நாடு முழுவதும் நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வருகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வரக் கூடிய சூழலில் நகர மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரமயமாதல் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி நகர்ப்புற ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் பல்வேறு தரப்பினரையும் அணிதிரட்ட வேண்டியுள்ளது.
தமிழகத்திலும் நகரமயம் வெகுவேகமாக நிகழ்ந்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமான மாநிலமாக திகழ்கிறது. மொத்தமுள்ள 7.21 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3.5 கோடி மக்கள் நகர்ப்புறங்களில் தற்பொழுது வாழ்ந்து வருகின்றனர். இது 48.45 சதவிகிதமாகும். எதிர்வரும் 20 ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகர்மயம் கடுமையான பிரச்சனைகளையும், சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் கட்சி கூடுதல் கவனம் செலுத்துகிறபோது பெருமளவில் கட்சி வெகுஜன அமைப்புக்களின் விரிவாக்கத்திற்கு மிகச்சிறந்த வாய்ப்புக்கள் உருவாகும்.
விடுதலைப் போராட்டத்தின் போது மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் தளமாக விளங்கின. 1960-க்குப் பிறகு சென்னையும் கட்சியின் அரசியல், தொழிற்சங்க செயல்பாடுகளின் மையமாக திகழ்ந்தது. இன்றும் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் நமது செயல்பாடுகள் இந்த நகரங்களில் தொடருகின்றன. கட்சியின் வெகுஜன அமைப்புகளும் வலுவாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
நகரமயம் – பின்னணி
20-வது கட்சிக் காங்கிரஸ் நகரமயம் இந்திய சமூகத்தில் ஏற்படுத்துகிற விளைவுகளை சுட்டிக் காட்டியுள்ளது. உலக வங்கியின் கொள்கைகளுக் கேற்ப நகரமய சீர்த்திருத்தங்களை மத்திய அரசு திணித்து வருகின்றது. இத்தகு கொள்கைகளின் அடிப்படையான திசைவழி, புதிய பணக்காரர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவையையொட்டியே அமைந்துள்ளது.
இந்த நகரமய நிகழ்வுப்போக்கு கிராமப்புற வறுமையின் விளைவாக மக்கள் பெருமளவிலான இடம் பெயர்வு காரணமாக நிகழ்ந்து வருகிறது. இது நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2011 மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவில் 2001ம் ஆண்டு 5161-ஆக இருந்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 7935-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி கவுன்சிலர்கள் 820, நகராட்சி கவுன்சிலர்கள் 3694 உள்ளிட்ட மொத்தம் 4652 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நகர நிர்வாகத்தில் பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்வரின் விஷன் 2023 அறிக்கையில் 10 உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர நீர் விநியோகம், போக்குவரத்து, குப்பைகள், கழிவு களற்ற நகரங்கள் என்று அடுக்கடுக்காக சொல்லப்பட்டாலும் இந்த நோக்கங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட திட்டங்கள் இல்லை. அத்துடன் மக்களின் தேவைக்கேற்ப இல்லாமல் பெரு நிறுவனங்களின் தேவைக்கேற்ப உருவாக்கும் பார்வை 2023 ஆவணத்தில் உள்ளது.
இத்தகைய நகர்ப்புறங்களின் எண்ணிக்கை உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதாக முதலாளித்துவ நிபுணர்களும், ஆட்சியாளர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
2011 மக்கள் தொகை கணக்கீடு படி நகர்மயத்திற்கு மூன்று முக்கிய காரணங்களை குறிப்பிடலாம்.
- கிராமப்புற வறுமையினால் நிலமற்ற விவசாயிகளும், சிறு நில விவசாயிகளும், தலித், பெண்கள் உள்ளிட்டவர்களும் கணிசமான அளவில் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.
- பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை அபகரித்து காலங்காலமாக விவசாயத்தை நம்பியிருந்த மக்களை வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் ஆக்குகின்றனர். அவர்களில் பலர் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.
