பி. சாய்நாத்
தமிழில்: எம்.கிரிஜா
(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு 2013, ஜூலை 24 முதல் 27 வரை தமிழகத்தில் கடலூரில் நடைபெறுவதனையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதில் இந்து பத்திரிகையின் கிராமப்புற பிரச்சனைகள் துறை ஆசிரியரும் பிரபல பத்திரிகையாளருமான திரு பி.சாய்நாத் அவர்கள் நெல்லை, கோவில்பட்டி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மையங்களில் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இன்று இந்திய விவசாயத் துறையில் நிலவி வரும் நெருக்கடி குறித்து அவர் விரிவாக உரையாற்றினார். அவரது உரையின் சாராம்சத்தை எம். கிரிஜா தொகுத்தளித்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு இம்மாத இறுதியில் நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி பெறுகிறது), 8000-த்திற்கும் அதிகமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவர் அல்லது விவசாயி என்ற அடையாளத்தை இழப்பர், பல விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறிடுவர்.
ஆனால், இதே நான்கு நாட்களில் இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதத்தினராக உள்ள செல்வந்தர்களுக்கு 5500 கோடி ரூபாயை மத்திய அரசு மட்டும் வரிச்சலுகையாக (கார்ப்பரேட் வரி வருமானம், இறக்குமதி தீர்வை, சுங்க வரி ஆகிய வகையில்) அளித்திடும்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் 5,33,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்கும், மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் பல்லாயிரம்; கோடி ரூபாய் வரிச் சலுகையாகக் கிடைக்கிறது.
இது நமது பட்ஜெட் பற்றாக்குறை தொகையைக் காட்டிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கூடுதலானதாகும். எனவே, செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தினார்கள் என்றாலே இந்தியாவில் எந்த நெருக்கடியும் இருக்காது. நடப்பு பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவிலான சலுகை (அதாவது 66000 கோடி ரூபாய்கள்) இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தரப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் பார்த்தால் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான தொகை இறக்குமதி செய்யப்படும் தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2006 முதல் இறக்குமதியை ஊக்குவித்து ரூபாய் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை இறக்குமதி வரியில் தள்ளுபடியாக அளித்த அதே ஆட்சியாளர்கள், தற்போது நெருக்கடி நிலவுவதால் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.
வெள்ளைத் தங்கம்
விவசாயிகளின் வாழ்க்கையில் தங்கத்திற்கு மற்றொரு மதிப்பீடும் உள்ளது. பருத்தி பெருமளவில் விளைவிக்கப்படும் விதர்பா பகுதியில் இன்று நிலவும் நெருக்கடியை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தால் தங்கத்தின் இத்தகைய மதிப்பீட்டினையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
விதர்பா பகுதியின் பருத்தி விவசாயிகளின் தற்போதைய வாழ்நிலையை 60-70-களிலான வாழ்நிலையோடு நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம். அப்போது அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மும்பையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு படிக்க அனுப்பி வந்தனர். அன்றைய காலகட்டத்தில் பருத்தி விற்றால் விவசாயிக்கு கிடைக்கும் தொகையானது தங்கத்தின் மதிப்பை விட கூடுதலாக இருந்தது. எனவேதான், பருத்தியை வெள்ளைத் தங்கம் என அழைக்கலாயினர்.
1974-ல் ஒரு குவிண்டால் பருத்தியின் மதிப்பு 10 கிராம் தங்கத்தின் மதிப்பை விட கூடுதலாக இருந்தது. ஆனால், இன்று 6 அல்லது 7 குவிண்டால் பருத்தியைக் கொடுத் தால்தான் 10 கிராம் தங்கம் கிடைக்கும். இதுவே 10 கிராம் தங்கத்தின் விலை 3,, என உயர்ந்தபோது 10 குவிண்டால் பருத்தியை கொடுக்க வேண்டியிருந்தது.
ஆக, தங்கம் இறக்குமதி செய்யப்படுவது, தங்கத்தின் மதிப்பு விவசாயியின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து புரிந்து கொண்டுள்ளீர்கள்.
இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக அதிகரித்திட சமீபத்தில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவு இந்திய விவசாயத்துறையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்திட உள்ளது. ஏனெனில், இந்த விலையேற்றத்தின் காரணமாக மின்சாரக் கட்டணமும், உர விலையும் கடுமையாக உயர்ந்திடும் அபாயம் உள்ளது.
இத்தகையதொரு நெருக்கடியான சூழலில் இந்திய விவசாயம் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளபோது விவ சாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெற உள்ளது.
இந்திய விவசாய நெருக்கடியின் அம்சங்கள்
விவசாயத் துறையில் செய்யப்படும் முதலீட்டின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பதுதான் இந்திய விவசாயத்துறை நெருக்கடியின் முக்கியமான, முதலாவதான அம்சமாகும்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த இதர தொழில்கள் மீதான முதலீடு குறித்து பார்ப்போம். 1989-ல் வி.பி.சிங் அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் இதற்கான முதலீடு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 14 சதவீதமாக இருந்தது.
ஆனால், 2004ல் இது 6 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது. எனவேதான், 2004-ல் மிகப் பெரிய மாநிலங்களின் அரசுகள் – கர்நாடகாவின் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் ஆந்திராவின் சந்திரபாபுநாயுடு ஆகியோரின் அரசுகள் – விவசாயிகளால் தோற்கடிக்கப்பட்டன. இவர்களது கொள்கைகள் விவசாயத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகள் இவர்களுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே, விவசாயிகள் தங்களது வலிமையை உணர்ந்திட வேண்டும்.
