரே வழியாகும். விடாப்பிடியான போராட்டங்களின் மூலம் ஒரு சில கோரிக்கைகளை வென்றெடுப்பது தேவை. மக்களுக்குப் போராட்டங்களின் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியும். நீடித்த போராட்டம் என்று கட்சியின் பல ஆவணங்கள் குறிப்பிடுவது இந்தப் பின்னணியில் தான்.

கட்சியின் தலைமையில் நடத்தப்படும் போராட்டங்கள் மட்டும் போதாது. வர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கிய கடமையும் இதுவாகவே இருக்க வேண்டும். கட்சி அதற்கு வழிகாட்ட வேண்டும். அத்தகைய போராட்டங்கள் நடக்கும் போது ஆதரிக்க வேண்டும். வர்க்க அமைப்புகள் தலையிடும் பிரச்னைகள் இயல்பாகவே வர்க்கப் பிரச்னைகளாக இருக்கும். வெகுஜன அமைப்புகள், பல-வர்க்கத் தன்மை கொண்டவை. எனவே பல்வகை பிரச்னைகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனாலும், அவற்றின் செயல்பாட்டின் குவிமையம், சுரண்டப்படும் வர்க்கங்களைச் சார்ந்த வெகுமக்களைத் திரட்டுவதாகவே இருக்க வேண்டும். குறிப்பாக, கட்சி மாநாடு முன்னிறுத்தும் அரசியல் ஸ்தாபனக் கடமைகள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் தன்மைக்கு உட்பட்டு, அந்த அரங்கங்களில் செயல்படுத்தப்பட வேண்டும். அரங்க பிராக்ஷன் கமிட்டிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் பிரச்னைகளை எடுப்பது, தீண்டாமை, பாலின பாகுபாட்டு பிரச்னைகளில் தலையீடு செய்வது, நிலம் உணவு வேலை கோரிக் கைகளுக்கான போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவது, வர்க்கப் பிரச்னைகளின் மீதான போராட்டங்களை நடத்துவது, சிறுபான்மை மக்களின் நலன் காப்பது, சாதியம் மற்றும் வகுப்பு வாதத்தை எதிர்ப்பது என்று அறைகூவல் வரும் நேரத்தில், கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்பு களும் அவரவர் தளத்தில் ஒத்திசைந்து செய லாற்றுவது நமது அரசியல் செல்வாக்கை வேகப் படுத்தும்.

திட்டவட்ட நிலைக்கு ஏற்ப இத்தகைய போராட்டங்களையும், பொருத்தமான கோரிக்கைகளையும் உருவாக்க இயக்கவியல் ஆய்வு முறை பயன்படும். மாவோ, கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் வேலை முறையில் தேவைப்படும் மாற்றம் குறித்துப் பேசும் போது, நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, செயல்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் என்று குறிப்பிடுகிறார். பகுப்பாய்வு செய்யும் போது நுண்ணிய பல அம்சங்களைக் கூட அடையாளம் காண முடியும், அதற்கேற்ப அணுகுமுறையை வகுத்துக் கொள்ள முடியும். ஆனால் நடைமுறையில், இந்தப் புரிதலுடன் வர்க்க வெகுஜன அமைப்புகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்த நமது அணுகுமுறை அமைந்திருப்பதாகக் கூற முடியாது.  தவறான அணுகுமுறையை சரி செய்யும் நோக்கத்துடன் தான், மத்திய ஆவணங்கள் இரண்டு வெளியிடப்பட்டுள்ளன.