- இயல்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை; ஏராளமான புதிய டவுன்ஷிப்புகள் போன்ற நகரங்கள் பெருநிறுவனங்களின் தேவையையொட்டி உருவாக்கப்படுகின்றன. பல நகரங்களுக்கு குடிபெயரும் மக்கள் பெரும்பாலும் கட்டுமானம், சுமைப்பணி, வீட்டுவேலை போன்று முறைசாராத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். நலவாரியங்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்டாலும், அவர்கள் அடிப்படை வசதிகளோ, போதிய வருமானமோ இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்திட வேண்டும். இதையொட்டி நமது முறைசாரா அமைப்புகளின் ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுநிர்மாணத் திட்டம் போன்ற பல திட்டங்கள், சீர்திருத்தங்கள் என்னும் பெயரில் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன. நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் வாபஸ் பெற கட்டாயப்படுத்தப்படுகிறது. அத்தியாவசியமான பல சேவைகளுக்கு பயனாளி கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படாமல் முழுக்க, முழுக்க சாதாரண மக்கள் குறிப்பாக நகர்ப்புற ஏழைகள் ஒட்டுமொத்த சுமையையும் சுமக்கும் வகையில்தான் நகர்ப்புற சீர்திருத்தக் கொள்கைகள் அமலாக்கப்படுகின்றன. பல மாநில அரசுகள் இந்த கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அமலாக்குகின்றனர். ஏற்கனவே கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் இருந்த இடது முன்னணி ஆட்சிகள் தான் இந்த கொள்கைகளை எதிர்த்துப் போராடி வந்துள்ளன.
கட்சியினுடைய மத்தியக்குழு இந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முழுமையாக ஆய்வு செய்து மக்கள் நலனை பாதுகாக்கிற கோரிக்கைகளின் அடிப்படையில் மக்கள் இயக்கங்களை உருவாக்க வேண்டுமென வழி காட்டியுள்ளது. இந்த வகையில் தமிழகத்திலும் வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், போக்குவரத்து, துப்புரவு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல திட்டங்கள் அமலாகி வருகின்றன. இவற்றின் தாக்கத்தை நுணுக்கமாக பரிசீலிக்க வேண்டும்.
குடியிருப்பு சூழல் – வறுமை
நகர்ப்புறங்களில் வாழ்கிற ஏழை மக்களுக்கு குடியிருப்பு உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படாமல் வருகிற நிலைமை நீடிக்கிறது. அதற்கு பதிலாக தற்போதுள்ள நிலம் தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. ராஜீவ் வீட்டு வசதி திட்டம் என்கிற மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் உண்மையில் இதுவரை நகர்ப்புற குடிசைவாழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த நகர்ப்புற நிலங்களை பறித்து தனியார் ரியல் எஸ்டேட் நில முதலைகளுக்கு சொந்த மாக்கிட வழிவகை செய்கிறது. பெயரளவுக்கு வீடுகள் கட்டும் திட்டங்கள் அமலாக்கப்படுகிறது. குடிசைகளற்ற நகரங்களை உருவாக்கு வதற்கு என்று பிரகடனப்படுத்தப்பட்டு எந்தெந்த வகையில் குடிசைகள் அனுமதிக்கப்படாது என்கிற பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடு கட்டும் திட்டங்கள் பெரும்பாலும் பொது – தனியார் (PPP) பங்கேற்போடு தான் நடைபெறுகிறது. இந்த நடைமுறைகளை பயன்படுத்தி உண்மையில் ஏழை மக்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல்வேறு விரிவாக்கத் திட்டங்களை பயன்படுத்தி ஏழை மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர். கட்சியின் 20வது காங்கிரஸ் நம்முடைய கட்சிக் கிளைகள் மக்களின் சாலையோரக் கடையினர் இடம் பெயர்ந்து குடியிருப்பவர்கள் போன்ற உழைப்பாளி ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டுமென அறை கூவல் விடுத்துள்ளது.
தற்போது நகர்ப்புற வறுமை அதிகரித்துள்ளது. மத்திய அரசு வறுமைக் கோட்டிற்கான வருமான வரம்பு என்னும் பெயரில் மோசடி கணக்கை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ரூ.32/- ஒருநாள் வருமானமாக கொண்டவர்களும் அதற்குமேல் வருமானம் பெறுபவர்களும் அரசின் சமூக நலத் திட்டங்களிலிருந்து விலக்கப்படுவார்கள். இதுவும் நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கான சதிச் செயலாக அமைந்துள்ளது.