இந்திய விவசாயிகள் பலவீனமானவர்கள் அல்ல என்பதுடன் அவர்கள் எவ்விதத் துணையுமின்றி தனியாக இல்லை. தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசுகளின் மீது எதிர்த்தாக்குதல் தொடுக்கும் வலுவினைப் பெற்றவர்கள். இன்றைக்கு நிதியாதாரம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதால் விவசாயத் துறையிலான முதலீடு என்பது கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஏற்கனவே கூறியபடி, விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெறுகின்ற அந்த நான்கு நாட்களில் மத்திய அரசு மட்டும் 5500 கோடி ரூபாயை கார்ப்பரேட்டு களுக்கு வாரி வழங்கிட உள்ளது. மாநில அரசுகள் இவர்களுக்கு அளிக்கும் சலுகைகளையும் இதனுடன் கூட்டினால் இவர்களுக்கு கிடைக்கும் தொகை இன்னமும் கூடுதலாக இருக்கும்.
மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரிலிருந்து தனது நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிறுவனமானது குஜராத்திற்கு இடமாற்றம் செய்த போது 29000 கோடி ரூபாயை குஜராத் மாநில அரசு அந்நிறுவனத்திற்கு அளித்தது. கேட்பவர் வியந்திடும் வகையிலான மலிவு விலையில் நிலம் இவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால் அனைத்தும் அவர்களுக்கு அநேகமாக இலவசமாகவே கிடைத்தது. ஆக, இன்றைக்கு முதலீடு என்பது பெருமளவில் விவசாயத் துறையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் இதர துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
யார் விவசாயி?
இந்திய நாட்டு விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. உண்மையில் அவர்கள் நினைப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விவசாயிகள் உள்ளனர்.
இந்திய மக்கள் தொகையில் 53 சதவீதத்தினர் விவசாயிகள் என ஜகதீஷ் பகவதி, அரவிந்த் மனக்ரேயா போன்ற நவீன-தாராளமய பொருளாதார மேதைகள் கூறி வருகின்றனர்.
இந்த நாட்டில் யார் யார் விவசாயிகள்? என்பது இவர்களுக்கு தெரியவில்லை என்பதனை இவர்களது கூற்று தெளிவாகக் காட்டுகிறது.
உண்மையில் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தின்ர் விவசாயத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். எப்படி திரைப்படத் துறையில் இருப்பவர்களை எல்லாம் நடிகர்கள் என சொல்ல முடியாதோ, கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களை எல்லாம் மாணவர்கள் என்றழைத்திட முடியாதோ, அது போல விவசாயத் துறையுடன் தொடர்புடைய வர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல.
யார் விவசாயி? என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் ஒரு வகைதான் பிரதானமான விவசாயி என்பவர்.
எவர் ஒருவர் ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ அவர் தான் பிரதானமான விவசாயி ஆவார். இவர் தான் முழுமையாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமானத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார்.
எவரொருவர் ஆண்டொன்றுக்கு 3 முதல் 6 மாத காலம் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ (இதில் 1 முதல் 3 மாத காலம் கேஷூவல் தொழிலாளியாக இருந்திருக்கலாம்) அவர் பகுதிநேர விவசாயி ஆவார்.
இவர்களுக்கு அடுத்து விவசாயத் தொழிலாளர்கள் என்ற பிரிவினர் உள்ளனர். இவர்களையும் பிரதானமான விவசாயத் தொழிலாளி மற்றும் பகுதிநேர விவசாயத் தொழிலாளி என வகைப்படுத்திடலாம்.
இந்நிலையில், நமது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதானமான விவசாயிகளையே உண்மையான விவசாயிகளாகக் கருதுகிறது. இதனடிப்படையில் பார்த்தால், இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களே விவசாயிகள் ஆவர். பிரதானமான விவசாயிகளின் எண்ணிக்கையுடன் பகுதிநேர விவசாயிகளின் எண்ணிக்கையை சேர்த்தால் இது 9.9 சதவீதமாக இருக்கும். விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கூட அது இந்திய மக்கள் தொகையில் வெறும் 23 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால், இந்த எண்ணிக்கையும் கூட தற்போது பெருமளவில் சுருங்கி வருகிறது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியனவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் 77 இலட்சம் மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி உள்ளனர் அல்லது பிரதானமான விவசாயி என்ற அடையாளத்தை இழந்துள்ளனர்.
பிரதானமான விவசாயி என்ற அடையாளத்தை இவர்கள் இழந்ததனை நாம் அறிந்து கொள்வது எப்படி?
மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவி வரங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிற அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் விவசாயிகளின் எண்ணிக்கை 13 லட்சம் குறைந்துள்ள அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து, விவசாயிகள் தங்களது நிலத்தின், வாழ்வின் மீதான கட்டுப்பாட்டினை இழந்துள்ளனர் என்பதனையும், ஓராண்டில் 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதோடு விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இதன் மூலமாகவே விவசாயிகள் தங்களது அடையாளத்தை இழந்துள்ளனர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
60, 70, 80-களில் இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வந்தது. 1991 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விவசாயிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களில் 150 லட்சம் பேரை நாடு இழந்துள்ளது. அப்படியானால், நாளொன்றுக்கு சராசரியாக 2000 விவசாயிகளை இழந்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளைப் பார்த்தோமேயானால், நாளொன்றுக்கு 2035 விவசாயிகளை இழந்துள்ளோம். எனவே, நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் விவசாயிகள் எனச் சொல்வது சரியல்ல.