கட்சி வேலை முக்கியமா, வர்க்க வெகுஜன அமைப்புகளின் வேலை முக்கியமா என்று இரண்டையும் எதிரெதிராக நிறுத்துவது, நமது அரசியல் நோக்கத்துக்குப் பலனளிக்காது. இரண்டும் ஒத்திசைந்தவை, ஒரே பாதையில் பயணிக்க வேண்டியவை. உள்ளூர் பிரச்னைகளுக்கான போராட்டங்களில் பெருமளவு மக்களை ஈர்க்க முடியும். சுகாதாரம், ரேஷன், குடியிருப்பு, பட்டா போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். நமது ஸ்தாபன வலுவுக்குத் தகுந்தாற் போல அவை நடப்பதாகக் கூற முடியாது. மேலும், பல முக்கிய பிரச்னைகளில் அகில இந்திய, மாநில அறைகூவல்கள் வருகின்றன. மாவட்ட அளவிலான சுயேச்சையான நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்த இவை தடையாக இருக்கின்றன என்று பார்க்காமல், இத்தகைய அறைகூவல்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, உள்ளூர் பிரச்னைகளுடன் இணைக்க வேண்டும். எந்த அகில இந்திய, மாநில அறைகூவலும் மக்களின் பிரச்னைகளுடன் தொடர்புள்ளதாகவே இருக்கிறது. அவற்றை ஸ்தல நிலைமைகளுக்கேற்ப பொருத்திக் கொண்டு போக திட்டமிட வேண்டும்.

அடுத்து, போராட்டங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களில் பங்கேற்கும் மக்களை நமது அரசியலுக்கும், அமைப்புக்கும் வென்றெடுப்பது ஒரு முக்கிய அம்சம். இது  தானாகவே நடக்காது. இதற்குக் கட்சியின் அரசியல் செயல்பாடுகளும், தத்துவார்த்தப் பிரச்சாரமும் தேவை. அவர்களிடையே கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்ய வேண்டும். முன்னுக்கு வரும் ஒரு பகுதியைக் கட்சியின் ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும். நமது தளத்தைக் கெட்டிப்படுத்துவதும், விரிவுபடுத்துவதும் சுயேச்சை செயல்பாட்டின் ஒரு முக்கிய அம்சம். ஆனால் இது பொதுவாகப் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் தான், நமது இயக்கங்களுக்கு ஏற்ப, அல்லது செல்வாக்குக்கு ஏற்ப கட்சி வளர்ச்சி இல்லையே என்ற விமர்சனம் அடிக்கடி எழுகிறது. சுயேச்சை செயல்பாட்டின் மூலம் கட்சி வளர வேண்டும், வலுப்பட வேண்டும், வர்க்க அரசியல் அழுத்தம் பெறவேண்டும் என்றால், போராட்டங்களின் மூலம் கிடைக்கும் தொடர்புகள் ஸ்தாபனப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிரமப்பட்டு உழைத்து போராட்டங்களை உருவாக்கி விட்டு, ஸ்தாபனப்படுத்துவதை கவனிக்காவிட்டால், எதற்காக, கட்சி மாநாடுகளும், கட்சித் திட்டமும் நம்மை போராடச் சொல்லுகிறதோ அந்த அரசியல் நோக்கம் நிறைவேறாது.

வர்க்க வெகுஜன அமைப்புகளிலும், கட்சியிலும் வெகுமக்கள் ஸ்தாபன ரீதியாக உறுதி செய்யப்படாவிட்டால், இவர்கள் மத்தியில் கட்சியின் அரசியல் செல்வாக்கை நீண்ட காலம் தாக்குப்பிடிக்க வைக்க முடியாது. இந்தப் பின்னணியில்தான், தேவைப்பட்டால் பொருத்தமான புதிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கட்சி வழி காட்டியுள்ளது. பாலர் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம் போன்றவை இதன் சமீபத்திய உதாரணங்கள். நமது அன்றாடப் பணிகள் ஒவ்வொன்றும், இந்த அரசியல் நோக்கத்தை நோக்கி நெருக்கமாக நம்மைப் பயணிக்க வைப்பதாக இருக்க வேண்டும். இருக்கிறதா என்று தொடர்ச்சியாகப் பரிசீலிக்க வேண்டும்.