பேராசிரியை உட்சா பட்நாயக் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்ணயிப்புகள் அடிப்படையில் நகர்ப்புற மக்களின் 2100 கலோரி தேவைக்கு ஒரு நாள் வருமானம் ரூ.70/ஆக இருக்க வேண்டுமென கணக்கிட்டு மாதத்திற்கு 2100/- வருமானம் கொண்டவர்களை வறுமைக் கோட் டிற்கு கீழே இருப்பவர்களாக கணக்கிலெடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இது ஒரு நபரின் கலோரி தேவைக்கான உணவுக்கு மட்டும் செலவிடும் தொகையாகும். அவரைச் சார்ந்து இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அதையொட்டி ஏற்படுகிற மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. எனவே இந்த அடிப்படையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 75 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் இந்தத் தேவையை நிறைவேற்றுகிற வாங்கும் சக்தி இல்லாத நிலையில்தான் பெரும் பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். வறுமை நிலையிலிருந்து இவர்களை உயர்த்த சமூகப் பாதுகாப்பு கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மாறாக நகர்ப்புறங்களில் மேலும், மேலும் வேலையின்மை அதிகரித்து வருகின்றது.
நகர்ப்புற நிர்வாகம் – கொள்கைகள்
நகர்ப்புற மக்களுக்காக மத்திய அரசு ஸ்வர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம், ராஜீவ் ஆவாஸ் யோஜனா போன்ற பல திட்டங்களை அமலாக்கி வருகின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுநிர்மாண திட்டம் 2005ம் ஆண்டு மத்திய அரசு துவக்கியது. தமிழக அரசு சமீபத்தில் நகர்ப்புற பகுதிகளில் வறுமையை ஒழிக்க தமிழக நகர்ப்புற வழ்வாதாரத் திட்டம் போன்றவற்றை அறிவித்துள்ளது. ஆனால் திட்டங்கள் அனைத்தும் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, அடிப்படை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
கிராமப்புற வேலை உறுதித்திட்டம் போன்று நகர்ப்புற மக்களுக்கான வேலை உறுதித் திட்டம் கொண்டுவர வேண்டுமென கட்சி கோரிக்கை வைத்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள ஆதரவற்ற தெருக்குழந்தைகள், வீடற்றவர்கள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு வாழ்வாதாரம் உறுதி செய்திட உரிய திட்டங்கள் எதுவும் இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் அவர்களின் நலன்களும் கவனிப்பாரற்று இருக்கிறது. நகரமயச் சூழலில் உழைக்கும் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கார்மெண்ட், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் என பல முறைசாராத் தொழில்களில் பெண்கள் குறைந்தபட்சக் கூலி, பணிப்பாதுகாப்பு ஏதுமற்ற சூழலில் நீண்ட நேர உழைப்பு செலுத்துவதும், வீட்டில் குடும்பத்தைப் பராமரிப்பதும் என இயந்திர கதியிலான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பல தரப்பு பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள், ஈவ்டீசிங் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
பெரிய துணிக்கடைகள், சிறு கம்பெனிகள் போன்றவற்றில் பணியாற்றும் பெண்களுக்கு அவர்களுக்கென்று தனி இடம் கூட இல்லாமல் நாள் முழுக்க வேலை வாங்கும் நிலை இருக்கிறது. வேலைக்குச் செல்லுகிற பெண்களுக்கு தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைகள் காப்பக வசதி இல்லை. குழந்தைகள் காப்பகங்கள் விரிவான அளவில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களே ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நகர்மயமாதல் பெண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை கண்டறிந்து இயக்கங்களை உருவாக்க வேண்டும்.