ஆனால், 50 முதல் 60 சதவீதத்தினர் விவசாயத்துடன் தொடர்புடையவராக உள்ளனர் என்பதே உண்மையாகும். திட்டக் கமிஷனின் புள்ளி விவரத்தின் படி 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் விவசாயத் துறையில் 140 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கார்ப்பரேட் கரங்களில்
இந்திய விவசாய நெருக்கடியை ஒரு வரியில் சொல்வதானால், இந்திய விவசாயத்தை சிறு விவசாயிகளின் கைகளிலிருந்து பறித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவே நெருக்கடியின் உள்ளடக்கம் எனக் குறிப்பிடலாம். உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் எவரெல்லாம் விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனப் பார்க்கலாம்.
விவசாயத் துறையில் அளிக்கப்படும் கடன், கிராமப்புறக் கடன் ஆகியனவற்றின் கீழ் விநியோகிக்கப்படும் தொகையானது நாட்டிலுள்ள பெருநிறுவனங்களுக்கு கிடைத்திடும் வகையில் இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் 2010-ம் ஆண்டில் அனைத்து வங்கிகளாலும் விநியோகிக்கப்பட்டுள்ள கடன் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் படி, விநியோகிக்கப்பட்ட மொத்த கடனில் 53 சதம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. வெறும் 38 சதம் மட்டுமே அம்மாநிலத்தின் ஒட்டு மொத்த கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
மும்பை பெருநகரில் விவசாயிகள் எங்குள்ளனர்?
மும்பை நகரில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் அமிதாப் பச்சனும் தான் நவீன விவசாயிகள்.
உத்தரபிரதேசத்தில் தனக்கு நிலம் இருப்பதால் தனக்கு விவசாயக் கடன் அளிக்கப்பட வேண்டும் என மகாராஷ்டிராவில் அமிதாப்பச்சன் விண்ணப்பித்ததைப் பார்த்தோம். இது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் காணப்படும் நிலையல்ல. ஒட்டுமொத்த தேசத்திலும் இத்தகைய நிலை நிலவுகிறது.
1990-க்குப் பிறகு நாடு முழுவதிலும் உள்ள பல கிராமப்புற வங்கிகளுக்கு அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. 1993-ல் இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட, ஷெட்யூல்ட், கிராமப்புற வங்கிகள் என அனைத்து வகை வங்கிகளின் 60 சதம் கிளைகள் கிராமப்புறப் பகுதிகளில் செயல்பட்டு வந்தன. ஆனால், 2008ல் இந்த எண்ணிக்கை 48 சதவீதத்திற்கும் குறைவானது. இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக 2009-10ல் கிராமப்புறப் பகுதிகளில் புதிய கிளைகளை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கி வர்த்தகத் தாளாளர் (கரஸ்பான் டென்ட்) என்ற புதிய நடைமுறையை அமலாக்கத் துவங்கியுள்ளனர். நவீன கந்து வட்டிக்காரர்களான இவர்கள் ஒவ்வொருமுறை கடன் தொகை வழங்கிடும்போது அல்லது கடனுக்கு ஒப்புதல் அளித்திடும்போது சம்மந்தப்பட்ட விவசாயியிடமிருந்து ஒரு தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். அளிக்கப்பட வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகை நடைமுறையால் என்னவெல்லாம் நடக்கிறது என்று கதை கதையாக செய்திகள் கன்னியாகுமரியிலிருந்து வந்துள்ளன.
விவசாயக் கடன் குறித்த புதிய வியாக்கியானம்
சொல்லப்போனால் விநியோகிக்கப்படும் விவசாயக் கடன் தொகையின் அளவு பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தக் கடன் தொகையெல்லாம் சிறிய விவசாயிகளைச் சென்றடைவதில்லை.
விவசாயக் கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு விஷயங்கள் இணைக்கப்பட்டு அவை நியாயப்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில கேலிக்கூத்துக்களும் நடைபெறுகின்றன.
2010-ம் ஆண்டில் அவுரங்காபாத் நகரைச் சார்ந்த வர்த்தகர்களின் சிறிய குழு ஒன்று ஒரே நாளில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கியது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும், லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றது. 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்கிட இவர்கள் செல வழித்தது 66 கோடி ரூபாய்கள் ஆகும். இதில் 44 கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து 7 சதவீத வட்டிக்கு பெறப்பட்ட கடன் தொகையாகும்.
விவசாயி ஒருவர் டிராக்டர் ஒன்றினை வாங்கிட எத்தனை சதவீத வட்டிக்கு கடன் தொகை கிடைக்கும் என்ற கேள்வியை இவ்வங்கியின் கிளை மேலாளரைக் கேட்ட போது அவர் சொன்ன பதில் 14 சதவீத வட்டி என்பதாகும் ஆடம்பரப் பொருளான மெர்சிடஸ் காருக்கு 7 சதவீத வட்டியில் கடன், அதே நேரத்தில் உற்பத்திக்கு பயன்படுகிற டிராக்டர் வாங்கிட 14 சதவீத வட்டியில் கடன் என்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறு விவசாயிகளின்பால் இந்திய அரசானது எத்தகைய பகைமை உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. எத்தகைய பாரபட்சமான முறையில் சிறு விவசாயிகள் நடத்தப்படுகிறார்கள் என்பதனை இது விளக்குகிறது.