கட்சி ஏற்கனவே உள்ள தளங்களைப் பாதுகாத்து, புதிய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றால், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியான அரசியல், தத்துவார்த்தப் பிரச்சாரம் செய்ய வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்கங்களுக்கு எதிராக அரசியல், பொருளாதார, கருத்தியல் ரீதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். வகுப்புவாத, சாதிய பிற்போக்குத் தத்துவங்களுக்கு எதிராகவும் தத்துவார்த்தப் பணிகளைத் திட்டமிட வேண்டும். இடதுசாரி அரசியலின் முன்னேற்றத்துக்குத் தடையாக இவை இருக்கின்றன.

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டு இயக்கங்கள் நடத்துவதும் ஐக்கிய முன்னணி உத்தியின் ஒரு பகுதிதான். இடதுசாரி இயக்கத்தைக் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்த வர்க்க எதிரிகள் முயற்சிக்கும் போது, அதை எதிர்கொள்ள இத்தகைய கட்சி களின் ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளை எதிர்க்கும் சக்தி, நமக்கு மட்டுமே இல்லாத சூழலில், பிரச்னைகளின் அடிப்படையில் இந்தக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும். அந்தக் குறிப்பிட்ட சூழலுக்கு அது உதவும். 20-வது மாநாட்டின் அரசியல் தீர்மானம், மாநில முதலாளித்துவக் கட்சிகளுடன் இத்தகைய அணுகுமுறை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

ஐக்கிய முன்னணி உத்தி:

புதிய பகுதியினரை வென்றெடுக்கும் வாய்ப்புகளை ஐக்கிய முன்னணி உருவாக்கும் என்றும், இது தேர்தல் உடன்பாடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்றும் கட்சி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இடதுசாரி ஜனநாயக அணிக்கு வர வேண்டிய நமது வர்க்கங்கள், முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் ஏராளமாக உள்ளனர். இவர்களை வென்றெடுப்பது மிக அவசியம். எனவே, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டு இயக்கங்கள் நடத்துவதும் ஐக்கிய முன்னணி உத்தியின் ஒரு பகுதி தான். இடதுசாரி இயக்கத்தைக் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்த வர்க்க எதிரிகள் முயற்சிக்கும் போது, அதை எதிர்கொள்ள இத்தகைய கட்சிகளின் ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது.

மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளை எதிர்க்கும் சக்தி, நமக்கு மட்டுமே இல்லாத சூழலில், பிரச்சனைகளின் அடிப்படையில் இந்தக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும். அந்தக் குறிப்பிட்ட சூழலுக்கு அது உதவும். 20வது மாநாட்டின் அரசியல் தீர்மானம், மாநில முதலாளித்துவக் கட்சிகளுடன் இத்தகைய அணுகுமுறை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

சுயேச்சையான செயல்பாடும், ஐக்கிய முன்னணி உத்தியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சுயேச்சையான பணிகளையும் கூடவே செய்யாவிட்டால், ஐக்கிய முன்னணி மேடைகள் பலன் தராது.

தேர்தல் காலத்தில் மக்கள் அரசியல் கேட்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எனவே அணியின் கூட்டு மேடையை மட்டும் பயன்படுத்தாமல், சுயேச்சை மேடை போட்டு, நம் கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு மேடைகளை மட்டும் பயன்படுத்தினால், மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளில் நமது தனியான நிலைபாட்டைச் சொல்ல முடியாது. மக்களின் பார்வையில், இது நம்மை வேறுபடுத்திக் காட்டாது. ஆனால், தனி மேடை போட்டால், கூட்டணி தர்மம் பாதிக்கப்படும் என்கிற சூழல் இருப்பதால், அதற்குள் நின்று, சில உத்திகளை வகுக்க வேண்டும். வீடு வீடாக, நம் கட்சியின் சில முக்கிய நிலைபாடுகளை உள்ளடக்கிய துண்டறிக்கை விநியோகம் குறித்து திட்டமிடலாம். இரண்டாவதாக, தேர்தல் கால ஐக்கிய முன்னணி தந்திரம், நமக்கு ஒரு சில தொகுதிகளில் வெற்றி தேடித் தருகிறது. நமது தேர்தல் உத்தியின் படி, முக்கிய எதிரிகளைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கிறது. ஆனால், இவை மட்டுமே நமது நோக்கமல்ல. நாம் தொகுதி உடன்பாடு காணும் முதலாளித்துவக் கட்சிகளின் பின் அணி திரண்டுள்ள வெகுமக்கள் திரளை அணுகுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் இதர கட்சிகளின் அணிகளுடன் நமக்குக் கிடைக்கும் தொடர்பு, தேர்தல் முடிந்த உடன் தீர்ந்து போய்விடக் கூடாது. அவற்றைப் பராமரிக்க வேண்டும். நாம் தொகுதி உடன்பாடு கொண்ட கட்சியின் தலைமை, தேர்தலுக்குப் பின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசியல் நிலைபாடுகளை எடுத்தால், அதிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட வேண்டும், ஆனால், அந்தக் கட்சிகளின் ஊழியர்களுடனான தொடர்புகளைப் பராமரிக்க வேண்டும்.