சுய உதவிக்குழுக்களில் அதிக எண்ணிக்கையில் திரண்டிருக்கும் பெண்களை நிர்வாகம் வார்டுகளை அழகுபடுத்தும் பணி, பூங்காக்கள் உருவாக்குதல், துப்புரவு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பொதுவாக அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், தெருவிளக்கு சீரமைப்பு, சாக்கடை தூர் வாருதல், கழிப்பிட பராமரிப்பு, குடிநீர் பற்றாக் குறை போன்ற கோரிக்கைகள் இடையறாது எழுப்பப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தன்னெழுச்சியாக மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நகர்ப்புறங்களில் வாழ்கின்ற ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் குடிசைவாழ் குடும்பங்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் இல்லாததால் தொடர்ந்து டெங்கு உட்பட பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு இல்லாததால் ஊட்டச்சத்து குறைவு அதிகரித்து நோய்கள் பரவிட வாய்ப்பு ஏற்படுகின்றது. அனைத்து நகர்ப்புறங்களிலும் முறையான கழிவு மேலாண்மை பின்பற்றப்படாததால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இத்தகு சூழலில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவம் அளிப்பதற்கான பொதுச் சுகாதார ஏற்பாடுகள் மேலும் மேலும் குறைந்து வருகின்றது. வசதிபடைத்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள், தனியார் மருத்துவமனைகள் மூலம் கிடைக்கிறது.
எனவே மருத்துவ வசதிகளில் அப்பட்டமான ஏற்றத்தாழ்வு நகரங்களில் வளர்ந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கும் சிகிச்சையளிக்கும் முறையில் சமூகக் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். நகர்ப்புற மக்கள் எதிர்நோக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை போக்குவரத்து வசதி. ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல நீண்ட நேர பயணத்தை மேற்கொள் கின்றனர். பெருநகரங்களில் முறையான திட்டமிடாத போக்குவரத்து ஏற்பாடுகள் மக்களை பாதித்து வருகிறது. வருமானத்தின் கணிசமான பகுதி போக்குவரத்திற்கு செலவிட வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அரசு மக்களின் தேவையை கணக்கில் கொண்டு சாலை வசதி திட்டங்களை மேற்கொள்ளாத நிலை உள்ளது. தனியாருக்கு பல வாய்ப்புக்கள் திறந்துவிட் டுள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம் இதற்கு ஒரு உதாரணமாகும்.
நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் செய்திட வேண்டிய பல சேவைகள் வேகமாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. துப்புரவுப் பணி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் தனியாருக்கு காண்ட்ராக்ட் விடப்படுகின்றன. இதையொட்டி பல முறைகேடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை ஏலத்துக்கு பெற்றிடும் பல தனியார்கள் முறையாக சேவைகளைச் செய்யாமல் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் நிலை உள்ளது. இந்தப் பணிகளை பெற்று, சேவைக் கட்டணங்கள் பெருமளவு அதிகரிக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டால், தாதாக்கள், ரவுடிகள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்துவதும் அதிகரித்து வருகின்றது. நகராட்சி ஆணையர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை ஏராளமான பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது. இது நகர நிர்வாகச் செயல்பாட்டை முடமாக்கியுள்ளது.
தொடர்ச்சியாக நகர்ப்புற ஏழை மக்களுக்கு பட்டா அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி மனுக்கள் அளித்திருந்தும் நிர்வாகங்கள் தொடர்ந்து இக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான வாடகைக்கு குடியிருக்கும் ஏழை மக்களும் கடுமையாக அல்லல்படுகின்றனர். கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் அங்கீகாரமற்ற இடங்களில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருப்போர் களுக்கு ரேஷன் அட்டை உள்ளிட்ட வசதிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கைகளை மையமாக வைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.
நகர்ப்புற மக்களுக்கு அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் பெருமளவில் தற்கொலைகள் நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் அதிக தற்கொலைகள் நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்புகள் ஏதுமின்றி, எவ்வித வாழ்வாதாரமின்றி நடைபாதைகளில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையும் நகரங்களில் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு சுற்றுச் சூழல் சீர்கேடு, எரிசக்தி பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நகரங்களில் பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்புகளையும் நாம் ஆராய்ந்திட வேண்டும். நிலத்தடி நீர் வரன்முறையற்ற வகையில் நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை உயர்வால் இயல்பாகவே நீருக்கான தேவை அதிகரித்துள்ளது என்பது உண்மையே. ஆனால் இன்றைய நகரங்களில் பெரும்பான்மையாக சாதாரண மக்கள் தங்களின் அன்றாட தேவை களுக்கானத் நீரைக் கூட பெற முடியாத நிலையில் உள்ளனர். அரசு குடிநீர் வழங்கலுக்காக அறி விக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் இதர பல்வேறு திட்டங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. பல நகரங்களில் பல நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. தண்ணிரில் கழிவு நீர் கலந்து வருவது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துகிறது. தண்ணீரை மேலும் மேலும் தனியாருக்கு தாரை வார்த்திடவும், மக்களின் நீர்நிலைமையை பறிக்கவும் மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை வழிவகுக்கும்.
பெரும் தொழிற்சாலைகளின் அபரிமிதமான தேவைக்கு நீர் பயன்பட்டு வருகிறது. பெரிய தொழிற்சாலைகள், புதிய திட்டங்கள் போன்ற வற்றிற்காக நீர்நிலைகளும் அதைச் சார்ந்துள்ள விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் ஆதிக்கம்உள்ளிட்ட பல காரணங்களால் 45 சதவிகிதம் குளங்கள் காணாமல் போய்விட்டன. நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் அடிப்படை கடமையாக அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் அமைந்துள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம்
நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி மற்றும் நகராட்சியின் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு முக்கிய கடமைகள் உள்ளன. குடிநீர் விநியோகம், சுகாதாரம், கழிவு நீர் அகற்றல், திடக்கழிவு அகற்றல், சாலைகள், தெருக்கள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், தெருவிளக்குகள் வசதி செய்தல் ஆகியவை முக்கிய கடமைகள். அத்துடன் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், பேருந்து நிலையங்கள், வாகனங்கள் நிறுத்து மிடங்கள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் பிற வசதிகள் அமைத்தலும், பராமரித்தலும் ஆகியன நகர்ப்புற அமைப்புகள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள்.
ஆனால் இந்த அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதிய அளவு வருவாய் இல்லாமல் இந்த நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில வருவாயில் மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு 30 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 74வது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள 18 வகையான அலுவல்கள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு போது மான அதிகாரங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத நிலை நீடிக்கிறது. வரி ஏய்ப்பு அதிகம் நடப்பதால் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் நிர்வாகங்கள் ஊழல்கள், முறைகேடுகள் நிறைந்ததாகவும் உள்ளன. இப்பிரச்சனைகளிலும் கட்சி கவனம் செலுத்த வேண்டும். பாதாளச் சாக்கடை, குடிநீர், சாலை போக்கு வரத்து உள்ளிட்ட பல திட்டங்கள் நகராட்சி, மாநகராட்சிகளில் முடிக்கப்படாமல் உள்ளன. இவற்றில் தலையிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் மக்களின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் எதிர்க்க வேண்டும்.
தலையீடு – இயக்கம்
கீழ்க்கண்டவாறு நகர்ப்புற மக்களின் பிரச்சனைகளை நாம் அணுக வேண்டியுள்ளது.
- நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக எழுகிற பிரச்சனைகளை கண்டறிய வேண்டும். ஏழை மக்கள் மீது வளர்ச்சித் திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்திட வேண்டும்.
- குடியிருப்பு, பட்டா, குடிநீர், சுகாதாரம், சுற்றுச் சூழல், கல்வி, பொது சுகாதாரம் ஆகிய வற்றில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சந்திக்கிற ஸ்தலமட்டத்திலான பிரச்சனைகள் தொகுக்கப்பட வேண்டும். மாற்றுக் கோரிக்கைகள் உருவாக்க வேண்டும்.
- பயனாளிகள் கட்டணம், சொத்து வரி உயர்வு, மாற்று ஏற்பாடில்லாமல் ஏழை மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படுவது, சாலையோர வியாபாரிகளின் பிரச்சனைகள் போன்றவை அரசு அமலாக்கி வரும் நகர்ப்புற சீர்திருத்தங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகும்.