விவசாயக் கடன் பற்றி இவர்கள் அளிக்கும் புதிய வியாக்கியானத்தின் படி, முகேஷ் அம்பானி சென்னை அண்ணா சாலையில் ஓர் குளிர்பதனக் கிடங்கினைத் திறக்கிறார் என்றால் அதற்கு அவருக்கு 4 சதவீத வட்டியில் விவசாயக் கடன் கிடைக்கும். ஏனென்றால், குளிர்பதனக் கிடங்கில் காய்கறிகளை பாதுகாப்பது என்பது விவசாயம் ஆகும்.
ஆனால், இந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாயி அவனுக்குத் தேவையான கடன் தொகை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நிலவுகிறது.
இத்தகையதொரு நிலையில் தான் இந்த ஆட்சியாளர்கள் விவசாயக் கடன் என்பதனை வரையறை செய்து, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டினை சமர்ப்பித்திடும் போது இதனுடைய அர்த்தத்தினை விரிவுபடுத்தி வருகிறார்கள். எனவே, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன் என்பது பெருமளவில் வெட்டப்பட்டு வருகிறது.
நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளைச் சந்திக்கின்ற போது அவர்கள் சொல்வதெல்லாம் மிகக் குறைந்த அளவிலான வட்டி விகிதம் அறிவிக்கப்படுகிறது, எனினும் கடன் எதுவும் எங்களுக்குக் கிடைப்பதில்லை என்பதேயாகும்.
நாடு தழுவிய அளவில் 2010-ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் குறித்த ஆய்வு ஒன்றினை டாட்டா இன்ஸ்டி டியூட் ஆப் சோசியல் சயின்சைச் சார்ந்த பேராசிரியர் ராம்குமார் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்படி, சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.5000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2000 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் இத்தகைய கடன்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே நேரத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 10 கோடி, 25 கோடி என கடன் தொகை பெறும் விவசாயி யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த விவசாயியாவது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளாரா? அப்படியானால் இந்தக் கடன் தொகையெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால் அவையெல்லாம் விவசாயிகளைச் சென்றடைவதில்லை. மாறாக கார்ப்பரேட் நிறு வனங்களையே சென்றடைகின்றன. விவசாயத்திற்கான இயந்திர உற்பத்திக்கு இக்கடன் தொகைகள் செல்கின்றன. எல்லா வகையான கடன் தள்ளுபடி திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன.
தற்போது இந்திய அரசானது முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்? பிக்கி (FICCI) அமைப்பும் இணைந்து 7000 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் “Million Farmer Initiative” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு இந்திய அரசு அளித்திடும் மானியத் தொகையின் அளவு ரூபாய் 3000 கோடியாகும். கொல்கத்தாவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய புகையிலை நிறுவனம் (ITC) தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட உள்ளது. இதன்படி, கேழ்வரகு, மிளகாய், சீரகம் மற்றும் புகையிலை ஆகியனவற்றை எவ்வாறு பயிர் செய்திட வேண்டுமென நமது பாரம்பரியமான விவசாயிகளுக்கு இந்நிறுவனத்தின் உயரதிகாரிகளும் MBA பட்டதாரிகளும் பயிற்சி அளிக்கப் போகிறார்களாம். இதிலிருந்து நமது இந்திய விவசாயத் துறையை நிறுவனமய மாக்கிடும் அரசினுடைய முயற்சி தெளிவாகிறது.
இந்திய விவசாயத் துறையிலிருந்து பல லட்சக்கணக்கானவர்களை வெளியேற்றுவது, இந்திய விவசாயத்தினை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஆகியனவற்றில் இந்திய அரசு கடைப்பிடித்து வரும் நிலைபாடானது நமது விவசாய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகிறது. இது தான் இந்தியாவில் தற்போது நிலவி வரும் விவசாய நெருக்கடிக்கு மையமான, ஜீவாதாரண மான காரணமாகும்.
சந்தை சார்ந்த விலை நிர்ணயக் கொள்கை
இத்தகைய கொள்கைகளை செயல்படுத்திடும் அதே நேரத்தில் இந்திய அரசானது சந்தை சார்ந்த விலை நிர்ணயக் கொள்கையைக் கொண்டுள்ளது. எரிவாயு விலையை இரண்டு மடங்காக உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் போல இதுவும் தன்னிச்சையான ஒன்றாகும். இக்கொள்கையின் கீழ் சந்தைக்கு எந்த அடிப்படையும் கிடையாது. அதே போல, இந்திய உற்பத்தி முறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் இதற்கு சந்தை சார்ந்த விலை நிர்ணயக் கொள்கை என நாமகரணம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைக்கு விவசாயத்திற்கான அனைத்து இடுபொருட்களின் விலையையும் இவர்கள் உயர்த்தியுள்ளார்கள். கடந்த 15 ஆண்டுகளில் உரவிலை பெருமளவு அதிகரித்துள்ளது. விவசாயிகள் பயன்படுத்தும் டை-அமோனியம்-பாஸ்பேட் (DAP) உரத்தின் விலையைப் பார்ப்போம். 1991-ல் 1 மூட்டை DAP -யின் விலை ரூ.180 என இருந்தது, 2011ல் ரூ.534 என அதிகரித்தது. தற்போது தமிழகத்தில் ஒரு மூட்டை ரூ. 1250க்கு விற்கப்படுகிறது.
மின் கட்டணம், உர விலை, தண்ணீர் என அனைத்து இடுபொருட்களின் விலையும் முன்பிருந்ததை விட பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றின் காரணமாக இன்று விவசாயி சாகுபடிக்கு செய்யும் செலவுத் தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், விவசாயிக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்திடவில்லை. விவசாயத்தில் ஈடுபடுபவர் பயிர் சாகுபடிக்கு செலவு செய்திட வேண்டிய தொகை பெருமளவு அதிகரித்திருப்பதால் விவசாயிகளால் அதனை ஈடு செய்ய இயலவில்லை. எனவே, அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்குத் தேவையான கடன் வசதி அரசிடமிருந்து கிடைக்காததால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகின்றனர்.
விளைச்சலுக்கு செய்த செலவு கூட திருப்பி கிடைக்காத நிலையில் வாங்கியக் கடனை திருப்பி செலுத்திட இவர்களால் முடியாமல் போகிறது. ஆனால், வாங்கியக் கடனோ வட்டியோடு குட்டி போட்டு வளர்ந்து நின்று பயமுறுத்த, கடன் வலையில் சிக்கிய இவர்கள் திவாலாகிப் போகின்றனர். உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொள்கின்றனர். பெரும்பாலான விவசாயிகளின் தற்கொலைக்கு இத்தகைய கடன்பட்ட நிலையே காரணமாகிறது.
தற்கொலை செய்து உயிரிழந்த 850 விவசாயிகளின் குடும்பங்களைச் சென்று சந்தித்து கேட்டபோது அனைத்து சம்பவங்களிலும் கடன் சுமையே தற்கொலைக்கு காரணமாகச் சொல்லப்பட்டது. இத்தகைய விவசாயக் குடும்பங்களின் கடன் தொகை என்பது விவசாயத் தொழிலை செய்திட வாங்கியது மட்டுமல்ல. மருத்துவ சிகிச்சைக்காக, குழந்தைகளின் கல்விச் செலவுக்காக என்றும் அவர்கள் கடன் வாங்கியுள்ளனர். இன்றைக்கு கிராமப்புற இந்தியாவில் உள்ள விவசாயக் குடும்பங்களின் கடன் பட்டியலில் விவசாயம் செய்திட வாங்குவதற்கு அடுத்த படியாக மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்திட வாங்கும் தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இன்றைக்கு நகர்ப்புறத்தில் உள்ள ஓரளவு வருமானமும் வசதி வாய்ப்பும் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தினரைக் காட்டிலும் கூடுதலான அளவில் நமது கிராமப்புற மக்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் நிலையை காண முடிகிறது.
இந்நிலையில்தான், நமது விவசாயிகளைப் பார்த்து பருத்தி, வெனிலா போன்ற பணப்பயிர்களை பயிர் செய்திடுமாறு நமது ஆட்சியாளர்கள் கூறினர். சர்வதேச சந்தையில் இவற்றிற்கு நல்ல விலை உள்ள காரணத்தால் அவர்களுக்கு அமெரிக்க டாலரில் வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டினர். அரசு கூறியதை நம்பிய விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இத்தகைய பணப்பயிர்களை விளைவிக்கத் துவங்கினர். பல ஏக்கர் கணக்கான விளை நிலங்களில் பருத்தி பயிர் செய்யப்பட்டபோது உண்மையிலேயே சர்வதேச சந்தையில் பருத்திக்கு ரூ. 4,000, 5,000, 6,000 என நல்ல விலை கிடைத்து வந்தது. இதனைப் பார்த்த விவசாயிகள் சிறிது காலம் கழித்து விலை 7000 என வரும்போது தங்களிடம் உள்ள விளைச்சலை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என எண்ணி காத்திருந்தனர். அத்தகைய நேரத்தில், அது நாள் வரை சர்வதேச சந்தையில் நிலவிடும் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வந்த இந்திய அரசானது திடீரென பருத்தி ஏற்றுமதியை தடை செய்து வெளியிட்ட அறிவிப்பு அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியது.
மும்பை பஞ்சாலை முத லாளிகளான வாடியாக்களுக்கும், அம்பானிகளுக்கும் மலிவு விலையில் பருத்தியை கிடைக்கச் செய்திடவே இத்தகைய அதிரடியான அறிவிப்பினை இந்திய அரசு வெளியிட்டது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் பருத்தியின் விலை ரூ.7000 என இருந்தபோது, நமது விவசாயிகள் மும்பை பஞ்சாலை முதலாளிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், கந்து வட்டிக் காரர்களுக்கும் வெறும் ரூ.3000-த்திலிருந்து 3500 வரையிலான விலைக்கு விற்க வேண்டி வந்தது. இதன் காரணமாக பெருமளவிலான விவசாயிகள் கடன் வலையில் சிக்குண்டனர். கந்து வட்டிக்காரர்களின் கடன் வலை, அரசிடமிருந்து எந்த கடன் உதவியும் கிடைக்காத நிலை, விவசாயத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, இடுபொருட்களின் விலை உயர்வு ஆகியன எல்லாம் சேர்ந்து இந்திய விவசாயிகளை வாழ்க்கையின் ஓரத்திற்குத் தள்ளியதுடன் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டின.
பெண்கள் விவசாயிகளா?
தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பெண் விவசாயிகள் எண்ணிக்கை இடம் பெறவில்லை.
இந்திய அரசும், காவல் துறையும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் பெண் விவசாயிகளை விவசாயிகளாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, அவர்களை விவசாயியின் மனைவியாகவே கணக்கில் கொள்கின்றனர். எனவே, 8 முதல் 10 சதம் வரையிலான பெண் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் தெரிவிப்பது முழுமையான உண்மையல்ல.
அதே போல தற்கொலை செய்து கொண்ட தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் எண்ணிக்கையும் இந்த புள்ளி விவரத்தில் இடம் பெறவில்லை. ஏனெனில், பெரும்பாலான தருணங்களில் இறந்து போன தலித் அல்லது பழங்குடியின விவசாயியின் பெயரில் பட்டா இல்லை என்ற காரணத்தை காவல் துறையினர் காட்டுகின்றனர். ஆக மொத்தத்தில், உயிரிழந்த பெண் விவசாயிகள், தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை சேர்க்காத போதும் கூட தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 2,84,694 ஆக உள்ளது.
அப்படியானால், கடந்த 9 ஆண்டுகளில் நமது நாட்டில் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். விவசாயிகளின் இத்தகைய தற்கொலைகள் நெருக்கடியல்ல. மாறாக, விவசாயத் துறை நெருக்கடியின் விளைவுகளே அவை.
ஆட்சியாளர்கள் செயல்படுத்திய நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக கடன் வழங்கலில் ஏற்பட்ட வீழ்ச்சி, இடு பொருட்களின் விலை உயர்வு போன்ற விளைவுகளால் இன்றைக்கு விவசாயத் துறை என்பது போதுமான முதலீடு இன்றி தவித்து வருகின்றது. சிறு விவசாயிகளிடமிருந்து விவசாயத்தைத் தட்டிப் பறித்து அதனை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திடும் நோக்குடனே இக் கொள்கைகள் அமலாக்கப்படுகின்றன. எனவேதான், பல லட்சக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளன.
வெற்றிலை, பயிர் செய்யப்பட்டு வந்த விளை நிலங்கள் சுரங்கத் தொழிலுக்கு மாற்றப்படுவதனை எதிர்த்து சமீபகாலமாக பன்னாட்டு நிறுவனமான போஸ்கோவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல லட்சக் கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறுவதால் பெருமளவில் இடம் பெயர்தல் நடைபெறுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மாதிரி ஆய்வும் தெரிவிக்கிறது. இத்தகைய இடம் பெயர்தலும் இப்பிரச்சனையில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆண்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதால் அல்லது கிராமத்திலேயே இருந்தாலும் கூட அவர்கள் விவசாயமல்லாத தொழிலில் ஈடுபடுவதால் இன்று விவசாயத்தில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெண்களின் பணிப் பளு இரண்டு மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் ஆடு, மாடு, கோழி என கால்நடைகளை பராமரிக்கும் பணியினை மேற்கொண்டு வந்த விவசாயக் குடும்பத்தின் பெண்கள், இன்று விவசாயத் தொழிலாளர்களாகவும் மாறியுள்ளனர். இதன் காரணமாக இன்று பெண் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. 1997-லிருந்து இந்தியாவில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. ஏனெனில், முன்பு இந்த கால்நடைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண்கள் இப்போது இதர தொழில்களுக்கு மாறிவிட்ட காரணத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்பெண்களின் வேலைப் பளு தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது.
தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழல் நெருக்கடி
விவசாயிகளிடமிருந்து விவசாயத்தைத் தட்டிப் பறிக்கும் அரசின் கொள்கைகளே விவசாயத் துறையின் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் என்பதனை நாம் அடையாளம் காணும் அதே நேரத்தில் நாம் பொறுப் பேற்க வேண்டிய வேறு பல விஷயங்களும் உள்ளன.
இத்தகைய பிரச்சனைகளுக்கு அரசு தீர்வினை அளிக்காது என்பதனையும் நாம் உணர்ந்திட வேண்டியுள்ளது. இந்திய விவசாயத்துறை இன்று கடுமையான தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. நாம் தவறான முறையில் விவசாயத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதுடன் நாம் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திட வேண்டியுள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மொத்த கரும்பு சாகுபடியில் மூன்றில் இரண்டு பங்கு கரும்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பினை பயிர் செய்திட 18 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படியானால் நாம் கரும்பினை பயிர் செய்யும் பல ஏக்கர் நிலங்களுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட்டுப் பாருங்கள். எனவேதான், பருவமழை பொய்க்காது மாதம் மும்மாரி பொழிந்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் வளத்தை நாம் அழித் தொழித்துள்ளோம். நமது நாட்டின் எந்தப் பகுதிக்குப் போனாலும் தமிழகத்தில் உள்ள திருச்செங்கோடு நகரைச் சார்ந்த போர்வெல் ரிக் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்க முடியும். ஏனெனில், போர்வெல் ரிக்கின் தலைநகரம் திருச்செங்கோடுதான். எனவே, அங்கு சென்றபோது அங்கிருந்த ரிக் உரிமையாளர்களிடம் உங்களது பகுதியில் எத்தனை ரிக்குகள் தற்போது இயங்கிக் கொண்டுள்ளன என்று கேட்டபோது அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது என அவர்கள் கூறினார்கள். அநேகமாக நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்சிவிட்டதால் பெருமளவிலான தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றோம். எனவே, மாற்று வழி முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து நாம் கவனம் செலுத்திட வேண்டும். இல்லையெனில், நாம் சுற்றுச் சூழல் நெருக்கடியையும், உணவு நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தண்ணீர் பாதுகாப்பு என்பது இல்லாமல் உணவுப் பாதுகாப்பு என்பது இருக்க முடியாது. இந்திய அரசானது தண்ணீரை தனியார்மயமாக்கி வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் என்பது அதனை காசு கொடுத்து வாங்கும் சக்தியைப் பெற்றுள்ள மக்களின் வாழ்விடங் களை நோக்கியே பாய்ந்திடும்.
சாத்தியமானத் தீர்வுகள்
இத்தகையதொரு நிலையில், விவசாயிகளுக்கான தேசியக் கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளை அமலாக்கிடக் கோரி நாம் போராட வேண்டும். 2004-ம் ஆண்டில் பெருமளவிலான எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதனையடுத்து இந்திய அரசானது பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் இக்கமிஷனை நியமித்தது.
2007-ம் ஆண்டில் பேராசிரியர் சுவாமிநாதன் அவர்கள் 4 பாகங்களைக் கொண்ட பரிந்துரையை விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரிடம் அளித்தார். பல முற்போக்கான பரிந்துரைகள் அதில் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஆறாண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த அறிக்கை மீதான விவாதம் எதுவும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. நமது மாண்புமிகு அமைச்சர் ஒரு நிமிட நேரம் விவாதிப்பதற்குக் கூட இந்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திடவில்லை. கிருஷ்ணா-கோதாவரி படுகைத் திட்டம் ஆந்திர மக்களுக்கு சொந்தமானது என்றபோதும் இத்திட்டத்தின் பயன்கள் முகேஷ் அம்பானியை சென்றடைய வேண்டுமா அல்லது அனில் அம்பானிக்கு அப்பலன்கள் கிடைத்திட வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திட இவர்களுக்கு நேரம் இருக்கிறது.
எனவே, சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகள் அமலாக்கப்பட நாம் இயக்கங்களை நடத்திட வேண்டும். விவசாய உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 சதவீதத்தை சேர்த்து அதனை விவசாயிக்கு விலையாக அளித்திட வேண்டும் என இக்கமிஷனின் ஒரு பரிந்துரை கூறுகிறது. குறைந்த வட்டியிலான கடன் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகளிலே வட்டியில்லாக் கடன் பற்றியும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டுமென கோரினர். நமது அமைச்சர் சரத் பவார் அவர்கள் இதனை ஏற்றுக் கொண்ட போதும் இன்று வரை இது நடைபெறவில்லை. சொல்லப் போனால், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பேரசிரியர் சுவாமிநாதன் அவர்களுடன் திருவாளர் சரத் பவார் பேசுவதேயில்லை. ஒரு வேளை அமைச்சர் விரும்பியபடி முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானதொரு பரிந்துரையை பேராசிரியர் சுவாமிநாதன் அளிக்காததால் அவர் மீது இவருக்கு கோபம் இருக்கக் கூடும்.
எனவே, 2004 முதல் 2007 வரை யிலான காலத்தில் இந்திய விவசாயத் துறையின் நெருக்கடி குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளின் அமலாக்கத்திற்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
விவசாயத் துறை நெருக்கடி குறித்து மட்டும் விவாதிப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென நாம் கோரிக்கை வைத்திட வேண்டும். இக்கூட்டத்தில் வேறு எந்தப் பிரச்சனை குறித்தும் விவாத்திக்கப்படக் கூடாது. மேலும், இந்தியாவில் விவசாயம் என்பது பொது சேவையாக (public service) அறிவிக்கப்பட வேண்டுமென நாம் கோரிட வேண்டும். இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவான வருமானத்தை ஈட்டுபவர்களாகவே உள்ளனர். விவசாயப் பொருட்களின் உற்பத்தியின் அளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை வைத்து மட்டும் விவசாயத்துறை வளர்ச்சியை கணக்கிடாதீர்கள். விவசாயிகளின் வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வளர்ச்சியை கணக்கிடுங்கள் என சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரை கூறுகிறது. மேற்கூறப்பட்டவை தவிர மேலும் இரண்டு விஷயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்திட வேண்டும்.
சமூக அளவிலான ஆராய்ச்சி மற்றும் பொருளாதாரமன கொள்கைகள் குறித்த விஷயங்களே அவை. சமூக அளவில், நாம் ஆராய்ச்சி யில் நமது கவனத்தை செலுத்திட வேண்டும். இன்றைக்கு அரசுத்துறை வேளாண் பல்கலைக் கழகங்களும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலும் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.