கட்சியின் சுயேச்சையான பலம் அதிகரிக்காவிட்டால், முதலாளித்துவக் கட்சிகள், நமது உண்மையான வலுவைவிடக் குறைவாகவே தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முயற்சிக்கும். ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு சில சமயம் நாம் விட்டுத்தரவும் நேரிடுகிறது. இது போன்ற முதலாளித்துவக் கட்சிகளின் தொடர்ச்சியான தந்திரங்களின் விளைவாக, ஒரு சில மாநிலங்களில் நமது தேர்தல் கால செயல்பாடு என்பது மிகவும் குறுக்கப்பட்டுள்ளது. நமது பலமின்மையின் காரணமாக ஒன்றுபட்ட பிரச்சார மேடைகளைப் பயன்படுத்தி நமது செல்வாக்கை விரிவு படுத்துகிற முறையில் பிரச்சாரம் செய்ய முடியாமல் போகிறது. நமது கடுமையான பலவீனம் தான், முதலாளித்துவக் கட்சிகள் நம் மீது ஆதிக்கம் செலுத்தவும், தங்களது சொந்த அரசியலை விளம்பரப்படுத்தி முன்னிறுத்தவும், நமது கட்சி அணியினர் மற்றும் நம்மைப் பின்பற்றுவோ ரிடையே கருத்தாதிக்கம் செலுத்தவும் வழி வகுத் துள்ளது என்று 17வது மாநாடு பளிச்சென்று பரிசீலிக்கிறது.

சுயேச்சையான இயக்கங்கள், அதனால் உருவாகும் கட்சியின் சுயேச்சையான வலு அதிகரிப்பு ஆகியவற்றின் மூலமே தேர்தல் உடன்பாட்டிற்கோ, ஒன்றுபட்ட பிரச்சாரம், இயக்கங்களுக்கோ வரவேண்டிய நிர்ப்பந்தம் இதர கட்சிகளின் தலைமைக்கு ஏற்படும். அவர்களுக்குப் பின்னால் உள்ள உழைப்பாளி மக்களுடன் உறவு கொள்ளும் வாய்ப்பும் நமக்கு அதிகரிக்கும்.

இந்தச் சூழலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவுகளைப் பராமரித்து, மக்கள் பிரச்னைகளில் ஒத்துழைப்பு, இயக்கங்களுக்கான முயற்சிகளை உருவாக்க வேண்டும், நமது வர்க்க நலனின் அடிப்படையில் நின்று, இந்தக் கட்சிகள் சிலவற்றுடன் தேர்தல் உடன்பாடு கொள்ளலாம் என்று 20வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது.

இடது ஜனநாயக அணியை உருவாக்கும் பணி:

முக்கிய அரசியல் கடமையான இடது ஜனநாயக அணியைக் கட்டும் நோக்கத்துடன் தான், 20வது மாநாட்டின் அரசியல் தீர்மானம், கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள் மற்றும் இடதுசாரிகளின் ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்துகிறது. நவீன தாராளமயமாக்கல் மற்றும் ஏகாதிபத்திய தாக்கத்தை எதிர்த்து இடதுசாரி கட்சிகளால் மட்டுமே உறுதி மிக்க போராட்டத்தை நடத்த முடியும் என்பதால் இடதுசாரி ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயமாகும்.