- இத்தகு நகர்ப்புற சீர்திருத்தங்கள் குறித்த நமது அணுகுமுறையை ஸ்தல மட்டத்தில் உருவாக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி களில் சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமான வார்டுகள் உள்ள நிலையில், வார்டு அடிப் படையிலான உள்ளூர் இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும். பல பேரூராட்சிகள் நகரமயம் நிகழ்ந்து வருவதால், அங்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து இயக்கம் நடத்திட வேண்டும். மாநில அளவில் மாற்றுக் கொள்கைப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.
நகர்ப்புற பகுதிகளில் பணியாற்றுவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வார்டு அளவில் மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களது பிரச்சனைகளை ஆய்வு செய்து தொகுத்திட வேண்டும்.
குடிசைப் பகுதி மக்களின் மேம்பாட்டையொட்டிய பல அம்சங்களில் அரசாங்கம் கடை பிடிக்கும் கொள்கைகள், திட்டங்கள் எவ்வாறு அந்த மக்களை பாதிப்புக்குள்ளாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளின் சீர்கேடுகளைக்களையவும், மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காகவும் கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். இலவசக் கழிப்பறை வசதிகள், கொசு ஒழிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் தலையிட வேண்டும்.
நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் அங்கு செயல்படும் நலச்சங்கம் மற்றும் குடியிருப்பு சங்கங்களோடு செயல்படுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். படிப்பகம், இரவுப் பாடசாலை, கோச்சிங் சென்டர், புத்தகக் கண்காட்சி, இலவச மருத்துவ முகாம்கள் என பல ஆக்கப்பூர்வமான பணிகளை பலரோடு இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகிற பல்வேறு தன்னார்வ, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இளைஞர் நல அமைப்புகள், சேவை அமைப்புகள் ஆகியவை பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கட்சிக் கமிட்டிகளில் விவாதித்து சில அமைப்புகளோடு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நகரங்களில் பெரும் அளவில் குடும்பங்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அவர்களது விசேட பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இடம் பெயர்ந்து வந்து குடியிருப்போரின் தொழில், குடியிருப்பு நிலைமைகள் பற்றி தனியாக விவரங்கள் சேகரித்து கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். வெளி மாநிலத்திலிருந்து வந்து பணியாற்றுவோர் எதிர்நோக்கும் பிரச்சனை களையும் தொகுக்க வேண்டும்.
வெவ்வேறு துறைசார்ந்த அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நடுத்தர வெகுஜன ஊழியர்கள் போன்ற பகுதியினிரிடம் ஆங்காங்கே குடியிருப்போர் அமைப்புகளை உருவாக்குவதற்கு பொறுப்புகளை ஒப்படைக்கலாம். இந்த அமைப்புகள் மூலமாக அன்றாட நகர்வாழ் மக்களின் பிரச்சனைகளை தொடர்ச்சியாக கையிலெடுக்கலாம். தங்கள் பகுதிகளில் குறிப்பிட்டவாறு நகரமயமும், அரசு நகர்ப்புற கொள்கையிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பல்வேறு பகுதியினரின் கலந்துரையாடல் மூலமும், ஆங்காங்கே உள்ள நிபுணர்களை இணைத்திடுவதன் மூலமும் பொதுக் கருத்தினை உருவாக்கி மக்களைத் திரட்டுகிற பணியை மேற்கொள்ளலாம். இதில் தொழிற்சங்க அரங்க மற்றும் மத்திய தர அரங்க ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் திரட்டிட முயற்சிக்க வேண்டும்.
மேலும் குடியிருப்புப் பகுதிகளைச் சார்ந்து செயல்பட்டால் மிகச் சிறந்த ஸ்தல மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும். இந்தப் பகுதிகளில் புதிதாக மாதர், வாலிபர், மாணவர் மற்றும் தொழிற்சங்கங்களை விரிவுபடுத்துவதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகிடும்.
நகர்ப்புற மக்களின் வாழ்நிலையில் ஏற்படுகிற அதிருப்தியை பல்வேறு சாதிய அமைப்புகளும், மதரீதியான அமைப்புகளும் பயன்படுத்திக் கொள்ள தொடர்ச்சியாக முயன்று வருகின்றன. நகர்ப்புற ஏழை மக்களில் கணிசமான அளவில் தலித் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீதான தீண்டாமைக் கொடுமை நீடித்து வருகிறது. ஆதிக்க சாதியினர் பல்வேறு சாதிய அமைப்புகளை பல நகரங்களில் வலுவாக உருவாக்கி வருகின்றனர். நகர்ப்புறங்களில் இருக்கிற நடுத்தர மக்கள் ஒரு பிரிவினர் இப்படிப்பட்ட சாதி மத ரீதியான இயக்கங்களை நகரங்களில் கட்டியமைக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மதவெறி அமைப்புகளும் பல மாநகராட்சிகளிலும், நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் இடையே மத ரீதியான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏராளமான அமைப்புகள் உருவாகி வருகின்றன. இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தீவிரவாத அமைப்புகளுக்கு இரையாகி வருகின்றனர். இவ்வாறு திசை திருப்பும் சக்திகளை அடையாளம் கண்டு மக்கள் அவற்றுக்கு இரையாகாமல் நம் கட்சி அமைப்புகளில் அவர்கள் திரள நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
சிறுபான்மையினர், தலித், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரைத் திரட்ட அதிக கவனம் செலுத்த வேண்டும். தலித், சிறுபான்மை உள்ளிட்ட பிரிவு வாரியாக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சில்லறை வணிகர்களை திரட்டும் இயக்கம் தொடர வேண்டும். தற்போது அமலாகி வரும் நலத் திட்டங்கள் பற்றி கட்சி உறுப்பினர்கள் அறிந்து கொள்ளவும் தலையிடவும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். நகரங்களில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
நகர்ப்புறங்களில் பண்பாட்டு ரீதியான தாக்கம் அதிகரித்து வருகிறது. புதிய தாராளமயம் ஏற்படுத்துகிற நுகர்வு கலாச்சாரம், ஊடகங்கள் ஏற்படுத்துகிற அரசியலற்ற பல போக்குகள், இடதுசாரி இயக்கங்கள் மீதான அவதூறு பிரச்சாரம் போன்றவை அதிகரித்து வருகின்றன. இவையனைத்தும் நகரமயப் பிரச்சனைகளுக்காக ஒரு வலுவான ஒற்றுமை உருவாவதற்கும், ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களுக்கும் தடையாக உள்ளன.
எனவே இத்தகு நகர்ப்புற மக்களை திசை திருப்புகிற முயற்சிகளை தடுக்க வேண்டுமெனில் குறிப்பான மாற்றுக் கொள்கைகள் நகரம், உழைக்கும் மக்களுக்கு உரியது என்கிற அடிப்படையில் மக்களைத் திரட்டிட வேண்டும். மேலும், கலை இலக்கிய நடவடிக்கைகள் மூல மாக மக்களைத் திரட்டிடத் திட்டமிட வேண்டும்.
உழைக்கும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற மையக்குறிக் கோளோடு நமது முயற்சிகள் அமைந்திட வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு கோரிக்கைகளையும் கோரிக்கைகளுக்கான நீடித்த இயக்கங்களையும் உருவாக்கினால் தான் வெகுஜன தளத்தை ஏற்படுத்திட இயலும். எனவே, நகரம் நமதே என்று தமிழக நகர்ப்புற உழைப்பாளி மக்கள் உரிமை முழக்கம் எழுப்பும் வகையில் மகத்தான மக்கள் இயக்கத்தை உருவாக்கிட வேண்டும்.
(2012, நவம்பர் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நகரமயம் குறித்த பயிற்சி முகாமில் இறுதிப்படுத்தப்பட்ட குறிப்பு)
எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவுமில்லை. இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன. மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன. இந்த ஆரம்ப இயக்கப் போக்குக்கு மூலாதாரம் இந்திய வேதங்களில் தோன்றிய முன்பு – குறைந்தபட்சம் இந்தோ-ஐரோப்பிய மக்கள் விஷயத்தில் – ஒப்பியல் புராணங்களால் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறகு இதன் கூடுதல் பரிணாமத்தில் இது இந்தியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமானியர், ஜெர்மானியர்களிடையே விவரமாக எடுத்துக்காட்டப் பட்டிருக்கிறது.
ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம் பக்கமாகச் சமுதாயச் சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்த சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன. இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன.
-ஏங்கல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு
Leave a Reply