இவையெல்லாம் இன்று முழுக்க முழுக்க மான்சான்டோ, கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே செயல்படுகின்றன. நமது விவசாயிகளின் நலனுக்காக இவை செயல்படவில்லை. உலகிலேயே இது தான் சிறந்தது, இந்த விதைதான் மிகச் சிறந்தது என்றெல்லாம் நாள் தோறும் இந்த வேளாண் பல்கலைக் கழகங்களும் ஆராய்ச்சி கவுன்சிலும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவர்களது இத்தகைய கூற்றால் நமது இந்திய விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்திய விவசாயிகள் சங்கமானது தேசிய அளவில், மாநில அளவில், வாய்ப்பிருந்தால் மாவட்ட அளவில், நவீன ஆராய்ச்சிக் கூடங்களை சிறிய அளவிலாவது துவங்கிட வேண்டும். இத்தகையக் கூடங்கள் 1 அல்லது 2 ஏக்கர் நிலத்தைக் கொண்டு தங்களது பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஏனெனில், இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது மண்ணின் வளம் குறித்து நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நமது மண்ணின் வளம் பெருமளவில் அரிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள் 20 முதல் 25 சதம் வரை மலட்டுத் தன்மை அடைந்து வருகின்றன. மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத பயிர்களை நாம் சாகுபடி செய்வதாலும், சில சமயம் மிக அதிக அளவிலான இரசாயனங்களையும் உரங்களையும் நாம் பயன்படுத்துவதால் இத்தகைய மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
எனவே, விவசாயிகள் சங்கமானது இவ்விஷயத்தில் தனது கவனத்தை செலுத்தி, ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள விவசாயி என்ன பயிரை சாகுபடி செய்தால் பயனடையலாம் என்பதனைக் கண்டறிந்திட வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் விவசாயிகள் சங்கங்கள் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. விவசாயத்திற்கு நீர் வளத்தை நாம் பயன்படுத்திடும் முறையை மறு பரிசீலனை செய்திட வேண்டும்.
சமூகத்தின் ஆதரவுடனான விவசாயம் குறித்து நாம் சிந்திக்கத் துவங்கிட வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் 50 குடும்பங்கள் ஓராண்டு காலத்திற்குத் தங்களுக்கு என்னென்ன தானியங்களும் காய்கறிகளும் என்ன அளவிற்கு தேவை என அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் முன் கூட்டியே தெரிவித்து அவற்றை அந்த விவசாயிகளிடமிருந்து வாங்கிடுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக, அந்த விவசாயிகளுக்கு அந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன தானியங்களை, காய்கறிகளை என்ன அளவு உற்பத்தி செய்திட வேண்டும் என்பது முன் கூட்டியே தெரிந்துவிடும். இதன் காரணமாக, விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைய முடியும்.
அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி பார்த்தோமேயானால், இன்று ஆட்சியாளர்கள் செயல்படுத்திடும் நவீன தாராளமயக் கொள்கைகளை நாம் எதிர்த்திட வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வரும் இத்தகைய கொள்கைகள் திரும்பப் பெறப்பட நாம் ஆட்சியாளர்களை வலியுறுத்திட வேண்டும். இந்திய விவசாயிகளுக்குச் சொந்தமான, பயனளித்து வந்த கடன் திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான பேரியக்கங்களை நடத்திட வேண்டும்.
நமது நாட்டின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமேயானால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீரஞ்செறிந்த சுதந்திரப் போராட்டத்தில் நகர்ப்புறத் தலைவர்களும் வழக்கறிஞர்களும் மட்டுமல்ல, இந்திய விவசாயிகளும் அளப்பரிய பங்களிப்பினை செலுத்தியிருப்பதனைக் காண முடிகிறது.
தேச விடுதலைக்காக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் விவசாயிகளின் பங்களிப்பைக் காண முடிகிறது.
1948-ல் கம்யூனிஸ்ட்களின் தலைமையில் தெலுங்கானா பகுதி விவசாயிகள் வெகுண்டெழுந்து நிஜாம் மன்னருக்கு எதிராக சமர் புரிந்து, அவரை தோற்கடித்து 10 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அந்த நிலங்களை மறுவிநியோகம் செய் தனர்.
50-களில் கேரளத்தில் நிலச்சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டதை பார்த்தோம். அதே போல 70-80களில் மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தம் அமலானதைப் பார்த்தோம். இன்னமும், செய்து முடிக்கப்பட வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன.
நமது இந்திய தேசத்தில், 50-60-70-களில் நாம் விவசாயிகளின் பேரெழுச்சியுடன் கூடிய இயக்கங்களைப் பார்த்தோம். ஆனால், 90-களிலும் 2000-த்திலும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள் அரங்கேறியதனைப் பார்த்தோம். தற்கொலை என்பது தீர்வினை அளிக்காது. மாறாக இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு சரணடைவதாகும்.
எனவே, நாம் 50-60-70களுக்குத் திரும்பிச் செல்வோம். நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்க்கத் துவங்கிடுவோம். விவசாயிகளின் கைகளிலிருந்து விவசாயத்தை தட்டிப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைப்பதனைத் தடுத்து நிறுத்தி இந்திய விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிடுவதற்காக போராடுவோம். உங்களுக்கு இது சாத்தியமே என்பதனையும் நிச்சயமாக உங்களால் வெற்றி பெற இயலும் என்பதனையும் இந்திய விவசாயிகளின் வரலாற்றிலிருந்து உணர்ந்து கொள்ளுங்கள். விவசாயிகள் வெளியே வந்து போராட்டக் களத்தில் குதித்து கார்ப்பரேட்டுகளை எதிர்த்து போராடுகின்ற போது அந்தப் போராட்டமானது கடுமையானதொரு பெரும் போராட்டமாக இருக்கும். இறுதியில் விவசாயிகளே வெற்றி பெறுவர் என்பது உறுதி.
முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோஷலிஸ்டு சித்தாந்தம்… நடுவழி ஏதும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் ஒரு மூன்றாம் சித்தாந்தத்தைப் படைக்க வில்லை. மேலும், வர்க்கப் பகைமைக ளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப் படுத்துவதாகவே பொருளாகும். மூன்றாம் வழி கிடையாது.