இடதுசாரி கட்சிகளுக்கு வெளியே உள்ள இடதுசாரி மனோபாவம் கொண்ட குழுக்கள் மற்றும் தனி நபர்களையும் இடதுசாரி மேடைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.  முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ முறைமைக்கு மாற்றாக இடது ஜனநாயக மாற்று தான் இருக்க முடியும் என்பது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். அனைத்துப் பகுதி உழைப்பாளிகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு வியாபாரிகள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் நலன்களை இடது ஜனநாயகத் திட்டமே முன்னெடுக்க முடியும்.

எனவே, இடது ஜனநாயகத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாகக் கீழ்க்கண்ட 11 அம்சங்கள், இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகளாக மக்கள் முன்னிறுத்தப்பட வேண்டும்.

 1. முழுமையான நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் விவசாய உறவு களில் ஜனநாயகப்பூர்வ மாற்றம்.
 2. வளர்ச்சிக்கு சுயசார்பு பாதை, சர்வதேச நிதிமூலதனப் பாய்ச்சலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங்களை தேசியமயமாக்குவது, திட்டமிட்ட மற்றும் சமச்சீரான வளர்ச்சி.
 3. சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வு களைக் குறைப்பது, ஏகபோகத்தைத் தடுப்பது, பொதுத்துறையை மேம்படுத்துவது, செல்வத்தை மறுவிநியோகம் செய்ய நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள்.
 4. ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அரசியல் முறை; மத்திய – மாநில உறவுகளைச் சீரமைத்தல் மற்றும் வலிமையான ஜனநாயகப்பூர்வ அதிகாரப் பரவல்; ஜனநாயகத்தை ஆழமாக வேர் பிடிக்கச் செய்ய அரசியல் சட்ட மாற்றங்கள், சர்வதேச உடன்பாடுகளை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கை;
 5. உயர்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை; தேர்தல் சீர்திருத்தம், பகுதிப் பட்டியல் முறையோடு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்துவது.
 6. அரசியல் சாசனத்தின் அடிநாதமாக அமையும் வகையில் மதச்சார்பின்மை நெறி முறையின் அடிப்படையில் மதத்தையும் அரசி யலையும் பிரிப்பது; வகுப்புவாத சக்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
 7. நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பிற்கான உறுதி, நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கு உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல்.
 8. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த பொது விநியோக முறைத்திட்டம்.
 9. பொது மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த பொதுக்கல்வி மற்றும் பொது சுகாதார முறையை வளர்த்தெடுப்பது.
 10. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டு வதன் மூலம் சமூக நீதியை உறுதிப்படுத்துவது, பெண்களுக்கு சம உரிமை, தலித்துகள் சிறு பான்மையினர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு.
 11. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி, தண்ணீர் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பெறுவதில் சமவாய்ப்பு.

இந்த நோக்கத்தையும், கடமைகளையும் புரிந்து கொண்டு கிளைகள் செயல்படவும், கிளைச் செயலாளர்கள் செயலூக்கமுள்ளவர்களாக ஆக்கப்படவுமான முயற்சிகளை மேற்கொள்ள  வேண்டும். புறச்சூழல் சாதகமாக இருந்தாலும், கட்சி ஸ்தாபனம் என்ற அகச்சூழலும் வலுவாகவும், சாதகமாகவும் உருவாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அடிப்படையில், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த நமது பிரச்சாரமும், நடவடிக்கைகளும் வலுப்படட்டும். நேச சக்திகள் நம்முடன் நெருக்கமாகட்டும். இரண்டு பெரு முதலாளித்துவ அணிகளின் அரசியலுக்கு முற்றிலும் மாறானதாக, இடதுசாரி அரசியல் மாற்று உருவாக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை வித்துக்கள் விதைக்கப்படட்டும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: